Monday, May 11, 2026

கலைஞர் + நீங்கள், ஸ்டாலின் சார்

 


அன்பிற்குரிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சார்,
 
வணக்கம்.
 
கீழ்க்காணும் எஸ். அறிவுமணியின் கவிதையை நீங்கள் வாசித்திருப்பதற்கு கொஞ்சமும் வாய்ப்பில்லை. ஆனால் இந்த கவிதை எதைக் கோரி கையேந்தி நிற்கிறதோ அதை நிறைவேற்றிய இருவரில் நீங்கள் ஒருவர். மற்றொருவர் பெருந்தலைவர் காமராசர்.
 
இருவருக்கும் என்னவொரு பொருத்தமெனில் அவரும் இந்த கவிதையை வாசித்திருக்க வாய்ப்பில்லை. மேற்கொண்டு நான் இந்தக் கடிதத்தைத் தொடர்வதற்கு முன் தயவு செய்து இந்த கவிதையை ஒருமுறை வாசித்து விடுங்கள்.
 
”தாயே
தாலாட்டை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படி தூங்குவது?
 
தந்தையே
அறிவுரையை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படி கேட்பது?
 
ஆசானே
பாடத்தை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படி படிப்பது?
 
எல்லோரும்
எல்லாவற்றையும் நிறுத்துங்கள்
என் பசிக்கு
பதில் சொல்லுங்கள்”
 
பொழிப்புரை தேவைப்படாத எளிய வார்த்தைகள். ஆனால் அளவிட முடியாத ஆழம். பசி பத்தையும் பறக்க வைக்கும் என்பதை அறிவோம்.
 
பசிக்கிற வயிறோடு படிப்பது சாத்தியப்படாது என்கிற எதார்த்தத்தை பெருந்தலைவரும் நீங்களும் மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். அந்த ஈரம்தான் என்னைப்போன்ற மாற்று இயக்கத்தினரையும் உங்களின்பால் இவ்வளவு இறுக்கமாகக் கட்டிப்போட்டிருக்கிறது.
 
அன்றைய பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு ஆய்விற்காக ஒரு பள்ளிக்கு செல்கிறார். அன்றைய கூட்டு வழிபாட்டின்போது நிறைய குழந்தைகள் மயங்கி விழுந்திருக்கிறார்கள். காலை உணவு இல்லாததால்தான் குழந்தைகள் மயங்கி விழுவதாகவும், இது தினமும் நடக்கிற ஒன்றுதானென்றும் அவருக்குத் தெரிய வருகிறது.
 
இந்த செய்தியை நெ.து.சுந்தரவடிவேலு, அன்றைய முதல்வர்  பெருந்தலைவர் காமராசருக்கு கடத்துகிறார். பெருந்தலைவர் பதைபதைத்துப் போகிறார். நிலா காட்டி சோறூட்டும் வழக்கம் இருக்கிற பூமியில் குழந்தைகளை பசி தின்று சாய்ப்பதா? என்று துடிக்கிறார்.
 
அதிகாரிகளோடு இருவரும் உரையாடுகிறார்கள். அப்போதிருந்த நிதிச்சுமையில் எதுவும் அரசால் செய்ய இயலாது என்ற எதார்த்தத்தை எடுத்து வைக்கிறார்கள் அதிகாரிகள்.
 
“தெருவிறங்கி பிச்சையெடுக்கிறேன். நிறைந்த வயிறோடு குழந்தைகள் படிக்கட்டும்.”
 
இப்படித்தான் பெருந்தலைவர் சொன்னாராம் ஸ்டாலின் சார்.
 
இதன் விளைவாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் வருகிறது. காலை உணவு இல்லை என்பதால்தான் பிள்ளைகள் மயங்கி விழுந்தது. ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ மதிய உணவு.
 
எனவே காலையில் கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டங்களில் பிள்ளைகள் மயங்கி விழுவது தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. அதேநேரம் மதிய உணவுத் திட்டம் பேரதிகமாக பிள்ளைகளை பள்ளிக்கு ஈர்த்தது.
 
வேறொன்றுமில்லை, அன்றைய வறுமை அப்படித்தான் இருந்தது. பள்ளிக்குப் போனால் மதிய உணவேனும் கிடைக்கும் என்பதால் பிள்ளைகளின் வரத்து அதிகரித்தது.
 
இப்படியாக பள்ளிக்கு வந்தவர்களில் பலர் பெரிய மருத்துவர்களாக மாறினார்கள் என்பது வரலாறு.
 
