Wednesday, June 8, 2022

அந்த ஆசிரியர் எனது சகோதரன் அந்த மாணவன் எனது பிள்ளை

ஒரு குட்டிக் காணொளி சமீபத்தில் மிக வைரலாகப் பரவியதோடுகாய்ந்துக் கிடந்த சமூக விறகடுக்கில் ஒரு தீக்குச்சியைக் கிழித்துப் போட்டது

 

அவ்வளவுதான்மொத்த சமூகமும் படபடவென எரியத் தொடங்கி விட்டது

 

ஒரு ஆசிரியரை அவரது வகுப்புக் குழந்தை ஒருவன் அசிங்கமாகப் பேசுவதும் தாக்க முயற்சிப்பதுமான காட்சி அந்த காணொளியில் இருந்தது

 

பெரும்பான்மை சமூகமும் மாணவர்களுக்கெதிராக வாளைச் சுழற்ற ஆரம்பித்து விட்டது

 

ஒரு ஆசிரியரை ஒரு குழந்தை அசிங்கமாகப் பேசுவதும்தாக்க முயற்சிப்பதும் நிச்சயமாக ஒரு பெருங்குற்றம்தான்

 

மொத்த சமூகமும் கவலைப்பட வேண்டிய குற்றம்தான்

 

சிலர் மிகுந்த கோவத்தோடு கோருவதுபோல் அந்தக் குழந்தகளுக்கு கடும் தண்டனையும் தேவைதான்

 

ஆனால்அந்தக் குழந்தைகளைத் தண்டிப்பதற்கு முன்னர் சிலவற்றை நாம் அனைவரும் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை

 

ஒரு ஆசிரியர் பாதிக்கப்பட்டதும் பெரும்பான்மையான சமூகம் அவரைத் தமது சகோதரனாக பாவித்து அவரோடு நிற்பதும் அவருக்காக குரல் கொடுப்பதும் ஒரு ஆசிரியரான எனக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது

 

அதற்காக கை எடுத்து வணங்கி எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

 

பாதிக்கப்பட்ட ஆசிரியரை சகோதரராகப் பாவிப்பதுபோலவே அந்தக் குழந்தையை நமது குழந்தையாகவே பாவிக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான கோரிக்கை

 

பாதிக்கப்பட்ட ஆசிரியர் நமது சகோதரர்

 

அந் மாணவன் நமது குழந்தை

 

என்கிற நிலையில் இருந்து கொஞ்சமும் பிசகாமல் இதைப் பரிசீலிக்க வேண்டும் என்பதே அனைவருக்குமான எனது அன்பான கோரிக்கை

 

அந்தக் குழந்தையின்மீது கடும் தண்டனையைக் கோருகிற கோவம்கூட வரலாம்ஒருபோதும் அந்தக் குழந்தையின்மீது ”உறவு துறப்பு” நோக்கி நகருமளவிற்கு வெறுப்பு வந்துவிடக் கூடாது

 

மாறாகஆசிரியர் மாணவர் உறவு ஏன் இப்படி நார் நாராய் கிழிந்து கிடக்கிறது என்பதையும்

 

ஏனிப்படி இவ்வளவு கோரமாய் அவ்வப்போது அது வெளிப்படுகிறது என்பதையும் உள்நுழைந்து கண்டுணர முயற்சிக்க வேண்டும்

 

மாணவர்கள்ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோமன ரீதியாகவோ தொந்தரவு தந்தால்மாற்றுச் சான்றிதழ்நன்னடத்தைச் சான்றிதழ்களில் என்ன காரணத்திற்காக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பதிந்து அவர்கள் நிரந்தரமாக பள்ளியில் இருந்து நீக்கப்படுவார்கள்

 

என்று 09.05.2022 அன்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் மரியாதைக்குரிய நமது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

 

ஆசிரியர்களுக்கு உடல்ரீதியாகவோமனரீதியாகவோ எந்தவிதமான பாதிப்பையும் எவரும் ஏற்படுத்திவிடக் கூடாது என்ற அவரது அக்கறைக்கு அடி மனசிலிருந்து எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

