அனைத்தையும் அனுபவித்துதான் உணரவேண்டும் என்றெல்லாம் இல்லை. சில விஷயங்களை கற்பனையாக நினைத்துப் பார்த்தாலே கண்களில் பயம் கசிய அப்படியே மிரண்டு உறைந்து போய்விடுவோம்.
பக்கத்து ஊரில் இருக்கக்கூடிய அணையொன்று உடைந்து போனது என்பதை நேரில் போய் பார்த்தால்தான் அதன் பாதிப்புகளை உணர முடியும் என்றால் அவர்களுக்கல்ல இந்த மாதத்தின் கடைசி பக்கங்கள்.
தமிழகத்தின் முக்கியமான அணைகளில் ஒன்றான எங்கள் ஊர் முக்கொம்பு அணை உடைந்ததை நேரில் பார்த்த எங்களுக்கு அது தந்த பாதிப்புகளை விடவும், அதனால் எங்களுக்கு ஏற்பட்ட வேதனைகளை விடவும் இதுவரை ஆண்ட ஆட்சியாளர்களின் மீதும் மணல் மபியாக்கள்மீதும் எங்களுக்கு ஏற்படும் கோவம்தான் அதிகமாய் இருக்கிறது.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு என்னும் இடத்தில் காவிரியின் மீது கட்டப்பட்டிருக்கும் அணை மேலணை ஆகும். இதுவரை அகன்ற காவிரியாக ஓடி வரும் நதியை காவிரி என்றும் கொள்ளிடம் என்றும் இரண்டாகப் பிரிக்கிற வேலையை மேலணை செய்கிறது.
உள்ளபடி சொல்ல வேண்டுமானால் மேலணையில் இரண்டு அணைகள் உள்ளன. ஒரே நதியாக அகன்று பரந்து வரும் காவிரி அந்த இடத்தில் இரண்டாகப் பிரிகிறது. தெற்குப் பகுதி காவிரி என்றும் வடக்குப் பகுதி கொள்ளிடம் என்றும் அழைக்கப் படுகிறது.
காவிரியில் ஒரு அணையும் கொள்ளிடத்தில் ஒரு அணையும் கட்டப்பட்டிருக்கிறது. காவிரிப்பகுதியில் நீர் அதிகமாகவும் கொள்ளிடம் பகுதியில் நீர் குறைவாகவும் இருக்கும். பொதுவாக கட்டுக்கடங்காத அளவு நீர்வரத்து இருந்தால் மட்டுமே கொள்ளிடத்தில் நீர் திறந்து விடப்படும். இன்னும் சொல்லப் போனால் காவிரிப் பகுதியில் உள்ள அணையின்மீது நடக்கும்போது ஏற்படும் ஒருவிதமான அச்சம் கொள்ளிடத்தில் கட்டப்பட்டுள்ள அணையின்மீது நடக்கும்போது இருக்காது. அத்தகைய சாந்தமான அணையில் இருந்துதான் ஒன்பது மதகுகள் உடைந்திருக்கின்றன.
அந்தப் புள்ளி தொடங்கி கல்லணையில் இவ்விரு நதிகளும் மீண்டும் இணைகிற வரைக்கும் இந்த இரண்டு நதிகளுக்கும் இடையில் இருக்கிற தீவில் திருவரங்கம், திருவானைக்கோவில், சர்க்கார்பாளையம் உள்ளிட்ட ஏராளமான ஊர்கள் உள்ளன. இரண்டு நதிகளிலும் சற்று அதிகமான அளவில் நீர் திறந்துவிடப்பட்டு சன்னமான அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலே இந்த ஊர்கள் அதிலுங் குறிப்பாக கல்லணைக்கு அருகில் உள்ள ஊர்கள் சொல்லொணா பாதிப்பிற்கு ஆளாகும்.
அணையின் ஒன்பது மதகுகள் இதுவரை உடைந்திருக்கின்றன. இந்த வகையில் சொல்லி அரற்றிக் கொள்கிற அளவில் பாதிப்பு இல்லை. ஆனால் மொத்தம் உள்ள நாற்பத்தி சொச்சம் மதகுகளும் மொத்தமாகவோ அல்லது பெரும்பான்மை மதகுகளோ உடைந்துபோகும் பட்சத்தில் மொத்தத் தமிழகமும் இரக்கப்படும் நிலைமைக்கு திருச்சி போகும்.
