Thursday, June 30, 2022

தீண்ட...

 தீண்ட

விரல்கள் தேவையில்லை

தீண்டாத

விரல்களும் தேவையில்லை


முகநூல்

30.06.2022

அழைப்பு 034


 


இன்று மாலை அரியலூர் புத்தகத் திருவிழாவில் உரையாற்ர அரியலூர் வருகிறேன்.


சந்திக்கலாம்



Wednesday, June 29, 2022

பிறகெப்படி கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி இதை ஒத்துக் கொள்ளும்

 


அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனம் எண்ணிக்கையில் எவ்வளவு அதிகமோ

அதைவிட எண்ணிக்கையில் அதிகமானது அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனத்திற்கு எதிரான போராட்டங்களின் எண்ணிக்கை
எண்ணிக்கை சற்றுக் குறைவாயினும் அமெரிக்க ஆதிக்க முயற்சிக்கு எதிரான வெற்றிகளின் எண்ணிக்கையும் கொள்ளத்தக்கனவாகவே உள்ளன
முதலாமது வெளித்தெரியுமளவிற்கு மற்றவை வெளித் தெரிவதில்லை
உலக ஊடக தர்மம் அப்படி
அமெரிக்காவின் திமிர்த் தலையில் நச்சென்று கிரீஸ் நீதிமன்றம் கொட்டிய ஒரு மகிழ்சம்பவத்தை 16.06.2022 நாளிட்ட தீக்கதிர் தந்திருக்கிறது
19.04.2022 அன்று கிரீசுக்கு சொந்தமான கடற்பகுதியில் ஈரானின் எண்ணெய்க் கப்பலொன்று எப்படியோ நுழைந்துவிட்டது
அந்தக் கப்பலில் ஒரு லட்சத்து பதினையாயிரம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருந்தது
இந்தக் கப்பலை கிரீஸ் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது
அந்த 1,15,000 பீப்பாய்களாஇயும் அமெரிக்காவிற்கு அனுப்பப்போவதாக கிரீஸ் அறிவித்தது
ஈரான் கப்பல் அத்துமீறியே கிரீஸ் எல்லைக்குள் நுழைந்துவிட்டது என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம்
அதன்பொருட்டு கிரீஸ் அந்தக் கப்பலைக் கைப்பற்றியதைக்கூட நியாயம் இல்லை என்றுகூட நாம் சொல்லவில்லை
ஆனால்
அந்த எண்ணெய் முழுவதையும் அமெரிக்காவிற்கு அனுப்புவது என்ற முடிவை
எவ்வளவுதான் நியாயத்திற்கு சற்றும் சம்பந்தமே இல்லாதவராக இருந்தாலும்
மோடியேகூட ஒத்துக் கொள்ள மாட்டார்
பிறகெப்படி கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி இதை ஒத்துக் கொள்ளும்
மக்களைத் தெருவிற்குள் திரட்டியது அது
இந்தக் கோரிக்கையோடு சேர்த்து
ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான தனது ஈனத்தனமான நடவடிக்கைகளுக்கு தமது மண்ணை நரித்தனத்தோடு அமெரிக்க பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் வைத்து போராடினார்கள்
ஈரான் கிரீஸ் நீதிமன்றத்தை நாடியது
ஈரான் வசம் கப்பலை ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது
அந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய கிரீஸ் அரசாங்கத்திற்கு உரிமை இருந்த நிலையில்
மக்கள் தங்களது போராட்டத்திற்கான கோரிக்கைகளில் மேல்முறையீடு கூடாது என்பதையும் சேர்த்துக் கொண்டனர்
கிரீஸ் அரசாங்கம் பணிந்தது
கப்பலை திருப்பித் தருவது என்று முடிவெடுத்திருக்கிறது
கப்பல் கிரீசுக்குள் நுழைந்ததை,
கிரீஸ் அதைக் கைப்பற்றியதை,
எண்ணெய் பீப்பாக்களை அமெரிக்காவிற்கு வழங்க கிரீஸ் முடிவெடுத்ததை,
அதற்கு எதிராக மக்களை கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி திரட்டியதை
கிரீஸ் பணிந்ததை
ஊடகங்கள் சொல்லாது
நாம் உரத்து சொல்வோம்

