Saturday, December 15, 2018

மக்கள் ஏன் உங்களை விரட்டி அடிக்கிறார்கள்…

“பேரிடர் ஏற்பட்டபின் மாநில அரசு அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்து, அதனடிப்படையில் மத்திய அரசு குழு வரும் முன்பே பேரிடர் சுவடுகள் மறைந்து விடுகின்றன. காரணம் மாநில அரசு நிவாரண வேலைகளை செய்துவிடுகிறது.
பேரிடர் சுவடு மறைவதற்கு முன்பே மத்திய அரசுக் குழுவினர் பார்வையிட வேண்டும்”
என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள் கூறியிருக்கிறார்.
.பேரிடர் ஏற்பட்டு இரண்டு மூன்று நாட்கள் கழித்து மத்திய ஆய்வுக்குழு வந்து பார்வையிடுவதால் எந்தப் பயனும் இருக்காது காரணம் பேரிடர் ஏற்பட்ட அடுத்த கணத்தில் இருந்து மாநில அரசு நிவாரணப் பணிகளில் இறங்கி விடும். எனவே மத்திய ஆய்வுக்குழு அந்தப் பகுதிக்கு வரும் முன்னரே அந்தப் பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பி விடும் என்பதே திரு சிதம்பரம் அவர்களின் நேர்காணலின் சாரம்.
“கஜா” புயல் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கி ஏறத்தாழ பத்து நாட்களாகிப்போன நிலையில் மத்திய ஆய்வுக்குழு இன்று அப்பகுதியினை பார்வையிடுகிறது.
இரண்டு மூன்று நாட்களிலேயே மாநில அரசு பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடும் என்றால், பத்து நாட்களுக்குப் பிறகு இந்த ஆய்வுக்குழு அந்தப் பகுதிக்கு செல்வதால் என்ன பயன்? அந்தப் பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பி நாட்களாகி இருக்குமே என்றெல்லாம் யோசிக்க நாம் என்ன தொலைக்காட்சி விவாத சமூக ஆதரவாளர்களா என்ன?
நாளாக நாளாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலை மோசமடைந்துதான் இருக்குமே தவிர அது ஒருபோதும் மேம்பாடு அடைந்துவிடாது. காரணம் திரு சிதம்பரம் அவர்கள் குறிப்பிட்டது போன்றதொரு மாநில அரசு தமிழகத்தில் இல்லை.
இன்னும் ஒருபடி மேலே போய் உண்மையை சொல்வதெனில் இந்தப் பத்து நாட்களுக்குள் டெல்டா பகுதி முற்றிலும் அழிந்து போகாமல் இருப்பதற்கு காரணம் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், ஊழியர்கள், பொதுமக்கள் ஏன் கிழவர்கள் கிழவிகள் உள்ளிட்ட நம் ஈரப் பெருந்திரளின் உதவியும் உழைப்புமே ஆகும்.
ஆகவே கஜா தாக்கிய அடுத்த நாளில் இருந்த நிலையைக் காட்டிலும் மிக மிக மோசமானதொரு நிலையைத்தான் மத்திய ஆய்வுக்குழு காண இருக்கிறது. அது எத்தகைய நிலையைக் கண்டாலும் அது ஒன்றும் பெரிதாகக் பரிந்துரைக்கப் போவதில்லை என்பதும் அப்படியே ஆய்வுக்குழு பெரிதாகப் பரிந்துரைத்தாலும் மத்திய அரசு அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளப் போவதில்லை என்பதும் திரு சிதம்பரத்திற்கு நன்கு தெரியும். வெகுகாலம் மத்திய நிதி அமைச்சராக வேலை பார்த்தவர் அவர்.
நமக்கு இருக்கிற வியப்பெல்லாம் திரு எடப்பாடி அவர்கள் முதல்வராகவும் திரு பன்னீர்செல்வம் அவர்கள் துணை முதல்வராகவும் இருக்கிற இந்த மண்ணில் மத்திய ஆய்வுக்குழு வருவதற்குள் பேரிடரின் கோர சுவடுகள் மறைந்துவிடும் என்று எப்படி அவரால் கூற முடிந்தது என்பதில்தான்.
ஆனால் ஒரு விஷயத்தை இங்கு இதய சுத்தியோடு ஒத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தமுறை மிகச் சிறப்பாக செய்யப்பட்டன. அல்லது அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.