இதற்கு காரணம் பள்ளியில் கிடைத்த கல்வியா? அல்லது பள்ளியில் கிடைத்த உணவா? என்று பட்டிமன்றமே நடத்தலாம். ஆனால் இரண்டில் ஒன்றை ஒருபோதும் தீர்ப்பாகக் கூறமுடியாது. பள்ளியில் கிடைத்த கல்வியும், பசியாற்றிய மதிய உணவும்தான் இதற்கு காரணம்.
 
எண்பதுகளின் மத்தியில் வேலைக்கு வருகிறேன். பணிக்கு வந்த முதல் நாளே கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பசியால் பிள்ளைகள் மயங்கி விழுவதைப் பார்க்க முடிகிறது. அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும், ஒவ்வொரு நாளும் குழந்தைகள் விழுந்துகொண்டே இருப்பது தொடர்கிறது. இத்தனைக்கும் எங்கள் பள்ளி கொஞ்சம் பெரிய குழந்தைகள் படிக்கும் ஒரு மேல்நிலைப் பள்ளி. எனில், சின்ன குழந்தைகள் படிக்கும் தொடக்க பள்ளிகளின் நிலை?
 
சில நண்பர்கள் குழந்தைகளுக்கான “காலை உணவு” குறித்து கத்தத் தொடங்குகிறோம். நாங்கள் பேசி யாருக்குக் கேட்கும் ஸ்டாலின் சார்?
ஆனாலும் விடாது வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இதுகுறித்து பேசுகிறோம்.
 
அன்றைய பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர் கார்மேகம் சார் மாதிரி அதிகாரிகளிடம் இதைக் கொண்டு போகிறோம். அவர்களும் பேச ஆரம்பிக்கிறார்கள். ஆனால் விடியவில்லை.
 
இந்த கோரிக்கை எப்படி, யார்வழியாக உங்களுக்கு வந்தது என்று தெரியவில்லை. அரசு மற்றும் ஆதிதிராவிட தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வருகிறது.
 
போதாது என்கிறோம். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துகிறீர்கள்.
 
பள்ளியின் வருகைப்பதிவு எகிருகிறது. எனக்குத் தெரிந்த ஒரு பள்ளியில் பள்ளிக்கே வராத பத்து குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வர ஆரம்பிக்கிறார்கள்.
 
அதில் ஒரு குழந்தை “கலைத் திருவிழா”வில் மாவட்ட அளவில் ஜொலிக்கிறான். இதன் விளைவுகள் முழுவதும் வெளிவர இன்னும் பதினைந்து ஆண்டுகளாகும்.
 
உங்களது தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு இடத்தில் “என் சகோதரிகள் இன்னும் ஒரு அரைமணி நேரம் கூடுதலாக ஓய்வெடுக்கட்டும் என்பதற்காகவும்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தேன்” எ்ன்று கூறினீர்கள்.
 
இப்படியெல்லாம் சிந்திக்க எப்போதாவதுதான் உங்களைப்போல தலைவர்கள் கிடைப்பார்கள். இப்படி அபூர்வமாய் கிடைக்கும் தலைவர்களை நாங்கள் இதயமே இல்லாமல் தோற்கடிப்போம்.
ன்ன செய்வது, எங்களது நன்றி அப்படிப்பட்டது ஸ்டாலின் சார்.
 
உங்களது தோல்வி எனது இரண்டு எதிர்பார்ப்புகளில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறது ஸ்டாலின் சார்.
 
திங்கள் காலை ரவை உப்புமா கொடுத்தீர்கள். பிறகு அதை அரிசி பொங்கலாக மாற்றினீர்கள்.
 
செவ்வாயன்று சேமியா கிச்சடி, புதனன்று அரிசி பொங்கல், வியாழனன்று அரிசி உப்புமா, வெள்ளியன்று கோதுமை உப்புமா என்று கொடுத்தீர்கள்.
 
அரிசி உணவுகளை குழந்தைகள் கொட்டுகிறார்கள் என்று சொன்னார்கள்.
 
ஒரு குழு அமைத்து குழந்தைகளின் விருப்பமறிந்து அவர்களுக்குப் பிடித்த உணவைத் தரலாமே என்று 2025 செப்டம்பரில் எழுதினேன். அந்த மாதம் நடந்த எனது மகளது திருமணத்திற்கு வந்திருந்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சார் அந்தப் பதிவு குறித்து என்னோடு பேசினார்.
 
