Sunday, July 31, 2016

முன்னாள் முதல்வர் பேருந்தில் பயணிக்கிறார்

கேரள பூமி மீதான பொறாமை நமக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.
கேரள பூமியின் முன்னால் முதல்வர் உம்மன்சாண்டி அவர்கள் எழுபத்தி ஐந்து கிலோமீட்டர் தூரத்தை ஒரு அரசுப் பேருந்தில் பயணித்திருக்கிறார்.
ரயிலை விட்டு விட்டதாகவும் எனவே பேருந்தில் பயணிப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அவரை மிகக் கடுமையாக எதிர்க்கும் இடதுசாரி அமைச் சார்ந்தவனான எனக்கே அவரது இந்த நடவடிக்கையில் எந்த விதமான போலித் தனத்தையும் காண முடியவில்லை.
“சேட்டா” என்று அந்தப் பேருந்தின் நடத்துனர் அழைத்திருக்கிறார். (சேட்டா’ என்றால் என்ன?). அப்படி அவரால் அழைக்க முடிந்திருக்கிறது.
முன்னால் முதல்வருக்கும் அவரது மெய்க்காவலருக்கும் அந்த நடத்துனர் பயணச்சீட்டை கிழித்துக் கொடுத்திருக்கிறார். உம்மன் தனது அடையாள அட்டையை எடுத்துக் காட்டியிருக்கிறார்.
எல்லோருடனும் உரையாடியிருக்கிறார்.
தன்னால் நீண்ட காலமாக பேருந்தில் பயணிக்க முடியவில்லை என்றிருக்கிறார். ரயிலைத் தவறவிட்டதன் மூலம் தனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
1) முன்னால் முதல்வர் பேருந்தில் பயணிக்கிறார்
2)அவரை நடத்துனர் சேட்டா என்கிறார்
3) முன்னால் முதல்வருக்கே நடத்துனர் பயணாச்சீட்டைக் கிழிக்கிறார்.
4) தனக்கான அடையாள அட்டையை ஒரு நடத்துனரிடம் எடுத்துக் காட்டுகிறார்
5) சக பயணிகளோடு ஒரு சக பயணியாகவே உறவாடியிருக்கிறார்
இதை எல்லாம் படிக்கும்பொழுது பொறாமை ஏற்படத்தான் செய்கிறது.
உடனே நம் பூமியில் இதுவெல்லாம் சாத்தியமா? இங்கும்தான் இருக்கிறார்களே என்றெல்லாம் தோன்றவில்லை.
இங்கு கலைஞர் அவர்களோ, மாண்பமை முதல்வரோ, ஏன், இன்று காமராசர் உயிரோடு இன்றிருந்தால் அவரோகூட இது சாத்தியம் இல்லை.
அங்கு உம்மன் அல்ல, அச்சுதானந்தன் மட்டுமல்ல யார் முதல்வராக வந்தாலும் இப்படித்தான் இருக்க முடியும்.
நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.
அந்த எளிமைக்கு அவர்கள் மட்டும் காரணம் அல்ல. அங்குள்ள அரசியல் கட்டுமானம் அப்படி. ஒரு முன்னால் முதல்வர் பேருந்தில் தம்மோடு பயணிப்பது சற்ரு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தாலும் அது கடந்து அது அந்த மக்களை ஏதும் செய்யவில்லை.
ஆனால் நமது தலைவர்கள் அவர்களே விரும்பினாலும் ( மாட்டார்கள் என்பது வேறு) அதை செய்ய இயலாது. இங்குள்ள அரசியல் கட்டமைப்பும் பொது மக்களின் இயல்பும் அப்படி.
அப்படி ஒரு எளிய மற்றும் இயல்பான சூழல் தமிழ் பூமியிலும் வர வேண்டுமெனில் பொது ஜனங்களின் இயல்பையும் அரசியல் கட்டமைப்பையும் மாற்ற வேண்டும். அதற்கு நிறைய உழைக்க வேண்டும்.
எது எப்படி இருப்பினும் உம்மன் அவர்களுக்கு என் முத்தம்

அப்படி ஒரு நிலமை வராதா?

பொதுவாகவே அறமாக இருப்பினும் இலக்கணமாக இருப்பினும் குழந்தகளுக்கு சொல்லிக் கொடுக்கும் போதும் வினாத் தாள்களிலும், முதலாளிகளை புத்திக் கூர்மையானவர்களாகவும், யோக்கியர்களாகவும் வேலையாட்களை முட்டாள்களாகவும், திருடர்களாகவும் சித்தரிப்பதென்பது வழக்கமாக உள்ளது.
நேற்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய கேள்வித் தாள்களைக் கொண்டு நடத்திக் கொண்டிருந்த போது,
"The servant was faithless to his master. He stole his watch"
என்றிருந்தது. நானதை மாற்றி,
“ The master was faithless to his servant. He stole his sweat"
என்றெழுதி நடத்தினேன். முடித்து வரும் போது ஒரு குழந்தை என்னைத் தொடர்ந்து View blogவந்தாள்,
“ என்ன சாமி?”
“ ரொம்ப தேங்க்ஸ் சார்”
“ எதுக்குடா?”
” கொஸ்டீன மாத்தி எழுதி நடத்துனதுக்கு”
“ என்னடாம்மா”
“ தெரியும் சார். இதே கொஸ்டீன பக்கத்து வீட்டு அக்கா எனக்கு நடத்துனாங்க சார்”
அவள் கண்களில் ஈரம் படர்ந்திருந்தது. வினாவை மாத்தினதுக்கே இப்படி நெகிழ்கிறாளே இந்தக் குழந்தை. சமூகமே மாறினால் எப்படி இருக்கும்?
அப்படி ஒரு நிலமை வராதா?

Friday, July 29, 2016

கொடுப்பின இருந்திருக்கு நேத்தெனக்கு.

நேற்றும் இன்றும் ஏழாம் வகுப்பு குழந்தைகளிடம் ஆசைதீர வறுபட்டேன்.
பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு இடைத்தேர்வு நடந்துகொண்டிருக்கிறது. தேர்வறைகளை பார்வையிடுவதற்காக சென்று கொண்டிருந்தேன்.
காலையில் தேர்வினை முடித்திருந்த ஏழாம் வகுப்பு குழந்தைகள் மரத்தடியில் அமர்ந்து படிக்கிறேன் என்ற பேரில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
என்னைப் பார்த்ததும் யுவஸ்ரீ கத்தினாள்,
“சார் இங்கன வாங்களேன்”
கிட்டக்க சென்றவன் கேட்டேன்,
“ஏண்டி பாப்பா?”
“குட் ஆஃப்டெர் நூன்”
“இதுக்குத்தான் கூப்டீங்களா பெரிய மனுஷி” என்றவாறே அவளது தலையில் ஒவ்வொரு வார்த்தைக்கும் செல்லமாக ஒரு கொட்டு என்று கொட்டியபடியே “குட் ஆஃப்டெர் நூன்:” என்றேன்.
தலையை பிடித்துக் கொண்டே அதைவிட செல்லமாக, “ ஸ்... வலிக்குதே” என்றாள்
”வலிக்காதே, வேணா மகாவக் கொட்டிக் கேட்போமா?”
“ வேணாம், ஒங்களையே கொட்டலாமா?”
“ சரிங்க பெரிசு, கொட்டுங்க”
“ “கொட்டுன்னுட்டு மரமாட்டமா நின்னா எப்படி கொட்டுவேன், குனிங்க மொதல்ல”
குனிந்து வாங்கினேன்.
கொடுப்பின இருந்திருக்கு நேத்தெனக்கு.
( இன்று நடந்ததை நாளை சொல்கிறேன்)

ரசனை 25

“பணம் வாடகைக்கு கிடைக்குமா” என்று போகிற போக்கில் எழுதிப் போகிறார் சத்ய ப்ரியா.
எங்கேனும் கிடைக்குமெனில் எனக்கும் சொல்லுங்கள்.
எப்படி நச்சென்று எழுதுகிறார்கள். வாழ்த்துக்கள் சத்யா

இப்படி ஒரு ஞானத் திமிரோடு



இவரோடு எந்தவிதமான பரிச்சயமும் எனக்கு இல்லை. மேடையிலோ அல்லது படைப்புகளிலோ ஒருபோதும் இவரை எடுத்தாண்டதில்லை. அது ஏனென்றும் விளங்கவில்லை.
இளங்கோ கிருஷ்ணன் (Ilango Krishnan) எழுதியிருந்த அஞ்சலி என்னை உலுக்கிப் போட்டது. எந்தவிதமான பம்மாத்துமற்ற நேர்மையான அஞ்சலி அது.
ஆத்மநாம் வழியாக தன்னுள் வந்த ஞானக்கூத்தன் ஆத்மநாமிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டிருந்ததை நேர்மையாக பதிந்திருந்தார்.
எனக்கு சொல்லத் தெரியாமல் இருந்த ஒரு விஷயத்தை இளங்கோ போகிற போக்கில் போட்டிருந்தார்.
"ஞானக்கூத்தன் கவிதைகளே சிரிக்குமென்கிறார். அய்யோ அய்யோ எத்தனை உண்மை.
"எங்கெங்கும் போவேன் என்ன
வேண்டுமென்றாலும் பார்ப்பேன்
எங்கெங்கும் போவேன் யாரை
வேண்டுமென்றாலும் பார்ப்பேன்
காலரைப் பிடித்துக் கொண்டு
எங்கெங்கு போனாய் என்று
கேட்குமா நியாயம் என்னை"
என்பார் ஞானக்கூத்தன். இப்படி ஒரு ஞானத் திமிரோடு போன ஒரு மனுஷனை எப்படி நியாயம் கேட்க முடியும் நம்மால்.
"இருபதுக்கும் குறைவான ஆட்கள்
இரண்டாவது முறையாக மைலாப்பூரில்"
என்பதாக தோழர் மணோன்மணி ( Manonmani Pudhuezuthu) எழுதியிருந்தார்.
விம்மிக்கொண்டு வந்தது.
ஆழத்தையும் விஸ்தீரணத்தையும் என் ஞானம் ஸ்பரிசிப்பதற்குள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும்
இன்னும் பத்துபேர் கூட வருவார்களல்லவா

Thursday, July 28, 2016

கவிதை 54

வரக்கூடிய வாய்ப்பு 
எல்லோருக்கும் இருக்குமொரு நாளில்
போவதென்பது வரம்

போதுமான நிதியை ...

