Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Monday, July 7, 2025

ஒரு புள்ளதான வச்சிருக்க

 சிந்தாமணியூர்

K.பெருமாள் ஜவுளிக்கடை
பக்கத்தில்
அப்பா, அம்மா, பாட்டி இவர்களோடு ஒரு குழந்தை
30 இருக்கும்
அப்பாவிற்கு பீகாக் ப்ளு பிடிக்கும் என்பதால் அந்தக் கலரில் ஒரு பட்டு
8500 ரூபாய்
சிரித்தபடி
நல்லாருக்கு தானே அங்கிள் என்கிறாள்
அப்படி ஒரு வார்ப்பான சிரிப்பு
செமையா இருக்கு சாமி
இன்னும் வார்ப்பாய் சிரிக்கிறாள்
அம்மாக்கு புடிச்ச கலர்ல ஒன்னு
பாட்டிக்கு புடிச்ச கலர்ல ஒன்னு
ஏண்டி எத்தன எடுப்ப
ஒரு புள்ளதான வச்சிருக்க
எனக்கு புடிச்ச கலர்ல ஒன்று எங்கட்டுக்காரருக்கு புடிச்ச மாதிரி ஒன்னு
இப்ப அவங்க அப்பா
எப்ப பார்த்தாலும் ஒரு புள்ளைய வச்சுருக்கன்னு சொல்லிய மொளகா அறக்கிற நீ
உங்க வீட்டுக்காரரும் ஒரு வொய்ப்தான வச்சிருக்கார்னு சொன்னதுதான் தாமதம்
நீ தப்பா பேசிட்ட பைனா ஒரு புடவை
வேற வழி
அள்ளிட்டுப் போறப்ப கன்னத்தைப் பிடித்து வரட்டா அங்கிள்னு சிரிச்சபடியே போறா
பெருசா வா சாமி

Thursday, March 20, 2025

இதை அதிர்ச்சி என்று குறுக்குவது ...

 



இது ஆணாதிக்கம்
இது குழந்தை விரோதம்
இது அசிங்கம்
இது அயோக்கியத்தனம்
இது மனித விரோதம்
இதை அதிர்ச்சி என்று குறுக்குவது மேலே சொன்ன அத்தனையும்

20.03.2025

Monday, March 17, 2025

பிள்ளை தரப்போகும் தேநீருக்கான தாகம்

 15.03.2025 அன்று பெரம்பலூரில், “இடது விழிவழி வைக்கம் 100” என்ற தலைப்பில் தீக்கதிர் வாசக வட்டத்தில் உரையாற்றியது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது

வெளியே வந்ததும் மருத்துவர் கருணாகரன் இடுப்பை அணைத்து இறுக்கி கன்னத்தைத் தட்டிவிட்டு சென்றார்
பிள்ளை அம்பேத் கோகுல் அதேபோல் குனிந்து இடுப்பை அணைத்து சிரித்துவிட்டு சென்றான். அவன் உயரத்திற்கு குனிந்தால்தான் நம்ம இடுப்பு கிடைக்கும்.
அடுத்தநாள் காலை அழைத்த கட்சியின் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கிருஷ்ணசாமி உரைகுறித்து அரைமணி நேரம் பேசினார்
இத்தனை ஆண்டுகளில் அவர் என்னை அழைத்துப் பேசுவது இது இரண்டாவது முறை
இவை எல்லாம் இப்படி இருக்க,
எங்கள் கூட்டங்களில் ஆர்வமாக பங்கேற்கும் எங்கள் மாவட்டச் செயலாளர் தோழர் Ramesh Perumaldyfiயின் இளைய மகள் (அவரது இரண்டு மகள்களின் பெயர்களில் குழம்பிக் கிடப்பதால் தவறாக சொல்லி பிள்ளைகளிடம் திட்டு வாங்க விருப்பம் இல்லை) வெளியே வந்து கேட்டாள்
”பேச்செல்லாம் செமையா புரிஞ்சுது. ஆனா ஒன்னே ஒன்னுதான் புரியவே இல்ல. ஆமா வைக்கம் வைக்கம்னீங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?”
அவள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி இருக்கிறாள்
வைக்கம் என்றால் கேரளாவில் உள்ள ஊர் என்றதும்
”இப்ப புரியுது, கேரளாவில் வைக்கம் ஒரு ஊர். அந்த ஊர்ல இந்தப் பிரச்சினை. “ என்கிறாள்.
குழந்தைகளும் வருவார்கள். அவர்களையும் மனதில் கொண்டு பேச வேண்டும் என்பது அன்றைய கூட்டத்தின் பாடம்
இன்னொரு விஷயம் என்னவெனில் அன்றைய கூட்டத்திற்கு வந்திருந்த எங்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் அகஸ்டின் அவர்களின் குழந்தையின் தோழமை
அவளும் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதியிருக்கிறாள்
”அங்கிள் வீட்டுக்கு வாங்க, டீ போட்டுத் தாரேன்” என்றாள்
பிள்ளை தரப்போகும் தேநீருக்கான தாகம் தொடங்கி இருக்கிறது

