Sunday, July 10, 2016

இணைந்திருந்து களமாடுங்கள்

இழுபறியாகத்தான் இருக்கும் என்று பொதுவாய் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவு வேறுவிதமாக, இன்னும் சொல்லப்போனால் அ.இ.அ.தி.மு.கவும் தி.மு.கவுமே சற்றும் எதிர்பாராத விதமாக எந்தவிதமான குழப்பத்திற்கும் இடமின்றி தெளிவாக வந்திருக்கிறது. தி.மு.க அப்படி இப்படி என்றி ஒரு வழியாக பெரும்பான்மை பெறும் அல்லது ஒரு தொங்கு சட்டசபை ஏற்பட்டு ஒரு கூட்டணி ஆட்சியை தி.மு.க அமைக்கும் என்றுதான் பெரும்பான்மை ஊடகங்களும் கருதின. ஏறத்தாழ் இதுதான் பொதுப் புத்தியாகவும் இருந்தது. ஆனால் மக்கள் முற்றிலும் வேறுமாதிரியாக முடிவெடுத்திருந்தார்கள்.

இன்னும் இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் மிச்சமிருக்கிற நிலையில் அ.இ.அ.தி.மு.க 134 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு அருதிப் பெரும்பான்மை பெற்றிருக்கிறது. இன்னும் இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் மிச்சமிருக்கிற நிலையில் தி.மு.க 89 இடங்களில் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

அந்த இரண்டு தொகுதிகளுக்குமான தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில் அந்த இரண்டு கட்சிகளுக்குமிடையேயான விகிதாச்சாரம் சட்டசபையில் இவற்றில் ஏதோ ஒன்றாகத்தான் இருக்கும்.

1)   136:89
2)   134:91
3)   135:90

இந்த மூன்றில் எது நிகழ்ந்தாலும் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

சென்றமுறை பிரதான எதிர்கட்சியாகக்கூட வரமுடியாத நிலையில் இருந்த தி.மு.க இந்த முறை அசுர பலத்துடன் ஒரு பலம் வாய்ந்த எதிர்கட்சியாக வந்திருக்கிறது. கொஞ்சம் இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கிறது என்பதைத் தவிர இந்த இரண்டு பெரிய கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் தாங்கள் நின்ற அனைத்து தொகுதிகலிலும் அநேகமாக பிணைத் தொகையை பறி கொடுத்திருக்கின்றன.

குறிப்பிட்டு சொல்லும்படியான தோல்வி என்று பார்த்தால் தோழர் திருமாவளவன் அவர்களுடைய தோல்வியைத்தான் சொல்ல வேண்டும். ஏறத்தாழ 128 தபால் வாக்குகள் அவரது கணக்கில் இருக்கிற சூழலில் 86 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை சந்தித்திருக்கிறார். அந்த 128 வாக்குகளும் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப் பட்டிருக்கின்றன. அவரது சின்னத்திற்கு நேரேதான் மிகச் சரியாக வாக்களிக்கப் பட்டிருக்கின்றன. ஆனாலும் தபால் வாக்குகளை அனுப்பும்போது அத்தோடு இனைத்து தரப்படும் படிவத்தில் சான்றொப்பம் இடத் தகுதியான நபர்களிடமிருந்து சான்றொப்பம் பெற்று இணைக்க வேண்டும் என்பது விதி. அதுவும் இந்த முறை தேர்தல் வகுப்புகளிலேயே தபால் வாக்குகளை. சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சான்றொப்பம் இடத் தகுதியான அதிகாரிகளை சான்றொப்பம் இடுவதற்காக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

தபால் வாக்குகளை போடுபவர்களில் பெரும்பான்மையோர் ஆசிரியர்கள். தேர்தலை முழுமையாக நடத்தித் தருவதிலும் வாக்குகளை எண்னி முடிவுகளை அறிவிப்பவர்கள். அப்படியிருக்க அத்தகைய ஆசிரியர்களுக்கு இந்த விவரமெல்லாம் தெரியாமல் எல்லாம் இருக்க வாய்ப்பில்லை. பிறகு எப்படி இத்தனை வாக்குகள் செல்லாத வாக்குகளாக அமைந்தன?

