Sunday, July 21, 2013

5. ஹரணி பக்கங்கள்…


ஹரணியின் வலை இது.மக்களுக்கான எழுத்தாளாளரான இவரிடமிருந்து ஒரு   டஜன் நூல்கள் வெளிவந்திருக்கின்றன.மக்களின் இயல்பான வாழ்க்கையை இந்த  வலையின் நெடுகிலும் நம்மால் பார்க்க இயலும்.

“ கை அளவு கற்க ஆசைகடுகளவு கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.”   என்பதாகப் பிரகடனப்படுத்துகிறது இவரது வலைஆனால் இது கடலுக்காக     வீசப்பட்டவலைகடல் எதுவும் இந்த வலையில் இதுவரை அகப்படவில்லை   எனினும் நிறைய நதிகள் சிக்கியிருக்கின்றன இவரது வலையில்

எல்லாம் இருக்கிறது இந்த வலையில்அன்புகாதல்காமம்கருணைதாய்மைமொழி குறித்த அக்கறை,தொன்மம் பற்றிய புரிதல்கோவம்ஆதங்கம்இலக்கியம்,   என்று எல்லாம் கிடைக்கிறது.

யாருடைய ஆத்திச்சூடியோடும் இந்த வலையில் இருக்கக்கூடிய ஹரணியின்   ஆத்திச் சூடிகளை நாம் ஒப்பிட்டுப்பேச முடியும்.  சமூக அக்கறையோடு கூடிய ஆத்திச்சூடிகள்அவற்றில் மூன்றைச் சொல்ல   வேண்டும்.

1 . அன்புசால் உலகு செய்
2 . ஓடி ஓடி உறவுகொள் வளர்.
3 . ஊரின் நியாயம் கேள்.

இந்த மூன்றிற்காக மட்டுமே இவரது வலையைக் கொண்டாடலாம்.

“ நான் பார்த்து
  வளர்ந்தவன் இப்போது
  நகராட்சி கவுன்சிலர்
  இவர் பிறந்தது தெரியுமென்று
  சான்று தருகிறான் எனக்கு ” என்பது மாதிரி நறுக்குக் கவிதைகள் ஏராளம் இருக்கின்றன இவரது வலையில்.

விரலிடுக்கில் கசியும் நீரைப்போல ஏராளமான நல்லதுகளை நாம் கசியவிட்டிருக்கிறோம். மரப்பாச்சி பொம்மைகளும் அவற்றில் ஒன்று. மரப்பாச்சி என்ற சொல்லைக் கேள்விப் படும் பொழுதெல்லாம் லபக்கென்று நமது மனது ஜெயகாந்தன் எழுதிய ஒரு கதைக்கு ஓடிவிடும். “ மரப்பாச்சியா” அல்லது “ மரப்பாச்சி பொம்மையா ” என்று சரியாய் நினைவில்லை.

பக்கத்து பணக்கார வீட்டுக் குழந்தை ஒரு மரப்பாச்சி பொம்மையை வைத்து விளையாடும். அதைப் பார்த்த பக்கத்துக வீட்டுக் குழந்தை தனக்கும் விளையாட அதுபோல ஒரு மரப்பாச்சி பொம்மை வேண்டுமென்று அடம்பிடிக்கும். அவர்கள் வீட்டில் பாப்பாக் குழந்தை இல்லாததால்தான் அவளுக்கு விளையாட மரப்பாச்சி தேவைப் பட்டதென்றும் இவளுக்கு விளையாட தம்பிப் பாப்பாவே இருப்பதால் மரப்பாச்சி தேவை இல்லை என்றும் ஒரு வழியாக சமாதானப் படுத்துவார்கள்.

ஒரு வழியாக சமாதானமடைவாள் குழந்தை. பணக்காரக் குழந்தை பரப்பாச்சிக்கு சோப்பு போட்டு அதை தண்ணீர்த் தொட்டியில் முக்கி குளிப்பாட்டுவாள். இதைப் பார்த்த இந்தக் குழந்தையும் பாப்பாவிற்கும் சோப்பு போட்டு தண்னீர்த் தொட்டியில் முக்குவள். குழந்தை செத்துப் போகும். அய்யோ அப்படி ஒரு வலி இருக்கும்.

ஏழ்மையை சொல்ல ஜெயகாந்தனுக்கு கருவியாக வாய்த்த, தொன்மச் சிறப்புமிக்க தமிழ்க் குழந்தைகளின் விளையாட்டுப் பொருளான மரப்பாச்சியை இந்தத் தலைமுறை முற்றாய் இழந்திருக்கிறது. இதைப் பற்றி அக்கறையோடு ஹரணி சொல்கிறபோது இன்னும் என்னத்தையெல்லாம் இழக்கப் போகிறோம் என்று தோன்றுகிறது.

“ காந்தியும் குமரேசனும் ” என்றொரு குழந்தைகளுக்கான சிறு கதை இருக்கிறது. இதே தலைப்பில் வெளிவந்துள்ள தொகுப்பிலும் இது இருக்கிறது. பொதுவாகவே குழந்தைகளைப் பற்றி இலக்கியங்கள் வருமளவிற்கு குழந்தைகளுக்கான இலக்கியங்கள் வருவதில்லை என்றொரு குறை இருக்கிறது. அந்தக் குறையையும் போக்குகிற முயற்சி இந்த வலையில் இருக்கிறது. குழந்தைகள் வாசிப்பதற்கான நிறையப் படைப்புகளை இவர் தர வேண்டும் என்று கேட்கிறோம். குறைந்த பட்சம் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தையுமேனும் இவர் வலையில் வைப்பது அவசியம்.

முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி குறித்து இப்போது பரவலாக வைக்கப் படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லாமல் இல்லை. இதை ஏற்றுக்கொள்ளும் ஹரணி நல்லவைகளும் இருக்கவே செய்கின்றன என்பதை ஆதாரத்தோடு சொல்கிறார். சரவணன் என்ற பார்வையற்ற இளைஞன் உழைத்து, அடுத்தவர்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டு குறிப்புகள் தயாரித்து செறிவான ஆய்வினைத் தந்துள்ளதை பெருமிதத்தோடு பதிகிறார்.

இதை இன்றைய ஆய்வாளர்கள் வாசித்தால் நல்ல செறிவான ஆய்வுகள் நமக்குக் கிடைக்கும்.

அவரது தந்தை எழுதிய கவிதை ஒன்றினைப் பரணில் கண்டெடுத்தவர் அதை நமக்கு பந்தி வைத்திருக்கிறார். மிகுந்த எள்ளலோடு இருக்கிறது. ஹரணி குறைந்த பட்சம் இரண்டாவது தலைமுறை என்பது புரிகிறது.

சிறுமை கண்டு சீறுதல் தமிழின் ஆகப் பெரிய மேன்மை என்பதை இவர் பாரதி கொண்டு நிறுவ முயன்றிருப்பது அழகானது.

சகுணியின் வலையில் முற்றாய் விழுந்த தருமன் திரௌபதையை சூதில் வைத்து தோற்கிறான். இது பாரதியை பேரதிகமாய் கோவப் படுத்துகிறது.

எல்லா தருமங்களையும் கற்றுணர்ந்த தருமன் இந்தக் கேவலத்தை செய்திருப்பது கண்டு கொதிநிலைக்குப் போன பாரதி பாஞ்சாலி சபதத்தில் எழுதுகிறான்,

” ஆயிரங்களான நீதி
  அவை உணர்ந்த தருமன்
  தேயம் வைத்திழந்தான்
  சீச்சி சிறியர் செய்கை செய்தான் ”

தருமனிடமிருந்து அறத்தை எல்லோரும் எடுத்துக் கொண்டிருக்க தமிழோ அவனது அறத்தைக் கேள்வி கேட்டது.

“ உன் தத்துவம் தவறென்று தரணிக்கு சொல்லவும்
  தமிழுக்கு உரிமை உண்டு “

என்று சொல்வதற்கு அவ்வைக்கு தைரியத்தைக் கொடுத்ததும் தமிழ்தான்.

ஆக, சிறுமை கண்டு சீறுதல், இறைவனே அறம் பிறழ்ந்தாலும் அதைச் சுட்டிக் காட்டுதல் போன்ற குணங்கள் தமிழுக்கு இருப்பதை அழகியலோடு சொல்கிறது இந்த வலை.

நதிகள் விளையாடும் வலை இது. பாருங்கள்,


நன்றி: புதிய தரிசனம்


14 comments:

 1. சிறப்பான அறிமுகம். அவரது வலைப்பக்கங்களையும் பார்வையிட்டேன். நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர்

   Delete
 2. உங்கள் எழுத்துநடை சிறப்பாக இருக்கிறது. வலைத்தள அறிமுகத்தைச் சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்...ஹரணியின் வலைப்பக்கத்தையும் பார்த்தேன். சிறப்பாக இருக்கிறது.

  வலைத்தளங்கள் பற்றி காத்திரமான பதிவுகளை உங்களைப் போன்றோர் செய்யும்போது எழுதிச் செல்லும் விதியின் கை எழுதிக்கொண்டே இருக்கும்.

  தொடரட்டும் உங்கள் பணி!

  நற்றமிழ் நங்கை வாழ்க!

  -தமிழன்புடன் 'கவித்தீபம்' கலைமகன் பைரூஸ்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர்

   Delete
 3. ஓரு வலைப்பக்கத்துக்கு இதற்கு மேல் நயமாய் அறிமுக உரை எழுத முடியாது...இதைப் படிப்பவர்கள் கண்டிப்பாக அதைப் பார்ப்பார்கள்...இது இந்த கட்டுரையின் வெற்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தினேஷ்

   Delete
 4. அற்புதமான எழுத்தாளரையும், அவர் தம் வலைப்பக்கத்தையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிகள். தங்கள் எழுத்து நடையும் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர்

   Delete
 5. உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன். சிறப்பாக இருக்கின்றன. நல்லதொரு வலைதளத்தை அறிமுகம் செய்வித்தமைக்கு நன்றி.

  பி.கு. ஜெயகாந்தன் கதையின் பெயர் 'பொம்மை' என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

  நன்றி.
  அரவிந்த் சச்சிதானந்தம்

  ReplyDelete
  Replies
  1. உங்களது கருத்து மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதை விடவும் ஜெயகாந்தன் அவர்களின் கதைத் தலைப்பை அறியத் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி தோழர்

   Delete
 6. தொன்மச் சிறப்புமிக்க தமிழ்க் குழந்தைகளின் விளையாட்டுப் பொருளான மரப்பாச்சியை இந்தத் தலைமுறை முற்றாய் இழந்திருக்கிறது # எத்தனையோ விளையாட்டுகளையும் அறியாதிருக்கிறது
  விஞ்ஞான வளர்ச்சியில் தொன்மை சிறப்புகள் வீழ்ந்து விட்டன

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க தோழர்.

   Delete
 7. “ நான் பார்த்து
  வளர்ந்தவன் இப்போது
  நகராட்சி கவுன்சிலர்
  இவர் பிறந்தது தெரியுமென்று
  சான்று தருகிறான் எனக்கு "
  நெத்தியடி வாழ்த்துக்கள் ஹரணி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்