Tuesday, January 1, 2019

வாய்க்கிற இடமெங்கும் என்னைப் பற்றியும்

பிரியத்திற்குரிய தோழர் பிரபஞ்சன்,
வணக்கம்.
அநேகமாக இன்னும் கொஞ்ச நேரத்தில் புத்தாண்டு வந்துவிடும். யார் கண்டது, நான் இதை முடிப்பதற்குள் அது வந்தும் இருக்கலாம்.
உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டும். ‘அதெல்லாம் வேண்டாம் போடா’ என்று சொல்லிவிட்டு போய் சேர்ந்திருக்கிறீர்கள்.
வருடா வருடம் நான் வணங்கி வாழ்த்தும் தோழர்களுள் நீங்களும் ஒருவர்.
மரணத்தால் இவ்வளவு சீக்கிரம் உங்களது விலாசத்தைக் கண்டடைய முடியாது என்று உங்களைவிட அதிகமாய் நம்பியவன் நான். இன்றைய எனக்கு எதேனும் இருக்கும் என்றால் அதற்கு முக்கியமான காரணங்களுள் நீங்கள் மிக முக்கியமானவர். என் நூல்களுக்கு ஒரு பெரிய விழா எடுத்து உங்களை அழைத்து உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
”மலம்பார்த்து மலம்பார்த்து” என்றொரு கட்டுரையை ‘சுகன்’ னில் எழுதியிருந்தேன். அதை வாசித்திவிட்டு நீங்கள் சுகனோடு பேசியிருக்கிறீர்கள். பிரிதொரு சமயம் அந்தக் கட்டுரை குறித்து கொஞ்சம் நீளமாகவே மக்கள் தொலைக்காட்சியில் உரையாடியிருக்கிறீர்கள்.
அதை ஒட்டி சுகனது விழாவில் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. அந்தச் சமயத்தில் என்னுடைய சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு போயிருக்கிறது. ”ப்ரோஸ் நல்லா வருது. நகர்ந்துடாதீங்க” என்று தட்டிக்கொடுத்தீர்கள்
“லோமியா” என்ற நாவலின் விமர்சனக்கூட்டத்திற்கு வைகறை அய்யா அழைத்திருந்தார். அப்போது சைதாப்பேட்டையில் அவரது பதிப்பகம் இருந்தது. நீங்கள்தான் சிறப்பு விருந்தினர். மேடைப் ப்ரொட்டோகால்படி நீங்கள்தான் கடைசியாகப் பேச வேண்டும். தஞ்சாவூர்க் கவிராயர் பேசியபிறகு நான் பேசி இறுதியாய் நீங்கள் பேச வேண்டும்.
“இன்று எட்வின் நிறைய பேசட்டும். நான் சுருக்கிக்கறேன். எட்வினது பேச்சைக் கேளுங்கள்” என்று இறுதியாய் பேச வைத்த பெருந்தன்மையாளர் நீங்கள்.
வைகறை அய்யா அழைப்பிதழில் என்பெயருக்குப் முன்னால் ‘எழுத்தாளர்’ என்று போட்டிருந்தார். அதுகுறித்து நான் கூச்சத்தோடு குறிப்பிட்டபோது எழுந்துநின்று “எழுத்தாளர் எட்வின்” என்று மூன்றுமுறை கூறி அனைவரையும் வாழ்த்த வைத்தவர் நீங்கள்.
அந்த வகையில் என்னை எழுத்தாளர் என்று மேடையில் முதன் முதலில் விளித்த மனிதர் நீங்கள்.
அந்த நிகழ்ச்சி முடிந்து இரண்டாம்நாள் தச்சன் நடராஜன் அழைத்து அலைபேசியை வைகறை அய்யாவிடம் கொடுக்கிறான்.
“இருக்கிற கட்டுரைகளையெல்லாம் தொகுத்து நாளைக்குள் அனுப்புங்க எட்வின்” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான்
தச்சன் நாகராஜனும் தஞ்சாவூர் கவிராயரும் என்ன நடந்தது என்று கூறினார்கள். அந்தக் கூட்டம் முடிந்ததும் புறப்பட்டு விட்டேன். என்னுடைய அந்த உரையை ஒரு சிறுநூலாக வெளியிட வேண்டும் என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். எனது கட்டுரைகள் குறித்து பேச்சு நகர்ந்திருக்கிறது. வைகறை அய்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு என் எழுத்தை நூலாக்கக் கோரியிருக்கிறீர்கள்.
அப்படித்தான் எனது முதல் நூலான “அந்தக் கேள்விக்கு வயது 98” வந்தது.
அச்சுக்கு போயிருக்கிற நூல்களையும் சேர்த்தால் மொத்தம் 13 நூல்கள் தோழர். எப்படி என் நன்றியை சொல்வது?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பள்ளிக்கல்வித்துறையின் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒன்றில் நீங்கள், நான், கல்யாணி அய்யா, இமையம், ரவிகுமார் ஆகியோர் பங்கேற்கிறோம். PISA அறிக்கை குறித்து நான் பேசியதையும் தோழர் ரவிக்கும் எனக்குமான கருத்து மோதல்கள் எப்படி ரசித்தீர்கள் நீங்கள்.
வெளியே வந்ததும் PISA அறிக்கை குறித்து விவரம் கேட்கிறீர்கள். உடைகிறீர்கள். கல்வி காப்பாற்றப்பட வேண்டும் என்கிறீர்கள். “கனவு ஆசிரியன்” நூலை வாசித்தீர்களா என்கிறீர்கள். வாசித்து விட்டேன் என்கிறேன்.
அதுமாதிரி நிறைய நூல்கள் வர வேண்டும் என்கிறீர்கள்.
குழந்தைமையும் முரடும் ஒருசேர வாய்த்த மனுஷன் என்று அப்போது அங்கு வந்த கல்யாணி அய்யாவிடம் என்னைக் குறித்து கூறுகிறீர்கள்.
இப்படி வாய்க்கிற இடமெங்கும் என்னைப் பற்றியும் பேசியிருக்கிறீர்கள் தோழர்.
உங்கள் கைபிடித்து கண்கள் சுரக்க நன்றி சொல்ல வேண்டும்.
கொஞ்சம் பொறுங்கள். நேரே வந்து கரம் பற்றி நெகிழ்ந்து கொள்வேன்.
#சாமங்கவிய சரியாய் ஒரு மணி நேரம்
31.12.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...