Thursday, September 8, 2011

சாமி மீண்டும் பொம்மையாய்ப் போனார்

நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்களை விற்றுக் கொண்டிருந்தான் அந்த தள்ளு வண்டிக்காரன். அவ்வப்போது வறண்டு வெடித்துக் கிழிந்துவிடும் தொண்டையை அவனது வேட்டியை விடவும் அழுக்காயும் பழுப்பாயும் உள்ள பாட்டிலைத் திறந்து வீட்டிலிருந்து கொண்டு வந்த உப்புத் தண்ணீரால் ஈரப்படுத்தி ஒட்ட வைத்துக் கொள்வான்.

சின்னது, நடுத்தரம், பெரியது என்று காசுக்கு தக்க அளவில் அவனிடம் கடவுள்கள் இருந்தனர். அவனது தள்ளு வண்டியில் எல்லாக் கடவுள்களும் இருந்தனர். ஒரு அடி அளவுள்ள பிள்ளையார் பொம்மை இருபத்தி ஐந்து ரூபாய் எனில் அதே அளவுள்ள ஏசுநாதர் பொம்மையும் அதே விலைதான். அவனுக்கு எந்த சாமியும் உசத்தி இல்லை எந்த சாமியும் தாழ்ச்சி இல்லை.

துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டே அவன் வண்டியைத் தள்ளிய ஏதோ ஒரு புள்ளியில் ஒரு சின்னப் பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறியது.  அப்போது ஏற்பட்ட ஒரு சன்னமான குலுக்கலில் ஒரு கடவுள் பொம்மைக்கு உயிர் வந்து விட்டது.

" என்ன சுப்பு, எப்படி போகுது பொழப்பு?”

“ அத ஏன் சாமி கேக்குற? நாய் படாத பொழப்பு. நாலு வவுத்த ஒரு வேல நனைக்கறதுக்குதான் இப்படி நாயா பேயா வெயில்லுன்னு பார்க்காம மழைன்னு பார்க்காம அலைஞ்சு தேய வேண்டியிருக்கு” என்று புலம்பிக் கொண்டே போனவன் கொஞ்சம் சுதாரித்தவனாக ,”  "ஆமாம் தெரியாமத்தான் கேக்குறேன் ஏம் பொழப்பு எப்படிப் போகுதுன்னுகூடத் தெரியலன்னா அப்புறம் நீயெல்லாம் என்ன சாமி?”

“ நூத்துக்கணக்கான வருஷம் தவம் இருந்த ஆனானப் பட்ட முனிவர்களே நான் முன்னாடிப் போய் நின்னு என்ன வரம் வேணும்னு கேட்டா எப்படிப் பதறிப் போய் குரல் நடுங்க யாசிப்பாங்கத் தெரியுமா? நீ என்னடான்னா கொஞ்சம் கூட பதட்டமே இல்லாம சர்வ அலட்சியமாப் பேசற”

“ அவங்களுக்கெல்லாம் ஓங்கிட்ட ஏதோ ஒரு வரம் தேவப் பட்டுருக்கும். அதனால ஒங்கிட்ட வளஞ்சு குனிஞ்சு கூழக் கும்பிடு போட்டிருப்பாங்க. எனக்கு உன்னிடம் எதுவும் தேவை இல்ல. சூறையோ, புயலோ, மழையோ, வெயிலோ நாயா பேயா ஒழைக்கிறேன். ஒழப்புக்கான கூலியத் தவிர வேற எதையும் நான் எதிர்பார்க்குறது இல்ல. அதனாலதான் இந்த அசால்ட்டும் திமிரும்”

கடவுள் ஒரு கனம் அப்படியே ஆடிப் போனார். ஆக, உழைக்காம எதிர்பார்க்குற செண்ட்டுகாரனிடம்தான் தனது ஜம்பம் பலிக்கும் என்பதும் உழைப்புகான நியாயமான கூலியை மட்டுமே எதிர்பார்க்கும் வேர்வைக்காரனிடம் எதுவும் நடக்காது என்பதும் புரிந்து போக மௌனமானார் கடவுள்

கொஞ்ச நேரம் இப்படியே மௌனமாக கடந்தது. வீடுகளே இல்லாத பகுதியாக இருந்ததால் .அவனுக்கு கூவ வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. கூவிக்கொண்டே இருந்த வாயை எவ்வளவு நேரம்தான் சும்மா வைத்திருப்பான்? மெல்ல ஆரம்பித்தான்.

