Sunday, July 29, 2018

அஜித் AV AV

அது அந்த நாளின் எட்டாவது பிரிவேளை. இயல்பாகவே அந்த நேரத்தில் சோர்வாகத்தான் இருக்கும். அதுவும் அன்றைக்கு கொஞ்சம் கடுமையான வேலை என்பதால் கொஞ்சம் அதிகப்படியான சோர்வோடு அமர்ந்திருக்கிறேன். அந்த நேரம் பார்த்து இரண்டு குழந்தைகள் கையை நீட்டி அனுமதி பெற்றவாறு உள்ளே வருகிறார்கள்.
அது தலைமை ஆசிரியர் அறை என்பதால் பெரிய குழந்தைகளிடம் காணாப்படும் எந்தவிதமான தயக்கமும் அவர்களிடம் இல்லை. அத்தனைக் கிலோவும் கபடு சூதற்ற வெகுளித்தனம்.
அந்தக் குழந்தைகளின் வருகை அத்துனை சோர்வையும் துடைத்துப்போட்டு புன்னகையை என் இதழ்களுக்கு கொண்டு வருகிறது.
”என்ன?” என்பதாகப் பார்க்கிறேன்.
”நான் ஏழாம் வகுப்பு பஸ்ட் லீடர், இது செகண்ட் லீடர்” தான்தான் லீடர், அவள் இல்லை. அவள் எனக்கு அசிஸ்டெண்ட்தான் என்பதை சொல்லாமல் சொல்லும் வித்தை அந்தக் குழந்தைக்கு வாய்த்திருக்கிறது. இதுவும்கூட தலைமைப் பண்பின் ஒரு கூறுதான்.
”சொல்லுங்க பஸ்ட் லீடர்”
என்னை அறியாமலே புன்னகை இன்னும் அதிகமாய் விரிகிறது.
“சார் இல்லாதப்ப பஸ்ட் லீடர்தான் சார் இடத்துல இருந்து சத்தம்போடாம பார்த்துக்கனும்னு எங்க சார் சொன்னாங்க. சாரும் இல்லாம பஸ்ட் லீடரும் இல்லைனா மட்டும்தான் செகண்ட் லீடர் பேரெழுதனும்னு சொன்னாங்க”
”சரிங்க பஸ்ட் லீடர். அத யாரு இல்லேனா இப்ப?”
“பசங்க எங்களுக்கு அடங்கவே மாட்டேங்கறாங்க. அடிச்சுக்கறாங்க. என்ன பஸ்ட் லீடர்ல இருந்தும் அத செகண்ட் லீடர்ல இருந்து எடுத்துடுங்க”
“ஏன் செகண்ட் லீடர் பேசவே மாட்டேங்கறாங்க?”
“பஸ்ட் லீடர் இருந்தா பஸ்ட் லீடர்தான் பேசனும்” எனக்கு சன்னமாக சிரிப்பு வந்துவிட்டது.
‘உங்க க்ளாஸ் சார்ட போய் சொல்லுங்க?”
“சார்தான் உங்களப் போய் பார்க்கச் சொன்னார்”
செல்வகுமார் பந்தை நம்மிடம் எறிந்துவிட்டு தப்பிக்கப் பார்க்கிறார் என்பது புரிகிறது.
அதற்குள் அவள் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்
அவளை அருகே அழைத்து தலையை வருடியவாறே,
”பஸ்ட் லீடர் அழக்கூடாது. யாரு அடங்கலன்னு சொல்லு அவன பிரிச்சி எடுத்துடலாம்”
”கருணைராஜா AV, அஜீத் AV AV”
”கருணைராஜா AV என்றால் கருணை ராஜா அடங்கவில்லை என்று புரிகிறது. அது என்னங்க லீடர் அஜீத் AV AV?”
“அஜீத் அடங்கவில்லை அடங்க வில்லை”
“புரியல”
பேசறவங்க பேரெல்லாம் போர்டுல எழுதியிருப்பேனா. அதுல கருணைராஜா பேரும் இருதுச்சுன்னா அவன் அவம்பேர அழிச்சுடுவான். அதனால அவன் AV.“
“அஜீத் மட்டும் ஏன் AV AV?”
“அதுல அவன் பேரும் இருந்துச்சுன்னா அஜீத் எல்லார் பேரையும் அழிச்சுடுவான். அதனால அவன் AV AV”
சத்தமாய் சிரித்து விட்டேன். அந்தக் குழந்தையை அருகில் இழுத்து அணைத்துக் கொள்கிறேன்.
“இங்கே வா சாமி. வெளியே எத்தனை மரம் இருக்கிறது என்று பார்”
வெராண்டாவரை போய் எண்ணிப் பார்த்துவிட்டு ’ஆறு’ என்கிறாள்.
அதில் எந்த மரத்தில் கருணைராஜாவைக் கட்டி வைக்கலாம் என்று கேட்டதும் மீண்டும் வெராண்டா போய் பார்த்துவிட்டு வந்து ’அந்த மொதோ வேப்ப மரத்துல’ என்கிறாள். ’சரி அஜீத்தை எந்த மரத்துல கட்டலாம்?’, அவனையும் அதே மரத்துல கட்டலாம் என்கிறாள்.
”அது எப்படி பாப்பா ரெண்டு பேரையும் ஒரே மரத்துல கட்டிவச்சா பேசிக்கிட்டே இருப்பாங்களே” என்று சொன்னதும் மீண்உம் வெளியே போய் பார்த்துவிட்டு வந்து ‘அவனை மூன்றாவது மரத்துல கட்டலாம்’ என்கிறாள்.
சரி இப்போது கயிறு இல்லை என்றும் நாளை வீட்டிலி இருந்து கயிறு கொண்டு வந்து மரத்துல கட்டி வச்சு தோள உரிச்சு எடுத்துடலாம் என்று ஒரு வழியாக சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தேன்.
அடுத்த நாள் வருகிறது அந்த இரு குழந்தைகளையும் எப்படி சமாளிப்பது என்று தெரியாதவனாக பள்ளிக்கு போகிறேன் அந்த இரண்டு குழந்தைகளையும் அழைத்து வரச் சொல்லலாம் என்று நினைக்கிற போது அந்த இரண்டு குழந்தைகளும் என் அறைக்கு வருகிறார்கள்.
நான் சிரித்தபடியே பஸ்ட் லீடர், அத ரெண்டு கழுதைகளின் கட்டி போட்டுடலாம். இன்னைக்கி கயிறு எடுத்துட்டு வரல. நாளைக்கு எடுத்துட்டு வந்து விடுகிறேன் என்று சொல்கிறேன்.
அந்தக் குழந்தைகள் சிரித்தபடியே
”அவங்களை கட்டி போட வேணாம் சார்”
“ஏங்க பஸ்ட் லீடர்?”
“அவிங்க எங்களுக்கு ப்ரண்ட் ஆயிட்டாய்ங்க”
“ஆஹா”
“நாளைக்கு மீனாவையும் முருகனையும் கட்டிப் போடுங்க சார்”
”இவங்கள ஏன் நேத்து சொல்லல?”
”ரெண்டு பேர சொன்னப்பவே போரடிச்சுது. அதான் சொல்லல”
சிரித்துக் கொண்டே, “மீனாவையும் முருகனையும் நாளைக்கு பிரிச்சு எடுத்துடலாம்”
சிரித்துக் கொண்டே ஓடி விட்டார்கள்.
எனக்குத் தெரியும் நாளைக்குள் அவர்களும் ப்ரண்டாயிடுவாங்க.
குழந்தைகள் தினமும் தினமும் என்னை ஆசிர்வதித்தபடியே இருக்கிறார்கள்
நன்றி: வண்ணக்கதிர்
29.07.2018

