Friday, January 4, 2019

அவர்கள் அங்கிருந்து நகரவே மாட்டார்கள்.


பிரியத்திற்குரிய திரு ராகுல் அவர்களுக்கு,
வணக்கம்.

நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவின் கோட்டைக்குள்ளேயே புகுந்து அந்தக் கட்சியின் கண்களில் விரலைவிட்டு விளையாண்டுவிட்டு வந்திருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு இந்த எளிய மனிதனின் வணக்கமும் வாழ்த்துக்களும்.

உங்களது கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருமதி குஷ்பு அவர்கள் சொன்னதுபோல் இந்த அளவிற்கு மக்கள் பாஜகவை நிராகரித்திருப்பதற்கு நீங்கள் மட்டும் காரணம் இல்லை என்பது உண்மைதான். அதை நீங்களும் உணர்ந்தே இருக்கிறீர்கள். ஆனால் பாஜக மீதான மக்களின் கோபத்தை மிகச் சரியாக ஒருங்கிணைத்து ஒரு புள்ளியில் குவித்ததில் உங்கள் பங்கு மகத்தானது. அதை ஒரு சாதனையாகக் கொண்டால் அதற்குரிய தொண்ணூறு விழுக்காடு உங்களைத்தான் சேரும்.

அதே நேரம் செல்வி மாயாவதி மற்றும் திரு அகிலேஷ் ஆகியோரோடு நீங்கள் ஒரு இணக்கத்தைக் கைக்கொண்டிருந்தால் பாஜக இத்தனை இடங்களையும் இவ்வளவு வாக்குகளையும் வாங்கியிருக்க முடியாது. ஒருக்கால் அப்படி நடந்திருந்தால் அது வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கான உங்களுக்கான கூடுதலான பலமாக இருந்திருக்கும்.

எந்தவிதமான கூச்ச நாச்சமும் இல்லாமல், மக்களை கேவலப்படுத்துகிற, பிரித்தாளுகிற மற்றும் நாசப்படுத்துகிற காரண காரியங்களை பாஜக அரசு மிகுதியான ஆணவத்தோடு செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறது. இதன்மூலம் மக்களுக்கு எதிர்சக்திகள் தாங்கள் என்பதை அவர்கள் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் பலப்படுவது என்பது எளிய மக்களுக்கு ஒருவித நம்பிக்கையைத் தருகிறது. அதனால்தான் நீங்கள் இன்னும் பேரதிகமாய் பலப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஒன்றைச் சொல்ல வேண்டும் திரு ராகுல்,

பொதுவாக ஒவ்வொரு தேர்தல் நடந்து முடிந்த பின்பும் ஏதோ ஒரு கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெற்றதாக சிலர் கொண்டாடுகிறார்கள். ஏதோ ஒரு கட்சி அல்லது கூட்டணி தோற்றுப் போனதாய் சிலர் துவண்டு போகிறார்கள். பல அப்பாவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ஆனால், எந்தக் கட்சியும் வெற்றிபெறுவதும் இல்லை. எந்தக் கட்சியும் தோல்வியுறுவதும் இல்லை.

மக்கள் நம்பி ஒரு கட்சியை அல்லது ஒரு கூட்டணியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சிலரை நிராகரிக்கிறார்கள். மக்கள் தேர்ந்தெடுத்த கட்சி அல்லது கூட்டணி ஏதோ தாம் வெற்றிபெற்றுவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

இதில் வெற்றியும் தோல்வியும் மக்களுக்கானவை.

மக்களுக்கான வெற்றியையும் தோல்வியையும்கூட தமதென்று அரசியல் கட்சிகள் களவாடிக் கொள்வதாகத்தான் இதைக் கொள்ள வேண்டும்.

தேர்தல் வெற்றி தோல்வி எப்படி மக்களுடையதாகும்?

அவர்கள் தேர்ந்தெடுத்த கட்சி அவர்களுக்கான ஒரு நல்ல ஆட்சியைத் தருமானால் அது அவர்களுக்கான வெற்றியாகும். அல்லாது போனால் அந்தத் தேர்தலில் மக்கள் தோற்றுப்போனார்கள் என்றுதான் கொள்ள வேண்டும்.

பொதுவாக தேர்தலில் அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம் என்று கட்சிகள் மக்களிடம் வாக்குறுதிகளைக் கொடுப்பது எல்லோரும் அறிந்தது.

