Friday, July 8, 2016

28. மைதானத்தில் நின்றபடி சூரியனை

‘அப்பா, இந்தப் பள்ளிக்கூடம் நல்லாவே இல்ல. திரும்பவும் நம்ம ஊர் பள்ளிக்கூடத்துலேயே என்ன சேர்த்துfவிடு’
இப்படிக் கூறிய குழந்தை படித்துக் கொண்டிருந்த அந்தப் பள்ளி சென்னையின் மிக உயர்தரமான பள்ளிகளில் ஒன்று. அவன் மீண்டும் படிக்க விரும்பிய, இதற்கு முன் அவன் படித்துக் கொண்டிருந்த பள்ளி இரண்டே இரண்டு மினி பேருந்துகள் மட்டுமே போய்வரக்கூடிய ஒரு கடைக்கோடி கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி.
இன்னொரு தகவலையும் இப்போது கூறிவிட வேண்டும். அந்தக் குழந்தையின் தந்தை பள்ளிக்கல்வித் துறையின் மிக உயரிய பொறுப்பில் இருக்கக்கூடிய மிக நேர்மையான அதிகாரி.
ஒருக்கால் இத்தனை ஆண்டுக்காலம் ஒரு கிராமத்துப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த குழந்தையை திடீரென மெட்ரோபாலிடன் நகரத்து நவீனப் பள்ளியில் சேர்த்ததால் பிரமாண்டத்தைக் கண்டு மிரண்டு போனானோ என்ற ஐயம் அவனது தந்தைக்கும் எனக்கும் எழுந்தது.
அதுகுறித்து அவனிடமே பேசினோம். அந்தக் குழந்தை மிகவும் தெளிவாக இருந்தான். அவனுடனான உரையாடலில் இருந்து நாங்கள் தெரிந்து கொண்டவை,
1.    இப்போது படிக்கும் பள்ளியின் பிரமாண்டம் அவனை மிரட்டவோ ஈர்க்கவோ இல்லை.
2.    அவனது கிராமத்துப் பள்ளியில் இல்லாத எதுவும் இந்த நவீனப் பள்ளியில் இல்லை.
3.    அந்த கிராமத்துப் பள்ளியில் ஏதோ ஒன்றை அவன் இங்கு இழந்த நிலையில் இருந்தான். அதாவது, ஒரு போதாமையை அந்தக் குழந்தை இங்கு உணர்ந்தான்.
23 குழந்தைகள் மட்டுமே ( இப்போது பத்தை ஒட்டிய எண்ணிக்கைதான் ) படித்துக் கொண்டிருந்த அவனது கிராமத்துப் பள்ளியில் ஒன்பது கணினிகளும் எல்லாக் கணினிகளுக்கும் UPS களும் இருந்தன. இருபத்திமூன்று குழந்தைகள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த அந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஏறத்தாழ இரண்டு லட்சம் ரூபாய் செலவில் ஆண்டு விழாவை நடத்தினார்கள். வேலு சரவணனது நாடகத்தைக்கூட நான்தான் ஏற்பாடு செய்திருந்தேன். அது குறித்து ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் நான் கல்கியில் ஒரு கட்டுரைகூட எழுதினேன். ஆகவே இந்தப் பள்ளியின் பிரமாண்டம் அவனை அச்சப்படுத்தாமல் போனதாலோ ஆர்வப் படுத்தாமல் போனதினாலோ ஆச்சர்யம் இல்லை.
சரி, புதிய இடத்தில் நண்பர்கள் கிடைப்பதில் பிரச்னை போல என்று யோசித்தோம். இருபது நண்பர்களின் அப்பாக்களின் அலைபேசி எண்களைக் கொட்டினான்.
என்னதான் பிரச்னை என்று கேட்டால் இங்கு பாடம் நடத்தும் முறை சரியில்லை என்றான். மொழிப் பிரச்சினையைத்தான் இப்படி சொல்கிறான் என்று யோசித்தோம். எல்.கே.ஜி குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதுபோல எங்களுக்கு வகுப்பெடுத்தான்.
