Monday, July 30, 2012

மயான தர்பார்

ஏறத்தாழ இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு எங்களூர் சுடுகாடு வரைக்கும் போய் திரும்பவேண்டிய அவசியம் வந்தது.

மாமா இறந்து போனார். ஊரில் பக்கத்து பக்கத்து வீடு.  எங்கள் அம்மாவும் அவரும் சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள். நான் மிகச் சின்ன பிள்ளையாய் இருந்த காலத்தில் மனைப் பிரிவினையின் பொருட்டு எங்கள் அப்பா அம்மாவிற்கும் அவருக்கும் நிறைய பிரச்சினைகள். ஏதேனும் ஒரு வாரம் சனியோ ஞாயிறோகூட வராமல் போகலாம் ஆனால் எங்கள் வீட்டிற்கும் அவருக்கும் குறைந்தது வாரம் ஒருமுறையேனும் சண்டை நடந்தே தீரும்.

“வேனாப் பாரேன் நீ நாசாமாப் போயிடுவ” என்று அவரும் எங்கம்மாவும் அடிக்கடி ஒருவரையொருவர் மண்ணை வாரித் தூற்றிக் கொள்வதை எத்தனையோமுறை வேடிக்கை பார்த்திருக்கிறோம்.

அந்த மாமாவின் உயிர்பிரிந்த வேளையில்தான் நான் அவரது கால்களைப் பிடித்தவாறே கண்கலங்கி நின்றேன். அப்போது அழ ஆரம்பித்த என் அம்மா இன்று மாலை நான் வீட்டை விட்டு புறப்படும்வரை அழுதுகொண்டிருக்கிறது.

அவர் உயிர் பிரியும் போது கலங்கியக் கண்களோடு அங்கே இருந்தது அவரது மருமகளைத் தவிர நான், விட்டு, என் அம்மாயி, அம்மா, கிஷோர், கீர்த்தனா.

சதா எங்கள் அம்மா அப்பாவை மண்வாரித் தூற்றி சபித்துக் கொண்டும், சாபத்தை வாங்கிக் கொண்டும் இருந்த மாவை, இன்னும் சொல்லப்போனால் சிறு பிராயத்தில் எங்கள் எதிரியாகவே நாங்கள் பாவித்த மாமாவோடு எப்போது இப்படி ஒரு ஐக்கியம் வந்தது?

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. எங்கள் தாத்தா இறந்தபோது அவருக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் எங்கள் மாமாதான் கொள்ளி வைத்தார். அவருக்கு நான் கொள்ளி வைக்க முடியாது.ஏனெனில் நான் என் அம்மாவின் மூத்தாள் பெற்ற பிள்ளை. எங்கள் அம்மாவிடம் என்னை விட்டுவிட்டு அவர் கைக்குழந்தையாய் இருந்த போதே போய்விட்டாராம்.

கொள்ளி வைத்ததும் , கொள்ளிவைத்த தனக்குதான் சொத்து வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரமித்துவிட்டார். அதனால்தான் அவருக்கும் அங்கள் வீட்டிற்கும் சண்டை.

ஒரு வழியாய் பஞ்சாயத்து வைத்து பிரச்சினை தீர்ந்த பொழுது சொத்துக்களை எங்கள் அப்பா பெயரில் எழுதி வைத்துவிட்டது எங்கள் அம்மாயி.

ஒரு வாரம் சர்வேயர், அவர் இவர் என்று முகாமிட்டு காட்டையும் வீட்டையும் பிரித்து பட்டா செய்து கொடுத்துவிட்டு சென்று விட்டனர். அது ஒரு கூட்டுப் பட்டா. அன்று முதல் மாமா கோபத்தோடு ஒதுங்கிவிட்டார். சண்டைக் காட்சிகள் ஒரு முடிவுக்கு வந்தன.

பட்டா சரியாக உள்ளதா என்று பார்த்த்போதுதான் அப்பாவிற்கு மாமாவைவிட 40 செண்ட் காடு அதிகமாகப் பிரிந்திருப்பதைக் கண்டு பிடிக்கிறார்.

உடனே பட்டாவை எடுத்துக் கொண்டு மாமா வீட்டிற்குப் போகிறார். மாமா பேசவே இல்லை. “ வாங்கண்ணா” என்று அத்தை மட்டுமே அழைத்து உட்கார வைக்கிறார்.

“இல்லம்மா, பிரிச்சப்ப எனக்கு நாத மணிய விட 40 செண்ட் கூட ஒதுங்கிடுச்சு. அவர்ட்ட சொல்லி என்றைக்கு வசதிப் படும்னு கேளு. 20 செண்ட்டை எழுதிக் கொடுத்திடறேன்.”

சொன்னமாதிரியே எழுதிக் கொடுத்தார். அன்று இணைந்தார்கள். அதன் பிறகுஅவரது மரணம் வரைக்கும் நல்ல மைத்துனராக , நண்பனாக அப்பாவோடு வாழ்ந்தார்.

அதன் பிறகு நேற்றுவரை எங்களது தாய் மாமாவாய் மூழுதாய் செய்து தீர்த்திருக்கிறார்.

முழுச் சுய நிணைவோடு இல்லாத எங்கள் அப்பாவை அவர் சகித்துத் தாங்கிய அந்தப் பெருந்தன்மைக்கே நானும் என் குடும்பமும் அவருக்கு கடமைப் பட்டிருக்கிறோம். பெரிய சோகம் என்னவெனில் மாமா இறந்து போனது அவருக்கு முழுதுமாய் பிடிபட வில்லை.

“அப்பா நேரா நேரத்துக்கு மாத்திரை சாப்பிடனும். மாமாவப் பார்த்தீங்கள்ள”

“அவரு சளிய கவனிக்கலடா. நாந்தான் சளி வந்தா சிந்தீடறேனே”

இதுதான் எங்கள் அப்பா.

அவரு சளிய கவனிக்கலடா என்கிற போது இருந்த அழுத்தம் அடுத்த வரியிலேயே காணாமல் போய்விடுகிறது.

நல்ல சுய நினைவு இருந்த ஒரு புள்ளியில்

“மாமாவ எரிச்சிடாதீங்கடா. குழியில வச்சுடுங்க. நான் போனப்புறம் அவரோட பக்கத்துல வச்சுடுங்க.”

சுடுகாடு போனோம். புதைத்தோம்.

வழக்கம் போல் சுடுகாடு தர்பார் தொடங்கியது.

முன்பெல்லாம் தப்படித்த தோழர்களும், சலவைத் தோழர்களும், துப்புறவுத் தொழிலாளித் தோழர்களும், முடிவெட்டும் தோழரும் அந்த சபைனரின் காலில் விழுது ஊதியத்தினைப் பெறுவது வழக்கம்.

அந்தச் சபையில் 16 வயது பையனும் இருப்பான். அவனை உள்கொண்ட சபையின் காலில் விழுந்து வணங்குபவர்களில் 65 வயதுக்காரரும் இருப்பார்.

இப்போது நிறைய மாறியிருந்தது.

சபையினரின் கால்களில் விழத் தேவை இருக்கவில்லை. கெஞ்சி கூலியை உயர்த்திக் கேட்கத் தேவை இருக்க வில்லை. சபையினரிடம் இருந்து மரியாதைக் குறைச்சலான வார்த்தைகள் இல்லை.

ஒவ்வொருவரும் அழைக்கப்பட்ட போது துண்டேந்தி ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

அடுத்த நாள் காலை அப்பா மாமா வீடு போய்விட்டார்.

