Sunday, July 15, 2012

மனசு பெருத்த மாமனிதர்

எப்போதோ ஒரு முறை தமிழருவி மணியன் சொன்னார்,

“தலைவர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் பெருந்தலைவர் ஒருவரை எப்போதாவதுதான் ஒரு சமூகம் அபூர்வமாக ஈன்றெடுக்கும்”

அப்படி ஒரு ஜூலை15 அன்று தமிழ் மண்ணிற்கு வரமாய் வந்து சேர்ந்தீர்கள் பெருந்தலைவர் அவர்களே,

பிறக்கும் போதே ஒரு ஒளி வட்டத்தோடோ அல்லது பாரம்பரியப் பின்னணியோடோ நீங்கள் அவதாரமெல்லாம் எடுத்திருக்கைல்லை. ஒருக்கால் அப்படியேதேனும் நிகழ்ந்திருப்பின் இதை எழுதவேண்டிய அவசியமும் எனக்கு இருந்திருக்கப் போவதில்லை.

உங்கள் வெற்றியின் அளவைக் காட்டிலும் அதற்கான உங்களின் வியர்வைச் செலவு அதிகம் அய்யா. ஆனால் அதற்காகக் கூட இதை எழுதவில்லை. பஞ்சைப் பராறிகளான எங்களின் கல்விக்காகவே நீங்கள் பெருமளவு உழைத்தீர்கள்.

காலில் செருப்புமில்லாமல்தான் கரடு முரடான சாலைகளில் நடந்து கொண்டிருந்தோம்.எத்தனைத் தேர்தல்கள், எத்தனை வாக்குறுதிகள்,எத்தனைத் தலைவர்கள், எத்தனை மன்றாடல்கள்?

“கண்ணில்லாதவன்
கை ஏந்தும் போது
நாமெல்லாம்
குருடர்கள்”

என்று தங்கம் மூர்த்தி சரியாய்த்தான் எழுதினார். எங்கள் மன்றாடல்களை கண்டு கை ஏந்தும் கண்ணில்லாதவர்கள் முன் குருடனாய்ப் போகும் சராசரிக்கும் கீழான தலைவர்களே அதிகம் இருந்தார்கள். கற்களும் முட்களும் சேதப் படுத்திய எங்கள் பாதங்களைப் பற்றி கவலைப் பட்ட முதல் தலவனாய் வந்தீர்கள்.

நல்ல சாலைகள் வந்தன.

கிராமங்கள் இருண்டு கிடந்ததைப் பர்த்து கவலை கொண்டீர்கள்.

எங்கள் ஊருக்கும் மின்சாரம் வந்தது. எங்கள் தெருவிலும் தெரு விளக்குகள் ஒளிர்ந்தன.

நீங்கள் கேட்கக் கூடும் பெருந்தலைவர் அவர்களே,

“என் வேலையைத் தானே செய்தேன் ? “ என்று

அது என்னவோ உண்மைதான் தலைவரே. ஆனால் அதற்கு முன்னாலெந்தத் தலைவனுக்கும் இல்லாத கவலை இது. இன்னும் சொல்லப் போனால் சலவை தொழிலாளிகள் மாநாடு ஒன்றில் தங்களது குழந்தைகளுக்கு இலவச ஆரம்பக் கல்வி வேண்டும் என்று கோரிக்கை வைத்த சலவைத் தொழிலாளர்களிடம்,

“துறை சார்ந்த கோரிக்கை வையுங்கள்” என்று சொன்ன மூளை பெருத்த கனவான்கள் வாழ்ந்த தமிழ் மண்ணில் நாங்களும் கல்வி பெற வேண்டும் என்று கவலைப் பட்டவர் நீங்கள். கவலைப் பட்டதோடு நில்லாமல் காரியமாற்றிய மனசு பெருத்த மனிதர் நீங்கள்.

இதுதான் என்னை இதை எழுத என்னை உந்தித் தள்ளியது.