அடிப்படை அறிவியல் துறைகளுக்கு இந்திய அரசு போதுமான நிதி ஒதுக்குவதில்லை. எனவே ஆராய்ச்சி படிப்புகளின் தரத்தையும் வளர்ச்சியையும் மேம்படுத்த தனியார் கல்வி நிறுவனக்கள் முதலீடு செய்ய வரவேண்டும் என்றும் மாண்பமை கலாம் அவர்கள் ஷில்லாங் ஐ.ஐ.எம் மில் பேசியதாக 25.7.14 அன்றைய ஜனசக்தி சொல்கிறது.
போதுமான நிதியை ஒதுக்கச் சொல்லி போராடுங்கள். அது உங்கள் உரிமை என்று மாணவர்களைப் பார்த்து சொல்லியிருக்க வேண்டும்.
அல்லது நானும் வருகிறேன் வாருங்கள் போராடலாம் என்று பொதுமக்களைப் பார்த்து சொல்லியிருக்க வேண்டும்.
அல்லது குறைந்த பட்சம் போதுமான நிதியை ஒதுக்குங்கள் என்றாவது அரசுக்கு அறிவுரை சொல்லியிருக்க வேண்டும்.
எங்க ஊர்ல கட வச்சிருக்கவனெல்லாம் போதுமான அளவு முதலீடு பன்னல நல்ல முதலீடோடு வந்தா ஏகமா சுருட்டலாம் என்பது போல் அல்லவா இருக்கு உங்கள் கோரிக்கை.

Wednesday, July 27, 2016

மாறியிருப்பின் சொல்லுங்கள் மகிழ்வேன்

பொட்டுல்பட்டி அங்கன்வாடியில் படிக்கும் தலித் குழந்தைகள் தண்ணீர் ட்ரம்மில் உள்ள குவளையைப் பயன்படுத்த முடியாதாம். தலித் குழந்தைகள் தட்டேந்தி நிற்க சாதிக் குழந்தைகள் குவளையில் மொண்டு ஊற்ற அதைத்தான் குடிக்க வேண்டுமாம் என்கிற செய்தியை போன வருட அல்லது அதற்கு முந்தைய வருடத்தில் இதே நாளில் வந்த தீக்கதிர் சொல்கிறது. உலகில் எந்த இந்துவிற்கு ஒரு பிரச்சினை என்றாலும் தலையிடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன பி.ஜே.பி யினருக்கு , குறிப்பாக மாண்பமை பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பொட்டுல்பட்டியிலேயே சில பச்சிளம் இந்துக் குழந்தைகள் குடி தண்ணீருக்காக தட்டேந்தி நிற்கும் அவலம் இருக்கிறது.
( மாறியிருப்பின் சொல்லுங்கள். மகிழ்வேன்)

30 நீயும்தான்… நானும்தான்…

ஒருமுறை ‘நீயா நானா’ வில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தைப் பார்த்தேன்.

‘கம்மர் கட்
காட்பரீஸ்
இனிப்பிலும்
வர்க்கபேதம்’

என்று ஒருமுறை தோழர் வல்லம் தாஜுபால் எழுதினார். ‘கம்மர்கட்’ ஏழைக் குழந்தைகளுக்கானது. காட்பரீஸ் என்பது ஒருபோதும் அடையமுடியாத அவர்களது கனவு. ’காட்பரீஸ்’ என்பது பணக்காரக் குழந்தைகளுக்கானது. கம்மர்கட்டை அவர்கள் விரும்பினாலும் அவர்களது பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள். காரணம் கம்மர்கட் அவர்களது தகுதிக்கு உகந்ததாக அவர்கள் நினைக்கவில்லை. மட்டுமல்ல, காட்பரீஸ் சாக்லேட் கம்மர்கட்டைவிட பத்து மடங்கு விலை கொண்டது.

இந்த வர்க்கபேதம் இனிப்போடு மட்டும் ஒதுங்கிவிடவில்லை. கல்வியிலும் இந்த பேதம் இன்றளவும் தொடர்கிறது. இலவசங்களும், மலிவாக கிடைப்பதும் தங்கள் தகுதிக்கு ஒவ்வாதது, ஏழைகள் பயன்படுத்தும் எதையும் தாங்கள் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் இருவருக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும், ஒரே பள்ளியில் ஒரே பெஞ்ச்சில் தங்களது குழந்தைகளும் இல்லாதவர்களின் குழந்தைகளும் அமர்ந்து படித்தால் இருவரும் சமம் என்றாகிவிடும். அது தங்களுக்கு ஆபத்தானது என்பதை வசதி படைத்தவர்கள் உணர்ந்திருந்தனர். தனியார் பள்ளிகளின் பிரமாண்டமான வளர்ச்சிக்கு இதுவும் ஒரு பெருங்காரணம்.

இதன் தோற்றுவாய், வளர்ச்சி, இன்றைய நிலை, அதை எப்படி களைவது என்பவற்றை அலச நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை தோழர்கள் அந்தோணியும் கோபியும். ஆனால் கோபி அவர்கள் என்ன முயன்றும் அவரது முழுமையான கட்டுக்குள் வர மறுத்த அந்த விவாதத்தின் பெரும்பகுதி தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் லாவணியாக மாறியது. இருந்த போதிலும் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் சிரமங்களையும் துயரத்தையும் அந்த விவாதம் வெளிக் கொணரவே செய்தது.

மற்றபடி அரசு பள்ளி என்பது மக்கள் பள்ளி. எனில் தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கும் அதுதான் சொந்தப் பள்ளி என்பதாகத் தொடங்கி அரசுப் பள்ளிகளை காப்பாற்றுவது என்பதே அந்த நிமிடத்துப் பணி என்பதை என்பதை உணர வைத்திருக்க வேண்டிய அன்றைய விவாதம் ஒரு புள்ளியில் யார் சிறந்தவர் என்கிற விவாதமாக மாறிப்போனது. மனது வலிக்க வலிக்க ‘நீயும் இல்லை நானும் இல்லை’ என்று ஒரு கட்டுரை எழுதியதோடு தோழர் அந்தோணியோடு மிக நீண்டு ஒருநாள் இது குறித்து உரையாடினேன்.   

‘நீயும் இல்லை நானும் இல்லை’ என்று எழுதிய என்னை ‘நீயும்தான் நானும்தான்’ என்று எழுத வைத்திருக்கிறது சென்ற ஞாயிறு நீயா நானாவில் ஒளிபரப்பான அதிகமான அளவில் பட்டங்களைப் பெற்றவர்களுக்கும் அதிக அளவில் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் இடையே நடந்த விவாதம். இதில் தான் எதற்காக இந்த விவாதத்தை ஏற்பாடு செய்திருந்தாரோ ஏறத்தாழ அதன் நெருக்கத்திற்கு அதை வழிநடத்தி கொண்டு சென்றார் கோபி.

இந்த விவாதத்தில் கலந்து கொண்ட ஒருவர் இதுவரை 140 பட்டங்களைப் பெற்றிருந்தார். ‘எது எப்படியோ 140 பட்டங்களைப் பெற்றமைக்காக அவரை வாழ்த்துகிறேன்’ என்று கூறி அதற்காக அவருக்கு ஒரு சன்னமான பரிசினையும் வழங்கினார் கோபி. அவரது முகத்திலோ குரலிலோ 140 பட்டங்கள் எந்தவிதமான வியப்பையும் ஏற்படுத்தியிருக்கவில்லை என்றபோதிலும் அவரைப் போல ஒப்புக்காகவேனும் வாழ்த்துமளவிற்கான பெருந்தன்மை என்னிடம் இல்லை.

140 பட்டங்களைப் பெற்றவருக்கு ஏறத்தாழ ஐம்பது வயது இருக்கும். அவர் தனது முதல் பட்டத்தை இருபது அல்லது இருபத்தியோரு வயதில் பெற்றிருக்கக் கூடும். எனில் சற்றேரக் குறைய முப்பது வருடங்களுள் 139 பட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும். எனில், வருடத்திற்கு மூன்றிலிருந்து நான்கு பட்டங்களை அவர் பெற்றிருக்க வேண்டும்.

ஒரு பட்டம் பெறுவதென்றால் அதற்கு குறைந்தபட்சம் பத்து முதல் பதினைந்து பாடங்களாவது இருக்க வேண்டும். ஒரு பட்டத்திற்கு பதினைந்து பாடங்கள் எனக் கொள்வோம். அந்த வருடத்தில் நான்கு பட்டங்களைப் பெற்றிருக்கிறார் எனில் அவர் குறைந்த பட்சம் அறுபது நாட்களை தேர்வறையிலேயே கழித்திருக்க வேண்டும்.