17.03.2025

Monday, February 5, 2024

பழம் விடத் தெரியாதவங்க ஏன் காய் விடறீங்க?

 

கிரோஷனும் லேஷந்த் சாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
கிரோஷன் யாரோடோ காய் விட்டுட்டு பழமே விடமாட்டேங்கறான்போல
பழம் விடத் தெரியலைனா ஏண்டா காய் விட்டங்கறார் லேஷந்த்
நியாயம்தான,
பழம் விடத் தெரியாதவங்க ஏன் காய் விடறீங்க?

நம்பிக்கையோடு எழுதுவோம்

 

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இரவில் நானும் பொன்மலை ராஜாவும் கவிஞர் கௌதமனை அவர் வீடு சென்று சந்திக்கிறோம்
அற்புதமான கவிஞர்
அவரது கவிதைகள் குறித்து பேசுவதற்காக இப்போது அவரை நினைக்கவில்லை
“எண்பது கோடியில் இவனும் ஒருவன்” என்ற அவரது கவிதை நூலுக்கான முன்னுரையில் அவர் வைத்திருந்த இரண்டு மூன்று வரிகளே அவரை இப்போது நினைவுபடுத்தியது
எங்காவது தான் காணும் சமூக அவலங்களை ‘லெட்டர் டு தெ எடிட்டர்’ பகுதிக்கு எழுதுவதுபோல்தான் தனது கவிதைகள் என்று சொல்லி இருப்பார்
அன்றில் இருந்து அதைத்தான் நானும் செய்துகொண்டிருக்கிறேன்
நம்முடைய இலக்கிய அந்தஸ்து அவ்வளவுதான்
சென்ற டிசம்பர் இறுதியில் காரைக்குடியில் கும்பல் கும்பலாக குழந்தைகள் பிச்சை எடுப்பதைப் பார்த்து நொந்தவனாக முகநூல், ட்விட்டர், ப்ளாக், பேசக் கிடைப்பவர்கள் என்று கத்திக் கொண்டே இருந்தேன்
நான் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை
03.02.2024 அன்று மீண்டும் காரைக்குடி செல்கிறேன்
பிச்சை எடுக்கும் எந்தக் குழந்தையும் என் கண்ணில் படவில்லை
CITU ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளரான தோழர் வெங்கட்டிடம் கேட்டபோது பத்துப் பதினைந்து நாட்களாகவே தனது கண்ணில் பிச்சை எடுக்கும் குழந்தைகள் தட்டுப்படவில்லை என்கிறார்
அப்படி ஒரு மகிழ்ச்சி
இடையில் ஒரு செய்தி கிடைத்தது
DRO வாக இருக்கும் திருமிகு ரேவதி அவர்கள் இந்தப் பதிவைப் படித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும்
அவர் நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் கூறியதாகவும் தகவல் கிட்டியது
அவர் விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் வரவுள்ளவர்
எப்படி வாழ்த்துவது
ஒன்றுதான்
எழுதுவோம்
நம்பிக்கையோடு எழுதுவோம்
படவேண்டியவர்கள் கண்களில் பட்டால் நல்லது நடக்கும்
All reactions:

Sunday, January 28, 2024

“ஒங்கமேல கோவங்கோவமா வருது அங்கிள்”

 
இப்போதெல்லாம் லேஷந்த் சார் மீண்டும் 
அடிக்கடி வீட்டிற்கு வருகிறார்

வீடே வெளிச்சமாகிறது

“ஒங்கமேல கோவங்கோவமா வருது அங்கிள்”

ஏன் சாமி?

