Wednesday, December 18, 2013

12 நடை நமது


கல்வி குறித்து கவலைப் படுகிற கல்வித்துறை அதிகாரிகளைப் பார்ப்பது என்பது அரிதாய்ப்போன ஒன்றாகிவிட்டது. தேர்ச்சி விழுக்காட்டைப் பற்றிய அக்கறையும், அது நோக்கிய பயணமுமே ஏறத்தாழ அவர்களது இன்றைய செயல்திட்டமாய் மாறிப் போய் இருக்கிறது.

ஏறத்தாழ எல்லாக் கல்வித்துறை அதிகாரிகளுமே பல நேரங்களில் பின்னிரவு வரைக்கும் உழைக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். பள்ளி பள்ளியாக பம்பரமாய் சுற்ருகிறார்கள். தலைமை ஆசிரியர்களை, ஆசிரியர்களை அன்பாய், கடுமையாய் என்று எப்படியோ ஒரு வகையில் முடுக்கிவிட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

ஆனால் பெரும்பான்மையோரின் இலக்கு தேர்ச்சி விழுக்காட்டில் தமது மாவட்டத்தை எப்படியேனும் மாநிலத்தில் முதல் பத்து இடங்களுக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென்பதாகத்தான் இருக்கிறது. முதல் பத்து இடங்களுக்குள் வந்து விட்டால் அடுத்த ஆண்டு எப்படியேனும் முதல் ஐந்து இடங்களுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதாகிப் போகிறது அவர்களது கனவும் அதுநோக்கிய அவர்களது உழைப்பும்.

இன்னும் சில அதிகாரிகள் மாநிலத்தில் முதல் மதிப்பெண்களை குறிவைத்து விரிகிறார்கள். சான்றோனாக்குவது, மனிதனாக்குவது என்பதையெல்லாம்கூட விடுவோம், குறைந்த பட்சம் கல்விமானாக்குவது என்பதுகூட இவர்களது செயல்திட்டத்தில் இல்லை. மதிப்பெண்களைப் அள்ளிக் குவிக்கிற எந்திரங்களாக மாணவர்களை மாற்றுவதும், நல்ல என்றுகூட சொல்ல இயலாது, நூறு விழுக்காடு தேர்ச்சியை அறுவடை செய்கிற தொழிற்சாலைகளாக பள்ளிகளையும் இவர்களை அறியாமலேயே இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் பன்னிரெண்டு ஆண்டுகள் பள்ளியில் வாழ்ந்து விட்டு வெளியேறும் மாணவன் ஒரு நல்ல மனிதனாக, வாழ்க்கையை சுயமாக எதிர்கொள்கிறவனாக, சான்றோனாக மாறியிருக்க வேண்டும் , அதற்கான கருவியாக கல்வி இருக்க வேண்டும் என்று கருதுகிற அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள்.

அதிலொருவர் அதுநோக்கிய தனது கனவுப் பயணத்திற்கான வாகனமாக தனது வலையை பயன்படுத்துகிறார்.

இன்னும் சொல்லப்போனால் தன்கீழ் பணியாற்றக் கூடிய, அவரது மொழியில் சரியாகச் சொல்வதெனில், தன்னோடு பணியாற்றக்கூடிய ஆசிரியர்களை, மாணவர்களைப் படிப்பிக்க வேண்டுமெனில் முதலில் தாம் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதை உணரச் செய்தவர். அதிலுங்குறிப்பாக தமிழாசிரியர்கள்  மண் குறித்து, மொழி குறித்து, கலாச்சாரத் தொன்மம் குறித்து அக்கறையோடு இருப்பது அவசியம் என்பதையும் உணரச் செய்திருக்கிறார்.

இதற்கு இணையத்தின் பயன்பாடு இன்றியமையாதது என்பதை உணரச் செய்திருக்கிறார்.

