Showing posts with label சாதி. Show all posts
Showing posts with label சாதி. Show all posts

Thursday, April 17, 2025

திருநெல்வேலியில் ஒரு பள்ளியில்

ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை அரிவாளால் வெட்டியிருக்கிறான்

பதறுகிறது
ஒன்றும் ஆகவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது
அரசைக் குற்றம் சொல்கிறார்கள்
பள்ளிக் கட்டமைப்பைக் குற்றம் சொல்கிறார்கள்
ஆசிரியர்கள் சரியில்லை என்கிறார்கள்
குழந்தைகள் சரியில்லை என்கிறார்கள்
எந்த ப்ரிஜுடிசும் இல்லாமல் நெருக்கமான காரணத்தை
திரைப் படங்கள் ஒரு காரணம் என முன்வைக்கிறார் Bhuvana Gopalan
மேற்சொன்ன எல்லாவற்றிலும் உண்மை இருக்கிறதுதான்
ஆனால் அதே திருநெல்வேலியில் இருந்து ஒரு தலைவர்
வைரமுத்த கொல்ல வேணாமா என்று கொலைவெறியை மேடை போட்டுத் தூண்டுகிறார்
ஆன்மீகப் பெரியவர்கள் அந்த மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்
இதைத் தவறென்று அவர்கள் கண்டிக்கவில்லை
பிரதமர் கண்டிக்கவில்லை
சகோதரிகள் வானதி தமிழிசை என்று யாரும் அவரைக் கடிந்து கொள்ளவோ நெறிப்படுத்தவோ இல்லை
ஒரு தலைவர் இப்படிப் பேசினால் குழந்தைகள் இப்படித்தான் மாறுவார்கள் என்று யாரும் அவர் நோக்கி சுட்டுவிரலை நீட்டவில்லை
கொலைவெறியைத் தூண்டுகிற அந்தத் தலைவரை ஒன்றியத்தை ஆள்கின்ற கட்சி
தனது மாநிலத் தலைவராக அங்கீகரித்து ஆசிர்வதிக்கிறது
துயரம் என்னவெனில் அந்தக் கட்சியும் அந்தத் தலைவரும் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்காகக் கொந்தளிப்பதுதான்

17.04.2025

Wednesday, October 11, 2023

ஒருவரும் கை உயர்த்தவில்லை

 சாதிவாரிக் கணக்கெடுப்பு ஒன்றாக இருக்கிற மக்களை பிளவுபடுத்தாதா ராகுல்

பல இடங்களில் ஒருத்தர்கூட இல்ல
பல இடங்களில் ஒருத்தராவே இருக்கீங்களேப்பா
அர்த்தமே இல்லிங்க ராகுல்
அப்படியா
இங்க இருக்கிற பத்திரிக்கையாளர்களில் எத்தனை பேர் ஓபிசி
ஒருவரும் கை உயர்த்தவில்லை
சரி, எத்தனைபேர் பட்டியல் இனம்
இப்போதும் யாரும் கை உயர்த்தவல்லை
இதற்காகத்தான் நண்பர்களே
முத்தம் ராகுல்