 

ஆனாலும் இதுகுறித்து அவரோடும் உரையாடுவதற்கு கொஞ்சம் இருக்கிறது

 

உடனடியாகப் பள்ளியைவிட்டு நீக்குவோம்மாற்றுச் சான்றிதழில் அவன் பள்ளியில் இருந்து நீக்கப்படுவதற்கான காரணத்தைப் பதிந்து தருவோம்” என்ற அமைச்சரது குரல் ஒரு கார்ப்பரேட் பள்ளியின் முதல்வருடைய குரலாகக் கேட்கிறது

 

ஏற்கனவே ஒருமுறை எழுதி இருக்கிறேன்ஆனாலும் தேவை கருதி மீண்டும் வைக்கிறேன்

 

15 ஆண்டுகளுக்கு முன்பு எம் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை ஒருவன் சரக்கடித்துவிட்டு வந்து வகுப்பில் வாந்தி எடுத்துவிட்டான்

 

பெண் குழந்தைகளின் பெற்றோர் அந்த மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்தால்தான் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு தொடர்ந்து அனுப்ப முடியும் என்றும்

 

அப்படி அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தங்கள் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ்களைத் தருமாறும் பிடிவாதமாக நிற்கிறார்கள்

 

நான் உள்ளிட்ட சில ஆசிரியர்கள் மாற்றுச் சான்றிதழ் தரக்கூடாது என்றும் மாணவனை சரிசெய்து கொள்ளலாம் என்றும் ஒற்றைக்காலில் நிற்கிறோம்

 

தலைமை ஆசிரியர் தடுமாறுகிறார்

 

ஒரு கட்டத்தில் மாற்றுச் சான்றிதழைக் கொடுத்துவிடலாம் என்ற முடிவுக்கு தலைமை ஆசிரியர் வருகிறார்

 

அப்போது குறுக்கிட்ட அந்த மாணவனின் தாய்

 

“TC கொடுங்க சாமி.

 

இது என்ன பள்ளிக்கூடம்னே தெரியலஒரு பய சரக்கடுச்சுட்டு ஸ்கூலுக்கு வந்து வாந்தி எடுத்துட்டான்னு அப்பா அம்மாவ கூப்டு திட்டறீங்க

 

ஒனக்கும் இந்தப் பள்ளிக்கும் சம்பந்தம் இல்லைன்னு TC தரோங்கறீங்க

 

வீட்டுக்கும்தான் சரக்கடிச்சுட்டு வரான்வாந்தி எடுக்கறான்.

 

என்னைக்காச்சும் யாருடா உங்க க்ளாஸ் சார்கூட்டிட்டு வாடானு சொல்றமா

 

இல்ல, ஒனக்கும் எங்களுக்கும் ஒறவந்துபோச்சு வீட்ட விட்டு கிளம்புன்னு தொறத்தறோமா?

 

நல்ல பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கறதுக்கு இல்ல ஸ்கூல்இதுமாதிரி தறுதலைங்களையும் திருத்தி சொல்லித் தரதுக்குதான் அது

 

நாங்களும் பெற்றோர்களிடம் கெஞ்சுகிறோம்

 

சம்மதிக்கிறார்கள்

 

அந்த மாணவன் முதுகலை படித்து இப்போது நல்ல சம்பளத்தில் அழகான குடும்பத்தோடு வாழ்கிறான்

 

எங்கள் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி

 

இதுவே கார்ப்பரேட் பள்ளியாக இருந்தால், அதன் தலைமை ஆசிரியர், விழுந்துகிடந்த அவனைத் தூக்கி வகுப்புக்கு வெளியே கொண்டு வருவதற்குள் மாற்றுச் சான்றிதழைக் கிழித்திருப்பார்

 

எனக்கு டிசிப்ப்ளின்தான் முக்கியம்ஏதாவது ஏடாகூடமா பண்ணின டிசிய கிழிச்சுடுவேன்கான்டக்ட் சர்டிஃபிகேட்ல கைய வச்சுடுவேன்

 

என்பதுதான் கார்பரேட் முதல்வர்களின் வழமையான குரல்.

