Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

Wednesday, June 25, 2025

65/66, காக்கைச் சிறகினிலே ஜூன் 2025

    அன்பிற்குரிய தமிழ் மடாதிபதிகளே,

வணக்கம்
கடவுள் நம்பிக்கையற்றவன் நான். ஆனால் எனக்கு தமிழ் பக்திமரபு பிடிக்கும்.
தமிழ் பக்திமரபு என்னை அப்படி நெகிழ்த்தும். அதுமட்டுமல்ல உலகின் வேறு எந்த மொழியேனும் பக்திமரபினை தனது அடையாளமாகக் கொண்டிருக்கிறதா என்பது அய்யம்தான். அப்படியே இருந்தாலும் பக்தனையும் கடவுளையும் தமிழ் இணைப்பதுபோல வேறு மொழி இணைக்கும் என்று நான் நம்பவில்லை.
தமிழ் பக்திமரபு அனைவரையும் அணைக்கும், இணைக்கும். தமிழ் பக்திமரபு என்பது குறிப்பாக சைவ பக்திமரபு என்பது சனாதனத்திற்கு எதிரானது.
மடங்களின் அதிபர்களை கிட்டத்தட்ட சாமியாகவே பார்க்கிற அன்பு தமிழ் பக்தர்களின் அன்பு.
இந்த அன்பு, எதையும் கடந்தவர்கள் நீங்கள் என்று அவர்கள் கருதுவதால் வருவது.
அவர்கள் எளியவர்கள், ஆனால் கூர்மையானவர்கள்.
வெளிப்படையானவர்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்கள். சரியோ தவறோ எதையும் முகத்திற்கு நேராகக் கேட்டுவிடக் கூடியவர்கள்.
திருவிளையாடல் புராணத்தில் இது இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சினிமாவில் பார்த்திருக்கிறேன்.
கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே இருக்கும் இந்த உறவை...
அது கற்பனை என்றே கொண்டாலும், விவரம் தெரிந்த நாள்முதலாக நான் கொண்டாடிக்கொண்டே இருக்கிறேன்.
குறுந்தொகையின் இரண்டாம் பாடலை இறைவன் சிவன் எழுதியதாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையை நாம் கேள்வி கேட்கவேண்டிய அவசியம் நமக்கு இப்போது இல்லை.
தன் மனைவியின் கூந்தலில் இருந்து வரும் மணம் இயற்கையானதா அல்லது அவள் பூசும் வாசனை திரவியங்கள்வழி வருவதா என்கிற அய்யம் மன்னன் செண்பகபாண்டியனுக்கு வருகிறது. இந்த அய்யம் அவ்வளவு முக்கியமானதா என்கிற அறிவு பூர்வமான வினாக்களுக்குள் நாம் இப்போது போகத் தேவை இல்லை. அவனது அவையில் உள்ள சான்றோர்களிடம் இவனது அய்யத்திற்கான விடை இல்லை.
எனவே தனது அய்யத்தைத் தீர்ப்பவனுக்கு தக்க சன்மானம் தரப்படும் என்று அறிவிக்கிறான். இந்த சன்மானத்திற்கு ஆசைப்படும் ஒரு எளிய மனிதனின் வழியாக இறைவன் கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடலை அனுப்பி வைக்கிறான்.
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே”
செண்பகப் பண்டியனின் அரசவைக் கவிஞரான நக்கீரன் தருமி கொண்டு வந்திருக்கும் இந்தப் பாடலில் பிழை இருப்பதாக சொல்கிறார். இதை தருமி சொல்லக் கேட்டதும் சிவனுக்கு கோபம் வருகிறது. அவரே நேராக செண்பகப் பாண்டியனின் அவைக்கு வருகிறார்.
வந்திருப்பது தாம் வணங்கும் இறைவன் என்பது நக்கீரனுக்குத் தெரிகிறது. அந்தப் பாடலை எழுதியது தாம் தினமும் வணங்கும் இறைவனே என்றாலும் அதை ஏற்க மறுக்கிறார்.
இறைவனுக்கும் நக்கீரனுக்கும் விவாதம் நீள்கிறது. தன்னை தன் பக்தன் வென்றுகொண்டே வருவது இறைவனுக்குப் புரிகிறது. கொஞ்சம் எல்லை தாண்டுகிறார்.
கோபம் தலைக்கேற,
“அங்கம் புழுதிபட,
அரிவாளில் நெய்பூசி
பங்கம் பட இரண்டு கால் பரப்பி
சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும்
நக்கீரனோ
எம் கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்”
