Showing posts with label புதிய ஆசிரியன். Show all posts
Showing posts with label புதிய ஆசிரியன். Show all posts

Saturday, January 17, 2026

நாங்க எதுக்கு டீச்சர் பெஞ்ச்சில உட்காரக்கூடாது?

 
கள்ளக்குறிச்சி மாவட்டம். நிறைமதி கிராமம். ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி.
 
பிற்பகல் உச்சா பெல் அடித்ததும் அடிக்காததுமாக ஓட்டமும் நடையுமாக அஞ்சாங்கிளாசிற்கு வருகிறார் ஒண்ணாங்கிளாஸ் டீச்சர். பெஞ்ச் கழுவ சோப்பு பவுடர் வாங்க தான் கடைக்குப் போவதாகவும், வரும் வரைக்கும் தன் வகுப்பு பசங்களைப் பார்த்துக்கொள்ளுமாறும் சுதா டீச்சரிடம் சொல்லிவிட்டு அதே வேகத்தில் வண்டியை எடுக்கத் திரும்புகிறார்.
 
”ஏய், விஷாலினி பாப்பா, உள்ளவர பெல் அடிச்சதும் போய் ஒண்ணாங்கிளாஸ் புள்ளைங்கள இங்க கூட்டிட்டு வா” என்று அவளை ஒண்ணாங்கிளாசிற்கு அனுப்பிய சுதா டீச்சருக்கு அவள்தான் ஸ்பெஷல்.
 
அவள் ஏன் ஸ்பெஷல் என்றால் அவள் ஒருபோதும் பொய்சொல்ல மாட்டாள். கூடவே கொஞ்சம் துடுக்கும் என்பதால் இந்த விஷாலினி சுதா டீச்சருக்கு ஷ்பெஷல்.
 
கொஞ்ச நேரத்திற்கு முன்பு விஷாலினி டயனாவோடு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார் சுதா. ”என்னடி பண்ற விஷாலினி பன்னிக்குட்டி” என்று கேட்டதும் “ம்ம்.. பேசிட்டு இருக்கேன்” என்று சொன்னவள் அவள். என்ன இப்படி திமிரோடு பேசுகிறாளே என்று யாராவது கேட்டால் படிப்போடு கொஞ்சம் திமிரையும் சேர்த்துதான் நலப்பள்ளிகள் சொல்லித்தர வேண்டும் என்று அழுத்தமாக சொல்வார்.
 
வரிசையாய் வந்த ஒண்ணாங்கிளாஸ் பிள்ளைகள் டீச்சர் சொன்னது மாதிரியே அவரை சுற்றி தரையில் அமர்ந்துகொள்கிறார்கள். யோகதாரிணி மட்டும் எழுந்து ”டீச்சர்” என்று அழைக்கவே என்ன என்பது மாதிரி அவளைப் பார்க்கிறார் டீச்சர்.
 
டீச்சருக்கு இடதுபக்கமாக வந்த யோகதாரணி “டீச்சர் உங்கள ஒண்ணு கேட்கணும்” என்கிறாள். “என்ன கேட்கனும் பாப்பாவிற்கு?” என்றதும் கொஞ்சம் சத்தமெடுத்து,
 
“நாங்க எதுக்கு டீச்சர் அந்த பெஞ்சில உட்காரக் கூடாது?” என்று கேட்டதும் சத்தமாக சிரித்தவாறே ”ஏய், எல்லோரும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து இந்த பெரிய மனுஷங்களுக்கு இடம் கொடுக்கப்பா” என்கிறார்.
 
அஞ்சாங்கிளாஸ் குழந்தைகள் ஒதுங்கி ஒண்ணாங்கிளாஸ் குழந்தைகள் கிடைத்த இடங்களில் அமர்ந்துகொண்டபிறகும் அவரது சிரிப்பு அடங்கவில்லை.
 
முந்தாநாள் வரைக்கும் அஞ்சாங்கிளாசிற்கும் பெஞ்சுகள் இல்லைதான். எல்லா குழந்தைகளும் தரையில்தான் அமர்ந்திருந்தார்கள். திடீரென்று முந்தாநாள் வெல்பர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் இவருக்கு தெரிந்த ஊழியர் ஒருவர் அழைக்கிறார். “அக்கா கொஞ்சம் பெஞ்சுக வந்திருக்கு, உங்களுக்கு ஏதும் வேணுமா?” என்று கேட்கவே கொஞ்சம் பொறு வரேன் என்று ஓடி 20 பெஞ்சுகளை அள்ளிக்கொண்டு வந்துவிட்டார்.
 