“ஏஞ்சாமி இப்படி படச்ச?”

வில்லங்கம் புரியாத கடவுள் “எப்படி?” என்று அப்பாவியாய் கேட்டார்.

“ ஒன்னும் தெரியாத அப்பாவியாட்டம் கேளு. அவுங்கள மாடி மேல மாடி வீட்டிலும் எங்கள ப்ளாட் ஃபாரத்திலும் ஏம்பா படச்ச?”

என்ன சொன்னாலும் சிக்கிக் கொள்வோம் என்பது புரியாமல் எதையாவது சொல்லி சிக்கிக் கொள்ள கடவுள் என்ன மன்மோஹன்சிங்கா? " நான் எங்கடா சுப்பு உங்கள படைச்சேன்? நீதானடா எங்களை எல்லாம் படைச்சு இப்படி இந்த தள்ளு வண்டியில போட்டு இந்த மொரட்டு வெயில்ல தள்ளிட்டுப் போற..”

“ ஏம்பொழப்ப பாத்தா ஒனக்குக் கூட நக்கலா இருக்கு. படைக்கிற அளவுக்கு துப்பு இருந்தா நான் ஏஞ்சாமி இந்த மொட்ட வெயில்ல கெடச்ச தேஞ்சுப் போன ரெண்டு சோத்தாங்கால் செருப்பையே ரெண்டு கால்லயும் மாட்டிக்கிட்டு லோலு படறேன்..” என்று சொல்லிக் கொண்டே போனவன் எதிர்த்த திசையில் இருந்து டி.வி. எஸ் சில் வந்த தம்பதியர் இவனை நிற்கச் சொல்லி கைகாட்டிக் கொண்டே அவர்களது வண்டியை ஓரங்கட்டவே “ செத்த பொறு சாமி கிராக்கி ஒன்னு வருது . முடிச்சிட்டு வந்துடறேன்” என்றவாறே அவர்களை எதிர் கொள்ளத் தயாரானான்.

ஏனோ தெரியவில்லை அந்தப் பெண்ணிற்கு இவனோடு பேசிக் கொண்டு வந்த அந்த பொம்மையைப் பிடித்துப் போயிற்று. கையிலெடுத்து புரட்டிப் பார்த்துக் கொண்டே " இது எவ்வளவு?”  என்று கேட்டாள்.

எங்கே தன்னை விற்றுவிடுவானோ என்ற பயம் அந்தக் கடவுளை தொற்றிக் கொண்டது.

“ அது வேணாம்மா. டேமேஜ் ஆனது. வேற எதையாவது நல்லதா எடுங்கம்மா”  என்றவன் அந்தப் பொம்மையை வாங்கி ஒரு ஓரமாய் வைத்தான்.

தன்னை அவசரமாய் விற்காமல் இருந்தமைக்காக ,அவர்கள் இருவருக்கும் தெரியாத வகையில் ஒரு புன்னகையால் அவனுக்கு நன்றி சொன்ன அந்தக் கடவுளை நோக்கி “ எதையாச்சும் ஒளறி காரியத்தக் கெடுத்துடாத, இந்த  வியாபாரத்த முடிச்சுட்டு வந்துடறேன்” என்று அவர்களுத் தெரியாத வகையிலேயே இவனும் அவரை நோக்கி புன்னகைத்து வைத்தான்.

அதை எடுத்து இதை எடுத்து அப்படியும் இப்படியுமாய் உருட்டிப் பார்த்து இறுதியாய் ஒன்றை எடுத்து ஒரு வழியாய் அறுபது சொன்னவை நாற்பதுக்கு இழுத்து வந்த அவர்களது சாமர்த்தியத்தை தாங்களே ரசித்தவாறு நகரத் தொடங்கினர். போகும் போதும் அந்தப் பெண் அந்த பொம்மையை மீண்டும் கையிலெடுத்துப் பார்த்தால்.