Wednesday, August 16, 2023

மதம் மாறுவதைப் போலவே இதையும் கொள்வதெனில் ,

சாதி மாறுவதை அங்கீகரித்து சட்டம் இயற்ற வேண்டும் என்கிறார் கவிஞர் வைரமுத்து

தூங்குகிற ஸ்டாலின் சாரை அலைபேசியில் அழைத்து உரையாடக் கூடிய உரிமை உள்ளவர் கவிஞர் என்பது உலகறிந்த உண்மை
அப்படி இருக்கும் போது இவ்வளவு சென்சிட்டிவான ஒரு விசயத்தை நாங்குநேரி சம்பவம் மாதிரி ஒன்று நிகழ்ந்தேறியுள்ள நேரத்தில் சமூக வலைதளத்தில் பதிய வேண்டிய அவசியம் என்ன?
இதுவும் ஒரு வகை அரசியல்
அப்படி ஒரு சட்டம் வருவதாகவே கொள்வோம்
ஒரு பட்டியல் இனத்தவர் அய்யராக மாற விரும்புகிறார்
அவரை அய்யர் என்று யார் அங்கீகரிப்பது
ஒரு இந்து கிறிஸ்தவராக மாறுவது என்றால் அவர் ஏதோ ஒரு தேவாலயத்திற்கு செல்ல வேண்டும்
அங்கு அந்த தேவாலயத்தின் தலைவர்
அதாவது அந்தத் திருச்சபையின் குருமார் அவரை கிறிஸ்தவராக ஏற்பார்
ஒரு கிறிஸ்தவர் இந்துவாக மாறுவது என்றால் அவர் ஒரு ஏதேனும் ஒரு திருமடத்திற்கு சென்று அந்த மடத்தின் அதிபதியை அல்லது குருமகா சன்னிதானத்தை சந்தித்து தன் விருப்பத்தைக் கூறினால்
முறைப்படி அந்த குரு இவரை இந்துவாக அங்கீகரிப்பார்
இஸ்லாத்திற்கும் இதே வழிமுறைதான்
இப்படி மதம் மாறியவர்கள் அதற்கான சான்றுகளோடு அரசு இதழிலில் அதை வெளியிட்டு தங்களது மதமாற்றத்தை உறுதி செய்ய வேண்டும்
இப்போது சாதிக்கு வருவோம்
சாதி மாற விரும்பிய ஒரு பட்டியை இனத்தவரை யார் அய்யராக ஏற்பது?
மதம் மாறுவதைப் போலவே இதையும் கொள்வதெனில் ,
கவிஞர் அப்படித்தான் சொல்கிறார்
அய்யர் பட்டியல் இனத்தவரை அய்யர் ஒருவர் அய்யர் என அங்கீகரிக்க வேண்டும்
அல்லது
ஒரு செட்டியார் பிள்ளையாக மாறுவதெனில் எந்தப் பிள்ளையேனும் ஏற்பாரா
இல்லை இவை எல்லாம் வைரமுத்துவிற்குத் தெரியாதா?
தெரியும் என்பதுதான் அரசியல்
கொதிநிலை உச்சத்தில் சாதியே இல்லை என்று சட்டம் இயற்றுங்கள் என்றும்
சாதியற்ற சுடுகாடு என்று சட்டம் இயற்றுங்கள் என்றும்
கொதிநிலை வரும்
வரும் என்பது கவிஞருக்கும் தெரியும்
அதுதான்,
சன்னமாக மடைமாற்றுகிற காரியம் இது
அவர் சொல்ல வருவதும்
நாம் புரிந்துகொள்ள வேண்டியதும் இதுதான்
சாதி இருக்கட்டும் என்கிறார்

Saturday, August 12, 2023

வெட்டிய குழந்தைகளும் கருவிகள்தாம்

 


நாங்குநேரி சம்பவம் குறித்து நான் எழுதியதைப் படித்துவிட்டு
என்ன சார்,
வெறியோடு வெட்டிச் சாய்த்தவங்களையும் குழந்தைகள் என்கிறீர்கள்
வெட்டிச் சாய்க்கப்பட்டு மருத்துவமனையில் போராடிக்கொண்டிருப்பவர்களையும் குழந்தைகள் என்கிறீர்களே
கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லையா?
என்று நண்பர்கள் கேட்கிறார்கள்
மனசோடுதான் இருவரையும் குழந்தகள் என்று விளிக்கிறேன்
வெட்டப்பட்டவர்கள் திங்கள் முதல் சில நாட்களுக்கு பள்ளிக்கு வர முடியாது
வெட்டியவர்கள் பள்ளிக்கு வர பல காலம் ஆகும்
இரண்டிற்காகவும் வருந்துகிறேன்
பிரியத்திற்குரியவர்களே
அருவாள் மட்டும்தான் கருவி என்று கருதுகிறீர்களா?
வெட்டிய குழந்தைகளும் கருவிகள்தாம்
சாதி அருவாளையும் நம் முகவரிகளையும் நம் குழந்தைகளிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறது
”நம் குழந்தைகளிடம்” என்பதை அடிக்கோடிட்டு எடுத்துக் கொள்ள வேண்டுமாய் அன்போடு இறைஞ்சுகிறேன்
சாதி அவர்களது குழந்தைகளின் கைகளில் அரிவாளைக் கொடுத்து அனுப்பி இருப்பதாய் கொள்வது இந்த பிரச்சினையை நாம் நுனி மேய்வதாக ஆகும்
குழந்தைகள் கைகளில் அருவாள் வந்திருக்கிறது
இது நமக்கு மட்டுமல்ல
சாதி கொண்டாடுபவர்களுக்கும் ஆபத்தானது
கொஞ்சம் யோசித்துப் பார்ப்போமா
குழந்தை எப்ப படிக்கிறான் என்று கேட்கிறோமே தவிர
எப்போதாவது
குழந்தை எப்படி மற்றவர்களிடம் பழகுகிறான் என்று கேட்டிருக்கிறோமா?
இந்த மனநிலை பழுதானதல்லவா
என்ன மதிப்பெண் எடுக்கிறான்
போட்டித் தேர்வுகளுக்கு தோதான பாடத் திட்டமா என்பதுவரை கேட்குமளவிற்கு வந்திருக்கிறோம்
இருக்கிற பாடத் திட்டம் அன்பான பிள்ளையாக மாற்றுமா என்று கவலைப் பட்டிருக்கிறோமா?
நம்மை மாற்றிக் கொள்வோம்
அரிவாளோடு அனுப்புகிறார்கள்
நான் அன்பும் புன்னகையுமாய் அவர்களுள் நுழைவோம்
எவ்வளவு காலமாகும் தெரியாது
சக மனிதனை நேசிக்கச் சொல்லித் தருகிற கல்வித் திட்டத்தைக் கேட்போம்

