Showing posts with label முடியும்வரை கல். Show all posts
Showing posts with label முடியும்வரை கல். Show all posts

Wednesday, July 27, 2016

30 நீயும்தான்… நானும்தான்…

ஒருமுறை ‘நீயா நானா’ வில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தைப் பார்த்தேன்.

‘கம்மர் கட்
காட்பரீஸ்
இனிப்பிலும்
வர்க்கபேதம்’

என்று ஒருமுறை தோழர் வல்லம் தாஜுபால் எழுதினார். ‘கம்மர்கட்’ ஏழைக் குழந்தைகளுக்கானது. காட்பரீஸ் என்பது ஒருபோதும் அடையமுடியாத அவர்களது கனவு. ’காட்பரீஸ்’ என்பது பணக்காரக் குழந்தைகளுக்கானது. கம்மர்கட்டை அவர்கள் விரும்பினாலும் அவர்களது பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள். காரணம் கம்மர்கட் அவர்களது தகுதிக்கு உகந்ததாக அவர்கள் நினைக்கவில்லை. மட்டுமல்ல, காட்பரீஸ் சாக்லேட் கம்மர்கட்டைவிட பத்து மடங்கு விலை கொண்டது.

இந்த வர்க்கபேதம் இனிப்போடு மட்டும் ஒதுங்கிவிடவில்லை. கல்வியிலும் இந்த பேதம் இன்றளவும் தொடர்கிறது. இலவசங்களும், மலிவாக கிடைப்பதும் தங்கள் தகுதிக்கு ஒவ்வாதது, ஏழைகள் பயன்படுத்தும் எதையும் தாங்கள் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் இருவருக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும், ஒரே பள்ளியில் ஒரே பெஞ்ச்சில் தங்களது குழந்தைகளும் இல்லாதவர்களின் குழந்தைகளும் அமர்ந்து படித்தால் இருவரும் சமம் என்றாகிவிடும். அது தங்களுக்கு ஆபத்தானது என்பதை வசதி படைத்தவர்கள் உணர்ந்திருந்தனர். தனியார் பள்ளிகளின் பிரமாண்டமான வளர்ச்சிக்கு இதுவும் ஒரு பெருங்காரணம்.

இதன் தோற்றுவாய், வளர்ச்சி, இன்றைய நிலை, அதை எப்படி களைவது என்பவற்றை அலச நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை தோழர்கள் அந்தோணியும் கோபியும். ஆனால் கோபி அவர்கள் என்ன முயன்றும் அவரது முழுமையான கட்டுக்குள் வர மறுத்த அந்த விவாதத்தின் பெரும்பகுதி தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் லாவணியாக மாறியது. இருந்த போதிலும் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் சிரமங்களையும் துயரத்தையும் அந்த விவாதம் வெளிக் கொணரவே செய்தது.

மற்றபடி அரசு பள்ளி என்பது மக்கள் பள்ளி. எனில் தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கும் அதுதான் சொந்தப் பள்ளி என்பதாகத் தொடங்கி அரசுப் பள்ளிகளை காப்பாற்றுவது என்பதே அந்த நிமிடத்துப் பணி என்பதை என்பதை உணர வைத்திருக்க வேண்டிய அன்றைய விவாதம் ஒரு புள்ளியில் யார் சிறந்தவர் என்கிற விவாதமாக மாறிப்போனது. மனது வலிக்க வலிக்க ‘நீயும் இல்லை நானும் இல்லை’ என்று ஒரு கட்டுரை எழுதியதோடு தோழர் அந்தோணியோடு மிக நீண்டு ஒருநாள் இது குறித்து உரையாடினேன்.   

‘நீயும் இல்லை நானும் இல்லை’ என்று எழுதிய என்னை ‘நீயும்தான் நானும்தான்’ என்று எழுத வைத்திருக்கிறது சென்ற ஞாயிறு நீயா நானாவில் ஒளிபரப்பான அதிகமான அளவில் பட்டங்களைப் பெற்றவர்களுக்கும் அதிக அளவில் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் இடையே நடந்த விவாதம். இதில் தான் எதற்காக இந்த விவாதத்தை ஏற்பாடு செய்திருந்தாரோ ஏறத்தாழ அதன் நெருக்கத்திற்கு அதை வழிநடத்தி கொண்டு சென்றார் கோபி.