ஒரு பட்டத்திற்கான கோர்சில் சேர்வதற்கு விண்ணப்ப மனு வாங்கி அதை நிறப்புவது அதற்குரிய கட்டணத்திற்கு வரைவோலை எடுப்பது அதை உரிய இடத்தில் சேர்ப்பிப்பது என்கிற வகையில் ஒரு நான்கு நாட்கள் தேவைப்படும் குறைந்த பட்சம். அதன் பிறகு தேவையான நூல்களை தேடி வாங்குவது என்ற வகையில் ஒரு நான்கு நாட்கள் பிடிக்கும். தேர்வுக் கட்டணம் கட்டுவதற்கு ஒருநாள் செலவாகும். இதன் பிறகு நுழைவுச் சீட்டு வாங்குவதற்கு ஒருநாள் பிடிக்கும். தேர்வு முடிவுகள் வந்தவுடன் மதிப்பெண் பட்டியல் வாங்க ஒருநாள் பட்டம் வாங்க ஒரு நாள் என்று இரண்டு நாட்கள் செலவாகும்.

வருடத்திற்கு நான்கு பட்டங்கள் எனில் அதற்கான கால செலவு ஏறத்தாழ கீழ் வருமாறுதான் அமையும்

1)   விண்ணப்பம் பெற்று, சேர்ப்பிப்பது வரை           20 நாட்கள்
2)   வரைவோலை எடுத்து சேர்ப்பிக்க                 20 நாட்கள்
3)   தேவையான நூல்களைத் திரட்டுவதற்கு           20 நாட்கள்
4)   நுழைவுச் சீட்டு பெறும் வகையில்                04 நாட்கள்
5)   தேர்வு நாட்கள்                                   60 நாட்கள்
6)   மதிப்பெண் பட்டியல் வாங்க                      04 நாட்கள்
7)   பட்டங்கள் வாங்க மனு செய்ய                   04 நாட்கள்
8)   பட்டங்கள் வாங்க                                04 நாட்கள்

ஆக, இந்த வகையில் நிர்வாகக் காரணங்களுக்காக மட்டும் அவர் 136 லிருந்து 140 நாட்கள் செலவு செய்திருக்க வேண்டும். இது போக செமினார் என்ற வகையில் பாடத்திற்கு ஒருநாள் என்று கொண்டாலும்கூட ஒரு 60 நாட்கள் செலவாகியிருக்கும். பண்டிகை, திருமணங்கள், இறப்புக்கள் என்ற வகையில் ஒரு 15 நாட்கள் செலவாகி இருக்கும். எவ்வளவு திடமான உடம்பெனினும் தலைவலி காய்ச்சல் என்பவையாவது ஒரு 15 நாட்களைத் தின்றிருக்கும். ஆக இந்த வகை நடைமுறையில் குறைந்த பட்சம் 215 நாட்கள் செலவாகி இருக்கும். போக அந்த வருடத்தில் மிஞ்சுவது வெறும் 150 நாட்களே.

இந்த 150 நாட்களில் அவர் 60 பாடங்களுக்குத் தயார் செய்தாக வேண்டும். ஆக ஒரு பாடத்திற்கு இரண்டரை நாட்கள் மட்டுமே படிக்க அவகாசம் இருந்திருக்கும்.

இரண்டரை நாட்களை மட்டுமே ஒரு பாடத்திற்காக செலவு செய்ய முடிந்த ஒருவர் அந்தப் பாடத்தில் என்னத்தைப் பெரிதாக கற்றுத் தேர்ந்திருக்க முடியும்.

அவரைப் படித்தவர் என்று எப்படிக் கொள்ள முடியும்?

கற்றலின் பாமர நோக்கங்களாக உள்வாங்குதல் (ADOPTION) மற்றும் நடைமுறைப் படுத்துதல் (APPLICATION) ஆகிய இரண்டையும் கொள்கிறோம். கருத்துக்களை உள்வாங்கி அதை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதும் அதன்மூலம் சமூகம் உய்வுறச் செய்வதும் இந்த வகையில் கல்வியின் நோக்கங்களாகக் கொள்ளலாம்.

எல்லா நாட்களையுமே தேர்வு அல்லது தேர்விற்கான வேலை என்பதாக செயல்படும் ஒரு மனிதரால் இதை ஒருபோதும் செய்ய முடியாது.

அன்றைய விவாதத்தில் அதிகம் பட்டம் வாங்கிய மனிதர்களைப் பார்த்து ஏதோ சர்வ சதா காலமும் படித்துக் கொண்டே இருக்கிற படிப்பாளிகள் போலவே அனைவரும் விளித்ததுதான் ஆச்சரியமான விஷயம். பட்டம் வாங்குவது என்பது படித்தலின் விளைவா? கற்றலின் எல்லை பட்டங்கள் மட்டுமா?

தனது வாழ்நாளின் மிக முக்கியமான ஒரு முப்பது வருடங்களை தேர்வு தேர்வு என்றே கழித்த ஒரு மனிதனை சான்றோனாக மட்டுமல்ல ஒரு சராசரி படிப்பாளியாகக்கூட நம்மால் கொள்ள இயலாது. முப்பது வருடங்களையும் சமூகத்திற்காகவோ குடும்பத்திற்காகவோ பயன்படுத்தாத ஒரு மனிதரை மனிதன் என்று பார்ப்பதே என்னைப் பொறுத்தவரை ஊனமானப் பார்வைதான்.

அதுவும் இவர்கள் எந்தத் துறைகளில் பட்டங்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது நகைச்சுவையாக உள்ளது. ஒன்றுக்கு ஒன்று தொடர்பே இல்லாத பட்டங்கள். ஒரு பொது மருத்துவர் கண் அறுவையில் ஒரு கூடுதல் பட்டம் பெறுவது அவரது தொழிலை கூர்செய்யும். பொது மருத்துவர் ஒருவர் ஜேனலிசத்தில் ஒரு பட்டமோ பட்டமோ பெறுவதால் அவருக்கோ இந்தச் சமூகத்திற்கோ என்ன பயன்?

ஆக பட்டம் வாங்குதலை ‘படித்தல்’ என்று கொள்வது அயோக்கியத் தனமான அபத்தம். பட்டம் வாங்காத ஆனால் ஒருநாளைக்கு முன்னூறு பக்கங்களாவது படிக்காமல் தூங்க மறுப்பவனை படிக்காதவன் என்று விளிப்பது பேரபத்தம்.

பெருந்தலைவர் காமராசர் அவர்களை ‘படிக்காத மேதை’ என்று அழைப்பதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு இல்லை. அவர் முறைசார்ந்து படிக்கவில்லையே தவிர ஏகத்திற்கும் வாசித்துக் குவித்திருக்கிறார் என்றே கேள்வி பட்டிருக்கிறேன்.

அந்த விவாதத்திலொரு புள்ளியில் ‘படிக்கிறேன் படிக்கிறேன் என்று சொல்கிறீர்களே, என்றாவது நாம் படித்த படிப்பை அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?’ என்றொரு குழந்தை கேட்டாள்.

அன்றைய நீயா நானாவின் மிகச் சிறந்த விவாதப் புள்ளியாக எனக்குப் படுகிறது. தான் பெற்ற அறிவை அவ்வப்போது அந்தந்தச் சூழலோடு தகவமைத்துக் கொள்தல் அவசியம். அதன் மூலம்தான் சமூக மாற்றங்களோடு நம்மை பொருத்திக்கொள்ள முடியும்.

பாடத்திட்டத்தை இன்னும் சரியாகச் சொல்லப் போனால் ப்ளூ பிரிண்ட்டை படிப்பது என்பது ஒருபோதும் படிப்பாகாது. படிப்பு விசாலமானது.

அந்த விவாதத்தில் கலந்து கொண்ட அருண் என்ற பிள்ளை என்னை வெகுவாக ஈர்த்தான். அவன் வைத்த விவாதங்களில் சிலவற்ரோடு எனக்கு உடன்பாடில்லைதான். இன்னும் சிலவற்றில் அவன் தெளிவற்ரும் இருக்கிறான் என்பதும் உண்மையே. ஆனால் தான் எதை உண்மை என்று கருதுகிறானோ, எதில் அவனது மனது லயித்துக் கிடக்கிறதோ அதை மட்டுமே அவன் வைக்கிறான். அதற்கு எத்தகைய எதிர்ப்புகள் வந்த போதிலும் ஒரு மென்மையான புன்னகையோடு தன் நிலையில் உறுதியாக நிற்கிறான். பதட்டமே இல்லாமல் நிதானமாக வைக்கிறான்.

ஏறத்தாழ முப்பது வயதில் காந்தி இப்படித்தான் இருந்திருக்கக் கூடும். அவர்மீது ஆயிரமாயிரமாய் விமர்சனங்கள் இருந்த போதிலும் அவர் தனக்கு சரி எனப் பட்டதில் மட்டுமே உறுதியாய் இருந்தார். அது தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் அவருக்கு எது உண்மை எனப் பட்டதோ அதை மட்டுமே செய்தார். இந்தப் பிள்ளையும் அப்படித்தான் இருக்கிறான்.

அடுத்தநாள் கோபியோடும் அந்தோணியோடும் உரையாடியபோது சாவதற்குள் ஒருமுறை அந்தப் பிள்ளையை பார்த்துவிட வேண்டும் என்றேன். நீச்சயம் ஏற்பாடு செய்வதாக அந்தோணி சொல்லியிருக்கிறார்.

பட்டங்கள் பெறுவதும் படிப்பும் வேறு வேறு என்பதை ஒரு வெகுஜன ஊடகத்தின் வழியாக எந்த அளவிற்கு படம்பிடித்துக் காட்ட முடியுமோ அதைத் தாண்டியும் கோபி முயற்சித்தார் என்ற வகையில் அவருக்கு என் அன்பும் அணைப்பும்.