என்று வெடித்து விடுகிறார்.
“சங்குகளை அறுத்து வளையல் செய்து விற்று வயிறு வளர்க்கும் கடையனான நீ என் பாடலில் பிழை காண்கிறாயா?” என்ற இறைவனின் கோபத்தையும் நேராக எதிர்கொள்கிறார் நக்கீரன்.
நக்கீரர் சொல்வார்,
“சங்கருப்பதெங்கள் குலம்
சங்கரனார்க்கேது குலம்?”
இந்த இரண்டு வரிகளை நினைக்குந்தோறும் நெக்குருகிப் போகிறேன் சன்னிதானங்களே.
”சங்கரன் நீ
நீ குலமற்று இருப்பதுதானே நியாயம்
நீ எப்படி குல பேதம் சொல்லலாம்”
என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம் என்றே இந்த எளிய நாத்திகன் நினைக்கிறேன். ஆமாம் சன்னிதானங்களே, நக்கீரனாரின் கோபத்தை இந்த எளியவன் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன்.
படைக்கப்பட்ட எந்த இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே இப்படி ஒரு உறவை உலகில் எங்கும் பார்க்க இயலாது. எந்த ஒரு மொழியும் இறைவனையும் பக்தனையும் இப்படி படைத்தளித்ததில்லை. தமிழ் இந்த அதிசயத்தை செய்திருக்கிறது. இந்த இடத்தில் தமிழ் எதுவரைக்கும் நகர்ந்திருக்கிறது தெரியுமா சாமிகளே…
”திருவிளையாடல்” திரைப்படத்தில் இந்த உரையாடல் இறைவனின் இந்த ஆறு வார்த்தைகளோடு நிறைவுப் பகுதிக்கு நகரும். சிவன் சொல்வார்,
“நக்கீரனே! நின் தமிழோடு விளையாடவே யாம்
வந்தோம்”
அய்யோ, அய்யோ, ஒரு பக்தனின் மொழியை ரசித்து சுவைக்க ஏங்குகிறவனாக கடவுளைக் காட்டும் மொழி தமிழ். இதெல்லாம் புனைவு அல்லவா என்று யாரேனும் கேட்பீர்களேயானால், “இறைவனும் புனைவுதானே சாமிகளே” என்பதுதான் எனது பதில்.
”பித்தா
பிறைசூடி
பெருமானே
அருளாளா”
என்று சுந்தரமூர்த்தி சாமிகளையும் எங்கள் தமிழ் பாட வைக்கும். அதற்கு நேர் எதிராக
“தாவாரம் இல்லை
தங்க ஒரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி”
என்று சித்தனையும் பாட வைக்கும்.
நீங்கள் அரவணைக்க வேண்டியவர்கள்.
”ஏகன் அநேகன்” என்ற ஒப்பற்ற தத்துவத்தின் தூதுவர்கள் நீங்கள். அநேக பெயர்களில் இருக்கிறவன் ஒரே ஒருவன்தான். அவனை நாம் சிவன் என்கிறோம். இன்னொருவன் இன்னொரு பெயரில் அழைக்கிறான். அவ்வளவுதான் பிள்ளைகளே. அமைதியாக, ஒற்றுமையாக அணைந்து வாழுங்கள் என்று எங்களை ஆற்றுப்படுத்தி வழிநடத்த வேண்டியவர்கள் நீங்கள்.
எல்லோரிடமும் சமமாக அன்பு பாராட்ட வேண்டியவர்கள். ஒரு மதத்தின் பிரதிநிதி என்பது உங்களது முற்றான அடையாளம் அல்ல.
எல்லோருக்கும் பொதுவானவர்கள் நீங்கள்.
குல்லா தரித்தவனும் உங்கள் பிள்ளைதான்
சிலுவை தரித்தவனும் உங்கள் பிள்ளைதான்
குங்குமம் வைத்தவனும் உங்கள் பிள்ளைதான்
உங்களில் ஒருவர் தொப்பியோடும் தாடியோடும் ஒருவர் தன்னைக் கொல்ல வந்தார் என்று சொல்வது மட்டுமல்ல அதைக் கேட்டு மற்ற சன்னிதானங்கள் மௌனமாக இருப்பதும் தவறுதான்.
குன்றக்குடி பெரிய சன்னிதானத்தின் இறுதி இலக்கிய பொதுமேடை ஜெயங்கொண்டத்தில் நடந்த கலை இரவுதான். அன்று நடந்த வழக்காடு மன்றத்தில் அவரது கீழ் நானும் பேசினேன். கடவுள் இல்லை என்று சொல்லும் நான் எப்போதும் வாயருகே கை வைத்து மரியாதையோடுதான் அவரோடு பேசி இருக்கிறேன்.
காரணம் மதச்சார்பின்மை என்ற இந்திய அடையாளத்தின் ஒப்பற்ற முகவரி அவர்.
இப்படியாகவே இருங்கள்.
அன்போடு இருங்கள். அனைத்து சன்னிதானங்களுக்கும் என் அன்பும் நன்றியும்
அன்புடன்,
இரா.எட்வின்.

