Sunday, April 29, 2012

பெயரில் இருக்கிறது

" பலரும் சொல்கிறார்கள்
பெயரில் என்ன இருக்கிறது?

சேரி
பறையன்
தேவடியாள்
பீ, மூத்திரம், கொசு
பன்னி
கழுதை, கருவாடு
பூணூல்
அப்பம், வடை, தயிர் சாதம்

ஆங்கிலம்
சமஸ்கிருதம்
மனு
அமெரிக்கா
சங்கர மடம்
கொழும்பு

வள்ளலார்
பெரியார்
அம்பேத்கர்
மார்க்ஸ்

பெயருக்குப் பின்னால்
எல்லாமும் இருக்கிறது “

என்ற இரா. காமராசு அவர்களின் கவிதையை ஒரு முறை கவிதா சரணில் வாசித்த போது என்னமோ செய்தது. ஆனாலும் என்னமோ தெரியவில்லை அந்த கவிதை பச்சென்று மனதிற்குள் வந்து பசை போட்டு அமர்ந்து கொண்டது.

“ பலரும் சொல்கிறார்கள்

பெயரில் என்ன இருக்கிறது?”

எனக்கும் அப்படித்தான். பெயரில் என்ன இருக்கிறது என்றுதான் நினைத்தேன். பெயர் ஒரு அடையாளம். அவ்வளவுதான். அதைத் தாண்டி அதில் என்ன இருக்கிறது என்றுதான் யோசிக்கத் தோன்றியது.

பெயருக்குள் ஜாதியும், ஜாதி அரசியலும், ஆணவமும் அடக்குமுறையும் அடிமைத்தனமும் இருக்கிறது என்பதெல்லாம் தெரிந்திருந்தும் பெயர் குறித்து பெரிதாய் நான் எப்போதும் அலட்டிக் கொண்டதில்லை.

இப்போது முக நூலில் கொஞ்சம் பரிச்சயம். சென்ற டிசம்பர் 25 அன்று முகநூலைத் திறந்தவன் அப்படியே உறைந்து போனேன். ஏறத்தாழ ஐம்பது கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் எனக்கு குவிந்திருந்தன. இவை பெரும் பாலும் தனி மடலிலேயே வந்திருந்தன.

எப்படி இது?

முக நூலில் என்னை பற்றிய சுய குறிப்பில் நான் ஒரு நாத்திகன் என்றும், இடது சாரி என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்.

டிசம்பர் 25 எனில் நம்மைப் பொருத்தவரை வெண்மணி நினைவு நாள்தானே. நமக்கெப்படி இவ்வளவு கிருஸ்மஸ் வாழ்த்துக்கள்?

இது கொஞ்சம் மனதைப் பிசைந்தாலும் அப்படியே விட்டு விட்டேன். பொங்கல் வந்தது. அன்று முகநூலில் தனி மடலில் எனக்கு எந்த பொங்கல் வாழ்த்தும் வரவில்லை.

கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் எனக்கு வந்து குவிந்ததற்கும் பொங்கலுக்கு வாழ்த்துக்களே வராமல் போனதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா?

யோசித்த போது ஒன்று பளிச்செனத் தட்டியது. நாத்திகன் என்றும் இடதுசாரி என்றும் நான் எழுதியிருந்த போதும் கிருஸ்மஸ் அன்று அவர்கள் வாழ்த்து அனுப்பியதற்கும் பொங்கள் அன்று அவர்கள் அவர்கள் எனக்கு வாழ்த்து அனுப்பாமல் போனதற்கும் இது ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும்.

முகநூல் நண்பர்கள் என்னை ஒரு கிருஸ்தவனாகப் பார்த்திருக்கிறார்கள். அதனால்தான் கிருஸ்மஸ் அன்று வாழ்த்து அனுப்பிய அவர்கள் பொங்களுக்கு அனுப்ப தவறியிருக்கிறார்கள்.

என்னை முன் பின் அறிந்திராத அவர்கள் என்னை கிருஸ்தவனாகப் பார்க்கக் காரணம் எது?

என் பெயர் என்னை ஒரு கிருஸ்தவனாக அவர்களுக்கு அடையாளப் படுத்தியிருக்கிறது.

ஆக பெயரில் ஏராளம் இருக்கிறது என்பது புரிந்தது. பலரது பெயர்கள் ஏராளமான பிரச்சினைகளையும் விவாதங்களையும் கிளப்பியுள்ள்ன.பெயர் ஒன்றும் நாம் நினைத்தது போல அப்படி லேசான ஒன்று அல்ல.

அப்படி அதிகமான விவாதங்களை கொண்டுவந்து சேர்த்த பெயர்களில் பாரதி தாசன் பெயரும் ஒன்று. அதில் அவரே பங்கெடுத்து பதிலளித்த சம்பவங்களும் உண்டு.

பார்ப்பன எதிர்ப்பு, அடங்க மறுத்துத் திமிறும் தன்மானம், கலப்படமில்லாத மொழி ஆகிய மூன்று விஷயங்களில் புரட்சிக் கவிஞர் கொஞ்சமும் சமரசம் செய்துகொள்வதில்லை என்பதில் கொஞ்சம் முரட்டுத் தனமாகவே தீவிரம் காட்டினார் என்று கொள்ளலாம்.

பார்ப்பன எதிர்ப்பில் புரட்சிக் கவிஞர் எவ்வளவு தீவிரமாக இருந்தார் என்பதை யாரும் சொல்லி யாரும் தெரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. எதிலுமே உச்சம் தாண்டியே பழக்கப் பட்ட பாரதிதாசன் பார்ப்பன எதிர்ப்பு நிலையிலும் உச்சம் தாண்டியே நின்றார். “ பாம்பையும் பார்ப்பனையும் சேர்த்துப் பார்த்தால் பார்ப்பானை அடித்து விட்டு பாம்பை அடி” என்பதில் அவர் எப்போதும் சமரசமற்று இருந்தார். இதை அவர்தான் சொன்னார் என்று சொல்பவர்களும் உண்டு.

பார்ப்பன எதிர்ப்பு என்றால் அப்படியொரு பார்ப்பன எதிர்ப்பு.

ஒருமுறை, சரியாகச் சொவதெனில் கலைஞரது அறுபதாவது பிறந்த நாள் சமயத்தில் அவரைப் பற்றி வைரமுத்து இப்படிச் சொன்னதாக ஞாபகம்.

“சொல்
காலைச் சொறியவேனும்
குழந்தைக்கு முத்தம் கொடுக்கவேனும்
நீ
தலை குனிந்ததுண்டா?” என்று.

அது கலைஞருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ பாரதி தாசனுக்கு மிகச் சரியாகப் பொருந்தும்.யாருக்காகாவும் எதற்காகவும் யாரிடமும் வளையவோ வணங்கவோ பழக்கப்படாத வணங்காமுடி அவர்.

மொழி விஷயத்தில் சொல்லவேத் தேவை இல்லை. தாயைவிடவும் தாய் மண்ணை விடவும் மொழியை நேசித்தவர் . உண்மையை சொல்லப் போனால் தன் மொழியைப் பற்றி இவரளவிற்கு எழுதியவர்கள் யாரேனும் இருப்பார்களா? என்பது தெரியவில்லை.

பாரதி தாசன் கவிதைகளில் சில இடங்களில் வடமொழிச் சொற்கள் இருப்பதாகவே படுகிறது. ஆனால் அதை வைத்துக் கொண்டு அவரது எதிர்ப்பாளர்களாலேயே அவரது மொழித் தூய்மையை அசைத்துவிட முடியாது.

ஆனால் அப்படிப்பட்ட புரட்சிக் கவிஞர் தனது பெயரிலேயே தாசன் என்ற வடமொழிச் சொல்லை ஏன் அனுமதித்தார்?

காலைச் சொறிவதற்கும் தலையைக் குனியாத வணங்கா முடியான அவர் ஏன் அடிமை எனப் பொருள் தரும் தாசன் என்ற சொல்லை தனது பெயராக்கினார்?

பார்ப்பன எதிர்ப்பில் மிகத் தீவரமாக இருந்த கனக சுப்புரத்தினம் பாரதி என்ற பார்ப்பனருக்கு தாசனாக மாறியது ஏன்? அது சரிதானா? அவர் காலத்தில் அது பற்றிய விவாதம் நடந்ததா?

பொதுவாகவே பாரதியை பாரதியாகவும் பாரதி தாசனை பாரதி தாசனாகவும் பார்க்கிற போக்கு மொழித் தளத்தில் குறைந்து கிடக்கிறது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமல்ல. யாரையும் அவராகப் பார்க்காமல் சார்ந்து பார்த்து மிகைப் படக் கொண்டாடுவதோ அல்லது நியாயமே இல்லாத அளவிற்கு நார் நாராய்க் கிழிப்பதோதான் இன்றைய மரபாக இருக்கிறது.

பாரதியை எற்றுக் கொண்டாடும் பலர் இன்னமும் பாரதி தாசனைத் தீண்டவேத் தயங்குகிறார்கள் என்பதில் ஏகத்திற்கும் உண்மை இருக்கவே செய்கிறது.

