ஒருமுறை ‘நீயா
நானா’ வில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் இடையே நடந்த
விவாதத்தைப் பார்த்தேன்.
‘கம்மர் கட்
காட்பரீஸ்
இனிப்பிலும்
வர்க்கபேதம்’
என்று ஒருமுறை
தோழர் வல்லம் தாஜுபால் எழுதினார். ‘கம்மர்கட்’ ஏழைக் குழந்தைகளுக்கானது. காட்பரீஸ்
என்பது ஒருபோதும் அடையமுடியாத அவர்களது கனவு. ’காட்பரீஸ்’ என்பது பணக்காரக் குழந்தைகளுக்கானது.
கம்மர்கட்டை அவர்கள் விரும்பினாலும் அவர்களது பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள். காரணம்
கம்மர்கட் அவர்களது தகுதிக்கு உகந்ததாக அவர்கள் நினைக்கவில்லை. மட்டுமல்ல, காட்பரீஸ்
சாக்லேட் கம்மர்கட்டைவிட பத்து மடங்கு விலை கொண்டது.
இந்த வர்க்கபேதம்
இனிப்போடு மட்டும் ஒதுங்கிவிடவில்லை. கல்வியிலும் இந்த பேதம் இன்றளவும் தொடர்கிறது.
இலவசங்களும், மலிவாக கிடைப்பதும் தங்கள் தகுதிக்கு ஒவ்வாதது, ஏழைகள் பயன்படுத்தும்
எதையும் தாங்கள் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் இருவருக்கும் வேறுபாடு இல்லாமல்
போய்விடும், ஒரே பள்ளியில் ஒரே பெஞ்ச்சில் தங்களது குழந்தைகளும் இல்லாதவர்களின் குழந்தைகளும்
அமர்ந்து படித்தால் இருவரும் சமம் என்றாகிவிடும். அது தங்களுக்கு ஆபத்தானது என்பதை
வசதி படைத்தவர்கள் உணர்ந்திருந்தனர். தனியார் பள்ளிகளின் பிரமாண்டமான வளர்ச்சிக்கு
இதுவும் ஒரு பெருங்காரணம்.
இதன் தோற்றுவாய்,
வளர்ச்சி, இன்றைய நிலை, அதை எப்படி களைவது என்பவற்றை அலச நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை
தோழர்கள் அந்தோணியும் கோபியும். ஆனால் கோபி அவர்கள் என்ன முயன்றும் அவரது முழுமையான
கட்டுக்குள் வர மறுத்த அந்த விவாதத்தின் பெரும்பகுதி தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி
ஆசிரியர்களின் லாவணியாக மாறியது. இருந்த போதிலும் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி
ஆசிரியர்களின் சிரமங்களையும் துயரத்தையும் அந்த விவாதம் வெளிக் கொணரவே செய்தது.
மற்றபடி அரசு
பள்ளி என்பது மக்கள் பள்ளி. எனில் தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கும்
அதுதான் சொந்தப் பள்ளி என்பதாகத் தொடங்கி அரசுப் பள்ளிகளை காப்பாற்றுவது என்பதே அந்த
நிமிடத்துப் பணி என்பதை என்பதை உணர வைத்திருக்க வேண்டிய அன்றைய விவாதம் ஒரு புள்ளியில்
யார் சிறந்தவர் என்கிற விவாதமாக மாறிப்போனது. மனது வலிக்க வலிக்க ‘நீயும் இல்லை நானும்
இல்லை’ என்று ஒரு கட்டுரை எழுதியதோடு தோழர் அந்தோணியோடு மிக நீண்டு ஒருநாள் இது குறித்து
உரையாடினேன்.
‘நீயும் இல்லை
நானும் இல்லை’ என்று எழுதிய என்னை ‘நீயும்தான் நானும்தான்’ என்று எழுத வைத்திருக்கிறது
சென்ற ஞாயிறு நீயா நானாவில் ஒளிபரப்பான அதிகமான அளவில் பட்டங்களைப் பெற்றவர்களுக்கும்
அதிக அளவில் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் இடையே நடந்த விவாதம். இதில் தான் எதற்காக
இந்த விவாதத்தை ஏற்பாடு செய்திருந்தாரோ ஏறத்தாழ அதன் நெருக்கத்திற்கு அதை வழிநடத்தி
கொண்டு சென்றார் கோபி.