“ அதுதான் நல்ல சரக்கில்லன்னு சொன்னேனேம்மா. அதப் போடு”

“ இல்லப்பா அது என்னமோ தெரியல இருக்கிற சாமியிலேயே இந்த சாமிதான் உயிர்ப்போட இருக்கிற மாதிரித் தெரியுது.” என்றவளிடமிருந்து அந்தப் பொம்மையை நாசுக்காக வாங்கி வண்டியில் போட்டவன், “ உங்களுக்கு நல்லது சொன்னாப் புரியாதும்மா. நாளைய முன்னியும் உங்க கிட்ட நான் தொழில் பாக்குறதா வேண்டாமா?” என்றான்.

“ அதுதான் ஓட்டப் பொம்மங்கிறாப்புல இல்ல. வச்சிட்டு பேசாம வாயேன்” என்று அவளது கணவர் சலிக்கவே அந்தப் பெண் தங்களது வண்டி நோக்கி நகர்ந்தார். வண்டியில் ஏறி அமர்ந்த பின்பும் அந்த பொம்மையின் மீது அவளது கண் இருந்ததை சுப்பு கவனிக்கவே செய்தான்.

அப்பாடா என்றிருந்தது சுப்புவுக்கு. எங்கே தனக்கு வாய்த்த பேச்சுத் துணையை பறித்துக் கொண்டு போய்விடுவாளோ என்று ஒரு கண்ம் ஆடித்தான் போனான்.

” தேங்க்ஸ் எ லாட் சுப்பு”

“ என்ன சாமி கான்வெண்ட்டுல படிச்ச தொர வீட்டுப் புள்ள மாதிரி இங்க்லீசெல்லாம்” பேசற.

” எல்லா பாஷையும் நமக்கு ஒன்னுதானேப்பா”

“ அப்ப ஒனக்கு எல்லா பாஷையும் தெரியுமா?”

“ஆஹா! ஏந்தெரியாம?”

“ இல்ல அப்ப ஒனக்கு தமிழ் தெரியுமா?”

“ லூசாடா சுப்பு நீ.  இவ்வளவு நேரம் நாம தமிழ்தான பேசினோம்”

“ஆமாம் ஆமாம் நாந்தான் ஏதோ கிறுக்குத் தனமா பேசிட்டேன். அப்புறம் ஏன் சாமி தமிழ் ல கும்பிடக் கூடாதுங்கறாங்க?”

“ நான் எப்பவாச்சும் அப்படி சொன்னேனாடா? அது மட்டுமல்லடா சுப்பா, அப்பனுக்கே க்ளாஸ் எடுத்த முருகனுக்கே பாடம் நடத்திய அவ்வையோட ஊருடா இது. அப்பேர் பட்ட முருகனையே அசால்ட்டாப் பார்த்து ஒன்னோட தத்துவம் பிழை என்றால் அதை சொல்ல என் தமிழுக்கு உரிமை உண்டு என்று சொன்னாளேடா கிழவி. அவ்வளவு கம்பீரமான மொழிடா தமிழ்”

“ அவ்ளோ கிரேடா சாமி தமிழுக்கு”

“இல்லையாடா பின்ன. இந்த மொழியை ரசிக்கத் தானேடா சிவனே நக்கீரனை சீண்டிப் பார்த்தார்”

“ அப்புறம் ஏன் சாமி பல பள்ளிக் கூடத்துல ‘அம்மா’ன்னு கூப்பிட்டாலே புள்ளைங்கள முட்டிக்கால் போட வைக்கிறாங்க?”

“ அந்தப் பள்ளிக் கூடங்களிக்கு ஏண்டா புள்ளைங்கள அனுப்புறீங்க?”

“ அதுவும் சரிதான் சாமி”

இப்படியான பேச்சுக்கு இடையே இரண்டு மூன்று பொம்மைகளை விற்றிருந்தான். ஒரு லாரி ஓட்டுநரிடம் பேசும் போது 'ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்'
 விலையேற்றம் குறித்து சுப்பு பேசியிருந்தான்.

“அது என்னடா 'ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்?'

” அது ஒரு வகையான ரசாயனக் களி மண் சாமி”

“ உங்க ஊருல களி மண்ணு தீர்ந்து போச்சாப்பா?”

“பேசாம அதுலேயே செய்யலாமே?”