Tuesday, June 24, 2025

நாத்திகர்கள் நாங்களே புன்னகைத்து நழுவும் இடம்

 

ஒரு கிழவி நடந்துகொண்டே இருக்கிறாள்
அசதியாக இருக்கிறது
ஒரு மரம் தென்படுகிறது
நிழலுக்காக ஒதுங்குகிறாள்
ஒரு சுட்டிப் பொடியன் மரத்தின் கிளையொன்றில் அமர்ந்திருக்கிறான்
“பாட்டி” என்று கத்துகிறான்
கிழவி மேலே பார்க்கிறாள்
பசிக்குதா?
ஆமாம்பா
பழம் சாப்பிடுகிறாயா
உலுக்கித் தாயேன்
சரி பெரிசு என்ன பழம் வேண்டும்
நாவல் மரத்தில் மாம்பழமா இருக்கும். உலுக்குடா பொடியா
இல்ல பாட்டி இதுல ரெண்டுவிதமான பழங்கள் இருக்கு
கிழவியே குசும்புக்காரி. குசும்பென்றால் அப்படியொரு ஞானக் குசும்பு. தன்னையே சீண்டுகிறானே என்று ஒரு நிமிடம் குழம்பியவள்
என்ன ?
சுட்ட பழமும் இருக்கு சுடாத பழமும் இருக்கு. எது வேண்டும்
சரி சரி, சுட்ட பழமா போடு. சாப்பிடற சூடில்
உலுக்குகிறான்
பழங்கள் உதிர்கின்றன
பழமெல்லாம் மணல்
மணலை ஊதிக்கொண்டே கேட்கிறாள்
சேட்டக்காரக் கழுத, சுடவே இல்ல
பையன் சொல்கிறான்
சுடாமலா ஊதற
கிழவி வெளவெளத்துப் போகிறாள்
உங்களுக்குப் புரியும் ,
கிழவி அவ்வை, பொடியன் முருகன்
இது அமித்ஷாவிற்குப் புரிய வேண்டும்
இது புனைவாகவேகூட இருந்துவிட்டுப் போகட்டும்
எங்கள் தமிழ் சமய மரபு எங்கள் முருகனை தன் பிள்ளைகளோடு இப்படியாக உறவாடவும் விளையாடவுமாக படைத்தளித்திருக்கிறது
எங்கள் கிழவிமார்கள்
எங்கள் முருகனுக்கே புத்தி சொல்வார்கள்
உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு என்பார்கள்
இந்த இடம் நாத்திகர்கள் நாங்களே புன்னகைத்து நழுவும் இடம்
இது குமரி அனந்தன் அய்யா பொண்ணுக்கே புரியாதபோது அமித்ஷாவிற்கு எப்படி புரியும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாடலில் ஒரு இடம்
”சிறப்புடனே கந்தக்
கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட
தோட்டமுண்டு
உனக்கான மனக் கோயில்
கொஞ்சமில்லை
உனக்கான மனக் கோயில்
கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ
பஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ
பஞ்சமில்லை”
அமித்ஷா
எங்கள் முருகனை உங்களுக்குத் தெரியாது
நகருங்கள்
அவனுக்கான மனக்கோயிலில் அன்புக்கு பஞ்சமேயிருக்காது ஷா சார்
அதைக் கெடுக்காமல் நகருங்க சாமிகளா

