Saturday, July 9, 2016

65/66, காக்கைச் சிறகினிலே ஜூன் 16

மும்பை மகாலட்சுமி ரயில் நிலையம். அந்த ரயில் வந்து நிற்கிறது. மக்கள் இறங்கி பயணச்சீட்டு பரிசோதகரிடம் தங்களது பயணச்சீட்டுகளை கொடுத்துவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் பெண் தன் அருகே வந்ததும் பயணாச்சீட்டைப் பெறவேண்டி கையை நீட்டுகிறார் பரிசோதகர். அந்தப் பெண் நிற்கிறார். பயணச்சீட்டை எடுத்துத் தருவதற்கான எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை.

மேடம், டிக்கெட்

என்னிடம் இல்லை

ஏன்?”

நான் பயணச்சீட்டு வாங்கவில்லை

ஏன் பயணச்சீட்டு எடுக்கவில்லை?”

ஏன் மேடம் அவசரமாக ஏறிவிட்டீர்களா?”

இல்லை, எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் எடுக்கவில்லை

அது குற்றம்

அப்படியா. சரி, குற்றமாகவே இருக்கட்டும். என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்

அவரை ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு அழைத்து செல்கிறார் பரிசோதகர். அவரைப் பார்த்ததும் ஸ்டேஷன் மாஸ்டருக்கு புரிகிறது.

அவர் பிரேமலதா பன்சாரி, குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு தொழில் அதிபரின் மனைவி.. பொது ரயிலில் பயணம் செய்யவேண்டிய தேவையே இல்லாதவர்.

ஏன் பயணச்சீட்டு வாங்கவில்லை என்று பரிசோதகர் கேட்ட கேள்வியையே ஸ்டேஷன் மாஸ்டரும் கேட்கிறார். எடுக்கவில்லை, அதற்குரிய தண்டனையை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார். 260 ரூபாய் அபராதக் கட்டணம் செலுத்துமாறு ஸ்டேஷன் மாஸ்டர் கூறுகிறார்.

அபராதக் கட்டணத்தை கட்ட முடியாது என்று உறுதியாக மறுக்கிறார். அபராதக் கட்டணத்தைக் கட்டத் தவறினால் ஒரு வாரமேனும் சிறைப்பட வேண்டி இருக்கும் என்று மிரட்டிப் பார்க்கிறார்கள். அதற்குத் தாம் தயாராய் இருப்பதாகக் கூறுகிறார்.

மிரட்டிப் பணிய வைக்கலாம் என்று முயன்றவர்கள் இப்போது மிரண்டுபோய் நிற்கிறார்கள்.

அவரது கணவரது அலைபேசி எண் பெற்று அவருக்கு தகவல் தருகிறார்கள். அவரது கணவர் பதறிக் கொண்டு வருகிறார். அவரிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறிய ஸ்டேஷன் மாஸ்டர் 260 ரூபாய் அபராதத்தை செலுத்தி பிரச்சினையை சுமூகமாக முடித்துக் கொண்டு உதவுமாறு கூறுகிறார். பர்சை எடுத்து பணம் எடுக்கப் போனவரை பாய்ந்து தடுக்கிறார் பிரேமலதா. பிரச்சினையை வளார்க்க வேண்டாம் என்றும் தமது குடும்ப கௌரவம் பாதிக்கப் படும் என்றும் கூறுகிறார்.

இது தனது சொந்தப் பிரச்சினை என்றும் இதில் தனது கணவர் தலையிடுவதை தான் விரும்பவில்லை என்றும் கூறிய பிரேமலதா, பயணச்சீட்டு எடுக்காமல் பயணிப்பவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறார் என்று கேட்டபொழுது ஒரு காரணமாகத்தான் என்று கூறுகிறார். ஏன் என்று கேட்டபொழுது ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணத்தை கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவளித்த்துவிட்டு திருப்பி கட்ட இயலாது என்று சொன்ன மல்லையாவை தப்பவிட்ட அரசுக்கெதிராக மக்களது கவனத்தை ஈர்க்கவே தான் சிறை செல்வதாக கூறி ஒரு வாரம் சிறைப்படுகிறார் பிரேமலதா.

பழைய போராட்ட வடிவங்கள் நீர்த்துப் போகிறபோது புதிய வடிவங்களிலான போராட்டங்கள் தேவைப்படவே செய்கின்றன. அதில் ஒன்றுதான் இது.

தனது சுதந்திரத்திற்கு மத்திய அரசு உத்திரவாதமளித்தால் தான் இந்தியா தயாராக இருப்பதாக மல்லையா தெரிவித்துள்ள நிலையில் விஷயத்தை ஆறப்போட்டு அவரை பத்திரமாக உள்ளூர் அழைத்து வந்து அவர் கேட்டுக் கொண்அபடி அவரது சுதந்திரத்தை உத்திரவாதப் படுத்தவே மத்திய அரசு முயலும்.

பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது என்றபோதிலும் மத்தியதர மற்றும் உயர் மத்தியதர மக்களின் கவனத்தை பிரேமலதாவின் போராட்டம் ஈர்க்கவே செய்திருக்கிறது,

நன்றியும் வணக்கமும் பிரேமலதா.