தோழர் ஜீவா, தோழர் பி. ராமமூர்த்தி, தந்தை பெரியார், தோழர் சிங்கார வேலனார், என்பதாய் நீளும் தமிழகம் கண்டபெருந்தலைவர்களுள் உங்களை மட்டுமே மக்கள் பெருந்தலைவராய்க் கொண்டாடினார்கள். இவர்களில் யாரும் உங்களுக்கு இளைத்தவர்கள் இல்லைதான்.

எங்களுக்காக உழைத்தார்கள், எங்களுக்காகப் போராடினார்கள், எங்களுக்காக தங்கள் வாழ்க்கையின் சகல சொகுசுகளையும் இழந்து தியாகித்தார்கள்.

ஆனாலும் செய்யக்கூடிய இடம் இவர்களில் உங்களுக்கு மட்டுமே வாய்த்தது. அர்ப்பணிப்போடு செய்தீர்கள். அதனால்தானிந்த அங்கீகாரம் உங்களுக்கு.

நானே கூட மேற்சொன்ன யாருக்கும் எதுவும் எழுதியதில்லை. செய்தவர்களை கொண்டாடுமளவிற்கு செய்யக் காரணமாயிருந்தவர்களை நாங்கள் கண்டு கொள்வதில்லை.

உங்களையும் கொண்டாடவேண்டிய அளவிற்கு கொண்டாடினோம் என்று சொல்வதற்கில்லை. எங்களால் முடிந்த அளவிற்கு காயப்படுத்தவும்தான் செய்தோம்.

கூறியது கூறல் குற்றமாகக்கூட இருக்கலாம். இதில் கொஞ்சம் மிகைக்கூட இருக்கலாம். நிறைய மேடைகளில் கேட்டவைதான், ஏன் நானே பல மேடைகளில் பேசியவையும் எழுதியவையும்தான்.இந்த நாளில் அவற்றைப் பற்றி அசைபோடுவதுதான் சரி என்று படுகிறது.

நீங்கள் ஒருமுறை மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருந்தீர்கள் தலைவரே. ரயில்வே கேட் போடப் படுகிறது. மகிழுந்தை விட்டு இறங்கி நிற்கிறீர்கள். ஒரு சிறுவன் மாடு மேய்த்துக் கொண்டிருப்பது உங்கள் கண்களில் படுகிறது. அவனை அழைக்கிறீர்கள்.

வருகிறான்.

“என்ன பெரிசு?”

கேட்க முடியுமா பெருந்தலைவா? கேட்டால் வம்சமே அழிந்து போகாதா? ஆனால் நீங்களோ புன்னகைத்தீர்கள். அவனது தலையை வாஞ்சையோடு வருடிக் கொடுத்தீர்கள். அவனது தலை காய்ந்து கிடந்த்து உங்கள் கண்களை ஈரப் படுத்தியது. என்ன செய்வது தலைவரே, யார் எழுதியது என்று தெரியவில்லை. ஆனால் அடிக்கடி கிருஷ்ணகுமார் பேசக் கேட்டிருக்கிறேன்

“எங்கள்
தலையில்
எண்ணெய் இல்லை
ஏனென்றால்
ஆள்பவர் தலையில்
எதுவுமேயில்லை”

தலையிலேயே ஏதும் இல்லாதவர்கள் மத்தியில் மனதும் பெருத்த மாமனிதர் நீங்கள். சிறுவனின் தலையை வருடிக் கொண்டே கேட்கிறீர்கள்,

“ஏம்பா மாடு மேய்க்கிற?”

“ வேற என்ன செய்ய?”

“ பள்ளிக்கூடம் போகலாம்ல””

“போலாம் . பீஸ யாரு கட்டுவா?”

“ பீஸ கட்டிட்டா போவியா?”

“கட்டிப் பாரு”

ஓடுகிறான். கண்களைத் துடைக்கிறீர்கள்.

ஒரு நாளெல்லோருக்கும் இலவசக் கல்வி கொடுக்க சட்டம் கொண்டுவர விழைந்தீர்கள். ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி அதில் உள்ள சட்ட சிக்கலை சொன்னாராம் உங்களிடம். அவர் சொன்னாராம்,

“அய்யா அதற்கு GO வில் இடமில்லைங்க”

“GO ன்னா என்ன?”