பாரதி தாசனை ஏற்றுக் கொண்டாடும் பலர் பாரதியை நிராகரிக்கிறப் போக்கும் இருக்கவே இருக்கிறது.

இது ஏதோ இலக்கியத்தில் மட்டுமல்ல சமூகத் தளத்திலும் பெரியார் தனது தலைவராக ஏற்றுக் கொண்ட அம்பேத்கரை ஏற்காத வறட்டுத்தனமான பெரியாரிஸ்டுகளும்,அம்பேத்கர் தனது தலைவராக ஏற்றுக் கொண்ட பெரியாரை ஏற்காது கிழிக்கும் வறட்டுத் தனமான அம்பேத்காரிஸ்டுகளும் இருக்கவே செய்கிறார்கள்.

பாரதியை ஒரு சந்தன மரம் போன்றவர் என்று சொல்லுவார் பாரதிதாசன்.

பொதுவாகவே சந்தன மரத்திற்கென்று ஒரு குணம் உண்டு. என்னதான் இழைக்க இழைக்க மணத்தைத் தந்தாலும் சந்தன மரத்திடட் கொள்வதற்கு கொஞ்சமும் பொருட்டற்ற குணம் ஒன்று உண்டு. அது தன் நிழலில் எந்த ஒரு தாவரமும் வளர்வதற்கு அனுமதிக்காது. ஆனால் பாரதி என்ற சந்தன மரம் பாரதிதாசன் என்ற சந்தன மரத்தை தன் நிழைலேயே வாஞ்சையோடு வளர அனுமதித்து இருக்கிறது.

இந்தச் சூழலில் கனக சுப்புரத்தினம் தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டதற்கு பாரதிதாசன் காலத்தில் அல்ல பாரதிதாசனிடத்திலேயே இது குறித்த விமர்சனம் சென்றிருக்கிறது என்பது ச.சு .இளங்கோவனது “ பாரதி தாசன் பார்வையில் பாரதி” என்கிற நூலில் காணக் கிடக்கிறது.

பட்டுக்கோட்டை அழகிரி அவர்களுக்கு இது நெருடலாகப் படவே அவர் பாரதி தாசனை சந்தித்த ஒரு பொழுதில்

“ பாரதி ஒரு பார்ப்பனர் ஆயிற்றே, போகவும் தாசன் என்றால் அடிமை என்று பொருள் வருமே. பாரதிதாசன் என்றால் பாரதிக்கு அடிமை என்றாகிவிடாதா?”

அவர் முடிக்கும் முன்னரே இடை வெடித்தார் பாரதி தாசன்

“ ஆமாண்டா, நான் பாரதிக்கு அடிமைதாண்டா”

ஏறத்தாழ இதே மாதிரி ஒருக் கேள்வியைக் கேட்ட மதுரை சீனிவாசன் அவர்களிடம்,

“இதன் உள் நோக்கம் புரிகிறது. குறும்புத் தனமானது. அய்யருக்கு அடிமையா என்பது போலத்தான் இதுவும். நான் என்றென்றும் உளமாரப் போற்றி வழி படுகிற தெய்வம் இந்த அய்யர். அன்பும் தமிழுணர்வும் ஒருங்கு சேர்ந்த பொன்னுருவம் அவர்.பாரதியாருக்கு நான் தாசனாக இருப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை?

இந்த வினாவினை யார் விடுத்தாலும் எனக்கு கோவம் வரும். ஏனெனில் கழகத்தவர்களோ முன்னேற்றம் காணத் துடித்தவர்களோயாராக இருந்தாலும் சரி, சீர்திருத்தம் எனும் சொல்லை எழுத்துக் கூட்டி வாசிக்கக் கற்றுக் கொள்வதற்கு பல நாட்களுக்கு முன்னரேதமது வாழ்க்கையில் சீர்திருத்த செயலகள் பலவற்றை செய்து காட்டியவர் பாரதியார்”

எள்ளும் கொள்ளுமாய் வெடித்த கவிஞரின் முகத்தைப் பார்த்த சீனிவாசனும் அவரது நண்பர்களும் எதுவும் பேசாமல் போய்விட்டார்களாம்.

“பாரதியின் மீது உங்களுக்கு பற்று இருக்கலாம். அதில் நாங்கள் தலையிட முடியாது. ஆனால் ‘பாரதி தாசன்’ என்று நீங்கள் பெயர் வைத்திருப்பது எங்களுக்கு சரியாகப் படவில்லையே. கொஞ்சம் பரிசீலிக்கலாமே? “ என்று பேராசிரியர். க. அன்பழகன் அவர்கள் ஒருமுறை கேட்டிருக்கிறார்.

”பாரதியைப் பற்றி மற்றவர்கள் தவறாகக் கருதுவது போலவே நீயும் கருதுகிறாயே!அவரோடு நான் பன்னிரெண்டு ஆண்டுகள் பழகியிருக்கிறேன். அவருடைய உள்ளத்தில் சாதி வேறுபாடு அறவே இல்லை.பிராமணர்களை அவர் துளிக் கூட மதிப்பது இல்லை. அது போக என்னுடைய கவிதைகளில் கிடைக்க்ற முற்போக்கு கருத்துக் க்மளுக்கும் அவரே காரணம்.

எல்லோரிடமும் சினந்து வெடித்த பாரதிதாசன் மிகுந்த கனிவான குரலில் அவருக்கு பதில் சொல்லியிருக்கிறார். ஆக பெயர் குறித்த விவாதம் பாரதிக்கும் பாரதி தாசனுக்கும் இடையில் இருந்த உறவினயும் உபரியாகத் தருகிறது.

அடிமைத் தனத்தை வேரோடு சாய்க்க போராடும் நீங்கள், யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்று கருதும் நீங்கள் எப்படி இப்படி? என்பது மாதிரி கேட்ட தோழர் தா. பாண்டியன் அவர்களுக்கு

“அடிமைப்புத்தியை விரும்பாத நானே ஒருவருக்கு தாசன் என்று சொல்லிக் கொள்வேன் என்றால் அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பார் என்று யோசிக்க மாட்டாயா பாண்டியா”

ஆக,

பெயரில் இருக்கிறது.

நன்றி : காக்கைச் சிறகினிலே

Monday, April 16, 2012

உயிர்த்தெழுகை

இப்போதெல்லாம் அலைபேசியின் அழைப்பொலியினை ரசிக்க முடிவதில்லை. எந்தக் கடன்காரனோ, எப்படித் திட்டப் போகிறானோ, அதற்கு என்ன சொல்லி சமாளிக்கப் போகிறோமோ என்று மனது கிடந்து பதை பதைக்கிறது.

அழைப்பொலி கேட்டவுடன் எண்ணைப் பார்க்காமல் அலைபேசியை எடுத்து யாராவது பேசினால், ஒன்று அவன் கடனற்றவனாக இருக்க வேண்டும் அல்லது எதற்கும் பயப்படாதவனாக இருக்க வேண்டும்.

“அப்பா குளிக்கிறாங்க”, “அப்பா செல்லை வச்சுட்டுப் போய்ட்டாங்க” இப்படி ஏதாவது சொல்லிக் கடன்காரர்களை சமாளிக்கப் பழக்கியிருக்கேன் பிள்ளைகளை.

“அம்மா, கடங்காரங்களுக்கு பயந்துகிட்டு அப்பா இருபத்தி நாலு மணி நேரமும் குளிச்சுக்கிட்டே இருக்கப் போறார், வேணாப் பாரேன்” பையனின் எள்ளல் இப்போதெல்லாம் கொஞ்சம் எல்லையைத் தாண்டினாலும் இனிக்கவே செய்கிறது. ரசிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். கடன், ரசனையை மெருகு செய்திருக்கிறது.

பேப்பர் காரனுக்கு நான்கு மாத பாக்கி. காலையில் அவன் வரும் நேரன் பார்த்து டாய்லெட்டில் நுழைந்து கொள்வேன். இன்னும் மூன்று தெருக்களாவது போக வேண்டும் அவன். எனக்காக அவன் காத்திருக்க இயலாது.

“ சார கொஞ்சம் கவனிக்கச் சொல்லுங்கக்கா” என்றபடி ஓடிவிடுவான். இன்று காலை வரை அதுதான் வாடிக்கை.

சனிக்கிழமை நான் வீட்டில்தான் இருப்பேன் என்பதைத் தெரிந்துகொண்டு அன்று மதியம் வீட்டிற்கு வந்து விட்டான். ஏறத்தாழ விடாக் கண்டனாய் மாறியிருந்தான். என்ன சொல்லியும் நகர மறுத்தான். “அக்காட்ட இருக்கும் கொஞ்சம் வாங்கிக் கொடுங்க சார், இல்லாட்டி மேல் வீட்டிலாச்சும் கொஞ்சம் கேட்டு வாங்கிக் கொடுங்க சார்” என்று நச்சிக் கொண்டே நகர மறுத்தான்.