அக்டோபர் மாதம் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இருபது பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து குழுவினரை அனுப்புகிறீர்கள். அவர்கள் தினமும் காலை பள்ளிக்கு வந்து குழந்தைகளின் உணவு விருப்பத்தைக் கேட்டறிந்து போனார்கள்.
 
பிள்ளைகள், பூரி, இட்லியெல்லாம் கேட்டிருக்கிறார்கள். கிடைக்கும் என்று ஆசையாக இருந்தேன்.
 
ஏழை குழந்தைகளின் இட்லி கனவை உங்களது தோல்வி மறுதலித்திருக்கிறது சார்.
 
இந்த ஜூன் முதல் இந்தத் திட்டம் நடுநிலைப் பள்ளிகள் வரைக்கும் விரிவு படுத்தப்படும் என்று கூறினீர்கள். என்ன ஆகுமென்று தெரியவில்லை.
எனக்கு வயது 63 ஆகிறது சார். எனக்கு விவரம் தெரிந்து ஏழு முதல்வர்களைப் பார்த்திருக்கிறேன். பெருந்தலைவர், அண்ணா இவர்கள் ஆண்ட காலத்தில் நான் இருந்தேன் என்றாலும் விவரம் தெரியாது.
 
நான் பார்த்தவரை உங்களை மாதிரி ஒரு முதல்வரை நான் பார்த்ததில்லை ஸ்டாலின் சார். ”கலைஞர் +”  நீங்கள்.
 
இன்னுமொரு முறையேனும் உங்களது ஆட்சியைப் பார்த்துவிட்டுப் போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது சார்.
 
மத சார்பின்மைக்கு ஆதரவான களத்தில், சமூகநீதிக்கான போராட்ட களத்தில் எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம்.
 
மிக்க நன்றிங்க ஸ்டாலின் சார்.
 
அன்புடன்,
இரா.எட்வின்.    


Tuesday, April 28, 2026

09 2026

 

சம்பந்தி
ஒரு கார்
வாங்கியிருக்கிறார்
சுதா
ஒரு வீடு
வாங்கியிருக்கிறாள்
பாஜக
ஏழு எம்பிக்களை
வாங்கியிருக்கிறது
என்பதாக
இந்தியாவின் நேற்று
நிறைவாகியிருக்கிறது

பூரிப்பைத் தரும் பொங்கும் பூம்புனல்

 