”பின்ன, ஒங்களுக்கு மட்டும் சண்டே, மண்டே, 
ட்யூஸ்டே, எல்லா டேசும் லீவு தராங்க” 

கோவங்கோவமா = பொறாம பொறாமையா

Thursday, January 18, 2024

“நல்லா பேசினீங்க அங்கிள்”

 
நேற்று முற்றிலும் புதிய அனுபவம் ஒன்று கிடைத்தது

பொங்கல் விழாக்களில் பேசிக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது

இப்போது அதைத் தவிர்த்திருக்கிறேன்

பொங்கல் விழாக்களின் மீது கோவம் என்றெல்லாம் நமக்கு ஏதும் இல்லை 

ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களாக  குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டிருப்பார்கள்

நிறைவு விழா என்பது குழந்தைகளுக்கானத் திருவிழா

அன்று குழந்தைகள் பரிசுகளைப் பெறுவதும்

மேடையில் அவர்கள் ஆடுவதும் பாடுவதுமான அனுபவம் இருக்கிறதே

அப்பப்பா...

அதில் சென்று பேசுவதென்பது இருக்கிறதே 

அது,

குழந்தைகளின் மீதான வன்முறை என்பதை நான் புரிந்து கொள்வதற்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆனது 

என்றால்,

கொண்டாட மட்டும்தானா தோழர்?

அரசியல் படுத்த வேண்டாமா?

விவரப்படுத்த வேண்டாமா?

ஒன்றும் வேண்டாம் என்பதே என் பதில்

அதை வேறு நாட்களில் வேறு வகையில் செய்ய வேண்டும்

அன்று ஒருநாள் அந்தக் குழந்தைகளோடு கரைந்து விடுங்கள் என்பதும்

பிறகொருநாள் கூப்பிடுங்கள்

வந்து பேசிவிட்டு வருகிறோம் என்பதும்தான் DYFI பிள்ளைகளுக்கான எனது வேண்டுகோளாக இருக்கிறது

கடந்த மூன்று வருடங்களாக எங்கள் தெருவில் பொன்கல் விழாவை நண்டுகளும் நடுசுகளும் கொண்டாடுகின்றனர்

ரெண்டு நோட்டு உசரமே இருக்கிற வாண்டுகள் நோட்டைத் தூக்கிக் கொண்டு வசூலுக்கு வருவதும்

விழாவை நடத்துவதும் 

மீண்டுமொரு அப்பப்பா

நேற்று விழா

பரிசுகள் கொடுக்க 11.30

பேசுங்கறாங்க

மறுக்கிறேன்

ஊர் ஊர்ரா பேசப் போறீங்கன்னு டீச்சர் சொல்றாங்க. எங்களுக்கு பேச மாட்டீங்களா?

இல்லீங்கம்மா, நாளைக்கு பசங்க பள்ளிக்கூடம் போகனும்ல...

”அத நாங்க பாத்துக்கறோம் அங்கிள், நீங்க பேசுங்க” 

விழாவிற்காக யூனிஃபாமோடு இருந்த பெண் குழந்தைகள் கத்துகிறார்கள்

இது ஆச்சரியமானது

இப்ப நான் யாருக்குப் பேசறது?

பெரியவங்களுக்கா?

பொடிசுங்களுக்கா?