“ஏம்மா பத்மா, நாதமணி வந்தாச்சா. எங்க அவரு?”

படு இயல்பாய் கேட்டிருக்கிறார்.

இவரது நிலைக்காகவும் சேர்த்து அழுதுகொண்டே பத்மா அப்பாவைக் கொண்டு வந்து விட்டது.

நான்கு விஷயங்களுக்காக நான் அழுகிறேன்,

1) மாமாவின் மரணம்

2)அப்பாவின் நிலை

3)குழந்தைத் தொழிலாளிகள் இல்லாத பூமிக்கான கனவோடு உழைக்கும் நம் கண்முன்னே சுடுகாட்டில் பள்ளிச் சீருடையோடு வேட்டி விரித்த சிறுவன்

4) நாள் முழுக்க உழைத்த பின்பு அதற்கான ஊதியத்தை துண்டேந்தி வாங்க வேண்டிய அவலம்


Friday, July 27, 2012

அப்ப நான்?

சரியான ஆங்கிலம் , பிழையான ஆங்கிலம், நல்ல ஆங்கிலம் , மோசமான ஆங்கிலம் என்பதெல்லாம் கிடையாது என்று சொல்வதுண்டு. "standard english" என்று மட்டுமே ஒன்று இருப்பதாகவும் தெரிகிறது. அந்த “standard" ம் இடத்திற்கு இடம் மாறுபடுவதாகவும் இருக்கிறது.

உச்சரிப்பு , எழுத்து இரண்டுக்கும் தொடர்பே இல்லாத இடங்களே ஆங்கிலத்தில் மிக அதிகம். ஒலியும் எழுத்தும் இவ்வளவு முரண்பட்டு நிற்பதை வேறு எந்த மொழியிலும் பார்க்க இயலாது.

சொற்குற்றம், பொருட்குற்றம் என்பதெல்லாம் ஆங்கிலத்தில் அவ்வளவாகக் கண்டுகொள்ளப் படுவதில்லை என்றே சொல்லலாம். தொடர்புக்கு உதவினால் (communication) போதும் என்கிற நிலைதான்.

இதுதான் ஆங்கிலம் இப்படி விஸ்வரூபமெடுத்து உலகை தன் கரங்களுக்குள்ளும் கட்டுப் பாட்டிற்குள்ளும் கொண்டுவந்து வைத்துக் கொள்ள ஏதுவாயிருந்தது என்றும் சொல்லலாம்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் "black" என்ற தலைப்பிலொரு ஆப்பிரிக்க பெண் குழந்தை எழுதிய கவிதை தோழன் ஜானகிராமன் மூலமாக எனக்கு வந்தது. என்னை சுண்டி இழுத்தது அந்தக் கவிதையின் மொழி நடைதான்.

அமெரிக்க, லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய, ஆப்பிரிக்க இப்படி எந்தத் தரத்திற்கும் கொஞ்சமும் ஒத்துப் போகாத ஒரு மொழி நடை. நம்மிடம் இருப்பது போல் ஆங்கிலத்திலும் பண்டிதர்கள் இருந்திருப்பின் தற்கொலை செய்திருப்பான் அல்லது அந்தக் கவிதையைக் கிழித்துப் போட்டுவிட்டு அதைத் தொட்ட கைகளை டெட்டால் விட்டுக் கழுவியிருப்பான். அப்படி ஒரு உடைசலான மொழி.

ஒன்று, அதை எழுதியக் குழந்தைக்கு ஆங்கிலம் எழுத அவ்வளவாகத் தெரியாதிருந்திருக்க வேண்டும். அல்லது எங்களை அடிமைப் படுத்திய  ஆங்கிலத்தை என்னால் முடிந்த அளவு சிதைத்து சின்னாப் பின்னப் படுத்துகிறேன் பார் என்ற கோவமாக இருக்க வேண்டும்.

காரணம் எதுவாயிருப்பினும் எனக்கு மகிழ்ச்சிதான்.  அவ்வளவாய் எழுதத் தெரியாதவள் எனில், சரியாய் எழுத வராத ஒரு குழந்தையால் உடைந்த நடையில் இவ்வளவு பெரிய வலியை இவ்வளவு சரியாகவும் நேர்த்தியாகவும்
கொண்டு சேர்க்க முடிந்திருக்கிறதே என்ற மகிழ்ச்சி.

அடிமையாக்கியதனால் வந்த கோவமெனில், ஆதிக்கத்தை இப்படி நொறுக்கிப் போட்ட செய்நேர்த்திக்காகவும் மகிழ்ச்சி.

அவள் எழுதுகிறாள்,

"when i born i black
when i grow up i black  
when i go in sun i black
when i scared i black
when i sick i black
and when i die i still black
and u white fellows
when u born u pink
when u grow up u white
when u go in sun u red
when u cold u blue
when u scared u yellow
when u sick u green
when u die u grey
and u call me coloured

இப்படியாக நீள்கிறது அந்தக் கவிதை.

கொஞ்சம் அந்த மொழி நடையைப் பாருங்கள்.. இவ்வளவு மோசமான நடை எவ்வளவு அழுத்தமாக விசயத்தை சொல்கிறது பாருங்கள்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள், நானும் ஜானகியும் அரை மணி நேரம் அலை பேசியில் அவளது மொழி குறித்து சிலாகித்தோம். இந்த மொழியை வைத்து இவ்வளவுஅழுத்தமாக விளங்க வைக்கிறாளே. உண்மையிலுமே அவள் தேர்ந்த ஆளுமைக்காரி என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டோம்.

ஆனால் அவளது திறமையை , ஆளுமைக்கு கொஞ்சமும் குறைந்தவளல்ல என்று என் பிள்ளை ஒருவன் இன்று நிரூபித்தாள்.

இன்று எங்கள் பள்ளியில் உடற்றிரப் போட்டிகள் நடந்தன.

 நல்ல வெயில் . பொங்கிக் கரைபுரண்டு ஓடியது உற்சாகம்.  நானும் சக ஆசிரியர் ஒருவரும் பிள்ளைகளை ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தோம்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருத்தி மிகுந்த உற்சாகத்தோடு அங்கும் இங்கும்பறந்து கொண்டிருந்தாள். அவளும் நாங்களும் நேருக்கு நேர் நின்றபோது,

good morning”

“ஏய் சாரெல்லாம் கிடையாதா”

“ you no sir now”

”பாருங்களேன். இங்க்லீஷ் க்ளாஸ்ல ஒரு வார்த்தை வராது.இப்ப பாருங்க அன்பு எப்படி கிழிக்கிறான்னு. ஆமா, சம்மரி படிச்சியா நீ”

விளையாட்டாய்தான் கேட்டேன். வெடித்து சிரித்து சொன்னாள்,

you no english sir  i no student now"

மிரண்டு கேட்டேன்,

 “அப்ப?”

சொன்னாள்

”:this no class
i no student 
you no teacher"

அப்புறம்...?

“this ground
i athelate
he refree"

”அப்ப நான் ?”

“bloody audience"

சிரித்துக் கொண்டே ஓடிவிட்டாள். எப்போதுமே அவள் செல்லம்தான்.

இவள் பேசியதும் உடைந்த ஆங்கிலம்தான். ஆனால் என்னமாய் புரிய வைத்துவிட்டாள்

ஒன்று தோன்றுகிறது எல்லா விதத்திலும் இவர்களை இப்படியே கொஞ்சம் அனுமதித்து கொஞ்சம் ரசிக்கப் பழகினால்தான் என்ன?




