Tuesday, March 31, 2020

அங்குதான் கேட்க முடியும்

முதலாளித்துவத்திற்கும் சோசலித்திற்கும் இடையேயான முக்கியமாமான் வேறுபாடு என்னவென்று கொரோனா கற்றுக் கொடுக்கிறது
முதலாளித்துவம்
ஒரு நாட்டில் உள்நாட்டுப் பிரச்சினை என்றால் தலையிட்டு ராணுவத்தை அனுப்பி சட்டாம்பிள்ளைத்தனம் செய்யும்
சோசலிசம்
ஒரு நாட்டில் பேரிடர் என்றால் மருத்துவர்களையும் மருந்துகளையும் அனுப்பும்
முதலாளித்துவ அரசு மருந்தையும் மருத்துவர்களையும் அனுப்ப நினைத்தாலும் இயலாது
காரணம்
அது தனியாரிடம் இருக்கும்
என் அன்பிற்குரிய திரு நாராயணன்
உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது எனக்குத் தெரியும்
ஆனால் கொஞ்சம் விவரம் தெரிந்த உங்கள் ஆட்கள் சீனா மீது வைக்கும் விமர்சனங்களை பிறகு பார்க்கலாம்
இதுபோன்ற பேரிடர் நேரத்தில் நம்மால் ஒரு சோசலிச நாட்டிடம்தான் உதவியை எதிர்பார்க்க முடியும்
நமது மத்திய அரசு 10000 வெண்டிலேட்டர்களை சீனாவிடம்தான் கேட்கிறது
இப்போதும் நீங்கள்,
“இது எங்கள் அரசு” என்று உளரக்கூடும்
உங்கள் திருப்திக்காக அதை ஒப்புக்கொணடாலும்
உங்கள் அரசால்
அங்குதான் கேட்க முடியும்
கொஞ்சம் ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாருங்கள்

அணைத்துக் கொள்கிறேன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கம்”
மற்றும்
விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அரங்கம்
ஆகியவற்றை
கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான முகாம்களாக பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதிக் கடிதங்களை
சென்னை மாநகராட்சி ஆனையரிடமும்
விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் திமுக வழங்கியிருப்பதாகத் தெரிகிறது
திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலய அரங்கமும் ஒப்படைக்கப் பட்டிருக்கலாம்
அல்லது ஒப்படைக்கப்படும் என்றே நம்புகிறேன்
திமுக தோழர்களை அணைத்துக் கொள்கிறேன்