26.07.2018

மாண்புமிகு பன்னீர்செல்வம் அவர்கள் மிகுந்த அதிகாரம் மிக்கவர். தனக்கிருக்கக்கூடிய அதிகாரத்தை தனக்காக எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற நுட்பம் அறிந்தவர்.
ஆனானப்பட்ட நிர்மலா அம்மையாரையே தான் சொன்னதை செய்துதர வைக்கும் வித்தை தெரிந்தவர்.
கீழடியிலிருந்து திரு அமர்நாத் அவர்களை இடம் மாற்றம் செய்த சில நாட்களில் மாண்புமிகு நிர்மலா அவர்கள் கீழடி வருகிறார். அப்போது அங்கு கூடிய பொதுமக்கள் அவரை மறித்து ஒழுங்காகவும் நேர்மையாகவும் பணியாற்றிக் கொண்டிருந்த திரு அமர்நாத் அவர்களை ஏன் மாற்றினீர்கள் என்று கேட்டபொழுது வலது கையை வேகமாக நீட்டி எதிரே இருந்தவர்களை அறைந்துவிடுகிற மாதிரியானதொரு கோவத்தில் ,
“ஏன் அந்த ஆளு மட்டும்தான் வேலை பார்ப்பாரா?” என்று அவர் கத்திய தோற்றம் அவர் எவ்வளவு பயங்கரமானவர் என்பதைக் காட்டியது
குரங்கணி தீப்பிடித்தது. அங்கு சிக்கிக் கொண்ட குழந்தைகள் கருகிய போதுகூட ராணுவ ஹெலிகாப்டர் ஆம்புலன்சை அனுப்ப மறுத்தவர்
மீனவர்கள் கடலில் செத்து மிதந்தபோது குற்றுயிராக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களைக் காப்பாற்றுவதற்காக ராணுவ ஹெலிகாப்டர்களைத் தர மறுத்தவர்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்காக
பிரதமர் ஒரு இரங்கலைக்கூட சொல்லவில்லையே என்று சென்னை வந்த அவரிடம் வினவியபோது,
“அப்படியா, அவரிடம் கேட்டு சொல்கிறேன்” என்று கோவமும், பகடியும், ஆணவமும் ஒரு சேர கூறியவர்
அவர் இவ்வளவு ஆணவத்தோடு நடந்து கொண்டதற்கு காரணம் பாதிக்கபட்டவர்கள் தமிழ் பேசுகிறவர்கள் என்பது.
தன் தம்பி பாலமுருகனை மதுரையிலிருந்து சென்னை மருத்துவ மனைக்கு அழைத்துப்போக ராணுவ ஹெலிகாப்டர் அம்புலன்சை அனுப்ப வைத்து ஆனானப்பட்ட நிர்மலா அவர்களின் பதவிக்கே சிக்கலைக் கொண்டு வந்திருப்பவர்
அவரின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின்மீது விசாரனை ஆரம்பமாகிவிட்டது என்று முதல்வர் கூறியிருக்கிறார்
இந்தச் சூழலில் சக்தி வாய்ந்த நிர்மலா அவர்களையே தனக்காக சட்டத்திற்கு புறம்பான காரியத்தை செய்ய வைத்த பன்னீர் அவர்களின் முன் சாமானிய சாட்சிகளும் வழக்கறிஞர்களும் என்ன பாடு படுவார்கள்?
எனவே இந்த வழக்கு முடியும்வரை அவரை பதவி நீக்கம் செய்வதுதானே முறை.
*******************************
மரியாதைக்குரிய மாறன் சகோதரர்களை சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிராக CBI சென்னை உயர்நீதின்றத்தில் ‘மறுசீராய்வு மனு’வினை (REVITION PETITION) உயர்நீதிமன்றம் விசாரனைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. விசாரித்த நீதியரசர் திரு ஜெயச்சந்திரன் அவர்கள் ஒரு இடத்தில்,
“the special court had discharged all seven accused from the case though maran brothers and mr.kannan had not filed discharge petitions at all. nevertheless the trio had participated in the hearing on the discharge plea of the other accused and therefore the lower court came to the conclusion that all of them were entitled to the benefit " (THE HINDU 26.07.2018)
என்கிறார்.. இதைத் தமிழ்ப்படுத்தினால்
”மாறன் சகோதரர்களும் திரு கண்ணன் அவர்களும் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று முறையிடாத போதும் மற்றவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி தொடுத்த முறையீட்டின் மீதான விசாரனையில் இவர்களும் வந்து அமர்ந்திருந்ததால் அவர்களையும் சேர்த்து விடுவித்திருக்கிறது”
ரெண்டு விஷயம்
1) விடுவியுங்கள் என்று மனுவே தராதவரையும் நீதிமன்றத்திற்கு வந்தார்கள் என்பதற்காகவே விடுவித்த சிறப்பு நீதி மன்றத்தின் பெருந்தன்மை
2) எதற்கும் கவனமாக இருங்கள் நீதியரசர் அவர்களே
***********************************
”பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் இலக்கு. அதற்காக மாநில கட்சியின் பிரதமர் வேட்பாளாரையும் ஏற்போம்” என்று கூறியிருக்கிறார் திரு ராகுல்
அதை தேர்தலுக்குப் பிறகு பார்க்கலாம் ராகுல்.
ஆனால் இதுதான் சரியான பார்வை. தேர்தலுக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகள் கூடி யார் பிரதமர் என்பதை முடிவெடுங்கள்.
ஒற்றுமையாய் ஒன்றாய் ஒரு செயல்திட்ட முன்வரைவோடு தேர்தலை எதிர் கொள்ளுங்கள். தேர்தலுக்குப் பின் அதை செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்
என் வாழ்த்துக்களும் வணக்கமும் ராகுல்.
#சாமங்கவிய 42 நிமிடங்கள் இருக்கும்போது

