கல்வி குறித்து கவலைப் படுகிற கல்வித்துறை அதிகாரிகளைப் பார்ப்பது என்பது அரிதாய்ப்போன ஒன்றாகிவிட்டது. தேர்ச்சி விழுக்காட்டைப் பற்றிய அக்கறையும், அது நோக்கிய பயணமுமே ஏறத்தாழ அவர்களது இன்றைய செயல்திட்டமாய் மாறிப் போய் இருக்கிறது.
ஏறத்தாழ எல்லாக் கல்வித்துறை அதிகாரிகளுமே பல நேரங்களில்
பின்னிரவு வரைக்கும் உழைக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். பள்ளி பள்ளியாக பம்பரமாய்
சுற்ருகிறார்கள். தலைமை ஆசிரியர்களை, ஆசிரியர்களை அன்பாய், கடுமையாய் என்று எப்படியோ
ஒரு வகையில் முடுக்கிவிட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.
ஆனால் பெரும்பான்மையோரின் இலக்கு தேர்ச்சி விழுக்காட்டில்
தமது மாவட்டத்தை எப்படியேனும் மாநிலத்தில் முதல் பத்து இடங்களுக்குள் கொண்டு வந்துவிட
வேண்டுமென்பதாகத்தான் இருக்கிறது. முதல் பத்து இடங்களுக்குள் வந்து விட்டால் அடுத்த
ஆண்டு எப்படியேனும் முதல் ஐந்து இடங்களுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதாகிப்
போகிறது அவர்களது கனவும் அதுநோக்கிய அவர்களது உழைப்பும்.
இன்னும் சில அதிகாரிகள் மாநிலத்தில் முதல் மதிப்பெண்களை
குறிவைத்து விரிகிறார்கள். சான்றோனாக்குவது, மனிதனாக்குவது என்பதையெல்லாம்கூட விடுவோம்,
குறைந்த பட்சம் கல்விமானாக்குவது என்பதுகூட இவர்களது செயல்திட்டத்தில் இல்லை. மதிப்பெண்களைப்
அள்ளிக் குவிக்கிற எந்திரங்களாக மாணவர்களை மாற்றுவதும், நல்ல என்றுகூட சொல்ல இயலாது,
நூறு விழுக்காடு தேர்ச்சியை அறுவடை செய்கிற தொழிற்சாலைகளாக பள்ளிகளையும் இவர்களை அறியாமலேயே
இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய சூழலில் பன்னிரெண்டு ஆண்டுகள் பள்ளியில்
வாழ்ந்து விட்டு வெளியேறும் மாணவன் ஒரு நல்ல மனிதனாக, வாழ்க்கையை சுயமாக எதிர்கொள்கிறவனாக,
சான்றோனாக மாறியிருக்க வேண்டும் , அதற்கான கருவியாக கல்வி இருக்க வேண்டும் என்று கருதுகிற
அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள்.
அதிலொருவர் அதுநோக்கிய தனது கனவுப் பயணத்திற்கான
வாகனமாக தனது வலையை பயன்படுத்துகிறார்.
இன்னும் சொல்லப்போனால் தன்கீழ் பணியாற்றக் கூடிய,
அவரது மொழியில் சரியாகச் சொல்வதெனில், தன்னோடு பணியாற்றக்கூடிய ஆசிரியர்களை, மாணவர்களைப்
படிப்பிக்க வேண்டுமெனில் முதலில் தாம் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதை உணரச் செய்தவர்.
அதிலுங்குறிப்பாக தமிழாசிரியர்கள் மண் குறித்து,
மொழி குறித்து, கலாச்சாரத் தொன்மம் குறித்து அக்கறையோடு இருப்பது அவசியம் என்பதையும்
உணரச் செய்திருக்கிறார்.
இதற்கு இணையத்தின் பயன்பாடு இன்றியமையாதது என்பதை
உணரச் செய்திருக்கிறார்.
விளைவு, இன்று இவரது மாவட்டத்தில் பணியாற்றக் கூடிய
தொண்ணூறு விழுக்காடு தமிழாசிரியர்கள் இணையம் பயன் படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள்.
அதில் பெரும்பான்மையோர் சொந்தமாக வலைகளை வைத்திருக்கிறார்கள்.
வலைகளை உருவாக்குவது எப்படி?, வலைகளைக் கொண்டு எது
செய்யலாம் என்பவற்றிற்காக பயிற்சிப் பட்டறைகளை தேர்ந்த வல்லுனர்களைக் கொண்டு நடத்துகிறார்.
ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அவற்றில் பங்கேற்கிறார்கள்.
அவர் புதுக்கோட்டை மாவட்டத்தின் தற்போதைய முதன்மைக்
கல்வி அலுவலர் நா. அருள் முருகன். அவரது வலை ,” நடை நமது”
வரலாறு படிக்காதவன் வரலாறு படைக்க முடியாது என்பார்கள்.
அதை இவர் நன்கு உணர்ந்திருக்கிறார். அதனால்தான் நமது தொன்மங்களையும் விழுமியங்களையும்
கசியக் கசியப் பேசுகிறது இவரது வலை.
அஜந்தாவா?, எல்லோராவா?, எது இந்தியாவின் தொன்மையான
குகை ஓவியம் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது கடந்தும் தொன்மையான குகை ஓவியங்கள்
நமது தமிழ் மண்ணில், திருமயத்தில் உள்ள பாறைகளில் , குகைகளில் இருப்பதை தகுந்த ஆதாரங்களோடு
பேசுகிறது இவரது வலை.
ஓவியம் என்கிற கலை வடிவம் கண்டு பிடிக்கப் படுவதற்கு
முன்னமே எழுதப் பட்ட சித்திர வடிவங்களை ஆதாரத்தோடு நமது நடை பேசுகிறது. இந்த ஓவியங்களின்
வயது ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகள் என்பதை அறியும் போது இந்த வலையை, அதன் உரிமையாளரை,
அவரது மற்றும் அவரது நண்பர்களின் உழைப்பை கையெடுத்து கும்பிடத் தோன்றுகிறது.
சமய தத்துவ ஆராய்ச்சியிலும் விவாதங்களிலும் நீலகேசி
எவ்வாறு பங்கெடுத்தது என்கிற விவரங்களை வாசிக்கிற மாதிரி பேசுகிறது ”நீலகேசி உரைநூல்
மொழிபெயர்ப்பும் விடுபடல்களும்” என்கிற ஒரு பதிவு.
“நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இது ஐம்பெறு
காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும் பௌத்த காப்பியத்திற்கு எதிராக எழுந்த காப்பியம்
என்பதை மட்டும் வைத்துக் கொண்டு மிகச் சுருக்கமாகவும் மேலோட்டமாகவும் இலக்கிய வரலாறுகள்
சொல்லிப் போவது” தவறு என்பதை மிக வன்மைமையாக தக்க சான்றுகளோடு நிறுவுகிறது ” நமது நடை”
இலக்கணம் என்றாலே பின்னங்கால் பிடரியில் இடிக்க
ஓடும் இன்றைய சூழலில் தி.வே. கோபாலையரின் இலக்கணப்
பதிப்புகள் குறித்து ஒரு பதிவு பேசுகிறது.
அடிப்படையில்
இவர் ஒரு கவிஞர் என்பதால் கவிதைகளுக்கும் இவரது வலையில் பஞ்சம் இல்லை.
இப்படி சொல்லலாம்,
ஏராளமான வலைகளையும் வலைஞர்களையும் உருவாக்கிய ஒரு
விதைவலை நடை நமது. அவசியம் போய்ப் பாருங்கள்…