தங்களது இறைதூதர் என்று கிட்டத்தட்ட 200 கோடி மக்கள் நம்பும் ஒருவர் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளார்கள் இருவர் தரக்குறைவாக பேசி இருக்கிறார்கள்
அதற்கு எதிராக உலக நாடுகள்,
குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் எதிர்வினையாற்றுகின்றன
இது இந்தியாவிற்கு சங்கடத்தையும் தலைகுனிவையும் அளித்திருக்கிறது என்பதை எல்லாம் பரிசீலிப்பதற்கு முன்
இந்திய மக்களே அதை ஏற்கவில்லை என்பதையும்
இதை எதிர்க்கும் இந்திய மக்களில் பெரும்பான்மையோர் இந்துக்கள் என்பதையும் அருள்கூர்ந்து அனைவரும் கணக்கிலெடுக்க வேண்டும் என்று கோருகிறேன்
இதில் நாம் தெளிவாக இல்லாவிட்டால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக இந்துக்கள் இருப்பதாக உலகம் கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது
இது மிக மிக ஆபத்தானது
இந்தியா என்பது எல்லோருக்குமானது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு
அதாவது,
பெரும்பான்மை இந்துக்களின் நிலைப்பாடும் அதுதான்
எந்த மதத்தோடும் சம்மதம் இல்லாத நாத்திகன் நான்
ஆனால் அனைவரோடும் அனைத்துக் கோவில்களுக்கும் செல்பவன்தான்
எந்த ஒரு தெய்வத்தையும் வணங்குவதில்லை
எந்த தெய்வத்தோடும் நமக்கு சண்டையுமில்லை
இல்லாத ஒன்றோடு சண்டைபோடுவது எப்படி சாத்தியம்?
கடவுள் உண்டு என்று சொல்ல நம்பிக்கையாளர்களுக்கு இருக்கிற உரிமை
அப்படி ஒருவர் இல்லை என்று சொல்வதற்கான எங்கள் உரிமையையும் உள்ளடக்கியது
கடவுளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல
மக்களின் நம்பிக்கை தவறு என்று சொல்ல உரிமை நிச்சயம் உண்டு
ஆனால் அதை கொச்சைப் படுத்தவோ கீழ்மைப் படுத்தவோ எவனுக்கும் உரிமை இல்லை
இந்தத் தவறை செய்த தனது செய்தித் தொடர்பாளார்களை பாஜக நீக்கி இருக்கிறது
அவர்களை FRINGE ELEMENTS என்று கூறி இருக்கிறது
இந்தியா மத வேறுபாடுகளை ஒருபோதும் சகிக்காது என்று கூறுகிறது
இதெல்லாம் நடிப்பு என்று கொள்வதற்குதான் வாய்ப்புகள் அதிகம் ஆனாலும்
இதை சொல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு வந்திருக்கிறது
இதை மதச்சார்பற்ற சக்திகள் பயன்படுத்தி அவர்களிடம் இருந்து மக்களை மீட்க வேண்டும்
எந்த விதத்திலும் சிறுபான்மையினரையும் இந்துக்களையும் எதிரெதிர் திசையில் நிறுத்த முயற்சிக்கும் மதவெறிக் கும்பலிடம் பலியாகிவிடக்கூடாது
இதைப் பயன்படுத்தி இந்தியாவையும் சிறுபான்மையினரையும் எதிரெதிர் திசையில் நிறுத்திவிடவும் கூடாது
#சாமங்கவிந்து34 நிமிடம்
07.06.2022
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்