Saturday, July 28, 2018

21.07.2018

விடுமுறை நாளொன்றில் பக்கத்து ஊரில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்றான் அந்தச் சிறுவன். நாள் முழுவதும் பாட்டி வீட்டில் உண்டு விளையாடி மகிழ்ந்துத் திளைத்திருந்த அந்தப் பிள்ளை மாலை அவனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்..
கடலரண் சுவர்மேலே (DYKE) நடந்து வந்து கொண்டிருந்தான். அடிக்கடி கடல்நீர் ஊருக்குள் புகுந்து சேதாரத்தை ஏற்படுத்தும் பகுதிகளில்தான் அது உண்டாக்கும் பேரழிவுகளில் இருந்து அந்த ஊர்களைக் காக்கவே கடலரண் கட்டப்படும் என்ற அடிப்படை உண்மையை அவனது ஆசிரியைகளும் தாயும் பாட்டியும் அவனுக்கு பலமுறை சொல்லியிருக்கிறார்கள்.
“அந்த சொவரு உடஞ்சா நம்ம ஊரு அழிஞ்சு போயிடும். நம்ம ஊரின் உசிரே அந்தச் சுவருதாண்டா” என்று அவனது பாட்டி அந்தச் சுவரின் முக்கியத்துவத்தை அவனுக்கு சோறோடு சேர்த்து ஊட்டியிருந்தாள்
அன்று அவன் நடந்து கொண்டிருக்கும்போது அந்த சுவரில் ஒரு சிறிய துவாரம் ஏற்பட்டு அதன் வழியாக நீர் கசிந்து கொண்டிருப்பதைப் பார்ப்பான். நேரம் போகப் போக ஓட்டைப் பெரிதாகும். ஒரு புள்ளியில் அது சுவரை உடைக்கும். அப்படி உடைத்தால் கடல்நீர் ஊருக்குள் நுழைந்து ஊரை அழித்துவிடும் என்று பயந்தான். எப்படியேனும் நிகழப்போகும் ஆபத்தில் இருந்து அந்த ஊரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தான்.
உடனே கீழே இறங்கி அந்த்த் துவாரத்தில் தனது சுண்டு விரலை நுழைத்தான். நீர் நின்றது. ஆனால் கொஞ்ச நேரத்தில் அவனது விரல் அடைப்பையும் தாண்டி நீர் கசிந்த்து. சுண்டு விரலை எடுத்துவிட்டு மோதிர விரலை வைத்து அடைப்பான். அது தாண்டியும் நீர் வரவே கட்டை விரலை வைப்பான், பிறகு இரண்டு விரல்கள், ஒரு கட்டத்தில் கையை நுழைத்து அடைப்பான்.
நிரின் குளிர்ச்சி கையை விறைக்கச் செய்ய்துவிடும் . அப்படியே மயங்கி போவான்.
இதற்கிடையே பாட்டி வீட்டிற்கு போன குழந்தை வரவில்லையே என்று ஊரே திரண்டு அவனைத் தேடி ஒரு வழியாக விடியற்காலை அவனைக் கண்டு பிடிப்பார்கள்.
உண்மை புலப்படும். அரணைப் பழுது பார்ப்பார்கள். அவைச் சுமந்து கொண்டுபோய் மருத்துவம் பார்த்து விழா எடுத்துக் கொண்டாடுவார்கள்.
இது ஒன்றாம் வகுப்பில் நாம் படித்த கதை.
எது கசிந்தாலும் அது ஆபத்தை கொண்டு வரும். கசிவது நீர் என்றாலும் எண்ணை என்றாலும் வேறு எதுவென்றாலும் அது நல்லது அல்ல. எண்ணெயும் நீரும் கசிந்தாலே ஊர் அழிந்து போகும் என்றால் ரகசியம் கசிந்தால் எவ்வளவு பேராபத்து விளையும் என்பதை சொல்லவும் தேவையில்லை
சமீபத்தில் ஆதார் அட்டைகளின் ரகசியங்கள் விலைக்கு தரப்பட்டன என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரவர் ரகசியம் அவரவர் உரிமை. அதில் தலையிடுவதே தவறானது எனில் அதைத் திருடி அடுத்தவருக்கு விற்பது எவ்வளவு பெரிய குற்றம்.
2018 ஆம் ஆண்டு ஏறத்தாழ 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதியுள்ளனர். இவர்களில் சுமார் 2 லட்சம் மாணவர்களுடைய தேர்வு விவரங்களும் முகவரிகளும் தொலைபேசி எண்களும் அவர்களுடைய பொருளாதார பின்னணியும் குறித்த தகவல்கள் விற்பனைக்கு கிடைப்பதாக கிடைத்திருக்கக் கூடிய தகவல் ஒவ்வொரு குடிமகனையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கவே செய்யும்.
மேற்சொன்ன தரவுகளை ஏதோவொரு இணையதளம் கைப்பற்றி வைத்திருப்பதாகவும் 2 லட்சம் தரக்கூடியவர்களுக்கு அந்த 2 லட்சம் குழந்தைகளின் தரவுகளை அவர்கள் விற்றுக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அதை இன்னொரு ஊடக நிறுவனம் விலை கொடுத்து வாங்க பேரம் பேசிய போது தரப்பட்ட சேம்பிளை சோதித்துப் பார்த்தபோது அத்தனையும் உண்மை என்பது புலப்பட்ட்தாக அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளதாக இன்றைய தீக்கதிர் கூறுகிறது.
இரண்ட் லட்சம் குழந்தைகளின் தரவுகள் இரண்டு லட்சம் ரூபாய். எனில் ஒரு குழந்தை பற்றிய தகவலின் விலை ஒரு ரூபாய் என்று ஆகிறது.
