Saturday, April 14, 2012

முரட்டு மொழிப் பற்றாளர்

அது ஒரு புகழ் பெற்ற பள்ளி.

நல்ல வெய்யில். அந்தப் பள்ளியின் மைதானத்தில் முழங்காலில் வெகு நேரமாக நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறாள். அவள் மன்னிப்பதற்கே அருகதையற்ற மிகக் கொடூரமான குற்றத்தை இழைத்திருப்பதாக சொல்லப்பட்டது.

அப்படி என்ன கொடூரமான மன்னிப்பை கோருவதற்கே லாயக்கற்ற செயலை செய்து விட்டாள்.

அவளது வகுப்பு ஆசிரியரைப் பார்த்து தனது குழந்தை எப்படிப் படிக்கிறாள் என்பதை தெரிந்து கொள்வதற்காக அவளது தாயார் வந்திருக்கிறார். மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தனது தாயைப் பார்த்ததும் “அம்மா” என்று அழைத்து விட்டாள். குழந்தை அழைத்தது அவளது அம்மாவின் காதுகளில் விழவில்லை. ஆனால் ஆசிரியை ஒருவரின் காதுகளில் விழுந்துவிட்டது.

அதற்கானத் தண்டனையாகத்தான் அந்தக் குழந்தை முழங்காலில் நின்று கொண்டிருக்கிறாள்.

ராணுவ ரகசியத்தை கால் டஜன் மதுப் புட்டிகளுக்காக விற்ற கயவர்களுக்குக் கூட இத்தகைய கடுமையான தண்டனை தரப் பட்டதில்லை.

“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்று முழங்குகிற தமிழ் மண்ணில்தான் இது நடந்தது.

இன்னும் சொல்லப் போனால் உலகில் எந்த நாட்டிலும் தன் தாய்மொழியை வாழ்க என்று அரசு அலுவலகங்களில் பலகை வைக்க வேண்டும் என்று சட்டமோ நடைமுறையோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அங்கெல்லாம் இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்ததாகவும் தெரியவில்லை. ஆனால் “தமிழ் வாழ்க “ என்று எல்லா அரசு அலுவலகங்களிலும் பலகை வைக்கவேண்டும் என்பதும் , இரவு நேரங்களில் “தமிழ் வாழ்க “ என்பது வண்ண விளக்குகளால் ஜொலிக்க வேண்டும் என்பதும் நடைமுறை.

இந்தத் தமிழ் மண்ணில்தான், தமிழக அரசு வழங்கிய அங்கீரகாரத்தில் தமிழக அரசின் ஆளுகையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு பள்ளியில்தான் பெற்ற அம்மாவை அம்மா என்று அழைத்ததற்காக கொளுத்தும் வெய்யிலில் முழங்காலில் நிற்க வேண்டிய கொடுமை.

இது நடந்து ஏறத்தாழ பத்துப் பதினைந்து ஆண்டுகள் கடந்திருக்கும். வளாகத்திற்குள் தமிழில் பேசியதால் பள்ளி களங்கப் பட்டுவிட்டதாக காரணம் சொல்லப் பட்டது.

இதைத்தானே மதப் பழமைவாதிகளும் சொல்கிறார்கள். வழிபாட்டை தமிழில் நடத்தினால் ஆலயம் தீட்டுப் பட்டுவிடும் என்கிறான் மதப் பழமைவாதி. பள்ளியில் தமிழில் பேசினால் பள்ளி களங்கப் பட்டுவிடும் என்கிறான் நவீன கல்வி வியாபாரி.

இன்றைக்கு இருக்கிற பெரும்பான்மை அதிகாரிகளும் இதை ஆதரிக்கவே செய்கிறார்கள். பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வரக் கூடிய மாணவனுக்கு ஆங்கிலத்தில் பிழையின்றி பேச எழுத முடியவில்லையே என்று ஆதங்கப் படும் இவர்களுக்கு அவனுக்கு தமிழிலும் பிழையின்றி எழுதவோ படிக்கவோ இயலாது என்பது ஒருபோதும் உறுத்துவதே இல்லை.