Tuesday, July 24, 2012

கருப்பு




இன்று எதேச்சையாகமுக நூலை மேய்ந்து கொண்டிருந்தபோது ஜானகிராமன் ஹரிஹரன் மேல்காணும் கவிதையை பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்த பிறகு என்னால் வேறு எதுவுமே செய்ய இயலவில்லை. ஆகச் சமீபத்தில் வேறு எதனாலும் நான் இந்த அளவிற்கு பாதிக்கப் பட்டிருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

ஒரு பெண் குழந்தை எழுதியதாக நம்பப் படுவதாய் ஜானகி சொன்னார்.

யாரென்று தெரியவில்லை?

எழுதிய குழந்தைக்கு எழுந்து நின்று வணங்கி என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னால் முடிந்தவரை நம் மொழிப்படுத்த முயற்சித்திருக்கிறேன்.

கவிதை எங்கேனும் நீர்த்துத் தெரியுமானால் தவறு என்னுடையது.

பொறந்தப்ப நாங்கருப்பு
வளாந்தப்பவும் கருப்புதான்
வெயிலில் கிடந்தப்பவும் நாங்கருப்புதான்
பயந்து மெரண்டு திருதிருன்னு முழிச்சப்பவும்
நாங்கருப்புதான்
சீக்காக் கிடந்தப்பவும்
செத்துப் போனப்பவும்
நாங்கருப்புதான்
பொறந்தப்ப நீ சாயம்போன சிவப்பு
வளர வளர வெள்ளையான
வெயில்ல வெளிய வந்தப்ப செவந்த நீ
சளிக்கு நீலமான
மெரண்டப்ப மஞ்சளா
சீக்குல பச்சையான
செத்தா உன் நெறம் சாம்பல்
ஆனாலும் நக்கலுனக்கு
நாங்கருப்புன்னு







Monday, July 23, 2012

இன்றின் நியாயத்திலிருந்து...

”எது கவிதை?
யாருக்குத் தெரியும்?”

என்பார் சுகதேவ்.

சுகதேவ் சொல்வது மிகச் சரியான கூற்றாகவே படுகிறது. ஆமாம், கவிதை குறித்து முழுதாய் அறிந்தவர்கள் யாருமே இல்லை என்றே கூறலாம். கவிதை குறித்த அபிப்பிராயம் ஆளுக்கு ஆள் மாறவே செய்கிறது. எது கவிதை என்பதற்கான ஒரு பொதுவான அபிப்பிராயம் இதுவரையிலும் எட்டப் படவில்லை என்பதோடு என்றேனும் ஒரு நாள் எட்டப் படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றனவா என்பதும் சந்தேகமே.

ஆனால் அதற்காக யாரும் குழம்பித்திரிகிற சூழையும் கவிதை யாருக்கும் வைக்கவில்லை.

அம்ரீதா சொல்கிறார்,
“குருதியின் வெப்பத்திலிருந்து பிறப்பது கவிதை”

எனக்கென்னவோ இது பெருமளவு சரி என்றே படுகிறது.குருதி கொதிக்கக் கொதிக்கப் பொங்கிக் கொப்பளித்து வரவேண்டும் கவிதை என்றுதான் தோன்றுகிறது. அப்போதுதான் கவிதை உயிர்ப்போடும் வன்மத்தோடும் வரும். கவிதை குறித்த எந்த அபிப்பிராயத்தோடும் பேதம் கொள்ளும் யாரும் இதை எந்த வித பேதமும் இல்லாமல் ஏற்கவே செய்வார்கள். சூடு கவிதையின் உயிர்ப்பு எனில் வன்மம்தான் கவிதையின் குரல்.

மக்கள் கவிஞர் இன்குலாப் சொல்கிறார்,
“இன்றின் நியாயத்திலிருந்து எழுதுகிறேன். குருதி கொப்பளிக்கிறது”

எவ்வளவு சத்தியமான கூற்று. இன்றின் நியாயத்திலிருந்து புறப்படுகிற கவிதை குருதியின் வெப்பத்திலிருந்துதான் புறப்படும். அதன் குரல் தவிர்க்கவே இயலாதபடி வன்மமாகத்தான் இருக்கும். அவை சூடாகவும் வன்மக்குரலோடும் இருப்பதால் அவை கலகக் கவிதைகளாகவும் இருக்கும். மக்கள் கவிஞரின் கவிதைகளே இதற்கு சாட்சி.

இன்றின் நியாயத்திலிருந்து எழுதப் படுகிற கவிதைகள்தான் நாளையை சரி செய்து செழுமைப் படுத்தும்.

எனவேதான் குருதி கொப்பளிக்க , வன்மக் குரலோடு, இன்றின் நியாயத்திலிருந்து கலகக் கவிதைகள் ஏதேனும் வராதா என்ற தவத்தோடு காத்திருக்கிறோம். நமது அகோரப் பசிக்கான சிற்றுண்டிகளும், உணவு வகைகளும் சமயத்தில் பெரு விருந்துமாக கவிதை நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் தனது “வெட்கத்தில் நனைகின்ற” என்ற கவிதை நூல் மூலம் நமக்குப் பந்தி வைத்திருக்கிறார் கிருஷ்ணப்ரியா.

“கவிதைக்காண இலக்கணங்களோ, சிறப்பான வார்த்தைகளோ, அழகியலோ,இல்லாத கவிதைகளாக இவை இருக்கக்கூடும்..”என்று தனது நூலுக்கான அறிமுகத் தளத்தில் ப்ரியா சொல்கிறார். அவரது நூலுக்குள் பயணித்து வந்த பிறகு நாம் சொல்வது இதுதான்,

 “ப்ரியாவிற்கு இவ்வளவு தன்னடக்கம் தேவையில்லை”

காரணம், இல்லாமலும் இருக்கக்கூடும் என்று இவர் பட்டியலிட்டுத் தருகிற அனைத்தும் இவரது கவிதைகளில் செழித்துக் கிடக்கின்றன.

கீழத்தஞ்சை ஆண்டைகளைப் பற்றி நமக்குத் தெரியும். ஈவு இரக்கமே இல்லாது தங்களது பன்னையாட்களை சவுக்காலும், சாட்டைகளாலும், புளிய மிளாறுகளாலும் ரத்தம் வர அடித்து வேலை வாங்கிய மனிதக் கழிசடைகள். அவர்களிடம் வேலை பார்த்த அடிமைக் கூலிகள் பேசிக்கொள்வார்களாம்,

“என்னதான் கோவம் வந்து சாட்டையால அடிச்சாலும் எங்க ஆண்ட ரொம்ப நல்லவங்கத் தெரியுமா? காலயில அடிச்சவுங்க சாயங்காலம் வேல முடிஞ்சப்புறம் ,” ஏண்டா இப்படி அடி வாங்குற மாதிரி நடந்துக்கற. பாரு எப்படி வரி வரியா முதுகெல்லாம். போ, வெரசா போயி சுடு தண்ணி வச்சு பொஞ்சாதிய ஒத்தடங்கொடுக்க சொல்லு”ன்னு சொல்றாக. எவ்வளோ பெரிய மனசு. சும்மாவா சொன்னாக ‘அடிக்கிற கைதான் அணைக்குமுன்னு’”

இது அவன் மீதான அக்கறையின் பொருட்டு அல்ல, அவன் வீட்டு நாளைய வேலைக்கான தயாரிப்பு அது என்பது புரியாதபடி கூலிச்சமூகத்தை மிகுந்த கவனத்தோடு கட்டமைத்து வைத்திருந்தது ஆண்டைச் சமூகம்.