இந்த விவாதத்தில் கலந்து கொண்ட ஒருவர் இதுவரை 140 பட்டங்களைப் பெற்றிருந்தார். ‘எது எப்படியோ 140 பட்டங்களைப் பெற்றமைக்காக அவரை வாழ்த்துகிறேன்’ என்று கூறி அதற்காக அவருக்கு ஒரு சன்னமான பரிசினையும் வழங்கினார் கோபி. அவரது முகத்திலோ குரலிலோ 140 பட்டங்கள் எந்தவிதமான வியப்பையும் ஏற்படுத்தியிருக்கவில்லை என்றபோதிலும் அவரைப் போல ஒப்புக்காகவேனும் வாழ்த்துமளவிற்கான பெருந்தன்மை என்னிடம் இல்லை.

140 பட்டங்களைப் பெற்றவருக்கு ஏறத்தாழ ஐம்பது வயது இருக்கும். அவர் தனது முதல் பட்டத்தை இருபது அல்லது இருபத்தியோரு வயதில் பெற்றிருக்கக் கூடும். எனில் சற்றேரக் குறைய முப்பது வருடங்களுள் 139 பட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும். எனில், வருடத்திற்கு மூன்றிலிருந்து நான்கு பட்டங்களை அவர் பெற்றிருக்க வேண்டும்.

ஒரு பட்டம் பெறுவதென்றால் அதற்கு குறைந்தபட்சம் பத்து முதல் பதினைந்து பாடங்களாவது இருக்க வேண்டும். ஒரு பட்டத்திற்கு பதினைந்து பாடங்கள் எனக் கொள்வோம். அந்த வருடத்தில் நான்கு பட்டங்களைப் பெற்றிருக்கிறார் எனில் அவர் குறைந்த பட்சம் அறுபது நாட்களை தேர்வறையிலேயே கழித்திருக்க வேண்டும்.

ஒரு பட்டத்திற்கான கோர்சில் சேர்வதற்கு விண்ணப்ப மனு வாங்கி அதை நிறப்புவது அதற்குரிய கட்டணத்திற்கு வரைவோலை எடுப்பது அதை உரிய இடத்தில் சேர்ப்பிப்பது என்கிற வகையில் ஒரு நான்கு நாட்கள் தேவைப்படும் குறைந்த பட்சம். அதன் பிறகு தேவையான நூல்களை தேடி வாங்குவது என்ற வகையில் ஒரு நான்கு நாட்கள் பிடிக்கும். தேர்வுக் கட்டணம் கட்டுவதற்கு ஒருநாள் செலவாகும். இதன் பிறகு நுழைவுச் சீட்டு வாங்குவதற்கு ஒருநாள் பிடிக்கும். தேர்வு முடிவுகள் வந்தவுடன் மதிப்பெண் பட்டியல் வாங்க ஒருநாள் பட்டம் வாங்க ஒரு நாள் என்று இரண்டு நாட்கள் செலவாகும்.

வருடத்திற்கு நான்கு பட்டங்கள் எனில் அதற்கான கால செலவு ஏறத்தாழ கீழ் வருமாறுதான் அமையும்

1)   விண்ணப்பம் பெற்று, சேர்ப்பிப்பது வரை           20 நாட்கள்
2)   வரைவோலை எடுத்து சேர்ப்பிக்க                 20 நாட்கள்
3)   தேவையான நூல்களைத் திரட்டுவதற்கு           20 நாட்கள்
4)   நுழைவுச் சீட்டு பெறும் வகையில்                04 நாட்கள்
5)   தேர்வு நாட்கள்                                   60 நாட்கள்
6)   மதிப்பெண் பட்டியல் வாங்க                      04 நாட்கள்
7)   பட்டங்கள் வாங்க மனு செய்ய                   04 நாட்கள்
8)   பட்டங்கள் வாங்க                                04 நாட்கள்

ஆக, இந்த வகையில் நிர்வாகக் காரணங்களுக்காக மட்டும் அவர் 136 லிருந்து 140 நாட்கள் செலவு செய்திருக்க வேண்டும். இது போக செமினார் என்ற வகையில் பாடத்திற்கு ஒருநாள் என்று கொண்டாலும்கூட ஒரு 60 நாட்கள் செலவாகியிருக்கும். பண்டிகை, திருமணங்கள், இறப்புக்கள் என்ற வகையில் ஒரு 15 நாட்கள் செலவாகி இருக்கும். எவ்வளவு திடமான உடம்பெனினும் தலைவலி காய்ச்சல் என்பவையாவது ஒரு 15 நாட்களைத் தின்றிருக்கும். ஆக இந்த வகை நடைமுறையில் குறைந்த பட்சம் 215 நாட்கள் செலவாகி இருக்கும். போக அந்த வருடத்தில் மிஞ்சுவது வெறும் 150 நாட்களே.