“ இந்த ஷைனிங் கிடைக்காது சாமி”

“ இல்ல எங்களில் சிலரை தண்ணீல போடறப்ப கறையாம மீனெல்லாம் செத்துப் போகுதாமே? பேசாம களி மண்ணுல செஞ்சா மீனெல்லாம் பிழைக்குமே சுப்பா”

" நான் பிழைக்க வேணாமா சாமி. இந்த நவீன காலத்துல களி மண்ணு சாமியெல்லாம் யாரு வாங்குவா சாமி?. அது மட்டுமல்ல ' ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்ல ' செஞ்சாத் தான் உன்ன செஞ்ச திருப்தியே வருது சாமி”

“பார்த்தாயா சுப்பு, நீயே வசமா வந்து ஒத்துக்கிட்ட பார்த்தாயா. அப்ப நீதான எங்களப் படச்சது?

”அது என்னவோ நெசந்தான் சாமி. ஆனா உன்னப் படைக்கிறதுக்காக என்னப் படச்சது நீதானே சாமி?”

சாமி மீண்டும் பொம்மையாய்ப் போனார்

84 comments:

 1. அருமை.
  மனிதன் பிழைக்க செய்து கொண்ட குழப்பங்களுக்கு சாமியைக் கேட்டால் ... பாவம் சாமி பொம்மையாகி போனார்.

  ReplyDelete
 2. வணக்கம் ஐயா,
  மனங்களின் புரிதல்கள் சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல மாறிக் கொள்ளும் என்பதனை இச் சிறுகதை சொல்லி நிற்கிறது.

  ReplyDelete
 3. எல்லா சாமிகளுக்கும் புரியிற மாதிரி ரொம்ப அழகா சொன்னிங்க சாமி ......

  ReplyDelete
 4. ஹாஹா! இப்பல்லாம் சாமிகள் மவுனமாயிருப்பதுதான் நல்லது.

  அருமையா எழுதியிருக்கீங்க தோழர்! :-)

  ReplyDelete
 5. @சுயம்பு சித்தன்
  @ நிரூபன்
  @Rathnavel
  @ santaravi

  மிக்க நன்றி தோழர்களே

  ReplyDelete
 6. @ சேட்டைக்காரன்

  இருக்க மாட்டேங்குதுங்களே தோழர். ஹசாரே குறித்த உங்கள் பதிவுகள் மெச்சத் தகுந்தவை

  ReplyDelete
 7. /////இப்படியான பேச்சுக்கு இடையே இரண்டு மூன்று பொம்மைகளை விற்றிருந்தான். ஒரு லாரி ஓட்டுநரிடம் பேசும் போது 'ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்'
  விலையேற்றம் குறித்து சுப்பு பேசியிருந்தான்.//////

  யதார்த்தத்தை யதார்த்தமுாய் விளம்பியுள்ளீர்கள்...

  நன்றி ஐயா..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்

  ReplyDelete
 8. மிக்க நன்றி தோழர் ம.தி. சுதா

  ReplyDelete
 9. சாமி மீண்டும் பொம்மையாய்ப் போனார்

  ReplyDelete
 10. “ அவங்களுக்கெல்லாம் ஓங்கிட்ட ஏதோ ஒரு வரம் தேவப் பட்டுருக்கும். அதனால ஒங்கிட்ட வளஞ்சு குனிஞ்சு கூழக் கும்பிடு போட்டிருப்பாங்க. எனக்கு உன்னிடம் எதுவும் தேவை இல்ல. சூறையோ, புயலோ, மழையோ, வெயிலோ நாயா பேயா ஒழைக்கிறேன். ஒழப்புக்கான கூலியத் தவிர வேற எதையும் நான் எதிர்பார்க்குறது இல்ல. அதனாலதான் இந்த அசால்ட்டும் திமிரும்” அற்புதமான தொழிலாளி வர்க்க வரிகள்.....!!

  ReplyDelete
 11. மிக்க நன்றி தோழர் தனசேகரன்

  ReplyDelete
 12. கேள்விகள் கேட்டால் "சாமி"க்கள் பொம்மை ஆவது தானே வழக்கம் :)

  BTW,மனதில் நிற்கும் பதிவு :)

  ReplyDelete
 13. மிக்க நன்றி ஷான்

  ReplyDelete
 14. //உன்னப் படைக்கிறதுக்காக என்னப் படச்சது நீதானே சாமி?”//

  இதைத் தவிர மற்றெல்லாம் பிடிச்சிது!

