Saturday, June 1, 2024

பாபேலில் தோற்ற மனித சமூகம்…

 

வேதப் புத்தகத்தில் இருந்து இரண்டு பகுதிகளை இங்கு எடுத்தாண்டிருக்கிறேன். இந்தக் கட்டுரைக்கு மிகவும்  பொருந்தும் என்பதால்தான் இதை செய்திருக்கிறேன்.

பையன் விசுவாசியாகி விட்டான் என்றெல்லாம் இதனால்  யாரும் என்னைக் கொண்டுவிட வேண்டாம் என்ற கோரிக்கையை இந்தக் கட்டுரைக்கான முன்னுரையாக வைக்கிறேன்.

பழைய ஏற்பாட்டின் முதல் புத்தகமாகிய ஆதியாகமம். அதன் பதினோராவது அதிகாரம், “பூமி எங்கும் ஒரே பாஷையும் ஒரே விதமான பேச்சும் இருந்ததுஎன்று தொடங்குகிறது.

என்றால், மக்களுக்கு அதுவரை மொழிபெயர்ப்பிற்கான சிக்கலே இல்லை என்றும் கொள்ளலாம்.

மக்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருந்ததாக அந்த அதிகாரத்தின் அதுவரைக்குமான பகுதியில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. நகர்ந்து கொண்டே இருந்த மக்களுக்கு இந்தத் தொடர் பயணம் தங்களை சிதறடித்து விடுமோ என்ற அச்சம் பிறக்கிறது. சிதறுண்டு போவோம் என்கிற சிந்தனையே அவர்களுக்கு அச்சத்தைத் தந்திருக்க வேண்டும்.

அதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர்கள் அந்த இடத்திலேயே தங்களுக்கென்று ஒரு நகரத்தைக் கட்டிக்கொண்டு வானளாவிய ஒரு கோபுரத்தை எழுப்பிக் கொள்ள முனைகிறார்கள்

இவர்களது கோபுரக் கட்டுமானத்தைக் காண கடவுள் அங்கு வருகிறார். அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே கட்டுமானத்தில் சுறுசுறுப்பாக இருப்பதைக் காண்கிறார்.

இது ஏதோ ஒரு வகையில் கடவுளை நெருடி இருக்க வேண்டும். அவர்  மக்கள் பேசுகிற மொழியை தாறுமாறாக்குகிறார். இப்படியாக பல மொழிகள் உருவாகின்றன. அதுமட்டுமில்லாமல் கடவுள் மக்களை சிதறிப்போகச் செய்கிறார்.

வேதத்தில் அப்படியான குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு மொழியைப் பேசுகிற குழுவும் ஒவ்வொரு திக்கிற்கு சென்றிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு நாம் வருவதற்கு தடையும் இல்லை.

பாபேல்என்பதற்கு என்ன பொருள் என்று தெரியவில்லை. ஆனால், மொழி தாறுமாறானதன் காரணமாக அந்த இடத்திற்கு பாபேல் என்று பெயரிடுகிறார் கடவுள் என்று ஆதியாகமம் கூறுகிறது.

ஒருவர் பேசுகிற மொழியை மற்றவருக்கு புரியாமல் செய்து அதன் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இயலாமல் செய்தது மனிதர்கள் மீதான மதத்தின் அப்போதைய வெற்றியாக இருக்கலாம்.

ஆனால், மற்றவர் மொழி தெரியாமலே அவர்களோடு உரையாடவும் தொடர்பு கொள்ளவும் மனிதனுக்கு ஒருநாள் ஏலும். அந்தப் புள்ளியில் மனிதன் மதத்தை வெல்வான் என்றுசெந்தமிழிலிருந்து செய்தமிழுக்குஎன்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள தன்னுடைய நேர்காணல் புத்தகத்தில் தோழர் ஆழி செந்தில்நாதன் கூறுகிறார்.

மொழிகள் வேறுபடுவதில் உள்ள சிக்கல்களில்

1)  ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள இயலாமல் போவது

2)  அந்தந்த மொழிக் குழுவின் மனிதச் சிந்தனை என்பது அந்தந்த மொழிக் குழுவோடு தேங்கிப் போவது

ஆகிய இரண்டையும் ஆக முக்கியமான பெரிய சிக்கல்களாக வகைப்படுத்தலாம்.

அவனது சிந்தனையை இவன் புரிந்து கொள்ள வேண்டும் எனில் இவன் அவனது மொழியைக் கற்றுக் கொள்வது அவசியமாகிறது.

இன்னொரு விதமாகவும் இதை அணுகலாம். அவன் தனது சிந்தனையை இவன் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கருதினால் அவன் இவனது மொழியைக் கற்றுக் கொண்டு தனது சிந்தனையை இவனது மொழியில் தர வேண்டும்.