விளைவு, இன்று இவரது மாவட்டத்தில் பணியாற்றக் கூடிய தொண்ணூறு விழுக்காடு தமிழாசிரியர்கள் இணையம் பயன் படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். அதில் பெரும்பான்மையோர் சொந்தமாக வலைகளை வைத்திருக்கிறார்கள்.

வலைகளை உருவாக்குவது எப்படி?, வலைகளைக் கொண்டு எது செய்யலாம் என்பவற்றிற்காக பயிற்சிப் பட்டறைகளை தேர்ந்த வல்லுனர்களைக் கொண்டு நடத்துகிறார். ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அவற்றில் பங்கேற்கிறார்கள்.

அவர் புதுக்கோட்டை மாவட்டத்தின் தற்போதைய முதன்மைக் கல்வி அலுவலர் நா. அருள் முருகன். அவரது வலை ,” நடை நமது”

வரலாறு படிக்காதவன் வரலாறு படைக்க முடியாது என்பார்கள். அதை இவர் நன்கு உணர்ந்திருக்கிறார். அதனால்தான் நமது தொன்மங்களையும் விழுமியங்களையும் கசியக் கசியப் பேசுகிறது இவரது வலை.

அஜந்தாவா?, எல்லோராவா?, எது இந்தியாவின் தொன்மையான குகை ஓவியம் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது கடந்தும் தொன்மையான குகை ஓவியங்கள் நமது தமிழ் மண்ணில், திருமயத்தில் உள்ள பாறைகளில் , குகைகளில் இருப்பதை தகுந்த ஆதாரங்களோடு பேசுகிறது இவரது வலை.

ஓவியம் என்கிற கலை வடிவம் கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னமே எழுதப் பட்ட சித்திர வடிவங்களை ஆதாரத்தோடு நமது நடை பேசுகிறது. இந்த ஓவியங்களின் வயது ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகள் என்பதை அறியும் போது இந்த வலையை, அதன் உரிமையாளரை, அவரது மற்றும் அவரது நண்பர்களின் உழைப்பை கையெடுத்து கும்பிடத் தோன்றுகிறது.

சமய தத்துவ ஆராய்ச்சியிலும் விவாதங்களிலும் நீலகேசி எவ்வாறு பங்கெடுத்தது என்கிற விவரங்களை வாசிக்கிற மாதிரி பேசுகிறது ”நீலகேசி உரைநூல் மொழிபெயர்ப்பும் விடுபடல்களும்” என்கிற ஒரு பதிவு.

“நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இது ஐம்பெறு காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும் பௌத்த காப்பியத்திற்கு எதிராக எழுந்த காப்பியம் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு மிகச் சுருக்கமாகவும் மேலோட்டமாகவும் இலக்கிய வரலாறுகள் சொல்லிப் போவது” தவறு என்பதை மிக வன்மைமையாக தக்க சான்றுகளோடு நிறுவுகிறது ” நமது நடை”

இலக்கணம் என்றாலே பின்னங்கால் பிடரியில் இடிக்க ஓடும் இன்றைய சூழலில்  தி.வே. கோபாலையரின் இலக்கணப் பதிப்புகள் குறித்து ஒரு பதிவு பேசுகிறது.

அடிப்படையில் இவர் ஒரு கவிஞர் என்பதால் கவிதைகளுக்கும் இவரது வலையில் பஞ்சம் இல்லை.

இப்படி சொல்லலாம்,

ஏராளமான வலைகளையும் வலைஞர்களையும் உருவாக்கிய ஒரு விதைவலை நடை நமது. அவசியம் போய்ப் பாருங்கள்…

நன்றி : “புதிய தரிசனம்” 

20 comments:

 1. வாழ்த்துக்கள்.. நல்ல வலை அறிமுகம் செய்தமைக்கு....!