ஒவ்வொரு மாற்றிதழ் வரும் பொழுதும் எனக்கு எண்பதுகளின் மத்தியில் "செந்தூரம்" இதழ் துவக்க விழாவின்போது பேராசிரியர் பெரியார்தாசன் பேசியதுதான் நினைவிற்கு வரும்.
"சிற்றிதழ் நடத்துவது என்பது காஸ்ட்லியான தற்கொலை" என்று அவர் சொன்னபோது நிறையபேர் முகம் சுளித்தார்கள்.
இது நடந்து நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எனவே நான் அன்று முகம் சுளித்தேனா அல்லது சிரித்தேனா என்பது நினைவில் இல்லை.
ஆனால் செந்தூரம் இதழின் ஆசிரியர் ஜெகதீஷ் அப்போது விழுந்து விழுந்து சிரித்தார்.
பேராசிரியரின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை காக்கையை ("Kaakkai Cirakinile - Tamil Magazine") ஆரம்பித்த ஆரம்ப காலங்களிலேயே உணர்ந்துகொள்ள வாய்த்தது.
ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதி வாக்கில் இதழை அச்சிற்கு அனுப்பிய கையோடு செத்துத்தான் போக வேண்டும்.
ஐந்தாம் தேதி வாக்கில் யாரவது அழைத்து இதழ் நன்றாக வந்திருக்கு என்று சொன்ன மாத்திரத்தில் மீண்டும் உயிர் வந்துவிடும்.
இப்படியாக, மாற்றிதழ் நடத்துபவர்கள் ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதி செத்து 5 ஆம் தேதி உயிர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டவர்கள்.
அன்றைய கூட்டத்தில் நன்றி சொல்லும்போது ஜெகதீஷ் சிரித்துக்கொண்டே சொன்னார்,
"இந்த இதழ் நிச்சயம். அடுத்த இதழ் லட்சியம்’
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் (aiiea) திருச்சி கண்டோன்மெண்ட் கிளையின் கணேஷ்ராம் மற்றும் கலைமணி உள்ளிட்ட தோழர்கள் கொண்டுவரும் "பொங்கும் பூம்புனல்’ எட்டாவது இதழ் வந்திருக்கிறது.
ஆக இந்த தோழர்கள் இதுவரை எட்டுமுறை உயிர்த்தெழுந்திருக்கிறார்கள். வாழையடி வாழையாக இந்த உயிர்த்தெழல்கள் தொடர வேண்டும் என்று ஆசை ஆசையாக வாழ்த்துகிறேன்.
எட்டு இதழ்களையும் வாசிக்கும் வாய்ப்பை இந்த நண்பர்கள் எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
அதற்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"பிறப்பொக்கும்..." என்பதை சிக்நேச்சராகக் கொண்டிருக்கும் இந்த பத்திரிக்கையின் எட்டு இதழ்களும் அந்த முழக்கத்திற்கு உயிர்கொடுக்கின்றன.
இவ்வளவுதான், இனி இவர்களே நினைத்தாலும் ஒருபோதும் இவர்களால் பிறழ முடியாது.
" வாக்கு - வர்க்கப் போராட்டத்தின் ஆயுதம்" என்ற இந்த இதழின் தலையங்கத்தின் தலைப்பே வித்தியாசமானது.
வாக்கை வர்க்கப்போராட்டத்தின் ஆயுதமாகப் பார்க்கும் தலையங்கங்கள் பல இடதுசாரி இதழ்களிலேயே காணக்கிடைக்காதவை.
"ஒரு தொழிற்சங்கத்திற்கு, எளிய மற்றும் உழைக்கும் மக்களுக்கான பொருளாதாரக் கொள்கையை முன்வைத்து அதற்கு ஆதரவளிக்கும் அரசியல் அமைப்பை தேர்வு செய்யும் நோக்கில் தொழிலாளர்களைத் திரட்டி அவர்களுக்கு இணக்கமான அரசாங்கத்தை தேர்வு செய்ய வழிகாட்டுவது என்பது முக்கிய பணிகளில் ஒன்று"