**************************************************************************** 

எதிர்பார்த்தபடியே கேரளாவில் மீண்டும் இடதுசாரிகளின் ஆட்சி மலர்ந்திருக்கிறது. தோழர் பிரணாயி விஜயன் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

தேர்வு செய்யப்பட்டவுடன் அவர் நேராக முன்னால் முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள் வீட்டிற்கு சென்று அவரது வாழ்த்துக்களைப் பெற்றிருக்கிறார்.. இதில் ஆச்சரியப் படுவதற்கு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. தனது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரிடம் சென்று வாழ்த்துக்களைப் பெறுவது என்பது வழமையான ஒன்றுதான்.

ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் செய்த காரியம்தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. தோழர் அச்சுதானந்தன் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் நேராக அவர் சென்றது கேரளாவின் விடைபெறும் முதல்வர் மரியாதைக்குரிய உம்மன்சாண்டி அவர்களின் வீடிற்குத்தான்.

வாழ்த்துக்களைப் பெறுவதற்காக தம் இல்லம் வரும் விஜயன் அவர்களை உம்மன்சாண்டியும் அவரது மனைவியும் வாசலில் காத்திருந்து அகம் மலர ஒரு நண்பனை அழைத்துப் போவதுபோல அரவனைத்து அழைத்துச் செல்கிறார்.

கொஞ்சமும் போலியில்லாத மேன்மையான பண்பாடு. மேற்கு வங்கம் உள்ளிட்டு எல்லா இடங்களிலும் இந்தப் பண்பாடு மலர வேண்டும் என்றே விரும்புகிறேன்.

*******************************************************************************************

என் சிவப்பு பால் பாயிண்ட் பேனாஎன்ற தோழர் மாடசாமியின் குறுநூலை அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஆசிரியர்கள் அனைவரும் வாசிக்க வேண்டும்.

திருத்தித் தரப்படும் தேர்வுத் தாள்களுக்காக தன் மாணவர்கள் பசியோடு காத்திருக்கத் தொடங்கினார்கள்என்று ஒரு இடத்தில் போகிற போக்கில் எழுதிப் போகிறார்.

எவ்வளவு ஆழமான வரி இது. திருத்தித் தரப்படும் தேர்வுத் தாள்களுக்காகவும் தேர்வு முடிவுகளுக்காகவும் மாணாவர்கள் பசியோடு காத்திருக்கக் கூடிய நிலை வரவேண்டும்.

குழந்தைகளின் உயிரை காவு கேட்கும் தேர்வுமுறை அய்யோ என்று போகட்டும்.

********************************************************************** 

பிரச்சாரத்திற்காக சென்றுகொண்டிருக்கிறார் திருமாவளவன். ஒரு இடத்திலே பெருங்கூட்டமாய் நிற்கிறார்கள்.எட்டிப் பார்க்கிறார்.இரு சக்கர வாகனத்தில் பயணித்த ஒரு தம்பதியினர் விபத்திலே சிக்கி போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார்.

உடனே வண்டியிலிருந்து இறங்கி அவர்களாஇ வண்டியிலேற்றி ஜிப்மர் மருத்துவ மனைக்கு கொண்டுபோவதற்கு ஏற்பாடு செய்கிறார். அப்போது கூட்டத்திலிருந்த சிலர் 108 ற்கு போன் செய்து ஒரு மணி நேரமாகிறது இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். ‘பாவிகளா ஒரு மணிநேரமா வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தீர்களா?’ என்று கடிந்து கொண்டிருக்கிறார்.

வண்இயில் ஏற்றப் போனபோது அந்த மனிதன் பாட்டாளிமக்கள் கட்சி கறைபோட்ட வேட்டி கட்டியிருப்பதை அவரது கவனத்திற்கு கொண்டு போகிறார்கள்.

ஆமாம், இப்ப அதுதான் ரொம்ப முக்கியமா?” என்று கோவப் பட்டிருக்கிறார்.

தோழர் திருமாவளாவன் அவர்களின் இந்தக் கோவத்தின் ரசிகனாயிப் போனேன் நான்

**************************************************************************** 

வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.ஒரு பிள்ளை நிறுத்தி லிஃப்ட் கேட்கிறான். ஏற்றிக் கொள்கிறேன்.

தேங்க்ஸ் அங்கிள் என்றவன் கொஞ்ச நேரம் கழித்து கேட்டான்,

முன்னாடி போற வண்டிக்கும் நம்ம வண்டிக்கும் இடையில இருக்கிற கேப் கூடவோ குறையவோ இல்லையே. எப்படிங்க அங்கிள்?”

ரொம்ப புத்திசாலித் தனமாக பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு சொன்னேன்,

ரெண்டு பேரும் ஒரே வேகத்தில் போகிறோம் அல்லவா அதனால்தான்பா

கேட்டான்,

ஆனா அது 50 சிசி, இது 125 சிசி அங்கிள்

அதுக்குமேல பேசுவேன்
********************************************************************************       

நான் ராம் தனது கூரிய நறுக்குகளால் என்னை அடிக்கடி கட்டிப் போடுகிறார்.

தண்டவாளம்
குறுக்கிடும்
தாண்டிச்செல்வோம்

என்று நம்பிக்கை விதைகளை போகிற திசை எங்கும் தூவிப் போகிறார். ஆம். தாண்டுகிற அளவுதான் தண்டவாளம் என்பதை உறுதிபடுத்துவோம்
******************************************************************************************************  

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...