Saturday, March 28, 2020

ஆனாலும் சுசிலா அம்மாவின் கழுத்தளவுதான்

மேடை நிகழ்ச்சிகளில்
குறிப்பாக மேடை இசை நிகழ்ச்சிகளில்
இசையைவிடவும்
அல்லது இசை அளாவிற்கேனும் ரசிப்பதற்கு எனக்கு நிறைய இருக்கிறது
கலைஞர்களின் உடல்மொழி
அதிலும் குறிப்பாக தபேலா போன்ற தோலிசைக் கலைஞர்களின் உடல்மொழி
அப்படி ஒரு த்பேலாக் கலைஞரின் உடல்மொழிக்கு ரசிகனாகிப் போய் இருக்கிறேன்
அநேகமாக இளையராஜா, கணேஷ் கிருபா , லக்‌ஷ்மன் ஸ்ருதி உள்ளிட்ட அனைத்து மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்
SPB சாரின் உதவியால் அவரது பெயர் கண்பதி என்று தெரிந்துகொள்ள முடிந்தது
கணேஷ் கிருபாவின் கச்சேரியில் ஷைலஜாவுடன் ”பாரதி கண்ணம்மா” பாடலை SPBபாடி முடித்ததும் சார் அந்தத் தபேலாக கலைஞரிடம் சென்று கை குலுக்கிவிட்டு அவரது பெயரைக் கேட்கிறார்
”கணபதி“
என்கிறார் கணேஷ்
”அமர்க்கலம் கணபதி. எனக்கு அண்ணன் அல்லவா. ஆமா நான் சுப்பிரமணி, நீங்க கணபதி. பின்ன எப்படி. அமர்க்கலம், அமர்க்கலம்”
இதுதான் கணபதி சார் பெற்ற வாழ்நாள் ஊதியமாக இருக்கும்.
எழுந்து நின்று அவர் நெகிழ்ந்த உடல் மொழியும் அபாரம்
அவரது உடல்மொழியைப் பார்த்தே வளர்ந்தவன் நான்
கொரோனா உதவியால் பழையப் பாடல்களைத் திரும்பத் திரும்பப் பார்க்கிறேன்
”மறைந்திருந்து பார்க்கும் மருமமென்ன” மற்றும் “நல்ம்தானா?” ஆகியவற்றை நேற்று பத்து முறைக்கும் மேல் பார்த்தேன்
போட்டி
இரண்டு பிரிவுகள்
பத்மினி சைடில் மிருதங்கம் மற்றும் சிங்சா அதிலும் குறிப்பாக சிங்சா போடுபவர்களின் கொஞ்சம் கூடுதலான உடல்மொழி அப்படி ஒரு ரசனைக்குரியதாக இருந்தது
சிவாஜியும் ஏ எம் ராஜனும் நாயனம் வாசிக்கிறார்கள்
அப்படி ஒரு ஒத்திகை நடந்திருக்க வேண்டும்
வாசித்துக் கொண்டிருக்கும்போதே சிவாஜியின் கைல் இருந்து ரத்தம் வருகிறது
வலியை அப்படி எடுத்து வைக்கிறார் சிவாஜி
அப்படி ஒரு முகபாவனை
ஒரு கட்டத்தில் வாசிக்க முடியாமல் நாயனத்தை கீழே ஒருகணம் வைப்பார்
அப்போது ஏ எம் ராஜன் சிவாஜியைப் பார்ப்பார் பாருங்கள் ஒரு பார்வை
அப்பப்பா
அந்தச் சூழலில் ஒரு காதலியின் அவஸ்தையை அப்படி வைத்திருப்பார் பத்மினி
ஏன் ரத்தம்?
புரியாத பத்மினி ஆடும்போது தனது உடையால் லாவகமாக சிவாஜியின் துண்டை தட்டிவிடுவார்
கையிலே கட்டு இருக்கும்
அய்யோ
அப்படி ஒரு பாவனையை எல்லோரும் வெளிப்படுத்தி இருப்பார்கள்
நலம்பெற வேண்டும்
நீ என்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இந்தச் சரணத்திற்கு அப்படி உயிர் கொடுத்திருப்பார்கள் சிவாஜியும் பத்மினியும்
இவை அனைத்தையும் அப்படியே பார்த்துக் கொண்டே இருப்பார் பாலையா
அந்த அவரது முக பாவனை இருக்கிறதே அது நடிகர்களுக்கான இலக்கணம்
மேலே உள்ள சரணத்தின் மீதமான
“இலைமறை காய்போல்
பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று”
இந்த இடத்தில் தவிலின் மேலே தட்டிக் கொண்டிருந்த பாலையா
வாசிக்கத் தொடங்குவார்
அப்போது பத்மினியைக் காட்டி சிவாஜியிடம் கை உயர்த்துவார் பாருங்கள்
அடுத்த சரணத்தில்
“புண்பட்ட சேதியைக் கேட்டவுடன்
இந்தப்
பெண்பட்ட பாட்டை
யார் அறிவார்”
என்று நீளும்
அப்போதுபாலையா கையை மேலே நீட்டிவிட்டு சிவாஜியின் மடியை தொடுவார் பாருங்கள்
அது அச்சு அசல் கணபதியினுடையது
சிவாஜி பத்மினி எல்லோரையும் விட ஒருநூல் உசரமாகத் தெரிவார் பாலையா
ஆனாலும் சுசிலா அம்மாவின் கழுத்தளவுதான்