Wednesday, October 5, 2022

இது எமது வேலை

 இது எங்கள் வேலை

**********************
பெரும்பான்மை ஊர்களில் உள்ளது போலவே திருவள்ளூர் மாவட்டம் தோக்காமூர் கிராமத்திலும் பட்டியலின மக்களுக்கான காலனி இருக்கிறது
அங்கு வாழும் மக்களுக்கு எந்தவிதமான சொத்தும் இல்லை
L வடிவிலான அந்தக் காலனியில் இருந்த இடமும் அவர்களுக்குப் போதாததாக இருந்திருக்கிறது
குடும்பங்கள் வளர வளர இது தவிர்க்க இயலாததாக மாறுவதும் இயற்கை
சொந்தமாக மனை வாங்கி வீடு கட்டுவதற்கு வசதி இல்லை
வசதியே இருந்தாலும் குடியானத் தெருவில் இவர்களால் மனையும் வாங்க இயலாது
எனவே பக்கத்தில் இருந்த பொறம்போக்கு நிலம் என்று இவர்கள் கருதிய நிலத்தில் சிலர் கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர்
அது அந்தப் பகுதியின் ஆதிக்க சாதியினரை எரிச்சல்பட வைத்திருக்கிறது
2015 இல் அவர்கள் அது திரௌபதை அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் என்றும்
அதை பட்டியல் இனத்தவர் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறி கொட்டகைகளை பிரித்து எறிந்திருக்கின்றனர்
கோயில் நிலத்திற்குள் பட்டியல் இனத்தவர் நுழையக்கூடாது என்பதற்காக 10 அடி உயரத்திற்கு 90 மீட்டர் நீளத்தில் தடுப்புச் சுவர் கட்டிவிட்டனர்
இது கேள்விபட்டு
தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் CPM கட்சியும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு
வட்டாட்சியரையும் சந்திக்கின்றனர்
கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர் தீண்டாமைச் சுவர்தான் என்றும் அது இடிக்கப்பட வேண்டும் என்றும் மனு கொடுக்கின்றனர்
தொடர்ந்து போராடவும் செய்கின்றனர்
CPM கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலியும் சின்னத்துரையும் தொடர்ந்து மக்களை சந்திப்பதும் அதிகாரிகளை சந்திப்பதுமாக இருக்கின்றனர்
2022 மே மாதத்தில் திருவள்ளூரில் ஒரு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது
தோழர் G.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்துகிறார்
அதனைத் தொடர்ந்து CPM மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார்
தோக்கமூர் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட வேண்டும் என்றும்
இல்லையெனில்
அக்டோபர் 06 ஆம் தேதியன்று ஒரு பெரும் போராட்டத்திற்கான தேதியை குறிக்க நேரிடும் என்றும் கூறுகிறார்
முதல்வரின் கவனத்திற்கு இந்தக் கடிதம் போனதும்
0310.2022 அன்று அதிகாலை பலத்த போலிஸ் பாதுகாப்போடு தோக்காமூர் தீண்டாமைச் சுவர் இடிக்கப் படுகிறது
ஆனாலும் காலனி மக்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள சிமெண்ட் போஸ்ட்களை அகற்ற வேண்டும்
அந்த மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்
அச்சம் நீங்கும்வரை போலிஸ் பாதுகாப்பு தரவேண்டும்
என்ற கோரிக்கைகள் மிச்சம் இருப்பதாகவும்
தொடர்ந்து களத்தில் அதற்காக கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நிற்கும் என்றும் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர் கோபால் கூறியுள்ளதாக 04.10.2022 தீக்கதிர் கூறுகிறது
தீக்கதிர் தவிர எத்தனைப் பத்திரிக்கைகள் இந்த செய்தியை உள்ளபடி பிரசுரித்துள்ளன என்று தெரியவில்லை
இது நமது வேலை
தொடர்ந்து செய்வோம்
#சாமங்கவிய ஒரு மணி 43 நிமிடங்கள்
04.10.2022