 

அமைச்சருடைய குரலும் கார்பரேட் பள்ளி முதல்வர்களின் குரலோடு ஒன்றிணைவது கவலையைத் தருகிறது 

 

இன்னொரு பக்கம் இது கார்ப்பரேட் முதலாளிகளின் கோட்பாட்டுக் குரலாகவும் இருப்பது மிக மிக ஆபத்தானது

 

”கல்விக்கூடங்கள், முதலாளித்துவ வகுப்பு மனநிலையால் முழுமையாக ஆழ்த்தப்பட்டு விட்டன. முதலாளிக்கு கீழ்ப்படிந்த கை ஆட்களையும், திறமையான தொழிலாளிகளையும் வழங்குவதுதான் அவற்றின் நோக்கம்”

 

என்று 1918 இல் லெனின் கூறியதை அருள்கூர்ந்து அனைவரும் இந்தப் புள்ளியில் கவனத்தில் கொள்ள வேண்டும்

 

குடும்பத்திற்கு உகந்த ஒரு பிள்ளையாக, சமூகத்தைக் குறித்த அக்கறையையும், சமூகத்திற்கான தனது பங்களிப்பை ஒருபோதும் புறக்கனிக்காதவனாகவும் ஒருவனை உருவாக்க வேண்டிய பள்ளி

 

கார்ப்பரேட் முதலாளிகளுக்கான கை ஆட்களை உருவாக்குகிற வேலையை இன்னும் இன்னுமாய் வேர்பிட்டிக்கச் செய்கிற காரியத்திற்கே அமைச்சர் அவர்களின் அறிவிப்பு முன்னெடுக்கும்

 

தப்பு செய்தால் தூக்கி எறிவோம், மாற்றுச் சான்றிதழில் காரணம் குறிப்பதன் மூலம் வேறு எந்தப் பள்ளியிலும் சேர வாய்ப்பற்ற சூழலையும் அது உருவாக்கும்

 

இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்களைத் தாயாரிக்கும் பட்டறைகளாக பள்ளிகளை மாற்றும் என்பதை இப்போது நாம் உணராவிட்டால் மிகப்பெரிய சமூகச் சிக்கலை இது உருவாக்கும்

 

நெறிப்படுத்துதல் சமூகத்திற்கான மனிதனை உருவாக்கும்

 

தண்டனை முதலாளிகள் எதிர்பார்க்கும் தொழிலாளிகளை உருவாக்கும்

 

சகோதரி உமா என்ற ஒரு இளைய ஆசிரியை பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குழந்தையால் வகுப்பில் வைத்து கொலை செய்யப்பட்டார்

 

ஊடகங்கள்பொதுமக்கள் உள்ளிட்டு ஏறத்தாழ அனைவரும் மாணவர்களுக்கு எதிராகப் பொங்கினோம்

 

ஏதோ பிள்ளைகள் என்றாலே குறைந்த பட்சம் பொறுக்கிகள் என்பதாக ஒரு பொதுப் புத்தியை கட்டமைப்பதில் பலர் அப்போது வெற்றி கண்டனர்

 

அப்படி அன்று பொங்கியவர்களில் சிலருக்கு இன்றைய தேதியில் அன்று கொல்லப்பட்ட ஆசிரியையின் பெயர் மறந்து போயிருக்கும்

 

பலருக்கு அன்று அந்த ஆசிரியையை கொலை செய்த குழந்தையின் பெயர் மறந்து போயிருக்கும்

 

அநேகமாக அனைவருக்கும் அந்த வழக்கின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாது

 

அப்புறம் பாருங்கள்,

 

பெண் குழந்தைகளிடம் யாரோ சில ஆசிரியர்கள் தகாத முறையில் நடந்துகொள்ள,

 

ஆசிரியர்கள் அனைவரும் காமக் கொடூரன்கள் போலவும்கூட பொதுப்புத்தி கட்டமைக்கப்பட்டது

 