#சாமங்கவிய இரண்டுமணி பதினைந்து நிமிடங்கள்
29.06.2022


Tuesday, June 28, 2022

நிச்சயம் இந்தியாவும் ஒருநாள் சிவக்கும்

 





சன்னஞ் சன்னமாய் உலகம் சிவந்து கொண்டிருக்கிறது

அதைப் பார்க்க நாங்கள் இல்லாமல் வேண்டுமானால் போகலாம்
ஆனால் நிச்சயம் இந்தியாவும் ஒருநாள் சிவக்கும்

திருச்சி மாநகராட்சிக்கு நமது கோரிக்கைகள்,

 


திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி அருகில் உள்ள பூங்கா இது

குழந்தைகளும் பெரியவர்களும் கணிசமாக வருகிறார்கள்
நடைபயிற்சியும் நடக்கிறது
அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது
சின்னச் சின்ன குறைகள்
சில இடங்களில் சன்னமோ சன்னமான புதர் எழுகிறது
சரி செய்யாவிட்டால் புதர் பெருக்கும்

பூச்சிகள் அண்டக்கூடும்



சறுக்குப் பலகைகள் பிடுங்கப்பட்டு சாத்தி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்
குழந்தைகளின் குதூகலத்தை சறுக்கு விளையாட்டில்தான் காண முடியும்



குழந்தைகள் அமர்ந்து விளையாட ஸ்பிரிங்கின் மேல் பறவைகளோடு உள்ள இரண்டில் ஒன்றைக் காணோம்
எதிரெதிரே இரண்டு குழந்தைகள் அமர்ந்து விளையாடும்போதுதான் அந்த இடம் மலர்ந்து சிரிக்கும்
12 வயதுக் குழந்தைகளுக்கு மட்டுமே என்று அறிவிப்பு இருக்கிறது
ஆனால் 35 வயது யுவதிகளும் இளைஞர்களும் அதில் விளையாடுகிறார்கள்
இதனால் என்றாவது ஒருநாள் ஊஞ்சல் சங்கிலி அறுந்துபோக வாய்ப்பு உள்ளது
இது நடந்தால்,
ஊஞ்சலும் குழந்தைகளுக்கு இல்லாமல் போகும்





இறுதியாக உள்ள சின்ன அழகான குளத்தில் நீர் இருந்தால் அழகாக இருக்கும்
திருச்சி மாநகராட்சிக்கு நமது கோரிக்கைகள்,
சறுக்குப் பலகையை நிறுவுவது
அந்தப் பறவை பொம்மையை ஸ்ப்ரிங்கில் வைப்பது
ஊஞ்சலில் பெரியவர்கள் ஆடாமல் ஒரு காவலரைக் கொண்டு தடுப்பது
அந்தக் குளத்தில் நீரை நிரப்புவது
புதரை நீக்குவது
இதற்கான பட்ஜட் திருச்சி மாநகராட்சிக்கு ஒரு பொருட்டானதே இல்லை
இவற்றை திருச்சி மாநகர நிர்வாகம் கவனிக்க வேண்டும்

முகநூல்
28.06.2022

Monday, June 27, 2022

உங்களுக்குத் தெரிந்தவர்தான் சார்


 


பரியேறும் பெருமாளை நான்கைந்துமுறை பார்த்துவிட்டு
Kaakkai Cirakinile வில் நான்கு பக்கங்களுக்கு படம்குறித்து எழுதுகிறேன்

படாத பாடு பட்டு எப்படியோ மாரிசெல்வராஜின் நம்பரைப் பெற்று பேசுகிறேன்

அந்த உரையாடல் குறித்து ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் மாரி சொன்னதாக தோழர் முத்தையா கூறினார்