இந்த நேரம் பார்த்து , உதவுகிறோம் என்பது தெரியாமலேயே உதவிக்கு வந்தான் பையன். ‘அப்பா, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுன்னு ஃப்ளாஷ் ஓடுது, வந்து பாரேன்,”

“அடுத்த புதன் வந்து வாங்கிக்கப்பா”  படபடவென்று சொல்லிவிட்டு ஃப்ளாஷ் பார்க்கிற சாக்கில் உள்ளே ஓடினேன். போனானோ, இல்லை அங்கேயே நின்று முனகிக் கொண்டிருக்கிறானோ தெரியவில்லை.

“டி. ஏ போட்டாச்சு , வந்து பாரேன் விட்டு,” உற்சாகத்தில் கத்தினேன்.

“என்ன வந்து என்னத்துக்கு ஆகப் போகுது? வானத்தையே வளச்சுக் கொடுத்தாலும் அடகு வச்ச தாலிக் கொடிய மட்டும் திருப்பித் தரப் போறதில்ல. கட்டையில போறவரைக்கும் இந்தக் கவரிங் செயினதான் கட்டிக்கிட்டு மாரடிக்கனும்னு எழுதி வச்சிருக்கு. பாசிப் படர்ந்த மாதிரி செயின் பட்ட இடமெல்லாம் பச்சப் பச்சையா, வெயில் நாள்னாஒரே எரிச்சலும்  அரிப்பும்தான். எல்லாம் வாங்கி வந்த வரம் அப்படி,”

கூப்பிடக் கூடாத நேரத்தில் விட்டுவைக் கூப்பிட்டால் இப்படி வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். இது ஒன்றும் புதிதும் அல்லதான். இதுமாதிரி வாங்கிக் கட்டிக் கொள்ளாத மத்திய தர வர்க்கத்து புருஷன்மார்கள் யாரேனும் இருப்பார்கள் எனில், ஒன்று அவர்களுக்கு வேறு வருமானம் இருக்கும் அல்லது ‘தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு’ என்று சுருங்கிப் போனவராக இருக்க வேண்டும். என்ன சொல்லி என்ன, வாங்க வேண்டியதை வாங்கியாகிவிட்டது.

அப்போது பார்த்துதான் அலைபேசியில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த மகள்,

“செல்வ பாண்டியன் மாமா லைன்ல. எங்க போயிருக்கீங்கன்னு சொல்லட்டும்?”

“வர வர குட்டிப் பிசாசுக்கு குசும்பு ஜாஸ்தியாயிடுச்சு!” மகளின் நக்கலை ரசித்தபடியே அவளிடமிருந்து அலை பேசியைப் பிடுங்கினேன்.

அவரது அழைப்புக்காத்தான் காத்திருந்தேன்.அப்பாவை ஒரு நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்துப் போக வேண்டி இருந்தது. ஒரு மாதமாகவே கொஞ்சம் கூடுதலான மன அழுத்தத்தோடு இருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் செத்துப் போன எனது அம்மா உயிரோடு வந்திருப்பதாகவும் அப்பாவைத் தேடிக் கொண்டிருப்பதாகவும்சொல்லி அவரைஒரு ஜோசியக் கும்பல் உசுப்பிவிட்டு அப்பாவின் ஓய்வூதியத்தில் பெரும்பகுதியைக் காலி செய்து கொண்டிருந்தனர்.

அந்தக் கும்பலை விரட்டிவிட்டு அப்பாவை மீட்டெடுத்து வருவதற்குள் அவரின் மனநிலை மருத்துவர் தேவைப் படுமளவிற்குப் பழுது பட்டிருந்தது.

அம்மா படத்திலிருந்த மாலையைக் கழற்றினார். ஏனென்று கேட்டால் “ அவதான் உயிரோட வந்துட்டாளேடா” என்றார். சரியாகிவிடும் என்றெண்ணி கவனிக்காமல் விட்டதன் விளைவை அனுபவிக்கத் தொடங்கியிருந்தோம்.

சாலையில் ஏதேனும் ஆட்டோ சத்தம் கேட்டு விட்டால் கூடப் போதும், அம்மாவாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்போடு எட்டிப் பார்க்க ஆரம்பித்தவர், நாளாக நாளாக பேரனை அழைத்து “ தம்பி, அப்பாயிதானான்னு பாரு, அவளாயிருந்தா பையக் கொஞ்சம் தூக்கிட்டு வாடா, பாவம்” என்றெல்லாம் பிதற்றவே ஆரம்பித்து விட்டார்.

“அப்பாயி எங்க தாத்தா வெளிய போச்சு, ஆட்டோல திரும்பறதுக்கு. அதுபாட்டுக்கு தோசைய சுட்டுட்டு இருக்கு சிவனேன்னு. பொலம்பாம தூங்குங்க தாத்தா” சலித்துக் கொள்கிறான்.”இவள சொல்லலடா, உங்க பெரிய அப்பாயிய சொன்னேன்”

“ அப்பாயி, தாத்தாவ வந்து என்னன்னு கேளு. செத்துப் போன அப்பாயி கல்லறையிலிருந்து எழுந்து வருதாம். நீ கட்டிக்கிட்டதும் லூசு, பெத்துக்கிட்டதும் லூசு அப்பாயி”

“என் மவன இன்னொருதரம் லூசுன்னு சொன்ன அப்படியே கொமட்டுலயே குத்திப் புடுவேன் ஆமா. தங்கம்டா அவன்”

“மகன சொன்னதும் அப்படியே பொத்துக்கிட்டு வருது பாருடா உங்க அப்பாயிக்கு. தங்கமாம்ல. அப்படி கிப்படி தங்கமா இருந்துட்டாதான் பரவாயில்லையே ! அப்படியே தூக்கிட்டுப் போய் அந்த அறுபது கிலோவையும் அடகு வச்சிட்டு அந்த அருமத் தங்கம் வாங்கி வச்சிருக்க கடனையெல்லாம் அடச்சிருக்கலாமே.”

“ஏம்மா அடகெல்லாம் வச்சிட்டு, பேசாம வித்துட்டே செட்டிலாயிடலாமே...” பையன் முடிக்கவும் அம்மா உட்பட எல்லோரும் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இப்படித்தான் அப்பாவை வார ஆரம்பித்து என்னில் வந்து முடியும் ஒவ்வொரு முறையும்.

செல்வபாண்டியன் மருத்துவத் துறையில் இருப்பதால், அவரிடம் ஆலோசனைக் கேட்டிருந்தேன்.அவருக்குத் தெரிந்த மருத்துவரிடம் நேரம் வாங்கிக் கொண்டு தெரிவிப்பதாக சொல்லியிருந்தார். அநேகமாக அதற்காகத் தானிருக்கும்.

ஒரு சன்னமான புன்னகையோடு அப்பாவை வரவேற்றார் மருத்துவர்.

“உங்க பிறந்த நாள் என்னங்க சார்?” என்ற எளிய கேள்வியோடுதான் மருத்துவர் தொடங்கினார்.

அப்பாவின் தெளிவும் தமிழ் தேசிய அரசியலும் மருத்துவரோடு ஒத்திசைந்து போகவே, இருவரும் நண்பர்கள்ளாய் மாறி நிறையப் பேசினார்கள். நானும் செல்வபாண்டியனும் பார்வையாளர்களாய் மாறிப் போயிருந்தோம்.

இறுதியாய் அந்தக் கேள்வியைக் கேட்டார்.

“மரித்தவர்கள் மீண்டும் உயிரோடு வரமுடியுமா சார்?”

“ நிச்சயமாய் இல்லை. ஆனாலும் என்னோட வொய்ஃப்பை மீண்டும் உயிரோடு பார்த்ததாக சொல்கிறார்கள்”

மருத்துவர் எதுவுமே பேசவில்லை. “ பாண்டியன், சாரை பக்கத்து ரூமுக்கு கூட்டிட்டுபோய் பி.பி செக் பன்னுங்க” என்றவர் ஒரு புன்னகையோடு அப்பாவை வழி அனுப்பி வைத்தார்.

எழுந்த என்னை அமரச் செய்தார்.

“ஒன்னும் பயப்பட வேண்டாம்.ஆறு மாசத்துல எல்லாம் சரியாப் போயிடும். தொடர்ந்து மருந்துகளைக் கொடுங்கள்.பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கூட்டிட்டு வாங்க. அதிகமா தூங்கினாலோ அல்லது சரியா தூங்கலைனாலோ உடனே கூட்டிட்டு வந்துடுங்க.”

ஏராளமான நம்பிக்கையோடு அப்பாவை அழைத்துக் கொண்டு வீடு வந்தேன்.

அம்மாவிடமும் விட்டுவிடமும் விவரங்களைச் சொல்லிவிட்டு, வாங்கி வந்த வண்ண வண்ண மாத்திரைகளை தனித் தனி டப்பாக்களில் கொட்டிக் கொண்டிருந்தபோதேன். ஓடி வந்த மகள் கேட்டாள்,

“இந்த மாத்திரை எதுக்குப்பா?”

“ இது தாத்தாவுக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்”

“ இது?” அடுத்த மாத்திரையைக் காட்டினாள்.

“இது தாத்தாவுக்கு மன அமைதியையும் நிம்மதியையும் கொடுக்கும்.”