மேத்தாதான் சரியாக சொன்னார்,

“தமிழ் தெரியாது
என்பதே
இங்கு தனித் தகுதி” என்று

ஆனால் இதற்கு நேர் எதிராக ஒரு அதிகாரி இருந்திருக்கிறார். கல்விக்கண் திறந்த காமராஜருக்கு மிகவும் பக்க பலமாக இருந்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் காமராஜர் கல்வியின்பால் கவனத்தைத் திருப்புவதற்கான சில காரணங்களுள் மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார்.

அவர் நெ.து. சுந்தரவடிவேலு.

கல்வி பரவலாக்கப் பட்டதில் கிராமம் கிராமமாக பள்ளிகள் திறக்கப் பட்டதிலும் அவரது இடம் குறித்து பதியப் பட்ட அளவிற்கு அவரது மொழிப் பற்று பற்றி பதிவுகள் இல்லை. முரட்டுத் தனமான மொழிப் பற்றாளராகவே அவர் இருந்திருக்கிறார்.

1944 ஆம் ஆண்டில் சேலத்தில் அவர் கல்வி அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார்.அந்த ஆண்டு மே மாதத்தில் சேலம் மாவட்ட “ஆசிரியர் கழகம்”  மாநாடு ஒன்றினை நடத்துகிறது. மாநாட்டினைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற நெ. து. சுந்தரவடிவேலு அவர்களை அழைக்கிரார்கள்.

தலைமையேற்ற திருச்சி தேசியக் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் ராமைய்யர் தொடக்கம், வரவேற்புரை வழங்கியவர், ஆண்டறிக்கை வாசித்தவர், நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தவர் என்று எல்லோருமே ஆங்கிலத்தில்தான் பிளந்து கட்டியிருக்கிறார்கள்.

அடுத்ததாக மாநாட்டைத் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றுமாறு ஆங்கிலத்திலேயே அழைக்கப் பட்டிருக்கிறார் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள். அவரது மாண்புகளை சொல்லி கைத்தறி ஆடை அணிவித்தவரும் ஆங்கிலத்திலேயே அளந்து தள்ளியிருக்கிறார்.

நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் தமிழில் தொடங்கி, தனது நாற்பத்தி ஐந்து நிமிடப் பேச்சையும் தமிழிலேயே முடித்திருக்கிறார். அவர் சொல்கிறார்,

“அவையோரில் நூற்றுக்கு எண்பது பேர்களுக்கு மகிழ்ச்சி பொங்கிற்று, மற்றவர்களுக்கு ஏமாற்றம்,எரிச்சல், ஏதோ தீட்டுப் பட்டுப் போன உணர்வு: இதற்கு நான் என்ன செய்ய?”

அவரது தமிழ்ப் பேச்சை அந்த இருபது சதம் பேரும் முகச் சுளிப்போடும் ஒருவித அறுவெறுப்போடும் பார்த்திருக்கிறார்கள். அவரது ஆங்கிலப் புலமையை சந்தேகப் பட்டிருக்கிறார்கள். ஆங்கிலம் தெரியாதவரை ஏன் அழைத்து வந்தீர்கள், அவை இப்படி தீட்டுப் பட்டுப் போனதே என்று அழைத்து வந்தவர்களைப் பார்த்து அங்கலாய்த்திருக்கிறார்கள். “அவருக்கு ஆங்கிலம் தெரியும் என்றுதான் அழைத்தோம். இப்படி செய்வார் என்று யாருக்குத் தெரியும்” என்று அவரை அழைத்து வந்தவர்கள் நொந்து போயிருக்கிறார்கள்.

இப்படியாக அவரை மிகக் கேவலமாகப் பார்த்திருக்கிறார்கள். “ இப்படி, ஆங்கிலம் தெரியாத ஒருவரை” அதிகாரியாகப் பெற்றிருக்கிற கல்வித் துறையை நொந்து கொண்டிருக்கிறார்கள். அவரை நியமித்த அரசினை சபித்திருக்கிறார்கள். ஆனாலும் வளைந்து குனிந்து வணங்கிய வாறே மதிய உணவிற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

சேலம் கல்லூரியின் முதல்வர் ராமசாமிக் கவுண்டரின் மைத்துனர் அருணாச்சலமும் மாநாட்டிற்கு வந்திருக்கிறார். அவர் நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் மரியாதையும் பற்றும் கொண்டிருப்பவர். அவர் சுந்தரவடிவேலு அவர்களைப் பற்றி கேவலமாகப் பேசியவர்களை எதிர் கொண்டிருக்கிறார்.