  ReplyDelete
 15. அவனது வேட்டியை விடவும் அழுக்காயும் பழுப்பாயும் உள்ள பாட்டிலைத் திறந்து ///உடையும் வரை பாட்டிலை பயன் படுத்துவதை இதை விட அழகாய் சொல்ல முடியாது

  ReplyDelete
 16. யதார்த்தமான சிறுகதை நல்ல கற்பனை .......................

  ReplyDelete
 17. "ஆமாம் தெரியாமத்தான் கேக்குறேன் ஏம் பொழப்பு எப்படிப் போகுதுன்னுகூடத் தெரியலன்னா அப்புறம் நீயெல்லாம் என்ன சாமி?”/////சபாஸ் சரியான கேள்வி

  ReplyDelete
 18. சாமியிடம் சாதரண மனிதனுக்கு கேட்பதற்கு ஒன்றுமே இல்லை, சாமியை படைத்தவன் மனிதன் எனும் போது ஒரு வரி ஞாபகம் வருகிறது. கடவுள் இல்லையென்றால் இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை விட இந்தஉலகம் இல்லையென்றால் கடவுள் எங்கே இருப்பார் என்று பாரதிகிருஷ்ணகுமார் பேசியதை கேட்டேன்.

  நல்ல படைப்பு..

  ReplyDelete
 19. நம்மால் விடை காணமுடியாத பல புதிர்களுக்குத்
  தீர்வாய் கண்டுபிடிக்கப்பட்டவர்.....!
  .
  .
  கடவுள் !!
  கடவுள் இருக்கிறாரோ இல்லையோ ..??
  கடவுள் நம்பிக்கை இருப்பதால்தான் உலகம் இந்த அளவிலாவது கொஞ்சம் உருப்படியாக இருக்கிறது ..!!

  ReplyDelete
 20. \\\தருமி said...
  //உன்னப் படைக்கிறதுக்காக என்னப் படச்சது நீதானே சாமி?”//

  இதைத் தவிர மற்றெல்லாம் பிடிச்சிது!///

  உங்கள் கருத்தை தலை வணங்கி ஏற்கிறேன்.மனிதனின் அசட்டுத் தனமான பிடிவாதமான நம்பிக்கையை சொல்ல இது தேவை பட்டது தோழர். மிக்க நன்றி

  ReplyDelete
 21. @Arul Mozhi

  மிக்க நன்றி அருள் மொழி

  @ சசி said...
  மிக்க நன்றி சசி

  ReplyDelete
 22. @ ஹரிஹரன்
  மிக்க நன்றி ஹரிஹரன்.
  அண்ணன் BK அவர்களை நினைவு கூர்ந்தது என்னை எங்கோ கொண்டு போனது. மிக்க நன்றி

  ReplyDelete
 23. @ Vijay Saravanan

  மிக்க நன்றி விஜய்

  ReplyDelete
 24. அருமையான பதிவு தோழர். கடைசி வரைக்கும் இந்த சாமி அவனுக்கு ஒரு வரம் கொடுக்காம போய்டுச்சே... அது ஒன்று தான் வருத்தம்.

  ReplyDelete
 25. வரத்தை கேட்கிற ஆளா நம்ம ஆளு?
  மிக்க நன்றி சாலமோன்

  ReplyDelete
 26. அருமை!!! கடவுள் நம்மிடம் பேதம் காட்டவில்லை நாம் தான் கடவுளிடம் காட்டுகிறோம்!!!

  ReplyDelete
 27. மிக்க நன்றி தோழர்

  ReplyDelete
 28. சாமி பொம்மை ஆனாரோ
  இல்லையோ, இந்த பதிவைப்
  படித்த ஆ! சாமி நான் பொம்மை
  ஆகிப் போனேன்.

  அருமையான பதிவு
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 29. மரியாதைக்குரிய அய்யா,
  வணக்கமும் நன்றியும்.
  தொடர்ந்து சந்திப்போம் அய்யா.

  ReplyDelete
 30. நல்ல பதிவு .. இரண்டு காலிலும் தேஞ்சு போன சோத்து காலு செருப்பு என்பதை படித்த போது எனக்கு தெரிந்த ஒரு பாட்டியின் நினைவு .. வறுமையை அருமையான வார்த்தைகளில் காட்டி உள்ளீர்கள்.