“அப்படின்னா, நீயும் சித்தப்பாவும் தாத்தாவுக்கு என்னத்தத்தான் கொடுப்பீங்க?”

நன்றி : கல்கி 16.05.2010



Saturday, April 14, 2012

முரட்டு மொழிப் பற்றாளர்

அது ஒரு புகழ் பெற்ற பள்ளி.

நல்ல வெய்யில். அந்தப் பள்ளியின் மைதானத்தில் முழங்காலில் வெகு நேரமாக நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறாள். அவள் மன்னிப்பதற்கே அருகதையற்ற மிகக் கொடூரமான குற்றத்தை இழைத்திருப்பதாக சொல்லப்பட்டது.

அப்படி என்ன கொடூரமான மன்னிப்பை கோருவதற்கே லாயக்கற்ற செயலை செய்து விட்டாள்.

அவளது வகுப்பு ஆசிரியரைப் பார்த்து தனது குழந்தை எப்படிப் படிக்கிறாள் என்பதை தெரிந்து கொள்வதற்காக அவளது தாயார் வந்திருக்கிறார். மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தனது தாயைப் பார்த்ததும் “அம்மா” என்று அழைத்து விட்டாள். குழந்தை அழைத்தது அவளது அம்மாவின் காதுகளில் விழவில்லை. ஆனால் ஆசிரியை ஒருவரின் காதுகளில் விழுந்துவிட்டது.

அதற்கானத் தண்டனையாகத்தான் அந்தக் குழந்தை முழங்காலில் நின்று கொண்டிருக்கிறாள்.

ராணுவ ரகசியத்தை கால் டஜன் மதுப் புட்டிகளுக்காக விற்ற கயவர்களுக்குக் கூட இத்தகைய கடுமையான தண்டனை தரப் பட்டதில்லை.

“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்று முழங்குகிற தமிழ் மண்ணில்தான் இது நடந்தது.

இன்னும் சொல்லப் போனால் உலகில் எந்த நாட்டிலும் தன் தாய்மொழியை வாழ்க என்று அரசு அலுவலகங்களில் பலகை வைக்க வேண்டும் என்று சட்டமோ நடைமுறையோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அங்கெல்லாம் இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்ததாகவும் தெரியவில்லை. ஆனால் “தமிழ் வாழ்க “ என்று எல்லா அரசு அலுவலகங்களிலும் பலகை வைக்கவேண்டும் என்பதும் , இரவு நேரங்களில் “தமிழ் வாழ்க “ என்பது வண்ண விளக்குகளால் ஜொலிக்க வேண்டும் என்பதும் நடைமுறை.

இந்தத் தமிழ் மண்ணில்தான், தமிழக அரசு வழங்கிய அங்கீரகாரத்தில் தமிழக அரசின் ஆளுகையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு பள்ளியில்தான் பெற்ற அம்மாவை அம்மா என்று அழைத்ததற்காக கொளுத்தும் வெய்யிலில் முழங்காலில் நிற்க வேண்டிய கொடுமை.

இது நடந்து ஏறத்தாழ பத்துப் பதினைந்து ஆண்டுகள் கடந்திருக்கும். வளாகத்திற்குள் தமிழில் பேசியதால் பள்ளி களங்கப் பட்டுவிட்டதாக காரணம் சொல்லப் பட்டது.

இதைத்தானே மதப் பழமைவாதிகளும் சொல்கிறார்கள். வழிபாட்டை தமிழில் நடத்தினால் ஆலயம் தீட்டுப் பட்டுவிடும் என்கிறான் மதப் பழமைவாதி. பள்ளியில் தமிழில் பேசினால் பள்ளி களங்கப் பட்டுவிடும் என்கிறான் நவீன கல்வி வியாபாரி.

இன்றைக்கு இருக்கிற பெரும்பான்மை அதிகாரிகளும் இதை ஆதரிக்கவே செய்கிறார்கள். பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வரக் கூடிய மாணவனுக்கு ஆங்கிலத்தில் பிழையின்றி பேச எழுத முடியவில்லையே என்று ஆதங்கப் படும் இவர்களுக்கு அவனுக்கு தமிழிலும் பிழையின்றி எழுதவோ படிக்கவோ இயலாது என்பது ஒருபோதும் உறுத்துவதே இல்லை.

மேத்தாதான் சரியாக சொன்னார்,

“தமிழ் தெரியாது
என்பதே
இங்கு தனித் தகுதி” என்று

ஆனால் இதற்கு நேர் எதிராக ஒரு அதிகாரி இருந்திருக்கிறார். கல்விக்கண் திறந்த காமராஜருக்கு மிகவும் பக்க பலமாக இருந்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் காமராஜர் கல்வியின்பால் கவனத்தைத் திருப்புவதற்கான சில காரணங்களுள் மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார்.

அவர் நெ.து. சுந்தரவடிவேலு.

கல்வி பரவலாக்கப் பட்டதில் கிராமம் கிராமமாக பள்ளிகள் திறக்கப் பட்டதிலும் அவரது இடம் குறித்து பதியப் பட்ட அளவிற்கு அவரது மொழிப் பற்று பற்றி பதிவுகள் இல்லை. முரட்டுத் தனமான மொழிப் பற்றாளராகவே அவர் இருந்திருக்கிறார்.

1944 ஆம் ஆண்டில் சேலத்தில் அவர் கல்வி அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார்.அந்த ஆண்டு மே மாதத்தில் சேலம் மாவட்ட “ஆசிரியர் கழகம்”  மாநாடு ஒன்றினை நடத்துகிறது. மாநாட்டினைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற நெ. து. சுந்தரவடிவேலு அவர்களை அழைக்கிரார்கள்.

தலைமையேற்ற திருச்சி தேசியக் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் ராமைய்யர் தொடக்கம், வரவேற்புரை வழங்கியவர், ஆண்டறிக்கை வாசித்தவர், நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தவர் என்று எல்லோருமே ஆங்கிலத்தில்தான் பிளந்து கட்டியிருக்கிறார்கள்.

அடுத்ததாக மாநாட்டைத் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றுமாறு ஆங்கிலத்திலேயே அழைக்கப் பட்டிருக்கிறார் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள். அவரது மாண்புகளை சொல்லி கைத்தறி ஆடை அணிவித்தவரும் ஆங்கிலத்திலேயே அளந்து தள்ளியிருக்கிறார்.

நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் தமிழில் தொடங்கி, தனது நாற்பத்தி ஐந்து நிமிடப் பேச்சையும் தமிழிலேயே முடித்திருக்கிறார். அவர் சொல்கிறார்,

“அவையோரில் நூற்றுக்கு எண்பது பேர்களுக்கு மகிழ்ச்சி பொங்கிற்று, மற்றவர்களுக்கு ஏமாற்றம்,எரிச்சல், ஏதோ தீட்டுப் பட்டுப் போன உணர்வு: இதற்கு நான் என்ன செய்ய?”

அவரது தமிழ்ப் பேச்சை அந்த இருபது சதம் பேரும் முகச் சுளிப்போடும் ஒருவித அறுவெறுப்போடும் பார்த்திருக்கிறார்கள். அவரது ஆங்கிலப் புலமையை சந்தேகப் பட்டிருக்கிறார்கள். ஆங்கிலம் தெரியாதவரை ஏன் அழைத்து வந்தீர்கள், அவை இப்படி தீட்டுப் பட்டுப் போனதே என்று அழைத்து வந்தவர்களைப் பார்த்து அங்கலாய்த்திருக்கிறார்கள். “அவருக்கு ஆங்கிலம் தெரியும் என்றுதான் அழைத்தோம். இப்படி செய்வார் என்று யாருக்குத் தெரியும்” என்று அவரை அழைத்து வந்தவர்கள் நொந்து போயிருக்கிறார்கள்.

இப்படியாக அவரை மிகக் கேவலமாகப் பார்த்திருக்கிறார்கள். “ இப்படி, ஆங்கிலம் தெரியாத ஒருவரை” அதிகாரியாகப் பெற்றிருக்கிற கல்வித் துறையை நொந்து கொண்டிருக்கிறார்கள். அவரை நியமித்த அரசினை சபித்திருக்கிறார்கள். ஆனாலும் வளைந்து குனிந்து வணங்கிய வாறே மதிய உணவிற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

சேலம் கல்லூரியின் முதல்வர் ராமசாமிக் கவுண்டரின் மைத்துனர் அருணாச்சலமும் மாநாட்டிற்கு வந்திருக்கிறார். அவர் நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் மரியாதையும் பற்றும் கொண்டிருப்பவர். அவர் சுந்தரவடிவேலு அவர்களைப் பற்றி கேவலமாகப் பேசியவர்களை எதிர் கொண்டிருக்கிறார்.

ஆங்கிலம் தெரியாத ஒருவரை எப்படி ஏற்று மதிப்பது என்று சொல்லியிருக்கிறார்கள். அருணாச்சலமும் ஆங்கிலத்திற்கும் மரியாதைக்கும் என்ன சம்பந்தம் என்றோ, தமிழில் பேசினால் என்ன கேவலமெறோ எதிர்கொள்ளவில்லை.

