Sunday, July 21, 2013

5. ஹரணி பக்கங்கள்…


ஹரணியின் வலை இது.மக்களுக்கான எழுத்தாளாளரான இவரிடமிருந்து ஒரு   டஜன் நூல்கள் வெளிவந்திருக்கின்றன.மக்களின் இயல்பான வாழ்க்கையை இந்த  வலையின் நெடுகிலும் நம்மால் பார்க்க இயலும்.

“ கை அளவு கற்க ஆசைகடுகளவு கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.”   என்பதாகப் பிரகடனப்படுத்துகிறது இவரது வலைஆனால் இது கடலுக்காக     வீசப்பட்டவலைகடல் எதுவும் இந்த வலையில் இதுவரை அகப்படவில்லை   எனினும் நிறைய நதிகள் சிக்கியிருக்கின்றன இவரது வலையில்

எல்லாம் இருக்கிறது இந்த வலையில்அன்புகாதல்காமம்கருணைதாய்மைமொழி குறித்த அக்கறை,தொன்மம் பற்றிய புரிதல்கோவம்ஆதங்கம்இலக்கியம்,   என்று எல்லாம் கிடைக்கிறது.

யாருடைய ஆத்திச்சூடியோடும் இந்த வலையில் இருக்கக்கூடிய ஹரணியின்   ஆத்திச் சூடிகளை நாம் ஒப்பிட்டுப்பேச முடியும்.  சமூக அக்கறையோடு கூடிய ஆத்திச்சூடிகள்அவற்றில் மூன்றைச் சொல்ல   வேண்டும்.

1 . அன்புசால் உலகு செய்
2 . ஓடி ஓடி உறவுகொள் வளர்.
3 . ஊரின் நியாயம் கேள்.

இந்த மூன்றிற்காக மட்டுமே இவரது வலையைக் கொண்டாடலாம்.

“ நான் பார்த்து
  வளர்ந்தவன் இப்போது
  நகராட்சி கவுன்சிலர்
  இவர் பிறந்தது தெரியுமென்று
  சான்று தருகிறான் எனக்கு ” என்பது மாதிரி நறுக்குக் கவிதைகள் ஏராளம் இருக்கின்றன இவரது வலையில்.

விரலிடுக்கில் கசியும் நீரைப்போல ஏராளமான நல்லதுகளை நாம் கசியவிட்டிருக்கிறோம். மரப்பாச்சி பொம்மைகளும் அவற்றில் ஒன்று. மரப்பாச்சி என்ற சொல்லைக் கேள்விப் படும் பொழுதெல்லாம் லபக்கென்று நமது மனது ஜெயகாந்தன் எழுதிய ஒரு கதைக்கு ஓடிவிடும். “ மரப்பாச்சியா” அல்லது “ மரப்பாச்சி பொம்மையா ” என்று சரியாய் நினைவில்லை.

பக்கத்து பணக்கார வீட்டுக் குழந்தை ஒரு மரப்பாச்சி பொம்மையை வைத்து விளையாடும். அதைப் பார்த்த பக்கத்துக வீட்டுக் குழந்தை தனக்கும் விளையாட அதுபோல ஒரு மரப்பாச்சி பொம்மை வேண்டுமென்று அடம்பிடிக்கும். அவர்கள் வீட்டில் பாப்பாக் குழந்தை இல்லாததால்தான் அவளுக்கு விளையாட மரப்பாச்சி தேவைப் பட்டதென்றும் இவளுக்கு விளையாட தம்பிப் பாப்பாவே இருப்பதால் மரப்பாச்சி தேவை இல்லை என்றும் ஒரு வழியாக சமாதானப் படுத்துவார்கள்.

ஒரு வழியாக சமாதானமடைவாள் குழந்தை. பணக்காரக் குழந்தை பரப்பாச்சிக்கு சோப்பு போட்டு அதை தண்ணீர்த் தொட்டியில் முக்கி குளிப்பாட்டுவாள். இதைப் பார்த்த இந்தக் குழந்தையும் பாப்பாவிற்கும் சோப்பு போட்டு தண்னீர்த் தொட்டியில் முக்குவள். குழந்தை செத்துப் போகும். அய்யோ அப்படி ஒரு வலி இருக்கும்.