இதை விற்பதால் என்ன பெரிய லாபம் வந்துவிடப்போகிறது என்ற கேள்வி எழக்கூடும்.
இதை வாங்குவதால் யாருக்கு என்ன லாபம்? இதை யார் பெறப் போகிறார்கள்
இந்தக் குழந்தைகளில் பெரும்பான்மையோர் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அல்லது நீட் தேர்வில் வெற்றி பெற்று போதுமான அளவு மதிப்பெண் இல்லாத காரணத்தினால் மருத்துவ கல்லூரிகளில் இடமில்லாது போனவர்கள்
இப்பொழுது ஆள்சேராத தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒரு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்தால் நீட்டில் வெற்றி பெற்று அதேவேளை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது தவிக்கும் குழந்தைகளின் முகவரிகளும் அலைபேசி எண்களும் அவர்களது பொருளாதார பின்புலமும் அந்த கல்லூரிகளுக்கு கிடைத்துவிடும். அவர்கள் அந்த குழந்தைகளுள் வசதி படைத்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அணுகி தங்கள் கல்லூரியில் அந்த குழந்தைகளுக்கு இடமளிப்பதாக பேரம் பேசி பணத்தை கறந்து கல்லூரிகளை மாணவர்களால் நிரப்புவதன் மூலம் தங்களது கல்லாக்களை பிதுங்க பிதுங்க நிரப்பிக் கொள்வார்4கள்.
இன்னும் சில கல்லூரிகள் பணம் இல்லை என்று சொன்னாலும் பரவாயில்லை வங்கி கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று ஆசை காட்டத் தொடங்கி விடுவார்கள். வங்கிகளும் இதுபோன்ற கல்லூரிகள் அனுப்பும் கடன் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து அதைவிட சிக்கிரமாய் கடனை வழங்கிவிடுகின்றன. இதற்குரிய தரகுத் தொகை அந்த கல்லூரி களிடமிருந்து மிகச் சரியாகப் போய்விடும்.
இது ஒருபுறமிருக்க நீட்டில் தோற்றுப்போன அதே நேரம் பணவசதியும் மருத்துவ படிப்பின் மீதான பேராசையும் கொண்டுள்ள மாணவர்களின் முகவரிகளையும் தொலைபேசி எண்களையும் நீட்டிற்கான பயிற்சியினை வழங்கும் நிறுவனங்கள் பெற்றுவிடுகின்றன. பிறகு அவர்கள் அந்தக் குழந்தைகளை அணுகி அவர்களை மூளைச் சலவை செய்து தங்களது பயிற்சி நிறுவனத்திற்கு இழுத்து வந்து விடுகிறார்கள்.
இப்படியாக நீட் தேர்வு எழுதியவர்களின் விபரங்களை ஏதோ ஒரு வகையில் பச்சையாக சொல்லப்போனால் தேவையான அளவு லஞ்சம் கொடுத்து பெற்று ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இரண்டு லட்சத்திற்கு விற்பதன் மூலம் பல நூறு கோடிகளை ஒவ்வொரு வருடமும் சுருட்டி விடுவதற்கு இவர்களுக்கு ஏலும்.
ஒரு குடிமகனின் ரகசியத்தை அவன் பாதுகாப்பதற்கு உரிய சூழலை உருவாக்கித் தருவது ஒரு நல்ல மக்கள் அரசின் கடமையாகும்.
அப்படி ஏதோ ஒரு குடிமகனின் ரகசியம் யாரோ ஒருவரால் களவாடப்படும் என்றால் களவாடிய அவனை நீதிமன்றத்தில் நிறுத்தி அவனை சிறை ப்படுத்த வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உண்டு.
ஆனால் இங்கு அரசிடம் கையளிக்கப்பட்ட குழந்தைகளின் ரகசியங்கள் களவாடப்பட்டு விற்கப்பட்டு கல்லாக்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன.
அது என்ன அவ்வளவு பெரிய ராணுவ ரகசியமா என்று பொதுவாக சொல்வது உண்டு. எந்த ஒரு தனிமனிதனின் ரகசியம் ரகசியமும் ராணுவ ரகசியத்திற்கு ஈடானதுதான். ராணுவத்திற்கு ராணுவ ரகசியம் எவ்வளவு முக்கியமோ ஒரு தேசத்திற்கு அந்த தேசத்தின் ரகசியம் எவ்வளவு முக்கியமோ அதற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல ஒரு தனிமனிதனுக்கு அவருடைய ரகசியம்.
தேசத்தின் ரகசியத்தை அல்லது ராணுவத்தின் ரகசியத்தை கைப்பற்றி அயல் நாட்டுக்கு கடத்தும் ஒரு கயவனுக்கு என்ன தண்டனையோ அதற்கு கொஞ்சமும் குறையாத ஒரு தண்டனையை நீட் தேர்வு எழுதிய இந்தக் குழந்தைகளின் ரகசியத்தை கைப்படுத்தி கசிய செய்தவர்களுக்கும் வழங்க வேண்டும்.
நீர் கசிந்தது. அந்தப் பிள்ளை கைவைத்து அடைத்தான். நீர் கசிந்தால் ஊர் அழியும் என்று அந்தப் பிள்ளைக்குத் தெரிந்திருந்த்து.
ரகசியங்கள் கசிகின்றன. ரகசியங்கள் கசிந்தால் தேசம் தன் இறையாண்மையை இழக்கும் என்றும் நமக்குத் தெரியும்.
நாமென்ன செய்யப் போகிறோம்?
#சாமங்கவிய இரண்டு நிமிடம் இருக்கிற பொழுது
21.07.2018

