Tuesday, April 10, 2012

பெரிதினும் பெரிதாய்...

நிற்பதற்கும் நகர்வதற்கும் அப்படியொன்றும் அதிகம் வித்தியாசமில்லாத ஒரு வேகத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது பேருந்து. தலையில் அடித்துக் கொள்வது, முனகுவது அல்லது இப்படி ஏதாவது ஒரு வகையில் பயணிகள் தங்களது எரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். சிலர் ஓட்டுநரை நோக்கி சத்தமாக கத்தவும் செய்தனர்.

அவரவர் அவசரம் அவரவர்க்கு.

ஆனால் சிவாவிற்கு அவசரப் படுமளவிற்கு தலை போகிற வேலை எதுவுமில்லை. போகவும், பேருந்துகளை ஒழுங்காகப் பராமரிக்காத அரசாங்கத்தின் மீது வர வேண்டிய கோவத்தை ஓட்டுநர் மீது திருப்புவதில் துளியும் சம்மதம் இல்லை அவனுக்கு. ஆகவே பேருந்தின் வேகம் குறித்து எந்த அபிப்பிராயமும் அவனுக்கு இருக்கவில்லை.

அதுமட்டுமல்ல, பேருந்து மெதுவாய் நகர்வதிலும் ஒரு வசதி இருக்கவே செய்தது அவனுக்கு. நாளை மாலை “பெரிதினும் பெரிதாய்..”என்ற தலைப்பில் அவன் பேச இருந்தான். பாரதி, பகத் சிங், காந்தி, பெரியார், மார்க்ஸ் என்றும், பெரும்பான்மை புரட்சிகளிடமிருந்தும் ஏராளம் குறிப்புகள் அவனிடமிருந்தன.

சாமானிய உழைக்கும் திரளின் பெருமையை, தியாகத்தை, மேன்மையை எடுத்துச் சொல்லாவிட்டால் பேச்சு நிறைவடையாது என்பது மட்டுமல்ல, அது யோக்கியமாகவும் இருக்காது என்றே அவன் எண்ணினான்.

எப்படிக் குடைந்தும் எதுவும் அகப் படவில்லை.கண்களை மூடிக் கொஞ்சம் அமைதியாய் யோசித்தால் ஏதேனும் அகப்படக்கூடும் என்று தோன்றியது. அதற்கு பேருந்தின் மித வேகம் வசதியானது என்பதால் மிக அமைதியாக எந்த வித சலனமும் கொள்ளாமல் இருந்தான்.

என்ன யோசித்தும் எதுவும் தட்டுப் படாமல் போகவே இவனுக்குள்ளும் கொஞ்சம் அயர்வு வரவே செய்தது. தங்களது பேருந்தினை முந்திச் செல்லும் வாகனங்களை ஒன்று இரண்டு என்று எண்ணத் துவங்கினான். அவனுக்கும் பொழுது போக வேண்டுமே. ஐநூற்றி முப்பத்தி மூன்றாவதாக அவன் பயணித்துக் கொண்டிருந்த விரைவுப் பேருந்தை “மினிடோர்” என்று அழைக்கப் படும் சரக்கு ஆட்டோ ஒன்று முந்திச் சென்றது. அத்தோடு அவன் முந்திச் செல்லும் வாகனங்களை எண்னுவதை நிறுத்திக் கொண்டான்.

ஏரோப்பிளேன் ஒன்றினை எருமை மாடொன்று வேகத்தில் வெற்றி கொண்டதாய் தோன்றியது அவனுக்கு.

கொஞ்சம் சத்தமாகவே சிரித்து விட்டான்.

எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. விழிப்பு வந்தபோது பேருந்து ஊரப்பாக்கத்தைக் கடந்து கொண்டிருந்தது. சரி, தாம்பரம் இறங்கி மின்சார ரயில் பிடித்து எழும்பூர் போய்விட வேண்டியதுதான் என்று எண்ணியவன் பெட்டியை எடுத்துக் கொண்டு முன்னிருக்கை நோக்கி நகர்ந்தான்.