பெரிய பள்ளிக்கூடங்களுக்காக வந்த பெஞ்சுகள். மீந்து போச்சு என்று சொன்னவர் உங்க பிள்ளைகளக்கு கொஞ்சம் உசரமாத்தான் இருக்கும். வேணும்னா யாரையாவது வுட்டு நறுக்கி வெல்டு வச்சுக்கங்கக்கா என்கிறார்.
 
”உசரமான நாற்காலிகளதான் எங்க பசங்களுக்கு தரமாட்டேங்கறாங்க. பெஞ்சாவது கொஞ்சம் உசரமா இருக்கட்டுமே. போக, காலு தரையில படலைனா கால ஆட்டுங்கள்ள, விடு தம்பி”
 
“அக்கா…” அவரும் அண்ணலையும் பெரியாரையும் வாசிக்கிற தம்பிதான். சரியான இடத்திற்குதான் பெஞ்சுகள் போகின்றன என்பதில் அந்த தம்பிக்கும் ஒரு மகிழ்ச்சி.
 
வேன் பள்ளிக்குள் நுழைந்ததுதான் தாமதம் நித்யா, இன்னொரு சுதா, பானு என்று எல்லா டீச்சர்களும் வேனைச் சுற்றிக் கொள்கிறார்கள். சேலையைத் தூக்கிச் செறுகிக்கொண்டு அவர்களே பெஞ்சுகளை இறக்க ஆரம்பித்து விட்டார்கள். இருங்க டீச்சர் என்று சொல்லியவாறே வேன் டிரைவர் உதவுகிறார்.
 
இத்தனை பெஞ்சுகளை ஒருசேர பார்த்ததும் பிள்ளைகளுக்கு ஆச்சரியம். வேனைச் சுற்றி கூடிவிட்டார்கள். மூணாங்கிளாஸ் பியாழி “ஏதாச்சும் மீட்டிங்கா டீச்சர்?” என்று கேட்கிறாள்.
 
“எல்லாம் உங்களுக்குத்தான் புள்ளைங்களா” என்று நித்யா டீச்சர் சொன்னதும் “ஓ” என்று கத்த ஆரம்பித்துவிட்டார்கள் . கத்தவில்லையே தவிர டீச்சருங்களது மனநிலையும் அப்படிதான் இருந்தது.
 
அஞ்சாங்கிளாஸ் சுதா டீச்சரிடம் வந்த ஒன்னாங்கிளாஸ் டீச்சர் பானு, “ ஏங்க டீச்சர், எங்க பசங்களுக்கும் உண்டுதான?. ரெண்டு கொடுத்தாகூட போதும். அட்ஜஸ்ட் செஞ்சுக்குவேன் என்கிறார்.
 
”உனக்கு மூணு பெஞ்ச் புள்ள” என்றதும் மகிழ்ச்சியில் இரண்டு கைகளையும் வாயில் வைத்துக் கொள்கிறார் பானு. அது ஒரு வகையான நன்றி கூறல்.
 
”ஏன் டீச்சர் அவங்களுக்கெல்லாம் ஒண்ணாங்கிளாஸ்லயே பெஞ்ச்சு தரீங்க. எங்களுக்கு மட்டும் அஞ்சாங்கிளாஸ் வந்துதான் தரீங்க” என்று கேட்ட டயனாவிடம்,
 
“வேணும்னா நீ திரும்பவும் ஒங்கிளாண்ணாஸ்ல இருந்து வா” என்கிறார் சுதா.
 
“ம்ம் அஸ்கு புஸ்கு” என்றவாறே ஓடிவிட்டாள் டயானா.
 
பெஞ்ச் வந்த அன்றே சோப்பு பவுடர் வாங்கி தானே கழுவி தன் வகுப்பிற்கு கொண்டுவந்துவிட்டார் சுதா. அடுத்தடுத்து அனைத்து டீச்சர்களும் தங்கள் தங்கள் வகுப்பிற்கு பெஞ்ச்சுகளை கொண்டு சேர்த்துவிட்டார்கள்.
 
பெஞ்ச் வந்ததற்கும் அடுத்த நாள் பானு டீச்சர் பள்ளிக்கு வரவில்லை. அதனால்தான் இப்போது சோப்பு பவுடர் வாங்கப் போகிறார்.
 
