Sunday, December 2, 2018

மாலை முழுதும்.....

எப்போதும் இந்திய அரசு மொத்தத்தையுமோ அல்லது மனிதவள மேம்பாட்டுத் துறையையோ விமர்சித்துக் கொண்டோ அல்லது வைதுகொண்டோதான் இருப்போம் என்றெல்லாம் எம்மை யாரும் கருதிவிடக்கூடாது. எந்த உள்நோக்கமும் இல்லாமல் நல்லது செய்தால் கொண்டாடவே செய்வோம். மாறாக செயல்படும்போது அதை எதிர்த்து விமர்சிப்பதும் முடிந்த அளவு அதை எதிர்த்து களமாடவும் செய்கிறோம்.
இன்றைக்கும்கூட மனிதவள மேம்பாட்டுத் துறை பள்ளிக்குழந்தைகளின் புத்தகப் பையின் எடை எந்தெந்த அளவில் இருக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையினை கொண்டாடி வரவேற்கிறோம். அதை அனைத்து மாநில அரசுகளும் கொஞ்சமும் சுணக்கம் இன்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோருகிறோம். செயல்படுத்தாத மாநில அரசுகளை மனிதவள மேம்பாட்டுத் துறை செயல்படுத்த நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.
இந்த சுற்றறிக்கையை செயல்படுத்த மறுக்கும் மாநில அரசுகளை நிர்ப்பந்திக்கும் வகையில் அங்கங்கு உள்ள மாணவர் அமைப்புகளும், ஆசிரியர் அமைப்புகளும், அரசியல் இயக்கங்களும், சமூக அமைப்புகளும் தம்மால் முடிந்த அளவு களத்தில் இறங்க வேண்டும் என்றும் வேண்டுகிறோம். இடதுசாரி வெகுஜன அமைப்புகளிடமும் இடதுசாரி கட்சிகளிடத்தும் இந்தக் கோரிக்கையை கூடுதல் அழுத்தத்தோடு வைக்கிறோம்.
அதே நேரம் என்ன களவானித்தனம் செய்தும் JNU மாணவர்களையோ அல்லது பேராசிரியர்களையோ காவிப்படுத்த முடியவில்லை என்பதற்காகவும் மனித நாகரீகத்திற்கு எதிராக இருக்கக் கூடிய காவிக் கோட்பாட்டிற்கு எதிரான அவர்களது போராட்டத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்பதற்காகவும் JNU நூலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் 75 விழுக்காட்டை மத்திய அரசு கை வைத்திருப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.
இரண்டு விஷயங்கள். இரண்டுமே புத்தகங்கள் குறித்த விஷயங்கள். ஆனால் இரண்டுமே ஒன்றோடு ஒன்று வலுவாக முரண்படும் விஷயங்கள்.
கூடாது என்கிற இடத்தில் குவிப்பதும் குவிக்க வேண்டிய இடத்தில் குறைப்பதுமான அயோக்கியத்தனமான போக்குகளைக் குறித்து உரையாடலாம் என்று படுகிறது.
முன்பெல்லாம் இப்படி வேடிக்கையாகப் பேசுவோம்,
MA படிக்கிற பிள்ளை இரண்டு ஆண்டுகளாக ஒரே ஒரு மெமோபேடை சுருட்டி பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கல்லூரி போகிறான். அதுவும் எதற்கென்றால் பேருந்தில் இடம் போடுவதற்கு என்று சொல்கிறான். அதே நேரம் LKG படிக்கிற குழந்தை 12 கிலோ புத்தக மூட்டையையை சுமப்பதற்கு நிர்ப்பந்திக்கப் படுகிறாள்.
ஆனால் இன்றைக்கும் முதுகலை படிக்கும் மாணவன் சுமப்பதைவிட LKG படிக்கும் குழந்தை அதிக எடையுள்ள புத்தகப் பையினை சுமக்கிறாள்.
தங்களின் எடையில் 35 விகித எடையில் புத்தகப் பையினை பள்ளிக் குழந்தைகள் சுமப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதை சுட்டிக்காட்டும் மனிதவள மேம்பாட்டுத்துறை அதைக் கண்டிக்கிறது.
மூன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை புத்தகப் பையின் எடை 3 கிலோவைத் தாண்டக்கூடாது. ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு குழந்தைகளுக்கு 4 கிலோவையும் எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு குழந்தைகளுக்கு நான்கரை கிலோவும் பத்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு 5 கிலோவும்தான் அவர்களது புத்தகப் பையின் எடை இருக்க வேண்டும். இதற்கு மிகாமல் அந்தந்த மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கை கூறுகிறது.
எனில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு?
புத்தகப் பையோடு அந்தக் குழந்தைகளை வரச்சொல்லும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதோடு அதன் நிர்வாகியை சிறையில் அடைத்துவிட வேண்டும்.
குழந்தைகளின் குழந்தைமையை வணிகப்படுத்துவதை தடை செய்ய முயற்சிக்கும் இந்த சுற்றறிக்கையை கொண்டாடுகிறோம். இதுவே சட்டமாக வந்தால் கூட்டம் போட்டு கொண்டாடுவோம்.
JNU மாணவர் பேரவைத் தேர்தல் என்பது உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் ஒன்று. அதில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் இன்றைய மார்க்சிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் தோழர் யெச்சூரி.
எப்படியேனும் அதைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று BJP தலையால் தண்ணீர் குடித்துப் பார்க்கிறது. தேர்தல் நடைமுறைகளில் என்ன தில்லு முல்லுகளை எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து பார்த்து விட்டது அந்தக் கட்சி. வன்முறையை பிரயோகித்துப் பார்த்து விட்டது. வழக்குகளை போட்டு மாணவர்களை அச்சுறுத்திப் பார்த்தது. சிறையில் தள்ளிப் பார்த்தது. என்ன செய்தும் பிள்ளைகள் காவியை ஒவ்வொரு முறையும் துறத்தி அடிக்கின்றனர்.
மட்டுமல்ல, BJP யாரைத் தனது சித்தாந்த எதிரியாகப் பார்க்கிறதோ, யாருடைய பெயரைக் கேட்டால் கேட்ட மாத்திரத்திலேயே பயந்து நடுங்குகிறதோ அந்த இடதுசாரி பிள்ளைகளையே தொடர்ந்து தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஆசிரியர் சம்மேளனத்திலும் இதேதான் நிலைமை.
மோதி வெற்றிபெற முடியவில்லை. விட்டுவிட்டும் போக முடியவில்லை. ”ஏன் நம்மை நிராகரிக்கிறார்கள்?” என்று யோசித்தவர்களுக்கு அவர்களுக்கு சமூகம் குறித்த ஞானம் இருப்பது புரிகிறது. இந்த ஞானத்தை நூலகம் தருவதாக அவர்களால் யூகிக்க முடிகிறது.
நூலகத்திற்கான செலவில் 75 விழுக்காட்டை நிறுத்துகிறார்கள்.
கோவம் வருகிறது. வைகிறோம். வைதுகொண்டே எதிர்ப்போம். களமாடுவோம்.
#சாமங்கவிந்து 30 நிமிடங்கள்
28.11.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...