இன்னொரு கூலி சொல்வதையும் கொஞ்சம் கேளுங்கள்,

“சாட்டைய எடுத்து அடிக்கிற அளவுக்கு எங்க ஆண்ட மோசமானவங்க இல்ல. தப்பு செஞ்சா புளிய மெளாராலதான் அடிப்பாங்க”

எப்படி கவனமாகக் கட்டமைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

ஆனால் சீனிவாச ராவ் முன்னெடுத்த,  நிறையப் பலிகொண்ட,  மிக நீண்ட போராட்டங்களும் அதன் விளைவாய் வந்த சட்டங்களும் அந்த ஆண்டைகளிடமிருந்து எங்கள் அடிமைக் கூலிச்சமூகத்தை விடுதலை செய்திருக்கின்றன.

ஆனால் சராசரிக் குடும்பக் கட்டமைப்பில் இன்னமும் பல இடங்களில் கணவன்மார்கள் ஆண்டைகளாகவும் மனைவிகள் அடிமைக்கூலிகள் போலவும் இன்றைக்கும் தொடர்வதைக் காணத்தான் முடிகிறது. ஆண்டைகள் போல இரக்கமற்று நடந்துகொள்ளும் கணவன்மார்கள்மீது மனைவிகள் வைத்திருக்கும் நம்பிக்கை இருக்கிறது பாருங்கள், அதை இந்தக் கவிதையை விட யாரால் எது கொண்டு அழகாய் சொல்லிவிட முடியும்,

“உப்பு குறைந்ததற்காய்
சூடான குழம்பைத் தலையில் கொட்டிய
தாத்தாவைப் பற்றிக்
கதை சொல்லும் பாட்டி
எப்போதும் முடிக்கிறாள்
‘என் மேல் அவருக்கு கொள்ளை ஆசை’ ”

இந்த இடத்தில் கவிதை சரியாக முடிந்துவிடுகிறது. அதற்கு மேல்”என்று” என்பதில் தொடங்கி நீளும் எந்த ஒரு வார்த்தையுமே தேவைப் படவில்லை. அவ்வளவு அழகாக நேர்த்தியாக முடிகிறது கவிதை.

ஏதேனும் ஒன்று சரியான இடத்தில் நறுக்கென்று முடிந்தால் “ நச்” என்றும் சொல்லலாம் அல்லது அதற்கு பதில் இந்தக் கவிதையையும் சொல்லலாம்.

ப்ரியா ஒரு நல்ல தொழிற்சங்கவாதி. தான் சார்ந்திருக்கிற ஊழியர் சங்கத்தின் மகளிர் அமைப்பினை ஆங்காங்கே கட்டுவதில் முனைப்போடு பங்கேற்ற முன்னனி ஊழியழ்ர். அந்த அமைப்பின் பல மாநாடுகளை முன் நின்று நடத்திய அனுபவம் மிக்கவர். இந்த அனுபவம் தந்த வெளிச்சத்தில் வேலைக்குப் போகும் பெண் ஊழியர்களின் அவல நிலையை அவர் மிகச் சரியாக உள்வாங்கியிருக்கிறார் என்பதை கீழ்க் காணும் கவிதை தெளிவுபடுத்துகிறது.

பொதுவாகவே வேலைக்குப் போகாத பெண்களைவிட வேலைக்குப் போகும் பெண்களின் நிலைமை மிகவும் துயரமானது. வேலை முடிந்து ஒரே வண்டியில் வீட்டுக்குத் திரும்பினாலும் வீட்டிற்கு வந்து உடை மாற்றிய உடன் கணவனது வேலை பெரும்பாலும் முடிந்துவிடுகிறது. ஆனால் அதன் பிறகு அவனுக்கு தேநீர் தயாரித்துக் கொடுப்பதிலிருந்து தொடங்கி நள்ளிரவுவரை சில நேரம் பெண்ணுக்கான வேலை நீளுகிறது. இதை மூஞ்சியிலத்தாற்போல் சொல்கிறார் ப்ரியா,

“கையொடிய எழுதி
கோப்புகளைப் பார்த்து
பலவிதமான பார்வைகளை
வார்த்தை விரசங்களை
சிரித்தும் சிரிக்காமலும்
மெல்லப் புறந்தள்ளி
கடிகார முள்சுற்றி
ஆறில் நிற்கும் போது
அரக்கப் பரக்க ஓடி
பிதுங்கும் பேருந்தில்
சதை மூட்டையாய் ஏறி இறங்கி
ஆயாசத்துடன் வீட்டிற்குள் நுழைகையில்
கூடவே நுழையும் உன்னால்
இரக்கமே இல்லாமல் கேட்க முடிகிறது...

’சூடா ஒரு டீ கொடுடி’ ”

வீட்டில் வெட்டியாய் உட்கார்ந்திருப்பவனுக்கும் வேலைக்குப் போய் வந்து பணிவிடை செய்ய வேண்டிய அவலம் இருக்கிறது பாருங்கள், அதுகுறித்தும் ப்ரியா கவனம் செலுத்தவேண்டும் என்பதே நேயர் விருப்பம்.

வேலைக்குப் போவது என்றால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், பள்ளிகளில், மருத்துவ மனைகளில், வணிகத்தளங்களில் பணிபுரிவது என்றே பொதுப் புத்தியில் உறைந்து போயிருக்கிறது. எனவே உழைக்கும் பெண்களின் பிரச்சினை என்பது மேற்சொன்ன இடங்களில் பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகளாகவே பொதுத் தளத்தில் கொள்ளப் படுகிறது.

இது கடந்து வயல்களில், கட்டடக் கட்டுமானத்தில், சாலை போடுவதில்,வீடுகளில் வேலை செய்கிற பெண்களின் பிரச்சினைகள் பொதுவாக போதுமான அளவிற்கு பேசப் படாத சூழலில் அவர்களது அவலத்தை இடது சாரிக்கே உரிய புள்ளியில் நின்று பார்க்கிறார்,

“அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாய்
ஓய்வில்லாது உழைத்து
அலுத்துக் களைத்துப் போகும்
எண்ணற்ற தருணங்களில்
எல்லாரிடமும் சிடுசிடுக்கும் அம்மா
சீறுவதேயில்லை
பத்துப் பாத்திரம் தேய்க்கும்
பத்மாவிடம் மட்டும்...

களித்துச் சிரித்திருக்கும்
எங்களுக்கான நேரங்களில்
கேட்டால்
‘வீட்டிலும் வெளியிலும்
அவளும்தான் தேய்கிறாள், என்னைப் போலவே’
பதில் சொல்லும் அம்மாவின் கண்களில்
எப்போதும் தெரிகிறது ஒரு நெருப்பு”

ப்ரியா அம்மாவின் கண்களில்பார்த்த நெருப்புதான் இவர்களது அவலத்தைக் கொளுத்தி சாம்பலாக்கப் போகும் ஆதிக் கங்கு.