இந்தச் சிக்கலின் நீட்சிதான் தற்போது மொழியின் ஆதிக்க அரசியலுக்கு வழி வகுத்திருக்கிறது. மன்னரின், ஜனநாயக நாடெனில் ஆட்சிக்கு வருபவரின் மொழி அவரது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியின் ஆதிக்க மொழியாகிறது. அந்தப் பகுதியின் பிற மொழிக்காரர்களை ஆதிக்கக்காரர்களின் மொழி அடிமைப்படுத்துகிற எல்லைக்கு இது நகர்கிறது. கொஞ்சம் மென்மையாக சொல்வதெனில் மற்றவர்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றுகிறது.

குடிமக்கள் தங்களது அரசன் தமக்கு சொல்வதைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவர்கள் அரச மொழியைக் கற்றாக வேண்டி இருக்கிறது.

அரசனது உத்தரவைத் தெரிந்து கொள்வதற்கு குடிகள் அரசனது மொழியைக் கற்க வேண்டுமா அல்லது குடிகள் தனது உத்தரவைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக குடிகளின் மொழிகளில் அரசன் தனது  உத்தரவைத் தர வேண்டுமா என்கிற சிக்கலைத் தீர்ப்பதற்கான தெளிவையும் வேதப் புத்தகத்தின் இன்னொரு இடத்தில் வரும் ஒரு சம்பவம் பாடம் நடத்துகிறது.

பழைய ஏற்பாட்டில் உள்ளஎஸ்தர்புத்தகத்தில் ஒரு சம்பவம்.

ஆகாஸ்வேரு என்ற அரசன் தான் ஆட்சிக்கு வந்து மூன்றாடுகள் நிறைவதை மிக விமர்சையாகக் கொண்டாடினான்.

பக்கத்து நாடுகளின் அரசர்களும் பிரபுக்களுமாகத் திரண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் விரும்புகிற பானங்களும் உணவும் வழங்கப்படுகின்றன. அவர்கள் கேளிக்கைகளில் திளைத்திருக்கிறார்கள்.

அந்த நாட்டின் பட்டத்து அரசியான வஸ்தி அரண்மனையின் இன்னொரு புறத்தில் மன்னர்களின் மனைவிமார்கள் மற்றும் பிரபுக்களின் மனைவிமார்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருக்கிறாள்.

மன்னர்களுக்கும் பிரபுக்களுக்கும் தனது அழகான மனைவியை அறிமுகப்படுத்த விரும்புகிறான் அகாஸ்வேரு. ஆகவே அவளை அழைத்துவர ஆட்களை அனுப்புகிறான். என்ன காரணம் என்பது தெரியவில்லை. ஆனால், வஸ்தி வருவதற்கு மறுத்து விடுகிறாள்.

அரசனுக்கு கோபம் வருகிறது. மற்றவர்களுக்கு அரசியே மன்னனுக்கு கீழ்படியவில்லை என்ற விஷயம் வெளியே தெரிந்தால் மற்ற மனைவிமார்களும் தங்களது கணவன்மார்களுக்கு கீழ்ப்படிய மாட்டார்கள் என்ற அச்சம் வந்துவிடுகிறது.

எனவே அவர்கள் கணவன்தான் குடும்பத்தின் தலைவன். கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். கீழ்ப்படிய மறுக்கும் மனைவிமார்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள் என்ற ஆணையை மக்களுக்கு இடவேண்டும் என்று அரசனைக் கேட்கிறார்கள்.

அரசனும் அப்படி ஒரு ஆணையைப் பிறப்பிக்கிறான். அதை மக்களிட்த்திலே கொண்டுபோய் சேர்க்க வேண்டுமென தனது ஊழியர்களுக்கு கட்டளையிடுகிறான்.

ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் எல்லாம் இதில் உள்ளனதான். ஆனால் அந்த உத்தரவை மக்களிடம் எப்படிக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று தனது ஊழியர்களுக்கு வழிகாட்டியதில் மொழியை ஒரு அரசு எப்படிக் கையாள வேண்டும் என்ற தெளிவு இருக்கிறது.

அவனது நாட்டில் பல மொழிகளைப் பேசும் மக்கள் இருக்கிறார்கள். தனது கட்டளையை அந்தந்த மக்கள் பேசும் மொழிகளின் வழியாகவே அந்தந்த மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று தனது ஊழியர்களுக்கு அவன் கட்டளையிட்டான்.