படிப்பு ஆழமானது. இந்தச் சமூகத்தை புரட்டிப் போடுவதற்கான உன்னதமான கருவி என்பதை இளைய திரளிடம் நானும் நீயுமாய் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்த முயற்சித்த வகையில் நீயா நானா குழுவினருக்கு நன்றி.  



Tuesday, July 26, 2016

டெட்ராய்ட்

அந்த நகரத்தில் இருந்த 78000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன...
இருபது லட்சம் மக்கள் வாழ்ந்த பூமியிலிருந்து பத்தொன்பது லட்சத்தி ஐம்பதினாயிரம் பேர் வெளியேறிவிட்டார்கள்...
டெட்ராய்ட் திவாலானதின் பின்னனியில் உள்ள அரசியலை உள்வாங்காமல் முதலாளிகளை இறக்குமதி செய்யும் அரசின் கொள்கையை எல்லா வடிவத்திலும் அம்பலப்படுத்தியே தீர வேண்டும்

பிழைகள் குறைந்த படம்




பிழைகள் குறைந்த படம் என்று தனது உதிரிப் பூக்கள் படம் பற்றி இயக்குனர் மகேந்திரன் சொல்வார் என்று தோழர் Chandran Veerasamy ஒருமுறை பதிந்திருந்தார்
.
உலகத் தரம் வாய்ந்த ஆகச் சிறந்த தன்னடக்கங்களுள் நிச்சயம் இதுவும் ஒன்று

கவிதை 53

மறந்து தொலைப்பதற்குள்
வந்து தொலைத்துவிடு
சொல்லித் தொலைக்க வேண்டும் உன்னிடம்
வந்து தொலைக்காதேயென்று

Monday, July 25, 2016

குட்டிப்பதிவு 52

"பங்குச் சந்தை எகிருனா முதலாளிகளுக்கும் விழுந்துதுன்னா சனங்களுக்கும் லாபமாமே” என்கிறான் பையன்
யாரோ ஒரு நல்லவனிடம் பழக ஆரம்பித்திருக்கிறான்

Sunday, July 24, 2016

ரசனை 24

Andanoor Sura அவர்களின் மூலமாக என் கவனத்திற்கு வந்த கலா வாசுகியின் இந்தக் கவிதை குறித்து நான் பேச ஏதுமில்லை. வாசியுங்கள்.
இந்த மாத காக்கை கட்டுரையில் இதை எடுத்தாண்டிருக்கிறேன்.
எனது பாராட்டுக்களையும் நன்றியையும் கலாவிற்கு சொல்லுங்கள். எண் கிடைத்தவர்கள் கொடுங்கள் அவரோடு பேசுகிறேன்.
தோழர் அண்டனூர் சுரா அவர்களுக்கு என் நன்றி
*****************************************************************
பெண்களுக்கு தொடைகள் ஒரு பிரச்சனை
மார்பகங்கள் பெரிய பிரச்சனை
யோனிகளைப் பற்றி சொல்லவேண்டியதில்லை
அதிலிருந்து ஒழுகும் இரத்தம் கேவலம்
இவற்றைப்பார்ப்பது பாவம்
இவற்றைப்பற்றி பேசுவது பெரும்பாவம்
ஒளித்து மறைத்து
பொத்திப்பொத்தி பேசக்கூடாத விடயமாய்
அசுத்தமாய் பெண் உடல் எனில்
ஆண்டவனவின் அதிஅற்புதப்படைப்பு
தூய்மையின் உறைவிடங்கள்
ஆண்கள்
அதற்குளிலிருந்து வராதிருக்கட்டும்

அழைப்பு 27



வரும் சனி 30.07.2016 அன்று திருப்பூர் வருகிறேன். வாய்ப்புள்ளவர்கள் வாருங்கள். சந்திப்போம்

Saturday, July 23, 2016

புத்திர சோகம் பொல்லாது சரவணன்

“ஏம்மா, திடீர்னு சரவணன் டாக்டர் எரிக்கறதுக்கு முன்னாடி எழுந்து வந்துட்டா எவ்வளவு நல்லா இருக்கும்”
பொதுவா இவ்வளவு செண்டிமெண்ட்டா எப்போதுமே பேசியிராத கீர்த்தனா இப்படி விக்டோரியாவிடம் பேசியபோது ஆச்சரியத்தோடு அவளது கண்களைப் பார்க்கிறேன், கலங்கியிருக்கின்றன. விக்டோரியா கண்களும்தான். நான் ஏற்கனவே மாலையைப் போடும்போதும் அதன்பிறகு இரண்டுமுறையும் வெடித்தே அழுதிருந்தேன்.
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர்தான் குடும்ப மருத்துவர். அநேகமாக அவர் படித்து வந்ததிலிருந்து.
விக்டோரியாவிற்கும் அவருக்கும் அப்படி ஒரு நல்ல பிரியம். பத்து வயது கூடுதலான கிஷோர்தான் விக்டோரியாவிற்கு சரவணன். அவரைக் கேட்காமல் எந்த ஒரு மருத்துவமனைக்கும் விக்டோரியா போனதில்லை.
ஒருமுறை கழுத்திலே கட்டி வந்து கடுமையான அவஸ்தை பட்டது. மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சைக்கு அப்பாயின்மெண்ட் எல்லாம் வாங்கிவிட்டோம். ஒய்ய்வெடுக்க வேண்டும் என்று அந்த மருத்துவர் கூறவே காலாண்டு விடுமுறையில் போவது என்று முடிவெடுத்திருந்தோம். பணம் வேறு புரட்ட வேண்டும்.
வழக்கம்போல விக்டோரியா சரவணனை ஒரு வார்த்தை கேட்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. போகிறோம். விவரங்களைக் கேட்டதும் கட்டியை உறுட்டிப் பார்க்கிறார். “ ஒன்னும் இல்லீங்க மிஸ், நாமலே எடுத்துடலாம். அந்த ரூமிற்கு போங்க “ என்கிறார். எஙகள் அனைவர்து முகச்சுளிப்பையும் தாண்டி விக்டோரியா அடுத்த அறைக்கு போய்விட்டது. சின்னதாய் லோகல் அனெஸ்தீஷியா கொடுத்து பிதுக்கி எடுத்து விட்டார்.
”ஒன்னும் இல்ல வேர்வைக் கட்டிங்க சார். உருட்டிப் பார்த்தேன். உருண்டது, எனவேதான் எடுத்துட்டேன் என்றார்.”
இது சரியா தவறா எல்லாம் தெரியாது. ஆனால் அப்படி ஒரு பந்தம்.
வியாழன்தான் எனது கைவலிக்காக போயிருந்தேன். வழக்கம்போல பயப்பட வேண்டாம் என்றவர், சுகரோடு கொஞ்சம் ஆர்த்தோ சம்பந்தப்பட்ட பிரச்சினை இது என்றும் ஒரு மாத நடைப் பயிற்சிக்குப் பிறகு சோதிக்கலாம் என்றும், அநேகமாக ஒரு மாத நடைப்பயிற்சியே இவை அனைத்தையும் சரி செய்யக்கூடும் என்றும் கூறினார்.
இது நடந்து எட்டாவது மணி நேரத்தில் இறந்திருக்கிறார்.
என்னை அவர் தந்தை போலவோ சகோதரனைப் போலவோ பார்த்தாரா இல்லையா என்று தெரியாது, விக்டோரியாவை நிச்சயமாக தாயாக பாவித்தார் என்பது தெரியும்.
புத்திர சோகம் பொல்லாது சரவணன்.

ரசனை 23

எளிய வார்த்தைகள். மென்மையானவையும்கூட. புன்னகையோடு ஆணாதிக்க வன்மத்தை மூர்க்கமாக தோலுறிக்கும் உமாவின் ( Uma ) குறுங்கவிதை
........................................
நீயே நானென
ஆன வீட்டில்
நானும் இல்லாமல் ஆகிறேன்
நீ இல்லா நாட்களில்....

குட்டிப் பதிவு 51

அண்ணாநகருக்கு வழி கேட்டவரிடம் தான் இறங்கும் நிறுத்தத்திற்கு முதல் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள சொன்னார் . வழி கேட்டவர் மகிழ்ந்துபோய் நன்றி சொல்ல அதைவிட மகிழ்ந்து பரவாயில்லை என்றும் இதில் என்னங்க என்றும் சொன்னார் வழி சொன்னவர்

ரசனை 22

உமாவின் ( Uma Mohan) இந்தக் கவிதை இன்றிரவு என்னைத் தூங்கவிடாதென்று நினைக்கிறேன்.
வாசியுங்கள்
well done uma
-------------------------''------''''-------
கிளிஞ்சல் பொறுக்குவது
உனக்கு வேடிக்கை
எனக்குபிழைப்பு
மறைந்துகிடக்கும் கண்ணாடித்துண்டை தாண்டிச்செல்வது தொழில்நேர்த்தி
கீறலிலும் கண்ணீர் பெருக்காது
கடல்நீரில் அலசியபடியே
அடுத்த கிளிஞ்சலைத்தேடுவேன்
உனக்கோ அது ரத்தம்