Thursday, May 15, 2025

நீ ஏன் தாயே உன்னை நிருபிக்க முயற்சிக்கிறாய்

 "நான் ஒரு இஸ்லாமியப் பெண்

ஆனால் பாகிஸ்தானி அல்ல
நான் ஒரு இஸ்லாமியப் பெண்
ஆனால் நான் தீவிரவாதி அல்ல"
என்று சோபியா பேசுவதைக் கேட்க நேர்ந்தது
நீ ஏன் தாயே உன்னை நிருபிக்க முயற்சிக்கிறாய்
நீ
எங்கள் தாய்
எங்கள் சகோதரி
எங்கள் மகள்

Wednesday, May 7, 2025

ஏகன் அநேகன் என்ற உயரிய விழுமியத்தின் தளபதி நீங்கள்

பஹல்காம்

நீ இந்துவா இஸ்லாமியனா என்று கேட்டு 

இந்து என்று உறுதிப்பட்டால்தான் சுட்டார்கள் என்று சங்கிகள் சொல்வதை உண்மை என்றே கொள்வோம்

வாய்ப்பை மறுக்கவில்லை

எதற்காக அவர்கள் அப்படிக் கேட்டார்கள் என்று ஒரு நிமிடம் யோசிப்போம்

பாரபட்சமின்றி இந்தியர்களைக் கொன்றால் 

தங்களை எதிர்ப்பதில் இந்தியர்கள் ஒன்றுபடுவார்கள்

இப்படிப் பிரித்துக் கேட்டுக் கொன்றால் இந்தியா மத ரீதியாக நம்மை எதிர்ப்பதில் பிளவுபடும்

அப்படியாகப் பிளவுபட வேண்டும் 

என்று அவன் கருதுகிறான்

மதுரை ஆதீனம் சென்னை SRM வளாகத்தில் பாரி வேந்தர் ஏற்பாடு செய்திருந்த சைவ மாநாட்டிற்கு காரில் சென்றுகொண்டிருக்கிறார்.

வழியில் உளுந்தூர்பேட்டை அருகே ஒரு சன்னமான விபத்தை சந்திக்கிறார்

இரண்டு கார்களிலும் வந்தவர்கள் சண்டைபோடுகிறார்கள். சமரசம் ஆகிறார்கள். சென்றுவிடுகிறார்கள்.

அவ்வளவுதான்

மாநாட்டில் உரையாற்றும்போது பாகிஸ்தான் தன்னைக் கொல்ல சதி செய்வதாகக் கூறுகிறார்

வெளியே வந்ததும் யார் அவர்கள் என்று நிரூபர்கள் கேட்கிறார்கள்

தொப்பி, தாடி

தொப்பி தாடி என்கிறார்

அது கொலை முயற்சி என்பது பச்சைப் பொய்

அவரது உடல்மொழி அசிங்கம்

இவர் ஏன் இப்படி சொல்கிறார்

இந்து முஸ்லீம் பிளவுபட வேண்டும் என்று விரும்புகிறார்

அவனும் அதைத்தானே செய்கிறான்

ஒன்று சொல்லவேண்டும் சன்னிதானம், அவர்களே,

ஏகன் அநேகன் என்ற உயரிய, விழுமியம் மிக்க கோட்பாட்டின் தளபதி நீங்கள் 

அவன் தீவிரவாதி

அறமற்றவன்

நீங்களுமா?

07.05.2025

Monday, September 2, 2024

ஹிமந்த பிஸ்வா சர்மா யாருக்கும் இரண்டாம் நபராகத் தெரியவில்லை

இஸ்லாமிய எதிர்ப்பில்

அசாம் மாநில முதல்வர்
இஸ்லாமியர்கள்மீது தனது வன்மத்தைக் காட்ட எந்த அபத்தத்தையும் அசிங்கத்தையும் செய்வதற்கு இவர் தயங்குவதே இல்லை
அசாம் சட்டமன்றம் கூடும் நாட்களில்
வெள்ளியன்று மதியம் 12 மணிமுதல் 02 மணிவரை தொழுவதற்காக இடைவேளை விடப்பட்டு வந்ததை ரத்து செய்திருக்கிறார்
பாஜக கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும் லோக் ஜனசக்தியும்கூட கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன

Wednesday, May 8, 2024

மாமன்னருக்கும் 56

 மாமன்னர் கோவிலுக்குப் போயிருக்கிறார்

ஷாஷ்டாங்கமாக விழுந்தது தொழுவதற்கல்ல
கோவமாக இருக்கும் கடவுளிடம் மன்னிப்புக் கோர
கடவுளுக்கு என்ன கோவம்?
தன் பெயரை வாழ்த்தி எழுதியதற்கெல்லாம் மதிப்பெண் தருவதா என்ற கோவம் கடவுளுக்கு
அதற்கு திருத்தியவர் அல்லவா மன்னிப்பு கோர வேண்டும்
ஆமாம்
ஆனாலும் அவர் போட்ட மதிப்பெண் அப்படி
தனக்கும் 56
கடவுளின் பெயருக்கும் 56 தானா என்று கோவம் தன் மீது திரும்பிவிடக் கூடாது அல்லவா

Saturday, April 27, 2024

மதம் அல்லடா சகோதரா சாதிதான்

 ”கோட்டா சாதிகள்” தான் கொலை கொள்ளை போன்ற சம்பவங்களில் அதிகமாக ஈடுபடுபவர்கள் என்று கஸ்தூரி கூறுகிறார்

எனில்
மதம் அல்லடா சகோதரா
சாதிதான் அவர்கள் என்பதை புரிந்து கொள்
கோட்டா சாதிகளின் மதமும் அவர்களைப் பொறுத்தவரை கோட்டா சாதிதான் நண்பா

Tuesday, April 23, 2024

சாரையும் சேர்த்து ஆறு பேர்

 இஸ்லாமியர்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்று அசிங்கமான கருத்தை வைக்கும் சாரோடு பிறந்தவர்கள்

சாரையும் சேர்த்து ஆறு பேர்

இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னோடு பிறந்தவர்கள்
என்னையும் சேர்த்து நான்கு பேர்
எனக்கு இரண்டு பெரியப்பாக்கள்,
மூன்று சித்தப்பாக்கள்
இரண்டு அத்தைகள்
விக்டோரியாவிற்கு நான்கு அக்காக்கள், ஒரு தம்பி
உருப்படியா எதையாவது பேசும்போது தயவு செய்து சொல்லிவிட்டு பேசுங்க
மிஸ் பண்ணிடப் போறேன் சார்

Tuesday, January 30, 2024

இந்த மனிதனுக்கு இயற்கையான மரணம் கிடைத்துவிடக் கூடாது

”இந்த மனிதனுக்கு இயற்கையான மரணம் கிடைத்துவிடக் கூடாது என்ற வெறி என் நெஞ்சில் எழுந்தது” என்று

தனது வாக்குமூலத்தில் கோட்சே கூறியதாக தனது “கோட்சேயின் குருமார்கள் நூலின் 38 வது பக்கத்தில் தோழர் அருணன் கூறுகிறார்




ஏன் அந்தக் கிழவன் மீது இவ்வளவு வன்மம் அவனுக்கு?

அதற்கான காரணத்தையும் அவன் தனது வாக்குமூலத்தில் கூறுகிறான்

அதையும் தோழர் அருணன் அதே நூலின் 37 வது பக்கத்தில் வைத்திருக்கிறார்

இந்த தேசத்திற்கு காந்தி துரோகம் செய்துவிட்டதாகப் பொதுவான குற்றச்சாட்டை வைக்கும் அவன் அவர்மீது நான்கு குற்றச்சாட்டுகளை வைக்கிறான்

1 இந்தியை தேசிய மொழியாக முன்மொழிந்துவந்த காந்தி இஸ்லாமியர்களை திருப்த்திப்படுத்துவதற்காக இந்துஸ்தானியை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்

2 வந்தேமாதரம் பாடலை அவர் விரும்பவில்லை

3 பசு பாதுகாப்பிற்காக வாய்கிழிய பேசும் காந்தி உருப்படியாக எதுவும் செய்யவில்லை

4 அவரது உண்ணாவிரதங்கள் இந்துக்களை மிரட்டவும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவுமே இருக்கின்றன

ஆக, காந்தியின் கொலையில் மொழியும் உண்டு என்பது தெளிவாகிறது

இது குறித்தான ஒரு கட்டுரையை எனது “காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்” நூலில் வைத்திருக்கிறேன்

மற்றக் குற்றச்சாட்டுகளே RSS அமைப்பின் இன்றைய கொள்கை நீட்சியாக உள்ளன

14.01.1948 அன்று காந்தியாரின் உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாள்