சான்றொப்பம் பெறாமல் தபால் வாக்குகளை எப்படி சேர்த்தார்கள்? இதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.பொதுவாக இதுமாதிரி தபால் வாக்குகளை போடக்கூடிய ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்திருக்கக்கூடிய அல்லது அனுதாபிகளாக இருக்கக் கூடிய கட்சிகளின் வேட்பாளார்களிடம் நேரடியாகவோ அல்லது அவர்களது பிரதிநிதிகளிடமோ தபால் வாக்குச்சீட்டினை சேர்த்து விடுகிறார்கள். இதற்கான காரணம் ‘பார்த்தாயா எனது வாக்கினை ஒனக்குத்தான் போட்டிருக்கிறேன்’ என்று நிறுவிக் கொள்வதற்காக.

இப்பொழுதெல்லாம் வேட்பாளர்களே தங்களோடு தொடர்பில் இருக்கக் கூடிய ஆசிரியர்களை அணுகி வாக்குச் சீட்டுகளைப் பெற்று வாக்கு எண்ணுமிடத்தில் நேரடியாக சேர்த்து விடுகிறார்கள். அநேகமாக இந்த இடத்தில்தான் தவறு நிகழ்ந்திருக்க வேண்டும்.

தபால் வாக்குச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்களுக்கிருந்த நெருக்கடியான பணிச்சுமையில் சான்றொப்பம் பெறுவதை மறந்திருக்க வேண்டும்.

எது எப்படியோ இந்தக் கவனக் குறைவினால் மகத்தான ஒரு தலைவர் சட்டசபைக்கு செல்வது தடுக்கப் பட்டிருக்கிறது. எவ்வளவோ நவீன யுக்திகளை நடைமுறைப்படுத்தும் தேர்தல் ஆணையம் தபால் வாக்குச்சீட்டினை அந்தந்த ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கே அனுப்பி அவர்களது தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பமிட்டு ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

நானும் 1989 இல் இருந்து தபால் வாக்குகளை போட்டுக் கொண்டிருக்கிறேன். சென்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில்தான் முதல் முறையாக வாக்குச்சீட்டினை விலைக்கு வாங்குவதற்காக சிலர் அணுகுவதைக் கண்டேன். இது எனக்கு பேரதிர்ச்சியைத் தந்தது என்றாலும் இதற்கு முன்னரும் இதுபோன்று இருந்ததா என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையம் வருங்காலங்களில் கவனத்தில் கொள்ளவேண்டிய மிக முக்கியமான விஷயங்களுள் மிக முக்கியமானது இது.

நடந்து முடிந்த தேர்தலைப் பொறுத்தவரை சில விஷயங்களை பரிசீலிப்பது அவசியம் என்று படுகிறது.

1)   வாக்காளார்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது
2)   வாக்காளர்களுக்கு பணாம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பதை தேர்தல் கமிஷனே ஒத்துக் கொண்டு இரண்டு தொகுதிக்களுக்கான தேர்தலை ஒத்தி வைத்தது
3)   பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால்தான் தாங்கள் தோற்றதாக அல்லது தங்களுக்கு வந்திருக்கவேண்டிய இடங்கள் கிடைக்காமல் போனதாக தி.மு.க, அ.தி.மு.க  மக்கள்நலக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் அறிக்கைகள்
4)   வெற்றியைக் கொண்டாடவேண்டிய தி.மு.க சுணங்கிக் கிடப்பது
5)   தான் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்காக மக்கள்நலக் கூட்டணியை தி.மு.க சாடுவது
6)   மக்கள்நலக் கூட்டணி எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியது

வாக்காளார்களுக்கு கையூட்டு தருவது என்பது எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் கடந்த சில தேர்தல்களாக வாக்காளார்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவது பற்றிய செய்திகள் பரவலாக பேசப்படுகிறது. திருமங்கலம் இடைத்தேர்தலில்தான் பணப்பட்டுவாடா வெளிச்சத்திற்கு வந்தது.. அந்த இடைத் தேர்தல் முடிவுதான் திரு அழகிரி அவர்களை தி.மு.கவின் அசைக்க முடியாத சக்தியாக மாற்றியது. அதன்பிறகு நடந்த இடைத்தேர்தல்களில் அ.இ.அ..தி.மு.க இதுகுறித்து வகுப்பு எடுக்குமளவிற்கு வளர்ந்ததாகவே சொல்லப்பட்டது. தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது இடைத்தேர்தல் நடந்தால் அ.இ.அ.தி.மு.கவும் அ.இ.அ.தி.மு.க ஆட்சி நடந்தால் தி.மு.க வும் அதில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.