Thursday, July 21, 2016

நன்றி அறிவித்தல்களும் வேண்டுகோள்களின் நீட்சியும்

தோழர் நடராசன் பாலசுப்ரமணியம் அவர்களது உதவியால் அஞ்சலி நாளை முதல் ஷிவானி பொறியியல் கல்லூரிக்கு போகிறாள். நாளை அவரோடு பேசி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வாள்.
நேற்று இன்னொரு குழந்தையான யோகேஸ்வரியின் படிப்புக்காக யாரேனும் 6000 ரூபாய் உதவ முடியுமா என்று கேட்டிருந்தேன். இனிய தோழர் அன்பாதவன் (Anbaadhavan Shivam Bob) உடனே கமெண்ட்டில் எனது வங்கிக் கணக்கு விவரம் கேட்டிருந்தார். நான் அதை செய்வதற்குள் தோழர் Jafar Ali என் கணக்கில் தொகையை சேர்த்துவிட்டார். இந்தத் தகவலை அன்பாதவனிடம் சொன்னபோது வாய்ப்பு நழுவியமைக்காக மிகவும் வருந்தினார்.
தோழர் நடராசன் அவர்களும் இதை தாமேதந்திருக்கக் கூடும் என்றார்.
இன்று யோகேஸ்வரி பள்ளி வந்து தொகையைப் பெற்க்று கொண்டாள். ஜாஃபர் தோழர் எண் கொடுத்து பேசச் சொல்ல இயலவில்லை. மருத்துவ மனையில் அறுவை முடிந்து தொடர் சிகிச்சையில் இருக்கும் அவளது தந்தையைக் காண அவசரமாகக் கிளம்பி விட்டாள். நாளை அதை செய்ய வேண்டும்.
தோழர்கள் அன்பாதவனும் நடராசனும் வருத்தப் படத் தேவை இல்லை.
யாரேனும் கட்டணாம் கட்ட இயலாமாத ஒரே காரணத்திற்காக எம் குழந்தைகள் யாரும் கூலி வேலைக்கு போகிறார்களா என்று தேட ஆரம்பித்து விட்டோம் .
இந்த உதவிகள் கிடைத்திருக்காத பட்சத்தில் அஞ்சலியும் யோகேஸ்வரியும்கூட கூலி வேலைக்குத்தான் போயிருப்பார்கள்.
தகுதியான பிள்ளைகள் கிடைத்து கல்லூரிகளிலோ அல்லது பாலிடெக்னிக் மற்றும் ஐ டி ஐ களிலோ இடமும் இருப்பின் தோழர்கள் அன்பாதவனையும் நடராசனையும் அணுகுவோம்.
பத்தாத பட்சத்தில் விரித்தும் கை ஏந்தவே செய்வோம்.

வேண்டுகோள் 01

முகநூல் தோழர் திரு நடராசன் பாலசுப்ரமணியம் அவர்கள் கொடுத்துதவிய 10000 ரூபாய் உதவியாலும் எனது சக தோழர்கள் ஆனந்தக்குமார் மற்றும் அன்பழகன் ஆகியோரது கடுமையான முயற்சி மற்றும் உதவியாலும் எங்கள் பள்ளியில் படித்த குழந்தை அஞ்சலி ஷிவானி பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டாள். எஞ்சி இருக்கும் மூன்று ஆண்டுகளுக்கும் அவளுக்கு வருடம் 10000 ரூபாய் கொடுத்து உதவுவதாக தோழர் நடராஜன் அவர்கள் உறுதி கூறியுள்ளார்.
தொடர்ந்து கல்வி சார்ந்து உதவி வரும் தோழர் நடராஜன் அவர்களுக்கு நெஞ்ச்சார்ந்த நன்றிகள்.
நண்பர்களே எங்களது இன்னொரு குழந்தைக்கு யாரேனும் 6000 ரூபாய் உதவினால் லால்குடி பாரதிதாசன் உறுப்புக் கல்லூரியில் அவளது படிப்பிற்கு உதவும்.
முடிந்தவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்

Wednesday, July 20, 2016

கவனமாய் மொழிப்படுத்துவோம்



இன்றையத் தேதியில் பெரும்பான்மைக் கவனம் இந்தப் படத்தின் மீதே இருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ அதைவிட பேருண்மையாக இருக்கும் இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பெரும்பான்மை பேருக்கு இது ஏதோ ஒரு கருப்புக் காகிதத்தால் சுற்றப்பட்ட பொட்டலமாகத் தெரியும் என்ற எதார்த்தம்.

“பிறப்பொக்கும்” என்பதை ஒருபோதும் தருணால் ஏற்க இயலாது. ஏற்க இயலாது என்பதைவிட எதிரானது என்பதே சரியானது.

எதிரான ஒருவர் ஏனிப்படி அலைந்தார்?

எனக்கென்னவோ ‘உறவாடிக் கெடுத்தலின்’ ஒரு பகுதியாகவே அது படுகிறது.

சாமியார்களின் எதிர்ப்பு இந்த சிலைமீதென்பதிலும் நான் மாறுபடுகிறேன்.  ‘பிறப்பொக்கும்’ , ‘ முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ போன்ற சித்தாந்தங்களின் மீதான எதிர்ப்பே அவர்களது இந்த சிலை மீதான வெறுப்பு.

அடிமடியில் நெருப்பள்ளி முடிந்துகொள்ள அவர்கள் என்ன கிறுக்கர்களா?

வள்ளுவனின் நேரெதிர் சித்தாந்தம் அவர்களது. வள்ளுவத்தின் வளர்ச்சி அவர்களது இருத்தலை எதிர்த்து கலகம் செய்யும்.

அவர்கள்மிகச் சரியாய்   புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பொட்டலத்திற்குள் கிடப்பதல்ல வள்ளுவர். அவரை பொட்டலமாய் மடிப்பதற்கான காகிதத்தை யாரும் இதுவரைக்கும் தயாரிக்கவில்லை. தயாரிக்கவும் முடியாது.

விமர்சனத்தோடு வள்ளுவரை ஏற்பது அவசியம்.

வள்ளுவருக்கு மீறி யாரால் என்ன சொல்ல முடியும் என்று இறுமாந்து இருப்பது இதைவிட ஆபத்தாக முடியும்.

கவனமாய் மொழிப்படுத்துவோம், கலை இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் வள்ளுவரை ஊர் ஊராய் கொண்டு போய் சேர்ப்போம்.

Tuesday, July 19, 2016

தேநீர் சுவையாக இருந்திருக்கிறது.

அன்று பள்ளியிலிருந்து களைத்துத் திரும்பிய மகளுக்கு தேநீர் போட்டுக் கொடுத்தேன். குடித்ததும் எப்படி இருந்தது என்று கேட்டால் ஒருநாள் போட்டுக் கொடுத்துட்டு ரொம்ப அலட்டிக்காதப்பா என்கிறாள்.
தேநீர் சுவையாக இருந்திருக்கிறது.

என் மொழி எனக்குத் தாய்.

எந்த மொழியையும் எந்த நிலையிலும் வெறுப்பவன் அல்ல நான்.

என் மொழி எனக்குத் தாய்.

எல்லாத் தாய்மார்களைவிடவும் என் தாய் உயர்ந்தவள் என்று கருதுபவன்.

அதே நேரம் இதே உரிமை ஒரு மலையாளிக்கும், தெலுங்கருக்கும், இந்திக்காரருக்கும், சமஸ்கிருதத்தை தன் தாய்மொழியாகக் கொண்டிருப்பவருக்கும், ஏன் எந்த மொழிக்காரருக்கும் உண்டு என்று நினைப்பவன்.

எந்த மொழியும் அழிந்துவிடக் கூடாது, அனைத்து மொழிகளையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று ஆசைப் படுபவன்.

எந்த ஒரு மொழியின் போற்றத்தக்க படைப்புகளையும் அனைத்து இந்திய மொழிகளிலும் கொண்டுவந்துவிட வேண்டும் என்று கருதுபவன்.

ஆனாலும் சமஸ்கிருதம்தான் அனைத்து இந்திய மொழிகளின் தாய் என்ற மத்திய அரசின் சுற்றரிக்கையை உரத்தக் குரலில் கண்டிக்கிறேன்.

Monday, July 18, 2016

கவிதை 52

எடுத்துத் தொலைத்திருக்கலாம்
மீட்ட மோதிரத்தோடு 
ஒரு புகைப்படம் 
மீண்டும் அடகு வைப்பதற்குமுன்

Sunday, July 17, 2016

உலகக் குழந்தைகளுக்காக வெறிகொண்டு சிந்தித்த மனிதனுக்கு

தனது ஐந்து குழந்தைகளையும் அனாதை விடுதியில் விட்டிருக்கிறார் ரூசோ.
தன்னால் தரமுடியாத ஒரு நல்ல வாழ்க்கையை தன் குழந்தைகளுக்கு அனாதை இல்லம் தந்ததாக ஒருமுறை வால்டேரிடம் மிகுந்த வேதனையோடு சொல்லியிருக்கிறார்.
உலகக் குழந்தைகளுக்காக வெறிகொண்டு சிந்தித்த மனிதனுக்கு தன் சொந்தக் குழந்தைகளுக்கு வாழ்வைத் தர முடியாத சோகத்தை தந்திருக்கிறது இயற்கை.