20.07.2018

இது நிச்சயமாக ராகுலின் தினம்.
எனில், நிச்சயமாக இது காங்கிரசின் தினம்.
ஆமாம், இன்று பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி அவர்களின் உரையானது பிரதமர் மோடி அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாத ஒரு உரையாக இருந்தது. உண்மையை சொல்லப்போனால் காங்கிரஸ்காரர்களே பாராளுமன்றத்தை ராகுல் இப்படி தெறிக்கவிடுவார் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திருமதி சோனியா பூரிப்பின் உச்சத்திற்கே சென்றிருப்பார். தொடர்ந்து தோற்றுக் கொண்டு இருந்த பிள்ளை. 'சிறுபிள்ளை ஒருபோதும் வெள்ளாமையைக் கொண்டு வந்து சேர்க்கப் போவதில்லை' என்றும் கட்சிக்கு உள்ளும் வெளியும் இருந்து வரும் நக்கல் கலந்த விமர்சனங்களைக் கேட்டுக் கேட்டு நொந்துபோயிருந்த அந்தத் தாய்க்கு “இன்றை” பரிசளித்திருக்கிறார் ராகுல்.
ஆனால் நமக்கு அப்படி இல்லை. தோழர் ஜோதிமணியுடனான உரையாடல்கள் ஊடகங்களின் வழியாக நாம் அறிகிற சராசரி ஆளுமை அல்ல ராகுல் என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தன. அதை Kaakkai Cirakinile வில் எத்தனையோ முறை எழுத நினைத்து தட்டிப் போயிருக்கிறது. அதை அவர் இன்று வெளிப்படுத்தி இருக்கிறார்.
முப்பது ஆண்டுகளாக உரையாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் அவரது உரையின் செறிவும் உடல்மொழியும் மிகத் தேர்ந்த ஒரு தலைவனுக்குரியது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.
பாதி அவைக்கும் மேல் பெருங்குரலெடுத்து இவரது உரைக்கெதிராக கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்போது எங்கு நிறுத்த வேண்டுமோ அங்கு நிறுத்தி எவ்வளவு நிறுத்த வேண்டுமோ அவ்வளவு நிறுத்தி அந்தப் பெருங்கூச்சலை தவிடுபொடி ஆக்கியிருக்கிறார் ராகுல்.
அனைத்தையும் பேச முயன்று வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆணவத்தின் உச்சியிலேயே எப்போதும் அமர்ந்திருக்கும் மோடியை மோதி நொறுக்கிப் பொடியாக்கி தேசத்தின் எட்டுத் திக்கிலும் ஊதித் தள்ளியிருக்கிறார். ஒவ்வொரு மேடையிலும் அழுவார் பொய் சொல்வார் கைகளை விரித்து கதை சொல்வார் மோடி. அவற்றின் எந்த ஒரு புள்ளியிலும் உண்மை இருக்காது. ஆனால் இன்றைக்கு மோடியின் முகத்தில் தெரிந்த பதட்டம் உண்மையானது. இந்த வகையில் மோடியின் உண்மையான முகத்தை உலகுக்கு காட்டிய ராகுலை தேசமே கொண்டாடுகிறது.
தன் கண்களைப் பார்க்கிற தைரியம் பிரதமருக்கு இல்லை என்று ராகுல் கூறியது ரசனை கலந்த அரசியல் தெறிப்பு.
வழக்கமாக கைகளை நீட்டி ஆவேசமாக எதையாவது பேசும் திருமதி நிர்மலாவை அவர் நேர்கொண்டதும் பதறிப்போன நிர்மலா அதே கைநீட்டலோடு ராகுலை எதிர்கொள்ள முயன்றதும் கண்கொள்ளாக் காட்சிகள்.
வழக்கமாக பாரதிய ஜனதாக் கட்சி தாக்குதலை நிகழ்த்தும் காங்கிரஸ் தற்காத்தலை நிகழ்த்தும். இன்று அது தலை கீழாக மாறியிருக்கிறது.
திருமதி நிர்மலாவை இவ்வளவு பதறிக் கதற வைத்த்தற்காக ராகுலுக்கு தமிழ் மண்ணின் சிறப்பு நன்றி.
எல்லாம் போக ராகுல் எவற்றை எல்லாம் சாடினாரோ அதே சாடல்களுக்கு கடந்த கால காங்கிரசும் தகுதி பெற்றதே.
நான் விரும்புகிறேனோ இல்லையோ யார் விரும்புகிறார்களோ இல்லையோ இந்த நாடு ஒருநாள் ராகுலின் கைகளுக்குள் வரும். அப்போது இந்த சாடல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆட்சியைத் தர வேண்டும்.
இது ராகுலின் தினம்.
இது காங்கிரசின் தினம்.
இதை எதிர்க் கட்சிகளின் தினமாகவும் மாற்ற வேண்டும்.
காங்கிரசும் எதிர்க் கட்சிகளும் இன்றை தமதாக்கிக் கொண்டால் தேசம் கொஞ்சம் பிழைக்கும்.
அன்பும் முத்தமும் நன்றியும் ராகுல்
#சாமங்கவிய 23 நிமிடங்கள் இருந்தபொழுது