ஒரு வெகுஜன அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு தொழிற்சங்கத்திற்குரிய பாத்திரத்தை கேட்கிறமாதிரி, வாசிக்கிற மாதிரி இவ்வளவு அழகாக யாராலும் வைத்துவிட முடியாது.
"இந்த முதலாளித்துவ அமைப்பில் தொழிற்சங்கம் கோருகிற பொருளாதாரக் கொள்கைகளை முழுவதுமாக பின்பற்றும் அரசியல் அமைப்பை அடையாளம் காண்பது அரிது" என்றும் இந்தத் தலையங்கம் சரியாக உண்ர்த்துத்துகிறது.
இந்த வேலையை செய்வதில் இடதுகள் படும் வலியை பாடுகளை இந்த தலையங்கம் குறிப்பிடுகிறது.
உச்சத்தில் இருந்து வந்து வலியோடு வந்திருப்பதாக பிதற்றல்களை மட்டுமே கேட்டு சலித்துப்போன நமக்கு தலைமுறை தலைமுறையாக இடதுகள் படும் வலியை புரிந்துகொண்டிருக்கும் இந்த நண்பர்களுக்கு நன்றியை சொல்லாவிட்டால் அந்த வார்த்தையை வைத்துக்கொண்டு வேறென்ன செய்வது?
இந்த எழுத்து நான் நன்கறிந்தது என்ற வகையில் இது தோழர் கணேசுடையது என்றே உணர்கிறேன். அவருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
உங்களது ஏழாயிரம் ஆண்டு நாகரிகத்தை இன்று இரவிற்குள் அழிக்கப்போகிறேன் என்று ட்ரம்ப் கொக்கரித்த அன்று இரவு முடிந்தால் அழித்துப்பார் என்று ஈரான் மக்கள் இரவு முழுக்க தெருவிற்கு வந்து சுவராக நின்றார்கள்.
அதை, "நாகரிகத்தின் சுவர்" என்ற் தலைப்பில் கவிதையாக்கி இருக்கிறார் கலைமணி.
"தாயொருத்தியின் தோள்பற்றி
மகன் வந்தான்
தந்தையின் கரம் கோர்த்து
தனயன் வந்தான்
நாகரிகம் அழியாதென்பதை
அவர்கள்
உயிரால்
உடலால்
சொன்னார்கள்"
அந்தப் போராட்டத்தை மிகையின்றி சொல்லும் கலைமணி,
"பெருந்துன்பத்தின்முன்
நம்பிக்கையும்
அச்சமும்
தைரியமும்
ஒருங்கே தெறித்த"
போராட்டமென்கிறார். அந்த ’அச்சமும்’ என்பது அந்தக் கவிதையை எவ்வளவு எதார்த்தமாகக் கடத்துகிறது.
பாரசீக நாகரிகத்தை "நாகரிகத்தின் அழியாத முதிர்ச்சி" என்று முடியும் அந்த கவிதையை இன்குலாப் படித்திருந்தால் நிச்சயம் மெச்சியிருப்பார்.
"சமூக ஊடகங்கள் - ஒரு மாய உலகம்" என்ற மேரி ஜெசி ராணியின் கட்டுரை மாற்று இதழ்களுக்கேயான கட்டுரையின் சிக்னேச்சர்.
அப்படியொரு ப்ளோ .
சுமதியின் அழகியல் அபாரம். ஏதோ ஐம்பது ஆண்டுகளாக எழுதுபவரின் லாவகம்.
உள்ளே செல்லும் காற்றை வெளியே விடாத பந்து உதைபடுதாம். ஒரு துளையில் வாங்கும் காற்றை இசையாக மறு துளையில் இசையாத் தருவதால்
புல்லாங்குழல் முத்தம் பெறுகிறதாம்.
அய்யோடா.
தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டிருக்கும் படங்கள் அப்படிப் பொருந்திப் போகின்றன.
அட்டைமுதல் அட்டைவரை கொட்டிக் கிடக்கு.
இதழ்கள் வர வர நாமும் பேசுவோம்.
பள்ளிக்கு ஒரு இதழ் என்று ஒரு கட்டுரையை பதினைந்து அண்டுகளுக்கு முன் எழுதினேன்.
வேண்டுமானால் பாருங்கள். இந்த இதழ் ஒவ்வொரு கிளையில் இருந்தும் ஒரு இதழைக் கொண்டுவரும்.
வாழ்த்துகள்.