ஏழ்மையை சொல்ல ஜெயகாந்தனுக்கு கருவியாக வாய்த்த, தொன்மச் சிறப்புமிக்க தமிழ்க் குழந்தைகளின் விளையாட்டுப் பொருளான மரப்பாச்சியை இந்தத் தலைமுறை முற்றாய் இழந்திருக்கிறது. இதைப் பற்றி அக்கறையோடு ஹரணி சொல்கிறபோது இன்னும் என்னத்தையெல்லாம் இழக்கப் போகிறோம் என்று தோன்றுகிறது.

“ காந்தியும் குமரேசனும் ” என்றொரு குழந்தைகளுக்கான சிறு கதை இருக்கிறது. இதே தலைப்பில் வெளிவந்துள்ள தொகுப்பிலும் இது இருக்கிறது. பொதுவாகவே குழந்தைகளைப் பற்றி இலக்கியங்கள் வருமளவிற்கு குழந்தைகளுக்கான இலக்கியங்கள் வருவதில்லை என்றொரு குறை இருக்கிறது. அந்தக் குறையையும் போக்குகிற முயற்சி இந்த வலையில் இருக்கிறது. குழந்தைகள் வாசிப்பதற்கான நிறையப் படைப்புகளை இவர் தர வேண்டும் என்று கேட்கிறோம். குறைந்த பட்சம் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தையுமேனும் இவர் வலையில் வைப்பது அவசியம்.

முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி குறித்து இப்போது பரவலாக வைக்கப் படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லாமல் இல்லை. இதை ஏற்றுக்கொள்ளும் ஹரணி நல்லவைகளும் இருக்கவே செய்கின்றன என்பதை ஆதாரத்தோடு சொல்கிறார். சரவணன் என்ற பார்வையற்ற இளைஞன் உழைத்து, அடுத்தவர்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டு குறிப்புகள் தயாரித்து செறிவான ஆய்வினைத் தந்துள்ளதை பெருமிதத்தோடு பதிகிறார்.

இதை இன்றைய ஆய்வாளர்கள் வாசித்தால் நல்ல செறிவான ஆய்வுகள் நமக்குக் கிடைக்கும்.

அவரது தந்தை எழுதிய கவிதை ஒன்றினைப் பரணில் கண்டெடுத்தவர் அதை நமக்கு பந்தி வைத்திருக்கிறார். மிகுந்த எள்ளலோடு இருக்கிறது. ஹரணி குறைந்த பட்சம் இரண்டாவது தலைமுறை என்பது புரிகிறது.

சிறுமை கண்டு சீறுதல் தமிழின் ஆகப் பெரிய மேன்மை என்பதை இவர் பாரதி கொண்டு நிறுவ முயன்றிருப்பது அழகானது.

சகுணியின் வலையில் முற்றாய் விழுந்த தருமன் திரௌபதையை சூதில் வைத்து தோற்கிறான். இது பாரதியை பேரதிகமாய் கோவப் படுத்துகிறது.

எல்லா தருமங்களையும் கற்றுணர்ந்த தருமன் இந்தக் கேவலத்தை செய்திருப்பது கண்டு கொதிநிலைக்குப் போன பாரதி பாஞ்சாலி சபதத்தில் எழுதுகிறான்,

” ஆயிரங்களான நீதி
  அவை உணர்ந்த தருமன்
  தேயம் வைத்திழந்தான்
  சீச்சி சிறியர் செய்கை செய்தான் ”

தருமனிடமிருந்து அறத்தை எல்லோரும் எடுத்துக் கொண்டிருக்க தமிழோ அவனது அறத்தைக் கேள்வி கேட்டது.

“ உன் தத்துவம் தவறென்று தரணிக்கு சொல்லவும்
  தமிழுக்கு உரிமை உண்டு “

என்று சொல்வதற்கு அவ்வைக்கு தைரியத்தைக் கொடுத்ததும் தமிழ்தான்.