அன்று அவரைச் சந்திக்க வந்திருந்தவர்களில் படேலும் ஒருவர்

வந்தவர்கள் யாரும் காந்தியின் கோரிக்கையை (55 கோடி) ஏற்கவில்லை

காந்தியிடம் படேல் அவர்கள் கொஞ்சம் கோவப்பட்டதாகவே தோழர் அருணன்வழி நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது

நம்பிக்கை இழந்த கிழவன் 

“நான் அறிந்திருந்த சர்தார் நீங்கள் அல்ல” என்று கூறுகிறார்




30.01.1948 அன்று பிற்பகல் காந்தியை கடைசியாக சந்திக்க வந்தவர் படேல்

“இப்போது நீங்கள் என்னைப் போகவிட வேண்டும்” என்று படேலிடம் விடைபெற்றுக்கொண்டு பிரார்த்தனைக் கூட்டத்திற்குப் புறப்படுகிறார்

சற்று நேரத்தில் அனைவரிடம் இருந்தும் அவரை விடைபெறச் செய்தான் கோட்சே

”நான் அறிந்திருந்த சர்தார் நீங்கள் அல்ல”

காந்தியின் இந்த சொற்கள் படேலின் இறுதி மூச்சுவரை அவரது காதில் ஒலித்துக் கொண்டேதான் இருந்திருக்கும்

இது RSS செயல் என்று நேரு சொன்னதைக்கூட விட்டுவிடலாம்

முள்ளாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திரபிரசாத் அவர்கள் 13.10.1948 அன்று அன்றைய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார்

அந்தக் கடிதத்தில் காந்தியைக் கொன்றவர்கள் வைக்கிற வாதங்கள் தம்மை காயப்படுத்துவதாகவும், கொலையாளியை ஒரு வீரநாயகனாக்க முயற்சிகள் நடப்பதாகவும் கூறுகிறார்

மே 14 அன்றும் அவர் படேலுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்

அதில்,

RSS கலகத்தை இஸ்லாமிய உடை அணிந்து நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தன்னிடம் கூறப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்

இதை கூறியவர் ராஜேந்திரப்பிரசாத்

இவை எல்லாம் நடக்கத் தொடங்கி இருக்கின்றன

இந்து ஆலயங்களி இறைச்சித் துண்டை வீசிவிட்டு இஸ்லாமியர்கள் வீசியதாகவும்

தங்கள் வீடுகளுக்கு தாங்களே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு பழியை இஸ்லாமியர்கள்மீது போடுவதையும் செய்வதுகூட 

ராஜேந்திரபிரசாத் அவர்கள் சொன்னதன் நீட்சிதான்

நல்வாய்ப்பாக இவர்கள் அவர்களாகவே அம்பலப்பட்டுப் போவதுதான்

வாக்குமூலத்தில்

சுதந்திரத்திற்கு காந்தி காரணமல்ல என்று கோட்சே கூறுகிறான்

அவனது பட்டியலில் படேலின் சகோதரர் விதல்பாய் படேலின் பெயரும் இருந்தது

அவன் அப்படிக் கூறுகிறான்

ரவியும் காந்தி காரணமல்ல என்கிறார். இப்பைப் பச்சையாக சொல்லமுடியாது என்பதால் காந்தி மட்டுமல்ல போசும்தான் என்கிறார்

03.02.1948 இல் இரண்டு காரணங்களுக்காக படேல் ராஜினாமா செய்ய விரும்புவதாகக் கூறுகிறார்

1 ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கையில் ஒரு வாசகர் காந்தியைக் காக்கத் தவறிய படேல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியிருப்பது

2  இதுகுறித்த தோழர் சுந்தரய்யாவின் பேச்சு

ஆக, கோட்சே என்ற RSS காரனால் காந்தி கொலைசெய்யப்பாட்டார் என்பது தெளிவு

அவன் விரும்பிய மதவெறிகொண்ட ஆட்சிக்கான பாசிச சக்திகள் இப்போது முயற்சி செய்து வருகிறார்கள்

அன்போடும் ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டியும் எதிர்கொள்வோம்

 