  ReplyDelete
 31. மிக்க நன்றி தோழர் ஸ்ரீனிவாசன்

  ReplyDelete
 32. அட.. உங்களை ஒன்று கேட்கணுமுங்கோ! உங்களைப் படிக்கத்தானே சாமி எங்களைப் படைச்சாரு?

  ReplyDelete
 33. சுப்புக்கு பேச்சு துணையா கடவுள கூப்பிட்டுட்டு வந்துட்டீங்க. அவரும் வசமா வந்து மாட்டிக்கிட்டார். யாவாரம் நல்லாயிருக்குங்க

  ReplyDelete
 34. \\அம்பலத்தார் said...
  அட.. உங்களை ஒன்று கேட்கணுமுங்கோ! உங்களைப் படிக்கத்தானே சாமி எங்களைப் படைச்சாரு?//

  மிக்க மகிழ்ச்சி தோழர்.
  வணங்கி நன்றி சொல்கிறேன்.

  ReplyDelete
 35. \\Gowripriya said...
  அருமை ஐயா//

  மிக்க நன்றி தோழர் கௌரி

  ReplyDelete
 36. \\bagathsing said...
  சுப்புக்கு பேச்சு துணையா கடவுள கூப்பிட்டுட்டு வந்துட்டீங்க. அவரும் வசமா வந்து மாட்டிக்கிட்டார். யாவாரம் நல்லாயிருக்குங்க//

  அய்யா,
  வணங்கி , வரவேற்கிறேன்.
  மிக்க நன்றிங்க அய்யா.

  ReplyDelete
 37. சாமி மீண்டும் பொம்மையாய்ப் போனார்...

  மௌன பொம்மையாய்...

  நல்லாயிருந்தது...நண்பரே...

  ReplyDelete
 38. வணங்கி வரவேற்கிறேன் ரெவரி தோழர். தொடர்ந்து சந்திப்போம்

  ReplyDelete
 39. என்ன சொன்னாலும் சிக்கிக் கொள்வோம் என்பது புரியாமல் எதையாவது சொல்லி சிக்கிக் கொள்ள கடவுள் என்ன மன்மோஹன்சிங்கா? "/

  கட்வுள் மீண்டும் கல்லனார் .. சாரி ....பொம்மையானார்..

  ReplyDelete
 40. கடவுள் ஏன் கல்லானார் என்ற பாடல் நினைவுக்கு வந்தது. எவ்வளவு பெரிய விஷயங்களை எவ்வளவு எளிதாகப் பேசிவிட்டுப்போகிறீர்கள் இந்தக் கதையில். எல்லாசாமியும் அளவில் ஒன்று. உயர்ச்சியும் இல்லை தாழ்ச்சியும் இல்லை. எங்கோ ஒரு பெரிய வரலாறு இதில் புதுப்பிக்கப்படுகிறது. ரெண்டு கால்லேயும் சோத்தங்கால் செருப்புதான். இதை சுமை சுமப்பவனிடம், பூவிற்கும் கிழவியிடம், விறகுக்காக கருவமுள் வெட்டும் பெண்களிடம் ஆண்களிடம் கண்டு கசிந்தது உண்டு. அதேபோன்று சீவல் கம்பெனிக்குப் போகும் சில பெண்களிடம்...அருமையான கசிய வைக்கும் கதை.

  ReplyDelete
 41. @இராஜராஜேஸ்வரி
  வணக்கம் தோழர்,
  உங்களது வருகை மகிழ்ச்சியையும் தெம்பையும் தருகிறது. மிக்க நன்றி தோழர்

  ReplyDelete
 42. @ Harani
  மிக்க நன்றி ஹரணி.
  இதைப் பெருந்தன்மை என்று சொல்லாமல் வேறு எப்படி கொள்வது.இதை கட்டுரையாகத்தான் எழுதினேன் ஹரணி. கதை என்று கொள்ளலாமா?

  ReplyDelete
 43. http://www.whispersintamilnadu.com/2011/10/success-is-not-so-sweet.html

  ReplyDelete
 44. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......