இந்த விவாதத்தில்
கலந்து கொண்ட ஒருவர் இதுவரை 140 பட்டங்களைப் பெற்றிருந்தார். ‘எது எப்படியோ 140 பட்டங்களைப்
பெற்றமைக்காக அவரை வாழ்த்துகிறேன்’ என்று கூறி அதற்காக அவருக்கு ஒரு சன்னமான பரிசினையும்
வழங்கினார் கோபி. அவரது முகத்திலோ குரலிலோ 140 பட்டங்கள் எந்தவிதமான வியப்பையும் ஏற்படுத்தியிருக்கவில்லை
என்றபோதிலும் அவரைப் போல ஒப்புக்காகவேனும் வாழ்த்துமளவிற்கான பெருந்தன்மை என்னிடம்
இல்லை.
140 பட்டங்களைப்
பெற்றவருக்கு ஏறத்தாழ ஐம்பது வயது இருக்கும். அவர் தனது முதல் பட்டத்தை இருபது அல்லது
இருபத்தியோரு வயதில் பெற்றிருக்கக் கூடும். எனில் சற்றேரக் குறைய முப்பது வருடங்களுள்
139 பட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும். எனில், வருடத்திற்கு மூன்றிலிருந்து நான்கு
பட்டங்களை அவர் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு பட்டம்
பெறுவதென்றால் அதற்கு குறைந்தபட்சம் பத்து முதல் பதினைந்து பாடங்களாவது இருக்க வேண்டும்.
ஒரு பட்டத்திற்கு பதினைந்து பாடங்கள் எனக் கொள்வோம். அந்த வருடத்தில் நான்கு பட்டங்களைப்
பெற்றிருக்கிறார் எனில் அவர் குறைந்த பட்சம் அறுபது நாட்களை தேர்வறையிலேயே கழித்திருக்க
வேண்டும்.
ஒரு பட்டத்திற்கான
கோர்சில் சேர்வதற்கு விண்ணப்ப மனு வாங்கி அதை நிறப்புவது அதற்குரிய கட்டணத்திற்கு வரைவோலை
எடுப்பது அதை உரிய இடத்தில் சேர்ப்பிப்பது என்கிற வகையில் ஒரு நான்கு நாட்கள் தேவைப்படும்
குறைந்த பட்சம். அதன் பிறகு தேவையான நூல்களை தேடி வாங்குவது என்ற வகையில் ஒரு நான்கு
நாட்கள் பிடிக்கும். தேர்வுக் கட்டணம் கட்டுவதற்கு ஒருநாள் செலவாகும். இதன் பிறகு நுழைவுச்
சீட்டு வாங்குவதற்கு ஒருநாள் பிடிக்கும். தேர்வு முடிவுகள் வந்தவுடன் மதிப்பெண் பட்டியல்
வாங்க ஒருநாள் பட்டம் வாங்க ஒரு நாள் என்று இரண்டு நாட்கள் செலவாகும்.
வருடத்திற்கு
நான்கு பட்டங்கள் எனில் அதற்கான கால செலவு ஏறத்தாழ கீழ் வருமாறுதான் அமையும்
1)
விண்ணப்பம்
பெற்று, சேர்ப்பிப்பது வரை 20 நாட்கள்
2)
வரைவோலை
எடுத்து சேர்ப்பிக்க 20 நாட்கள்
3)
தேவையான
நூல்களைத் திரட்டுவதற்கு 20 நாட்கள்
4)
நுழைவுச்
சீட்டு பெறும் வகையில் 04 நாட்கள்
5)
தேர்வு
நாட்கள்
60 நாட்கள்
6)
மதிப்பெண்
பட்டியல் வாங்க 04 நாட்கள்
7)
பட்டங்கள்
வாங்க மனு செய்ய 04 நாட்கள்
8)
பட்டங்கள்
வாங்க 04 நாட்கள்
ஆக, இந்த வகையில்
நிர்வாகக் காரணங்களுக்காக மட்டும் அவர் 136 லிருந்து 140 நாட்கள் செலவு செய்திருக்க
வேண்டும். இது போக செமினார் என்ற வகையில் பாடத்திற்கு ஒருநாள் என்று கொண்டாலும்கூட
ஒரு 60 நாட்கள் செலவாகியிருக்கும். பண்டிகை, திருமணங்கள், இறப்புக்கள் என்ற வகையில்
ஒரு 15 நாட்கள் செலவாகி இருக்கும். எவ்வளவு திடமான உடம்பெனினும் தலைவலி காய்ச்சல் என்பவையாவது
ஒரு 15 நாட்களைத் தின்றிருக்கும். ஆக இந்த வகை நடைமுறையில் குறைந்த பட்சம் 215 நாட்கள்
செலவாகி இருக்கும். போக அந்த வருடத்தில் மிஞ்சுவது வெறும் 150 நாட்களே.