மாலை தங்களை அழைத்துப்போக வந்த பெற்றோர்களை தத்தமது வகுப்பறைகளுக்கு அழைத்து சென்று தங்களது பெஞ்சுகளைக் காட்டுகிறார்கள் பிள்ளைகள்.
 
அதுவும் போகிறவழியில் பார்க்கிறவர்களிடமெல்லாம் தனக்கு பெஞ்ச் கிடைத்திருப்பதாக மகிழ்ச்சியோடு சொல்லிச் சென்றான் ரெண்டாங்கிளாஸ் சஞ்சய். அவங்க நாய் டாமியிடமும் இதை சொன்னான்.
 
முதல்நாள் மாலை வராத பெற்றோர்கள் அடுத்தநாள் காலையில் வந்து பெஞ்சுகளைப் பார்த்துவிட்டு போனார்கள். எல்லோர் முகத்திலும் அப்படியொரு சந்தோசம்.
 
பக்கத்து தெருவில் இருக்கும் பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்கும் இந்தப் பள்ளியின் முன்னாள் குழந்தைகள் திருவிழா சாமி பார்க்க வருவதுபோல் வந்து பெஞ்சுகளைப் பார்த்துவிட்டு போகிறார்கள்.
 
ஆறாங்கிளாஸ் பிரார்த்தனா ஒருபடி மேலே போய்விட்டாள். தாங்கள் போனபிறகு பெஞ்ச் வாங்கிய எல்லா டீச்சரும் பேட் டீச்சர்கள்தான் என்று சொல்லிவிட்டு டீச்சர்களிடம் காய்விட்டுவிட்டு போகிறாள்.
 
”ஏங்க டீச்சர், பெஞ்செல்லாம் போட்டுட்டீங்களாமே?” என்று தெருக்காரர்கள் கேட்பதில் டீச்சர்கள் அனைவருக்கும் அப்படியொரு மகிழ்ச்சி.
 
மூன்று நாட்களுக்குப் பிறகு வந்த ஆறாங்கிளாஸ் ரம்யா சொன்னதுதான் ஆள்பவர்களுக்கும் அதிகாரிகளுக்குமான தகவல்.
 
அவளும் எல்லா டீச்சர்களோடும் காய் விட்டுக்கொண்டாள்தான்.
 
“ஏன் டீச்சர் இந்த வருஷம் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கறப்பவே பெஞ்சுகள போட்டிருந்தீங்ன்னா ஏந்தம்பிய AKT ல சேர்த்திருக்க மாட்டார்ல எங்கப்பா”
 
&******************************************************************** 
 
 
 

n புதியஆசிரியன்
ஜனவரி
 

Saturday, June 7, 2025

இது சங்கிகளின் மண் அல்ல

நான் ஒரு முஸ்லிம் பெண்
 ஆனால்  பாகிஸ்தானி  அல்ல
 நான்  ஒரு  இஸ்லாமியப்  பெண்
 ஆனால்  நான்  தீவிரவாதி  அல்ல"
 
என்று   நமது  கர்னல்  சோபியா  பேசுவதைக்  கேட்க  நேர்ந்தது. சோபியா  இந்திய ஒன்றியத்தின்  மிகப்பெரிய  பொக்கிஷம்.  இந்திய  ராணுவத்தில்  கர்னல் பொறுப்பில்  இருக்கக்கூடிய  மரியாதைக்குரிய ஆளுமை.
 
சமீபத்தில்  இந்தியாவிற்குள்  அவ்வப்போது  ஊடுருவி  இந்திய இறையாண்மைக்கு  ஊறு  தந்துகொண்டிருக்கக்  கூடிய  பாகிஸ்தான் தீவிரவாதிகளை  ராணுவத்தின்  மூலம்  எதிர்கொள்வதென்று  ஒன்றிய  அரசு முடிவெடுக்கிறது.  அரசாங்கத்தின்  இந்த  முடிவை  கையிலெடுத்த முக்கியமானவர்களுள்  ஒருவர்   கர்னல்  சோபியா குரோஷி. 
 
இந்தியாவிற்கு  குடைச்சல்  கொடுத்துக்  கொண்டிருந்த  பாகிஸ்தான் தீவிரவாதிகளின்  முகாம்களை  ஒற்றை  இரவில்  சல்லி  சல்லியாகத்  தகர்த்து நொறுக்கியவர்   சோபியா குரோஷி.
 