தாம்பரத்தில் இறங்கியதும் சாலையோரக் கடையில் “ தேநீர்” போடச் சொன்னான். விரலால் பல் தீத்தியவன், ஓரமாக ஒரு ஸ்டூலில் வைக்கப் பட்டிருந்த குடத்திலிருந்து ஒரு டம்ளர் எடுத்து கொப்பளித்தான்.

“சார், டீ எடுங்க”

கடைக்காரர் நீட்டிய தேநீர் சூடாகவும் சுவையகவும் இருந்தது.

காலை செய்தித் தாள் ஒன்றினை வாங்கி கக்கத்தில் வைத்துக் கொண்டான். ரயிலடிக்குப் போவதற்காக சாலையைக் கடக்க வேண்டி சுரங்கப் பாதை நோக்கி நகர்ந்தான்.

தற்செயலாக மணியைப் பார்த்தான். கடிகாரம் “5. 27” என்று சொன்னது. பேருந்து ஊர்கிற வேகத்தில் தாம்பரம் வந்து சேர எப்படியும் ஏழு ஆகும் என்று யூகித்திருந்தான். ஆச்சரியமாயிருந்தது. “அடடா நாம தூங்குன நேரம் பார்த்து டிரைவர் விரட்டியிருப்பார் போல..” என்று நிணைத்துக் கொண்டான்.

மின்சார ரயிலில் நிறைய இடம் காலியாக இருந்தது.ஜன்னல் ஓர இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான். செய்தித்தாள் செய்திகளில் மனது செல்லவில்லை.

சாமானியத் திரளின் மேன்மை எதுவும் பிடிபடவில்லையே. இது கூடத் தெரியாத தன்னை அறிவு ஜீவியாக வேறு மதிக்கிறார்களே. நிணைக்க நிணைக்க அவன் மீதே அவனுக்கு கோவம் வந்தது.

தியாகமும் மேன்மையும் இந்தத் திரளில்தானே குவியல் குவியலாய் கொட்டிக் கிடக்கும். பிறகெப்படி தனக்கு ஒன்றும் தட்டுப் படாமல் போகிறது?

பஞ்சைகளாய், பராரிகளாய், அனைத்தையும் வழங்கிவிட்டு எதையுமே மாற்றாகக் கொள்ளாத இந்த ஜனங்களின் மேன்மையை பதிந்து வைத்துவிடக் கூடாது என்பதில்தான் இந்தச் சமூகம் கவனமாயிருக்கிறதே. ஆக நமக்குத் தெரியாது என்பது கூடத் தன் தவறல்லவே என்று தன்னைத் தானேஆசுவாசப் படுத்திக் கொள்ள முயன்றான்.

அதுவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

“மக்களிடம் போங்கள்” என்று மாவோ சொன்னானே. ஊடகங்களும், நூல்களும்  அந்தத் திரளின் வியர்வையின் உன்னதத்தை மறைத்தாலும் நாம் மக்களிடம் போயிருக்க வேண்டுமே என்ற எண்ணம் அவன்மீதே அவனுக்கு வெறுப்பைத் தந்தது.

“ஆமாம், மக்களிடம் போகச் சொன்னது மாவோதானா?” என்றும் கொஞ்சம் குழ்ம்பித்தான் போனான். குழப்பம் தீரும் முன்னே எழும்பூர் வந்திருந்தது.

இறங்கி வெளியே வந்தவனுக்கு சிறுநீர் முட்டியது. அவசரத்தை இறக்கி வைக்க கீழ் புறமாக நடையைக் கட்டினான்.

தாளமுத்து நடராசன் மாளிகைக்கு எதிர் புறம் உள்ள வீரன் அழகமுத்து சிலைக்கு எதிர்புறம் கொஞ்சம் வசதியாய் இருந்தது.

நடை பாதையில் நிறைய பேர் படுத்திருந்தார்கள். ரயில்கள் போகும் அதிர்வில், இறைச்சலில் இவர்கள் எப்படித்தான் தூங்குகிறார்களோ என்று வருத்தப் பட்டான்.