இந்த 150 நாட்களில்
அவர் 60 பாடங்களுக்குத் தயார் செய்தாக வேண்டும். ஆக ஒரு பாடத்திற்கு இரண்டரை நாட்கள்
மட்டுமே படிக்க அவகாசம் இருந்திருக்கும்.
இரண்டரை நாட்களை
மட்டுமே ஒரு பாடத்திற்காக செலவு செய்ய முடிந்த ஒருவர் அந்தப் பாடத்தில் என்னத்தைப்
பெரிதாக கற்றுத் தேர்ந்திருக்க முடியும்.
அவரைப் படித்தவர்
என்று எப்படிக் கொள்ள முடியும்?
கற்றலின் பாமர
நோக்கங்களாக உள்வாங்குதல் (ADOPTION) மற்றும் நடைமுறைப் படுத்துதல் (APPLICATION) ஆகிய
இரண்டையும் கொள்கிறோம். கருத்துக்களை உள்வாங்கி அதை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதும்
அதன்மூலம் சமூகம் உய்வுறச் செய்வதும் இந்த வகையில் கல்வியின் நோக்கங்களாகக் கொள்ளலாம்.
எல்லா நாட்களையுமே
தேர்வு அல்லது தேர்விற்கான வேலை என்பதாக செயல்படும் ஒரு மனிதரால் இதை ஒருபோதும் செய்ய
முடியாது.
அன்றைய விவாதத்தில்
அதிகம் பட்டம் வாங்கிய மனிதர்களைப் பார்த்து ஏதோ சர்வ சதா காலமும் படித்துக் கொண்டே
இருக்கிற படிப்பாளிகள் போலவே அனைவரும் விளித்ததுதான் ஆச்சரியமான விஷயம். பட்டம் வாங்குவது
என்பது படித்தலின் விளைவா? கற்றலின் எல்லை பட்டங்கள் மட்டுமா?
தனது வாழ்நாளின்
மிக முக்கியமான ஒரு முப்பது வருடங்களை தேர்வு தேர்வு என்றே கழித்த ஒரு மனிதனை சான்றோனாக
மட்டுமல்ல ஒரு சராசரி படிப்பாளியாகக்கூட நம்மால் கொள்ள இயலாது. முப்பது வருடங்களையும்
சமூகத்திற்காகவோ குடும்பத்திற்காகவோ பயன்படுத்தாத ஒரு மனிதரை மனிதன் என்று பார்ப்பதே
என்னைப் பொறுத்தவரை ஊனமானப் பார்வைதான்.
அதுவும் இவர்கள்
எந்தத் துறைகளில் பட்டங்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது நகைச்சுவையாக உள்ளது. ஒன்றுக்கு
ஒன்று தொடர்பே இல்லாத பட்டங்கள். ஒரு பொது மருத்துவர் கண் அறுவையில் ஒரு கூடுதல் பட்டம்
பெறுவது அவரது தொழிலை கூர்செய்யும். பொது மருத்துவர் ஒருவர் ஜேனலிசத்தில் ஒரு பட்டமோ
பட்டமோ பெறுவதால் அவருக்கோ இந்தச் சமூகத்திற்கோ என்ன பயன்?
