Friday, July 27, 2018

19.07.2018

இன்று மிக மகிழ்ச்சியான ஒரு சம்பவத்தைப் பந்தி வைத்துவிட்டு படுக்கப் போகலாம் என்றிருந்தேன்.
தட்டலாம் என்று முகநூலைத் திறந்தால் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் இரண்டைப் பார்க்க நேர்கிறது.
அந்த சம்பவத்தை காக்கைச் சிறகினிலே கடைசி பக்கத்தில் வைத்து விடுகிறேன்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் தோழர் கலை மணிமுடி அவர்கள் காலமானார் என்ற செய்தி ஒன்று.
ஆகச் சமீபத்தில்கூட அவரது பதிவுகளைப் பார்க்க முடிந்தது. மிக நல்ல தோழர். கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஏதோ கல்வி குறித்த தனது பதிவில் கல்வித்துறையில் உள்ள ஏதோ ஒரு பிரச்சினைக்கெதிராக கல்வியாளர்கள் ஒன்று திரள வேண்டும் என்றும் அதற்கான ஒருங்கிணைப்பை இவர்கள் செய்யலாமே என்றும் சொல்லியிருந்தார். அந்த இரண்டோ அல்லது மூன்றோ ஆன இவர்கள் பட்டியலுள் நானும் இருந்தேன்.
அவரோடு அது குறித்து உரையாட விரும்பி அவரது எண் கேட்டு அவரது இன்பாக்சில் அணுகினேன். இன்றுவரை அதை தோழர் பார்க்கவே இல்லை.
அடுத்தடுத்து பிரச்சினைகள் வந்துகொண்டே இருப்பதால் அவர் குறிப்பிட்ட பிரச்சினை மறந்து போனது.
எண் கேட்டு நான் அவரை அணுகிய நாளில் அவரது பதிவைப் பார்த்தால் அது என்ன என்று புரிந்துவிடும்.
அவர் விரும்பிய அந்த தலையீட்டினை செய்ய முயற்சிப்பேன்.
அதுதான் அவருக்கான அஞ்சலியாக இருக்கும்.
இதுவரைக்குமான உங்களது மக்களுக்கான செயல்பாடுகளுக்கு என் சார்பிலும் காக்கை சார்பிலும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் தோழர்.
********************************
எந்த ஊர், எந்தப் பள்ளி என்று தெரியவில்லை. ஆனால் எனது இன்றைய தூக்கத்தைக் கெடுப்பதற்கு கிடைக்கிற செய்தியில் போதாமை இருக்கிற அந்தச் செய்தி போதுமானதாக இருக்கிறது.
ஏதோ ஒரு பள்ளியில் ஒரு தலித் சத்துணவு அமைப்பாளராகவோ அல்லது சமையல்காரராகவோ இருக்கிறார். வந்திருக்கிற செய்தியின் அடிப்படையில் இருந்து பார்த்தால் அவர் சமையல் செய்பவராகத்தான் இருக்கக் கூடும். எது வாகவோ இருக்கட்டும். அது பிரச்சினையில்லை.
ஒரு கீழ்சாதிப் பெண் சமைக்கும் உணவை எம் பிள்ளைகள் உண்பதா? அதை ஏற்கவே மாட்டோம். அவர் அந்தப் பள்ளியில் இருந்தால் அந்தப் பள்ளிக்கு எம் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என்று சிலர் சொல்லவே அந்த ஊழியரைப் பணியிட மாற்றம் செய்திருப்பதாக அறிய முடிகிறது.
இன்னொரு ஊருக்கு அவரை மாற்றினாலும் அங்கும் ’அந்த மக்கள்’ இதையேதான் செய்வார்கள்.
சரியின்று இதை அனுமதித்தால் நாளை ,”கீழ்சாதி வாத்தியார்” எம் பிள்ளைகளுக்கு சொல்லித்தருவதா என்று கிளம்புவார்கள்.
பிறகு மருத்துவர்களிடம் வருவார்கள்.
இதுதான் அவர்களாது நீண்ட கால செயல் திட்டம்.
நீ எப்படியோ கஷ்டப்பட்டு மருத்துவம் படி. அதை எங்களால் தடுக்க முடியாது. ஆனால் உம்மை நோயாளிகள் அணுகாத மருத்துவர்களாக எங்களால் மாற்ற முடியும் என்று கொக்கரித்து கிளம்புவார்கள்.
தலித் கடை வைக்கலாம். வாங்க வர மாட்டார்கள். சரி தலித் கடையில் தலித் வாங்கலாம் என்றால் அதுவும் முடியாது.
தகுதி பெறுங்கள். எங்களால் தடுக்க முடியவில்லை. ஆனால் உங்கள் தகுதியை முடக்கிப் போட எங்களால் முடியும் என்று பச்சையாக கூறுகிறார்கள்.
அவர்தான் சமைப்பார் பிள்ளைகளை அனுப்புவதும் அனுப்பாததும் உங்கள் இஷ்டம் என்பது கூட தவறுதான். ஆனால் குறைந்த பட்சம் அதையாவது இந்த அரசு செய்ய முன்வர வேண்டும்.
நேர்மையான செயல்பாட்டை இந்த அரசு செய்ய விரும்பினால் தலித் சமைத்தால் எம் பிள்ளைகளை ப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று சொன்ன குற்றத்திற்காக அவர்களைக் கைது செய்ய வேண்டும்.
#சாமங்கவிந்து ஒரு மணி பத்து நிமிடங்களை ஒட்டி

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...