30.12.2023
காலை ஏழரை மணி
காரைக்குடிக்குள் நுழைந்ததும்
ஐந்து அல்லது ஆறு குழந்தைகள் இருக்கும்
கையேந்துகிறார்கள்
இது இயல்பானதாகத் தெரியவில்லை
யாரோ பின்னிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது
எல்லோரும் காரில் ஏறுங்க ஸ்கூலுக்குப் போகலாம் என்றதும் பறந்து விட்டார்கள்
சராசரி வயது எட்டு இருக்கலாம்
நமக்கும் அவசரம்
பிறகு 12 மணி வாக்கில் நானும் செல்வராஜும் இளநீர் பருக அலைகிறோம்
கடைக்கு வந்தால்
அங்கும் மூன்றுபேர் கை ஏந்துகிறார்கள்
அதே வயது
படிக்கிறீங்களா சாமி?
பறந்து விடுகிறார்கள்
மதிய உணவிற்கு மல்லி ஓட்டல் வந்தால்
சைவம் அசைவம் என்று இரண்டு ஓட்டல்கள் அடுத்தடுத்து
இரண்டின் வாயில்களிலும் பத்துப் பேருக்கும் அதிகமாக
கண்ணதாசன் மணி மண்டபம் அருகில்
எங்கு பார்த்தாலும் கையேந்தும் குழந்தைகள்
நிச்சயமாக இது ஒரு நெட்வொர்க்
எந்த ஊர்க் குழந்தைகள்?
எந்த மாநிலத்துக் குழந்தைகள் இவர்கள்?
பின்னே யார்
உடனே பதிவு போடுகிறேன்
காரணம்
நான்கு வருடங்களுக்கு முன் சென்னையில்
இதேபோல ஒரு ஜனவரி ஒன்றில் நான்கைந்து சிக்னல்களில் இதேபோல குழந்தைகளைப் பார்க்கிறேன்
ஆட்டோவில் அமர்ந்தபடி அழுகிறேன்
தோழர் புஷ்பராஜ் தேற்றுகிறார்
என்ன முடியும் என்னால்
ஒன்று முடியும்
எழுதுகிறேன்
அடுத்த நாள் தோழர் வளவன் வசந்தா சித்தார்த்தா அழைத்து சில தகவல்கள் கேட்கிறார்
தெரிந்ததை சொல்கிறேன்
அடுத்தநாள்
கிட்டத்தட்ட 10 குழந்தைகளை மீட்டுள்ளதாகவும்
விடுதிக்கும் பள்ளிக்கும் ஏற்பாடுகள் நடப்பதாகவும் சொல்கிறார்
போனிலேயே அழுகிறேன்
வேறென்ன முடியும் நம்மால்?
இப்போதும் நம்பிக்கை வருகிறது
இதைப் படிக்கும் யாராவது ஏதாவது செய்ய முடியும்
”பசி இல்லாத காரைக்குடி” என்ற அமைப்பின் தோழர் ஒருவர் உரையாடிக் கொண்டிருக்கிறார்
அவர்கள் வெளியூர்ப் பிள்ளைகள் என்கிறார்
கலக்டரிடம் பேசலாமே என்கிறேன்
அந்தக் குழந்தைகள் அமைச்சரிடமே கையேந்தும் என்கிறார்
அந்தக் குழந்தைகளை எப்பாடு பட்டேனும் பள்ளிக்குள் கொண்டு சேர்த்துவிட வேண்டும்
என்ன செய்வதெனத் தெரியவில்லை?
யாராவது சொல்லுங்களேன்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்