எல்லோரும் உளறுவது போல் அல்ல நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும் என்று வாதாடி வம்படித்திருக்கிறார்.

சரி, அப்படியென்றால் மாலை வாய்ப்பு தருகிறோம் அவரை ஆங்கிலத்தில் பேசச் சொல்லுங்கள் என்றிருக்கிறார்கள். அருணாசலமும் இன்னும் இரு நண்பர்களும் இந்தக் கோரிக்கையோடு நெ.து. சு அவர்களை அணுகியிருக்கிறார்கள். மறுத்து அவர் சொல்லியிருக்கிறார்,

“ஆங்கில உரையாற்றி என்னை உயர்த்திக் கொள்வதில் உள்ள பற்றைக் காட்டிலும்தமிழில் பேசி, தமிழரின் நம்பிக்கையை வளர்ப்பதே என் குறிக்கோள்”

இந்த உன்னதமான குறிக்கோள் மட்டும் கல்வித்துறை அதிகாரிகளாலும் கல்வியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களாலும் கொண்டுபோகப் பட்டிருப்பின் விளைவுகள் எப்படி இனித்திருக்கும்?

மொழித் தளத்தில் அறியப் படாத அல்லது கொண்டாடப் படாத முரட்டு மொழிப் பற்றாளராகவே படுகிறார் நெ.து.சுந்தரவடிவேலு.

Thursday, April 12, 2012

உச்சங்களின் முதல் சந்திப்பு

உரசிக் கொள்ளும் உச்சங்களே வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களெங்கும் விரவிக் கிடக்கின்றன. உச்சங்கள் இரண்டு சந்திப்பது என்பதே வரலாற்றில் எப்போதாவது நிகழ்வதுதான். இப்படியிருக்க உச்சங்களில் ஒன்று குருவாகவும் இன்னொன்று சிஷ்யனாகவும் , இறுதிவரைக்கும் அன்போடும் அரவணைப்போடும் வாழ்ந்து செத்த வரலாறு உண்டெனில் ஆச்சரியம் எழவே செய்யும். காரணம் உச்சங்கள் அடிமைகளையே அருகிருக்க விரும்புவதும், தகுதி இல்லாத காரணங்களுக்கும் மற்றவர்கள் தங்களைப் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதிலும், நிதானம் இல்லாத நிலையிலும் தாம் யாரையும் மறந்தும் பாராட்டிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கும் . இதைத்தான் நம் தாத்தனும் அப்பனும் நாமும் கண்டோம். நாளை நம் பிள்ளைகளும் இதைத்தான் காண்பார்கள்.


விதிவிலக்காய் வாழ்ந்த அந்த இரண்டு உச்சங்களும் தமிழர்கள் என்பது நம்மை இன்னும் கொஞ்சம் கூடுதலாக மகிழ்ச்சிப் படுத்தும். எதற்கு சுத்தி வளைத்துக் கொண்டு? பாரதியும் பாரதிசானும்தான் அந்த இரண்டு உச்சங்கள் என்பதை நான் சொல்லித்தான் யாருக்கும் தெரிய வேண்டும் என்பதும் இல்லை.

இவர்களது முதல் சந்திப்பு மிக மிக சுவையானது.

பாரதிதாசன் புதுச்சேரியில் வாத்தியார் என்றும் வெகு மக்களால் அறியப்பட்டார். அவர் தமிழாசிரியர் என்பதால் யாரும் அப்படி அழைக்கவில்லை.அவர் சிலம்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர் என்பதாலேயே அவ்வாறு அழைக்கப் பட்டார். மாலை நேரங்களில் அவரும் அவரொத்த இளைஞர்களும் தெருவில் கம்பு சுழற்றி விளையாடுவதுண்டு. அதுமாதிரி சமயங்களில் பாரதி அந்த வழியே போவதும் உண்டு. போவது தாம் பெரிதும் நேசிக்கும் பாரதி என்பதை அறியாத பாரதிதாசன் பாரதியின் நகைப்புக்குரிய தோற்றத்தைக் கண்டு அவருக்கு “ரவி வர்மா பரமசிவம்” என்று பெயர் வைத்து நண்பர்களோடு சேர்ந்து நக்கல் செய்ததும் உண்டு.

கொட்டடி வாத்தியார் வேணு நாயக்கர் இல்லத் திருமணத்திற்கு பாரதி தாசன் சென்றிருந்தார். அனைவரும் பாடச் சொல்லி வற்புறுத்தவே அவர் பாடத் தொடங்கினார். பாரதிதாசன் நல்லபாடகர் என்பதும் பலருக்கு தெரியாத சங்கதிதான்.

அந்தத் திருமணத்திற்கு பாரதியாரும் வந்திருந்தார். அவரை மிகுந்த பணிவோடும் பவ்யத்தோடும் வேணு நாயக்கர் தொடர்ந்து உபசரித்து கொண்டே இருந்தார்.

இந்த ரவிவர்மாவைப் போய் வேணு நாயக்கர் இப்படி விழுந்து விழுந்து உபசரிக்கிறார் என்பது பாரதிதாசனுக்கு அப்போது விளங்கவே இல்லை.

பாடுவதை முடித்துஇக் கொள்ள இருந்த பாரதிதாசனை பார்த்து வேணு நாயக்கர்,

“ கனகு, இன்னுமொரு பாடலைப் பாடுங்கள்”

“தொன்று நிகழ்ந்தது அனைத்தும்” என்ற பாரதியின் பாடலை பாடுகிறார். எல்லோரும் ரவி வர்மாவையே பார்க்கிறார்கள். இது இன்னும் ஆச்சரியப் படுத்துகிறது பாரதிதாசனை.

பாடுவது நாம். பாடல் பரதியுடையது. இவர்கள் ஏன் ரவி வர்மாவைத் திரும்பிப் பார்க்கிறார்கள்? குழம்பித்தான் போனார் பாரதிதாசன்.

அவர் இறங்கி வரும் போது அவரை நோக்கி  பாரதியாரை அழைத்து வந்தார் வேணு நாயக்கர்.

முனைவர். ச. சு. இளங்கோ எழுதிய “பாரதிதாசன் பார்வையில் பாரதி” என்ற நூலை வாசிக்கிற வரைக்கும் சிறு பிள்ளை மாதிரி ஒரு ஆசை எனக்கு இருந்தது. பாரதியும் பாரதிதாசனும் சந்தித்துக் கொண்டபோது யார் முதலில் பேசியிருப்பார்கள்? விடை இந்த நூலில்தான் கிடைத்தது.

வேணு நாயக்கர், பாரதி , பாரதிதாசன் மூவரும் அருகருகே நிற்கிறார்கள். வேணு கேட்கிறார்,

“கனகு, இவங்க யாருன்னு தெரியுதா?”

“இல்லையே”

“தமிழ் வாசிச்சிருக்கீங்களா?”

ஆஹா, பாரதிதான் அவனது சிஷ்யனிடம் முதலில் பேசியிருக்கிறான்.

“கொஞ்சம்” பாரதிதாசனிடமிருந்து அடக்கமாக பதில் வருகிறது.

நம்மில் பலர் படித்து முடித்து விட்டு சும்மா இருப்பதாய் சொல்லிக் கொள்ளும் போது பாரதிதாசனிடமிருந்து கொஞ்சம் கற்றுக் கொண்டிருப்பதாய் வந்த பதிலில் நமக்கு கற்றுக் கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது.

 “ உணர்ந்து பாடுகிறீர்கள்”

பாரதி தாசன் இவர் யார் என்பதான ஒரு பார்வையை வேணு நாயக்கர் மீது வீசுகிறார்.

“இவங்களத் தெரியலையா. இவங்கதான் நீங்க பாடுன பாட்டை எல்லாம் போட்டது. சுப்பிரமணிய பாரதின்னு பேரு.”

அப்படியே உறைந்து போகிறார் பாரதிதாசன்.

“ வேணு இவரை ஏன் இது வரைக்கும் வீட்டுக்கு அழைத்து வரல?”

பாரதிதாசன் சொல்கிறார்,

”அந்த வார்த்தையை அவர் வெளியிட்டவுடன், அது என் நினைவில் தங்காது என்னை ஏமாற்றி விடுமோ என்று அதன் முதுகில் ஏறி அமர்ந்து அமிழ்த்திக் கொண்டேன்”



Tuesday, April 10, 2012

பெரிதினும் பெரிதாய்...

நிற்பதற்கும் நகர்வதற்கும் அப்படியொன்றும் அதிகம் வித்தியாசமில்லாத ஒரு வேகத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது பேருந்து. தலையில் அடித்துக் கொள்வது, முனகுவது அல்லது இப்படி ஏதாவது ஒரு வகையில் பயணிகள் தங்களது எரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். சிலர் ஓட்டுநரை நோக்கி சத்தமாக கத்தவும் செய்தனர்.

அவரவர் அவசரம் அவரவர்க்கு.