வாக்காளர்கள் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் ஒரு கோரிக்கை சீட்டாகும். வரும் ஐந்து ஆண்டுகளுக்கு எங்கள் குழந்தைகளுக்கான நல்ல கல்வியை, ஆரோக்கியமான வாழ்வை, வேலைக்கான உத்தரவாதத்தை, சமத்துவத்தை, எங்கள் மொழிக்கான உரிமையை உறுதி செய்வதோடு எங்களின் பன்முகத்தன்மையை பாதுகாக்கிற ஒரு நல்ல ஆட்சியைக் கொடுங்கள் என்கிற எம் மக்களின் கோரிக்கை சீட்டே அவர்களது வாக்குச்சீட்டு.

இதை நீங்கள் மிகச் சரியாகப் புரிந்து வைத்திருப்பதாகவே இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான உங்களது முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு கூறுகிறது. அந்தச் சந்திப்பில் நீங்கள் கூறிய கீழ்க்காணும் இரண்டு விஷயங்கள் மிக முக்கியமானவையாக எனக்குப் படுகின்றன.

1)   இந்தத் தேர்தலில் மிகப் பெரிய வினையாற்றியது விவசாயிகளின் பிரச்சினைகள்தான்
2)   எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதை நான் திரு மோடியிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன்.

இவை இரண்டும் மிகவும் வலிமையானவை ஆகும். நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களோ இல்லையோ, நான் ஒத்துக் கொள்கிறேனோ இல்லையோ மோடிக்கான எதிர் நீங்கள்தான் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் புரிகிற பாஷையில் நமக்கு சொல்லியிருக்கின்றன.

இந்தத் தேர்தலை ஒட்டி தில்லியிலும் அயோத்தியிலும் மிகப்பெரிய பேரணிகள் நடந்தன ராகுல். இருநூறுக்கும் அதிகமான விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து தில்லியிலும் சங் பரிவார அமைப்புகள் ஒன்றிணைந்து அயோத்தியிலும் அந்தப் பேரணிகளை நடத்தின. அவற்றின் தாக்கத்தையும் எதிர்த்தாக்கத்தையும் நாம் அவசியம் இந்தத் தேர்தல் குறித்த பரிசீலனைக்குள் கொண்டுவர வேண்டும்.

தில்லியில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான விவசாய மக்களின் கண்களில் தங்கள் வாழ்க்கையைக் களவுகொடுத்த வலியும் அதை மீட்டெடுக்க வேண்டும் என்ற உறுதியும் இருந்தன. அயோத்தியில் கூடிய திரளின் கண்களில் மதவெறி மட்டுமே திரண்டு வழிந்தது.

1)   அயோத்தியில் திரண்டவர்கள் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமருக்கு ஆலயம் கட்டியே தீர வேண்டும் என்று கத்தினார்கள்
2)   தில்லியில் திரண்ட விவசாயிகள் தங்களுக்குராமர் கோயிலெல்லாம் வேண்டாம். விவசாயக் கடன் தள்ளுபடிதான் வேண்டும்என்று முழக்கமிட்டார்கள்.

மக்கள் விவசாயிகளின் குரலை வாக்குச் சீட்டுகளின்மூலம் எதிரொலித்திருக்கிறார்கள். இந்தமுறை பாஜகவிற்கு எதிராக வாக்களித்தவர்களில் ஒரு பகுதியினர் ராம பக்தர்கள்தான். இன்னும் சொல்லப்போனால், அவர்களில் பலர் ராமர் கோவிலுக்கு ஆதரவானவர்களே. ஆக, அவர்களுக்கு ராமனைக் கும்பிடக் கோவிலுக்கு போக வேண்டும் என்றால் அதற்கு தாம் உயிரோடு இருக்க வேண்டும் என்பதும் அதற்கு விவசாயிகள் பிழைத்திருக்க வேண்டும் என்பதும் புரிந்திருக்கிறது.

நமது நாட்டின் மொத்த மனித உழைப்பில் மூன்றில் ஒரு பங்கு விவசாயத் தொழிலாளிகளின் உழைப்பு என்று ஒரு அறிக்கை கூறுகிறது. அதுவே நமது கிரமங்களைப் பொறுத்தவரை 55 சதவிகித மனித உழைப்பு விவசாயத் தொழிலாளார்களுடையது என்றும் அதே அறிக்கை கூறுகிறது. இதில் ஐம்பது சதவிகித உழைப்பை தலித் விவசாயத் தொழிலாளர்களே வழங்குகிறார்கள்.

2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 36,332 விவசாயத் தற்கொலைகள் நடந்திருக்கின்றன. அவற்றில் 16,324 பேர் விவசாயத் தொழிலாளர்கள். நடக்கும் விவசாயத் தற்கொலைகளில் விவசாயக் கூலித் தொழிலாளிகளின் தற்கொலை விகிதாச்சாரம் அதிகரித்தபடியே வருகிறது போன்ற தகவல்களைதேசியக் குற்றப் பதிவு ஆணையத்தின் புள்ளி விவரங்கள்கூறுவதாக முனைவர் தி.ராஜ் பிரவீன் தனது கட்டுரை ஒன்றில் கூறுகிறார்.