Thursday, October 14, 2021

செய்யவேண்டும் CPM

 திருவண்ணாமலையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏழரை ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்கப் போராடிய தோழர்கைளை மாவட்டம் மாவட்டமாக அழைத்து CPM மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டு விழாக்களை நடத்த வேண்டும்

போராட்டம் விரியவும் இது உதவும்

Sunday, December 8, 2019

சங்கர் தயாள் சர்மாவின் சாதிய வன்மம்

தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டபோது இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு சங்கர் தயாள் ஷர்மா
அதைத் தாங்கிக்கொள்ள முடியாதவராய் அவர் இருந்திருக்கிறார். அதை இப்படியாக வெளிப்படுத்தியும் இருக்கிறார் என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் 25.09.1994 இல் வெளிவந்திருக்கும் அவரது பேச்சில் இருந்து தெரிகிறது. அவர் கூறுகிறார்
“although the quota system might have taken away posts from brahmin, no one could take away brahmin's brain"
அதாவது,
இடஒதுக்கீடு மூலமாக பார்ப்பனர்களிடம் இருந்து பணியிடங்களை, வாய்ப்புகளைப் பறிக்கலாமே தவிர மூளையைப் பறிக்க இயலாது.
மொத்த இந்தியாவின் தலைமகனாக இருந்தவருக்குள்ளேயே இவ்வளவு சாதிய வன்மம் இருந்திருக்கிறது என்பது எவ்வளவு துயரமானது

Sunday, September 30, 2018

பலூனைத் தொட்டால் தீட்டா....?