ஆனால் சிவாவிற்கு அவசரப் படுமளவிற்கு தலை போகிற வேலை எதுவுமில்லை. போகவும், பேருந்துகளை ஒழுங்காகப் பராமரிக்காத அரசாங்கத்தின் மீது வர வேண்டிய கோவத்தை ஓட்டுநர் மீது திருப்புவதில் துளியும் சம்மதம் இல்லை அவனுக்கு. ஆகவே பேருந்தின் வேகம் குறித்து எந்த அபிப்பிராயமும் அவனுக்கு இருக்கவில்லை.

அதுமட்டுமல்ல, பேருந்து மெதுவாய் நகர்வதிலும் ஒரு வசதி இருக்கவே செய்தது அவனுக்கு. நாளை மாலை “பெரிதினும் பெரிதாய்..”என்ற தலைப்பில் அவன் பேச இருந்தான். பாரதி, பகத் சிங், காந்தி, பெரியார், மார்க்ஸ் என்றும், பெரும்பான்மை புரட்சிகளிடமிருந்தும் ஏராளம் குறிப்புகள் அவனிடமிருந்தன.

சாமானிய உழைக்கும் திரளின் பெருமையை, தியாகத்தை, மேன்மையை எடுத்துச் சொல்லாவிட்டால் பேச்சு நிறைவடையாது என்பது மட்டுமல்ல, அது யோக்கியமாகவும் இருக்காது என்றே அவன் எண்ணினான்.

எப்படிக் குடைந்தும் எதுவும் அகப் படவில்லை.கண்களை மூடிக் கொஞ்சம் அமைதியாய் யோசித்தால் ஏதேனும் அகப்படக்கூடும் என்று தோன்றியது. அதற்கு பேருந்தின் மித வேகம் வசதியானது என்பதால் மிக அமைதியாக எந்த வித சலனமும் கொள்ளாமல் இருந்தான்.

என்ன யோசித்தும் எதுவும் தட்டுப் படாமல் போகவே இவனுக்குள்ளும் கொஞ்சம் அயர்வு வரவே செய்தது. தங்களது பேருந்தினை முந்திச் செல்லும் வாகனங்களை ஒன்று இரண்டு என்று எண்ணத் துவங்கினான். அவனுக்கும் பொழுது போக வேண்டுமே. ஐநூற்றி முப்பத்தி மூன்றாவதாக அவன் பயணித்துக் கொண்டிருந்த விரைவுப் பேருந்தை “மினிடோர்” என்று அழைக்கப் படும் சரக்கு ஆட்டோ ஒன்று முந்திச் சென்றது. அத்தோடு அவன் முந்திச் செல்லும் வாகனங்களை எண்னுவதை நிறுத்திக் கொண்டான்.

ஏரோப்பிளேன் ஒன்றினை எருமை மாடொன்று வேகத்தில் வெற்றி கொண்டதாய் தோன்றியது அவனுக்கு.

கொஞ்சம் சத்தமாகவே சிரித்து விட்டான்.

எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. விழிப்பு வந்தபோது பேருந்து ஊரப்பாக்கத்தைக் கடந்து கொண்டிருந்தது. சரி, தாம்பரம் இறங்கி மின்சார ரயில் பிடித்து எழும்பூர் போய்விட வேண்டியதுதான் என்று எண்ணியவன் பெட்டியை எடுத்துக் கொண்டு முன்னிருக்கை நோக்கி நகர்ந்தான்.

தாம்பரத்தில் இறங்கியதும் சாலையோரக் கடையில் “ தேநீர்” போடச் சொன்னான். விரலால் பல் தீத்தியவன், ஓரமாக ஒரு ஸ்டூலில் வைக்கப் பட்டிருந்த குடத்திலிருந்து ஒரு டம்ளர் எடுத்து கொப்பளித்தான்.

“சார், டீ எடுங்க”

கடைக்காரர் நீட்டிய தேநீர் சூடாகவும் சுவையகவும் இருந்தது.

காலை செய்தித் தாள் ஒன்றினை வாங்கி கக்கத்தில் வைத்துக் கொண்டான். ரயிலடிக்குப் போவதற்காக சாலையைக் கடக்க வேண்டி சுரங்கப் பாதை நோக்கி நகர்ந்தான்.

தற்செயலாக மணியைப் பார்த்தான். கடிகாரம் “5. 27” என்று சொன்னது. பேருந்து ஊர்கிற வேகத்தில் தாம்பரம் வந்து சேர எப்படியும் ஏழு ஆகும் என்று யூகித்திருந்தான். ஆச்சரியமாயிருந்தது. “அடடா நாம தூங்குன நேரம் பார்த்து டிரைவர் விரட்டியிருப்பார் போல..” என்று நிணைத்துக் கொண்டான்.

மின்சார ரயிலில் நிறைய இடம் காலியாக இருந்தது.ஜன்னல் ஓர இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான். செய்தித்தாள் செய்திகளில் மனது செல்லவில்லை.

சாமானியத் திரளின் மேன்மை எதுவும் பிடிபடவில்லையே. இது கூடத் தெரியாத தன்னை அறிவு ஜீவியாக வேறு மதிக்கிறார்களே. நிணைக்க நிணைக்க அவன் மீதே அவனுக்கு கோவம் வந்தது.

தியாகமும் மேன்மையும் இந்தத் திரளில்தானே குவியல் குவியலாய் கொட்டிக் கிடக்கும். பிறகெப்படி தனக்கு ஒன்றும் தட்டுப் படாமல் போகிறது?

பஞ்சைகளாய், பராரிகளாய், அனைத்தையும் வழங்கிவிட்டு எதையுமே மாற்றாகக் கொள்ளாத இந்த ஜனங்களின் மேன்மையை பதிந்து வைத்துவிடக் கூடாது என்பதில்தான் இந்தச் சமூகம் கவனமாயிருக்கிறதே. ஆக நமக்குத் தெரியாது என்பது கூடத் தன் தவறல்லவே என்று தன்னைத் தானேஆசுவாசப் படுத்திக் கொள்ள முயன்றான்.

அதுவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

“மக்களிடம் போங்கள்” என்று மாவோ சொன்னானே. ஊடகங்களும், நூல்களும்  அந்தத் திரளின் வியர்வையின் உன்னதத்தை மறைத்தாலும் நாம் மக்களிடம் போயிருக்க வேண்டுமே என்ற எண்ணம் அவன்மீதே அவனுக்கு வெறுப்பைத் தந்தது.

“ஆமாம், மக்களிடம் போகச் சொன்னது மாவோதானா?” என்றும் கொஞ்சம் குழ்ம்பித்தான் போனான். குழப்பம் தீரும் முன்னே எழும்பூர் வந்திருந்தது.

இறங்கி வெளியே வந்தவனுக்கு சிறுநீர் முட்டியது. அவசரத்தை இறக்கி வைக்க கீழ் புறமாக நடையைக் கட்டினான்.

தாளமுத்து நடராசன் மாளிகைக்கு எதிர் புறம் உள்ள வீரன் அழகமுத்து சிலைக்கு எதிர்புறம் கொஞ்சம் வசதியாய் இருந்தது.

நடை பாதையில் நிறைய பேர் படுத்திருந்தார்கள். ரயில்கள் போகும் அதிர்வில், இறைச்சலில் இவர்கள் எப்படித்தான் தூங்குகிறார்களோ என்று வருத்தப் பட்டான்.

நாற்பத்தி ஐந்துக்கும் ஐம்பதுக்கும் இடைப் பட்ட பெண் ஒருவர் சொம்பில் வாங்கி வந்த தேநீரை தனது மகன்களுக்கு ஊற்றிக் கொடுத்துவிட்டு தானும் எடுத்துக் கொண்டு பருகப் போன போடுதான் அது நடந்தது.

நடை பாதையில் நடந்து கொண்டிருந்த ஒரு இளைஞன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென தண்டவாளங்களுக்குள் பாய்ந்தான்.

இதைப் பார்த்ததும் அந்தப் பெண் வாயில் இருந்த தேநீரை கொப்பளித்துவிட்டு, “டேய் ஓடுங்கடா...யாரோ சாகப் போரான் , வெரசா ஓடுங்கடா” என்று கத்தினாள்.

தேநீரை குடித்துக் கொண்டிருந்த இருவரும் கிளாசுகளைக் கிடாசிவிட்டு உள்ளே பாய்ந்தனர். அவனை விடவும் வேகமெடுத்து திமிறியவனை மடக்கி தூக்கிக் கொண்டு வந்தனர்.

வெளியே வந்த பின்பும் அவன் திமிறவே செய்தான். கண்களில் கண்ணீர் சாரை சாரையாய் வழிந்து கொண்டிருந்தது.

கோவமா, ஆற்றாமையா எதுவென்று தெரியவில்லை. இரண்டும் கலந்த கலவையாகவும் இருக்கலாம்.

“ டேய் , அந்த சொம்ப எடுத்துட்டுப் போயி சாயாவும் பன்னும் வாங்கிட்டு வாங்கடா”

இப்போதும் திமிறிக் கொண்டுதானிருந்தான். அந்தப் பெண் அவனருகில் வந்து அமர்ந்தாள். மெல்ல அவன் தலையைக் கோதினாள். தாய்மையின் அன்பும் வாஞ்சையும் அவள் விரல்களிலிருந்து அவனுள் இறங்கிக் கொண்டிருண்டிருந்தது.