இந்தச் சேதத்திற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன.
1) அணையின் நிலைமையை அவ்வப்போது ஒழுங்காகப் பரிசீலிக்காதது. பரிசீலிக்கப் பட்டிருப்பின் அணை உடைவதற்கான ஆபத்தை உணர்ந்து அணையைப் பராமரிக்காதது.
ஒருக்கால் பரிசீலிக்கப்பட்டு ஆபத்தைக் கண்டுணராமல் இருந்திருப்பின் ஒழுங்காக பரிசீலிக்காதது.
2) மணல்திருட்டை ஊக்குவித்ததன் மூலம் அணையை பலவீனப் படுத்தியது.
மேலணை உடைந்து நமக்குத் தரும் பாடம் இதுதான்,
நதியைச் சீண்டாதீர்கள் கனவான்களே.
******************************************************************************
இதற்கு மழை காரணம் அல்ல.
இதை அப்படியே ஏற்க முடியாதவர்களும் இதை ஏற்பார்கள்,
இதற்கு மழை மட்டுமே காரணம் அல்ல.
குடகுப் பகுதியில் மழை ருத்ர தாண்டவமாடுவதாக செய்திகள் கூறுகின்றன. கடந்த மே மாதம் முதலே பேயாட்டம் ஆடிவரும் மழையினால் வீடுகள் சூறையாடப்பட்டு சாலைகள் துண்டாடப்பட்ட நிலையில் சிறு சிறு பாலங்கள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப் பட்டதாக செய்திகள் வருகின்றன. உண்மையோ பொய்யோ அல்லது மிகையோ நாமறியோம். ஆனால் குடகு மாவட்டத்தில் ஒரு ஊரையே காணோம் என்று வருகிற செய்திகள் நமக்கு கண்ணீரை வரவழைக்கின்றன. அந்தச் செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்று மனது கிடந்து தவியாய்த் தவிக்கிறது.
இந்தத் துயரம் தோய்ந்த சூழலிலும் ‘எங்களுக்குத் தண்ணீர் தரல இல்ல, உனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்’ என்று சபிப்பவர்களை நம்மால் ஒருபோதும் ரசிக்கவோ ஏற்கவோ இயலாது.
“இப்ப மட்டும் திறந்து விடற. இப்ப வேணாம், நீயே வச்சுக்க”, என்கிற வாதத்தையும் ரசிக்கிற நேரம் இதுவல்ல.
ஆனால் தமிழகத்தில் இருந்து கிளம்பும் இத்தகைய குரல்களுக்குப் பின்னால் உள்ள நியாயத்தையும் வலியையும் துயரையும் யாரும் புறந்தள்ளிவிட முடியாது என்பது மட்டுமல்ல, யாரும் புறந்தள்ளிவிடக் கூடாது என்பதையும் இந்த இடத்திலே நமது கோரிக்கையாக வைக்கிறோம்.
அதேபோல நிறைய வரும் போது நிறையத் தருகிறோம் என்று அவர்கள் சொல்வது முற்றும் வறட்டுத் தனமானதும் அல்ல.
அவர்கள் கூறுவதற்கும், நாம் கேட்பதற்கும், இந்த அளவிற்கு இன்று குடகு சேதப்பட்டு நிற்பதற்கும் இரண்டு காரணங்கள்தான் என்பதைத்தான் நாம் திரும்பத் திரும்பக் கூறுகிறோம்.
1) பணப்பயிர்களான தேநீர், காபி, ஏலம் ,மிளகு, மற்றும் பழங்களைப் பயிரிடுவதற்காக குடகு மலைப் பகுதியில் இயற்கை நமக்கு அரணாகத் தந்திருந்த சோலாஷ் காடுகளைப் பெருமளவு அழித்தது.
2) சுற்றுலாவை வளர்க்கிறேன் என்ற பெயரில் பெரிய ரெசார்ட்களை ஏற்படுத்தியதோடு பெரிய பெரிய பங்களாக்களை அந்த மலையில் ஏற்படுத்தியது.
‘சோலாஷ்’ என்பது இயற்கை கருணையோடு நமக்களித்த பெருவரம். நீளமான கோரைப் புற்களைப் போன்ற ஒரு அடர்ப்புதர்ப் பகுதியே சோலாஷ் காடுகள் ஆகும். எவ்வளவு கொடூரமான மழை பெய்தாலும் அவற்றை முற்றாய் முழுதாய் இவை உறிஞ்சி வைத்துக் கொள்ளும்.