அதுவும் அமைச்சர் திரு உதயகுமார் அவர்களது பணி பாராட்டுவதற்குரியது. அந்த நாளின் பேரிடர் கட்டுப்பாட்டுக் குழுவின் பணிகள் மட்டும் அந்த அளவில் இல்லாது போயிருந்தால் ”கஜா” கரையைக் கடந்தபோதே ஆயிரக்கணக்கில் மரித்துப் போயிருப்பார்கள். அந்த அளவில் அன்றைய உயிர்ச்சேதத்தை தடுத்து நிறுத்தியதற்காக அவரையும் அவரது குழுவினரையும் நன்றியோடு வணங்குகிறேன்.
ஆனால் புயல் கரை கடந்தபிறகான பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை என்பதைவிட பெருங்குரலெடுத்து வைகிற நிலையில்தான் இருக்கின்றன.
“மக்கள் ஏன் எங்களை விரட்டி அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று திருமதி தமிழிசை கூறியிருக்கிறார். அவரையோ அவரது கட்சியின் சகாக்களையோ பொதுமக்கள் உள்ளே நுழையவிடாமல் தடுத்து விரட்டியிருக்கிறார்கள் என்று அவரது கூற்றில் இருந்து தெரிகிறது. தேசத்தை ஆள்கிற ஒரு பெருங்கட்சியின் இந்த மாநிலத் தலைவரை மக்கள் இப்படி விரட்டியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவிற்கு மக்களிடம் இருந்தும் இந்தப் பேரிடரில் இருந்தும் அந்நியப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.
மத்திய அரசுதான் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருக்கிறது, மாநில அரசும் ஆளுங்கட்சியும் பாதிக்கப்பட்டுள்ள மக்களோடும் மீட்புப் பணிகளோடும் இரண்டறக் கலந்திருக்கிறார்கள் என்றும் இதற்கு பொருளல்ல.
ஹெலிகாப்டரில் பறந்து சேதங்களைப் பார்வையிட்ட முதல்வரும் துணை முதல்வரும் முழுமையாகப் பார்வையிடாமல் பாதியிலேயே திரும்பி இருக்கிறார்கள். மழை பெய்வதால் முழுமையாகப் பார்வையிட முடியவில்லை என்று கூறுகிறார்கள்.
அடுத்தநாளே இருவரும் மாண்புமிகு பிரதமர் அவர்களைப் சந்திப்பதற்காக தில்லி சென்றனர். அவர்கள் சென்றபிற்கு சென்னையில் விடாது மழை கொட்டித் தீர்த்தது.
’மழை பெய்வதால் முழுமையாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல முடியவில்லை என்ற முதல்வர் இப்போது சென்னையில் மழை பெய்வதால் சென்னைக்கு வராமல் தில்லியிலேயே தங்கிவிடப் போகிறாரா?’ என்று யாரோ ஒரு நடிகர் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலோட்டமாகப் பார்ப்பதற்கு கிண்டல் மாதிரித் தோன்றினாலும் வலி கலந்த வேதனைக் குரல் இது.
திருமதி தமிழிசை தாம் பாதிக்கப்பட்ட மக்களால் விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார். மழை காரணமாகத் தாம் திரும்பிவிட்டதாக முதல்வர் கூறுகிறார். உள்ளது உள்ளபடி கூறுவதென்றால் இருவரும் மக்களிடம் போகமுடியாமல் போனதற்கு மக்களின் எதிர்நிலையும் கோவமும்தான் காரணம்.
வாய்க்காலில் தேங்கியிருந்த அழுக்கான நீரை எடுத்துதான் பல முகாம்களில் உணவு சமைத்திருக்கிறார்கள். இது சுகாதாரக் கேடானது, நோயைக் கொண்டுவரக் கூடியது, குறிப்பாகக் குழந்தைகளைக் காவுகேட்கக் கூடியது. எனவே இந்த அசுத்தமான தண்ணீரில் சமைப்பதை நிறுத்துங்கள் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் முத்தரசன் கூறியிருக்கிறார். வேறு தண்ணீரே இல்லை. பசியினால் அழுதழுது அந்தக் குழந்தைகள் செத்துவிடாமல் தடுப்பதற்காகவே அந்த அசுத்தமான தண்ணீரை எடுத்து சமைப்பதாக அவர்கள் தோழர் முத்தரசனிடம் கூறியிருக்கிறார்கள்.