நாற்பத்தி ஐந்துக்கும் ஐம்பதுக்கும் இடைப் பட்ட பெண் ஒருவர் சொம்பில் வாங்கி வந்த தேநீரை தனது மகன்களுக்கு ஊற்றிக் கொடுத்துவிட்டு தானும் எடுத்துக் கொண்டு பருகப் போன போடுதான் அது நடந்தது.

நடை பாதையில் நடந்து கொண்டிருந்த ஒரு இளைஞன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென தண்டவாளங்களுக்குள் பாய்ந்தான்.

இதைப் பார்த்ததும் அந்தப் பெண் வாயில் இருந்த தேநீரை கொப்பளித்துவிட்டு, “டேய் ஓடுங்கடா...யாரோ சாகப் போரான் , வெரசா ஓடுங்கடா” என்று கத்தினாள்.

தேநீரை குடித்துக் கொண்டிருந்த இருவரும் கிளாசுகளைக் கிடாசிவிட்டு உள்ளே பாய்ந்தனர். அவனை விடவும் வேகமெடுத்து திமிறியவனை மடக்கி தூக்கிக் கொண்டு வந்தனர்.

வெளியே வந்த பின்பும் அவன் திமிறவே செய்தான். கண்களில் கண்ணீர் சாரை சாரையாய் வழிந்து கொண்டிருந்தது.

கோவமா, ஆற்றாமையா எதுவென்று தெரியவில்லை. இரண்டும் கலந்த கலவையாகவும் இருக்கலாம்.

“ டேய் , அந்த சொம்ப எடுத்துட்டுப் போயி சாயாவும் பன்னும் வாங்கிட்டு வாங்கடா”

இப்போதும் திமிறிக் கொண்டுதானிருந்தான். அந்தப் பெண் அவனருகில் வந்து அமர்ந்தாள். மெல்ல அவன் தலையைக் கோதினாள். தாய்மையின் அன்பும் வாஞ்சையும் அவள் விரல்களிலிருந்து அவனுள் இறங்கிக் கொண்டிருண்டிருந்தது.

அவனைப் பிடித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து ,” உடுடா அவன. போகமாட்டான்”

அந்த இளைஞன் அவளைப் பார்த்தான்.

“என்னப்பா மொறைக்கிற, செத்தப் பொறு, சாயா வந்ததும் குடிச்சிட்டு தெம்பா போயி சாவு”

“எல்லோரும் சாவப் பொறந்தவங்கதாம்ப்பா. அதுவா வரும் ஒரு நாள். அப்பவும் அதோட சண்டப் போட்டு கட்டிப் பொரண்டு பாக்கணும். வேற வழியே இல்லன்னா நாம என்ன சாவறது? அது அதுவா நடக்கணும்.”

“இங்கப் பாரு. ரெண்டு பசங்களக் கொடுத்துப் புட்டு அந்தக் கட்டையிலப் போறவன் ஒரு தட்டுவாணிச் செறுக்கிய இழுத்துக் கிட்டு ஓடிட்டான். ஏங்கிட்ட இருக்கிற மொத்த சொத்தும் ஒன்னொட ஷூ வெலைக்கு தேறாது. பதினஞ்சு வருஷமா ரெண்டு பசங்களையும் பேப்பர் பொறுக்கி காப்பாத்துறேன். சாகப் போற சாக.”

“ போ, போயி வாழு. ஒன்ன ரயிலுக்கு வெரட்டுனவங்கள நல்லா பொளச்சு சாகடி, என்னா?”

முந்தானையால் கண்களைத் துடைத்தபடி அவன் தலையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

மந்திரத்துக்கு கட்டுப் பட்டவன் போல அமைதியானான் . சலனத்தைக் கொஞ்சம் தொலைத்திருந்தது அவனது முகம். யாரும் எதுவும் பேசவில்லை.

மெல்ல அந்த அம்மாவை நோக்கிப் போனான் சிவா.

எந்தப் புத்தகத்திலும் கிடைக்காத, ஊடகமெதிலும் தென்படாத, அவனது தேடலுக்கான விடை அவன் கேட்கப் போகும் கேள்விக்கு அந்த அம்மா தரப்போகும் பதிலில் இருக்கப் போவது அந்தச் நொடியில் சத்தியமாய் அவனுக்குத் தெரியாது.