அந்த நீண்ட உரையாடலில் ஓரிடத்தில்

“அப்பறம் ஏன் இவனத் தடுக்கறீங்க? ன்னு கேட்பாரே கல்லூரி முதல்வர் அவர் யார் தோழர் என்று கேட்கிறேன்

உங்களுக்குத் தெரிந்தவர்தான் சார் என்கிறார்

ஒருமுறை தோழர் Karuppu Anbarasan அவர்களோடான உரையாடலில் ராமுவை சந்திக்க வேண்டும் என்று கூறினேன்

சந்திக்கலாம் என்றார்

இனி வாய்க்காது

இது மாதிரி தோழர்களை சந்திப்பதற்காகவாவது சொர்க்கம் என்று ஒன்று இருந்து தொலைத்திருக்கலாம்


முகநூல்

27.06.2022

இவன் என்பது ஒருநூறு கோடி



பத்தாது
மிதி
இன்னும் நாலு மிதி
நசுக்கு அவன் மூக்கை
ரத்தம் வரும்வரை
துப்பு அவன் மேல்
பக்கத்து ஊருக்கு பேசி
ஒரு வண்டி கெட்ட வார்த்தைகளை
கடன் வாங்கி
இறுக்கி நசுக்கு உன் வெறிதீறும் மட்டும்
அவன் குரல்வளையை
தூக்கிக் கிடாசு அவனை
உன் வண்டியில்
அடித்த கை வலிக்கும்
மிதித்த கால் வலிக்கும்
திட்டித் திட்டி வாய் வலிக்கும் உனக்கு
கொஞ்சம் வோய்வெடு
வேலையை
அடுத்த தோழனிடம் கை மாற்று
துவைத்து எடு
அவனை
சிறை எடுக்கும் வரை
வீடேகு
மதுகுடி
தூங்கித் தொலை
நாளையும் அழைக்கும்
களமுன்னை
நிற்பான் ஒருவன்
இவனினும் தெம்பாய்
இவனினும் தெளிவாய்
தெரிந்துகொள் நண்பா
ஒருமை அல்ல
இவன் என்பது
ஒருநூறு கோடி

முகநூல்
27.06.2022

”டி.பி ஜெயின் கல்லூரி பாதுகாப்பு இயக்கம்”

டி.பி ஜெயின் கல்லூரி ஒரு அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி

சென்னையில் இருக்கிறது

”டி.பி ஜெயின் கல்லூரி பாதுகாப்பு இயக்கம்” என்று ஒரு இயக்கம் உருவாகி இருக்கிறது

அந்த அமைப்பின் சார்பில் 27.06.2022 அன்று காலை அந்தக் கல்லூரியின் வாயிலில் ஒரு போராட்டம் நடக்க இருப்பதாக அறிய முடிகிறது

SFI, DYFI, CITU, AIDWA உள்ளிட்ட அமைப்புகள் இதற்கான முன் முயற்சியில் உள்ளன

போராட்டத்திற்கான காரணம் மிக மிக முக்கியமானது

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பல பிரிவுகள் இருக்கும்

அவற்றில் சிலவற்றிற்கு அரசு உதவி கிடைக்கும்

அந்தப் பிரிவுகள் உதவி பெறும் பிரிவுக்கள் ஆகும்

மற்றவை சுயநிதிப் பிரிவுகள் ஆகும்

உதவிபெறும் பிரிவுகளுக்கான பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கும்

சுய உதவிப் பிரிவுகளுக்கு அது கிடையாது

எனவே சுய உதவி பெறும் பிரிவில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்தை கல்லூரி நிர்வாகம் வழங்கும்

இதற்கான நிதியை மாணவர்களிடம் வசூலித்துவிடும்

செமையாக லாபம் தரும் இடம் இது

ஜெயின் கல்லூரியில் உதவிபெறும் பிரிவுகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களை சேர்ப்பதில்லை என்பது புகார்

புரியும்படி பேசுவதெனில்

இப்போது இயற்பியல் பாடத்திற்கு உதவிபெறும் பிரிவும் சுயநிதிப் பிரிவும் இருப்பதாகக் கொள்வோம்