தங்களுக்கு ஆளொன்றுக்கு நான்கு என்ற எண்ணிக்கைக்கு குறையாத அளவில் முகாம்கள் ஒதுக்கப் பட்டிருப்பதாகவும், ஆனால் நிதி என்பது சுத்தமாகத் தம்மிடமில்லை என்றும் தம்மிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் புலம்பியதாகவும் தோழர் கூறுகிறார்.
புயல் கோரத் தாண்டவம் ஆடப்போகிறது என்பது அரசிற்கு வெகுமுன்னமே தெரியும். அதன் விளைவுகள் எவ்வளவு கடுமையாக இருக்கும், மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப் படுவார்கள் என்பதை எல்லாம் இந்த அரசு முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தது.
மக்கள் அரசாகக்கூட இருக்க வேண்டாம். குறைந்தபட்சம் மக்களைப் பற்றிக் குறைந்த அளவிற்கு அக்கறை கொண்ட அரசாக இருந்தாலேகூட கீழ்க்காணும் விஷயங்கள்மீது இந்த அரசு கவனம் குவித்திருக்கும். ஒரு தீவிரமான புயல் கரையைக் கடக்குமானால் கீழ்க்காணும் பாதிப்புகள் அரிச்சுவடியானவை
1) மின்சாரம் துண்டிக்கப்படும்
2) குடிதண்ணீர்ப் பிரச்சினை ஏற்படும்
3) குழந்தைகளுக்கான பால் தேவை ஏற்படும்
4) உணவு பற்றாக்குறை ஏற்படும்
5) கொசுப் பிரச்சினை தாங்க முடியாத அளவில் இருக்கும்
6) நோய்களும் தொற்று நோய்களும் சேற்றுப் புண்ணும் ஏற்படும்
7) இயற்கை உபாதைகளுக்காக மக்கள் அவஸ்தைபட நேரிடும்
8) பாம்புகளும் பூச்சிகளும் ஊருக்குள் படை எடுக்கும்
9) இந்தக் காலத்தில் மாதவிடாய் சுழற்சிக்குள் சிக்கும் பெண்களுக்கு நாப்கின் தேவை ஏற்படும்
இவற்றை மிகச் சாதரனமான ஒரு மனிதனால்கூட முன்உணர முடியும். எனில், மாபெரும் அனுபவம் மிக்க ஆளுமைகளை உள்ளடக்கிய ஒரு அரசு எந்திரம் இதை உணர முடியாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை.
புயல் கரையைக் கடந்தப் புள்ளியில் இருந்து மேற்சொன்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை உணர முடியுமானால் அவற்றை சரிசெய்வது என்பதும் ஒரு அரசிற்கு மிகமிக எளிதான விஷயம்தான்.
மின்சாரம்தான் மிக முக்கியமான விஷயம் என்பதும் அதுதான் முதலில் தடை செய்யப்படும் என்பதும் தெரிந்த அரசிற்கு அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய ‘ஜெனரேட்டர்களை பாதிப்புக்கு உள்ளாக இருக்கும் பகுதிகளுக்கு முன்கூட்டியே கொண்டுவந்துவிட முடியும்.
ஒரு முதல்வரின் கூட்டத்திற்கு மின்தடை எல்லாம் ஏற்படப் போவதில்லை. ஆனாலும் ஒருக்கால் எல்லாம் தாண்டி ஒருக்கால் மின்தடை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்பதற்காக ஜெனரேட்டர்களை முன்னெச்சரிக்கையாகக் கொண்டு சேர்ப்பவர்களால் பேரிடர் பரிசளிக்கும் கோர இருட்டில் இருந்து மக்களை காப்பதற்கு ஜெனரேட்டர்களைக் கொண்டு வந்து இருக்க முடியும்.
இருக்கிற குடிநீர்த் தொட்டிகளை எல்லாம் நல்ல தண்ணீர் கொண்டு முன்னதாகவே நிரப்பி வைத்திருக்க முடியும். முகாம்களில் தண்ணீர் பாக்கெட்டுகளை முன்னதாகவே சேகரித்து வைத்திருக்க முடியும். ஒரு அறிக்கை வெளியிட்டு கேட்டிருந்தால் போதும் பேரிடருக்குப் பிறகு மிகவும் சிரமப்பட்டு நிவாரணப் பொருட்களைக் கொண்டுவரும் தன்னார்வலர்கள் பேரிடர் ஏற்படுவதற்கு முன்னரே எந்தவித சிரமும் இன்றி கொண்டு வந்து குவித்திருப்பார்கள். அதை முறையாக மேலாண்மை செய்திருந்தாலே போதும்.