ஆனாலும் பரந்து நடக்கும் பொதுத் தேர்தல்களில் பணப் பட்டுவாடா என்பது இலைமறைவில்தான் என்றிருந்தது. கடந்த இரண்டு தேர்தல்களாகத்தான் இது பகிரங்கமாக நடைபெறுவதாகத் தெரிகிறது.

நான் ஒரு குக்கிராமத்திற்கு சென்றிருந்தபோது ஒரு விஷயத்தைக் கேள்விபட்டேன். அந்த ஊரில் இருந்த அனைவருமே ஒரே ஜாதிதான். எல்லோருமே உறவினர்கள். ஒரு வீட்டிலேயே தி.மு.க பொறுப்பாளாரும் அ.இ.அ.தி.மு.க பொறுப்பாளரும் இருக்கக்கூடிய ஊர்.

தி.மு.க வும் அண்ணா தி.மு.கவும் பணப்பட்டுவாடாவை ஒரே நபர்மூலமே செய்திருக்கிறார்கள். அதற்கு அவருக்கு கூலியும் தரப்பட்டிருக்கிறது. எதற்கு இரண்டுமுறை என்று அந்த மனிதர் ஒரே தடவையிலேயே இரு கட்சிகளின் பணத்தையும் பட்டுவாடா செய்திருக்கிறார்.

கடந்த தேர்தல்களில் பணப் பட்டுவாடா குறித்து புகார்கள் எழுந்தபோதெல்லாம் மௌனம் சாதித்த தேர்தல் ஆணையம் இந்தமுறை தானே அந்தக் குற்றச்சாட்டை கூறியிருக்கிறது.

பொதுவாக பணப்பட்டுவாடா குறித்து தமக்கு புகார் வந்திருப்பதாக கூறும் ஆணையம் இந்தமுறை பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக அறிவிக்கிறது. தமிழகத் தேர்தல் ஆணையர் ‘கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்பதாக புலம்பியிருக்கிறார். நீதிபதியே சாட்சியாக இருக்கும்போது விசாரனை எதற்கு நேரடியாகத் தண்டனையைத் தருவதுதானே நியாயம்.

இரண்டுத் தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக ஆணையம் அறிவிக்கிறது. ஒரு விஷேஷம் என்னவெனில் ஆணையத்தின் இந்தக் குற்றச்சாட்டினை எந்தக் கட்சியும் மறுக்கவில்லை.
    

யாரெல்லாம் பணம் கொடுத்தது என்பது ஆணையத்திற்கு தெரிந்திருக்கிறது. ஆணையம் அந்தத் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்த கட்சியை அல்லது கட்சிகளை மூன்று தேர்தல்களுக்கு அந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தடை விதித்திருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் இந்தத் தேர்தலிலாவது போட்டியிடத் தடை விதித்திருக்கலாம். அல்லது வேட்பாளர் தடை என்கிற நிலையிலாவது நின்றிருக்கலாம்.இவற்றில் எதையும் செய்யாமல் இரண்டுத் தொகுதிகளில் தேர்தலை தள்ளி வைத்திருப்பதுதான் ஏனென்று புரியவில்லை.

பணப்பட்டுவாடா மட்டும் தடுக்கப் பட்டிருக்குமானால் தாங்கள் இன்னும் அதிக இடங்களில் வென்றிருப்போம் என்று அ.தி.மு.க தொண்டர்கள் கூறுவதும், பணப் பட்டுவாடாவை தடுத்திருந்தால் தாங்கள் ஆட்சிக்கு வந்திருப்போம் என்று தி.மு.க கூறுவதும்தான் வேடிக்கை எதனினும் சரியான வேடிக்கை..

பணம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் பணம்தான் வாக்குகளைத் தீர்மானித்தது என்று கூறுவதும் பணத்தை வாங்கிக் கொண்டுதான் மக்கள் வாக்களித்தார்கள் என்பதும் மிகவும் அபத்தமானதும் மக்களை கேவலப் படுத்துவதும் ஆகும்.

ஏதோ ஒரு கட்சி மட்டும் பணத்தைக் கொடுத்து அந்தக் கட்சிக்கு மட்டும் மக்கள் வாக்களித்திருந்தார்கள் என்றால் இந்தக் கூற்று சரியானது என்று சொல்லலாம். தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளுமே மக்களுக்கு கையூட்டு கொடுத்திருக்கக் கூடிய நிலையில் இந்தக் கூற்று தவறானது.