40 + 40 என்ற வகையில் 80 மாணவர்களைச் சேர்க்கலாம்

தோராயமாகச் சொல்கிறேன்

உதவிபெறும் பிரிவிற்கு 15,000 ரூபாய் கட்டணம் என்றால் சுயநிதிப் பிரிவிற்கு 40,000

கொஞ்சம் கூடலாம் குறையலாம்

இப்போது இந்தக் கல்லூரியில் உதவி பெறும் பிரிவில் மாணவர்களைச் சேர்ப்பதில்லை என்றால்

சுயநிதிப் பிரிவில் சேர்க்கிறார்கள் என்று பொருள்

எனில் சுயநிதிப் பிரிவில் 80 குழந்தைகளும் சேர்க்கப் படுகிறார்கள்

ஆக 80 குழந்தைகளுக்கும் 40,000 கட்டணம் வாங்கி விடுவார்கள்

சட்டப்படி இவர்களுக்கு வரவேண்டிய கட்டணாம்

உதவி பெறும் குழந்தைகள் வகையில் 40 x 15,000 =6,00,000

சுயநிதி வழியில் 40 x 40,000 = 16,00,000

ஆகக் கூடுதல் 6,00,000 + 16,00,000 = 22,00,000

உதவி பெறும் பிரிவில் சேர்க்காததால் அனைவரும் சுயநிதிப் பிரிவு என்பதால் வரும் கட்டணம்

80 x 40,000 = 32,00,000

ஆக ஒரு பிரிவில் தோராயமாக இவர்கள் அடிக்கும் கொள்ளை 10, 00,000

எத்தனைப் பிரிவுகள்?

எத்தனை செமஸ்டர்கள்?

எனில் எவ்வளவு கொள்ளை

போக

உதவிபெறும் பேராசிரியர்களையும் ஊழியர்களையும் கொண்டே சுயநிதி பிரிவுகளுக்கு பாடம் எடுக்கிறார்கள் என்றுதான் கொள்ள வேண்டும்

இது பெரும் கொள்ளையும் குற்றமும்

அரசு அவசியம் இதில் தலையிட்டு இந்தப் புகார் உண்மை எனில் கல்லூரியை அரசுடமையாக்க வேண்டும்

#சாமங்கவிய ஒரு மணி இரண்டு நிமிடங்கள்
26.06.2022

Sunday, June 26, 2022

ஜனநாயக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் திரு பைடனுக்கான கடிதம்

 18.06.2022 அன்று தீக்கதிரில் பைடனுக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் குறித்த செய்தி வந்திருந்தது