புத்தகங்களை மட்டுமே வாசித்திருந்த அந்த அதிகாரி கொஞ்சம் மக்களின் மனசையும் உங்களது அர்ப்பணிப்பையும் வாசித்திருந்தால் சுதாரித்திருக்கக் கூடும். உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று நினைத்து அதை தமிழ்ப்படுத்துகிறார்,

“அரசாணைங்க அய்யா”

விடாது விரட்டுகிறீர்கள்,

“அரசானைனா என்ன?”

மிரள்கிறார். அவரைப் பார்த்து நீங்கள் சொன்னதாக சொல்வார்கள்,

“உன்ன மாதிரி படிச்ச அதிகாரி நின்று, என்னை மாதிரி படிக்காதவன் சொல்றத எழுதி படிச்ச நீ படிக்காத என்னிடம் கையெழுத்து வாங்கினால் அதுதான்பா அரசாணை, GO எல்லாம்.”

எழுதுகிறார். போய் தட்டச்சு செய்யச் சொல்லி வாங்கி வந்து நீட்டுகிறார். கையொப்பமிடுகிறீர்கள்.

பள்ளிக்குப் போகிறோம்.

இன்னொரு முறை ஒரு பள்ளி விழாவிற்கு செல்கிறீர்கள். வரவேற்புரையாற்ற வந்த ராஜேஸ்வரி என்ற மாணவி பணக்காரப் பிள்ளைகள் விதவிதமாக உடை உடுத்தி வருவதாகவும் அது தங்களது மனதை சஞ்சலப் படுத்தி கற்றலை ஊறு செய்வதாகவும். எனவே, எல்லோரும் ஒரே மாதிரி உடையோடு பள்ளிக்கு வர ஏற்பாடு செய்தால் நலமென்றும் சொல்லவே சரி என்கிறீர்கள்.

சீருடை வருகிறது.

அன்று நீங்கள் போட்ட கையெழுத்தின் விளைவு,

நான் இன்று ஒரு முது கலை ஆசிரியன், என் மனைவி ஒரு இடை நிலை ஆசிரியை, என் தம்பி மின்வாரியத்தில், எனது ஒரு தங்கை முது கலை படித்திருக்கிறாள், என் மூத்த மகன் பொறியியல் இரண்டாமாண்டில்...

ஒரு கையெழுத்தில் எங்கள் வாழ்க்கையை வெளிச்சப் படுத்திய உங்களை கை எடுத்து கும்பிடாவிட்டால் நான் மனிதனல்ல.

நான் மனிதன்.

இரண்டு சொட்டு கண்ணீரும் வணக்கமும் தலைவரே.                



41 comments:

  1. பெருந் தலைவர் பிறந்தநாளில் அருமையான பதிவு.
    நன்றி!

    ReplyDelete
  2. பெருந் தலைவருக்கு அருமையான நினைவஞ்சலி.

    ReplyDelete
  3. jeevasundari BalanJuly 15, 2012 at 3:24 PM

    இலவசக் கல்வியும் மதிய உணவும் சீருடையும் அனைத்தும் கொடுத்து ஒரு தலைமுறைக்கே கல்விக்கண் கொடுத்த பெருந்தலைவர் காமராஜருக்கு அருமையான ஒரு எழுத்தணியை அளித்துள்ளீர்கள். கல்வியின் அருமையை அவர் உணர்ந்த அளவு வேறு எந்தத் தலைவரும் உணரவில்லை. தவிர்க்க முடியாமல் இன்றைய கல்வியின் நிலையையும் தரத்தையும் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நன்றி .

    ReplyDelete
  4. மிக அருமை
    எங்களுக்கெல்லாம் இவர் போன்ற அரசியல்வாதிகள் வாசிக்க மட்டுமே கிடைக்கின்றனர்..

    ReplyDelete
  5. கர்மவீரர் கையெழுத்தில் பலரின் தலையெழுத்து நிமிர்ந்தது. மக்களின் கைநாட்டால் பெருந்தலைவனை தோற்கடித்து தமிழர்களின் தலையெழுத்தே கேள்விக்குறியாய் ஆனதின்று.