இன்றும் மூன்று விஷயங்கள் இருக்கின்றன பேச
1) ஒரு மூத்த சான்றாண்மை மிக்க பேராசிரியரை ABVP மாணவர்கள் தங்கள் கால்களில் விழுந்து கும்பிட வைத்த கொடுமை
2) கோவில் திருவிழாவில் கட்டப்பட்டிருந்த பலூனைத் தொட்டு விளையாடிய 12 வயது தலித் சிறுவனை அவன் வயதைச் சார்ந்த ஐந்து ஆதிக்கசாதி சிறுவர்கள் கொன்றுபோட்ட கொடுமை
3) பூனேவில் நடந்து முடிந்த PEN INTERNATIONAL அமைப்பின் 84 மாநாட்டில் தோழர் பெருமாள் முருகனை தனது துணைத் தலைவர்களுள் ஒருவராக உள்ளெடுத்துக் கொண்டது
மத்தியபிரதேசத்தில் மண்ட்சவுர் என்னுமிடத்தில் ராஜிவ்காந்தி பெயரில் ஒரு கல்லூரி இருக்கிறது. அந்தக் கல்லூரியின் மூத்த மற்றும் மரியாதைக்குரிய பேராசிரியரும் ஆழமான நூல்களைத் தந்துள்ள சான்றாண்மை மிக்கவருமான முனைவர் தினேஷ் சந்திர குப்தா அவர்கள் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்
அப்போது பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP யைச்சேர்ந்த சிலர் சத்தமாக கோஷங்களை எழுப்பியவாறு வருகிறார்கள்
அந்த சத்தம் அவரது வகுப்பிற்கு இடையூறாக உள்ளது. எனவே அவர் அவர்களை சத்தமிடுவதை நிறுத்துமாறு கூறுகிறார்
அவ்வளவுதான்
அவரைத் தேசத்துரோகி என்கிறார்கள்
அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மிரட்டுகிறார்கள்
பேராசிரியரும் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்
அந்த வீடியோ வைரலாக வருகிறது
என்னவிதமான மிரட்டல் வந்திருக்குமாயின் அந்த மாணவர்கள் கால்களில் அவர் விழுந்திருப்பார்
ஆசிரியர்களை அமரவைத்து மாணவர்களை அவர்களது பாதங்களைக் கழுவி பாதபூஜை செய்யச் சொன்ன (சென்னையில் கூட நடந்தது) அமைப்பைச் சார்ந்த பிள்ளைகள் ஆசிரியரை தங்களது கால்களில் விழுந்து வைத்திருக்கிறார்கள்
இந்த இரண்டில் எது அவர்களது உண்மையான முகம்?
அவர்கள் போலியான வர்கள், ஆபத்தானவர்கள் என்பதை மக்களுக்கு புரிகிற மாதிரி எப்படி கொண்டுபோகப் போகிறோம்?
உத்திரப்பிரதேசத்தில் ஆக்ராவிற்கு அருகே நட்ரோயி என்றொரு கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தில் சமீபத்தில் திருவிழா நடைபெற்றிருக்கிறது.
அந்தக்கோவிலைச்சுற்றி அலங்காரத்திற்காகக் கட்டப் பட்டிருந்த பலூன்களில் ஒன்றைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான் 12 வயதொட்டிய ஒரு தலித் குழந்தை.
அப்போது அவனது வயதொத்த 5 ஆதிக்கசாதி குழந்தைகள் அந்த வழியாக வருகிறார்கள். அவர்கள் கண்களில் இவன் பலூனைப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பது படுகிறது.
தலித் பையன் பலூனைத் தொட்டதால் ஆலயம் தீட்டுப் பட்டு விட்டதென்று கூறிக்கொண்டே அவர்களில் இருவர் அந்தப் பையனது கைகளைப் பிடித்துக் கொள்கின்றனர். இருவர் கால்களைப் பிடித்துக் கொள்கின்றனர். மிச்சமிருக்கிற ஒருவன் அவனது வயிற்றில்  மிதி மிதி என்று மிதிக்க பலூனைத் தொட்ட குற்றத்திற்காக அந்த தலித் பிள்ளை செத்துப் போகிறான்
பூனாவில் முடிவடைந்த PEN INTERNATIONAL 84 வது மாநாட்டில் தோழர் பெருமாள் முருகன் அந்த அமைப்பின் துணைத் தலைவர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்
Poets, essayists,editors, and novelists என்பது இதன் விரிவு. தேவை கருதிதான் எடிட்டர்களை பிற்பாடு இணைந்திருக்கிறார்கள்
இந்தியக் கருத்துச் சுதந்திரம் மிகவும் ஊனப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அதற்காக போராடும் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் யாவரும் அச்சுறுத்தப் படுவதாகவும், தாக்கப்படுவதாகவும் கொலைசெய்யப் படுவதாகவும் இந்த மாநாடு கவலையோடு பார்த்திருக்கிறது
உலகத்தின் அனைத்து படைப்பாளிகளும் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்று கோரியிருக்கிறது
தோழர் பெருமாள் முருகன் அந்த அமைப்பின் அகில உலகத் துணைத் தலைவர் என்பது பெருமைக்குரிய விஷயம்
அந்த அமைப்பை வீரியத்தோடு நம் மண்ணில் களமிறக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு பெருமாள் முருகனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
#சாமங்கவிந்து ஒரு மணி 17நிமிடங்கள்
30.09.2018