பீகார், மேற்கு வங்கம், உத்திர்கண்ட் ஆகிய மாநிலங்களில் விவசாயத் தற்கொலைகள் என்பது விவசாயத் தொழிலாளிகளின் தற்கொலையாகவே உள்ளது. இதற்கான காரணம் விவசாயிகளால் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு  ஏதோ ஒரு புள்ளியில் நகர்ந்துவிட முடியும். ஆண்டைகளால் முதலாளியாக முடியும். ஆனால் விவசாயத் தொழிலாளிகளால் வேறு தொழிலுக்கு அவ்வளவு எளிதாக மாறிவிட முடியாது. அதனால்தான் வேறுவழியே இல்லாதபோது அவன் தற்கொலை செய்து கொள்கிறான்.

விவசாயிகளின் கீழ்க்காணும் பிரதான கோரிக்கைகளான,

1)   விளைவிக்க ஆகும் செலவின் ஒன்றரை மடங்கில் ஆதரவு விலை வேண்டும்
2)   ஏதுமற்று கையறு நிலையில் இருக்கக்கூடிய விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஆகிய இரண்டுமே நியாயமானவையும் நிறைவேற்றக் கூடியவையுமே ஆகும். நாடாளுமன்றத்தைக் கூட்டி மூன்று வாரங்கள் தங்களது இந்த இரண்டு கோரிக்கைகளைப் பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டும் என்பது அவர்களது வேண்டுகோள். அதைக்கூட ஏற்க மறுத்தது பாஜக அரசு.

கேரளாவில், தமிழகத்தில், கர்நாடகாவில் பேரிடர்கள் ஏற்பட்ட பொழுது பாஜகவினர் மிகத் திமிரோடு நடந்து கொண்டார்கள். தமிழர்கள் என்ன பாஜகவிற்கா ஓட்டுப் போட்டார்கள். எங்களுக்கு ஓட்டுப்போடாத உங்களுக்கு நாங்கள் ஏன் நிவாரணம் வழங்க வேண்டும் என்றெல்லாம்கூட அந்தக் கட்சியின் தேசியச் செயலாளர் தமிழ் மண்ணில் நின்றுகொண்டு தமிழிலேயே பேசினார்.

தன் கையறு நிலைகண்டு தமிழக விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் அனுபவித்த வலியை அந்த மாநிலத்து விவசாயியும் விவசாயத் தொழிலாளியும் உணர முடிந்திருக்கிறது என்பதையே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.

உழைப்பவைன் வலியை உணர்வதற்கு மொழியெல்லாம் தடை இல்லை ராகுல். 

அதனால்தான் மக்கள் அதற்கு இப்போது சரியாக பதில் கொடுத்திருக்கிறார்கள்.

தோழர் திருமாவளாவன் அவர்கள் கூறிய ஒன்றை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என் பிரியத்திற்குரிய ராகுல்

ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தலை அம்பேத்கருக்கும் மனுவிற்கும் இடையே நடந்த ஒரு போராகவே அவர் கருதினார். ஆம், அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசமைப்பு சட்டத்திற்கும் மனு எழுதிய மனுதர்ம சாஸ்திரத்திற்கும் இடையே நடந்த போர் என்று அவர் கூறியது முற்றிலும் சரி.

இந்திய அரசமைப்பு சட்டம் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்கிறது. மனு சாஸ்திரம் அந்த சமத்துவத்தை மறுக்கிறது. குழந்தைத் திருமணத்தை அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசமைப்பு சட்டம் குற்றம் என்கிறது. மனுவின் கொள்ளுப்பேரன் ஆதித்யநாத் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் ராஜஸ்தானில் அதற்கு சட்டப் பாதுகாப்பு தரும் என்கிறார். 

இப்போதுகூட பாருங்கள் ராகுல்,

தீண்டாமை ஒழிப்பு சட்டத்தை உச்சநீதி மன்றம் நீக்கிய பிறகு  மத்திய அரசு அதில் சில சீர்திருத்தங்களை செய்து அமலுக்கு கொண்டுவந்ததே தங்கள் தோல்விக்கான காரணம் என்று அவர்கள் பரிசீலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

அவர்கள் அங்கிருந்து நகரவே மாட்டார்கள்.