    அருமை

    ReplyDelete
  6. கல்வி
    கண் திறந்த மாமேதை
    கர்ம வீரர்
    ஒப்பில்லா ஏழைத் தலைவன்

    ஒரு
    நல்ல தலைவன் என்றால்
    அன்றும் இன்றும் என்றும்
    எல்லாருக்கும் நினைவுக்கு வருவது
    நம் பெருந்தலைவர் தான்

    நீங்கள் சொன்னதுபோல்
    மனசு பெருத்த மாமனிதர் தான் நம் பெருந்தலைவர்

    நல்ல பதிவு எட்வின் சார்

    ReplyDelete
  7. “GO ன்னா என்ன?”

    புத்தகங்களை மட்டுமே வாசித்திருந்த அந்த அதிகாரி கொஞ்சம் மக்களின் மனசையும் உங்களது அர்ப்பணிப்பையும் வாசித்திருந்தால் சுதாரித்திருக்கக் கூடும். உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று நினைத்து அதை தமிழ்ப்படுத்துகிறார்,

    “அரசாணைங்க அய்யா”
    இந்த ஆணையை போடுவதுற்குதான் இன்று எத்தனை போராட்டம் செய்ய வேண்டியிருக்கு சமூகம் பற்றி அக்கறையில்லாத தலைவர்களை தேர்ந்தெடுத்த பின்

    ReplyDelete
  8. அருமை .. மீண்டும் ஒரு தன்னலமற்ற தலைவர் நமக்கு கிடைப்பாரா என்ற ஏக்கத்துடன் .....

    ReplyDelete
  9. தனக்கென எதையும் (மனை துனணை உட்பட) சேர்க்காத, தன்னைச் சேர்ந்தவரையும் சேர்க்க விடாத தன்னலமற்ற ஒரே தலைவர் பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜர்
    அய்யா அவர்கள் மட்டும்தான்.

    அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்த பாக்கியம் பெற்றிருந்தாலும் அய்யாவை பார்க்கவில்லை என்ற குறை இன்றளவும் என்னுள் உள்ளது...

    தங்கள் கண்ணீராலான பதிவு மிக அருமை...பசியோடும் வறுமையோடும் கல்வி வாடுவதை சகிக்க பொறுக்காமல் மதிய உணவுத்திட்டத்தினையும் சீருடைத்திட்டத்தினையும் இலவசக் கட்டாயக்கல்வி திட்டத்தினையும் அவர் கொண்டு வரக் காரணமான நிகழ்வுகளை அழகாகப் படம் பிடித்து பதிவு செய்துள்ளீர்கள்...

    மகிழ்ச்சியும் நன்றியும்..

    ReplyDelete
  10. தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டுவந்தது, புதிய பல அணைகள் கட்டியது, இலவச கல்வி அளித்தது, சீருடை கொடுத்தது, எளிமையாக வாழ்ந்தது, தனது சம்பளத்தை பெற்ற தாய் சிவகாமி அம்மையார் கேட்ட போது கூட "ஏன் உன்னால் ரேசன் கடைல போட்ற அரிசிய வாங்கி சாப்டமுடியாத?" என கேட்டது,மத சம்பளத்தில் பல ஏழை குடும்பங்களுக்கு உதவியது, இந்திய தேசத்தின் அடுத்தடுத்த மூன்று பிரதமர்களை நியமனம் செய்தது என காமராஜரின் மீதான ஈர்ப்பு உங்கள் எல்லோருக்கும் உள்ளதைப்போல் எனக்கும் உண்டு ஆனால் "தஞ்சை கீழ்வென்மணி"யில் அரைபடி நெல் தினக்கூலியில் ஆதிகமாய் கேட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக 44 தலித்துகளை உயிரோடு 'ராமையாவின் குடிசை'க்குள் வைத்து எரித்து சாம்பலாகிய 'கோபாலகிருஷ்ணா நாயிடு'க்கு ஒன்றென்றால் நான் சும்மா விடமாட்டேன் என கேடுகெட்ட ஈனத்தனமான கோபாலகிருஷ்ணா நாயிடுக்கு ஆதரவாக களத்தில் குதித்தவர் தானே நீங்கள் போற்றும் கர்ம வீரர்(?) காமராஜர்.....அவரை எப்படி ஏற்க்க முடியும்? சொல்லுங்கள்....