ரசனை 21

ஒருமுறை ட்விட்டரில் இருந்தபோது “ கும்பிடும் வரை கடவுள். களவு போனால் சிலை” என்று புகழ் என்பவர் எழுதியிருந்தார். அந்த இடத்தை விட்டு நகரவே முடியவில்லை.
யோசித்து பார்க்கிறேன் யாராவது எப்போதாவது சாமி களவு போனது என்று சொல்லியிருக்கிறோமா? அல்லது சிலையைக் கும்பிட்டு வந்தேன் என்றாவது சொல்லியிருக்கிறோமா?
பாருங்களேன்,
https://twitter.com/mekalapugazh

Saturday, July 16, 2016

அழகான குழந்தையின் எச்சிலொழுகும் சிரிப்பைப்போல…

பெரும்பாலும் குழந்தைகளைப் பற்றிய  படைப்புகள்தான் குழந்தை இலக்கியம் என்பதாக நமக்கு தரப்படுகின்றன. குழந்தைகளின் வாசிப்பிற்கென்று மிக அரிதாகவே எப்போதாவது படைப்புகள் வருகின்றன.
அப்படி வருகின்ற படைப்புகளும் தேவையான அளவு கொண்டாடப் படுகின்றனவா என்று கேட்டால் அதுவும் இல்லை.

அப்படி ஒரு அபூர்வமான குழந்தை இலக்கியம் ஒன்று என் கைகளுக்கு வந்து சேர்ந்தது. “நறுமுகை” வெளியீடான “இங்கா” என்ற செந்தில்பாலாவின் சிறார் பாடல்களைக் கொண்ட மிக மிக அழகான சிறு நூல் ஒன்று வந்தது.

மிக மிக அழகான என்கிற வார்த்தைகளை நான் மிகவும் கவனத்தோடே பிரயோகிக்கிறேன். அவ்வளவு அழகான நூல் அது. அழகான குழந்தையின் எச்சிலொழுகும் சிரிப்பைப்போல வசீகரமாக இருக்கிறது அந்த நூல்.

முப்பத்தியிரண்டு பக்கங்களைக் கொண்ட அந்த குறுநூலை மதியத்திலிருந்து இரண்டுமுறை வாசித்து விட்டேன். அட்டையில் ‘சிறார் பாடல்கள்’ என்று இருக்கிறதே நெசத்துக்குமே அப்படித்தான் இருக்குமா என்ற அய்யத்தோடே வாசிக்கத் தொடங்கினேன். ஐந்தாம் பக்கம் தொடங்கி முப்பத்தி ஒன்றாம் பக்கம் வரைக்குமான இருபத்தியேழு பக்கங்களும் ஒரு வார்த்தை சேதாரமின்றி குழந்தைகளுக்கானவை. வாசிக்க வாசிக்க நம்மை அறியாமலே நமக்குள் ஒரு துள்ளல் பிறக்கிறது.

“என் குழந்தை அழுவதும்
சிரிப்பதும் தவிர்த்து
எதையோ கேட்க முற்பட்டு
பேச எத்தனிக்கையில்
உச்சரித்த முதல் அசை
ங், ங்க, ங்கா, இங்கா
என்பதுதான்.
எல்லாக் குழந்தைகளும்
அப்படித்தான் என்பது
அம்மாக்களின் கூற்று”

என்று சுறுக்கமாக இங்கா வை அறிமுகம் செய்வதோடு நேரடியாக பாடல்களைப் பந்தி வைக்கிறார்.
“Rain rain go away” என்று மழையை விரட்டும் ஆங்கில நர்சரிப் பள்ளிகளில் யாரேனும் இவரது

“வாவா மழையே
 வரட்டுமா வெளியே
 நீயும் நானும் தனியே
 ஆடலாமா இனியே”

எனும் பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பாடமாக வைத்தால் நல்லது. அரை நூற்றாண்டு காலமாக குழந்தைகளைக் கொண்டு மழையை சபித்து விரட்டியிருக்கிறோம். இந்தப் பாடலை குழந்தைகள் ஆடிக்கொண்டே பாடினால் அந்த அழகைக் காண மழை வானத்தைப் பொத்துக் கொண்டு பூமிக்கு வரும்.

’கொல்லையில் கும்பலாக கூடுது
நம்ம தொல்லையில்லாமல் பாடுது’

என்று ஒரு பாடல் முடிகிறது. குருவிகளைக் குறித்தான பாடல் அது. குறுவிகளை தொந்தரவு செய்யாமல் தூரத்திருந்து ரசிக்க வேண்டும் என்ற அறத்தை கொண்டாட்டமும் துள்ளலுமாய் அவர்களே அவர்களுக்கு சொல்லிக் கொள்கிற மாதிரியான முறை புதிது. ’அறஞ்செய விரும்பு’ என்பதையே சகல விதமான வன்முறைகளோடும் அடீத்துச் சொல்லித் தருகிற நமக்கு இது நிச்சயமாய் புதிதுதான்.

அக்கா வீட்டுப்பாடம் எழுதி படிக்க வேண்டுமென்பதற்காக வராத தூக்கத்தை வம்படியாக அணாஇத்துக் கொள்ளுமாறு தம்பிகளை வற்புறுத்தும் வலிதரும் பாடலும் உண்டு. அந்தப் பாடல் இப்படி முடியும்

“சரியா எழுதலைனா
திட்டுவாங்க
எழுதிகினே போகலைனா
கொட்டுவாங்க”

”படி படினு சொல்ல
பள்ளிக்கூடம் இல்ல

பகல் முழுக்க நாங்க
பெருமூச்சு வாங்க

பசங்க கூட ஆட்டம்
அப்பா வந்தா ஓட்டம்”

என்பதாக இன்னொரு பாடல். பெற்றோரும் ஆசிரியர்களும் கல்விக் கனவான்களும் அக்கறையோடு கவனம் குவிக்க வேண்டிய இடம் இது.

இப்படிப்பட்ட குழந்தைப் பாடல்களை இவர் இன்னும் நிறைய எழுத வேண்டும். இன்னும் நிறைய பேரும் எழுத வேண்டும். இத்தகைய நூல்களை குழந்தைகளிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

போட்ட பத்து மாதங்களுக்குள் இரண்டாம் பதிப்பை இந்த நூல் கண்டிருக்கிறது என்பது இனிப்பான சேதி.

”இங்கா”
செந்தில்பாலா
நறுமுகை பதிப்பகம்
29/35 தேசூர்பாட்டை
செஞ்சி 604202
9486150013

இருபது ரூபாய்

நான் நல்ல அப்பன்தான் போல

இன்று காலை பள்ளிக்கு போகும்போது பேருந்தில் முதல் வரிசையில் என்னோடு ஒரு பெண்ணும் அவரது அப்பாவும் அமர்ந்திருந்தனர். பேருந்தில் ஏறிய ஓட்டுனருக்கும் அவருக்கும் இடையே நடந்த உரையாடலிலிருந்து அவர் ஒரு நடத்துனர் என்பதை அறிய முடிந்தது.
தொடர்ந்த அவர்களது உரையாடலிலிருந்து அவர் தனது மகளை கண் மருத்துவரிடம் காட்டுவதற்காக திருச்சி அழைத்துப் போவதை அறிந்துகொள்ள முடிந்தது.
“ ஆமாம் தம்பி என்ன படிக்கிறான்?” என்ற கேள்விக்கு ஏழாம் வகுப்பு என்றதும் அவரது மகள் ”இல்ல அஞ்சு” என்று திருத்தவே சிரித்துக் கொண்டே “ பையன் என்ன படிக்கிறான்னுகூட தெரிஞ்சுக்க நேரமில்ல . நீயெல்லாம் என்ன அப்பனோ போ மாப்ள ” என்றார்.
பையனும் பிள்ளையும் என்ன படிக்கிறார்கள் என்று தெரியும் என்ற வகையில் நான் நல்ல அப்பன்தான் போல.
மீள்

Friday, July 15, 2016

கவிதை 51

யார் கடவுள்
யார் சாத்தான்
தங்களுளென்பதில்
குழப்பம் வந்த பொழுதில்
உதவிக்கழைத்தனர் டீ மாஸ்டரை
கடுப்பின் உச்சத்தில் கத்தினார்
யாரு எவனாயிருந்தா எனக்கென்ன
குடிச்ச டீக்கு காசக் கொடுங்கடா
வெண்ணெய்ங்களா