அவனைப் பிடித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து ,” உடுடா அவன. போகமாட்டான்”

அந்த இளைஞன் அவளைப் பார்த்தான்.

“என்னப்பா மொறைக்கிற, செத்தப் பொறு, சாயா வந்ததும் குடிச்சிட்டு தெம்பா போயி சாவு”

“எல்லோரும் சாவப் பொறந்தவங்கதாம்ப்பா. அதுவா வரும் ஒரு நாள். அப்பவும் அதோட சண்டப் போட்டு கட்டிப் பொரண்டு பாக்கணும். வேற வழியே இல்லன்னா நாம என்ன சாவறது? அது அதுவா நடக்கணும்.”

“இங்கப் பாரு. ரெண்டு பசங்களக் கொடுத்துப் புட்டு அந்தக் கட்டையிலப் போறவன் ஒரு தட்டுவாணிச் செறுக்கிய இழுத்துக் கிட்டு ஓடிட்டான். ஏங்கிட்ட இருக்கிற மொத்த சொத்தும் ஒன்னொட ஷூ வெலைக்கு தேறாது. பதினஞ்சு வருஷமா ரெண்டு பசங்களையும் பேப்பர் பொறுக்கி காப்பாத்துறேன். சாகப் போற சாக.”

“ போ, போயி வாழு. ஒன்ன ரயிலுக்கு வெரட்டுனவங்கள நல்லா பொளச்சு சாகடி, என்னா?”

முந்தானையால் கண்களைத் துடைத்தபடி அவன் தலையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

மந்திரத்துக்கு கட்டுப் பட்டவன் போல அமைதியானான் . சலனத்தைக் கொஞ்சம் தொலைத்திருந்தது அவனது முகம். யாரும் எதுவும் பேசவில்லை.

மெல்ல அந்த அம்மாவை நோக்கிப் போனான் சிவா.

எந்தப் புத்தகத்திலும் கிடைக்காத, ஊடகமெதிலும் தென்படாத, அவனது தேடலுக்கான விடை அவன் கேட்கப் போகும் கேள்விக்கு அந்த அம்மா தரப்போகும் பதிலில் இருக்கப் போவது அந்தச் நொடியில் சத்தியமாய் அவனுக்குத் தெரியாது.

“உங்க பசங்களாம்மா அவங்க?”

“ஆமாம்”

“இவனக் காப்பாத்தப் போயி அவனுங்க செத்திருந்தா?”

“தே...” எச்சிலைத் துப்பிவிட்டு அந்தப் பெண் சொன்னாள்,

“போறப்ப சாவலாம்யா. சாவத்தான் போகக் கூடாது.”

நன்றி : கல்கி

Sunday, April 1, 2012

கணக்கு தப்புங்க மிஸ்




எப்படித்தான் இந்த மிஸ் மட்டும் மணி அடித்ததும் வகுப்பறை வாசலில் வந்து நிற்கிறார்களோ? என்று எல்லா பிள்ளைகளுக்கும் எப்பவுமே கௌரி டீச்சரைக் குறித்து ஒரு சந்தேகம் இருக்கும்.

மணி ஒலித்ததும் கௌரி வகுப்பறை வாசலுக்கு வருகிறாரா? அல்லது அவர் வந்ததைப் பார்த்து மணி ஒலிக்கிறதா? என்று ஒரு பட்டிமன்றமே வைத்து விடலாம். சாலமன் பாப்பையா அல்ல நீதியரசர் கிருஷ்ணய்யராலேயே சரியான ஒரு தீர்ப்பினை வழங்க முடியாத விவகாரம் இது.

“குட் மார்னிங் மிஸ்” என்ற குழந்தைகளின் அன்பினை சிந்தாமல் சிதறாமல் ஒரு புன்னகையோடு உள்வாங்கி, “தேன் வந்து பாயுது காதினிலே” என்பது போதாது, இவரது குரலுக்கு எதையாவது புதிதாய் சொல்லவேண்டும் என்று, ரசணை என்றால் என்ன என்று கேட்கும் கூர் மழுங்கிப் போன மொக்கையையும் எண்ண வைக்கும் தனது குரலால் “குட்மார்னிங் குட்டீஸ்” எனத் திருப்பும் போது ஒவ்வொரு குழந்தைக்கும் தேனைவிட இனிய எதையோ தேனோடு கலந்து செய்த ஏதோ ஒன்று தங்கள் காது வழி உள்ளிறங்கி தங்கள் உசிரோடு ஒன்று கலப்பதை உணர முடியும். தினமும் தினமும் இது வாடிக்கையாய் நிகழ்ந்தாலும் இது பிள்ளைகளுக்கும் திகட்டியதில்லை, கௌரிக்கும் திகட்டியதில்லை.

“கணக்கு, பிணக்கு, ஆமணக்கு” என்று சொல்லுமளவிற்கு வேப்பங்காயைவிடவும் கசந்த பாரதிக்கே கௌரி மிஸ் கணக்கு நடத்தினால் இனித்துப் புரிந்திருக்கும்.

வீட்டுப் பாட நோட்டுகளை ஆசிரியர் அறையிலுள்ள அவரது மேசையில் வைத்து விட்டால் போதும். ஓய்வு பட்ட நேரத்தில் திருத்தி வகுப்பிற்கு வரும் பொழுது அனைத்து நோட்டுகளையும் தானே எடுத்து வந்து விடுவார். மாணவர்களை அந்த வேலைக்குப் பயன்படுத்த மாட்டார்.

அன்று இடைவேளைக்கு அடுத்த வகுப்பு 3A. வழக்கம் போல நோட்டுகளை சுமந்தபடியே வகுப்புக்குள் நுழைந்து வணக்கம் ஏற்று, வணங்கிய பிறகு,

“நாளைக்கு ஹோம் வொர்க் என்னன்னு நோட்ல எழுதியிருக்கேன். அம்மாகிட்ட காட்டி சரியா செஞ்சு வரனும், ஓகே”

“ஓகே மிஸ்”

அவர் எப்போதும் எல்லா வகுப்புகளிலும், எதுவாயிருந்தாலும் அம்மாவிடம்தான் கேட்க சொல்வார். அதே போல் எதற்காகவும் எப்போதும் அப்பாக்களை அழைத்து வரச் சொன்னதும் இல்லை. அது ஏனென்று தெரியவில்லை என்று சொல்வதை விடவும் ஏனென்று அவருக்கே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

அன்று கழித்தலையும், இன்றைய தேதியில் அவசியம் தேவைப் படுகிற கடன்வாங்கி கழித்தலையும் யாருக்கும் புரியும்படி சொல்லிக் கொடுத்தவர்,

“புரியுதா குட்டீஸ்?”

“ நல்லாப் புரியுதுங்க மிஸ்”

“சரி , அப்ப ஒரு கணக்கு தரேன் செய்றீங்களா?”

”செய்றோம் மிஸ்”

“தள்ளுவண்டிக் காரரிடம் 57 ரூபாய்க்கு பழங்களை வாங்கிய ராணி அவரிடம் 80 ரூபாய் தந்தால் அவர் ராணிக்கு எவ்வளவு மிச்சம் தருவார்?”

கணக்கை எழுதிப் போட்டுவிட்டு வகுப்பறையை சுற்றி சுற்றி வந்தவர் எப்போதும் சொன்ன வேலையை ஒழுங்காகவும் உற்சாகத்தோடும் செய்யும் ரிகாஷ் கணக்கை செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருந்ததைப் பார்த்து விட்டார்.

“ஏன் ரிகாஷ், உடம்பு சரியில்லையா?”

“இல்லீங்க மிஸ். ஜொரமெல்லாம் இல்ல”

“அப்புறம் என்னடா? வீட்ல அம்மா ஏதும் தம்பிய அடிச்சாங்களா?”

“இல்லீங்க மிஸ். முத்தம் கொடுத்துதான் என்னைய வேன்ல ஏத்துனாங்க”

“அப்புறம் ஏண்டா கணக்குப் போடாம இருக்குற?”

எதுவும் பேசாமல் நின்றான்.

“ஏம்பா புரியலையா?”

“புரியுதுங்க மிஸ்”

கோவப் பட்டே பழக்கம் இல்லாத கௌரிக்கும் சன்னமாய் கோவம் வந்தது.

“அப்புறம் ஏண்டா கணக்கப் போடல”

நின்றான்.

”சொல்லுடா, அப்புறம் ஏன் போடல ?”

“கணக்கு தப்புங்க மிஸ்”

அப்படியே மிரண்டு போனார் கௌரி. “கணக்கு தப்பா?”

“ஆமாங்க மிஸ்.”

தெளிவாய் தெரித்தது பதில்.

“கணக்கு தப்பா? ஏம்பா மத்த பசங்க எல்லாம் சரியா போட்டிருக்கீங்களா?”

எல்லோரும் 80 ரூபாயில் 57 ரூபாய் போக 23 ரூபாய் மிச்சம் என்று சரியாக பொட்டிருந்தனர்.
கொஞ்ச நேரம் அப்படியே அசைவற்று நின்றிருந்த கௌரி செல்லில் ரிகாஷ் அம்மாவை பிடித்தார்.