இந்தத் தேர்தல் முடிவுகளை கவனமாக பரிசீலித்தால் இந்தத் தேர்தலில் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்திருப்பது தி.மு.கதான். நூறுக்கும் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்தபோதே மேடைக்கு மேடை ‘மைனாரிட்டி தி.மு.க சர்க்கார்’ என்று மரியாதைக்குரிய ஜெயலலிதா அவர்கள் நையாண்டி செய்தபோதும் ஐந்தாண்டு காலம் ஆட்சியினை கொண்டுசேர்த்த 89 உறுப்பினர்களோடு எதிர்க்கட்சியாக எவ்வளாவு சிறப்பாக செயல்பட முடியும். வெறும் 48 உறுப்பினர்களை மட்டுமே வைத்துக் கொண்டு மாண்பமை எம்.ஜிஆர் அவர்களையே எதிர்கொண்ட தி.மு.கவால் 89 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு இந்த அரசை எதிர்கொள்ள முடியாதா?


இன்னும் சொல்லப்போனால் இத்தனை அசுர பலத்தோடு இருக்கிற தி.மு.கவைப் பார்த்து அ.தி.மு.க தானே பயப்பட வேண்டும்.

உற்சாகத்தோடு வெற்றியைக் கொண்டாட வேண்டிய தி.மு.க தோழர்கள் ஏன் சுணங்கிக் கிடக்கிறார்கள் என்று புரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஆட்சி என்பது மட்டுமே வெற்றி எனக் கொள்ல்ளப்படுகிறது.

மரியாதைக்குரிய கலைஞர் உள்ளிட்டு திமுகவினர் மக்கள்நலக் கூட்டணியை வறுத்து எடுக்கிறார்கள். ‘ஜெயலலிதா தோற்கடிக்கப்பட வேண்டியவர்தானே? எனில் நீங்கள் எங்களோடு அல்லவா நின்றிருக்க வேண்டும்’ என்று கேட்கிறார்கள். இப்போது மட்டுமல்ல RK நகர் இடைத்தேர்தலில் மரியாதைக்குரிய ஜெயலலிதா நின்றபோதும் அவர் தோற்கடிக்கப் படவேண்டியவர்தானே. அவரை திமுக எதிர் கொண்டிருக்க வேண்டுமல்லவா? ஏன் அதை செய்யவில்லை?

அதைக்கூட விட்டுவிடலாம். அப்போது இடதுசாரி வேட்பாளாராக களாமிறக்கப் பட்ட தோழர் மகேந்திரனுக்காவது திமுக தனது ஆதரவைத் தந்திருக்க வேண்டாமா? அந்தத் தேர்தலில் சிந்தாமல் சிதறாமல் திமுகவினர் ஜெயலலிதா அவர்களுக்குத்தானே வாக்களித்தனர். இப்போது மக்கள் நலக் கூட்டணியை அதிமுகவின் பி அணி என்று சொல்லும் திமுக ஆர்கே நகர் இடைத் தேர்தலில் திமுகவின் பி அணியாகத்தானே செயல்பட்டது.

இதைவிடக் கொடுமை என்னவெனில் தாங்கள் தோற்றதற்கான காரணங்களில் ஒன்றாக பணப்பட்டுவாடாவை மக்கள் நலக் கூட்டணியினரும் சொல்வதுதான்.

ஒரு விஷயத்தை அவர்கள் உணர வேண்டும். எத்தகைய அலை தங்களுக்கு எதிராக வீசினாலும் திமுகவும் அதிமுகவும் 25 லிருந்து 27 சதவிகித வாக்குகளையாவது நிரந்தரமாக வைத்திருக்கிறார்கள். எவ்வளவு மோசமாக தோற்ற போதிலும் இந்த வாக்கு வங்கியை அவர்கள் பத்திரமாக வைத்திருக்கிறார்கள்.

தங்களது உழைப்பை, தங்கள் மீதான மக்களின் அன்பை நம்பிக்கையை வாக்குகளாக மாற்றும் வித்தையை ம ந கூ குறிப்பாக இடதுசாரிகள் கற்கவேண்டும்.

தங்களது மாற்றத்திற்கான கோஷம் இன்னும் உயிரோடிருக்கும் உன்னதம் என்று தோழர் திருமா, தோழர் ஜி ஆர் ஆகியோர் கூறியுள்ளது வரவேற்கத் தக்கது.


மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து ஜீவித்திருக்கவேண்டும்.. மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து களமாட வேண்டும். குறாஇந்த பட்சம் இடதுசாரிகளும் சிறுத்தைகளும் இணைந்திருந்து களமாட வேண்டும். 

நன்றி: காக்கை ஜூன் 2016  

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...