  ReplyDelete
 45. மேல்நிலை வகுப்பில் தமிழ் 2 -ம் தாளில் நொண்டி பிள்ளையார் என்ற ஒரு சிறுகதை படித்த நியாபகம் .. (1983 ) உகள் சிறுகதையை படித்ததும் மீண்டும் நினைவுக்கு வந்தது .. பிறருக்கு என்று வாழாமல் தனக்காக வாழ்பவர்க்கு தான் இறைவனின் பயம் வேண்டும் .. தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவரை பார்த்து இறைவன் தான் பயப்பட வேண்டும் .. தெள்ளிய நீரோடை போல் தெளிவான காட்சி அமைப்புடன் ஒரு குறும் படத்தை பார்த்தது போல் பிரமிப்பு உண்டாவதை மறுக்க முடியாது .. வாழ்த்துக்கள் தோழரே ..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க தோழர்

   Delete
 46. இது தான் எங்க எட்வின் என்பது. இப்படி சிந்திக்க.. கடவுளைச் சந்திக்க.. அவரையும் நாலு கேள்வி கேட்க எட்வின் அவர்களால் மட்டுமே முடியும். விறு விறு... கடவுள் மண்டையிலும் சுறு சுறு என்று ஏறியிருக்கும்.. ஏன் இந்த ஏற்றத்தாழ்வு என்று.... ரசனையாக.. சிந்திக்கவும் வைத்தது.

  ReplyDelete
 47. நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது ,கடவுளை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டிஉள்ளது

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர் அன்பழகன்

   Delete
 48. வணக்கம் தோழர். கதை அருமை. சொல்ல சொல்ல இனிக்குதடா? சூப்பர் கதை தோழர். ஒவ்வொரு வரியிலும் ரசனை சொட்டுகிறது வாழ்த்துகள். இதனை நான் எங்கள் துளிர் மாத இதழுக்குப் ப்யன் படுத்திக் கொள்ளவா?

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர். பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் காக்கையில் வந்துள்ளதா எனப் பார்க்க வேண்டும்,

   Delete
 49. அன்பு நண்பர்க்கு,வணக்கம்.கற்பனைச் செறிவுடன் கடவுளை வம்புக்கு இழுத்திருக்கிறீர்கள்.கந்தசாமிப்பிள்ளைக்கு (நன்றி புதுமைப்பித்தன்) அடுத்து பொம்மைவிற்பவரோடு பேசவந்த கடவுளைக் கண்டேன்.அங்கதம் அருமை.மனிதன் படைத்த கடவுளுக்கு எதுவும் தெரிய நியாயமில்லை.இரசாயனவினாயகர்கள் கடலைக்கெடுப்பதை கிண்டலோடு சொல்லியிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள் நண்பரே!--பழனி.சோ.முத்துமாணிக்கம்.

  ReplyDelete
 50. ம்.. முழுவதும் படித்து முடித்துவிட்டேன். நல்ல கற்பனையுடன் சாமியை வைத்து மனிதர்களுக்கு புத்தி சொல்லியிருக்கிறார் எட்வின். அதை அந்த சாமியே சொன்னது போல் தான் இருந்தது... பகிர்ந்தமைக்கு நன்றி எட்வின்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர். தொடர்ந்து சந்திப்போம்

   Delete
 51. //கடவுள் ஒரு கனம் அப்படியே ஆடிப் போனார். ஆக, உழைக்காம எதிர்பார்க்குற செண்ட்டுகாரனிடம்தான் தனது ஜம்பம் பலிக்கும் என்பதும் உழைப்புகான நியாயமான கூலியை மட்டுமே எதிர்பார்க்கும் வேர்வைக்காரனிடம் எதுவும் நடக்காது என்பதும் புரிந்து போக மௌனமானார் கடவுள்// ஆமாம் அவர்கள்தானே கள்ளத்தனமாக கல்லாக்கட்டி உண்டியலில் கொட்டி கணக்கை மறைக்கிறார்கள். அவர்களிடம் தானே இவர் வித்தை காட்ட முடியும். உழைப்பவன் கோரிக்கையும் வைப்பான், கேள்விகளும் கேட்பான். எனவேதான் அவன் மாற்றத்திற்கான சக்தியாக திகழ்கிறான். நல்ல கற்பனை தோழர்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர். உங்களது வருகையும் கருத்தும் பெருமையாய் இருக்கிறது.