முடிக்கவில்லை,

ரெண்டுபேருக்கும் பேசுங்க அங்கிள் என்கிறாள் ஜனா

எதிரே கலைந்தது போக 150 பேர்

அங்கங்கே வீட்டு வாசலி மக்கள்

ஜாதி பார்க்காத, மதம் பார்க்காத எங்கள் தெரு குறித்து பேசுகிறேன்

விசிலடிச்சுக்கிட்டே இருக்கிறாங்க பெண் பிள்ளைகள்

அரை மணி நேரத்திற்கும் மேல் பேசுகிறேன்

யாரும் எழுவில்லை

முடிச்சிட்டு வரேன்

வாசிப்பு முகாம் எப்ப அங்கிள் என்கிறா லேகா

வருகிறேன்

விட்டு வாசலில் அமர்ந்திருக்கிறது

மூன்றாவது படிக்கும் குழந்தை ஒருத்தி வந்து கை கொடுத்து 

“நல்லா பேசினீங்க அங்கிள்” என்கிறாள்

உனக்கென்னா புரிஞ்சுது என்று வியந்து சிரித்தபடி கேட்ட விட்டுவிடம்

ஆடுங்க சொன்னாங்க, பாடுங்க சொன்னாங்க, விளையாடுங்க சொன்னாங்க, படிங்க சொன்னாங்க, அல்லா, ராமர்னு சண்ட போடாதிங்க சொன்னாங்க

அய்யோ சாமி

எங்க தெருவில் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு போல

ஆனால் இப்பவும் சொல்கிறேன்

குழந்தைகளின் கொண்டாட்டத்தில் குறுக்கிட வேண்டாம் நாம்

சன்னமான நெறிப்படுத்துதல் போதும்


Wednesday, January 17, 2024

ஒரு டீக்கெல்லாம் ரெண்டுதரம் எல்லாம் வாழ்த்த முடியாது

 காந்திமதி அக்கா விஷயமாக நானும் கலையும் தோழர் அன்பரசுவிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது Kalai Mani யிடம்

”டீ சாப்பிடலாமா”
அப்படி ஒரு முறைப்பு
அது என்னமோ தெரியல டீ கேட்டாக்க எல்லாப் புள்ளைங்களுமே இப்படித்தான் மொறைக்கிறாங்க
ஆனாலும் உடனே சிரித்தபடி வாங்கித் தருகிறாள்
இந்த ஈர மனசுதான் கலை. நூறு வருஷம் நீ இப்படியே நோய் நொடி இல்லாம இரு கலை
டீ குடித்து முடித்ததும் இருவரும் கிளம்பறோம்
ஒரு அம்மாவும் பிள்ளையும் வண்டியில் இருந்து இறங்குகிறார்கள்
நான் குழந்தையைப் பார்த்து சிரித்தபடியே ஹாய் சொல்லுகிறேன்
குழந்தை கண்டுகொள்ளவே இல்லை
அந்தப் பிள்ளையின் அம்மா அந்தக் குழந்தையை அழைத்து
யார் சிரிச்சாலும் சிரிக்கனும் சொல்லி இருக்கேன்ல தாத்தாட்ட ஹாய் சொல்லு என்று சொல்லவே ஹாய் சொன்னான்
வரம்
இது ஒன்னு மட்டும் லூசு இல்ல என்று கலை நினைத்திருக்கக் கூடும்
லூசுங்களாலதான் உலகம் இயங்குது தாயே
நீ நல்லா இரு தாயே
ஒரு டீக்கெல்லாம் ரெண்டுதரம் எல்லாம் வாழ்த்த முடியாது
இது எனக்கு ஒரு ஹாய் வாங்கிக் கொடுத்த அந்தப் பொண்ணுக்கு
All reaction

புள்ளையோட கோவத்த சரி பண்ணுங்கப்பா என்பது இரண்டு

 




தோழர் யாழ் தண்விகா விற்கு அவரது மகள் தனு எழுதிய கடிதம்
சொல்ல ரெண்டு
நான் படித்த நல்ல பத்து கடிதங்களில் இதுவும் ஒன்று என்பது ஒன்று
புள்ளையோட கோவத்த சரி பண்ணுங்கப்பா என்பது இரண்டு
இந்தக் கடிதம் படித்து இரண்டு ஆண்டுகளாக இதன் ரேட்டிங் குறையவே இல்லை என்பது மூன்று

Thursday, January 11, 2024

அப்ப என்னையும் திட்டுங்க

 

வண்டி ஸ்டாண்ட்
சல்லென்று வெளியே வந்த குழந்தை சற்றே தடுமாறுகிறாள்
ஓரமாக ஒதுங்குகிறேன்
ஒரு வழியாக சுதாரித்து வந்தவள் நிறுத்துகிறாள்
இப்ப எதுக்கு ஒதுங்குனீங்க?