    ReplyDelete
  11. மிக உயர்வானப் பதிவு.
    பெருந்தலைவரின்
    பெருமைக்கு அணிசேர்க்க
    ஆசிரியர் அழகான வார்த்தை பிரயோகங்களை
    உபயோகித்திருக்கிறார்.
    -தாஜ்

    ReplyDelete
  12. ///jeevasundari Balan said...
    இலவசக் கல்வியும் மதிய உணவும் சீருடையும் அனைத்தும் கொடுத்து ஒரு தலைமுறைக்கே கல்விக்கண் கொடுத்த பெருந்தலைவர் காமராஜருக்கு அருமையான ஒரு எழுத்தணியை அளித்துள்ளீர்கள். கல்வியின் அருமையை அவர் உணர்ந்த அளவு வேறு எந்தத் தலைவரும் உணரவில்லை. தவிர்க்க முடியாமல் இன்றைய கல்வியின் நிலையையும் தரத்தையும் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நன்றி . ///

    மிக்க நன்றி தோழர்.
    கல்வி குறித்த அவரது பார்வை என்பது அலாதியானது . அதனால்தான் எத்தனையோ விமர்சனங்கள் அவர் மீது நமக்கு இருந்த போதினும் அவரை மதிப்பதே.

    அவர் மீது விமர்சனத்தை எழுதத் தேவையான எழுத்தறிவே அவரால்தான் வந்தது.

    மீண்டும் எனது நன்றிகள் தோழர்

    ReplyDelete
  13. ///Gowripriya said...
    மிக அருமை
    எங்களுக்கெல்லாம் இவர் போன்ற அரசியல்வாதிகள் வாசிக்க மட்டுமே கிடைக்கின்றனர்.. ///

    மிக்க நன்றி கௌரி.
    இப்பவும் நமக்காக போராடுகிற நல்ல தலைவர்கள் இருக்கவே இருக்கிறார்கள். அவர்கள் செய்கிற இடத்தில் இல்லை.அதனால் நமக்குத் தெரியவில்லை.

    ReplyDelete
  14. /// Ravi said...
    கர்மவீரர் கையெழுத்தில் பலரின் தலையெழுத்து நிமிர்ந்தது. மக்களின் கைநாட்டால் பெருந்தலைவனை தோற்கடித்து தமிழர்களின் தலையெழுத்தே கேள்விக்குறியாய் ஆனதின்று.

    அருமை ///

    மிக்க நறி தோழர்

    ReplyDelete
  15. /// செய்தாலி said...
    கல்வி
    கண் திறந்த மாமேதை
    கர்ம வீரர்
    ஒப்பில்லா ஏழைத் தலைவன்

    ஒரு
    நல்ல தலைவன் என்றால்
    அன்றும் இன்றும் என்றும்
    எல்லாருக்கும் நினைவுக்கு வருவது
    நம் பெருந்தலைவர் தான்

    நீங்கள் சொன்னதுபோல்
    மனசு பெருத்த மாமனிதர் தான் நம் பெருந்தலைவர்

    நல்ல பதிவு எட்வின் சார் ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  16. /// Christopher said...
    “GO ன்னா என்ன?”