Friday, August 3, 2018

29.07.2018

“அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு!”
என்கிறார் புரட்சிக் கவிஞர்.
“நான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்தால் அறிவு ஜீவிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டிருப்பேன்”
என்று கூறியிருக்கிறார் கர்நாடக பாரதிய ஜனதாக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு பசனகவுடா பாட்டீல் .
ஏன் அறிவை விரிவு செய்ய வேண்டும் என்பதற்கும் ஏன் அறிவாளிகளைக் கொல்ல வேண்டும் என்பதற்கும் இருவரும் காரணங்களையும் சொல்லியிருக்கிறார்கள்.
அறிவை விரிவு செய்தால் ,
”விசாலப் பார்வையில் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு!”
என்கிறார் புரட்சிக் கவிஞர்.
அறிவை விரிவு செய்தால் பார்வை விசாலப்படும்.
பார்வை விசாலப்பட்டால் மக்களை மக்களாக உள்வாங்க அறிவு வழிநடத்தும்
மக்களை ஆரத்தழுவி அவர்களோடு மக்களாக இரண்டறக் கலந்து மனிதச் சமுத்திரத்தின் ஒரு துளி தானென்று அவனுக்கு அறிவு உணார்த்தும்
ஆகவேதான் புரட்சிக்கவிஞர் மனிதனை அறிவைக் கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறார்.
அறிவு வந்தால் அவர்கள் நமது நாட்டிற்கு எதிராக கோஷமிடுகிறார்கள் என்றும் . அறிவாளிகள் பாகிஸ்தானைவிட ஆபத்தானவர்கள் என்றும் பசனகவுடா பட்டீல் கூறியிருக்கிறார்.
எனில், அறிவிலிகள் மட்டுமே தேசப்பற்றாளர்கள் என்று கூற வருகிறாரா பசனகவுடா என்ற அச்சம் நமக்கு எழுகிறது.
அறிவு விரிவுபட்டால் எல்லா மக்களையும் தன்னைப் போல் ஒருவனாக பார்க்கத் தூண்டும் என்கிறார் பாரதிதாசன்
அறிவு விரிவுபட்டால் ஜாதி அடிபடும் என்கிறார் புரட்சிக்கவிஞர்
நமக்கு ஒரு விஷயம் தெளிவுபடுத்த இருக்கிறது
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளார் தோழர் எச்சூரி அவர்கள் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் நாளில் அவரது தேசப் பற்றினை மெச்சி புகழ்ந்த பாரதிய ஜனதாக் கட்சியினர் குறிப்பாக வெங்கையா நாயுடு போன்றவர்கள் அவர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வரவேண்டும் என்ற கருத்தை இதய சுத்தியோடு வைத்தனர்.
ஒரு தகவலுக்காக சொல்கிறேன்,
தோழர் யெச்சூரி அவர்கள் CBSE தேர்வில் தேசத்தில் முதல் மாணவனாக வந்தவர்.
எல்லா அரசுகளுக்கெதிராகவும் மக்களுக்காக சமரசமே இன்றி போராடிக் கொண்டிருப்பவர்
எல்லா அரசுகளாலும் பேரதிக நெருக்கடிக்குள்ளாகியவர்.
ஆனால் அவரால் பெரிதும் எதிர்க்கப்பட்ட பாஜக வினரே அவர் மீண்உம் அவைக்கு வர வேண்டும் என்று சொல்லுமளவிற்கு இருந்தவர்
அறிவாளிகள் சாதிக்கு எதிராகப் போராடுவார்கள்,
அறிவாளிகள் சமத்துவத்திற்காகப் போராடுவார்கள்,
அறிவாளிகள் மதச்சார்பின்மைக்காக உயிரையும் கொடுப்பார்கள்,
இவை அவர்களுக்கு ஆபத்தானவை
அவர்களுக்கு மதார்பின்மையை தங்களாது செருப்பைவிடக் கேவலமாக்க் கொள்கிற எதிர்மறை அறிவாளிகளும் இவர்கள் தரும் மண்ணை பிரியத்தோடு பெற்று தலையிலே போட்டுக் கொள்பவர்களுமே போதுமானவர்கள்
திரு பசனகவுடா, நாங்கள் பாரதிதாசனின் பிள்ளைகள்.
#சாமங்கவிந்து 21 நிமிடம்

Monday, July 30, 2012

மயான தர்பார்

ஏறத்தாழ இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு எங்களூர் சுடுகாடு வரைக்கும் போய் திரும்பவேண்டிய அவசியம் வந்தது.