இன்றைய தேதியில் அந்த ஆசிரியர்கள் மீதான வழக்கின் நிலை குறித்தும் கவலையற்றுப் போனோம்

 

இப்போது எங்கள் சகோதரர்களிடம் சில குழந்தைகள் தகாத முறையில் நடந்துகொள்ள

 

அமைச்சர் இப்படியான ஒரு அறிக்கையை வெளியிடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது

 

இவற்றை தடுப்பதற்கு சில சட்டப் பாதுகாப்பு அனைவருக்கும் தேவைதான் என்பதை நான் மறுக்கவில்லை

 

ஆனால்,

 

பள்ளியில் இருந்து தவறு செய்யும் குழந்தைகளை நிரந்தரமாக நீக்கிவிட்டால் அவன் எங்கு சென்று தன்னை நெறிப்படுத்திக் கொள்வான்?

 

சகோதரி உமா கொலை செய்யப்பட்ட அன்று கேட்டதையே இன்றும் கேட்பதற்கான தேவை இருக்கிறது

 

சிரித்த முகத்தோடு வகுப்பிற்குள் எப்போதாவது ஆசிரியர்களால் நுழைய முடிகிறதா?

 

இறுக்கத்தோடு வகுப்பிற்குள் நுழைகிறோம்நம்மைவிட இறுக்கத்தோடு பிள்ளைகள் எழுந்து நின்று வணங்குகிறார்கள்இன்னும் கொஞ்சம் அதிகமான இறுக்கத்தோடு அவர்களை அமர்த்துகிறோம்.

 

பெரும்பாலும் இறுக்கமாகத்தான் பாடம் கற்பிக்கிறோம்.

 

இறுக்கமாக எழுந்துநின்று குழந்தைகள் நம்மை வழியனுப்ப இறுக்கத்தோடே வெளியேறுகிறோம்

 

இது ஏன் இப்படி என்று எப்போதேனும் சிந்தித்திருக்கிறோமாஇப்படி சிந்திப்பதற்கு நமது கல்வித் திட்டமும் தேர்வுகளும் எப்போதேனும் இடங்கொடுத்திருக்கிறதா?

 

உமா கொலை செய்யப்பட்ட அன்று என்ன நடந்தது?

 

வெளியிலிருந்து வகுப்பிற்குள் முதல் ஆளாக நுழைந்த பிள்ளை இர்ஃபானிடம் அந்தக் கொலைக்கான திட்டம் இருந்தது என்னவோ உண்மைதான்.

 

எப்போதும்போல் இல்லாமல் முதல் ஆளாக வகுப்பிற்குள் நுழைந்த இர்பானை சிரித்த முகத்தோடு அனைத்து வாழ்த்தி இருந்தால் ஒருக்கால் இப்போது சகோதரி உமா உயிரோடு இருந்திருக்கவும் கூடும்.

 

இப்படிக் கொண்டாடி பிள்ளைகளை வரவேற்கவிடாமல் நம்மைத் தடுப்பது எது?

 

30.01.1948 அன்று காந்தியார் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

 

நாடெங்கிலும் பார்ப்பணர்கள் தாக்கப்படுகிறார்கள்வேறெந்த மாநிலத்தையும்விட பார்ப்பணரல்லாதார் இயக்கம் வலுவாக உள்ள மண் தமிழ் மண்காந்தியாரின் கொலையை முன்னிட்டு தமிழ் மண்ணில் பிராமணர்கள் தாக்கப்பட்டுவிடக் கூடாது என்று துடிக்கிறார் பெரியார்.

 

31.01.1948 அன்று திருச்சி வானொலியில் உரையாற்றி மண்ணை அமைதிப் படுத்துகிறார்அதற்கு ஒன்றிரண்டு நாட்களில் திருவாரூக்கு அருகில் உள்ள சன்னாநல்லூரில் தந்தை பெரியார் உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது

 

அந்தக் கூட்டத்தில் பேசிய அன்றைய தேதியில் 14 வயதே நிரம்பிய அன்றைய சிறுவனான  கலைஞர் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார்.