Friday, March 27, 2020

அமெரிகாவிலும் எழுதுவார்கள்

”எங்கள் மருத்துவர்கள் ஒருநாள் உலகைக் காப்பார்கள்”
அப்போதுகூட
எங்கள் மருத்துவர்கள் எம் மக்களைக் காக்கிற அளவிற்கு எழுவார்கள் என்று சொல்லவில்லையே
காஸ்ட்ரோ
உலக ஆளும் வர்க்கத்திற்கும் உலக மக்களுக்கும் வேறுபாடு தெரிந்தவர்
என் அன்பிற்குரிய கேஸ்ட்ரோ
இத்தாலியில் உங்கள் நம்பிக்கையையை பொழிப்புரைத்துக் கொண்டிருக்கிறார்கள் க்யூப மருத்துவர்கள்
அமெரிகாவிலும் எழுதுவார்கள்
முத்தம்

Tuesday, March 24, 2020

மூன்று கோரிக்கைகள்

இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மூன்றுபேர் வைத்த கோரிக்கைகளில் இருந்த நியாயம் அவற்றை நண்பர்களிடம் கைமாற்றி வைக்க என்னைப் பணித்தது
திருப்பூர் பின்னலாடை நிறுவன உரிமையாளார்களின் கூற்றுப்படி,
கொரோனா காரணமாக ஏற்றுமதி செய்யப்பட்ட பின்னலாடைகள் பிரிக்கப்படாமலேயே அந்தந்த நாடுகளில் கிடக்கின்றன
அதனால் அதற்கான பணத்தைப் பெற இயலவில்லை
இதன் காரணமாக பெறப்பட்ட ஆர்டர்களுக்கான துணியை அனுப்ப முடியாமல் அவை இங்கேயே முடங்கிக் கிடக்கின்றன
இதனால் புதிய ஆர்டர்கள் ஏதுமில்லை
இந்த வகையில் ஏறத்தாழ ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முடங்கி இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்
இதனால் தங்களது வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றுகூட கூறவில்லை
சூழல் சற்று மாறும்வரை ஒரு மூன்று மாத காலங்களுக்கான EMI தொகையை மூன்று மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும்
இந்த மாத காலத்திற்கு வட்டியினை மட்டும் தள்ளுபடி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்
அடுத்து பின்னலாடைத் தொழிலாளிகள் கூறும்போது
தொழில் பாதிப்பின் காரணமாக தங்களது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்
தங்களது உயிர்த்திருத்தலை சாத்தியமாக்கும் பொருட்டு வங்கிகளோ அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களோ மாதா மாதம் பத்தாயிரம் ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா கடன் கொடுத்தால்
நிலை மாறியதும் கடனைத் திருப்பி விடுவதாகவும் கோரினர்
அடுத்ததாக நான் கேட்டது கண் பார்வையற்ற ஊதுபத்தி விற்கும் தம்பதியர்
அவர்களது கோரிக்கையை கேட்க முடியாமல் அழுது விட்டேன்
இவை போன்றவை பதட்டம் இல்லாமல் நிதானமிக்க சமூக வலைதள உரையாடல்களாக மாற வேண்டும்
#சாமங்கவிய 05 நிமிடங்கள்
23.03.2020

Sunday, March 22, 2020

அப்போது ஒரு ஏழைக்கு அது தேவைப்படலாம்

தேவையற்ற பதற்றம்
தேவையற்ற பயம்
இவை இரண்டையும் மக்களிடமிருந்து போக்குவது அரசின், சமூக அக்கறை உள்ள அறிவு ஜீவிகளின் இந்த நொடிக்கான கடமை
குறிப்பாக மருத்துவம் தெரிந்த அறிவுஜீவிகளின் பொறுப்பு இதில் அதிகம்
அவர்களது கருத்துகளை சமூகவெளிக்கு கடத்தவேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது
பஞ்சத்தின் போதான பொருள்கள்மீதான கிராக்கி இப்போது வந்திருக்கிறது
இது மிகவும் ஆபத்தானது
சோப்புக் கட்டிகளுக்கும் சோப்புக் கரைசல்களுக்குமான கிராக்கி அதிகரித்துள்ளது
சிலர் மாஸ்க்குகளை வாங்கிக் குவித்துள்ளதன் விளைவாக அதன்மீதான கிராக்கி அதிகரித்துள்ளது
அதன் விலை கூடக் கூடும்
அப்போது ஒரு ஏழைக்கு அது தேவைப்படலாம்
அவரால் வாங்க இயலாத சூழல் அவரைக் கடுமையாகப் பாதிக்கலாம்
கொரானா சிலருக்கு லாபத்தை அற்ளித்தர வாய்ப்பிருக்கிறது
உரையாடுவோம்