“உங்க பசங்களாம்மா அவங்க?”

“ஆமாம்”

“இவனக் காப்பாத்தப் போயி அவனுங்க செத்திருந்தா?”

“தே...” எச்சிலைத் துப்பிவிட்டு அந்தப் பெண் சொன்னாள்,

“போறப்ப சாவலாம்யா. சாவத்தான் போகக் கூடாது.”

நன்றி : கல்கி

3 comments:

 1. மெல்ல நகர்ந்த பேருந்து, கிளாசுகளை கடாசிவிட்டு பாய்ந்த பசங்க,“போறப்ப சாவலாம்யா. சாவத்தான் போகக் கூடாதுன்னு பொட்டில் அடித்ததுபோல் சொன்ன கதையின் நாயகி என கதை பெரிதாய் விரிந்திருக்கிறது.

  அருமை. வாழ்த்துக்கள் எட்வின்

  ஒன்ன ரயிலுக்கு வெரட்டுனவங்கள நல்லா பொளச்சு சாகடி, என்னா? என்பதில் நல்லா பொளச்சு அண்ணாந்துபாக்கவையி.. என்பதாக இருந்திருக்கலாம்..

  ReplyDelete
 2. மிக்க நன்றி உமா.

  சாகடி என்பதும் நீங்கள் சொன்ன பொருளில்தான்.

  கோலி கொன்னுட்டாண்டா என்பது மாதிரி

  ReplyDelete
 3. இது கூடத் தெரியாத தன்னை அறிவு ஜீவியாக வேறு மதிக்கிறார்களே. நிணைக்க நிணைக்க அவன் மீதே அவனுக்கு கோவம் வந்தது.///எல்லோருக்குள்ளும் இருக்கும் அறிவு அதை வெளிக்காட்டும் விதம் தெரிய வேண்டும்.
  என்று அழகாய் சொல்லி உள்ளீர்கள்.

  ஊடகங்களும், நூல்களும் அந்தத் திரளின் வியர்வையின் உன்னதத்தை மறைத்தாலும் நாம் மக்களிடம் போயிருக்க வேண்டுமே என்ற எண்ணம் அவன்மீதே அவனுக்கு வெறுப்பைத் தந்தது.///ஆம் நண்பா நல்ல கலைஞர்கள் மக்களிடம் செல்லவேண்டும் தேடவும், ,கொடுக்கவும்.

  அந்தப் பெண் அவனருகில் வந்து அமர்ந்தாள். மெல்ல அவன் தலையைக் கோதினாள். தாய்மையின் அன்பும் வாஞ்சையும் அவள் விரல்களிலிருந்து அவனுள் இறங்கிக் கொண்டிருண்டிருந்தது.////இந்த அன்பில் கரையாதவர் உண்டா இல்லையே ? இருக்கவும் முடியாதே ?

  “என்னப்பா மொறைக்கிற, செத்தப் பொறு, சாயா வந்ததும் குடிச்சிட்டு தெம்பா போயி சாவு”///டைமிங் டைலாக்.மனோதத்துவ மேதையிடம் இருக்கவேண்டியது சாதாரண மணுசியிடம்.{ப்ச் பெரியாஆளாய்யா நீ}

  “ போ, போயி வாழு. ஒன்ன ரயிலுக்கு வெரட்டுனவங்கள நல்லா பொளச்சு சாகடி, என்னா?”///கட்டளை,கழிவிரக்கம்,எதிர்பார்ப்பு,ஏக்கம்{ஒத்தை வரியில் ஏகப்பட்ட விசயம்}

  சிவா மக்களிடம் போயிய்விட்டான் மற்றவர் போய்விடணும் உம் ஏக்கம் உண்மை.

  “போறப்ப சாவலாம்யா. சாவத்தான் போகக் கூடாது.”///வாழ்வை இவ்வளவு அற்புதமாய் சொல்ல முடியுமா ?

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...