ராணுவரீதியாக  பாகிஸ்தானிற்கு  பேரதிக  இழப்புகளைத்  தந்தவர் சோபியா
நள்ளிரவு  தாண்டிய  ஒரு  பொழுதில்,  ஒருமணி  நேரத்திற்குள்  ஒன்பது பாகிஸ்தானிய  தீவிரவாத  முகாம்களை  இல்லாமல்  அழித்தொழித்தவர்  சோபியா
 
அந்த  சோபியாவிற்கு   தான்   ஒரு  பாகிஸ்தானி  இல்லை  என்றும்  தான்  ஒரு தீவிரவாதி  இல்லை  என்றும்  தன்னை  நிருபித்துக்  காட்டவேண்டிய  தேவை  ஏன் வருகிறது?
 
“பகல்காமில்  நமது  சகோதரர்கள்  26  பேரை  கொடூரமாகக்  கொன்று குவித்துள்ளனர்  பாகிஸ்தானிய  தீவிரவாதிகள்.  நமது  சகோதரர்களின் உடைகளை  அவிழ்த்து  அவர்கள்  இந்துவா  என்று  உறுதி  செய்துகொண்டு  இந்தப் படுபாதகத்தை  அந்த  அயோக்கியர்கள்  செய்திருக்கிறார்கள்.
 
நமது   சகோரர்களின்  உடைகளை  அவிழ்த்துப்  பார்த்து  கொன்றவர்களின் உடைகளை  அவர்களின்  சகோதரியைக்  கொண்டே அவிழ்க்கச்  செய்து,  அவரைக்  கொண்டே  கொன்றழித்திருக்கிறார்  நமது பிரதமர்”  என்று     பேசியிருக்கிறார்  திருமிகு  விஜய் குன்வர் ஷா.  இவர்   மத்தியப்  பிரதேசத்தின் மரியாதைக்குரிய  அமைச்சர்.
 
விஜய்  குன்வர்  ஷாவின்  கருத்துப்படி  பகல்காமில்  நம்  மக்களைக்  கொன்று குவித்தது  பாகிஸ்தான்  தீவிரவாதிகள்.  இதற்கு எதிர்வினையாக  பாகிஸ்தானில் இருந்த  தீவிரவாத  முகாம்களை  அழித்தொழித்தவர்களில்  முக்கியமானவர் சோபியா.  விஜய் ஷாவின்  கருத்துப்படி  பகல்காமில்  நம்  மக்களைக் கொன்றழித்தவர்களின்  சகோதரி  சோபியா என்கிறாகிறது.
 
சோபியா  ஒரு  பாகிஸ்தானி  என்றும்  தீவிரவாதிகளின்  சகோதரி  என்றும்  அவர் கூறுவதாகத்தான்  நாம்  புரிந்துகொள்ள  வேண்டியிருக்கிறது.  இதற்கு  பதில் அளிக்கும்  விதமாகத்தான்  சோபியா  குரோஷி  மேலே  சொன்னதை சொல்லவேண்டி வந்தது.
 
விஜய்  குன்வர் ஷா செய்தது  குற்றம்
 
தான்  ஒரு  முஸ்லிம்  என்பதை  ஏற்பதாகவும்  ஆனால்  தான்   பாகிஸ்தானியோ தீவிரவாதியோ  அல்ல  என்றும்  சோபியா  நிறுவ  முயற்சிப்பது  தேவையற்றது
இவை  இரண்டிற்காகவும்  இந்தியர்கள்  கவலைகொள்ள  வேண்டும்
 
ம.பி  உயர்நீதி  மன்றம்  தானாக  முன்வந்து  அமைச்சர்  விஜய் ஷா  மீது  வழக்குப் பதிய  வேண்டும்  என்று  காவல்  துறைக்கு  உத்தரவிட்டிருக்கிறது.  உடனடியாக விஜய்  ஷா  சுதாரித்துக் கொள்கிறார்.   தான்  பேசியது  யாரையேனும்  புண்படுத்தி இருக்குமானால்  தான்  அதற்காக  மன்னிப்புக்  கேட்பதாகவும்  கூறுகிறார்.
 
இவரது  மன்னிப்பு  போலியானது  என்றும்  அவர்மீதான  விசாரணையைத் தீவிரப்படுத்த  வேண்டும்  என்றும்  உச்சநீதி  மன்றம்  கூறியிருக்கிறது.  இது இந்திய  மதச்சார்பற்ற  தன்மைக்கு  பலம்  சேர்ப்பதாக இருக்கிறது.
 
இந்த  நேரத்தில்  பகல்காம்  தாக்குதல்  குறித்தும்  அதன்பிறகு  நடந்த  “சிந்தூர் ஆபரேஷன்”  குறித்தும்  பாமரத்தனமாகவே   உரையாடுவதற்கு  சில இருக்கின்றன.
 