அந்தக் கடிதம் அப்படி ஒரு மகிழ்ச்சியை எனக்குத் தந்திருக்கிறது
அந்தக் கடிதத்தை அமெரிக்க அதிபர் பைடனுக்கு அவரது கட்சியான ஜனநாயகக் கட்சியின் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுதியுள்ளனர்
க்யூபாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பயணம் செய்வதில் இருந்த சில தடைகளை பைன் தளர்த்தி உள்ளதற்காகவும்
இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் பணம் அனுப்புவதில் இருந்த தடைகளையும் தளர்த்தி உள்ளமைக்காகவும்
பைடனை அவர்கள் அந்த கடிதத்தின் ஆரம்பத்தில் நன்றியை தெரிவிக்கின்றனர்
உலகத்தின் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியதின் அவசியத்தை எடுத்து வைக்கின்றனர்
இதை அமெரிக்காவும் க்யூபாவும் நட்பைப் பேணுவதின் மூலம் சாத்தியப்படுத்த முடியும் என்பதை தெரிவிக்கும் அவர்கள்
பயங்கரவாதத்திற்கு ஆதரவு தரும் நாடுகளின் பட்டியலில் இருந்து க்யூபாவை நீக்குமாறும் கோரிக்கை வைக்கின்றனர்
இத்தனைத் தடைகளைத் தாண்டியும்
பெருந்தொற்று காலத்தில் க்யூபா 42 நாடுகளுக்குத் தமது மருத்துவர்களை அனுப்பி வைத்ததைக் குறிப்பிடும் அவர்கள்
உலகச் சுகாதாரக் கழகம் க்யூபாவின் தடுப்பு மருந்திற்கு அங்கீரம் அளிக்க தாமதம் செய்வதாகவும்
அதை விரைவுபடுத்த அமெரிக்கா உதவ வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தை முடித்திருக்கிறார்கள்
க்யூபாவின் மீதான அமெரிக்காவின் அநியாயமான தடைகளையும்
க்யூபாவின் உலகளவு நீளும் மருத்துவ சேவையை அமெரிக்காவின் தடைகள் பாதிப்பதையும்
க்யூபா மீதான தடைகளை நீக்குவதன் மூலம் உலக நாடுகளுக்கான க்யூபாவின் மருத்துவ சேவை விரியும் என்றும்
அமெரிக்காவிற்கும் இது பேருதவியாக அமையும் என்றும்
அவர்கள் கூறியுள்ளனர்
தடை விதித்துள்ளது அமெரிக்கா
அந்தத் தடையை தற்போது கோரியுள்ளவர்கள் அமெரிக்காவின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 26 பாராளுமன்ற உறுப்பினர்கள்
பைடன் இதை பரிசீலிக்க வேண்டும்
இந்தக் கடிதத்திற்கான முன்முயற்சி எடுத்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அய்யன்னா ப்ரஸ்லே மற்றும் ஸ்டீவ் கோஹன் இருவருக்கும் நமது அன்பும் நன்றியும்
#சாமங்கவிய 59 நிமிடங்கள்
25.06.2022