Wednesday, January 24, 2024

அந்தப் பேராலயத்தின் திறப்பு எத்தனை நிறைவைத் தந்திருக்க வேண்டும்

21.01.2024 அன்று நண்பர் ஒருவரின் மகளது திருமணத்திற்குப் போயிருந்தோம்

காரில் இருந்து (வாடகைக் கார்தான்) இறங்குகிறோம்
கண்ணில் படுபவர்கள் எல்லாம் புன்னகைக்கிறார்கள்
தலையை அசைத்து “வாங்க” சொல்கிறார்கள்
இன்னும் சிலர் கையெடுத்து வணங்கி வரவேற்கிறார்கள்
யாரென்றே தெரியாது
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும்போது “சாப்டீங்களா” கேட்கிறார்கள்
நண்பரின் நெருங்கிய தோழர்கள் 75 பேர் யூனிஃபார்மில் சுழல்கிறார்கள்
கொஞ்ச நேரத்தில் எங்களை அறியாமலே நாங்களும்
“வாங்க” சொல்கிறோம்
“சாப்டீங்களா” கேட்கிறோம்
Kalai Mani நான்கைந்து பேரை ”வாங்க சாப்பிடலாம்” என்று டைனிங் ஹாலுக்கு அழைத்துப் போகிறாள்
யாரென்று அவளுக்கும் தெரியாது
அவள் யாரென்று அவர்களுக்கும் தெரியாது
பாப்பாவின் அம்மாவைப் பார்த்து
“ஏம்மா, கல்யாணம் அவளுக்கா? உனக்கும் உங்க வீட்டுக்காரருக்குமா. சும்மா மெதக்கறீங்க” என்று கேட்கிறேன்
வெட்கப் படுகிறார்
அது ஒரு எளிய திருமணம்
சம்பந்தப்பட்டவர்களிடம் மட்டுமல்ல
கலந்து கொண்ட எல்லோரது கண்களிலும் “அன்பு” தென்பட்டது
எல்லோரிடத்தும் மகிழ்ச்சி
பேரனந்தம்
அப்படி ஒரு நிறைவை எல்லோரிடத்தும் காணமுடிந்தது
இவை அத்தனையும் எங்களையும் அப்பிக் கொண்டது
அப்பிக்கொண்ட அந்த அந்த அன்பும் சமாதானமும் இந்த வார்த்தையை தட்டச்சு செய்கிறவரை இருக்கிறது
இன்னும் கொஞ்ச காலத்திற்கு இருக்கும்
காரோட்டிய பிள்ளைக்கு அழைப்பு
மகிழ்ந்து பேசுகிறான். அப்படி கவனிச்சாங்கப்பா, சந்தோசம்னா சந்தோசம், வந்து சொல்கிறேன் என்கிறான்
ஒரு எளிய திருமணம்
போதாமை இருக்கும்
கடன் இருக்கும்
எல்லாம் கடந்து
அந்த அன்பு, புன்னகை, மகிழ்ச்சி
நிறைவு
அன்பிற்குரிய என் நண்பர்களே
அவ்வளவு பெரிய ஆலயத் திறப்பு
எவ்வளவு அதிகமான அன்பைத் தந்திருக்க வேண்டும்
எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்
எவ்வளவு ஆழமான சமாதானத்தைத் தந்திருக்க வேண்டும்
ஆண்டவன் வீடு என்கிறீர்களே
எனில்,
அந்தப் பேராலயத்தின் திறப்பு எத்தனை நிறைவைத் தந்திருக்க வேண்டும்

ஏன் இவை எல்லாம் விளையவில்லை?

ஏன் மண்ணெங்கும் வெறுப்பு?
இப்போதும் சொல்கிறோம்
ஆண்டவன் இல்லை
ஆனால் உண்டு என்று நம்பும் உங்கள் நம்பிக்கையை ஏற்கிறோம்
உங்கள் தவறைச் சுட்டினால் ராமனை குற்றம் சொல்கிறோம் என்று தயவு செய்து திசை திருப்பாதீர்கள்
அந்த ஆலயத்தின் மீது எங்களுக்கு புகார் இல்லை
கட்டப்பட்ட இடம் மீதுதான்
இப்போதாவது யோசியுங்கள்
தவறு புரியும்
எல்லோரையும் அரவணைத்து எதிர்காலத்தை அணுகுங்கள்
”யாரொடும் பகை கொள்ளலன்” என்பது நீங்கள் கொண்டாடும் கம்பன் சொன்னது
அன்பு
அன்பு மட்டுமே இந்தியாவைக் கட்டும்

Tuesday, January 23, 2024

கொஞ்சம் கடவுள், கொஞ்சம் மொழி என்று இருக்கிறது

 



பெரம்பலூரில் ”தேவராயன் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்” திறக்கிறார்கள்.