ஆக, சிறுமை கண்டு சீறுதல், இறைவனே அறம் பிறழ்ந்தாலும் அதைச் சுட்டிக் காட்டுதல் போன்ற குணங்கள் தமிழுக்கு இருப்பதை அழகியலோடு சொல்கிறது இந்த வலை.

நதிகள் விளையாடும் வலை இது. பாருங்கள்,


நன்றி: புதிய தரிசனம்


Friday, July 19, 2013

சந்திப்பு

முக்கியமானவையாகவோ, ரசிக்கத் தக்கனவையாகவோ உள்ள சந்திப்புகளின் காதலன் நான்.

அப்படிப் பட்ட சந்திப்புகள் அரிதாகத்தான் கிட்டும். அப்படி ஒரு அபூர்வமான சந்திப்பினை இன்றைய தீக்கதிர் வெளியிட்டுள்ளது.

ஜக்ருதி பாண்டியா மற்றும் ஆஸ்கர் அலி இருவருக்கும் இடையே விசாகப் பட்டிணம் சிறைச்சாலையில் 90 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்புதான் அது.

2003 ஆம் ஆண்டில் ஜக்ருதியின் கணவரும் முன்னால் குஜராத் அமைச்சரும், அகமதாபாத் நகரின் பாரதிய ஜனதா கட்சியின் முன்னனித் தலைவர்களில் ஒருவருமான ஹரேண் பாண்டியா கொலை செய்யப்பட்டார்.

அவரைக் கொன்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டு விசாகப்பட்டினம் சிறையில் இருப்பவர்தான் ஆஸ்கர் அலி. குஜராத் உயர் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் இவரை விடுதலை செய்தது. ஆனாலும் சி பி ஐ உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்கிறது.

இருவரது சந்திப்பும் மிக அமைதியாக இருந்தது. ஜக்ருதி கேட்கிறார்,

“ என் பிள்ளைகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்லவேண்டும். சொல் , என் கணவரைக் கொன்றது யார்?”

அலி சொல்கிறார்,

“ சத்தியமாய் எனக்குத் தெரியாது. உங்கள் கணவர் கொல்லப்பட்ட நாளிலெல்லாம் எனக்கு அகமதாபாத் அறிமுகமே இல்லை. பத்து ஆண்டுகளாக மிகுந்த சித்திரவதைக்கு ஆளானேன். எனக்கொரு கேள்வி இருக்கிறது தாயே.”

“ கேளப்பா...”

“ நான் இழந்த இந்த 10 வருட வாழ்க்கையை யார் எனக்குத் திரும்பத் தருவார்கள்? “

இந்தக் கேள்விக்கு அந்தத் தாயிடம் மட்டுமல்ல யாரிடமும் பதில் இல்லை.

வெளியே வந்த ஜக்ருதி சொல்கிறார்,

“நான் உறுதியாக நம்புகிறேன், ஆஸ்கர் அலி இந்தக் கொலையில் ஈடுபடவில்லை. சரியாகத்தான் குஜராத் நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

இந்தக் கொலையில் ஈடுபட்ட சிலரை எனக்குத் தெரியும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நான் அந்தப் பெயர்களை வெளியிடுவேன்.

என் கணவரை ஒழித்துக் கட்ட ஒரு அரசியல் சதி நடந்துள்ளது”

மூன்று விஷயங்கள் பேசப்பட வேண்டும்,,

1 ) இதே மாதிரி ஒரு சந்திப்பு தமிழகத்தில் நடந்தபோது அதற்கு கொடுக்கப் பட்ட வெளிச்சமும் முக்கியத்துவமும் இந்தச் சந்திப்பிற்கு ஏன் கிட்டவில்லை.

2) குற்றவாளிகளைத் தெரியும் என்று ஒருவர் சொல்லும் போது அவரை அழைத்து விசாரிப்பதில் அக்கறை காட்டாது ஆஸ்கர் அலியை எப்படியேனும் குற்றவாளிக்கிவிட வேண்டும் என்று சி பி ஐ முனைப்பு காட்டுவது ஏன்?