இப்போதுகூட அந்த எளிய மக்கள் உங்களை தேர்ந்தெடுத்திருப்பதற்கு காரணம் மனுவாதிகளுக்கு எதிரான, பன்முகத் தன்மையை சிதைப்பவர்களுக்கு எதிரான போரில் நீங்கள் அவர்களுக்கான கருவி என்று கருதுவதால்தான். மற்றபடி, நீங்கள் மனுவிற்கு எதிரானவர் என்பதை, விவசாயிகளுக்கு ஆதரவானவர் என்பதை, பன்முகத்தன்மையை தாங்கிப் பிடிப்பவர் என்பதை எல்லாம் இனிதான் நிறுவ வேண்டும்.

எம் அப்பாவி மக்கள் மோடியை வீழ்த்த வேண்டும் என்றால் நீங்கள் வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அப்படி மட்டும் அல்ல நான் உங்களவன் என்று நீங்கள் நிறுவிவிட்டால் போதும், என் பிரியத்திற்குரிய ராகுல் அவர்களே இன்னும் முப்பது ஆண்டுகளுக்கான அவர்களுக்கான ஒரு தலைவன் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அவர்கள் உங்களைக் கொண்டாடித் தீர்ப்பார்கள்.

இது தங்களுக்கான வெற்றிகரமான தோல்விஎன்று பாஜகவின் தமிழகத்து தலைவர் திருமதி தமிழிசை கூறினார். அதை கிண்டல் செய்து நிரவிவிட்டோம்தான். ஆனாலும் அவர் கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை ராகுல்.

திரிபுராவில் நாங்கள் தோற்றாலும் எங்களுக்கு கிடைத்த வாக்குகளின் அளவும் விகிதாச்சாரமும் மீண்டும் அங்கு வருவோம் என்ற நம்பிக்கையை எங்களுக்குத் தந்திருக்கிறது. கிட்டத்தட்ட இதே மாதிரியான வாக்குகளை இப்போது பாஜகவும் ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் பெற்றிருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்போது திருமதி தமிழிசை அவர்களின் கூற்றை அவ்வளவு எளிதாக நிராகரித்துவிட முடியாது ராகுல்.

கொஞ்சம் கசக்கும்தான், காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் அவ்வளவு பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நீங்கள் உணரவேண்டும் என் பிரியத்திற்குரிய ராகுல்.

ரஃபேல் ஊழலுக்கு எதிராக நீங்கள் முழங்குவது ஒரு நம்பிக்கையைத் தருகிறது. ஆனால் அவர்களுக்கு ரஃபேல் என்றால் காங்கிரசுக்கு போபர்ஸ் என்பதை நிராகரித்துக் கடந்துவிட முயற்சிக்காதீர்கள்.

மசூதியை இடித்தது அவர்கள் என்றால் அவர்கள் இடிக்க வேடிக்கை பார்த்தது அன்றைக்கு பதவியில் இருந்த காங்கிரஸ் என்பதையும் போகிற போக்கில் நீங்கள் நிராகரித்துவிடக் கூடாது.

பெருமுதலாளிகளுக்கு அவர்கள் மட்டும் அல்ல காங்கிரசும் விசுவாசமாகத்தான் கடந்த காலத்தில் இருந்தது என்பதையும் நீங்கள் நிராகரித்துவிடக் கூடாது.

அப்படிச் செய்வீர்கள் எனில் மீண்டும் ஒருமுறை நாங்கள் தோற்றுப் போவோம்.

பலம் வாய்ந்த பாஜகவை எதிர்கொள்ள உங்களால் மட்டும் இயலாது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பதுகூட எமக்கான பலம் பிரியத்திற்குரிய ராகுல். அதே நேரம் அதை நடைமுறைப் படுத்துவதில், குறிப்பாக மாயாவதி மற்றும் அகிலேஷ் ஆகியோருடனான உங்கள் கட்சியின் நடைமுறை நிறைய மாற வேண்டும்.

தேசம் முழுக்க பாஜகவிற்கு எதிரான ஒவ்வொரு மனிதனையும் ஓரணிப்படுத்த வேண்டும். அதற்கு நீங்கள் இன்னும் உழைக்க வேண்டும்.

உங்களது வயதில் உங்களது பக்குவமும் கீழிறங்கும் தன்மையும் நான் அறிந்ததுதான். ஆனால் மக்கள் தோற்றுப் போகக்கூடாது என்றால் நீங்கள் இன்னும் கீழிறங்கி இன்னும் அதிகமாய் வேலை பார்க்க வேண்டும்.

எனக்குத் தெரியும் ராகுல்,

அதை நீங்கள் செய்வீர்கள்.

நன்றி.

அன்புடன்,
இரா.எட்வின்







.


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...