Friday, July 27, 2018

19.07.2018

இன்று மிக மகிழ்ச்சியான ஒரு சம்பவத்தைப் பந்தி வைத்துவிட்டு படுக்கப் போகலாம் என்றிருந்தேன்.
தட்டலாம் என்று முகநூலைத் திறந்தால் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் இரண்டைப் பார்க்க நேர்கிறது.
அந்த சம்பவத்தை காக்கைச் சிறகினிலே கடைசி பக்கத்தில் வைத்து விடுகிறேன்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் தோழர் கலை மணிமுடி அவர்கள் காலமானார் என்ற செய்தி ஒன்று.
ஆகச் சமீபத்தில்கூட அவரது பதிவுகளைப் பார்க்க முடிந்தது. மிக நல்ல தோழர். கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஏதோ கல்வி குறித்த தனது பதிவில் கல்வித்துறையில் உள்ள ஏதோ ஒரு பிரச்சினைக்கெதிராக கல்வியாளர்கள் ஒன்று திரள வேண்டும் என்றும் அதற்கான ஒருங்கிணைப்பை இவர்கள் செய்யலாமே என்றும் சொல்லியிருந்தார். அந்த இரண்டோ அல்லது மூன்றோ ஆன இவர்கள் பட்டியலுள் நானும் இருந்தேன்.
அவரோடு அது குறித்து உரையாட விரும்பி அவரது எண் கேட்டு அவரது இன்பாக்சில் அணுகினேன். இன்றுவரை அதை தோழர் பார்க்கவே இல்லை.
அடுத்தடுத்து பிரச்சினைகள் வந்துகொண்டே இருப்பதால் அவர் குறிப்பிட்ட பிரச்சினை மறந்து போனது.
எண் கேட்டு நான் அவரை அணுகிய நாளில் அவரது பதிவைப் பார்த்தால் அது என்ன என்று புரிந்துவிடும்.
அவர் விரும்பிய அந்த தலையீட்டினை செய்ய முயற்சிப்பேன்.
அதுதான் அவருக்கான அஞ்சலியாக இருக்கும்.
இதுவரைக்குமான உங்களது மக்களுக்கான செயல்பாடுகளுக்கு என் சார்பிலும் காக்கை சார்பிலும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் தோழர்.
********************************
எந்த ஊர், எந்தப் பள்ளி என்று தெரியவில்லை. ஆனால் எனது இன்றைய தூக்கத்தைக் கெடுப்பதற்கு கிடைக்கிற செய்தியில் போதாமை இருக்கிற அந்தச் செய்தி போதுமானதாக இருக்கிறது.
ஏதோ ஒரு பள்ளியில் ஒரு தலித் சத்துணவு அமைப்பாளராகவோ அல்லது சமையல்காரராகவோ இருக்கிறார். வந்திருக்கிற செய்தியின் அடிப்படையில் இருந்து பார்த்தால் அவர் சமையல் செய்பவராகத்தான் இருக்கக் கூடும். எது வாகவோ இருக்கட்டும். அது பிரச்சினையில்லை.
ஒரு கீழ்சாதிப் பெண் சமைக்கும் உணவை எம் பிள்ளைகள் உண்பதா? அதை ஏற்கவே மாட்டோம். அவர் அந்தப் பள்ளியில் இருந்தால் அந்தப் பள்ளிக்கு எம் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என்று சிலர் சொல்லவே அந்த ஊழியரைப் பணியிட மாற்றம் செய்திருப்பதாக அறிய முடிகிறது.
இன்னொரு ஊருக்கு அவரை மாற்றினாலும் அங்கும் ’அந்த மக்கள்’ இதையேதான் செய்வார்கள்.
சரியின்று இதை அனுமதித்தால் நாளை ,”கீழ்சாதி வாத்தியார்” எம் பிள்ளைகளுக்கு சொல்லித்தருவதா என்று கிளம்புவார்கள்.
பிறகு மருத்துவர்களிடம் வருவார்கள்.
இதுதான் அவர்களாது நீண்ட கால செயல் திட்டம்.
நீ எப்படியோ கஷ்டப்பட்டு மருத்துவம் படி. அதை எங்களால் தடுக்க முடியாது. ஆனால் உம்மை நோயாளிகள் அணுகாத மருத்துவர்களாக எங்களால் மாற்ற முடியும் என்று கொக்கரித்து கிளம்புவார்கள்.
தலித் கடை வைக்கலாம். வாங்க வர மாட்டார்கள். சரி தலித் கடையில் தலித் வாங்கலாம் என்றால் அதுவும் முடியாது.
தகுதி பெறுங்கள். எங்களால் தடுக்க முடியவில்லை. ஆனால் உங்கள் தகுதியை முடக்கிப் போட எங்களால் முடியும் என்று பச்சையாக கூறுகிறார்கள்.
அவர்தான் சமைப்பார் பிள்ளைகளை அனுப்புவதும் அனுப்பாததும் உங்கள் இஷ்டம் என்பது கூட தவறுதான். ஆனால் குறைந்த பட்சம் அதையாவது இந்த அரசு செய்ய முன்வர வேண்டும்.
நேர்மையான செயல்பாட்டை இந்த அரசு செய்ய விரும்பினால் தலித் சமைத்தால் எம் பிள்ளைகளை ப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று சொன்ன குற்றத்திற்காக அவர்களைக் கைது செய்ய வேண்டும்.
#சாமங்கவிந்து ஒரு மணி பத்து நிமிடங்களை ஒட்டி

