Sunday, March 22, 2020

தூக்கமும் சாப்பாடும் அதைவிடவும் முக்கியம்

மேல்நிலை இரண்டாம் ஆண்டுப் பொதுத் தேர்வின் முதல்நாள்
பறக்கும் படை ஆசிரியை என்னிடம் வருகிறார்
கொஞ்சம் பதற்றத்தோடு இருக்கிறார்
விசாரித்தால்
மூன்றாம் எண் அறையில் ஒரு குழந்தை துடித்துக் கொண்டிருப்பதாகத் தகவலைத் தருகிறார்
பறக்கிறேன்
எம் பள்ளியின் ஆசிரியர்தான் அறைக் கண்காணிப்பாளார்
பிள்ளை சுருண்டுத் துடித்துக் கொண்டிருக்கிறாள்
எனக்கும் சன்னமாக பயம் தொற்றுகிறது
“என்ன எஸ்.எம்?”
மெதுவாக காதருகில் ,”ஒன்னும் இல்ல எட்வின் அநேகமா டைமா இருக்கும்னு தோணுது. சாப்டாம வந்திருப்பா போல”
அவளது தோள்களைப் பற்றிக்கொண்டு,
“பீரியடா சாமி?”
தலையை ஆட்டுகிறாள்
பறக்கும் படையைச் சேர்ந்த ஆசிரியை இப்போது தெளிவு பெற்று அவளருகே அமர்ந்து தைரியம் தருகிறார்
“நீங்க விடுங்க சார், நான் பார்த்துக்கறேன்”
ஒன்றும் இல்லை, அந்தக் குழந்தைக்கு மாதாந்திர சுழற்சி நேரம்.
அத்தோடு சாப்பிடாமல் வந்திருக்கிறாள்
அதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடும் அவளிடம் இல்லை
“ஒன்னும் இல்லை சாமி. மேடம் பாத்துப்பாங்க”
நகர்கிறேன்.
அவளை அழைத்துக்கொண்டு ரெஸ்ட் ரூம் போகிறார் அந்தச் சகோதரி.
தேநீர் தருகிறோம். தேர்வெழுதுகிறாள்
அந்தக் குழந்தை ஒவ்வொரு தேர்வின்போதும் வந்து குறைந்த பட்சம் புன்னகைத்துவிட்டாவது போகிறாள்
கடந்த வெள்ளியன்று பதினோராம் வகுப்புக் குழந்தைகளுக்கு ஆங்கிலத் தேர்வு
இரண்டாவது மாடியில் அறைகளை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கீழிருந்து சத்தமாக என்னை அழைக்கிறார்கள்
வேகமாக இறங்குகிறேன்
ஒரு குழந்தைக்கு கை கால்கள் இழுத்துக் கொள்கிறமாதிரித் தெரிந்தது
துடிக்கிறாள்
தகவலை முதன்மைக் கல்வி அலுவலருக்கு சொல்லி மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல அனுமதி கேட்கிறேன்.
அனுமதிக்கிறார்
தோதாக எங்கள் மையத்தில் இருந்து சாலையைக் கடந்தால் அரசு மருத்துவமனை
அழைத்துப் போகிறோம்
மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் மாத விடாய் நேரமாகவும், சாப்பிடாமலும் இருப்பதும்தான் காரணம் என்றும் சொன்ன மருத்துவர்
ஊசி போட்டு மாத்திரைகளைக் கொடுத்து பத்து நிமிட ஓய்வில் சரியாகும் என்றும் கூறவே
நிம்மதியோடு அழைத்து வந்தோம்
பத்து நிமிடத்தில் நிலமை மோசமாகவே மீண்டும் அழைத்துப் போகிறோம்
பெற்றோருக்கு தெரிவிக்கிறோம்
ஸ்ட்ரிப் ஏற்றுகிறார்கள்
பதைக்கிறது
ஸ்ட்ரிப் ஏற ஏறப் புன்னகைக்கிறாள்
தேவதைப் போல துள்ளிக் குதித்து இறங்கினாள்
பரிட்சை முடிந்ததும் கண்ட்ரோல் ரூம் வருகிறாள்
17 வயது மழலையில் பெரிய மனுஷியாட்டம் நன்றி சொல்கிறாள்
“எப்படி இருக்கு சாமி?”
“சரியாயிடுச்சு. சூப்பரா எழுதியிருக்கேன். செவண்ட்டி ஃபைவ் வரும்”
அன்பிற்குரிய பெற்றோர்களே,
எங்கள் மையத்திலேயே கஸ்டோடியன் பாய்ண்ட் இருப்பதால் அங்கிருந்த நண்பர்கள் உதவினார்கள். போக, சாலையைக் கடந்தால் மருத்துவமனை என்பதும் வசதியாகப் போயிற்று
இல்லாதுபோனால்,
நினைத்தாலே பதறுகிறது
குழந்தைகளின் மாத சுழற்சி நாட்களில் அவர்களுக்கு விவரம் வரும் வரையில் கவனம் வையுங்கள்
அந்தக் காலகட்டங்களில் அவர்களை தகுந்த முன்னேற்பாட்டுடன் அனுப்புங்கள்
படிப்பு முக்கியம்தான்
ஆனால்
தூக்கமும் சாப்பாடும் அதைவிடவும் முக்கியம்
பரிட்சை நேரத்தில்
பிள்ளைகள்படிக்கிறார்களா என்று கண்காணிப்பதைப் போலவே
தூங்குகிறார்களா, சாப்பிடுகிறார்களா, சுழற்சி நாட்களில் போதுமான நாப்கின் எடுக்கிறார்களா என்பதையும்
அருள்கூர்ந்து கவனியுங்கள்
#சாமங்கவிய ஒரு மணி 30 நிமிடங்கள்
11.03.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...