‘இங்கே என்னப்பா, சூரியனக்கூட படத்தக் காட்டியும் ஸ்மார்ட் சிஸ்டத்துலயும்தான் நடத்துறாங்க. இதையே நம்ம ஊர்லனா சின்னம்மா எப்படி நடத்தியிருப்பாங்க தெரியுமா?’
அந்தக் கிராமத்து பள்ளி ஒரு ஈராசிரியர் பள்ளி. தலைமை ஆசிரியை அவனது சின்னம்மா. தொடர்ந்து தனது சின்னம்மாவிடமே படித்துக் கொண்டிருந்த குழந்தையை திடுமென இங்கு தள்ளியதால் இந்தப் பள்ளியின் ஆசிரியைகளோடு ஒட்டவில்லைபோல என்று நினைத்தோம்.
’சூரியன நடத்த சார்ட் எதுக்கு, ஸ்மார்ட் சிஸ்டம் எதுக்கு?
மைதானத்துக்கு கூட்டிட்டுபோயி, அண்ணாந்து பாருடா அதுதான் சூரியன்னு சொல்லித் தர வேணாமா?’
அப்படியே பொட்டில் அறைந்தது போலிருந்தது.
வெறுமனே கரும்பலகையை மட்டுமே பயன்படுத்தாமல் துணைக் கருவிகளையும் பயன்படுத்த வேண்டும். கற்றல்உபகரணங்களை போதுமன அளவிற்கு பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். காணொலிக் கருவிகளையும் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்றும் கல்வித்துறையாலும் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. அது மிகவும் அவசியம்தான். கற்றலை அது எளிமைப்படுத்துவதுடன் சுவாரசியமாக்கவும் செய்யும்.
ஆனால் அதன் அபத்தமான உச்சம் என்பது சூரியனை ஒரு படத்தைக் காட்டி சொல்லித் தருவதில் வந்து நிற்கிறது.
‘மைதானத்துக்கு கூட்டிட்டுபோயி, அண்ணாந்து பாருடா அதுதான் சூரியன்னு சொல்லித் தர வேணாமா?’
பெரியப் பெரிய கல்வியாளர்களின் வாயிலிருந்து வந்திருக்கவேண்டிய கூற்று ஒரு குழந்தையின் வாயிலிருந்து வந்திருக்கிறது. தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் இதை தெய்வத்தின் குரலாகவே கொள்ள வேண்டும்.
மைதானத்திற்கு மேலே கொண்டு நிறுத்தி சூரியனை அண்ணாந்து பார்க்க சொல்லிவிட்டு அவர்களிடம் சின்ன சின்னதாய் கேள்விகளை கேட்டுப் பார்த்தால் விஷயம் எவ்வளவு அழகாக விரியும்.
ஒரு சின்னக் குழந்தையிடம் சூரியன் எங்கே இருக்கிறது என்று கேட்டால் ‘அங்கே’ என்று வானத்தைக் காட்டுவான். ‘அங்கே என்றால் எங்கே? என்று கேட்டால் ’மேலே’ என்பான். ‘மேலே என்றால்…?’ என்று நீட்டினால் ‘வானத்துல’ என்பான். ‘எவ்வளவு தூரம்?’ என்றால் LKG குழந்தை அகலக் கைகளை விரித்து ‘இவ்வளவு தூரம்’ என்பான். குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப ‘ரொம்ப தூரம்’ என்று ஆரம்பித்து இத்தனை கிலோமீட்டர் என்பதுவரை சொல்லிக் கொடுக்கலாம்.
’சூரியன் குளிரும்தானே?’ என்று சொல்லிப் பாருங்கள், ‘இல்ல, பொய்யி, சூரியன் சுடும் ‘ என்பான். ஏன் சுடும் என்று கேட்டுவிட்டு ‘காரணம் அது நெருப்பு’ என்று ஆரம்பித்து அது ஒரு நெருப்பு பந்து என்பதை சொல்லித் தரலாம்.
கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதாக சொல்வதெல்லாம் பொய். சூரியன் நிலையாய் நிற்கிறது, அது பயணிப்பதெல்லாம் இல்லை. பூமி தன்னைத் தானே சுழற்றிக் கொள்வதால் அப்படித் தோன்றுகிறது என்பது வரை சொல்லிக் கொடுத்துவிட்டு, அது எப்படி என்பதற்குத்தான் கற்றல் கருவிகளையும் காணொலிக் காட்சியையும் பயன்படுத்தினால் கற்றல் எத்தனை பயனுள்ளதாக அமையும்.
கல்லணை குறித்து பாடம் நடத்தும் போது ஒரு சராசரி ஆசிரியர் கல்லணை கரிகாலன் என்கிற சோழ மன்னனால் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது என்றும் இத்தனை ஆண்டு காலத்திற்கு முன்னால் கட்டப்பட்டிருந்தாலும் இன்னும் எந்தவித கீறலுமின்றி இருப்பதாகவும் சொல்லித் தருவார்.
அதைவிட நல்ல ஆசிரியர் கல்லணையின் படத்தை கரும்பலகையில் மாட்டி நடத்துவார். வெறுமனே கல்லணையைப் பற்றி லெக்சர் அடிக்கும் பொழுதைவிட படத்தைக் காட்டி நடத்துவது கூடுதல் புரிதலைத் தரும். அதைவிட இன்னும் கொஞ்சம் நல்ல ஆசிரியர் காணொலியைப் பயன்படுத்தி நடத்துவார். இப்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் புரியும்.
அக்கறையுள்ள ஒரு ஆசிரியர் குழந்தைகளை கல்லணைக்கு அழைத்துப் போக முயற்சிப்பார்.
இதை எழுதும்பொழுது திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மற்றும் கரூர் போன்ற திருச்சிக்கு அருகில் உள்ள எத்தனை பள்ளிகள் தங்கள் மாணவர்களை கல்லணைக்கு அழைத்துப் போயிருப்பார்கள் என்ற என் ஐயம் வலியினைத் தருகிறது.
உலகின் மிகச் சிறந்த சிலைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவிலில் உள்ளன . இந்தத் தகவல்களையும் அதன் சிறப்புகளையும் நரம்புகள் புடைக்க சொல்லித் தருகிறோம். ஆவுடையார் கோயில் சிற்பங்களையும் உலகின் மிகச் சிறந்த குகை ஓவியங்களுள் ஒன்றாகத் திகழும் சித்தன்னவாசல் ஓவியங்களையும் பார்த்திராத புதுக்கோட்டை மாவட்டக் குழந்தைகள் எத்தனை பேர்?
மிகப் பெரிய பேரழிவை நிகழ்த்திவிட்டு ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தையைப் போல் அரவமே இல்லாமல் கிடக்கும் பாக் ஜலசந்தியை, ராமர் பாலம் என்றழைக்கப்படுகிற மணல் திட்டை தனுஷ்கோடி சென்று பார்க்காத ராமனாதபுரம் குழந்தைகள் எத்தனை பேர்?
தனுஷ்கோடி கடற்கரையில் நின்றுகொண்டு கல்லூரி மாணவர்களுக்கு சேதுசமுத்திரம் திட்டம் பற்றி விளக்கமாக புரிய வைத்தால் மாணவத்திரள் என்றேனும் ஒருநாள் அந்தத் திட்டத்தை தங்களது போராட்டத்தின் வழி சாத்தியமாக்கிவிட மாட்டார்களா?