அதற்கென்ன?

வீடு வீடாக வந்து அழைப்பிதழைத் தந்து போனார்கள்

அதற்குமென்ன?

இருக்கிறது

கொஞ்சம் கடவுள், கொஞ்சம் மொழி என்று இருக்கிறது

தேவராயன் நகைக் கடை சென்னை சில்க்சின் பகுதி

அவர்களுக்குத்தான் ”ஸ்ரீகுமரன் தங்க மாளிகை” என்று இருக்கிறதே. பிறகு ஏன் “தேவராயன் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்” என்று பெயர் வைக்க வேண்டும்

வேறொன்றும் இல்லை,

இவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நகைக் கடைகளை திறக்க இருக்கிறார்கள். அந்த மக்கள் தமிழ்க் கடவுளை ஏற்கத் தயங்குவார்கள் என்பதாலும்

தங்க மாளிகை என்பதை அவர்கள் உச்சரிக்க ஏதுவாக இல்லாததாலும்

தேவராயன் என்று பெயரை மாற்றி இருக்கிறார்கள்

 




Monday, January 22, 2024

மாறாக வெறுப்பல்லவா இருக்கிறது

 இதே மாதிரி ஜனவரி மாதத்தில் ஒருநாள்

தங்கை தீபாவின் பையனுக்கு மேஜர் அறுவை
பிறந்து மூன்றாவது நாள்
தீபா மணப்பாறையில் ஒரு மருத்துவமனையில்
குழந்தை திருச்சி அமெரிக்கன் மருத்துவமனையில்
மால் ரொட்டேஷன்
பள்ளிக்கு வந்து
இருக்கிற சன்ன சன்னமான வேலைகளை அழுதுகொண்டே முடித்துவிட்டு விடுப்பெடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்கையில்
ராஜா வந்து விடுப்பு கேட்கிறான்
எங்க சாரோட பாப்பாக் குழந்தைக்கு ஆபரேஷன் சார்கூட இருக்கனும்
பொத்துக் கொள்கிறது
அவனது கைகளைப் பற்றிக் கொள்கிறேன்
நாற்பது அறுபது என்பதுதான் வாய்ப்பு என்பதை நானும் தோழர் கணேசும் மட்டுமே அறிவோம்
அப்போது ஒரு அம்மா வருகிறார்
தெரிந்தவர்தான்
ரெண்டு நாளா அழுதுட்டே இருக்கியாமே சாமி, கொஞ்சம் குனி என்கிறார்
நெற்றியில் துன்னூறை கோடாக கிழிக்கிறார்
நீ நம்ப மாட்ட, ஆனா கிழக்கமா திரும்பி இருக்கிற ஏந்தாயி கைவிடமாட்டா
அவளாச்சு நானாச்சு என்கிறார்
கை எடுத்து கும்பிட்டு நன்றி சொல்லிவிட்டு
சுந்தரபாண்டியனை அழைத்து அநேகமாக கல்விச் சான்றிதழ்தான் கேட்பார், கேட்டால் செலவத்திடம் கையொப்பம் பெற்று அந்த அம்மாவிடம் கொடுக்குமாறு கூறுகிறேன்
ராஜா வண்டியை எடுக்கிறான்
அந்த அம்மா அறியாதவாறு துன்னூறை அழித்துக் கொண்டு கிளம்புகிறேன்
போகும் போதும் விசும்பி இருக்கிறேன்
”ஒன்னும் ஆகாது சார், நான் கிறிஸ்டியன்தான் ஆனா அந்த அம்மா வேண்டுதலே போதும் சார். பவரான ஆத்தா சார்” என்கிறான் ராஜா
இது பக்தி
இது சக மனிதன்மீதான அன்பு
இது சக மனிதனின் துயர் நீங்குவதற்கான வேண்டுதல், பிரார்த்தனை
”ஆத்தா” என்ற அந்தத் தாயின் கத்தல் நம்பிக்கை
உங்களது ஜெய்ஸ்ரீராம் கோஷத்தில் இவை ஏதும் இல்லை நண்பர்களே
மாறாக வெறுப்பல்லவா இருக்கிறது
இதுவும் ஒரு டிசம்பர் ஆறுதான்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...