ஆக பட்டம் வாங்குதலை
‘படித்தல்’ என்று கொள்வது அயோக்கியத் தனமான அபத்தம். பட்டம் வாங்காத ஆனால் ஒருநாளைக்கு
முன்னூறு பக்கங்களாவது படிக்காமல் தூங்க மறுப்பவனை படிக்காதவன் என்று விளிப்பது பேரபத்தம்.
பெருந்தலைவர்
காமராசர் அவர்களை ‘படிக்காத மேதை’ என்று அழைப்பதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு இல்லை.
அவர் முறைசார்ந்து படிக்கவில்லையே தவிர ஏகத்திற்கும் வாசித்துக் குவித்திருக்கிறார்
என்றே கேள்வி பட்டிருக்கிறேன்.
அந்த விவாதத்திலொரு
புள்ளியில் ‘படிக்கிறேன் படிக்கிறேன் என்று சொல்கிறீர்களே, என்றாவது நாம் படித்த படிப்பை
அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?’ என்றொரு குழந்தை கேட்டாள்.
அன்றைய நீயா
நானாவின் மிகச் சிறந்த விவாதப் புள்ளியாக எனக்குப் படுகிறது. தான் பெற்ற அறிவை அவ்வப்போது
அந்தந்தச் சூழலோடு தகவமைத்துக் கொள்தல் அவசியம். அதன் மூலம்தான் சமூக மாற்றங்களோடு
நம்மை பொருத்திக்கொள்ள முடியும்.
பாடத்திட்டத்தை
இன்னும் சரியாகச் சொல்லப் போனால் ப்ளூ பிரிண்ட்டை படிப்பது என்பது ஒருபோதும் படிப்பாகாது.
படிப்பு விசாலமானது.
அந்த விவாதத்தில்
கலந்து கொண்ட அருண் என்ற பிள்ளை என்னை வெகுவாக ஈர்த்தான். அவன் வைத்த விவாதங்களில்
சிலவற்ரோடு எனக்கு உடன்பாடில்லைதான். இன்னும் சிலவற்றில் அவன் தெளிவற்ரும் இருக்கிறான்
என்பதும் உண்மையே. ஆனால் தான் எதை உண்மை என்று கருதுகிறானோ, எதில் அவனது மனது லயித்துக்
கிடக்கிறதோ அதை மட்டுமே அவன் வைக்கிறான். அதற்கு எத்தகைய எதிர்ப்புகள் வந்த போதிலும்
ஒரு மென்மையான புன்னகையோடு தன் நிலையில் உறுதியாக நிற்கிறான். பதட்டமே இல்லாமல் நிதானமாக
வைக்கிறான்.
ஏறத்தாழ முப்பது
வயதில் காந்தி இப்படித்தான் இருந்திருக்கக் கூடும். அவர்மீது ஆயிரமாயிரமாய் விமர்சனங்கள்
இருந்த போதிலும் அவர் தனக்கு சரி எனப் பட்டதில் மட்டுமே உறுதியாய் இருந்தார். அது தவறாகக்
கூட இருக்கலாம். ஆனால் அவருக்கு எது உண்மை எனப் பட்டதோ அதை மட்டுமே செய்தார். இந்தப்
பிள்ளையும் அப்படித்தான் இருக்கிறான்.
அடுத்தநாள்
கோபியோடும் அந்தோணியோடும் உரையாடியபோது சாவதற்குள் ஒருமுறை அந்தப் பிள்ளையை பார்த்துவிட
வேண்டும் என்றேன். நீச்சயம் ஏற்பாடு செய்வதாக அந்தோணி சொல்லியிருக்கிறார்.
பட்டங்கள் பெறுவதும்
படிப்பும் வேறு வேறு என்பதை ஒரு வெகுஜன ஊடகத்தின் வழியாக எந்த அளவிற்கு படம்பிடித்துக்
காட்ட முடியுமோ அதைத் தாண்டியும் கோபி முயற்சித்தார் என்ற வகையில் அவருக்கு என் அன்பும்
அணைப்பும்.
படிப்பு ஆழமானது.
இந்தச் சமூகத்தை புரட்டிப் போடுவதற்கான உன்னதமான கருவி என்பதை இளைய திரளிடம் நானும்
நீயுமாய் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்த முயற்சித்த வகையில் நீயா நானா
குழுவினருக்கு நன்றி.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்