அன்புத் தோழர் மார்க்கண்டன் அவர்களுக்கு,
வணக்கம்
கணிணியில் எதையோ துழாவிக் கொண்டிருந்தபோது இந்தப் படம் கிடைத்தது
இனி என் இறுதிவரை இந்தப் படம் என்னிடம் பத்திரமாக இருக்கும்
அப்படிப் பிடிக்கும் தோழர் எனக்கு உங்களை
பேருந்தில் எனக்கான வேலைகள் இரண்டு
ஒன்று வாசிப்பது
அல்லது அலைபேசுவது
அன்று வாசித்துக் கொண்டிருக்கிறேன்
சிறுவாச்சூர்
ஏறிய நீங்கள் உங்களை அறிமுகம் செய்து கொள்கிறீர்கள்
எனது உரைகளைக் கேட்டிருப்பதாகவும் முகநூலில் வாசித்து வருவதாகவும்
சொல்கிறீர்கள்
அதன் பிறகுதான் முகநூலில் உன்னிப்பாக உங்களைக் கவனிக்க ஆரம்பிக்கிறேன்
உங்களது வாசிப்பின் கனம் கண்டு வியப்பின் உச்சிக்குப் போகிறேன்
தன்னடக்கம் எல்லாம் இல்லை
வாசிப்பவன்தான்
சமயத்தில் பிசாசு மாதிரி வாசிப்பவன்தான்
என்னைவிட ஆழமாகவும்
என்னைவிட அதிகமாகவும் வாசிக்கிற மனிதன் ஒருவர் எங்கள் ஊரில் இருக்கிறார் மதி என்று இளமதியிடம் சொல்கிறேன்
இந்த நேரத்தில் தம்பிகள் முருகதீட்சண்யாவும், துவாரகா சாமிநாதனும் என்னையும் யவனிக்காவையும் சிறப்பு செய்யும் விதமாக மயிலாடுதுறையில் ஒரு நிகழ்ச்சி செய்கிறார்கள்
நீங்கள் வருகிறீர்கள்
ஏதோ எனக்காக வந்துவிட்டீர்கள் போல என்று நினைக்கிறேன்
யவனிக்காவிற்காக வந்ததாக சொல்கிறீர்கள்
சிரிக்கிறேன்
ஒருமுறை தோழர் விஜயசங்கருடனான உரையாடல் கிட்டத்தட்ட ஒரு அரைமணி நேரம் உங்களைச் சுற்றியே வருகிறது
உங்களது கோவம் குறித்தே எஙகளது உரையாடல் நிகழ்கிறது
நான் மட்டும் அல்ல அவரும் உங்களது கோவத்தின் ரசிகர்தான்
ஆனால் அதை நீங்கள் வெளிப்படுத்தும் விதம் குறித்து இருவருமே கவலைப் பட்டோம்
யார்மீது வேண்டுமானாலும் சத்தியம் செய்து சொல்கிறேன்
பெரம்பலூரின் ஆகச் சிறந்த படிப்பாளியும் ஞானவானும் நீங்கள்தான்
எவ்வளவு இருக்கிறது உங்களிடம்
ஞானப் பொதி மூட்டையை உள்ளுக்குள் சுமந்தப்டி குழந்தைபோல சிரிக்கும் வெள்ளந்தி மனிதர் நீங்கள்
ஒன்று சொல்லவா
சமூகத்திற்கு,
குறைந்த பட்சம் முகநூல் சமூகத்திற்கு அப்படியே முழுதாக தன்னை ஒளிவு மறைவின்றி ஒப்படைத்துக் கொண்ட உன்னத மனிதர் நீங்கள்
ஒரு கட்டுரையை, கவிதையை, புதினத்தை, சிறுகதையை யார் சிறப்பாகத் தந்தாலும் கொண்டாடும் ரகம்
உங்களுக்குள் இருக்கும் ஓராயிரம் விஷயங்களை எப்போதுத் தரப் போகிறீர்கள்
உங்களது ஞானத்தில் எல்லோருக்கும் பங்கு உண்டு என்பதை நீங்கள் அவசியம் உணர வேண்டும்
போக,
இப்போது கோவம் குறைந்திருக்கிறது
உங்களது மொழி ஏகத்திற்கும் பக்குவப்பட்டிருக்கிறது
இதுதான் சிறந்த தருணம்
எழுதுங்கள்
கையேந்திக் கேட்கிறேன்
குழந்தைகளுக்கு என் முத்தம்
சகோதரிக்கு என் விசாரிப்புகள்
மீண்டும் ஒருமுறை கையேந்திக் கேட்கிறேன்
எழுதுங்கள்
நன்றி
அன்புடன்,
இரா.எட்வின்
15.01.2024
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்