வணக்கம் க்யூபா

தன் மக்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த
தன்னால் தன் மக்களைக் காப்பாற்றவே முடியாது
என்பதை உணர்ந்த தருணத்தில்
உலகத்தின்முன் மண்டியிட்டான்
கையேந்தினான்
தன் மக்களைக் காக்க வேண்டும் என்று கதறினான்
இரக்கமுள்ள நாடுகளின் இதய ஈரத்தையும் அமெரிக்கா உறிஞ்சி எடுத்துவிட்டது
இழந்து இழந்து
அழுது அழுது
கண்ணீரெல்லாம் உலர்ந்த நொடியில் அந்த மனிதன் முடிவெடுத்தான்
இதுபோன்ற துயரம் அமெரிக்காவிற்கும் வரக்கூடாது
அமெரிக்காவிற்கே வந்தாலும் அவர்களைக் காக்கிற சக்தியோடு க்யூபா எழவேண்டும் என்று
விளைவு
கொரொனா பாதித்த சொந்த மக்களுக்கே கதவடைக்கும் நாடுகளுக்கிடையே
தன்னை நிந்தித்த நாட்டின் கொரானா தாக்கிய மக்களையே தன் மடியமர்த்தி வைத்தியம் பார்க்கிறது க்யூபா
வணக்கம் க்யூபா
வணக்கம் காஸ்ட்ரோ
நன்றியும் வணக்கமும் க்யூப மருத்துவர்காள்
பிரிய அணைப்பு க்யூப மக்களே