தான் உறிஞ்சி வைத்துக் கொண்டதை பல மாதங்களுக்கு சேமித்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கசியத் தரும். எனில், ஒருமுறை பெய்த நீர் சோலாஷால் உறிஞ்சி வைத்துக் கொள்ளப்பட்டு பல மாதங்களுக்கு அவை கீழே ஓடி வரும். நீரின் வேகம் குறைவாய் இருக்கும்.
இப்போது அவற்றை அழித்து விட்டதால் சேமிக்க வாய்ப்பற்று மொத்த நீரும் ஒரே நேரத்தில் முரட்டுத் தனமாய் கீழிறங்குகிறது. வேகம் அதிகம், நீரும் அதிகம் என்பதால் இயற்கையாகவே சேதமும் அதிகம் என்றாகிறது.
இப்படிப் புரிகிறமாதிரிப் பார்ப்போம்,
சோலாஷ் இல்லாததால் நீர் முழுவதும் ஒரே நேரத்தில் இறங்கி விடுகிறது. கர்நாடகாவும் இப்போதே நீரைத் திறந்து விடுகிறோம். சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நம்மிடம் கூறுகிறது.
மாறாக சோலாஷ் அழிக்கப் படாமல் இருந்திருப்பின் நீர் சேமிக்கப் பட்டிருக்கும். நீர் சேமிக்கப்பட்டிருந்தால் அதிக காலத்திற்கு நீர் கீழிறங்கிக் கொண்டிருக்கும். அதிக காலத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக நீர் இறங்கிக் கொண்டிருந்தால் கர்நாடகமும் உரிய கால இடைவெளியில் நமக்கு நீரைக் கொடுக்க முடியும். உரிய கால இடை வெளியில் கர்நாடகா நமக்கு நீரைத் தரும் எனில் தஞ்சை எப்போதும் நெற்களஞ்சியமாகவே இருந்திருக்கும்.
இதுமட்டும் அல்ல, குடகு மலைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள முரட்டுக் கட்டிடங்களுக்காக உறிஞ்சப்படும் நீரும் அதிக பாரம் தரும் சமமின்மையும்கூட இத்தகைய பேரழிவுகளுக்கு காரணமாகின்றன.
ஆக, மீண்டும் சோலாஷைக் கட்டமைத்து இத்தகைய முரட்டுக் கட்டிடங்களை அழித்துப் போட்டால் அல்லது புதிதாக கட்ட்டங்களுக்கு அனுமதி மறுத்தாலே போதும் இத்தகைய பேரழிவுகளும் இருக்காது, இரு மாநிலத்து மக்களும் மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் வாழ முடியும்
***************************************************************************
கேரளாவைப் புரட்டிப் போட்டிருக்கிறது பெருமழை. மழையின் வேகத்தைவிடவும் அதிவேகமாய் அங்குள்ள அரசும் மக்களும் குறிப்பாக மீனவர்களும் மண்ணை மறுகட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
1) எதிர்க்கட்சித் தலைவரோடு இணைந்து நிவாரணப் பணிகளை முடுக்கிவிடும் தோழர் பினரயி விஜயன்
2) எமது மீனவர்கள்தான் எமது நேவி என்ற முதல்வரின் உருக்கத்தில் நெகிழ்ந்த மீனவர்கள் அது போதும் இதற்காக அரசு தருவதாய் சொன்ன ஊதியத்தை நிராகரித்தது
3) அரைக்கால் டவுசரோடு சேற்றில் இறங்கிப் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள்
4) பேரிடர்ப் பணியில் தோள்கொடுக்கும் தமிழ்நாட்டு மக்கள்
ஆகியோர் நெகிழ்த்துகிறார்கள்.
1) கொடுத்த அரிசிக்கான பணத்தை கொடுக்க ஒப்புக் கொண்ட நிவாரணாப் பணத்தில் கழிப்பதாகக் கூறும், அரேபிய நாடுகள் தரும் உதவியைத் தடுக்கிற மத்திய அரசும்
2) இதிலும் மதவெறியை நுழைக்கிற குருமூர்த்தி மற்றும் எச் ராஜாவும் எரிச்சலைத் தருகிறார்கள்