Saturday, June 18, 2022

வல்லமையோடு வகுத்தலை செய்கிறீர்கள்

  அன்பின் முதல்வருக்கு,

வணக்கம்.
நான் கண்ட இரண்டு சம்பவங்களும்
முதல்வராகப் பதவியேற்ற நாளில் நீங்கள் போட்ட கையெழுத்துகளில் ஒன்றும்
ஒன்றோடு ஒன்றைப் பொருத்திப் பார்க்குமாறும்
அது குறித்து தங்களுக்கு கடிதம் எழுதுமாறும் என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றன
முதல் சம்பவம் மூன்று வருடங்களுக்கு முன்னர் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் நிகழ்ந்தது
புதுக்கோட்டையில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சென்றுகொண்டிருக்கிறேன்
பேருந்தைப் பிடிப்பதற்குமுன் தேநீர் பருகத் தோன்றியதால் ஆவினுக்கு
செல்கிறேன்
ஆவினுக்கும் பெரியார் புத்தக நிலையத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் ஆண்களும் பெண்களுமாய் இருநூறிலிருந்து இருநூற்றி ஐம்பது பேர்
நின்று கொண்டிருக்கிறார்கள்
கைகளிலே தூக்குப்போனி
அவர்களது கலகலப்பான உரையாடல் என்னை அந்த இடத்திலேயே கட்டிப்போடுகிறது
அவர்கள் கொத்தனார்களும் சித்தாள்களும்
வரப்போகும் மேஸ்திரிகளுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்
மேஸ்திரிகள் வந்தால்தான் அவர்களில் எத்தனைபேருக்கு அன்று வேலை
கிடைக்கும் என்பது தெரியும்
தேநீரை முடித்துக் காசு கொடுப்பதற்குள் பத்துப் பதினைந்துபேர் அங்கே வருகிறார்கள்
அவர்கள் அனைவரும் மேஸ்திரிகள் என்பது புரிகிறது
அவர்கள் தலைக்கு பத்திலிருந்து பதினைந்துபேர் வரை தேர்ந்தெடுக்க மிச்சம் ஒரு இருபது அல்லது இருபத்தி ஐந்துபேர் சோகத்தோடு ஒதுங்குகிறார்கள்
இவர்களுக்கு அன்று வேலை இல்லை
இப்படித்தான்ஒவ்வொரு நாளும் சிலருக்கு வேலை கிடைக்காது என்கிறார்கள்
அதுவரை இருந்த கலகலப்பு மாறுகிறது
அந்தக் கலகலப்பான அரட்டையும் அதன்பிறகான இந்த சோகமும் அன்றாட வாடிக்கை என்கிறார் டீமாஸ்டர்
வேலை கிடைக்காத ஆண்கள் மிக சொற்பம்.
அவர்கள் தங்களது அல்லது தங்கள் நண்பர்களது இருசக்கர வாகனங்களில் புறப்படுகிறார்கள்
வேலை கிடைக்காத பெண்களில் சிலருக்கு கண்கள் கலங்கிவிட்டது அவர்கள் நகரப் பேருந்தில் வந்து திரும்ப வேண்டும். போக வர இருபது ரூபாயாவதும் அன்றைக்கு அவர்களுக்கு இழப்பு
அன்றில் இருந்து இன்றுவரை வேலை கிடைக்காது பேருந்துக்கு காசு செலவு செய்ய வேண்டிய அந்தப் பெண்களின் கண்ணீர் என்னை உலுக்கிக்கொண்டே இருக்கிறது முதல்வர் அவர்களே
மூன்று நாட்களுக்கு முன்னால் பெரம்பலூர் அய்யங்கார் பேக்கரி அருகே அதே மாதிரி ஒரு கூட்டத்தைக் கண்டேன்
ஏறத்தாழ அதே நடைமுறை
இங்கும் இருபது அல்லது இருபத்தி ஐந்து பேருக்கு வேலை இல்லை
ஆனால் அன்று திருச்சியில் கண்ட சோகம் இல்லை
வேலை கிடைத்த ஒரு பெண் வேலை கிடைக்காத தன் தோழியிடம் தனது சாப்பாட்டுக் கூடையைக் கொடுக்கிறார்
“இன்னைக்கு மோல்டு மலரு, சாப்பாடு தருவாங்க. எடுத்துட்டுப் போ”
இவரும் கை அசைத்து வழி அனுப்பிவிட்டு பேருந்திற்காக காத்திருக்கிறார் வேலை கிடைக்காத வருத்தம் தெரிகிறது. ஆனால் அன்று திருச்சியில்
அந்தப் பண்களின் முகத்தில் நான் கண்ட வலியின் சுவடுகளை இப்போது இவர்களிடத்திலே காணவில்லை
இதற்கு காரணம் முதல்வராகப் பதவியேற்ற அன்று
“இனி சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை”
என்று நீங்கள் போட்ட உத்தரவு
திருச்சியில் அந்தப் பெண்களின் முகத்தில் நான் கண்ட வலியின் தழும்புகளை உங்களது ஒற்றைக் கையெழுத்து துடைத்துப் போட்டிருக்கிறது
ஒருமுறை சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் ”லோட் மேன்கள்” என்று அழைக்கப்படும் மூட்டை தூக்கும் தோழர்கள் அன்றைய முதல்வர் கலைஞரை ஒரு கோரிக்கையோடு சந்திக்கிறார்கள்
தாங்கள் சுமக்கும் மூட்டை ஒன்றிற்கு பத்துப் பைசாவோ இருபது பைசாவோ கூடுதலாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை
அவர்களுக்கு “TIME SCALE” நிர்ணயித்து அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றுகிறார் கலைஞர்
அவர்களை நிரந்தரப்படுத்தி கலைஞர் அன்று போட்ட கையெழுத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல நிங்கள் போட்ட இந்தக் கையெழுத்து
இதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு வரும் என்று பொருளாதார மேதைகள் கணக்குப் போட்டு கதறுவார்கள்
அவர்கள் கதறட்டும்
இது இழப்பல்ல,
கூடுதல் செலவு,
அவ்வளவுதான் என்பதை நீங்கள் அறிவீர்கள்
அதை வருவாயைக் கூடுதலாக்குவதன் மூலம் சரிசெய்துவிடலாம் என்பதையும்
வருவாயை எப்படிக் கூட்டுவது என்பதையும் நீங்களும் அறிவீர்கள்
அதை அறிந்தவர்களை கூடவே வைத்திருக்கவும் செய்கிறீர்கள்
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு”
“இயற்றவும்
ஈட்டவும்
ஈட்டியதைக் காக்கவும்”
உங்களால் முடியும்
வல்லமையோடு வகுத்தலை செய்கிறீர்கள்
ஒன்று சொல்ல வேண்டும்,
ஆசிரியைகள் அரசியல் ஊழியர்கள், வசதிபடைத்தவர்கள் உள்ளிட்ட சிலரும் கட்டணமில்லா பேருந்தில் வருகிறார்கள்
இதுபோல் ஏராளம்
இவற்றைத் தடுக்கலாம்
தொடருங்கள்