Thursday, July 14, 2016

29. கல்வியில் தலையிடாத பள்ளி

இது நடந்து ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கடந்து போயிருக்கும். சென்னையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். விழுப்புரத்தில் கொஞ்சம் மக்கள் ஏறினார்கள். மத்திய வயதுடைய ஒரு பெண் எனது இருக்கை அருகே வந்து நின்றார். பயணச்சீட்டு விநியோகித்துக் கொண்டிருந்த நடத்துனர் இவர் அருகே வந்தார்.
‘எங்க போகணும்?’
‘உளுந்தூர்பேட்டை’
‘எத்தன?’
‘வெறும் ஆயிரத்தி நூத்திப் பத்துதாம்பா’
‘என்னம்மா, என்ன பேசற நீ. பிரவேட்காரன் திட்டுற அளவுக்கு ஏத்தினாலும் 110 டிக்கட் கூட ஏத்த முடியாது. அவ்ளோ ஏன், உங்க ஊருக்கான காசுக்கு ஏங்கிட்ட 200 டிக்கட்கூட தேறாது. நான் எப்படி ஆயிரத்தி நூத்திப் பத்து டிக்கட் தருவேன்.’
‘அய்யோ, ஒரு டிக்கட்தாம்பா. அத்தனைய வாங்கிட்டு போய் நான் வென்ன வறுத்தா தின்னப் போறேன்,’ என்று நிதானத்துக்கு வந்தார். ‘லட்ச லட்சமா கொட்டி படிக்க வச்சா இந்த எடுபட்ட பயப்புள்ள ஒன்னுத்துக்கும் ஒதவாத ஆயிரத்தி நூத்தி பத்து மார்க்கு எடுத்திருக்கு’ என்றவாறே கிட்டத்தட்ட உளுந்தூர்பேட்டை வரும்வரைக்கும் பிள்ளையை வறுத்துக் கொண்டே வந்தார்.
லட்ச லட்சமாய் செலவு செய்து ஏதோ ஒரு பெரிய பள்ளியில் தனது மகனை சேர்த்து படிக்க வைத்திருக்கிறார். அவன் அப்போது நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆயிரத்தி நூற்றி பத்து மதிப்பெண் பெற்றிருக்கிறான். இந்தத் தாய் ஆயிரத்தி நூற்றி தொண்ணூறு மதிப்பெண்ணாவது தனது பிள்ளை எடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறார். அவரது எதிர்பார்ப்பைவிட குறைந்து போகவே இந்த மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிட்டாது என்பதை கேட்டறிந்திருக்கிறார். அதுதான் பேருந்தில் நடத்துனர் பயணச்சீட்டு எத்தனை என்று கேட்டாலும் பிள்ளை பெற்ற மதிப்பெண்ணை உளறுகிற நிலைக்கு வந்திருக்கிறார்.
இப்போது இயல்பாகவே நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.
1. முதலில் ஆயிரத்தி நூற்றி பத்து என்பது அந்தத் தாய் இந்த அளவிற்கு புலம்புமளவிற்கு குறைந்த மதிப்பெண்தானா?
2. காசக் கொட்டி ஏதோ ஒரு பெரிய பள்ளியில் சேர்த்துவிட்டால் பிள்ளை தான் விரும்பும் மதிப்பெண் எடுத்துவிட வேண்டும் என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பு நியாயம்தானா?
3. ஆயிரத்தி நூற்றி பத்து மதிப்பெண்ணே குறைவு என்பதாக ஏற்பட்டிருக்கக்கூடிய பொதுப்புத்தி எத்தகைய விளைவுகளை கொண்டு வந்து சேர்க்கும்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் ஆயிரத்தி இருநூறு மதிப்பெண். ஆக, அந்தக் குழந்தை ஆயிரத்தி இருநூறு மதிப்பெண்ணிற்கு ஆயிரத்தி நூறு மதிப்பெண் பெற்றிருக்கிறான். ஆயிரத்தி நூற்றி பத்து என்பது 92.5 விழுக்காடு வருகிறது. அதுவும் கட் ஆஃப் பாடங்களில் அந்தக் குழந்தையின் மதிப்பெண் சதவிகிதம் இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும்.
நிச்சயமாக இது அந்தப் பிள்ளையை தோளில் தூக்கிக் கொண்டாட வேண்டிய அளவிற்கு உரிய மதிப்பெண்தான். இன்னும் சொல்லப் போனால் இவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கும் பிள்ளையைக் கொண்டாட மறுப்பதைக்கூட மன்னிக்கலாம். ஆனால் இதை குறை சொல்லுவதை கண்டிப்பாக குற்றமாகக் கொள்ள வேண்டும். தொண்ணூற்றி மூன்று விழுக்காடு மதிப்பெண்ணை அவ்வளவாக படிக்காத ஒரு தாய் குறைவென்று பொதுவெளியில் சொல்லுமளவிற்கு பொதுநிலை வந்திருப்பது கல்வி சிறந்து செழித்து வளர்ந்திருப்பதன் அடையாளம் அல்ல.
பொதுவாகவே தனது குழந்தையை எந்தத் தாயும் இது விஷயத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார். இன்னும் சொல்லப்போனால் தனது மகன் பெற்ற மதிப்பெண்ணோடு கொஞ்சம் சேர்த்து சொல்வார். நான் பன்னிரெண்டாம் வகுப்பில் அறுநூற்றி எழுபத்தி ஐந்து மதிப்பெண்தான் பெற்றேன். ஆனால் என் அம்மா எங்கள் தெருவில் உள்ளவர்களிடம் நான் எழுநூற்றி ஐம்பது பெற்றதாக சொல்லி பெருமை பட்டுக் கொண்டார். அப்படியே சொல்ல வேண்டும் என்று என்னிடமும் அப்பாவிடமும் கூறினார். அப்பாவிற்கு அதில் எல்லாம் உடன்பாடில்லை. அதில் எனக்குத்தான் பெரிய சிக்கல். யாரேனும் என்னப்பா மார்க்கு என்றால் எதை சொல்வது என்று குழம்புவேன். அறுநூற்றி எழுபத்தி ஐந்து என்று உண்மையை சொன்னால் ‘ஏம்பா அம்மா ஏதோ எழுநூற்றி ஐம்பதுன்னு சொல்லுது நீ அறுநூத்தி எழுபத்தஞ்சுங்கற’ என்பார்கள். எழுநூற்றி ஐம்பது என்றால் சிலர் ,’ஏம்பா உங்கப்பா அறுநூத்தி எழுபத்தி அஞ்சுங்கறாரு, நீ என்னடான்னா எழுநூத்தி ஐம்பதுங்கற’ என்பார்கள். ஒருகட்டத்தில் என் மதிப்பெண் எது என்பதில் எனக்கே குழப்பம் வந்துவிட்டது.
ஆனால் அறுநூத்தி எழுபத்தி ஐந்தே மிகக் கௌரவமான மதிப்பெண்ணாகவே கொள்ளப்பட்டது. ஏன் இந்தத் தாய் இப்படிப் புலம்புகிறார். நான் அறுநூற்றி எழுபத்தி ஐந்து மதிப்பெண்ணிற்கு அந்தக் காலத்தில் எளிதாக கல்லூரியில் இடம் கிடைத்தது. ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஆயிரத்து முப்பது மதிப்பெண் பெற்ற எனது மனைவியின் அக்கா பெண்ணிற்கு இளங்கலை ஆங்கில இலக்கியம் கிடைப்பதில் பெருமளவு சிரமம் இருந்தது.
இதை இப்படிப் பார்ப்போம். அந்தக் காலத்தில் 175 மதிப்பெண் கட் ஆஃப் இருந்தால் மருத்துவம் கிடைத்தது. இப்போது 198 ற்கு கிடைக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை இருக்கிறது. ஆக, 175 கட் ஆஃப்பிற்கு கிடைத்த மருத்துவ படிப்பு இப்போது 199 ற்கு கிடைக்கிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்த தங்கம் இப்போது இருபத்தி ஆறாயிரம் ரூபாய்க்கு நகர்ந்திருக்கிறது. தங்கத்தின் விலையும் ஏறியிருக்கிறது கல்லூரிக்கான கட் ஆஃப் கூடியிருக்கிறது. இதை இப்படியாக பொருத்திப் பார்க்கிற அளவிற்கு போயிருப்பதே கூட கல்வி சந்தை பட்டிருப்பதன் அடையாளம்தான்.
’லட்ச லட்சமா காசக் கொட்டி நல்ல பள்ளிக்கூடத்துல சேர்த்துவிட்டோம்’ என்கிற பொதுப் புலம்பல் ’எது இவர்கள் பள்ளியில் நல்ல பள்ளி?’ என்ற ஒரு கேள்வியை நம் முன்னே வைக்கிறது.
‘என் பள்ளி ஒருபோதும் என் கல்வியில் தலையிடாதவாறு நான் பார்த்துக் கொண்டேன்’ என்று ஒரு முறை மார்க் ட்வைன் கூறினார். இதை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு அபத்தமான கூற்றாகத் தெரியும். கல்வியைக் கொடுப்பதே பள்ளிதானே? அது எப்படி ஒரு குழந்தையின் கல்வியில் தலையிடாமல் இருக்க முடியும்? என்று தோன்றும். உண்மையில் ஒரு நல்ல பள்ளி என்பது கல்வியைக் கொடுக்கக் கூடாது. மாறாக குழந்தை தனது கல்வியை எடுத்துக் கொள்வதற்குரிய சூழலை வாய்ப்புகளை அது அந்தக் குழந்தைக்கு கொடுக்கும்.
இந்த மோசமான மாற்றம் எப்படி தொடங்கியது எனில் பாடத் திட்டம்தான் கல்வி. அந்தப் பாடத் திட்டத்தில் தேறுவதான் தேர்ச்சி. இதை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு என்று எந்தப் புள்ளியில் தொடங்கியதோ அந்தப் புள்ளியில் மத்திப்பெண்ணே கல்வியின் அளவுகோளாக மாறியது.
நான் துவக்கப் பள்ளியில் படிக்கிறபோது பாடப் புத்தகங்கள் ஒரே மாதிரி இல்லை. தனியார் தயாரித்த பாடப் புத்தகங்கள் இருந்தன. அப்போது மாவட்டத்திற்கு மாவட்டம் புத்தகம் மாறும். உள்ளூர் குறித்த பாடங்கள் அவற்றில் நிறைந்திருந்தன. என் கிராமம் பற்றிய வரலாறு மற்றும் புவியியல் சார்ந்து என்னால் படிக்க முடிந்தது.
அந்தக் காலத்தில் கல்வியின் விளைவாக ஒழுக்கமும் பண்பாடும் எதிர்பார்க்கப்பட்டது. ’படித்தவன் பாவம் செய்தால் அவன் அய்யோன்னு போவான்’ என்று பாரதி சொன்னான். பாவம் செய்யாமை படித்தவன் அடையாளமாக இருந்த காலம் மாறி காரும், நகையும், ஏசியோடு கூடிய பங்களாவும், மின்ணனு சாதனங்களுமே படித்தவனின் அடையாளமாகிப் போயின.
‘சமச்சீர் கல்வி’ என்பதுகூட ஒரே பாடப்புத்தகத்தை படிப்பது என்று சுருங்கிப் போனது. கல்வி பொதுப் படவேண்டும். அது சமப்பட வேண்டும். ஆனால் அது மண் சார்ந்தும் (NATIVITY) படைப்புத் திறன் (CREATIVITI) சார்ந்தும் இருக்க வேண்டும். ஆனால் இந்த அளவிற்கான சமச்சீருக்கே இந்த அளவிற்கு போராட வேண்டியிருந்தது.
இத்தகைய சூழலில் எந்தப் பள்ளி பொதுத் தேர்வில் அதிக அளவிலான மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்கிறதோ அந்தப் பள்ளி நல்ல பள்ளியாக கொள்ளப்பட்டது. அந்தப் பள்ளியை நோக்கி பெற்ரோர்கள் குவியத் தொடங்கினார்கள். இது ஒருவிதமான போட்டியை பள்ளிகளுக்கிடையே ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் போட்டியானது நல்லதை சொல்லித் தருவதில் ஏற்படவில்லை. எதை சொல்லிக் கொடுத்தால் எல்லோரையும் தேர்ச்சிபெற வைக்க முடியும் என்று பள்ளிகள் யோசிக்க ஆரம்பித்தன. போட்டி அதிகரித்த பொழுது எதைமட்டும் சொல்லிக் கொடுத்தால் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். இங்குதான் கல்வி தனது மேன்மையான சுயத்தை இழக்க ஆரம்பித்தது.
ஒருகட்டத்தில் ஏறத்தாழ எல்லாப் பள்ளிகளும் நூற்றுக்கு நூறு தேர்ச்சி விழுக்காடு கொடுக்க ஆரம்பித்தவுடன், அவர்களது கவனம் மதிப்பெண்ணில் விழுந்தது. இங்கும் அவர்களது சூத்திரம் ஒன்றாகவே இருந்தது. எவற்றை மட்டும் நடத்தினால் நூறு விழுக்காடு தேர்ச்சி சதவிகிதம் என்பது மாறி, எதை மட்டும் நடத்தினால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வைக்கலாம் என்று யோசித்தார்கள்.
இப்போதுதான் ப்ளூப்ரிண்ட் (BLUE PRINT) மாணவர்களிடம் புழக்கத்திற்கு வந்தது. இப்போது அதை வகுப்பறை சுவர்களில் மாட்டி வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்திரவே போடுகிறார்கள். இப்போது மதிப்பெண் இல்லாத பாடத்தை படிக்கிற மாணவர்களை ‘ஏண்டா தேவையில்லாதத்யெல்லாம் படிக்கிற’ என்று கோவைத்துக் கொள்கிறார்கள். சிலர் அதற்காக பிள்ளைகளை கடிந்து கொள்கிறார்கள். சிலர் தண்டனையே தருகிறார்கள்.
ஒரு கட்டத்தில் ‘எங்கள் பள்ளியில் இருந்து இத்தனை மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கும், பொரியியல் படிப்பிற்கும் சேர்ந்திருக்கிறார்கள்’ என்று பள்ளிகள் விளம்பரப்படுத்தினார்கள். இத்தகைய விளம்பரங்கள் கூடுதல் மதிப்பெண் மீதிருந்த கவர்ச்சியை மாணவர்களிடமிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் அப்புறப்படுத்தின. மருத்துவம் படிக்க ஆசைப்படுபவனுக்கு ஏன் கணிதத்தை படிக்க வைத்துக் கொண்டு. தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் எண்பது மதிப்பெண் அளவிற்கு தயார் செய்துவிட்டு இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றில் இருநூறுக்கு இருநூறு எடுக்குமாறு பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
சென்ற ஆண்டோ அதற்கு முந்தைய ஆண்டோ 900 மதிப்பெண்களுக்கும் குறைவாக மதிப்பெண் பெற்ற ஒரு குழந்தை முதல் கட்ட நேர்காணலிலேயே மருத்துவ படிப்பை தேர்ந்தெடுக்க முடிந்தது. இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் அவள் 600 மதிப்பெண் எடுத்திருந்தாள். மற்ற மூன்று பாடங்களிலும் அவள் 300 கும் குறைவாகவே எடுத்திருந்தாள்.
புத்திசாலித்தனமாகப் பார்க்கப்படும் இந்தப் போக்கு கல்வியை வெகுவாக சீரழிக்கும். கல்வியை வெகுவானதொரு சூதாட்டமாக கொண்டு சேர்க்கும். இது எதிர்கால சமூகத்தை பாழ்படுத்தும்.
அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் இதிலிருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தன. இப்போது அவர்களும் இந்த சூத்திரத்தை முடிந்த அளவு கைகொள்ள ஆரம்பித்து விட்டார்கள். சூப்பர்30 என்கிற பள்ளிகளை மாவட்ட ஆட்சியர்களே பல மாவட்டங்களில் ஆரம்பித்து விட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவர்களுக்கு தனியாக வசதிகள் செய்து தந்து அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளிலும் பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களிலிருந்து மதிப்பெண் பெருவதை மட்டுமே சொல்லித் தருகிறார்கள்.
ஒரு தவறுக்கு தீர்வாக அதே தவறு என்பது எப்படி சரியாகும் என்று தெரியவில்லை.
ஆயிரத்தி நூற்றி பத்து மதிப்பெண்ணை குறைவென்று ஏசத் தொடங்கியிருக்கிறார்கள் பெற்றோர். இந்த நிலை தொடர்ந்தால் இந்த மதிப்பெண்ணிற்காக மாணவர்களை தண்டிக்கத் தொடங்குவார்கள்.
இப்போது வியப்பாகக் கூட இருக்கலாம். நடக்காது என்று சொல்வதிற்கில்லை. இதே சூழல் நீடிக்குமானால் ஒரு காலத்தில் ஆயிரத்தி நூற்றி எழுபது மதிப்பெண் எடுத்த தனது குழந்தையை மதிப்பெண் குறைவென்று அவனது தாயே கொலை செய்யக்கூடும்.
அதற்குள் விழிப்போம்..