பகல்காமில்  கொல்வதற்கு  முன்  கொல்லப்பட்டவர்களின்  உடைகளைக்  களைந்து  அவர்கள்  இஸ்லாமியர்கள்  அல்ல  என்பதை  உறுதிசெய்த  பின்புதான் அவர்களைக்  கொன்றிருப்பதாக  சங்கிகள்  பொங்கிக்  கொண்டிருக்கிறார்கள். அதை  மறுப்பதற்கும்  இல்லை.  சங்கிகளின்  இந்தக்  குற்றச்சாட்டை  மறுக்காத அதே  வேளையில்  இதையொட்டி  முன்னும்  பின்னுமாக  நாம்  உரையாடலைத் தொடங்க  வேண்டியது  அவசியமாகிறது.
 
இந்தியாவில்  பேரதிகமாக  ராணுவம்  குவிக்கப்பட்டிருக்கும்  மண்  காஷ்மீர். காஷ்மீரில்  பணிபுரியும்  அனைத்துவகை  பாதுகாப்பு  ஊழியர்களின்  எண்ணிக்கை ஏழு  லட்சத்தைத்  தாண்டும்  என்கிறார்கள்.  நூறு  மீட்டர் இடைவெளிக்கு  ஒரு பாதுகாப்பு  வீரர் பணியில்  துப்பாக்கியோடு  நின்று  கொண்டிருப்பதாகத்தான் காஷ்மீருக்கு  சுற்றுலா  சென்றுவந்த  நண்பர்கள் கூறுகிறார்கள்.
 
பாகிஸ்தானிற்கும்  பகல்காமிற்கும்  இடையிலான  தூரம்  ஏறத்தாழ  250 கிலோமீட்டர்.  எனில்,  பகல்காமில்  கொலை  செய்வதற்காக  பாகிஸ்தானில் இருந்து  வருவதற்கு  250  கிலோமீட்டர், , கொலை செய்துவிட்டு பாகிஸ்தானிற்கு திரும்புவதற்கு  250  கிலோமீட்டர்,  என்ற  வகையில்  500  கிலோ மீ ட்டர் தூரம் பயணித்திருக்கிறார்கள்.  நூறு   மீட்டர்  தூரத்திற்கு  ஒருவர்  என்று   பாதுகாப்பு வீரர்  நின்றுகொண்டிருக்கும்  சூழலில்  தீவிரவாதிகள்  500  கிலோமீட்டர் தூரத்தை எப்படி கடந்துசெல்ல  முடிந்தது?   இதில்  உள்ள  சூதின்  முடிச்சை  அவிழ்க்க வேண்டிய  பொறுப்பு  ஒன்றிய  அரசிற்கு  இருக்கிறது.   
 
கொல்வதற்கு முன்  கொல்லப்பட்டவர்களின்  உடைகளைக்  களைந்து  முஸ்லீம் இல்லை  என்று  உறுதி  செய்த  பின்புதான்  கொலை  செய்தார்கள்  என்று சொல்லப்படுகிறது.  ஒரு  மனிதனின்  உடையைக்  களைந்து  அவன் இஸ்லாமியன்  இல்லை  என்று  உறுதி  செய்த பின்பு  கொல்வதற்கு  ஒரு மனிதனுக்கு  இரண்டு  நிமிடங்களேனும்  ஆகும்.  எனில்,  26  பேரை  கொலை செய்வதற்கு  குறைந்த  பட்சம்  ஒருமணி   நேரமேனும்  செலவாகி   இருக்கும்.
 
இத்தனை  பாதுகாப்பு  ஏற்பாடுகள்  உள்ள  மண்ணில்  இந்த  ஒரு மணி  நேரத்தில் எந்தவிதமான  எதிர்வினையும்  இல்லாது  போனது   எப்படி  என்கிற  அய்யம் குறித்த  உரையாடலைத்  தொடங்க  வேண்டிய  அவசியம்  நமக்கு  இருக்கிறது.
 
அய்யங்களைத்  தெளிவு  செய்யவேண்டிய  அவசியம்  ஒன்றிய  அரசிற்கு இருக்கிறது.
 