3 ) இதே மாதிரிதான் ராஜீவ் அவர்களின் கொலைப் பற்றிய தகவல்கள் எனக்குத் தெரியும். என்னை அழைத்து விசாரியுங்கள் என்று தமிழகத்திலிருந்து வேலுச்சாமி தொடர்ந்து குரல் கொடுக்கிறார். ஏன் அவர் இன்னும் முறையாக விசாரிக்கப் படவில்லை?

எது எப்படியோ இப்படி ஒரு சந்திப்பை வெளிச்சப்படுத்திய தீக்கதிருக்கு என் நன்றிகள்.

Friday, July 12, 2013

வாசகர் மணிவண்ணன்


எப்படி யோசித்தும் என்ன கூட்டம் என்று நினைவில்லை. ஆனால் சென்னை இக்ஷாவில் நடந்தது இது.

கூட்டம் முடித்துவிட்டு வழக்கம் போல அரங்கத்தின் வெளியே அங்கங்கே குவியல் குவியலாய் நின்று பேசிக் கொண்டிருக்கிறோம்.

எங்களது விவாதம் ஜெயமோகனைச் சுழன்று சுற்றியது. அவரை எப்படி எப்படியோ விமர்சித்துக் கொண்டிருந்த நாங்கள் அவரதுகாடுபற்றி பேச ஆரம்பித்தபோது அதன் அழகியல் மற்றும் பிரமாண்டம் குறித்து கொஞ்சம் வியப்போடே நகர்ந்தது எங்களது உரையாடல்.

அப்போது பக்கத்து குவியலில் நின்று பேசிக் கொண்டிருந்த இயக்குனர் மணிவண்ணன் எங்கள் பக்கம் திரும்பி சொன்னார்,

ரொம்ப அருமையான நாவல்.  ரொம்பவே பிருமாண்டம். என்ன, அந்த நாவல்ல கொஞ்சம் சாரு இருப்பார். போக, கம்யூனிஸ்டுகள டேமேஜ் பண்றதுதான் அவரோட பர்பஸ். அவரோட விஷ்ணுபுரம் கூட அப்படித்தான்.”

எல்லா இடங்களிலும் இதை அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

இரண்டு விஷயங்கள் என்னை வியக்கவைத்தன,

1 யாரென்றே தெரியாத நபர்கள் , இன்னும் சொல்லப்போனால் முகவரியற்ற யாரோ பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தில் தனக்கு சொல்ல ஏதோ இருந்தால் அதில் பங்கேற்கும் அவரது பிரபலம் துறத்தல்.

2 மற்ற சினிமாக்காரர்களைவிட கொஞ்சம் கூடுதலாக வாசிப்பார் என்று மட்டுமே என் புத்தியில் கிடந்ததை சுத்தமாய் துடைத்துப் போட்ட அவரது
ஆழமான வாசிப்பு.

கலகக்காரர், நல்ல நகைச்சுவை நடிகர், அரசியல் பகடியோடு படங்களைத் தருவதில் வல்லவர், எல்லாவிதமான படங்களையும் இயக்கியவர், போக தமிழ்த் தேசியக் குழுக்கள் எதுவாயினும் அது எவ்வளவு சின்னதாயினும்
அது நடத்தும் கூட்டங்களில் சிரமம்பாராது பங்கேற்பவர் என்பதுதான் பொதுவாக அவர் குறித்த தமிழ் மண்ணின் பொது அபிப்பிராயம்.

ஆனால், பெரியாரையும் , மார்க்ஸையும் கையில் எடுக்காமல் தமிழ்த் தேசியம் யாருக்கும் சாத்தியப் படாது என்பதில் அவர் உறுதியாய்த்தான் இருந்திருக்கிறார். ஆரம்பக் காலத்தில் அவர் இரண்டு பொது உடைமைக் கட்சிகளுக்கும் வேலை பார்த்திருக்கிறார். சுவர் எழுத்து எழுதியிருக்கிறார்.