இந்தக் கவிதையை சுகனில் வாசித்துவிட்டுத்தான் இருப்பு கொள்ளாமல் சுகனுக்கு அலைபேசி ப்ரியாவின் எண் வாங்கி அவரோடு பேசினேன். பெண்களின் மாதாந்திர அவஸ்தையை, வலியை இவ்வளவு இங்கிதத்தோடு, அழ்கியல் உடைந்து போகாமல் ப்ரியாவால் சொல்ல முடிகிறது. கொஞ்சம் பிசகியிருந்தால் வேறு மாதிரி போயிருக்கும். மிக நேர்த்தியாய் கம்பியில் நடந்திருக்கிறார்,

மிகவும் பிடித்த
நீலநிறப் பூக்கள் போட்ட
வெள்ளைச் சேலையை
அணியவே யோசிக்கிறேன்

கண்ணாடிகள் சூழ்ந்த
கடைகளில் நுழையும்போதோ
ஓரப் பார்வையாய்
என் பின்புறம் பார்க்கிரேன்

இருக்கையிலிருந்து
எழுந்து நடக்கையில்
தயங்கியபடியே
முந்தானை நுனியைக்
கையில் பிடிக்கிறேன்
அலுவலக சகாவுடன்
கூட நடக்கையில்
எனக்குப் பின்னால்
அவன் வந்து விடாதபடி
மெல்ல நடக்கிறேன்

கவனத்தைத் தின்னுகிற
உடம்பின் வலியில்
தினசரி வேலைகளில்
அடிக்கடி தவறுகிறேன்

நாற்பதைக் கடந்து
நாலைந்து வருடமாகியதில்
எப்போது வருமோ, இது
என்று பயந்துதான் நகருகிறது
என் ஒவ்வொரு பொழுதும்”

“தேரைகள்” என்றொரு கவிதை. அந்த கொஞ்சம் நீண்ட கவிதையில் அனைத்தையும் இறுதி ஆறு வரிகளைத் தவிரக் கழித்தால் சத்தியமாய் இதை ஒரு ஜென் என்று கொள்ளலாம். பாருங்களேன்,

“வாழை மரம்தான்
தேரைகளை வளர்க்கும்
குளிர்ந்த சூழலென்று
அம்மா எடுத்துச் சொன்னாலும்
அழிக்க மனமில்லை
தேரைகளின் குடியிருப்பை”

சரிதானே நான் சொன்னது.

எனக்கு இந்த நூலில் முத்தாய்ப்பாய்த் தோன்றும் ஒரு கவிதை இது. ரசனையும், ரசமும் எள்ளலும் துள்ளிப் பாய்ந்து வரும் ஒரு கவிதை. படித்தவுடன் வெளிப்படையாய் சிரிக்கப் பயந்தவர்களைக்கூட யாரும் இல்லாத இடம் சென்று ரகசியமாகவேனும் புன்னகைக்க வைக்கும் இந்தக் கவிதை புன்னகையின் சுவடு மறையும் முன்னே ஆணைப் போல எதையும் வெளிப்படையாய் வெளிப்படுத்த இயலாத நிலையில் ஆண்களால் மிகுந்த கவனத்தோடு கட்டமைக்கப் பட்டுள்ள ஒரு ஆணாதிக்கச் சமூகத்தில் சொல்ல முடியாமல் பொத்தி பொத்தி வைத்துப் புழுங்கி புழுங்கி வாழும் பெண்களின் அவஸ்தைக் கசிவாகவே இந்தக் கவிதையைப் பார்க்க்கிறேன்.

“ நினைவு தப்பிப் போய்
படுக்கையில் கிடக்கும் பாட்டி
புலம்பிக் கொண்டிருக்கிறாள்
பக்கத்து வீட்டு
சின்னசாமி தாத்தாவோடு
தனக்கு தொடர்பில்லையென்று”

பானை சோறுக்கு பருக்கை என்ற கணக்கில்தான் கவிதைகள் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கின்றன.

ப்ரியா சொல்கிறார்,
“சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமம் இல்லைஎன்பதை பல சமயங்களில் உணர்கிறேன். மனைவியாய், தாயாய், தமக்கையாய், தங்கையாய்,இன்னும் எத்தனையோ பாத்திரங்களாக வாழ வேண்டியிருக்கிற பெண்ணிற்கு, படைப்பாளி என்ற பாத்திரத்தில் நிலைப்பது மிகப் பெரிய சவால்தான்”

ஆமாம்தான். மிகப் பெரிய சவால்தான். ஆனாலும் அந்தச் சவால்களை எல்லாம் முட்டி மோதித் தூளாக்கியிருக்கிறார் என்பதையே இந்த நூல் உரத்துக் கூறுகிறது

இன்றும் ஆணும் பெண்ணும் சமமில்லை என்பதை உணர்ந்து கலகம் செய்கிற ப்ரியா ஆணும் பெண்ணும் சமமாகவே இய்லாது. ஆணும் பெண்ணும் எதிர் சமம் என்பதை உணர்ந்து அந்த எதிர் சமத்திற்கான குரலை உயர்த்தும்பொழுது இன்னும் உசரமாய் கவிதைகள் வரும்.

இவரது குருதிச் சூட்டிலிருந்துதான் இவரது கவிதகள் பிறக்கின்றன. எனவேதான் உயிர்ப்போடும் வன்மக் குரலோடும் நம்மை ஈர்க்கின்றன.

இன்றைய நியாயங்களின் மிக நெருக்கத்தில் இருந்து இவர் கவிதைகளைப் படைக்கிறார் என்பதை யார் மீதும் சத்தியம் செய்து சொல்லலாம்.

தமிழரசி, பரமேஸ்வரி, விஜயலட்சுமி என்று என்னிடம் இருக்கும் பட்டியலில் ப்ரியாவும் ஒட்டிக் கொள்கிறார்.

”வெட்கத்தில் நனைகின்ற...”
(கவிதை நூல்)

ஆசிரியர்: கிருஷ்ணப்ரியா (8939998444)

கிடைக்குமிடம்
சௌந்தர சுகன்
அம்மா வீடு, சி 46 இரண்டாம் தெரு
முனிசிபல் காலனி, தஞ்சாவூர் 613007




Tuesday, July 17, 2012

கடன் வாங்கிப் படித்தல்

“இனி கல்விக் கடனைப் பெறுவதற்கு மாணவர்கள் தலையைக் குனிந்து கொண்டு வங்கிகளுக்குள் நுழையத் தேவை இருக்காது. நிமிர்ந்த தலையோடும் கம்பீரத்தோடும் அவர்கள் வங்கிகளுக்குள் கல்விக் கடனுக்காக நுழையலாம்.

ஒரு காலத்தில் கல்விக் கடன் ஒரு சலுகை போல இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது கல்விக் கடன் என்பது மாணவர்களின் உரிமையாக மாறியிருக்கிறது,”

என்பது மாதிரிப் பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் சிதம்பரம் . ஆக கல்வியோ, வேலையோ மாணவ்ர்களது உரிமையாக மாறாது போயினும் கல்விக் கடனேனும் அவர்களது உரிமையாய் போயிருக்கிறது. இந்த மட்டிலும் உரிமை என்று சொல்லிக் கொள்கிற மாதிரி மாணவர்களுக்கு ஏதோ ஒன்றைத் தந்தமைக்காக அவரைப் பாராட்டியேத் தீர வேண்டும்தான்.

மேலோட்டமாகப் பார்த்தால்,

“கல்விக் கட்டணம் செலுத்த இயலாத ஏழை மாணவர்களது படிப்பு இடையில் நின்றுவிடக் கூடாது என்பதற்காகத்தானே இவ்வளவையும் செய்கிறார்கள். அதையும் குறை சொன்னால் எப்படி?” என்றுகூடத் தோன்றும்.

“பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்றாள் அவ்வை. பிச்சை எடுத்தேனும் படி என்கிறாள் கிழவி. கொஞ்சம் இதை மாற்றிச் சொன்னால் கற்பதற்காக பிச்சை வேண்டுமானாலும் எடு என்றாகும்.

