லேபில்

Tuesday, February 23, 2010

பசுஞ்சாணிப் பச்சை


மனைவிக்கு
கிளிப்பச்சை

மகனுக்கு
ஆலிவ் பச்சை

மகளுக்கு
பாசிப் பச்சை

எனக்கென்னவோ
குதிக்காலிட்டு குந்தி
இடக்கை தரையூன்றி
துணித்திரி அடைத்த
ஓட்டைத் தவளையிலிருந்து
கரித்துணியில் நனைத்து

சுக்கான் தரைக்கு
அம்மா தீத்திய
பசுஞ்சாணிப் பச்சைத்தான்.

பொம்மைகள்



கூவிகூவி
விற்கிறார்கள்

வண்ணம் வண்ணமாய்
சின்னதாய்
பெரிதாய்...

கையிலிருக்கும்
காசுக்கேற்ப வாங்கிச்செல்கின்றனர்
சாமிப் பொம்மைகளை.

Thursday, February 18, 2010

எப்படியும் சொல்லலாம்...



ஐஸ்க்ரீம் கேட்கும்
மகனிடம் சொல்லலாம்
“வேண்டாம்
டான்சில் வரும்”

பைவ் ஸ்டார் கேட்கும்
மகளிடம் சொல்லலாம்
“வேண்டாம்
பல்லில் சொத்தை விழும்”

இருவரும்
கொஞ்சம் இறங்கி வந்து
வெங்காய பஜ்ஜியில்
நின்றாலும் சொல்லலாம்
“வேண்டாம்
கொலஸ்ட்ரால் வரும்”

இப்படி
எப்படியும் சொல்லலாம்
கையில்
காசில்லையென்பதை.

நன்றி ..புதிய காற்று & கீற்று.காம்

2023 http://www.eraaedwin.com/search/label/2023