ஒருகட்டத்தில் இரண்டு இடதுசாரிக் கட்சிகளிடமும் அவர் நம்பிக்கை இழக்கிறார். அவர்கள் மீது ஊழல், ஒழுக்கமின்மை, அர்ப்பணிப்பின்மை
போன்ற குற்றசாட்டுகள் எதுவும் இல்லை அவருக்கு. அவர்கள் தொழிற்சங்கங்களைச் சார்ந்துமட்டுமே இயங்குகிறார்கள். ஆகவே
அவர்களால் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே
செயல்பட முடிகிறது. இது போதாது. போகவும் தொழிற்சாலைகள் மூடப்படும்போது கட்சி அந்த இடத்தில் இல்லாமல் போகும் என்பதுதான்
அவரது குற்றச்சாட்டு.

இந்த வகையில் ஒரு தீவிரவாத இடதுசாரிக் குழுவில் இணைகிறார். இவரோடு இயங்கிய இரண்டு தோழர்கள் இல்லாமல் போகவே ஒரு இடதுசாரியாய் இயங்க இயலாமையால் மட்டுமே அவர் சென்னைக்கு வருகிறார்.

மட்டுமல்ல, எந்த இடத்திலும் மற்ற தமிழ்த் தேசியத் தோழர்கள் முன் வைப்பது போன்ற கடுமையான விமர்சனங்களை இவர் இடதுசாரிக் கட்சிகள் மேல் வைத்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் இணக்கமாகவே இருந்திருக்கிறார்.

காளிமுத்து என்கிற இவரது ஆசிரியர்தான் இவரது ஆளுமைக்கெல்லாம் காரணம் என்கிறார். தமிழ்வாணனை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தவரை
அவர்தான் “ தாய்”  நாவலைத் தந்து மடை மாற்றம் செய்திருக்கிறார். சிலந்தியும் ஈயும்கூட அவர்தான் தந்திருக்கிறார். நாமும்தான் 25 ஆண்டுகளாக ஆசிரியராக இருக்கிறோம். இப்படி எதுவும் செய்யவில்லையே என்ற கோவம் நம் மீது இயல்பாகவே வருகிறது.

கணக்கற்ற முறை இவர் “ கம்யூனிஸ்ட் அறிக்கை” யை வாசித்திருக்கிறார். ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் புதிது புதிதாய் கற்றுக் கொள்வதற்கு அதில் இருந்ததாய்  சொல்லியிருக்கிறார். இடது சாரித் தலைவர்கள் தங்களது இளைஞர்களை இதை வாசிக்கச் செய்வதில் இன்னும் கொஞசம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது கொஞ்சம் குறைந்து இருப்பதாகப் படுகிறது.

ஏறத்தாழ 40000 நூல்கள் அவரது வீட்டில் இருப்பதாகத் தெரிகிறது. இயக்குனர்கள் சங்கத்தில் ஒரு நூலகம் அமைத்து அவற்றை அங்கு வைக்கவேண்டும் என்று நந்தன் ஸ்ரீதரன் உள்ளிட்ட திறைத் துறையினர் ஆசைப் படுவதில் அர்த்தம் இருக்கிறது.

துணை இயக்குனர்கள் நிறைய வாசித்தால்தான் தமிழ்த் திரையுலகம் வளப்படும் என்று மனதார நம்பியவர் மணிவண்ணன். வாசிக்க நல்ல நூல்களைக் கொடுத்து வாசிக்கத் தூண்டியவர்.

எனவே அவரது குடும்பத்தினர் இதைக் கொஞ்சம் கருணையோடு அணுக வேண்டும்.

கொஞ்சம் பழசாய்த்தான் தோன்றும் ஆனாலும் அதுதான் சரியெனப் படுகிறது,

“ வாசிப்பதை நிறுத்திக் கொண்ட தேர்ந்த வாசகனுக்கு எங்கள் அன்பும் வணக்கமும்.

நன்றி : “ புதிய தரிசனம்”

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...