“உண்ணீர்
உண்ணீர் என்றே
ஊட்டாதார் தம் மனையில்
உண்ணாமை
கோடி பெறும்”

என்று சொன்ன அவ்வை கல்வி என்று வரும் போது அதற்காக பிச்சைகூட எடுக்கலாம் என்றுதானே சொல்லியுள்ளார். கல்விக்காக பிச்சையே எடு என்று சொன்ன அவ்வையைக் கொண்டாடுகிறீர்கள். ஆனால் கடனை ஏற்பாடு செய்து , அதை மாணவனது உரிமையாக்கி உரிமையோடும் கம்பீரத்தோடும் கடனைப் பெற்று கல்வியைத் தொடர் என்று சொல்லும் சிதம்பரத்தை நக்கலடிப்பீர்கள். நீங்களெல்லாம் உருப்படுவீர்களா? என்றும் சிலர் கேட்கக் கூடும்.

மீண்டும் சொல்கிறேன், மேலோட்டமாகப் பார்த்தால் இது நியாயமாகத்தான் படும். கொஞ்சம் உள் நுழைந்து அலசினால் இதன் பின்னனியில் இருக்கும் அயோக்கியத்தனம் அம்பலப் படும்.

இதில் நீண்ட விவாதம் இருக்கிறது. அதில் நமக்கெதுவும் தயக்கம் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் சட்டென்று ஒன்றை சொல்லிவிட்டுத் தொடரலாம் என்று படுகிறது.

பிச்சை எடுத்து படிப்பதில் எந்தப் பிழையும் இருப்பதாகப் படவில்லை. ஒருக்கால் ஒரு பிள்ளை பிச்சை எடுத்துப் படிக்கிறான் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம்.அவன் படித்து முடித்ததும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த என்னை கல்வி இந்த நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று பெருமிதத்தோடும் ஒரு வகையான பூரிப்போடும் எதிர்காலத்தை எதிர்கொள்வான்.

அவன் பிச்சை எடுத்து படித்தது அவனுக்கு எந்த விதத்திலும் சோர்வையோ அழுத்தத்தையோ தராது. மாறாக, பிச்சை எடுத்துக் கொண்டிருந்த என்னை கல்வி எந்த இடத்திற்கு உயர்த்திக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது பார் என்று   அடுத்தத் தலைமுறையை உற்சாகப் படுத்த உதவுவதாகவும் இருக்கும்.

ஆனால் கடன் பெற்று படித்து வருபவனுக்கு வேலை கிடைக்கும் முன்னமே கடனும் வட்டியுமாக சேர்ந்து ஒரு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும்.

பிச்சை எடுத்துப் படித்தவன் படித்து முடித்ததும் இலகுவாகி விடுகிறான். அவனால் சொல்ல முடியும்,

“பிச்சை எடுத்தவன்தான் நான். ஆனாலும் படிப்பு எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. பிச்சை எடுத்தேனும் படி” என்று.

கடன் வாங்கி படித்த்வனால் அப்படி சொல்ல இயலாது. அவனால் இப்படித்தான் சொல்ல இயலும்,

“கடன வாங்கிப் படிக்கிறதுக்கு நான் படிக்காமலே இருந்திருக்கலாம். வீணாப் போயிட்டேன். தயவு செஞ்சு கடன் வாங்கி படிச்சுடாத”

அமெரிக்கவைப் பற்றி இப்படி ஒரு தகவல் உண்டு,

அமெரிக்காவில் நிறைய பேர் கல்வியைத் தவிர்ப்பதற்கு அங்கு கல்வி நிறைய செலவு வைக்கிறதாம். சரி, கடன் வாங்கிப் படிப்பைத் தொடங்கலாம் என்று செய்பவர்கள் வட்டி கட்ட முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகிறார்களாம்.

 நம் நாட்டிலும் வட்டி விகிதம் விவசாயக் கடனை விட, நகைக் கடனைவிட, ஏன் வாகனக் கடனை விட அதிகம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். தனி நபர்க் கடனுக்கு மிக நெருங்கிய வட்டி கல்விக் கடனுக்கு.

அநேகமாக 14 சதம் வட்டி கல்விக் கடனுக்கு.

பொறியியல் முதலாமாண்டு படிக்கும் ஒரு மாணவன் ஒரு வங்கியில் 60000 ரூபாய் கடன் வாங்குகிறான் என்று வைத்துக் கொள்வோம். முதலாமாண்டு முடியும் போது அதற்கான வட்டி (14 சதம் என்று வைத்துக் கொண்டால்) 8400 ரூபாய். ஆக 60000 கடன் வாங்கி முதலாமாண்டை அவன் முடிக்கும் போது அவனது கடன் தொகை மொத்தம் 68400 ரூபாய் என்றாகும்.

இப்போது இரண்டாமாண்டு அவன் 60000 ரூபாய் கடன் வாங்கினால் அந்த ஆண்டு முடிவில் அசல் 120000 ஆகும். இதற்கு வட்டி 16800 ரூபாய் அகும். முதலாமாண்டு வட்டி 8400 ருபாயை சேர்க்க இரண்டாமாண்டு முடிவில் மொத்த வட்டித்தொகை 25200 ஆகும். ஆக இரண்டாமாண்டு முடிவில் வட்டியும் முதலுமாக அவனது கடன் கணக்கில்1,45,200 சேரும்.

மூன்றாமாண்டு இன்னொமொரு 60,000 ருபாய் அவன் கணக்கில் சேர மூன்றாமாண்டு தொடக்கத்தில் அவன் கட்ட வேண்டிய அசல் 1,80,000 ரூபாய் ஆகும். அந்த ஆண்டு முடிவில் அந்த ஆண்டிற்கான வட்டியைக் கணக்கிட்டால் 25,200 ரூபாய் ஆகிறது. இதை முதல் இரண்டு ஆண்டுகளுக்கான தொகையோடு கூட்ட 50,400 ஆகிறது.

நான்கம் ஆண்டும் அவன் 60,000 ரூபாய் கடன் வாங்க அசல் மட்டும் 2,40,000 ரூபாய் ஆகிறது. அந்த ஆண்டு முடிவில் அந்த ஆண்டுக்கான வட்டி மட்டும் 33,600 வரும். ஆக மொத்த வட்டி 94,000 ரூபாய் ஆகிறது.

அவன் படிப்பை முடிக்கும் வரைதான் தனி வட்டி. அதன் பிறகு கூட்டு வட்டிக்கு போய்விடுமாம். எனில் அவன் நான்காமாண்டு முடிக்கும் போது அவன் வாங்கிய அசல் 2,40,000 ரூபாயோடு அது வரை உள்ள மொத்த வட்டியான 94, 600 ரூபாயும் சேர்ந்து 3,34,600 ரூபாய் அவன் கணக்கில் அசலாகிவிடும்.

இனி ஒவ்வொரு மாதமும் வட்டியும் அசலோடு சேர்ந்துவிடும். எனில்,

படிப்பு முடிந்த முதல் மாதம் அவன் கட்ட வேண்டிய வட்டி ஏறத்தாழ 3,900 ரூபாய். வேலை இல்லாமல் கட்ட முடியாமல் போனால் இந்த 3, 900 ரூபாயும் அசலோடு சேர்ந்து 3,38,500 ரூபாயாகும். அடுத்த மாதம் 3,38,500 ரூபாய்க்கு வட்டி கணக்கிடப் படும்.

எவ்வளவு பெரிய கடன் வலையில் நம் பிள்ளைகளைத் தள்ளுகிறார் பாருங்கள்.