அன்புடன்,
இரா.எட்வின்
07.05.2022

உற்பத்தி செய்யப்படும் நெல்லை வீணாகமல்

 அன்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்
இலங்கை எரிந்து கொண்டிருக்கிறது
ராஜபக்‌ஷேவின் வீடு எரியும் வெளிச்சத்தில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்
ஆனால் அப்படித் தெரியவில்லை
நேற்றைக்கு முந்தாநாள்,
இந்தியாவிலும் இதே பொருளாதார நிலைதான் இருக்கிறது.
ஆனால் இந்தியர்களைப் பாருங்கள். எவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும் இப்படிக் கொந்தளிப்பது நியாயமா?
என்று தனது மக்களிடம் கேட்டிருக்கிறார்
ஆக,
இந்தியாவின் பொருளாதாரம் இலங்கையைப் போலவே இருப்பதாகத்தான் அதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்
ஒருபுறம் வேலை வாய்ப்பு இல்லாமையும்
அதனால் கையில் காசு இல்லை
மறுபுறம் விலைவாசி உயர்வும்
அதிலும் குறிப்பாக உணவுப் பொருள் பற்றாக்குறையும்
அவற்றின் விலைவாசி உயர்வும்தான்
இலங்கை எரிந்துகொண்டிருப்பதற்கான முக்கிய காரணம்
உலக நாடுகள் இலங்கையின் நிலையை சாந்தப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அங்குள்ள மக்கள் தொகை அப்படி
இந்தியாவிலும் இது நிகழ வாய்ப்பு இருக்கிறது என்பது தாங்கள் அறியாதது அல்ல ஸ்டாலின் சார்
இந்தியாவில் கோதுமை உற்பத்தி குறைந்திருக்கிறது என்பதே செய்திகள் வழி வரும் உண்மை
இந்திய உணவு கோதுமையை சார்ந்தது
இறக்குமதியும் இப்போது சாத்தியமில்லை
காரணம் இந்தியப் பணத்தின் மதிப்பு அவ்வளவு வீழ்ந்திருக்கிறது
100 ரூபாய்க்கு வாங்கிய கோதுமையை 115 ரூபாய்க்கு வாங்க வேண்டும்
இதுவும் இறக்குமதியைப் பாதிக்கும்
இந்த நிலையில் அரசின் சேமிப்புக் கிட்டங்கியில் சேமிப்பு இருந்தால் ஓரளவு தப்பிக்கலாம்
ஒன்றியத்தில் அப்படி இருப்பதற்கான வாய்ப்பு இல்லை
உங்களிடம் இரண்டு கோரிக்கைகள் முதல்வரே
எதிர்க்கட்சி முதல்வர்களை ஒன்றிணைத்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு கண்ணுக்கு கிட்டத் தெரிகிற பஞ்சத்தைப் பற்றியும்
அரசின் கிடங்குகளை நிரப்பவும் வலியுறுத்துங்கள்
நெல் உற்பத்தியை அதிகரிக்கவும்
உற்பத்தி செய்யப்படும் நெல்லை வீணாகமல் சேமிக்கவும் ஏற்பாடுகளை செய்யுங்கள்
அன்புடன்,
இரா.எட்வின்
11.05.2022

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...