  ReplyDelete
 2. சிறப்பாக சொல்லி உள்ளீர்கள் ஐயா... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன்

   Delete
 3. எங்களின் கல்வி அதிகாரி அவர் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ளும் தகுதி வாய்ந்தவர்.மனித நேயமிக்கவர் என்பதையும் சேர்த்து கொள்ளலாம்.நாங்கள் அவரால் வளர்ச்சியடைந்தோம் என்பது மறுக்க முடியாத ஒன்று.தமிழ் வாழும் வாழ்விக்கும்.நன்றி

  ReplyDelete
 4. தோழரே வணக்கம் நலமா.
  மாணவன் ஒரு நல்ல மனிதனாக, வாழ்க்கையை சுயமாக எதிர்கொள்கிறவனாக, சான்றோனாக மாறியிருக்க வேண்டும் , அதற்கான கருவியாக கல்வி இருக்க வேண்டும் என்று கருதுகிற அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள்.
  இவர்களுள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முதலாமவராக இருக்கிறார்.
  உண்மையிலேயே பாராட்டப்பெற வேண்டியவர் இவர்.
  இவரின் பணி தொடர வாழ்த்துவோம்.
  அரமையான பதிவு
  நன்றி தோழரே

  ReplyDelete
  Replies
  1. உங்களோடு சேர்ந்து நானும் எனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி தோழர்

   Delete
 5. நல்ல வலை ...
  அருமையான அறிமுகம்..

  ReplyDelete
 6. நா அருள்முருகனைப் பற்றி முத்துநிலவனும் நிறைய எழுதியிருக்கிறார். பொதுவாகவே கல்வித்துறை அதிகாரிகளுக்கு நிர்வாகப்பணிகளுக்கே நேரம் போதுவதில்லை. எனவே வள்ளுவன் கூறிய 'உயர்வுள்ளல்' எங்கிருந்து வரும்? அருள்முருகன் தனது குடும்பத்திற்கு ஒதுக்கவேண்டிய நேரத்தைக் கல்விச்சிந்தனைக்கு ஒதுக்குகிறார் என்றுதான் புரிந்துகொள்ளமுடிகிறது. இத்தகையோரின் பணி நமது பாராட்டுக்குரியது!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தோழர். கொணாட வேண்டும் அவரை. மிக்க நன்றி தோழர்

   Delete
 7. “முன்னைப் பழமைக்கும் மூத்த பழமையாய்,
  பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றித்தாய்“-விளங்கும் தமிழில் முனைவர் பட்டம் பெற்றதாலோ என்னவோ, முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் பழமை பற்றிய ஆய்வையும் தொடர்கிறார், அதே நேரம் நவீன தொழில் நுட்பங்களைத் தமிழில் பயன்படுத்துவதையும் அறிமுகப்படுத்துகிறார். இது மிகவும் அரிய செயல். காலத்தினாற் செய்த பதிவு ஞாலத்தின் பெரிது. நன்றி

  ReplyDelete
  Replies
  1. அருகில் உங்களைப் போன்ற அண்ணன்கள் இருக்கும் போது அவர் இன்னமும் செய்வார். நன்றிங்க அண்ணா

   Delete
 8. புதியதொரு தள அறிமுகத்திற்கு நன்றி எட்வின்!

  ReplyDelete
 9. வணக்கம் ஐயா
  புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வலைப்பூவை பற்றியும் அவரது பணிகளையும் மிகச் சிறப்பாக அலசியிருக்கும், உண்மையை உரக்க சொல்லியிருக்கும் காலசுவட்டிற்கு நன்றிகள் பல. பகிர்ந்த உங்களுக்கும் எனது நன்றிகள். மற்ற அலுவர்கள் போல் அல்லாமல் வேறுபட்டு செயல்படும் ஐயா அவர்களின் கீழ் பணி புரிவதை பெருமையாக எண்ணுகிறேன். ஐயா தான் எங்களுக்கெல்லாம் உந்துதல். இன்னும் பல படைப்புகளை வலைத்தளத்தில் தர வேண்டும் எனும் ஆசையை தெரிவிப்பதோடு அவரது பணி சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 10. நல்ல அறிமுகம் ஐயா.

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...