தான் சொல்வது மக்களுக்குப் புரிய வேண்டும். அப்போதுதான் அவர்கள் அவனது கட்டளையின்படி நடந்துகொள்ள முடியும். எனில், தனது உத்தரவுகளை மக்களது மொழியில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற நுட்பம் இது.

இதைப் புரிந்து கொள்ளாததால்தான் இந்தியா மாதிரியான பல மொழிகளைக் கொண்ட ஒரு உப கண்டத்தில் அரச மொழியைக் கற்காதவர்கள் தேச விரோதிகள் என்பதாகவே கொள்ளப்படும் துயரம் இருக்கிறது.

இந்த இடத்தில்தான் மொழி பெயர்ப்பின் தேவை வருகிறது.

அரசு அந்தந்த மக்களின் மொழியில் உரையாட வேண்டும் என்பது சரி. அவைகளில் பொதுக் கூட்டங்களில் வைக்கப்படும் உரையை கேட்போரின் மொழிகளின் மொழி பெயர்ப்பாளர்களைக் கொண்டு செய்து விடலாம். புத்தகங்களையும் மொழி பெயர்த்து விடலாம்.

இப்போது வளர்ந்துவிட்ட அறிவியல் காலத்தில் காதுகளுக்குள் சொருகிக் கொள்ளக்கூடிய அளவிலான மிகச் சிறிய இயந்திரங்கள் மொழி பெயர்க்கின்றன.

தேவைப்படும் அளவிற்கு துல்லியம் இல்லை என்றாலும் அலைபேசியில் வைத்துக் கொள்ளக்கூடிய செயலிகளே அச்சுப் பிரதிகளை மொழிபெயர்த்துத் தருகின்றன.

ஒலி வடிவங்களை அச்சுப் பிரதிகளாகவும், அச்சுப் பிரதிகளை ஒலி வடிவிலும் மொழிபெயர்க்கக்கூடிய செயலிகள் வந்துவிட்டன.

நூறு விழுக்காடு துல்லியமும் நாளைக்கோ இன்னும் பதினைந்து நாட்கள் தொலைவிலோ அதற்குக் கொஞ்சம் காலம் கழித்தோ நிச்சயமாக வசப்படும்.

நெருக்கமான ஒரு வரும்நாளில் முகமும் அவனது மொழியும்  தெரியாத ஒருவனுக்கு நாம் இங்கிருந்து தமிழில் அலை பேசினால் அது அவனது காதில் அவனது மொழியில் போய் சேர்ந்து விடும். அதற்கு அவனது மொழியில் அவன் அளிக்கும் மறுமொழி தமிழில் நம் காதில் வந்து சேரும்.

மெல்லிசான ப்ளூடூத் அளவிலான ஒரு கருவியை அனைவரும் அவரவர் காதுகளில் மாட்டிக் கொள்வோம். நாம் தமிழில் பேசுவது விமான நிலைய அதிகாரிகளுக்கு இந்தியில் போய் சேர்ந்து விடும். அவர் இந்தியில் கேட்பது நமக்கு தமிழில் வந்து சேரும்.

இந்தியா முழுக்கப் போக வேண்டுமா இந்தியைப் படி, உலகம் சுற்ற வேண்டுமா உனக்கு ஆங்கிலம் அவசியம் என்றெல்லாம் நம்மிடம் இனி எவனும் கதை அளக்க முடியாது.

எந்த மொழி பேசும் மருத்துவரிடமும் எந்த மொழி பேசும் நோயாளியும் எந்தவித சிரமமும் இன்றி சிகிச்சைபெற முடியும்.

ஆனாலும் இதன் பொருள் வேறு மொழிகளை எவரும் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதல்ல. சாமானிய, எளிய மனிதனை மொழி இனி முடக்கி வைக்காது என்பதுதான்.

அந்தந்த மொழிகளின் இலக்கியத்தை விழுமியங்களை அந்தந்த மொழிகளில் எடுப்பதில் இருக்கும் ஜீவனை இந்தக் கருவிகள் கொடுக்காது. தேவையும் நேரமும் வசதியும் இருப்போர் முடிந்த அளவு தேவையான மொழிகளைக் கற்பது அவசியம்.

பல மொழிகளின் திணிப்பால் பாபேலில் தோற்ற மனித சமூகம், ஒற்றை மொழித் திணிப்பால் இந்தியா போன்ற துணைக் கண்டம் என்று அழைக்கப்படுகிற நாட்டில் ஒற்றுமையை சேதப்படுத்திக் கொண்டிருக்கும் மனித சமூகம் மொழிச் சிக்கலில் இருந்து நிச்சயம் மீளும்.

பார்த்துவிட்டுதான் போக வேண்டும்.

- காக்கைச் சிறகினிலே மே 2024

 

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...