இந்தியாவின் தொன்மையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்கிறோம். இந்தக் கருத்தோடு நமக்கிருக்கும் முரண்பாட்டை இந்தத் தொடரிலேயே ஒருமுறை எழுதிவிட வேண்டும் என்பதே என் விருப்பம். அதைவிடவும், ஏன், உலகின் ஆகத் தொன்மையான நாகரீகமாக சொல்லப்படும் மெசபடோமியா நாகரீகத்தைவிடவும் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகள் அதிகத் தொன்மையான நாகரீகம் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகே இருந்ததாக தனது ஆழ்கடல் ஆராய்ச்சி மூலம் கிரஹாம் ஆன்ஹூக் அவர்கள் நிறுவியதையும் அவரது ஆய்வு முடிவுகள் வெளிச்சம் பெறாமல் போனதற்கான காரணங்களையும் அதன் பின்னனியில் விரவிக் கிடக்கும் அரசியலையும்கூட எழுதிவிட முடியும் என்றே நம்புகிறேன்.
சிந்துச்சமவெளி நாகரீகத்திற்கான சான்றுகள் மொஹஞ்சதாரோ, மற்றும் ஹரப்பா நகரங்களில் பூமியை அகழ்வாராய்ச்சி செய்தபோது கண்டடையப் பட்டதாக சொல்லித் தரப்படுகிறது. அவ்விடங்களில் பூமிக்கு கீழே புதையுண்டுப் போயிருக்கிற நகரங்கள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் அந்த நகரங்களின் கட்டமைப்பினைக் கொண்டு அந்த மக்களின் நாகரீகம்தான் இந்தியாவின் தொன்மையான நாகரீகம் என்று சொல்லித் தரப் படுவதை எல்லாம் விட்டு விடுவோம்.
இதைப் படிக்கிறபோது பூமிக்கு கீழே புதையுண்டு கிடப்பதாக சொல்லப்படும் நகரங்கள் எப்படி இருக்கும்? என்ற சந்தேகம் குழந்தைகளுக்கு எழுமே, அதை அந்த இடங்களுக்கு கொண்டுபோய் காட்டினால் புதையுண்ட நகரங்கள் எப்படி இருக்கும் என்ற பிம்பங்கள் குழந்தைகளுக்கு கட்டுடையுமல்லவா?
மொஹஞ்சதாரோவும் ஹரப்பாவும் என்ன போய்வரக் கூடிய தூரத்திலா இருக்கிறது என்று கேட்பவர்கள் இருக்கவே கூடும். அது இல்லைதான், ஆனால் உட்கோட்டை நமக்கு கைக்கெட்டிய தூரத்தில்தானே இருக்கிறது. உட்கோட்டையிலும் பூமிக்கு அடியில் புதையுண்டு போயிருக்கிற ஒரு நகரம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதே. போதிய கவனிப்பாரற்று அழிந்துகொண்டிருக்கிறதே.
இதில் வருத்தம் என்னவெனில் கங்கைகொண்ட சோழபுரம் வரைக்கும் சுற்றுப் பயணத்தைத் திட்டமிடும் பள்ளிகள் அதற்குப் பக்கத்தில் நான்கு கிலோமீட்டர் நடை பயணத்தில் இருக்கக் கூடிய உட்கோட்டையை கண்டு கொள்வதில்லை என்பதுதான்.
தமிழ்நாட்டில் உள்ள உட்கோட்டையில் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் புதையுண்ட நகரம் ஒன்றிருப்பது தமிழ்நாட்டில் உள்ள பலருக்கு ஏன் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கே தெரியாது.
இந்தச் சூழலில் சென்ற ஆண்டு மதுரை மாவட்டத்தில் ஒரு புதையுண்ட நகரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். இவற்றைப் பற்றிய போதிய அறிவு என்பது அந்த இடங்களை பார்வையிடுவதன் மூலமே கிடைக்கும். அது நீண்ட ஆய்வுகளுக்கு வித்திடும். நீண்ட ஆய்வுகள் வரலாற்றையே புரட்டிப் போடும்.
மாணவர்களுக்கு எத்தனையோ விலையில்லாத் திட்டங்களைத் தரும் அரசு மாணவர்களை அவர்களுக்கு அருகில் இருக்கக் கூடிய இடங்களுக்கு அழைத்துப் போகிற திட்டத்தை கட்டமைக்க வேண்டும்.



No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...