நேற்று முற்றிலும் புதிய அனுபவம் ஒன்று கிடைத்தது
பொங்கல் விழாக்களில் பேசிக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது
இப்போது அதைத் தவிர்த்திருக்கிறேன்
பொங்கல் விழாக்களின் மீது கோவம் என்றெல்லாம் நமக்கு ஏதும் இல்லை
ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களாக குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டிருப்பார்கள்
நிறைவு விழா என்பது குழந்தைகளுக்கானத் திருவிழா
அன்று குழந்தைகள் பரிசுகளைப் பெறுவதும்
மேடையில் அவர்கள் ஆடுவதும் பாடுவதுமான அனுபவம் இருக்கிறதே
அப்பப்பா...
அதில் சென்று பேசுவதென்பது இருக்கிறதே
அது,
குழந்தைகளின் மீதான வன்முறை என்பதை நான் புரிந்து கொள்வதற்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆனது
என்றால்,
கொண்டாட மட்டும்தானா தோழர்?
அரசியல் படுத்த வேண்டாமா?
விவரப்படுத்த வேண்டாமா?
ஒன்றும் வேண்டாம் என்பதே என் பதில்
அதை வேறு நாட்களில் வேறு வகையில் செய்ய வேண்டும்
அன்று ஒருநாள் அந்தக் குழந்தைகளோடு கரைந்து விடுங்கள் என்பதும்
பிறகொருநாள் கூப்பிடுங்கள்
வந்து பேசிவிட்டு வருகிறோம் என்பதும்தான் DYFI பிள்ளைகளுக்கான எனது வேண்டுகோளாக இருக்கிறது
கடந்த மூன்று வருடங்களாக எங்கள் தெருவில் பொன்கல் விழாவை நண்டுகளும் நடுசுகளும் கொண்டாடுகின்றனர்
ரெண்டு நோட்டு உசரமே இருக்கிற வாண்டுகள் நோட்டைத் தூக்கிக் கொண்டு வசூலுக்கு வருவதும்
விழாவை நடத்துவதும்
மீண்டுமொரு அப்பப்பா
நேற்று விழா
பரிசுகள் கொடுக்க 11.30
பேசுங்கறாங்க
மறுக்கிறேன்
ஊர் ஊர்ரா பேசப் போறீங்கன்னு டீச்சர் சொல்றாங்க. எங்களுக்கு பேச மாட்டீங்களா?
இல்லீங்கம்மா, நாளைக்கு பசங்க பள்ளிக்கூடம் போகனும்ல...
”அத நாங்க பாத்துக்கறோம் அங்கிள், நீங்க பேசுங்க”
விழாவிற்காக யூனிஃபாமோடு இருந்த பெண் குழந்தைகள் கத்துகிறார்கள்
இது ஆச்சரியமானது
இப்ப நான் யாருக்குப் பேசறது?
பெரியவங்களுக்கா?
பொடிசுங்களுக்கா?
முடிக்கவில்லை,
ரெண்டுபேருக்கும் பேசுங்க அங்கிள் என்கிறாள் ஜனா
எதிரே கலைந்தது போக 150 பேர்
அங்கங்கே வீட்டு வாசலி மக்கள்
ஜாதி பார்க்காத, மதம் பார்க்காத எங்கள் தெரு குறித்து பேசுகிறேன்
விசிலடிச்சுக்கிட்டே இருக்கிறாங்க பெண் பிள்ளைகள்
அரை மணி நேரத்திற்கும் மேல் பேசுகிறேன்
யாரும் எழுவில்லை
முடிச்சிட்டு வரேன்
வாசிப்பு முகாம் எப்ப அங்கிள் என்கிறா லேகா
வருகிறேன்
விட்டு வாசலில் அமர்ந்திருக்கிறது
மூன்றாவது படிக்கும் குழந்தை ஒருத்தி வந்து கை கொடுத்து
“நல்லா பேசினீங்க அங்கிள்” என்கிறாள்
உனக்கென்னா புரிஞ்சுது என்று வியந்து சிரித்தபடி கேட்ட விட்டுவிடம்
ஆடுங்க சொன்னாங்க, பாடுங்க சொன்னாங்க, விளையாடுங்க சொன்னாங்க, படிங்க சொன்னாங்க, அல்லா, ராமர்னு சண்ட போடாதிங்க சொன்னாங்க
அய்யோ சாமி
எங்க தெருவில் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு போல
ஆனால் இப்பவும் சொல்கிறேன்
குழந்தைகளின் கொண்டாட்டத்தில் குறுக்கிட வேண்டாம் நாம்
சன்னமான நெறிப்படுத்துதல் போதும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்