28.04.2026

Thursday, February 12, 2026

இவரையும் இவரது எழுத்தையும் யாராலும் நேசிக்காமல் கடந்துபோக முடியாது

 



சிறுவயது கீர்த்தியை இப்படிக் கொஞ்சியதில்லை,
விரும்பி இல்லறத்தில் இணைந்து,
மகிழ்ந்து பரத்தை இம்சைப் படுத்துகிற,
அதைவிடவும் மகிழ்ந்து அவனிடம் இம்சைப்படுகிற,
26 வயது கீர்த்தியை அப்படிக் கொஞ்சுகிறேன்
பத்து நாட்களுக்கு முன்பு ஒரு நாள்,
‘MD முடிச்சிட்டு, ஏதேனுமொரு காலேஜ்ல வேலைக்கு சேர்ந்துட்டு, அப்படியே ஒரு கிளினிக்கும் வச்சிட்டு… ஒரு அஞ்சு வருஷம் பொறுப்பா ஒரு கார் வாங்கித் தரேன்’’என்று கீர்த்தி சொன்னாள்
ரகசியமாய் அப்படி ஒரு அழுகை அழுதேன்
இந்த அன்பை, ஈரத்தை, அது தந்த சுகத்தை கவிதையாக்க நினைத்திருந்தேன்
முடியவில்லை
ஆனால் அந்தக் கலை துஷ்யந்த் சரவணனுக்கு அழகாய் வாய்த்திருக்கிறது
அவர்மீது பொறாமையாகக்கூட இருக்கிறது
நண்பானாக, தோழனாக மட்டுமே வாழ்ந்து பழகிய எனக்கு எஞ்சிய காலத்தை அப்பனாக மட்டுமே வாழ்ந்து கடக்க வாய்க்காதா என்று ஆசை வந்திருக்கிற வேளையில் தோழர் துஷ்யந்த் சரவணாராஜ் அவர்களின் ’’மகள் கையளித்த மயிற்பீலிகள்”’ வந்து சேர்ந்திருக்கிறது
புத்தகம் அழகாக வந்திருக்கிறது
அவரும் அவரது குழந்தையும் இறுக அணைந்தபடி குத்துவிளக்கின் ஒளியில் பேரழகாகப் பிரகாசிக்கிறார்கள்
அவர்கள் காலங்காலத்திற்கும் இதே மகிழ்வோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
வாழ்த்துகிறேன்
எனக்கு காடு பிடிக்கும். அடர்காடென்றால் அப்படிப் பிடிக்கும். அதுவும் இருண்ட அடர்காட்டிற்காக அடம்பிடித்து தவமிருப்பவன் நான்
அவருக்கும் அப்படித்தான்
எழுதுகிறார்,
“வாழ்வு
அடரிருட் காடு
மகள்
தூரத்து விளக்கு”’
நட்சத்திரங்களைக் குறித்து எழுதும்போது ‘தூரத்து ஊரின் தெரு விளக்கு’ என்று எழுதுவார் பாரதிதாசன்
இதை மட்டும் இருந்து படித்திருந்தால், ‘ஆகா’ என்று அவர் பாராட்டி இருப்பார்
எனக்கு அடரிருட் காடு. துஷ்யந்த்துக்கு மகளெனும் ஒளிபடர்ந்த அடர்க்காடு.
கிழவனாகி நான் கண்டுணர்ந்த மகளெனும் ஒளியின் மகத்துவத்தை துஷ்யந்த் தனது சிறு வயதிலேயே உணர்ந்து பிடித்துக் கொண்டிருக்கிறார்
’தேடல்
நல்லது
தேட எதையேனும்
தொலைக்கலாம்
முதலில்
தொலைக்க எதையேனும்
தேடலாம்’
என்று நான் எழுதினேன்
அவரோ என்னை மிஞ்சுகிறார்
’தேடுவதற்கு
மகளிருக்கிறாள்
தொலைவதற்கு
வருத்தமில்லை’
என்கிறார்.
இப்பவும்பொறாமையாகத்தான் இருக்கிறது
’ஏகத்துக்கும் சிதைந்து
முகமும் உடலும்
எஞ்சித் தெரிந்த
சிறுபகுதி இட முலையும்
எண்ணெய்ப் பிசுக்கும்
துண்ணூறும் குங்குமமும் போதுமந்த
அசலூர்க்காரனுக்கு
பொம்பள சாமி அது எனப்
பிடித்துக் கொள்ள
நொடிக்கு நொடி
தாயேயெனக் கும்பிட்டான்
சுத்திக் கிடந்த செத்தைகளை
பெருக்கித் தள்ளியவன்
சுகத்தையும் படிப்பையும்
வேலையையும்
கலங்காத நல்ல வாழ்க்கையையும்
தன் ஒத்தை மகளுக்காய் யாசித்தவாறே
வரவா தாயே
மழ ஓஞ்சிருச்சு
என நகர்ந்தவனுக்கு
கேட்டிருக்க நியாயமில்லை
போய்வா தந்தையே என்ற
தெய்வத்தின் குரல்’
என்று எனக்கு நீட்டி முழக்க வேண்டி இருப்பதை இவரோ
‘கோயில் வாசலில்
மகளைக் கொஞ்சுகிறான்
தந்தை
அம்மன்
சன்னதியில் இருந்து
சன்னமாய்க்
கேட்கிறது
விசும்பல்’
என்று போகிற போக்கில் நச்செனத் தெளித்துவிட்டு கடந்து போகிறார்
மகள்களை நேசிக்காத யாரும் இருக்க முடியாது,
எனில்,
இவரையும் இவரது எழுத்தையும் யாராலும் நேசிக்காமல் கடந்துபோக முடியாது
நூல் வாங்க
மௌவல்
21/9 வரதர் தெற்கு மடவிளாகம் தெரு
வலங்கைமான் 612804
திருவாரூர் மாவடம்
9787709687
11.02.2026

Wednesday, January 28, 2026

08 2026

 

விமானத்தில் பறப்பதில்லையென்ற
தைரியத்திலிதை
விபத்தென்று
நீ நம்ப மறுத்தால்
நீ போகும் பேருந்தும்
விபத்திற்குள்ளாகலாம்
அஜித் பவாருக்கு இரங்கலிக்குமுன்
பேசாமல் நம்பித் தொலை
28.01.2026
அஜித்பவாருக்கு அஞ்சலி

Tuesday, January 27, 2026

07 2026

 

தன்னை நனைத்த
மழைக்கான
பேரன்பில்
பிசுபிசுத்து கிடக்கிறது
அடர்காடு
26.01.2026

Saturday, January 24, 2026

சந்திப்பு

 


நேற்று மாலை வந்து சந்தித்தார் பாளை செல்வம்


24.01.2026

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...