இதற்கிடையில்  இன்னொரு  அதிர்ச்சியான  செய்தி   நமக்குக்   கிடைத்திருக்கிறது.   22.04.2025  அன்று  பகல்காம்  தாக்குதல்  நடக்கிறது.  அதற்கு ஒரு  வாரத்திற்கு  முன்னதாக  அதே  பகல்காம்  பகுதிக்கு  பிரதமர்  செல்வதாக இருந்ததாம்.  ஆனால்  அங்கு  ஒரு  தாக்குதல்  நடப்பதற்கு  வாய்ப்பு  இருப்பதாக “இண்டெலிஜென்ஸ்”  பிரிவு   ஒன்றிய  அரசிற்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். உடனடியாக  பிரதமரின்  பகல்காம்  சுற்றுப் பயணம்  ரத்து  செய்யப்பட்டிருக்கிறது. இதை  ஒன்றிய  அரசு  இதுவரை  மறுக்கவில்லை.  எனவே  இந்தத்  தகவல் உண்மை  என்றே  ஆகிறது.
 
சமீபத்தில்  பகல்காமில்  தாக்குதல்  நடக்க  இருப்பதான  தகவல்  ஒன்றிய  அரசிற்கு  கிடைத்திருக்கிறது.  அந்த  அறிக்கையின்  அடிப்படையில்  நடக்க இருந்த  பிரதமரின்  பயணம்  ரத்து  செய்யப்படிருக்கிறது.  இவை அனைத்தும் சரியானவை.  ஆனால்,
 
1)      உளவுத்துறையின்  அறிக்கை  கிடைத்த  பிறகும்  பகல்காமில்  பாதுகாப்பை  ஏன் கெட்டிப்படுத்தவில்லை?
2)      தாக்குதலுக்கான  சூழல்  இருக்கிறபோது  குறைந்தபட்சம்  சுற்றுலாப் பயணிகளை  ஏன்  தடுக்கவில்லை?
 
இந்தக்  கேள்விகளுக்குப்  பின்னால்  தார்மீகமான  நியாயம்  மட்டும்  இருப்பதாக சுருக்கிக்கொள்ளக்  கூடாது.  இந்திய  மக்களின்  பாதுகாப்பும்  இந்திய இறையாண்மையின்  ஒரு  முக்கியமான  கூறு.  அந்த  வகையில்  இந்திய மக்களின்  பாதுகாப்பின்  மீதான  இந்த  அலட்சியம்  என்பதே  இந்திய இறையாண்மையின்  மீதான  தாக்குதல்தான்.  எனில்  இந்திய இறையாண்மையின் மீதான இந்தத் தாக்குதலில் அரசாங்கத்தின் பங்கு எத்தகையது?
 
இஸ்லாமியத்  தீவிரவாதிகள்  வந்தார்கள்,  பார்த்துப் பார்த்து  இந்துக்களைக் கொன்றார்கள்  என்ற  ஒரு  பிம்பத்தைக்  கட்டமைக்க  முயற்சி  செய்கிறார்கள்.
 
அந்த  பாகிஸ்தானியத்  தீவிரவாதிகளிடம்  இருந்து  தனது  இந்து சகோதரர்களைக் காப்பாற்றுகிற  முயற்சியில்  ஒரு  இஸ்லாமியக்  குதிரைக்காரர் உயிரிழந்திருக்கிறார்.
 
அடுத்தநாள்  அந்த  குதிரைக்காரரின்  தந்தையை  செய்தியாளர்கள்  சந்திக்கிறார்கள். உங்களது  மகனது  இறப்பின்  வலி  கொடியது  என்று  அவர்கள்  முடிப்பதற்கு முன்னர்  அந்த  தந்தை  இடைமறிக்கிறார்  “இல்லை  பிள்ளைகளே,  எனது  மகன் உள்ளிட்ட  27  குழந்தைகளின்  மரணம்  கையளித்த  வலியில்  துடிக்கிறேன்” என்கிறார்.
 
இந்த   இஸ்லாமிய  குதிரைக்காரரின்  உயிர்த்  தியாகமும்  அவரது  தந்தையின் கூற்றும்  ஏன்  பொதுவெளியில்  வைக்கப்படவே  இல்லை.  நமக்குத் தெரிந்த அளவில் அந்த மனிதனின் மரணமும்  அவரது  தந்தையின்  கூற்றும்தான் இந்தியாவின்  அடையாளம்.
 
இவை  குறித்து  உரத்தும்  தொடர்ந்தும்  பேசவேண்டிய  தேவை  இருக்கிறது.
 
செய்வோம்.   
 
******************************************************
 
n  புதிய ஆசிரியன்
ஜூன் 2025
 
  
 
 


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...