மாமா இறந்து போனார். ஊரில் பக்கத்து பக்கத்து வீடு.  எங்கள் அம்மாவும் அவரும் சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள். நான் மிகச் சின்ன பிள்ளையாய் இருந்த காலத்தில் மனைப் பிரிவினையின் பொருட்டு எங்கள் அப்பா அம்மாவிற்கும் அவருக்கும் நிறைய பிரச்சினைகள். ஏதேனும் ஒரு வாரம் சனியோ ஞாயிறோகூட வராமல் போகலாம் ஆனால் எங்கள் வீட்டிற்கும் அவருக்கும் குறைந்தது வாரம் ஒருமுறையேனும் சண்டை நடந்தே தீரும்.

“வேனாப் பாரேன் நீ நாசாமாப் போயிடுவ” என்று அவரும் எங்கம்மாவும் அடிக்கடி ஒருவரையொருவர் மண்ணை வாரித் தூற்றிக் கொள்வதை எத்தனையோமுறை வேடிக்கை பார்த்திருக்கிறோம்.

அந்த மாமாவின் உயிர்பிரிந்த வேளையில்தான் நான் அவரது கால்களைப் பிடித்தவாறே கண்கலங்கி நின்றேன். அப்போது அழ ஆரம்பித்த என் அம்மா இன்று மாலை நான் வீட்டை விட்டு புறப்படும்வரை அழுதுகொண்டிருக்கிறது.

அவர் உயிர் பிரியும் போது கலங்கியக் கண்களோடு அங்கே இருந்தது அவரது மருமகளைத் தவிர நான், விட்டு, என் அம்மாயி, அம்மா, கிஷோர், கீர்த்தனா.

சதா எங்கள் அம்மா அப்பாவை மண்வாரித் தூற்றி சபித்துக் கொண்டும், சாபத்தை வாங்கிக் கொண்டும் இருந்த மாவை, இன்னும் சொல்லப்போனால் சிறு பிராயத்தில் எங்கள் எதிரியாகவே நாங்கள் பாவித்த மாமாவோடு எப்போது இப்படி ஒரு ஐக்கியம் வந்தது?

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. எங்கள் தாத்தா இறந்தபோது அவருக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் எங்கள் மாமாதான் கொள்ளி வைத்தார். அவருக்கு நான் கொள்ளி வைக்க முடியாது.ஏனெனில் நான் என் அம்மாவின் மூத்தாள் பெற்ற பிள்ளை. எங்கள் அம்மாவிடம் என்னை விட்டுவிட்டு அவர் கைக்குழந்தையாய் இருந்த போதே போய்விட்டாராம்.

கொள்ளி வைத்ததும் , கொள்ளிவைத்த தனக்குதான் சொத்து வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரமித்துவிட்டார். அதனால்தான் அவருக்கும் அங்கள் வீட்டிற்கும் சண்டை.

ஒரு வழியாய் பஞ்சாயத்து வைத்து பிரச்சினை தீர்ந்த பொழுது சொத்துக்களை எங்கள் அப்பா பெயரில் எழுதி வைத்துவிட்டது எங்கள் அம்மாயி.

ஒரு வாரம் சர்வேயர், அவர் இவர் என்று முகாமிட்டு காட்டையும் வீட்டையும் பிரித்து பட்டா செய்து கொடுத்துவிட்டு சென்று விட்டனர். அது ஒரு கூட்டுப் பட்டா. அன்று முதல் மாமா கோபத்தோடு ஒதுங்கிவிட்டார். சண்டைக் காட்சிகள் ஒரு முடிவுக்கு வந்தன.

பட்டா சரியாக உள்ளதா என்று பார்த்த்போதுதான் அப்பாவிற்கு மாமாவைவிட 40 செண்ட் காடு அதிகமாகப் பிரிந்திருப்பதைக் கண்டு பிடிக்கிறார்.

உடனே பட்டாவை எடுத்துக் கொண்டு மாமா வீட்டிற்குப் போகிறார். மாமா பேசவே இல்லை. “ வாங்கண்ணா” என்று அத்தை மட்டுமே அழைத்து உட்கார வைக்கிறார்.