“வணக்கம் மிஸ்”

“கொஞ்சம் ஸ்கூலுக்கு வாங்க மேம். கணக்கு போட மாட்டேன்னு ரிகாஷ் அடம் பிடிக்கிறான்”

ஈகோவே இல்லாதிருந்தது போல தோற்றமளித்த கௌரிக்குள்ளும் எங்கோ ஒரு மூலையில் அது சத்தமே செய்யாமல் இருந்திருக்கிறது.

இதற்குள் மணி அடித்துவிடவே கௌரி வெளியேறினார்.

மிஸ் கிட்டயே எதிர்த்து பேசியதாக ரிகாஷ் மீது ஒரு பிம்பம் விழுந்து விட்டது. யாரும் அவனோடு பேசவே பயந்தார்கள். உண்மையை சொல்லப் போனால் அந்த வகுப்பில் அவன் அந்நியப் பட்டுத்தான் போனான்.

இதைக் கேட்டவுடன் போட்டது போட்டபடி அப்படியே போட்டுவிட்டு பள்ளிக்கு வந்தார் ரிகாஷின் அம்மா உமா.

வழக்கத்திற்கு மாறாக நிலை குழைந்த நிலையில் மேசையில் தலை கவிழ்த்தவாறு கிடந்தார் கௌரி. இதுவரை இந்த நிலையில் அவரை யாரும் பார்த்தது இல்லை.

“குட் மார்னிங் மிஸ்”

குரல் கேட்டு நிமிர்ந்த கௌரியின் கண்கள் சிவந்திருந்ததையும், ஈரம் பூசிக் கொண்டிருப்பதையும் உமாவால் பார்க்க முடிந்தது.  

“வாங்க”

சுரத்தே இல்லாமல் வந்தது.

“சொல்லுங்க மிஸ். ரிகாஷ் ஏதும் தப்பு பன்னிட்டானா?”

”என்னோட இத்தன வருஷ சர்வீஸ்ல யாரும் ஏங்கிட்ட இப்படி பேசினதில்லங்க மேடம்.”

கௌரியால் பேசவே முடியவில்லை. விட்டால் கதறியேவிடுவார் போல இருந்தது. கணக்கு ஆசிரியை என்பதாலோ என்னவோ கண்ணீர் ஸ்கேல் வைத்து கிழித்ததுபோல் நேர்கோட்டில் வழிந்து கொண்டிருந்தது.

உமாவிற்கு உதறவே ஆரம்பித்திருந்தது. ஏதோ பெரிதாய் பேசி மிஸ்ஸோட மனதை கிழித்திருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது.

“என்ன மிஸ் செஞ்சான்?”

“விடுங்க எல்லாம் என் தலை எழுத்து. வேற என்ன சொல்றது? உச்சா போக டவுசர் கழட்டத் தெரியாத பிள்ளைகிட்டல்லாம் வாங்கனும்னு எழுதி இருந்தா வேற என்ன செய்ய முடியும்.”

“அவன் ஒரு மனுசன்னு இப்படி போய் உடையுறீங்களே மிஸ். குச்சிய எடுத்து நாலு வெளுத்தா அடங்குறான். என்னங்க மிஸ் சொன்னான்?”

கௌரியும் உமாவும் பேசிக் கொண்டெ வகுப்பருகே வந்திருந்தனர். உமா ரிகாஷின் அம்மா என்பதை நன்கு உணர்ந்திருந்த ஆங்கில ஆசிரியை அவனை வெளியே அனுப்பினார்.

வந்த ரிகாஷ் எதுவுமே நடக்காதது போல் கௌரியைப் பார்த்து “குட் மார்னிங் மிஸ்” சொல்லிவிட்டு அம்மாவின் அருகில் வந்து ஒட்டிக் கொண்டான்.

“மிஸ்ஸ என்ன சொன்ன?” ஒரு கையால் அவன் கையைப் பிடித்துக் கொண்டு அதலட்டாகக் கேட்டாள்.

“ஒண்ணும் சொல்லலையே. ஒன்னும் சொல்லலதானேங்க மிஸ். நீயே வேணா மிஸ்ஸக் கேளேன்”

“பொய் சொல்லாத, வாய்ல சூடு வச்சுருவேன் ஆமா”

ரிகாஷ் அழ ஆரம்பித்திருந்தான்.

“சொல்லுங்க மிஸ், என்ன சொன்னான்? அப்படியே அடுப்புல வச்சு எரிச்சுப் புடறேன்.”

கௌரி எதுவும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தார். இருவருமே ஒன்றும் சொல்லாததால் உமாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அந்த நேரம் பார்த்து ஆங்கில மிஸ்ஸோட மூக்குக் கண்ணாடியை எடுப்பதற்காக வந்த ரிகாஷின் வகுப்புப் பெண் கோகிலாவை நிறுத்தி,

“ரிகாஷ் என்ன பாப்பா செஞ்சான்?”

“அவன் மிஸ் கொடுத்த கணக்கே தப்புங்கறான். எல்லாரும் சரியா கணக்கப் போட்டுட்டோம். அவன் மட்டும் கணக்கு தப்பு, போட மாட்டேங்கறான் ஆண்ட்டி”

நிற்காமல் ஓடினாள்.

“ஏண்டா மிஸ் கொடுத்தக் கணக்கப் போட்டியா?”

அவனது மௌனம் அவளைக் கோபப்படுத்தவே, “கேக்கறேன்ல. மிஸ் கொடுத்தக் கணக்க ஏண்டா போடல?”

”அந்தக் கணக்கு தப்பு”

தான் கொடுத்த கணக்கையும் இவனைத் தவிர எல்லோரும் அந்தக் கணக்கை செய்ததையும் சொன்ன கௌரி, “எங்க ப்ரின்சியே ஏங்கிட்ட இப்படி பேசினது இல்ல”

”இதுல என்னடா தப்பு?”

”57 ரூபாய்க்கு எப்படிம்மா 80 ரூபா கொடுப்பாங்க?”

“ஏண்டா நேத்து அம்மா அஞ்சு ரூபாய்க்கு தக்காளி வாங்கிட்டு பத்து ரூபா கொடுத்து மீதி அஞ்சு ரூபா வாங்கல. அது மாதிரிதான் இதுவும்”

“அஞ்சு ரூபா தக்காளிக்கு அஞ்சு ரூபா தரலாம், பத்து ரூபா தரலாம், இருபது ரூபா தரலாம், ஐம்பது ரூபா தரலாம், நூறும் தரலாம். ஆனா பதினஞ்சு ரூபா தருவாங்களா?”

கொஞ்சம் புரிந்தது போல இருந்தது உமாவிற்கு.

“இப்ப என்னதாண்டா சொல்ற கட்டையிலப் போறவனே? எண்பது ரூபாயில ஐம்பத்தி ஏழு போச்சுன்னா மீதி இருபத்திமூணுதானே?”

“அதுதான் தப்பும்மா”

“கட்ட வெளக்கமாறு பிஞ்சுடும் ஆமாம்”

“லூசாம்மா நீ. 57 ரூபாய்க்கு எப்படிம்மா 80 ரூபா கொடுப்பாங்க. ஐம்பது ரூபாத் தாள் ஒன்னும் பத்து ரூபாத் தாள் ஒன்னும் ஆக 60 கொடுக்கலாம், இல்லாட்டி மூனு இருபது ரூபாத் தாளா 60 கொடுக்கலாம், அல்லது ஐம்பது ஒன்னும் இருபது ஒன்னும் ஆக 70 கொடுக்கலாம் 80 ரூபா எப்படிம்மா கொடுப்பாங்க”

ரிகாஷ் சொல்வதின் நியாயம் உமாவிற்குப் புரிந்தது. ஆனாலும்,

“குதர்க்கமாவா பேசற வீட்டுக்கு வா வாய் வாயா சூடு வைக்கிறேன்,” என்றவள்,

“அவனுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன் மிஸ். சின்னப் பையன், தெரியாமப் பேசிட்டான். தயவு செஞ்சு மன்னிச்சுக்கங்க. நானும் கண்டிச்சு வைக்கிறேன். இப்படி ஏதாவது அதிகப் பிரசங்கித் தனமா செஞ்சான்னா கண்ண மட்டும் வச்சிட்டு எல்லாத்தையும் உறிச்சு எடுத்திடுங்க மிஸ். அத உட்டுட்ட்டு நீங்க ஏன் இப்படி ஒடஞ்சு போகனும். வீட்டுக்கு வரட்டும் கொதிக்கிற ஒலையில போட்டு வேகவைக்கிறேன்.“

கை எடுத்து கும்பிட்டவாறு விடை பெற்றாள்.

“கணக்கு தப்புங்க மிஸ்” என்ற ரிகாஷின் கூற்றில் இருந்த நியாயம் உமாவிற்கு மட்டுமல்ல கௌரி டீச்சருக்கும் விளங்கவே செய்திருக்கும்.

நன்றி: கல்கி 31.03.2012

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...