இவ்வளவு ஆபத்தான சிக்கல் இது என்பது கூட்டல் கழித்தல் கணக்கையே தப்பு தப்பாக செய்யும் எனக்கே புரிகிறது என்றால் காங்கிரஸின் மூளை என்று சராசரி காங்கிரஸ் காரர்களாலும், இந்தியாவின் மூளை என்று உச்ச நிலையில் நின்று யோசிக்கக் கூடிய காங்கிரஸ்காரர்களாலும் பெருமையோடு கொண்டாடப் படுகிற சிதம்பரம் அவர்களுக்கு இது புரியாது என்று நம்புவதற்கு நான் என்ன மன்மோகன்சிங்கா?

இவ்வளவு புரிந்தும் ஏன் நெஞ்சை நிமிர்த்தி கடன் வாங்கப் போ என்று தள்ளுகிறார். காரணம் மிகவும் எளிதானது.

மாணவனை வங்கிக்கு தள்ளுவதன் பின்னனியில் இருப்பது மாணவனின் எதிர்காலமல்ல, கல்லூரி தாளாளரின் எதிர்கால லாபம். கல்லூரி தாளாளர் என்பதை விடவும் கல்லூரி முதலாளி என்பதே பொருத்தமாக இருக்கும். சில கல்லூரிகளில் தாளாளர் ஓனர் என்றே அனைவராலும் விளிக்கப் படுகிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பொறியியல் கல்லூரியில் சற்றேரக் குறைய 3,500 இடங்கள் இருக்கலாம். கொஞ்சம் கூடவோ குறையவோ இது இருக்கலாம். இதில் 2,000 பேர் விடுதியில் தங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மூன்று நேரமும் 2,000 பேர் சாப்பிடக் கூடிய உணவகம் ஒன்றிற்கு அவர் உரிமையாளர் ஆகிறார். ஒவ்வொரு நேரமும் 2,000 பேர் சாப்பிடக்கூடிய உணவகம் எனில் அது ஏறத்தாழ இரண்டு சரவணபவன் ஹோட்டல்களுக்கு சமம்.

ஒரு நாளைக்கு 6,000 பேர் சாப்பிடக்கூடிய ஹோட்டல் எனில் மளிகைச் சாமான்களை, காய்கறியை, பாலை வேறு கடையிலா வாங்க அவருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கும். எந்தக் கணக்கிலுமே சேராமல் அவர் ஒரு பெரிய மளிகைக் கடைக்கும், காய்கறி மற்றும் பால் கடைக்கும் அதிபராகிறார்.

ஏறத்தாழ 3,500 மாணவர்களும் அனைத்து நோட்டுகள் மற்றும் புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை வாங்கும் போது ஒரு மிகப் பெரிய ஸ்டேஷனரி கடைக்கு உரிமையாளாராகிறார்.

ஒரு கேண்டீன் உரிமையாளாராகிறார்.

குறைந்தபட்சம் 25 பேருந்துகளுக்கும் உரிமையாளாராகிறார்.

ஒரு கல்லூரியை ஆரம்பித்தால் உப விளைவுகளாக இத்தனை வணிகத் தளங்களுக்கும் முதலாளியாகிறார்.

கேட்கலாம்,

இதற்கும் மாணவர்களது வங்கிக் கடனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

இருக்கிறது.

இவ்வளவு பெரிய முதலாளி லாபமடைய வேண்டுமெனில் 3,500 மாணவர்கள் வேண்டும்.  அவர் மாணவர்களைப் பார்க்கிறார். மாணவர்களிடம் பணமில்லை என்பது புரிகிறது. அரசாங்கத்தைப் பார்க்கிறார்.

“மாணவர்கள் வராவிட்டால் நான் தெருவுக்கு வந்து விடுவேன்”

அரசாங்கம் சொல்கிறது,

“விடுவோமா. தைரியமாகப் போங்கள். கடன் கொடுத்து மாணவர்களை அனுப்பி வைக்கிறோம்.”

முதலாளிகள் சொல்லியிருக்க வேண்டும்,

“விசுவாசம் மாறாமல் இருப்போம்.”

கல்வி பொதுப் படும் வரை இத்தகைய அசிங்கங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கும்.

தாளாளர் முதலாளியாகிவிடுவார். கல்வி சரக்காகிவிடும். மாணவன் வாடிக்கையாளனாகிவிடுவான். அரசோ முதலாளி நட்டப் படாமல் பார்த்துக் கொள்ள்ளும்.

நாம் என்ன செய்யப் போகிறோம்?



Sunday, July 15, 2012

மனசு பெருத்த மாமனிதர்

எப்போதோ ஒரு முறை தமிழருவி மணியன் சொன்னார்,

“தலைவர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் பெருந்தலைவர் ஒருவரை எப்போதாவதுதான் ஒரு சமூகம் அபூர்வமாக ஈன்றெடுக்கும்”

அப்படி ஒரு ஜூலை15 அன்று தமிழ் மண்ணிற்கு வரமாய் வந்து சேர்ந்தீர்கள் பெருந்தலைவர் அவர்களே,

பிறக்கும் போதே ஒரு ஒளி வட்டத்தோடோ அல்லது பாரம்பரியப் பின்னணியோடோ நீங்கள் அவதாரமெல்லாம் எடுத்திருக்கைல்லை. ஒருக்கால் அப்படியேதேனும் நிகழ்ந்திருப்பின் இதை எழுதவேண்டிய அவசியமும் எனக்கு இருந்திருக்கப் போவதில்லை.

உங்கள் வெற்றியின் அளவைக் காட்டிலும் அதற்கான உங்களின் வியர்வைச் செலவு அதிகம் அய்யா. ஆனால் அதற்காகக் கூட இதை எழுதவில்லை. பஞ்சைப் பராறிகளான எங்களின் கல்விக்காகவே நீங்கள் பெருமளவு உழைத்தீர்கள்.

காலில் செருப்புமில்லாமல்தான் கரடு முரடான சாலைகளில் நடந்து கொண்டிருந்தோம்.எத்தனைத் தேர்தல்கள், எத்தனை வாக்குறுதிகள்,எத்தனைத் தலைவர்கள், எத்தனை மன்றாடல்கள்?

“கண்ணில்லாதவன்
கை ஏந்தும் போது
நாமெல்லாம்
குருடர்கள்”

என்று தங்கம் மூர்த்தி சரியாய்த்தான் எழுதினார். எங்கள் மன்றாடல்களை கண்டு கை ஏந்தும் கண்ணில்லாதவர்கள் முன் குருடனாய்ப் போகும் சராசரிக்கும் கீழான தலைவர்களே அதிகம் இருந்தார்கள். கற்களும் முட்களும் சேதப் படுத்திய எங்கள் பாதங்களைப் பற்றி கவலைப் பட்ட முதல் தலவனாய் வந்தீர்கள்.

நல்ல சாலைகள் வந்தன.

கிராமங்கள் இருண்டு கிடந்ததைப் பர்த்து கவலை கொண்டீர்கள்.

எங்கள் ஊருக்கும் மின்சாரம் வந்தது. எங்கள் தெருவிலும் தெரு விளக்குகள் ஒளிர்ந்தன.