தூக்கமும் சாப்பாடும் அதைவிடவும் முக்கியம்

மேல்நிலை இரண்டாம் ஆண்டுப் பொதுத் தேர்வின் முதல்நாள்
பறக்கும் படை ஆசிரியை என்னிடம் வருகிறார்
கொஞ்சம் பதற்றத்தோடு இருக்கிறார்
விசாரித்தால்
மூன்றாம் எண் அறையில் ஒரு குழந்தை துடித்துக் கொண்டிருப்பதாகத் தகவலைத் தருகிறார்
பறக்கிறேன்
எம் பள்ளியின் ஆசிரியர்தான் அறைக் கண்காணிப்பாளார்
பிள்ளை சுருண்டுத் துடித்துக் கொண்டிருக்கிறாள்
எனக்கும் சன்னமாக பயம் தொற்றுகிறது
“என்ன எஸ்.எம்?”
மெதுவாக காதருகில் ,”ஒன்னும் இல்ல எட்வின் அநேகமா டைமா இருக்கும்னு தோணுது. சாப்டாம வந்திருப்பா போல”
அவளது தோள்களைப் பற்றிக்கொண்டு,
“பீரியடா சாமி?”
தலையை ஆட்டுகிறாள்
பறக்கும் படையைச் சேர்ந்த ஆசிரியை இப்போது தெளிவு பெற்று அவளருகே அமர்ந்து தைரியம் தருகிறார்
“நீங்க விடுங்க சார், நான் பார்த்துக்கறேன்”
ஒன்றும் இல்லை, அந்தக் குழந்தைக்கு மாதாந்திர சுழற்சி நேரம்.
அத்தோடு சாப்பிடாமல் வந்திருக்கிறாள்
அதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடும் அவளிடம் இல்லை
“ஒன்னும் இல்லை சாமி. மேடம் பாத்துப்பாங்க”
நகர்கிறேன்.
அவளை அழைத்துக்கொண்டு ரெஸ்ட் ரூம் போகிறார் அந்தச் சகோதரி.
தேநீர் தருகிறோம். தேர்வெழுதுகிறாள்
அந்தக் குழந்தை ஒவ்வொரு தேர்வின்போதும் வந்து குறைந்த பட்சம் புன்னகைத்துவிட்டாவது போகிறாள்
கடந்த வெள்ளியன்று பதினோராம் வகுப்புக் குழந்தைகளுக்கு ஆங்கிலத் தேர்வு
இரண்டாவது மாடியில் அறைகளை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கீழிருந்து சத்தமாக என்னை அழைக்கிறார்கள்
வேகமாக இறங்குகிறேன்
ஒரு குழந்தைக்கு கை கால்கள் இழுத்துக் கொள்கிறமாதிரித் தெரிந்தது
துடிக்கிறாள்
தகவலை முதன்மைக் கல்வி அலுவலருக்கு சொல்லி மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல அனுமதி கேட்கிறேன்.
அனுமதிக்கிறார்
தோதாக எங்கள் மையத்தில் இருந்து சாலையைக் கடந்தால் அரசு மருத்துவமனை
அழைத்துப் போகிறோம்
மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் மாத விடாய் நேரமாகவும், சாப்பிடாமலும் இருப்பதும்தான் காரணம் என்றும் சொன்ன மருத்துவர்
ஊசி போட்டு மாத்திரைகளைக் கொடுத்து பத்து நிமிட ஓய்வில் சரியாகும் என்றும் கூறவே
நிம்மதியோடு அழைத்து வந்தோம்
பத்து நிமிடத்தில் நிலமை மோசமாகவே மீண்டும் அழைத்துப் போகிறோம்
பெற்றோருக்கு தெரிவிக்கிறோம்
ஸ்ட்ரிப் ஏற்றுகிறார்கள்
பதைக்கிறது
ஸ்ட்ரிப் ஏற ஏறப் புன்னகைக்கிறாள்
தேவதைப் போல துள்ளிக் குதித்து இறங்கினாள்
பரிட்சை முடிந்ததும் கண்ட்ரோல் ரூம் வருகிறாள்
17 வயது மழலையில் பெரிய மனுஷியாட்டம் நன்றி சொல்கிறாள்
“எப்படி இருக்கு சாமி?”
“சரியாயிடுச்சு. சூப்பரா எழுதியிருக்கேன். செவண்ட்டி ஃபைவ் வரும்”
அன்பிற்குரிய பெற்றோர்களே,
எங்கள் மையத்திலேயே கஸ்டோடியன் பாய்ண்ட் இருப்பதால் அங்கிருந்த நண்பர்கள் உதவினார்கள். போக, சாலையைக் கடந்தால் மருத்துவமனை என்பதும் வசதியாகப் போயிற்று
இல்லாதுபோனால்,
நினைத்தாலே பதறுகிறது
குழந்தைகளின் மாத சுழற்சி நாட்களில் அவர்களுக்கு விவரம் வரும் வரையில் கவனம் வையுங்கள்
அந்தக் காலகட்டங்களில் அவர்களை தகுந்த முன்னேற்பாட்டுடன் அனுப்புங்கள்
படிப்பு முக்கியம்தான்
ஆனால்
தூக்கமும் சாப்பாடும் அதைவிடவும் முக்கியம்
பரிட்சை நேரத்தில்
பிள்ளைகள்படிக்கிறார்களா என்று கண்காணிப்பதைப் போலவே
தூங்குகிறார்களா, சாப்பிடுகிறார்களா, சுழற்சி நாட்களில் போதுமான நாப்கின் எடுக்கிறார்களா என்பதையும்
அருள்கூர்ந்து கவனியுங்கள்
#சாமங்கவிய ஒரு மணி 30 நிமிடங்கள்
11.03.2020