    புத்தகங்களை மட்டுமே வாசித்திருந்த அந்த அதிகாரி கொஞ்சம் மக்களின் மனசையும் உங்களது அர்ப்பணிப்பையும் வாசித்திருந்தால் சுதாரித்திருக்கக் கூடும். உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று நினைத்து அதை தமிழ்ப்படுத்துகிறார்,

    “அரசாணைங்க அய்யா”
    இந்த ஆணையை போடுவதுற்குதான் இன்று எத்தனை போராட்டம் செய்ய வேண்டியிருக்கு சமூகம் பற்றி அக்கறையில்லாத தலைவர்களை தேர்ந்தெடுத்த பின் ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  17. /// arulmozhi.pollachi said...
    அருமை .. மீண்டும் ஒரு தன்னலமற்ற தலைவர் நமக்கு கிடைப்பாரா என்ற ஏக்கத்துடன் ..... ///

    கிடைப்பார் தோழர்

    ReplyDelete
  18. /// anbudan PONNIvalavan said...
    தனக்கென எதையும் (மனை துனணை உட்பட) சேர்க்காத, தன்னைச் சேர்ந்தவரையும் சேர்க்க விடாத தன்னலமற்ற ஒரே தலைவர் பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜர்
    அய்யா அவர்கள் மட்டும்தான்.

    அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்த பாக்கியம் பெற்றிருந்தாலும் அய்யாவை பார்க்கவில்லை என்ற குறை இன்றளவும் என்னுள் உள்ளது...

    தங்கள் கண்ணீராலான பதிவு மிக அருமை...பசியோடும் வறுமையோடும் கல்வி வாடுவதை சகிக்க பொறுக்காமல் மதிய உணவுத்திட்டத்தினையும் சீருடைத்திட்டத்தினையும் இலவசக் கட்டாயக்கல்வி திட்டத்தினையும் அவர் கொண்டு வரக் காரணமான நிகழ்வுகளை அழகாகப் படம் பிடித்து பதிவு செய்துள்ளீர்கள்...

    மகிழ்ச்சியும் நன்றியும்.. ///
    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  19. /// Madusudan C said...
    தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டுவந்தது, புதிய பல அணைகள் கட்டியது, இலவச கல்வி அளித்தது, சீருடை கொடுத்தது, எளிமையாக வாழ்ந்தது, தனது சம்பளத்தை பெற்ற தாய் சிவகாமி அம்மையார் கேட்ட போது கூட "ஏன் உன்னால் ரேசன் கடைல போட்ற அரிசிய வாங்கி சாப்டமுடியாத?" என கேட்டது,மத சம்பளத்தில் பல ஏழை குடும்பங்களுக்கு உதவியது, இந்திய தேசத்தின் அடுத்தடுத்த மூன்று பிரதமர்களை நியமனம் செய்தது என காமராஜரின் மீதான ஈர்ப்பு உங்கள் எல்லோருக்கும் உள்ளதைப்போல் எனக்கும் உண்டு ஆனால் "தஞ்சை கீழ்வென்மணி"யில் அரைபடி நெல் தினக்கூலியில் ஆதிகமாய் கேட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக 44 தலித்துகளை உயிரோடு 'ராமையாவின் குடிசை'க்குள் வைத்து எரித்து சாம்பலாகிய 'கோபாலகிருஷ்ணா நாயிடு'க்கு ஒன்றென்றால் நான் சும்மா விடமாட்டேன் என கேடுகெட்ட ஈனத்தனமான கோபாலகிருஷ்ணா நாயிடுக்கு ஆதரவாக களத்தில் குதித்தவர் தானே நீங்கள் போற்றும் கர்ம வீரர்(?) காமராஜர்.....அவரை எப்படி ஏற்க்க முடியும்? சொல்லுங்கள்.... ///

    காமராஜரை ஏற்கவேண்டியது இல்லை.அவர் மீது உங்களுக்கு இருக்கும் விமர்சனத்தை மிகத் தாராளமாக வைக்கலாம். வைக்க வேண்டும்.