   Delete
 52. கற்பனையான கதைக்கு பின்னுட்டம் தேவையில்லை
  என்பதே என் கருத்து.....

  ReplyDelete
 53. தங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் நாசர்

  ReplyDelete
 54. இரண்டு பேரும் மாட்டிக்காம, ஆனா சொல்ல வேண்டியத கிளியர சொன்னதுல எட்வினின் இரட்டை வேடம் தெரிகிறது. கருத்தை கதையி உரைநடையாய் சொன்னவிதம் அருமை.

  ReplyDelete
 55. இரண்டு பேரும் மாட்டிக்காம, ஆனா சொல்ல வேண்டியத கிளியர சொன்னதுல எட்வினின் இரட்டை வேடம் தெரிகிறது. கருத்தை கதையி உரைநடையாய் சொன்னவிதம் அருமை.

  ReplyDelete
 56. இரண்டு பேரும் மாட்டிக்காம, ஆனா சொல்ல வேண்டியத கிளியர சொன்னதுல எட்வினின் இரட்டை வேடம் தெரிகிறது. கருத்தை கதையி உரைநடையாய் சொன்னவிதம் அருமை.

  ReplyDelete
 57. கடவுளும் கந்தசாமி பிள்ளையும் என்ற புதுமைபித்தனின் சிறுகதையை நினைவுபடுத்தியது வெகு யதார்த்தமான கதை

  ReplyDelete
 58. கடவுளும் கந்தசாமி பிள்ளையும் என்ற புதுமை பித்தனின் கதையை நினைவுபடுத்தியது...யதார்த்தமான் உரையாடல்

  ReplyDelete
 59. கேசவராஜ் ரங்கநாதன்September 11, 2013 at 11:46 AM

  நல்ல பதிவு அய்யா நல்ல பாமரத்தனமான நடை அற்புதம்...கடவுளும், கந்தசாமியும் பேசிக் கொண்ட ஓர் உணர்வு...தங்கள் எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள் அய்யா :)

  ReplyDelete
 60. வெ.ரங்கநாதன்,உடுமலை.September 12, 2013 at 6:49 AM

  சூப்பர் சுப்பு...சாமி எங்கே விற்று விடுவானோ என பயம் கொள்கிற இடம்
  அருமை. உழைப்பவன் பயப்படுவதில்லை வரிகள் சிறப்பானது.

  ReplyDelete
 61. ஏற்கனவே படித்த பதிவு தான். அருமை.
  நல்ல நாத்திகம் தான் சரியான ஆத்திகம்.. இந்த அருமையான பதிவை நண்பர்கள் படிக்க எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
  நன்றி & வாழ்த்துகள் திரு இரா.எட்வின்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க அய்யா

   Delete
 62. கதையல்ல, நிஜம், அற்புதம். ஆனால் ஒன்று இப்போது மன்மோகன்சிங் வாய் திறப்பதில்லை

  ReplyDelete
 63. சாமியை அவனவனது அடிக்கோலில் அளக்கிறான்.அதானால் சாமியின் விஸ்தீரணம் மாறுபடுவது இயற்கை. சிலர் அடிக்கோலும் இல்லாத பழமையில் இருக்கும் போது அளவுகள் ஏது.

  ReplyDelete
 64. உழைப்பாளிகளுக்கும், கடவுளுக்கும் உள்ள இடைவெளி கூட என்று தான் நினைத்திருந்தேன் இதுவரை! பரவாயில்லையே, உழைக்கிறவன் கிட்ட கூட கடவுள் வருகிறாரா.. நல்ல கதையா இருக்கே இது!

  ReplyDelete
 65. நான் படித்த அருமையான வரிகள. படித்ததில் பகிர எண்ணியவை... எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

  சு. துளசிதாஸ்
  மலேசியா.

  ReplyDelete
 66. உண்டு கொழுத்தவர்கள் சாமியை வைத்து பிழைப்பு நடத்துவதற்கும், இவரைப் போன்றவர்கள் பிழைப்பு நடத்துவதர்க்கும் எவ்வளவு வித்தியாசங்கள்..???..இயல்பான நடையில் கதை அருமை தோழர்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க சியாமளா

   Delete
 67. மிக்க நன்றி தோழர்களே

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...