உணவிற்குத் தேவையான பொருட்களை, சமைப்பதற்கான பாத்திரங்களை, தட்டுகளை தம்ளர்களை, போர்வைகளை, சோப்புகளை, நாப்கின்களை, மருந்துகளை புயலுக்கு முன்னரே கொண்டு வந்து சேர்த்திருக்க முடியும்.
இவற்றை எல்லாம் செய்யாதது குற்றம் என்றால் ஈர நெஞ்சம் கொண்ட பொதுமக்கள் அனுப்பி வைக்கும் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிய முறையில் பகிர்ந்தளிக்கும் வேலையை செய்யாதது பெருங்குற்றம்.
பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றிற்கு பொருட்களை கொண்டு சென்றிருக்கிறார்கள். கொடுத்து முடித்துவிட்டு திரும்ப இருந்தவர்களை கொஞ்சம் இருக்கச் சொல்லி சாய்ந்து கிடந்த தென்னை மரங்களில் இருந்து இளநீர்த் தேங்காய்களையும் வாழைக் காய்களையும் அந்த வேனிலே ஏற்றி அனுப்பினார்கள் அந்த மக்கள் என்ற செய்தியைப் படித்ததும் என்னை அறியாமலே கண்கள் உடைத்துக் கொண்டன.
நிவாரணப் பொருட்களை முறையாக பகிர்ந்தளிக்கும் நிர்வாகத்தை சரியாக செய்யாமல் தங்களுக்கு குடிப்பதற்கு ஒரு பாட்டில் தண்ணீர் கிடைக்காதா என்று நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்துகிற அளவிற்கு அவர்களை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது அரசு. இதன் மூலம் நிவாரணம் கொண்டு வந்தவர்களை வெறுங்கையோடு அனுப்ப மனமில்லாமல் தேங்காய்களோடும் வாழைக் குழைகளோடும் அனுப்பி வைத்த மக்களை வழிப்பறிக் கொள்ளையர்களைப்போல பார்க்க வைத்திருக்கிறது இந்த அரசு.
விழாக்கள், அரசுக் கொண்டாட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றிற்காகவெல்லாம் தற்காலிக கழிவறைகளை ஏற்படுத்தித் தரத் தெரிந்த இந்த அரசு நிர்வாகம் இயற்கை உபாதைகளால் துடித்த எம் மக்களுக்கு தற்காலிகக் கழிவறைகளை ஏற்படுத்தித் தந்திருக்க முடியும்.
இத்தனை ’இல்லைகள்’ இருந்த போதிலும் மின்ஊழியர்களின் தியாகம் செறிந்த பணியை நன்றியோடு நினைத்துக் கொள்கிறோம்.
இன்னொரு விஷயத்தையும் இங்கு சொல்லிவிட வேண்டும்.
இதை எல்லாம் செய்யத் தெரியாத அரசு இது என்றெல்லாம் நாம் கருதிவிடக் கூடாது. இதை எல்லாம் சரியாக செய்யத் தெரிந்த அரசாங்கம்தான் இது. செய்யக் கூடிய ஆற்றல் இருந்தும் ஏன் செய்யவில்லை என்பதுதான் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை நம்மை ஒருவித சந்தேகத்தோடு பார்க்கக் கோருகிறது.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் நீர் வந்து டெல்டா விவசாயி சாகுபடி செய்திருக்கிறான். ஏக்கருக்கு 36 மூட்டை விளையும் என்று ஆசையோடு எதிர்பார்த்திருக்கிறான். அப்படி ஒருக்கால் அவனது கனவு நிறைவேறி இருக்குமானால் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ரெசார்ட், 10 வழிப்பாதை என்றெல்லாம் அவனிடம் படம் காட்ட முடியாது.
இயற்கை விவசாயிக்கு எதிராக விளையாடியிருக்கிறது. நாம் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற ஆளும் வர்க்கத்தின் அரசியலாக இது இருக்குமானால் ஒன்றை சொல்லி வைப்போம்,
“ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்”

நன்றி: “காக்கை டிசம்பர் 2018”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...