வாய்வரை வந்து
விழுங்கிய
சொற்களின்
எச்சங்கள்
கண்ணீராய்க்
கரைகிறது”
என்று தனது “அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது” தொகுப்பில் எழுதி இருப்பாள் இளமதி
ஆணின் அடக்குமுறைகளுக்கு எதிராக,
ஆதிக்கத்திற்கு எதிராக தொண்டைவரை வரும் சினச் சொற்கள் அதற்குமேல் கண்ணீராக மாறிவிடும் என்று இதைக் கொள்ளலாம்
ஒரு பெண்ணின் சினம் கண்ணீராக மாறிவிடும் என்பதை
இயலாமையாகவும் கொள்ளலாம்
அல்லது,
அவளது கண்ணீரை ஆணாதிக்கத்திற்கு எதிரான வாள் என்றும் கொள்ளலாம்
“ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்” என்பார்கள்
ஆனால்
தொண்டை வரை அல்ல
கடுஞ்சொற்களாகவே ஆணாதிக்கத்தின் மீதும் உழைக்கும் பெண்கள் பேசி இருக்கிறார்கள்
ஆணாதிக்கத்தின் மீதான சம்மட்டியாகத்தான் “சாண்டக்குடிக்கி” என்ற கெட்ட வார்த்தையே வந்தது என்று அந்த வார்த்தை வந்த வரலாற்றினை
20.01.2024 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற அரசியல் வகுப்பில் வகுப்பெடுத்த திருச்சி புறநகர் மாவட்டத்தின் செயலாளர் தோழர் ஜெயசீலன் கூறினார்
எங்க அம்மாயி “சாண்டக் குடுக்கி” என்ற கெட்ட வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தும்
கிழவிக்கு இந்த ஆங்கிலம் மிக நன்றாக வரும்
சாண்டு என்றால் மூத்திரம்
ஆகவே ‘சாண்டக் குடிக்கி’ என்பதை மூத்திரக் குடிக்கி என்றும் கொள்ளலாம்
ஆனால் கிழவி ஒரு போதும் இந்த வார்த்தையை பெண்கள் மீது பிரயோகப் படுத்தியதே இல்லை
சரி, கிழவிக்கு ஆண்கள்மீது உள்ள கோவம் அப்படிப் போல என்று நினைத்துக் கொள்வேன்
தோழர் ஜெயசீலன் சொன்ன வரலாறு சிலிர்க்க வைத்தது
தஞ்சையில் ஆண்டைகளுக்கு தமது பண்ணையாள் மீது கோவம் வந்தால்
விளாசுவார்களாம்
அப்போது அந்தப் பண்ணையாளின் மனைவியை அழைத்து அவளது கணவன் அடிபடுவதை வேடிக்கைப் பார்க்கச் செய்வார்களாம்
ஒருக் கட்டத்தில் ஒரு கலையத்தைக் கொடுத்து அவனது மனைவியை அதில் அவளது மூத்திரத்தைப் பிடித்துவரச் செய்வார்களாம்
அந்த மூத்திரத்தை அவனைக் குடிக்கச் செய்வார்களாம்
ஒருநாள் இரவு பண்ணையாள் ஒருவன் குடித்துவிட்டு வந்து தனது மனைவியை அடிக்க ஆரம்பித்திருக்கிறான்
அவன் அன்று காலை தனது பண்ணையாரிடம் அடிபட்டு தன் மனைவியின் மூத்திரத்தையும் குடித்திருக்கிறான்
அடி தாங்காத அந்தப் பெண் ஒரு கட்டத்தில்
காலையில அந்த மிதி வாங்குன என் சாண்டக் குடிச்சவனே. ஆம்பளன்னா உன் வீரத்தை அங்க போய்க் காட்டு என்றாளாம்
ஆக, சாண்டக் குடிக்கி என்பது பெண்ணெழுச்சியின் ஒரு கூறு
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்