    ReplyDelete
  20. /// Taj said...
    மிக உயர்வானப் பதிவு.
    பெருந்தலைவரின்
    பெருமைக்கு அணிசேர்க்க
    ஆசிரியர் அழகான வார்த்தை பிரயோகங்களை
    உபயோகித்திருக்கிறார்.
    -தாஜ் ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  21. எட்வின் அவர்களே! ஆறாம் வகுப்பு! 7ரூ கட்டணம்!கட்டமுடியாத நிலை! 45-46ம் ஆண்டு! புதூர் ஜமீந்தார் சம்ஸ்கிருதம்படித்தால் அரைச்சம்பளம் தறுவார் என்பதால் சம்ஸ்கிருதம் படித்து அந்த படிப்பைதொடந்தவன் நான்! 52ம் ஆண்டு பதினோன்றாம்வகுப்பு தேர்விற்கு இருபது ரூ கட்டமுடியமல் தவித்தவன் நான்.தலைமை ஆசிரியர் தன் கையிலிருந்து இருபது ரூ கட்டி உதவினார்.! இலவசக்கல்வியின் அவசியத்தை நான் உணர்ந்தவன். குமாரசாமி ராஜா, ரெட்டியார், ராஜாஜி, போன்ற முதலமைச்சர்கள் செய்யவில்லையே! ---காஸ்யபன்

    ReplyDelete
  22. /// kashyapan said...
    எட்வின் அவர்களே! ஆறாம் வகுப்பு! 7ரூ கட்டணம்!கட்டமுடியாத நிலை! 45-46ம் ஆண்டு! புதூர் ஜமீந்தார் சம்ஸ்கிருதம்படித்தால் அரைச்சம்பளம் தறுவார் என்பதால் சம்ஸ்கிருதம் படித்து அந்த படிப்பைதொடந்தவன் நான்! 52ம் ஆண்டு பதினோன்றாம்வகுப்பு தேர்விற்கு இருபது ரூ கட்டமுடியமல் தவித்தவன் நான்.தலைமை ஆசிரியர் தன் கையிலிருந்து இருபது ரூ கட்டி உதவினார்.! இலவசக்கல்வியின் அவசியத்தை நான் உணர்ந்தவன். குமாரசாமி ராஜா, ரெட்டியார், ராஜாஜி, போன்ற முதலமைச்சர்கள் செய்யவில்லையே! ---காஸ்யபன்///

    யாரும் செய்யவில்லை என்பதில் அல்ல பிரச்சினையே. ராஜாஜி கிடைத்துவிடக் கூடாது என்பதில் பச்சையாகவே ஆர்வம் காட்டினாரே தோழர்.

    ReplyDelete
  23. இஸ்கூலுக்கு போனா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுரதாம் ??
    http://www.payanangal.in/2010/07/blog-post.html #Kamarajar #BirthAnniversary

    ReplyDelete
  24. கல்வித் தந்தை என்று கண்ட கழிசடைகள் எல்லாம் பட்டம் போட்டுக் கொள்கின்றன. கல்வி கொடுத்த அப்பனுக்கு ஒரு நன்றி நவிலல். நன்றி நன்றி நன்றி தோழர்..

    ReplyDelete
  25. /// Bruno-Mascarenhas JMA said...
    இஸ்கூலுக்கு போனா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுரதாம் ??
    http://www.payanangal.in/2010/07/blog-post.html #Kamarajar #BirthAnniversary ///

    மிக்க நன்றி தோழர். அதற்குத்தான் மதிய உணவு..

    ReplyDelete
  26. /// அசிஸ்டன்ட் டைரக்டர் said...
    கல்வித் தந்தை என்று கண்ட கழிசடைகள் எல்லாம் பட்டம் போட்டுக் கொள்கின்றன. கல்வி கொடுத்த அப்பனுக்கு ஒரு நன்றி நவிலல். நன்றி நன்றி நன்றி தோழர்.. ///

    இந்தக் காலத்தை கழிசடைகளிடமிருந்து மீட்டே ஆக வேண்டும் தோழர்

    ReplyDelete
  27. இன்றைய கல்வித் தந்தைகளெல்லாம் கற்பை விலை பேசுபவர்கள்.
    தனது தாய்க்காக ஒரு தண்ணீர் குழாய் கூட அமைத்து தராமல் நீதிக்காக தலை வணங்கியவர். கல்விக்காக சட்டத்தை உடைத்த மாமனிதர். போற்றுவோம் அவரை எந்நாளும்!

