Saturday, December 8, 2018

நாப்கினுக்கு உரிய பங்கு பற்றியும்

”பெண் பிள்ளை
பிறந்ததற்காய்
இனிப்பு வழங்குவோன்
மனசெல்லாம் கசப்பு”
என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன். இன்னமும் அந்த வரிகளுக்கு உயிர் என்பது இருக்கவே செய்கிறது என்றாலும் ஆக விரைவில் அந்த வரிகள் பழசாய் பழங்கதையாய் போய்விடும் என்றே நம்புகிறேன். குறிப்பாக கல்வித் துறையில் பெண்குழந்தைகளின் பாய்ச்சலும் முன்னெடுப்பும் இந்த நம்பிக்கையை முப்பது ஆண்டுகால பள்ளி ஊழியனான எனக்குத் தருகின்றன. காரணம் கல்வியில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்குழந்தைகளை பெண்குழந்தைகள் எல்லா நிலைகளிலும் விஞ்சியே நிற்கிறார்கள்.
பெண்குழந்தைகள் பள்ளிக்குள்ளேயே நுழைய முடியாத காலம் இருந்தது.
நுழைந்தார்கள்.
ஆனாலும் வயதுக்கு வந்த புள்ளியில் அவர்கள் படிப்பு நின்றது.
அதிலிருந்தும் பையப் பைய மீண்டார்கள்.
ஆனாலும் ஆண்குழந்தைகளின் ஆதிக்கமே தொடர்ந்தது.
ஒரு புள்ளியில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. பெண் குழந்தைகள் எழுந்தார்கள், கொஞ்சம் சிரமப்பட்டு சாதிக்கத் தொடங்கினார்கள், கொஞ்சம் கொஞ்சமாக சாதிப்பது அவர்களது இயல்பாக மாறியது.
இதற்கான பல காரணங்களை அலசினார்கள். அவற்றில் எதையுமே மறுக்கவில்லை நான். ஆனால் பெண்குழந்தைகளின் இந்த பாய்ச்சலுக்கும் சாதித்தலுக்குமான காரணங்களுள் நாப்கினுக்கு உரிய பங்கு பற்றியும் பரிசீலிக்க வேண்டும் என்று கோரினேன்.
நிறையபேர் முகம் சுளித்தார்கள். சிலர் நான் அசிங்க அசிங்கமாய் பேசுவதாய் நினைத்தார்கள். சிலர் இது ஆபாசம் என்றெல்லாம் என் காதுபடவே கூறினார்கள்.
எனக்கான வெளியும் வாசிக்கும் திரளும் விரிவடைந்தபோது “பள்ளிக்கொரு இன்சினரேட்டர்” என்ற கட்டுரையை அப்போது ”தினமணி டாட் காமில்“ நான் எழுதிக் கொண்டிருந்த தொடருக்கு அனுப்பினேன். மாற்றச் சொல்லி கேட்பார்கள் என்று நினைத்திருந்தேன். உமா சக்தி அழைத்து “செமப்பா. சான்சே இல்ல. இத மொதல்ல வாசிச்சது நான்தான் என்பதே சந்தோசமா இருக்கு” என்று எப்போதும்போல் பொய்யாய் முதுகெங்கும் தட்டினார்.
வாசித்தபிறகு வழக்கம்போல ஏச்சுகளும் வரத்தான் செய்தன. ஆனால் நிறைய தோழர்கள் உச்சி முகர்ந்தார்கள். பல பள்ளிகளில் அதன்பிறகு இன்சினரேட்டர்களை நன்கொடையாளர்கள் வாங்கிக் கொடுத்தார்கள் என்கிற செய்திகள் வரத் தொடங்கின. என் பள்ளிக்கேகூட இந்தக் கட்டுரைதான் ஒரு இன்சினரேட்டரைக் கொண்டுவந்து சேர்த்தது.
பருவம்எய்திய பின்னரும் குழந்தைகள் வந்தாலும் அவர்களுக்கான மாதச்சுழற்சி காலத்தில் பிள்ளைகள் மிகவும் சிரமப்பட்டனர். துணியை மாற்றுவது அதை யாருக்கும் தெரியாமல் செய்வது, தீட்டுத் துணியை அலசிக் காயவைப்பது போன்றவற்றிற்காக பிள்ளைகள் பட்ட சிரமமும் அவமானமும் சொல்லி மாளாதது. பள்ளிகளில் போதுமான அளவு கழிவறை வசதிகளும் இல்லாது இருந்தது. எனவே பள்ளிகளுக்கு வந்தாலும் அந்தக் காலத்தில் அவர்கள் விடுப்பெடுத்து வீட்டில் பதுங்கவேண்டி இருந்தது.