“இல்லம்மா, பிரிச்சப்ப எனக்கு நாத மணிய விட 40 செண்ட் கூட ஒதுங்கிடுச்சு. அவர்ட்ட சொல்லி என்றைக்கு வசதிப் படும்னு கேளு. 20 செண்ட்டை எழுதிக் கொடுத்திடறேன்.”

சொன்னமாதிரியே எழுதிக் கொடுத்தார். அன்று இணைந்தார்கள். அதன் பிறகுஅவரது மரணம் வரைக்கும் நல்ல மைத்துனராக , நண்பனாக அப்பாவோடு வாழ்ந்தார்.

அதன் பிறகு நேற்றுவரை எங்களது தாய் மாமாவாய் மூழுதாய் செய்து தீர்த்திருக்கிறார்.

முழுச் சுய நிணைவோடு இல்லாத எங்கள் அப்பாவை அவர் சகித்துத் தாங்கிய அந்தப் பெருந்தன்மைக்கே நானும் என் குடும்பமும் அவருக்கு கடமைப் பட்டிருக்கிறோம். பெரிய சோகம் என்னவெனில் மாமா இறந்து போனது அவருக்கு முழுதுமாய் பிடிபட வில்லை.

“அப்பா நேரா நேரத்துக்கு மாத்திரை சாப்பிடனும். மாமாவப் பார்த்தீங்கள்ள”

“அவரு சளிய கவனிக்கலடா. நாந்தான் சளி வந்தா சிந்தீடறேனே”

இதுதான் எங்கள் அப்பா.

அவரு சளிய கவனிக்கலடா என்கிற போது இருந்த அழுத்தம் அடுத்த வரியிலேயே காணாமல் போய்விடுகிறது.

நல்ல சுய நினைவு இருந்த ஒரு புள்ளியில்

“மாமாவ எரிச்சிடாதீங்கடா. குழியில வச்சுடுங்க. நான் போனப்புறம் அவரோட பக்கத்துல வச்சுடுங்க.”

சுடுகாடு போனோம். புதைத்தோம்.

வழக்கம் போல் சுடுகாடு தர்பார் தொடங்கியது.

முன்பெல்லாம் தப்படித்த தோழர்களும், சலவைத் தோழர்களும், துப்புறவுத் தொழிலாளித் தோழர்களும், முடிவெட்டும் தோழரும் அந்த சபைனரின் காலில் விழுது ஊதியத்தினைப் பெறுவது வழக்கம்.

அந்தச் சபையில் 16 வயது பையனும் இருப்பான். அவனை உள்கொண்ட சபையின் காலில் விழுந்து வணங்குபவர்களில் 65 வயதுக்காரரும் இருப்பார்.

இப்போது நிறைய மாறியிருந்தது.

சபையினரின் கால்களில் விழத் தேவை இருக்கவில்லை. கெஞ்சி கூலியை உயர்த்திக் கேட்கத் தேவை இருக்க வில்லை. சபையினரிடம் இருந்து மரியாதைக் குறைச்சலான வார்த்தைகள் இல்லை.

ஒவ்வொருவரும் அழைக்கப்பட்ட போது துண்டேந்தி ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

அடுத்த நாள் காலை அப்பா மாமா வீடு போய்விட்டார்.

“ஏம்மா பத்மா, நாதமணி வந்தாச்சா. எங்க அவரு?”

படு இயல்பாய் கேட்டிருக்கிறார்.

இவரது நிலைக்காகவும் சேர்த்து அழுதுகொண்டே பத்மா அப்பாவைக் கொண்டு வந்து விட்டது.

நான்கு விஷயங்களுக்காக நான் அழுகிறேன்,

1) மாமாவின் மரணம்

2)அப்பாவின் நிலை

3)குழந்தைத் தொழிலாளிகள் இல்லாத பூமிக்கான கனவோடு உழைக்கும் நம் கண்முன்னே சுடுகாட்டில் பள்ளிச் சீருடையோடு வேட்டி விரித்த சிறுவன்

4) நாள் முழுக்க உழைத்த பின்பு அதற்கான ஊதியத்தை துண்டேந்தி வாங்க வேண்டிய அவலம்


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...