 

வழக்கத்திற்கு மாறாக கலைஞரின் கருத்தை மறுக்கிறார் பெரியார்

 

சுட்டதற்காக நாம் துப்பாக்கிமீது ஆத்திரங் கொள்ளலாங்களா கருணாநிதி?” என்று ஆரம்பிக்கிறார்

 

காந்தியை சுட்டதற்காக ஆத்திரங்கொண்டு அந்தத் துப்பாக்கியை ஒடித்துப் போட்டால் கோட்சே வேறு ஒரு துப்பாக்கியை வாங்கிவிட மாட்டானா?

 

கோட்சேவைக் கொன்றாலும் இன்னுமொரு கோட்சேயை அவனது அமைப்பு உருவாக்கிவிடாதா?

 

அந்த அமைப்பை அழித்துப் போட்டாலும் அந்த சித்தாந்தம் இன்னொரு அமைப்பைக் கட்டி விடாதா? 

 

ஆகவே அந்த சித்தாந்தத்தோடு போரிட்டு அதை இல்லாமல் செய்ய வேண்டும் கருணாநிதி” என்கிறார் பெரியார்

 

பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியரின் சங்கடத்தை என்னால் உணர முடிகிறது.

 

இந்த நல்ல மனுஷனையா?” என்கிறரீதியில் பார்க்கப்படுகிற பரிதாபப் பார்வைகளே அந்த மனுஷனைக் கொன்று போடும்.

 

ஒட்டுமொத்த சமூகமும் அவரது பின்னால் நின்று அவரைப் பாதுகாக்க வேண்டும்.

 

ஆனால்அந்தக் குழந்தையை சிறைப்படுத்தியே தீரவேண்டும் என்பதல்ல அதன் பொருள்

 

கோட்சே கையில் இருந்த துப்பாக்கியை முறித்துப் போடுவதால் மட்டும் எப்படி கொலைகளைத் தடுக்க முடியாதோ 

 

தேபோல்தான்இந்த ஒரு குழந்தையை அல்லது சில குழந்தைகளைத் தண்டிப்பதன்மூலம் மட்டுமே பள்ளிகளில் எதிர்காலத்தில் இதுமாதிரி சம்பவங்களைத் தடுத்துவிட முடியாது

 

ஆசிரியர்கள் சிரித்துக்கொண்டே வகுப்பறைக்குள் நுழைகிற மாதிரியும் சிரித்துக்கொண்டே வாங்க சார் என்று பிள்ளைகள் நம்மை வரவேற்கிற மாதிரியும் ஒரு வகுப்பறைச் சூழல் வேண்டும்

 

பாடத்தை நடத்திக் கொண்டிருக்கும்போது குழந்தைகள் சிரித்துவிட்டால்,

 

என்ன அங்க இழிப்பு?”

 

என்பது மாதிரி எரிச்சல்களைத் தவிர்த்துகுழந்தைகளின் குதூகங்களினூடே பாடத்தை நகர்த்தும் பக்குவமும் பயிற்சியும் ஆசிரியர்களுக்கு அவசியம் வேண்டும்

 

அங்க என்ன சத்தம்?” என்பது மூன்று கெட்ட வார்த்தைகளின் மசாலாக் கூட்டு என்பதை உணர வேண்டும்

 

எந்த மந்திரமும்எந்த சூத்திரமும் இதற்கான தீர்வை ஒருபோதும் தராது

 

அதற்கு நீண்டதொரு உரையாடல் அவசியம்

 

ஆசிரியர்கள்அதிகாரிகள்மாணவர்கள்மாணவர் சங்கங்கள்ஆசிரியர் சங்கங்கள்கல்வியாளர்கள்கலைஞர்கள்பெற்றோர்கள்படைப்பாளிகள்கல்விமீது அக்கறை கொண்டோர் ஆகியோரை ஒருங்கிணைத்த ஒரு நீண்ட ஆழமான தொடர் உரையாடல் நிச்சயமாக இதற்கு ஒரு தீர்வைத் தரும்

 

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...