Monday, March 16, 2020

மாணவனை நோக்கி பள்ளி வரவேண்டும்

"instead, the school should go to the student"
என்று மார்த்தி சொன்னதாகப் படித்திருக்கிறேன்
"the school should go to the student" என்பதற்கும்
"instead, the school should go to the student" என்பதற்கும் வேறுபாடு உண்டு
முன்னது கட்டமைப்பதற்கான கோரிக்கை
பின்னது இருக்கிற கட்டமைப்பை மாற்றுவதற்கான கோரிக்கை
இருக்கிற கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்றால் இருப்பதில் பிழை இருக்கிறது என்று பொருள்
எனில்,
முன்னதைவிடவும் பின்னதில் அதிக கவனம் கொள்ளப்பட வேண்டும் என்றும் பொருள்
எந்தக் குழந்தையையும் எக்காரணத்தைக் கொண்டும் விடுபடாமல் பள்ளிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதைத்தான் எல்லோரும் தங்கள் தங்கள் மொழியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால்
மாணவனை நோக்கி பள்ளி வரவேண்டும் என்று மார்த்தி கூறுவது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்
சில புத்திசாலிகள்
”அது எப்படி பள்ளி நகரும்”
என்றுகூட கிண்டல் செய்யக் கூடும்
”கல்வி என்ன அவ்வளவு சல்லிசா போச்சா?”
என்று சிலர் கொதிநிலையின் உச்சத்திற்கே போகக் கூடும்
“”மலைவாழை அல்லவோ கல்வி -நீ
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி”
என்று பாரதிதாசனேகூட குழந்தையைத்தானே பள்ளிக்குப் போகச் சொன்னார் என்றுகூட கூறலாம்
ஆமாம் உண்மைதான்
மார்த்தி பள்ளிக்கூடம் என்ற கட்டிடத்தை நகரக் கோரவில்லை
பள்ளி என்கிற கட்டுமானத்தை நகரச் சொல்கிறார்
மார்த்தி சொன்ன ஆழத்தில்கூட இதை அணுக வேண்டாம். கொஞ்சம் கருணையோடு இப்படி அணுகவே கோருகிறோம்
பள்ளிக்கு செல்லும் வயதுடைய குழந்தைகளை எப்பாடு பட்டேனும் பள்ளிக்கு கொண்டு வரவேண்டும்தான்
ஆனால்
ஏதோ ஒரு காரணத்தால் பள்ளிக்கு வரவே முடியாதவனை என்ன செய்யலாம்?
எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று விட்டுவிடலாமா?
அவனுக்கு ஏதோ ஒரு வகையில் கல்வியைக் கொண்டுபோக வேண்டாமா? என்பதைத்தான் மார்த்தி இப்படிக் கூறுகிறார்
இளமதி சமீபத்தில் கூறிய ஒரு செய்தி என்னை அந்த இடத்திலேனும் குறைந்தபட்சம் மார்த்தியின் இந்த கோரிக்கையைப் பொறுத்திப் பார்க்கக் கூடாதா என்று ஆதங்கப்பட வைத்தது
தற்போது நடந்துவரும் மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு ஒரு பள்ளியில் ”சொல்வதை எழுதும்” பணிக்கு இளமதி அமர்த்தப் பட்டிருக்கிறார்
தேர்வினை எழுத இயலாதபடிக்கு உடல் பாதிப்பு உள்ள குழந்தைகள் கூறுவதைக் கேட்டு இவர்கள் அந்தக் குழந்தைகளுக்காகத் தேர்வெழுத வேண்டும்
ஒரு பார்வையற்ற குழந்தைக்கு தேர்வெழுதும் பணி மதிக்கு
அந்த தேர்வு மையத்தில் ஏறத்தாழ 20 கும் மேற்பட்ட பார்க்கும் திறனற்ற குழந்தைகள் தேர்வெழுத வருகிறார்கள்
அந்தக் குழந்தைகள் படிக்கும் பள்ளி 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது
குறைந்த பட்சம் இதுமாதிரிக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு தேர்வறைகளைக் கொண்டுபோகக் கூடாதா?
#சாமங்கவிய ஒருமணி இருபத்தி ஐந்து நிமிடம்
09.03.2020

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...