யோசித்துப் பாருங்களேன், மாதம் மூன்றுமுதல் ஐந்து நாட்கள் விடுப்பெடுக்க வேண்டிய அவசியம் இருந்தால் குழந்தைகள் எப்படி படிப்பிலே சாதிக்க முடியும்.
இந்தப் புள்ளியில் “நாப்கின்” புழக்கத்திற்கு வருகிறது. மாத சுழற்சிக் காலத்தில்ன் விடுப்பெடுக்க வேண்டிய அவசியம் பணக்காரக் குழந்தைகளுக்கு இல்லாமல் போகிறது. தமிழக அரசு பள்ளிக்குழந்தைகளுக்கு இலவசமாக நாப்கினை வழங்குகிறது.. ஏறத்தாழ எல்லாக் குழந்தைகளும் மாதம் முழுக்க பள்ளிக்கு வந்து படிப்பில் கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கிறது. பயன்படுத்துகிறார்கள், சாதிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இப்போதும் ஒரு பிரச்சினை இருந்தது. நாப்கின்களை டிஸ்போஸ் செய்வதில் சிரமம் இருந்தது. இன்சினரேட்டர்களின் வரவு இதையும் வருங்காலத்தில் சரி செய்யும் என்று நம்பலாம்.
ஆக, நாப்கின்களின் வரவு பெண்பிள்ளைகளின் கல்விக்கான உடைசலைத் தந்த கருவி என்பதும் இன்சினரேட்டர் பெரு உடைசலைத் தந்த கருவி என்பதும் அவசியம் கொள்ளத் தக்கவை ஆகும்.
ஆக, இன்சினரேட்டர் பெண்கல்விக்கான ஒரு முக்கிய கருவி எனில் இன்சினரேட்டரில் கை வைத்தால் பெண்கல்வி கொஞ்சம் ஊனப்படும் என்பதையும் நாப்கினில் கை வைத்தால் பெண்கல்வி பெருமளவு காயப்படும் என்பதையும் சேர்த்தேதான் கொள்ள வேண்டும்.
கொஞ்சம் விரித்துப் பார்த்தால் பெண்கல்வியை சேதப்படுத்த வேண்டும் என்று அதன் எதிரிகள் நினைப்பார்கள் எனில் அவர்கள் இதிலும் கை வைப்பார்கள் என்ற கவனமும் நமக்கு இருக்க வேண்டியது அவசியம்.
பஞ்சாப்பில் இதைத் தொடங்கி இருக்கிறார்களோ என்ற அச்சத்தை 05.11.2018 தீக்கதிர் செய்தி தருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குந்தால் என்ற கிராமத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் கழிவறையில் பயன்படுத்தப்பட்ட இரண்டு நாப்கின்கள் கிடந்திருக்கின்றன. இதை அறிந்த ஆசிரியைகள் யார் அந்த காரியத்தை செய்தது என்று கேட்டிருக்கிறார்கள். தண்டனைக்குப் பயந்து அந்தக் குழந்தைகள் மௌனமாக இருந்திருக்கிறார்கள்.
கோவமடைந்த அந்த இரண்டு ஆசிரியைகளும் அனைத்து குழந்தைகளையும் உடைகளை களையச் சொல்லி சோதிருக்கிறார்கள். அவமானத்தால் கூனிக் குறுகிய குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் நடந்ததைக்கூறி அழுதிருக்கிறார்கள்.
ச்விஷயம் முதல்வர் திரு அமரீந்தர்சிங்கிடம் போகவே அவர் விசாரனைக்கு உத்தரவிட்டிருக்கிறார். உண்மைதான் என்று தெரிய வரவே அந்த இரண்டு ஆசிரியைகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். துறைவாரி நடவடிக்கை உண்டு என்று உறுதி தந்திருக்கிறார்கள்.
இதை பெண்கல்விக்கு எதிரான விஷயமாகவே பார்க்க வேண்டும்.
பள்ளிக் கழிவறையில் நாப்கின் கிடந்ததென்றால் இன்சினரேட்டர் வைக்காத பள்ளி நிர்வாகம்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
ஆகவே நாம் மீண்டும் வலியுறுத்துவது இதைத்தான்,
இதை ஏதோ குழந்தைகளை அம்மணப்படுத்திப் பார்த்த குற்றமாக மட்டும் பார்க்காமல் பெண்கல்வியை சீர்குலைக்கும் முயற்சியாகவே இதைப் பார்த்து அதற்குரிய தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோருகிறேன்
#சாமங்கவிய 55 நிமிடங்கள்
02.12.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...