Thursday, July 26, 2018

17.07.2018

அந்தக் குழந்தையை பதினேழுபேர் வண்புணர்ந்திருக்கின்றனர்
ஏழு மாதங்களாகத் தொடர்ந்து வன்புணர்ந்திருக்கின்றனர்
கத்தியைக் காட்டி மிரட்டி அந்தப் பிஞ்சை வன்புணார்ந்திருக்கின்றனர்
வன்புணரப்பட்டக் குழந்தை ஒரு மாற்றுத் திறனாளி
இந்த வழக்கில் அந்தப் பதினேழுப் பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் வழக்காடப் போவதில்லை
அவர்களை நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்ல வேண்டும்
ஏழு மாதங்களாக ஒரு சின்னஞ்சிறு பிள்ளையை கூட்டாக வன்புணர்ந்திருக்கிறார்கள் என்பதறிந்த பிறகும் எப்படி சிலர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்
என்றெல்லாம் வரும் பதிவுகள் நம் நெஞ்சைக் கிழிக்கின்றன
இப்படி ஏதோ ஒரு குழந்தை வன்புணரப்படாத ஏதேனும் ஒரு மாதம் ஆகச் சமீபத்தில் நம்மைக் கடந்து சென்றிருக்கிறதா?
நாம் கொந்தளித்து அவற்றிற்கெதிராக எப்போதாவது எதிர்வினையாற்றாது இருந்திருக்கிறோமா?
தொடர்ந்து எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதற்காக இந்த வெறித்தனம் நின்றுபோயிருக்கிறதா?
குறையவில்லை என்பதால் நம் எதிர்வினையும் கண்ணீரும் பொருளற்றது அல்லது பலமற்றது என்று கொள்ள முடியுமா?
இவற்றுக்கான வேர்க்காரணங்கள் குறித்து நாம் கவனம் குவிக்கவோ எஜுகேட் செய்யவோ நாம் தவறியிருக்கிறோம்
நமது கோவத்தையும் அழுகையையும் கொட்டித்தீர்த்துவிட்டு நகர்ந்து விட்டோம்
இந்தக் கேவலமான வெறியோடு திரிந்த பதினேழுபேரும் எப்படி ஒருங்கிணைந்தார்கள்?
இவர்களை ஒன்றிணைத்த மையச் சரடு எது?
இந்த அசிங்கமான வெறியை எப்படி ஒருவர் மற்றவருக்கு கடத்தினர்?
இன்னும் பச்சையாக சொல்வதெனில் இவர்கள் எப்படித் தங்களை அடையாளம் கண்டு கொண்டனர்?
இந்தக் குழந்தையை எப்படி இவர்கள் தேர்ந்தெடுத்தனர்?
பொருளாதார வசதியற்ற இவர்களால் போதைக்கும் மற்றதற்கும் எப்படி செலவு செய்ய முடிந்தது?
எனில், இதற்குப் பிண்ணனியில் படமெடுக்கும் கூட்டம்போன்றுஎவையேனும் இருக்கின்றனவா?
அந்தக் குழந்தையின் சம்மதமின்றி இது நடந்திருக்காது என்று சொல்பவர்கள் இவர்களைவிடவும் குற்றவாளிகள் அல்லவா?
குறைந்த பட்சம் இவற்றின் மீது நாம் இதுமாதிரி நகர்வுகளை முன்னெடுக்கலாமா?
படைப்பாளிகளும் பதிவர்களும் இவற்றிற்கெதிராக கூட்டாக கையெழுத்திட்டு ஒரு பிரகடனத்தை வெளியிடலாமா?
மாவட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் தெருமுனைப் பிரச்சாரம் உண்ணாவிரதம் போன்ற எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடலாமா?
வேறு என்னவெல்லாம் செய்யலாம்?
#சாமங்கவிவதற்கு 26 நிமிடங்கள் இருக்கும்போது