ஆங்கிலம் தெரியாத ஒருவரை எப்படி ஏற்று மதிப்பது என்று சொல்லியிருக்கிறார்கள். அருணாச்சலமும் ஆங்கிலத்திற்கும் மரியாதைக்கும் என்ன சம்பந்தம் என்றோ, தமிழில் பேசினால் என்ன கேவலமெறோ எதிர்கொள்ளவில்லை.

எல்லோரும் உளறுவது போல் அல்ல நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும் என்று வாதாடி வம்படித்திருக்கிறார்.

சரி, அப்படியென்றால் மாலை வாய்ப்பு தருகிறோம் அவரை ஆங்கிலத்தில் பேசச் சொல்லுங்கள் என்றிருக்கிறார்கள். அருணாசலமும் இன்னும் இரு நண்பர்களும் இந்தக் கோரிக்கையோடு நெ.து. சு அவர்களை அணுகியிருக்கிறார்கள். மறுத்து அவர் சொல்லியிருக்கிறார்,

“ஆங்கில உரையாற்றி என்னை உயர்த்திக் கொள்வதில் உள்ள பற்றைக் காட்டிலும்தமிழில் பேசி, தமிழரின் நம்பிக்கையை வளர்ப்பதே என் குறிக்கோள்”

இந்த உன்னதமான குறிக்கோள் மட்டும் கல்வித்துறை அதிகாரிகளாலும் கல்வியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களாலும் கொண்டுபோகப் பட்டிருப்பின் விளைவுகள் எப்படி இனித்திருக்கும்?

மொழித் தளத்தில் அறியப் படாத அல்லது கொண்டாடப் படாத முரட்டு மொழிப் பற்றாளராகவே படுகிறார் நெ.து.சுந்தரவடிவேலு.

3 comments:

 1. நெதுசு முரட்டு மொழிப்பற்றாளர் அல்லர்; தெளிந்த சிந்தனையுடைய தாய் மொழிப் பற்றாளர். அதற்காக மற்ற மொழிகளை வெறுத்தவர் அல்லர் அவர். மொழித் தீண்டாமை கூடாது என நாளும் நவின்று வந்தவர்; நினைவலைகள் என்னும் தன்வரலாற்று நூலில் இக்கருத்தைப் பல இடங்களிலும் பதிவு செய்திருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றொழுங்கைப் போல பேசும் ஆற்றல் பெற்றவர். ஆனால் தமிழ் மொழியை அறிந்தவர்களிடம் தமிழில் மட்டுமே பேசும் கொள்கையுடையவர். அவ்வாறு பேசும் பொழுதும் பிறமொழிச் சொல்களைக் கலக்காமல் பேசுவார். அவ்வாறு அவர் பேசக் கேட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 2. எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்று முழங்குகிற தமிழ் மண்ணில்தான் இது நடந்தது.

  தமிழ் வாழ்க !

  ReplyDelete
 3. தமிழில் பேசி, தமிழரின் நம்பிக்கையை வளர்ப்பதே என் குறிக்கோள்”
  நெ.து. சு தமிழை நேசித்தவர்.நம் குழந்தகளை தமிழை நேசிக்க, சுவாசிக்க வைப்பது நம் கடமை.தமிழில் பேசுவது பெருமைப்படத்தக்கது எனபதை உணரவைத்தாலே போதும். ஆசிரியரின் தூண்டுதலும் மிக முக்கியம்.என் மகள் உடன்குடியில் 6-ஆம் வகுப்பு படித்த்போது மிக அழகாக ஆசையுடன் நிறைய புதிய தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துவாள்.காரணம் அவளது தமிழாசிரியை நேசிக்கப்படத்தக்கவராக இருந்ததுதான்

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...