Saturday, June 18, 2022

Ode on a grecian urn கொண்டாடப்பட்ட அளவு ஏன் ”சிலை எடுத்தான்” கொண்டாடப்படவில்லை

1980 இல் எனக்கு ”Ode on a grecian urn" அறிமுகமாகிறது

அப்போது எனக்கு 17 வயது
நாம் இப்படியாகக் கொள்வதில் யாருக்கும் வழக்கெதுவும் இருக்கப் போவதில்லை
அப்படி யாருக்கேனும் பிராது இருக்கும் பட்சத்தில்
முடிந்த இடத்தில் அந்தப் பிராதை அவர்கள் கொடுப்பதில் நமக்கும் வழக்கெதுவும் இல்லை
எந்த இடம் என்று தெரியவில்லை
ஏதோ ஒரு பாரிலோ தேநீர்க்கடையிலோ அல்லது வேறு எங்கோவோ இருக்கலாம்
எங்கோவோ இருந்துவிட்டும் போகட்டும்
ஒரு ஜாடியைப் பார்க்கிறான்
மிக மிகப் பழங்காலத்து ஜாடி
அதன் கலைநயம் அவனை ஈர்க்கிறது
Thou still unravish'd bride of quietness,
Thou foster-child of silence and slow time,
என்று கவிதையை ஆரம்பிக்கிறான்
அந்த ஜாடியில் உள்ள ஓவியத்தில் மரங்கள் இருக்கின்றன
கீட்ஸ் அந்த மரத்தைப் பார்க்கிறான்
அந்த ஜாடிக்கு 200 வயது இருக்கலாம்
என்றால் அந்த மரத்தின் வயது 200
இதுவரைக்கும் அவன் அடைந்த ஆச்சரியம் அவனுக்கானது
200 வயது மரம் சாத்தியம்
ஆனால் 200 வயது இலை, அவன் வியப்பின் உச்சிக்கே போகிறான்
மரத்தின் ஜனனத்தோடு பிறந்த இலைகள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழுக்காமல் சருகாகாமல் உதிராமல்
அப்பப்பா
கலை நிலையானது
சொக்கிப்போகிறான் கீட்ஸ்
எழுதுகிறான்,
Ah, happy, happy boughs! that cannot shed
Your leaves, nor ever bid the Spring adieu;
அந்த ஜாடியில் உள்ள படத்தில் ஒரு காதலன் தனது காதலிக்கு முத்தம் கொடுக்க முயல்கிறான்
அவள் தப்பித்து ஓட முயற்சி செய்கிறாள்
கீட்ஸ் எழுதுகிறான்,
பயப்படாதே அவளால் அந்த இடத்தைவிட்டு நகர முடியாது. அவளது வனப்பும் எத்தனை ஆண்டு காலமானாலும் சிதையாது
நமக்கும் புரிகிறது
ஒருபோதும் அவளை அவன் முத்தமிட முடியாது
Bold Lover, never, never canst thou kiss,
Though winning near the goal yet, do not grieve;
She cannot fade, though thou hast not thy bliss,
For ever wilt thou love, and she be fair!
சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு பாடலுக்கான சூழலை கண்ணதாசனிடம் விளக்குகிறார்கள்
மகாபலிபுரம்
அங்குள்ள சிலைகளைப் பார்த்து அதிலும் அங்குள்ள ஒரு யுவதியின் சிலையைக் கண்டு வியந்து பாடுவதாக பாடல் வேண்டும்
வேட்டியை சன்னமாக தூக்கிப் பிடித்தபடி கண்ணதாசன் சொல்லச் சொல்ல எழுதுகிறார்கள்
“சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ணாக் கண்ணுக்கு
ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்தக் கடலினிலே”
ஆகா ஆகா
“கட்டழகு வாலிபர் தொட்டுப் பார்க்க
கவிஞர்கள் தமிழால் தொட்டுப் பார்க்க
பொட்டு வைத்தப் பூங்கொடி போட்டி போட
பொல்லாத பருவத்தை கல்லாக்கினேன்”
என்று நகருவார்
அந்த சிலையை பார்த்த வாலிபர்களுக்கு அதைத் தொட்டுப் பார்க்கத் தோன்றுமாம்
கவிஞர்களிடம் கவிதை துள்ளுமாம்
பெண்களுக்கு போட்டியான அழகாம்
இதெல்லாம் விடுங்கள்
இதுவரை ஒரு பெண்ணை கல்லில் சிலையாக வடித்ததாகத்தான் வரும்
அது பெண் மட்டும் இல்லையாம்
பொல்லாத பருவத்தை கல்லாக்கி நிலைக்கச் செய்தானாம் சிற்பி
பருவத்தை சிலையாக்கி
அய்யோ அய்யோ
கண்ணதாசா
அடுத்த சரணத்தில் ஒரு வரி வரும்
“பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்”
பருவத்தின் சாறை கல்லில் கலையாக்கும் வித்தையை பாடலில் பந்தி வைப்பார் கண்ணாதாசன்
அநேகமாக இறுதி சரணம் என்று பார்க்கிறேன்
“அன்னமிவள் வயதோ பதினாறு
ஆண்டுகள் போயின ஆறு நூறு
இன்னும் இவள் முதுமை எய்தவில்லை
என்னதான் ரகசியம் தெரியவில்லை”
கீட்ஸ் ஜாடியில் உள்ள ஓவியத்தைப் பார்த்து கவிதை எழுதுகிறான்
கண்ணதாசன் மகாபலிபுரத்து சிலைகளைப் பார்த்து ஒரு திரைப்படத்திற்கு பாடல் எழுதுகிறார்
இசை சூப்பர்
நடனம் சிறப்பு
எல்லாம் கடந்து பிரச்சினை என்னவெனில்
Ode on a grecian urn கொண்டாடப்பட்ட அளவு ஏன் ”சிலை எடுத்தான்” கொண்டாடப்படவில்லை
ஒரு திரைப்படப் பாடல் உலகம் கொண்டாடிய ஒரு கவிதைக்கு கொஞ்சமும் சளைத்ததாக இல்லாமல்
நிமிர்ந்து நிற்கிறது
ஆனாலும் அது கொண்டாடப்பட வேண்டிய அளவிற்கு கொண்டாடப் படவில்லை
நம்மிடம் ஏதோ தவறு இருக்கிறது
மொழிபெயர்க்காத தவறாகவும் அது இருக்கக் கூடும்
#சாமங்கவிந்து 10 நிமிடங்கள்
17.06.2022

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...