நீங்கள் கேட்கக் கூடும் பெருந்தலைவர் அவர்களே,

“என் வேலையைத் தானே செய்தேன் ? “ என்று

அது என்னவோ உண்மைதான் தலைவரே. ஆனால் அதற்கு முன்னாலெந்தத் தலைவனுக்கும் இல்லாத கவலை இது. இன்னும் சொல்லப் போனால் சலவை தொழிலாளிகள் மாநாடு ஒன்றில் தங்களது குழந்தைகளுக்கு இலவச ஆரம்பக் கல்வி வேண்டும் என்று கோரிக்கை வைத்த சலவைத் தொழிலாளர்களிடம்,

“துறை சார்ந்த கோரிக்கை வையுங்கள்” என்று சொன்ன மூளை பெருத்த கனவான்கள் வாழ்ந்த தமிழ் மண்ணில் நாங்களும் கல்வி பெற வேண்டும் என்று கவலைப் பட்டவர் நீங்கள். கவலைப் பட்டதோடு நில்லாமல் காரியமாற்றிய மனசு பெருத்த மனிதர் நீங்கள்.

இதுதான் என்னை இதை எழுத என்னை உந்தித் தள்ளியது.

தோழர் ஜீவா, தோழர் பி. ராமமூர்த்தி, தந்தை பெரியார், தோழர் சிங்கார வேலனார், என்பதாய் நீளும் தமிழகம் கண்டபெருந்தலைவர்களுள் உங்களை மட்டுமே மக்கள் பெருந்தலைவராய்க் கொண்டாடினார்கள். இவர்களில் யாரும் உங்களுக்கு இளைத்தவர்கள் இல்லைதான்.

எங்களுக்காக உழைத்தார்கள், எங்களுக்காகப் போராடினார்கள், எங்களுக்காக தங்கள் வாழ்க்கையின் சகல சொகுசுகளையும் இழந்து தியாகித்தார்கள்.

ஆனாலும் செய்யக்கூடிய இடம் இவர்களில் உங்களுக்கு மட்டுமே வாய்த்தது. அர்ப்பணிப்போடு செய்தீர்கள். அதனால்தானிந்த அங்கீகாரம் உங்களுக்கு.

நானே கூட மேற்சொன்ன யாருக்கும் எதுவும் எழுதியதில்லை. செய்தவர்களை கொண்டாடுமளவிற்கு செய்யக் காரணமாயிருந்தவர்களை நாங்கள் கண்டு கொள்வதில்லை.

உங்களையும் கொண்டாடவேண்டிய அளவிற்கு கொண்டாடினோம் என்று சொல்வதற்கில்லை. எங்களால் முடிந்த அளவிற்கு காயப்படுத்தவும்தான் செய்தோம்.

கூறியது கூறல் குற்றமாகக்கூட இருக்கலாம். இதில் கொஞ்சம் மிகைக்கூட இருக்கலாம். நிறைய மேடைகளில் கேட்டவைதான், ஏன் நானே பல மேடைகளில் பேசியவையும் எழுதியவையும்தான்.இந்த நாளில் அவற்றைப் பற்றி அசைபோடுவதுதான் சரி என்று படுகிறது.

நீங்கள் ஒருமுறை மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருந்தீர்கள் தலைவரே. ரயில்வே கேட் போடப் படுகிறது. மகிழுந்தை விட்டு இறங்கி நிற்கிறீர்கள். ஒரு சிறுவன் மாடு மேய்த்துக் கொண்டிருப்பது உங்கள் கண்களில் படுகிறது. அவனை அழைக்கிறீர்கள்.

வருகிறான்.

“என்ன பெரிசு?”

கேட்க முடியுமா பெருந்தலைவா? கேட்டால் வம்சமே அழிந்து போகாதா? ஆனால் நீங்களோ புன்னகைத்தீர்கள். அவனது தலையை வாஞ்சையோடு வருடிக் கொடுத்தீர்கள். அவனது தலை காய்ந்து கிடந்த்து உங்கள் கண்களை ஈரப் படுத்தியது. என்ன செய்வது தலைவரே, யார் எழுதியது என்று தெரியவில்லை. ஆனால் அடிக்கடி கிருஷ்ணகுமார் பேசக் கேட்டிருக்கிறேன்

“எங்கள்
தலையில்
எண்ணெய் இல்லை
ஏனென்றால்
ஆள்பவர் தலையில்
எதுவுமேயில்லை”

தலையிலேயே ஏதும் இல்லாதவர்கள் மத்தியில் மனதும் பெருத்த மாமனிதர் நீங்கள். சிறுவனின் தலையை வருடிக் கொண்டே கேட்கிறீர்கள்,

“ஏம்பா மாடு மேய்க்கிற?”

“ வேற என்ன செய்ய?”

“ பள்ளிக்கூடம் போகலாம்ல””

“போலாம் . பீஸ யாரு கட்டுவா?”

“ பீஸ கட்டிட்டா போவியா?”

“கட்டிப் பாரு”

ஓடுகிறான். கண்களைத் துடைக்கிறீர்கள்.

ஒரு நாளெல்லோருக்கும் இலவசக் கல்வி கொடுக்க சட்டம் கொண்டுவர விழைந்தீர்கள். ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி அதில் உள்ள சட்ட சிக்கலை சொன்னாராம் உங்களிடம். அவர் சொன்னாராம்,

“அய்யா அதற்கு GO வில் இடமில்லைங்க”

“GO ன்னா என்ன?”

புத்தகங்களை மட்டுமே வாசித்திருந்த அந்த அதிகாரி கொஞ்சம் மக்களின் மனசையும் உங்களது அர்ப்பணிப்பையும் வாசித்திருந்தால் சுதாரித்திருக்கக் கூடும். உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று நினைத்து அதை தமிழ்ப்படுத்துகிறார்,

“அரசாணைங்க அய்யா”

விடாது விரட்டுகிறீர்கள்,

“அரசானைனா என்ன?”

மிரள்கிறார். அவரைப் பார்த்து நீங்கள் சொன்னதாக சொல்வார்கள்,

“உன்ன மாதிரி படிச்ச அதிகாரி நின்று, என்னை மாதிரி படிக்காதவன் சொல்றத எழுதி படிச்ச நீ படிக்காத என்னிடம் கையெழுத்து வாங்கினால் அதுதான்பா அரசாணை, GO எல்லாம்.”

எழுதுகிறார். போய் தட்டச்சு செய்யச் சொல்லி வாங்கி வந்து நீட்டுகிறார். கையொப்பமிடுகிறீர்கள்.

பள்ளிக்குப் போகிறோம்.

இன்னொரு முறை ஒரு பள்ளி விழாவிற்கு செல்கிறீர்கள். வரவேற்புரையாற்ற வந்த ராஜேஸ்வரி என்ற மாணவி பணக்காரப் பிள்ளைகள் விதவிதமாக உடை உடுத்தி வருவதாகவும் அது தங்களது மனதை சஞ்சலப் படுத்தி கற்றலை ஊறு செய்வதாகவும். எனவே, எல்லோரும் ஒரே மாதிரி உடையோடு பள்ளிக்கு வர ஏற்பாடு செய்தால் நலமென்றும் சொல்லவே சரி என்கிறீர்கள்.

சீருடை வருகிறது.

அன்று நீங்கள் போட்ட கையெழுத்தின் விளைவு,

நான் இன்று ஒரு முது கலை ஆசிரியன், என் மனைவி ஒரு இடை நிலை ஆசிரியை, என் தம்பி மின்வாரியத்தில், எனது ஒரு தங்கை முது கலை படித்திருக்கிறாள், என் மூத்த மகன் பொறியியல் இரண்டாமாண்டில்...

ஒரு கையெழுத்தில் எங்கள் வாழ்க்கையை வெளிச்சப் படுத்திய உங்களை கை எடுத்து கும்பிடாவிட்டால் நான் மனிதனல்ல.

நான் மனிதன்.

இரண்டு சொட்டு கண்ணீரும் வணக்கமும் தலைவரே.                



இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...