    ReplyDelete
  28. nalla pakirvu!
    mikka nantri!

    pala visayangal theriya mudinthathu!

    idaiye iruntha kavithaikal arumai!

    ReplyDelete
  29. மனசு பெருத்த மாமனிதர்,மாமனிதர் குறித்த அருமையான பதிவு எட்வின் சார்.

    ReplyDelete
  30. என்ன மாதிரி தலைவர் ! மாமனிதர் தான் சந்தேகமே இல்லை

    ReplyDelete
  31. /// ராஜ் தியாகி said...
    இன்றைய கல்வித் தந்தைகளெல்லாம் கற்பை விலை பேசுபவர்கள்.
    தனது தாய்க்காக ஒரு தண்ணீர் குழாய் கூட அமைத்து தராமல் நீதிக்காக தலை வணங்கியவர். கல்விக்காக சட்டத்தை உடைத்த மாமனிதர். போற்றுவோம் அவரை எந்நாளும்! ///

    நன்றி சுரந்து கொண்டே இருக்கும்.
    மிக்க நன்றி தோழர்.

    ReplyDelete
  32. /// Seeni said...
    nalla pakirvu!
    mikka nantri!

    pala visayangal theriya mudinthathu!

    idaiye iruntha kavithaikal arumai! ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  33. /// Murugeswari Rajavel said...
    மனசு பெருத்த மாமனிதர்,மாமனிதர் குறித்த அருமையான பதிவு எட்வின் சார்.///

    மிக்க நன்றி தோழர். உங்களது வருகையும் கருத்துக்களும் என்னை செழுமை செய்கின்றன. மீண்டும் எனது நன்றிகள் தோழர்.

    ReplyDelete
  34. ///மோகன் குமார் said...
    என்ன மாதிரி தலைவர் ! மாமனிதர் தான் சந்தேகமே இல்லை ///

    ஆமாம், சந்தேகமே இல்லாமல். மிக்க நன்றி தோழர்.

    ReplyDelete
  35. கண்கள் குளமாவதை தடுக்கும் சக்தி கண்களுக்கும் இல்லை மனசுக்கும் இல்லை ஏன் அறிவுக்கும் இல்லை
    சிறந்த எண்ணம் .

    ஒருசிலருக்கு மட்டுமே இப்படி ஒரு மனசு வரும் அது பெரும்தலைவருக்கு வந்திருக்கிறது
    மனிதம் உள்ளவரை அவரின் புகழ் வாழ்ந்து ஓங்கிநிற்கும். தவறு செய்யாத மனிதன் யார் இருக்கிறார்கள்.
    அதையும் கடந்துதான் நாம் பார்க்க வேண்டும். நன்றி தோழர்.

    ReplyDelete
  36. //// அலாய்ஸ் said...
    கண்கள் குளமாவதை தடுக்கும் சக்தி கண்களுக்கும் இல்லை மனசுக்கும் இல்லை ஏன் அறிவுக்கும் இல்லை
    சிறந்த எண்ணம் .

    ஒருசிலருக்கு மட்டுமே இப்படி ஒரு மனசு வரும் அது பெரும்தலைவருக்கு வந்திருக்கிறது
    மனிதம் உள்ளவரை அவரின் புகழ் வாழ்ந்து ஓங்கிநிற்கும். தவறு செய்யாத மனிதன் யார் இருக்கிறார்கள்.
    அதையும் கடந்துதான் நாம் பார்க்க வேண்டும். நன்றி தோழர். ////

    மிக்க நன்றி அலாய்

    ReplyDelete
  37. உங்களை கை எடுத்து கும்பிடாவிட்டால் நான் மனிதனல்ல.

    நான் மனிதன் பெருந்தலைவரே.

    இரண்டு சொட்டு கண்ணீரும் வணக்கமும் தலைவரே.

    ReplyDelete
  38. மிக்க நன்றி உமா

    ReplyDelete
  39. நீங்கள் இல்லாதிருந்தால், நாங்கள் இவ்வாறு இருந்திருக்க மாட்டோம்.
    தலை வணக்கம் பெருந்தலைவா!

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...