பொம்பளப் புள்ள,
பாவம்
முடியாதுன்னுதான
புள்ளைக்கு சிரமம் வேணாம்னு சாமி
கதையெல்லாம் வேணா அங்கிள்
பையன்னா திட்டிருப்பீங்கதான
டேய்னு கத்திருப்பேன்
அப்ப என்னையும் திட்டுங்க
ஏய்...
அது
கவனம் கவனம்னு நான் கத்தறத கவனிக்கவே இல்லை
பறந்துட்டா
என்ன ஒரு ஆசிர்வாதம்

Friday, January 5, 2024

நீங்களும் யாருன்னுதான் எனக்குத் தெரியல

 

மாலை,
கிளம்புகிற நேரம் பார்த்து அந்தக் குழந்தை வருகிறாள்
வாயெல்லாம் பல்
என்ன சாமி?
அட்டெண்டென்ஸ் செர்டிஃபிகேட் வேணும்
நீ யாருன்னே தெரியல. எப்படித் தரது?
நீங்களும் யாருன்னுதான் எனக்குத் தெரியல. ஆனா கேட்கலையா. அப்படித்தான்

Tuesday, January 2, 2024

அந்த அழுகைச்சத்தமாக வருகிற எழுத்துதான் எழுத்து

                                                                                                                                                                               காரைக்குடியின் குறுக்கும் நெடுக்குமாய்

சின்னச் சின்னக் குவியல்களாய்க்

கையேந்தித் திரியும் குழந்தைகள் குறித்து வைத்திருந்தேன்

என்ன நடக்கும் என்று இப்படி புலம்பற என்று

பொதுவில் வைப்பதற்குத் தயங்கி

அழைத்து அறிவுரை கூறிய நண்பர்கள் உண்டு

ஏதும் நடக்குமா?

அப்படியே நடந்தாலும் முழு நிவாரணமாக அது அமையுமா?

”அவர்கள்” நம்புவதுபோல ஏதுமே நடக்காதா?

முடிவு சொல்கிற தெளிவோ அறிவோ எனக்கில்லை

புவியரசு அய்யா ஒருமுறை சொன்னார்,

”ஒரு குழந்தையும் அம்மாவும் நடந்து போகிறார்கள்

அம்மாவை ஒரு சிறு கூட்டம் தொந்தரவு செய்கிறார்கள்

என்ன நடக்கிறது என்று குழந்தைக்குத் தெரியாது

ஆனால் அம்மாவிற்கு ஏதோ ஆபத்து என்பதை அந்தக் குழந்தை உணர்கிறாள்

தன்னால் காப்பாற்ற முடியாது

அழுகிறாள்

சத்தமாய் அழுகிறாள்

அந்தச் சத்தம் அவளது அம்மாவைக் காப்பாற்றும் என்று நம்புகிறாள்

அந்த அழுகைச்சத்தமாக வருகிற எழுத்துதான் எழுத்து”
என்று

அதைத்தான் செய்ய முயற்சிக்கிறேன்

சத்தம் தோழர் வளவன் வசந்தா சித்தார்த்தா அவர்களுக்கு கேட்டிருக்கிறது

நிச்சயமாக ஏதேனும் நடக்கும் என்ற நம்பிக்கைத் துளிர்க்கிறது

அதன் பொருட்டே ஒரு கோப்பை தேநீர் குடித்தேன்

எல்லோரும் சத்தம் போட்டால் இன்னும் கொஞ்சம் உரத்துக் கேட்கும்

அவ்வளவுதான்

பெரியார் மண்

திராவிடம் ஆள்கிற பூமி

பண்டிதருக்கும், திராவிடத்திற்கும், இடதுசாரிகளுக்கும், அம்பேத்கரிஸ்டுகளுக்கும் நிச்சயமாக சொந்தமான பூமி

இந்தப் பூமியில் எந்தக் குழந்தையும்

அது எந்த மண்ணைச் சேர்ந்த குழந்தையாக இருந்தாலும்

கையேந்தக் கூடாது

புத்தகம் கையெடுக்க வேண்டும்

கூட்டம் கூட்டமாக குழந்தைகள் கையேந்துகிறார்கள் என்று கதறுவதும் அதற்காகத்தான்








All rea

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...