16.07.18

வண்ணக்கதிரில் வந்திருந்த கவிதையை வாசித்துவிட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செல்லத்துரை அழைத்தபோதுதான் விழித்தேன். கவிதையை அவரால் முடிந்தமட்டும் கொண்டாடித் தீர்த்தார். அந்தக் கவிதை இதுதான்,
”துப்பிவிட்டுக் கடக்கின்றனர்
அன்பிற்காக யாசித்தபடி நீளும்
என் காலி கோப்பையில்
அவரவரவரும்
தம்மீதான யாரோ யாரோவின் அன்பாலும்
யாரோ யாரோவின் மீதான தமது அன்பாலும்
நுரைத்துப் பொங்குகிறது
யாரோ யாருக்கான யாரோ யாரின்
அன்பு
பருக முடிகிறது என்னால்
யாரோ யாருக்கான யாரோ யாருடைய
அன்பையும்
பருகுகிறேன்
அநிச்சையாக நீள்கிறதென் காலிக்கோப்பை
யாரேனும் ஒருவர் துப்பாமலா போவார்கள்
எனக்கே எனக்கான
ஒரு சொட்டு அன்பை”
முடித்ததும் இன்று தமுஎச கூட்டம் இருக்குபோல என்றார். நான் ஏற்கனவே வேறு ஒரு கூட்டத்திற்கு நாள் கொடுத்த விவரத்தை சொல்லி வர இயலாமையை விளக்கினேன்.
சரி சரி ஆதவனிடம் பேசுங்கள் என்றார்.
***********
அடுத்து தோழர் Aadhavan Dheetchanya அவர்களோடு வர இயலாமை குறித்து விளக்கிவிட்டு, “சொல்லுங்க தோழா செய்யறேன்” என்றேன்.
அதன் பொருள் அதுதான். இப்பவும் சொல்கிறேன்<
“சொல்லுங்க ஆதவன், செய்கிறேன்”
*************************
பிறகு சிறுவாச்சூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த பெருந்தலைவர் பிறந்த தின விழாவிற்கு புறப்பட்டு போனேன்.
பொதுவாகவே வாட்ஸப் க்ரூப் என்றால் ஒருவிதமான அலுப்பே தோன்றுவது பொது புத்தியாகிப் போன காலத்தில் “நம்ம ஊரு நல்ல ஊரு” என்ற வாட்ஸப் க்ரூப் பிள்ளைகள் தமது ஊரின் ஊஒது பள்ளியை தத்தெடுத்து கோடை முழுக்க அந்தப் பள்ளி ஆசிரியைகளோடு இணைந்து வீடு வீடாகப் போய் பிரச்சாரம் செய்து ஒன்றாம் வகுப்பில் 17 குழந்தைகளை சேர்த்துள்ளனர்.
சென்ற ஆண்டு முதல் வகுப்பு சேர்க்கை 13 என்பதை சேர்த்துப் பார்த்தால் இதன் வலிமை புரியும். சென்ற ஆண்டைவிட பெரும்பாண்மை பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்க்கை குறைவு என்ற உண்மை இந்த அமைப்பின் பிள்ளைகளையும் அந்தப் பள்ளியின் ஆசிரியைகளையும் கை எடுத்து கும்பிட வைக்கிறது.
இளைஞர்களும் பெற்றோர்களும் என்று ஒரு நூறுபேர் திரண்டிருந்தனர். அனைத்துவகையான கல்வித்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.
எப்படி பாரதியின் கனவை காமராசர் நிறைவேற்றினார் என்று பேசிவிட்டு பொதுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய அவசியத்தை சொல்லிவிட்டு வந்தேன்.
யுவான் சுவாங் மேல்படிப்பிற்காகாக நாளந்தாவில் இருந்து காஞ்சி வந்தார் என்ற ஒரு தகவல் இருப்பதை சொல்லி அது உண்மை எனில் அதை வரலாறாக்க வேண்டும் என்றும் சொல்லி வந்தேன்.
கிராம மக்கள் கல்வி அரசியலை மிக நுட்பமாக உள் வாங்குகிறார்கள்.
அந்தப் பள்ளியை கொண்டுபோக வேண்டும் என்ற வெறி வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கு இருக்கிறது.
போக எவ்வளவு மறுத்தும் கவர் கொடுத்தார்கள். 2000 இருந்தது. அவர்களில் நால்வருக்கான இரண்டாண்டு சந்தாவாக அதை Kaakkai Cirakinile கு அனுப்பிவிட்டேன்
வாழ்த்துவோம்
*************************************
இன்று தம்பி க. மூர்த்தி யின் பிறந்த நாள். காலையில் வாழ்த்து சொல்ல அழைத்திருந்தேன். எடுக்கவில்லை. இரவு அழைத்து வாழ்த்தைப் பெற்றுக் கொண்டார்.
நீண்டு பேசினோம். நிறைய கிடைத்தது. நம்பிக்கை துளிர்த்தது.
60 கிலோவும் கங்காக இருக்கிறார். ஊதிப் பெரிதாக்குவோம். தேசத்தின் அல்லனவற்றை, குறிப்பாக சாதியை பொசுக்கட்டும்
***************
#சாமங்கவிந்து ஆறு நிமிடங்கழித்து
16.07.2018

Sunday, July 1, 2018

எங்க ஊர் மழை

அழைப்பு 033


கவிதை 086

என்ன சொல்லு என்கிறான் லேஷந் தான் வரைந்து வந்ததைக் காட்டி
காகம்போல் இருந்தது
காகம்போல இருக்கென்றேன்
அது காகம்தான்
நீதான் போல என்கிறான்
நான்போலதான் போல நான்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...