கவிதை 50

நானுனக்கு எழுத நினைத்ததை
எப்படியோ மோப்பம் பிடித்து
ஏவாளிடம் 
சாத்தானை விட்டு
பேசவைத்து விட்டான்
மில்டன்

Wednesday, July 13, 2016

பழந்தமிழ் மூளை

12.07.2015 அன்று தஞ்சாவூரில் எழுத்தாளி கூட்டத்தில் தோழர் குப்பு வீரமணி அவர்களோடு தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு தகவலை சொன்னார்.
பொதுவாக கப்பல் மற்றும் படகுகளின் கட்டுமானத்தில் பயன் படுத்தப்படும் ஆணிகள் துறுபிடித்துப் போகும்போது தமிழ்நாட்டிலிருந்து தயாரிக்கப்படும் கப்பல்களின் ஆணிகள் மட்டும் துறுபிடித்து இத்துப் போகாமல் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்ததாம்.
சோதித்துப் பார்த்ததில் தமிழன் ஆணியை மாட்டின் கொம்பிலிருந்து செய்யப்பட்டுள்ளது தெரிய வந்ததாம்.
கட்டுமரங்ளையும் கட்டிப் பிணைக்காமல் இதே வகை ஆணிகளையே பயன்படுத்தி கட்டமைத்திருப்பதும் அவர்களை ஆச்சரியப் படுத்தியதும் தெரிய வந்ததாம்.
பழந்தமிழ் மூளையின் வீரியம் வியப்பைத் தருகிறது.

"போனவருஷம் இந்த வசனத்ததானே குட்டியண்ணன் மறந்துபோனான்"

நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது .
முன்பெல்லாம் எங்களூரில் வருடா வருடம் "கட்டபொம்மன் "நாடகம் நடைபெறும். எங்களூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பாய் தலையணையோடு நாடகம் பார்க்க. வந்துவிடுவார்கள்.
உரையாடல்கள் பாடல்களாகவே இருக்கும் . ஆச்சரியம் என்னவென்றால் கட்டபொம்மனாய் நடித்தவரிலிருந்து பல நடிகர்களுக்கு எழுதப் படிக்கவே தெரியாது. எப்படி அவ்வளவு நீளமான வசனங்களை மனப்பாடம் செய்து அவ்வளவு நேர்த்தியாக பிரயோகம் செய்தார்கள் என்பது இன்றும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.
நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது .
முன்பெல்லாம் எங்களூரில் வருடா வருடம் "கட்டபொம்மன் "நாடகம் நடைபெறும். எங்களூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பாய் தலையணையோடு நாடகம் பார்க்க. வந்துவிடுவார்கள்.
உரையாடல்கள் பாடல்களாகவே இருக்கும் . ஆச்சரியம் என்னவென்றால் கட்டபொம்மனாய் நடித்தவரிலிருந்து பல நடிகர்களுக்கு எழுதப் படிக்கவே தெரியாது. எப்படி அவ்வளவு நீளமான வசனங்களை மனப்பாடம் செய்து அவ்வளவு நேர்த்தியாக பிரயோகம் செய்தார்கள் என்பது இன்றும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.
"போனவருஷம் இந்த வசனத்ததானே குட்டியண்ணன் மறந்துபோனான்" என்று பெரிசுகள் பேசிக்கொள்வதையும் கேட்டிருக்கிறேன் .
எழுதப் படிக்கத் தெரியாதவரிடமும் இலக்கியத்தை கொண்டுசேர்த்த ஜனநாயக வடிவம் இசை ." என்று பெரிசுகள் பேசிக்கொள்வதையும் கேட்டிருக்கிறேன் .
எழுதப் படிக்கத் தெரியாதவரிடமும் இலக்கியத்தை கொண்டுசேர்த்த ஜனநாயக வடிவம் இசை .

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...