இந்த 150 நாட்களில் அவர் 60 பாடங்களுக்குத் தயார் செய்தாக வேண்டும். ஆக ஒரு பாடத்திற்கு இரண்டரை நாட்கள் மட்டுமே படிக்க அவகாசம் இருந்திருக்கும்.

இரண்டரை நாட்களை மட்டுமே ஒரு பாடத்திற்காக செலவு செய்ய முடிந்த ஒருவர் அந்தப் பாடத்தில் என்னத்தைப் பெரிதாக கற்றுத் தேர்ந்திருக்க முடியும்.

அவரைப் படித்தவர் என்று எப்படிக் கொள்ள முடியும்?

கற்றலின் பாமர நோக்கங்களாக உள்வாங்குதல் (ADOPTION) மற்றும் நடைமுறைப் படுத்துதல் (APPLICATION) ஆகிய இரண்டையும் கொள்கிறோம். கருத்துக்களை உள்வாங்கி அதை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதும் அதன்மூலம் சமூகம் உய்வுறச் செய்வதும் இந்த வகையில் கல்வியின் நோக்கங்களாகக் கொள்ளலாம்.

எல்லா நாட்களையுமே தேர்வு அல்லது தேர்விற்கான வேலை என்பதாக செயல்படும் ஒரு மனிதரால் இதை ஒருபோதும் செய்ய முடியாது.

அன்றைய விவாதத்தில் அதிகம் பட்டம் வாங்கிய மனிதர்களைப் பார்த்து ஏதோ சர்வ சதா காலமும் படித்துக் கொண்டே இருக்கிற படிப்பாளிகள் போலவே அனைவரும் விளித்ததுதான் ஆச்சரியமான விஷயம். பட்டம் வாங்குவது என்பது படித்தலின் விளைவா? கற்றலின் எல்லை பட்டங்கள் மட்டுமா?

தனது வாழ்நாளின் மிக முக்கியமான ஒரு முப்பது வருடங்களை தேர்வு தேர்வு என்றே கழித்த ஒரு மனிதனை சான்றோனாக மட்டுமல்ல ஒரு சராசரி படிப்பாளியாகக்கூட நம்மால் கொள்ள இயலாது. முப்பது வருடங்களையும் சமூகத்திற்காகவோ குடும்பத்திற்காகவோ பயன்படுத்தாத ஒரு மனிதரை மனிதன் என்று பார்ப்பதே என்னைப் பொறுத்தவரை ஊனமானப் பார்வைதான்.

அதுவும் இவர்கள் எந்தத் துறைகளில் பட்டங்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது நகைச்சுவையாக உள்ளது. ஒன்றுக்கு ஒன்று தொடர்பே இல்லாத பட்டங்கள். ஒரு பொது மருத்துவர் கண் அறுவையில் ஒரு கூடுதல் பட்டம் பெறுவது அவரது தொழிலை கூர்செய்யும். பொது மருத்துவர் ஒருவர் ஜேனலிசத்தில் ஒரு பட்டமோ பட்டமோ பெறுவதால் அவருக்கோ இந்தச் சமூகத்திற்கோ என்ன பயன்?

ஆக பட்டம் வாங்குதலை ‘படித்தல்’ என்று கொள்வது அயோக்கியத் தனமான அபத்தம். பட்டம் வாங்காத ஆனால் ஒருநாளைக்கு முன்னூறு பக்கங்களாவது படிக்காமல் தூங்க மறுப்பவனை படிக்காதவன் என்று விளிப்பது பேரபத்தம்.

பெருந்தலைவர் காமராசர் அவர்களை ‘படிக்காத மேதை’ என்று அழைப்பதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு இல்லை. அவர் முறைசார்ந்து படிக்கவில்லையே தவிர ஏகத்திற்கும் வாசித்துக் குவித்திருக்கிறார் என்றே கேள்வி பட்டிருக்கிறேன்.

அந்த விவாதத்திலொரு புள்ளியில் ‘படிக்கிறேன் படிக்கிறேன் என்று சொல்கிறீர்களே, என்றாவது நாம் படித்த படிப்பை அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?’ என்றொரு குழந்தை கேட்டாள்.

அன்றைய நீயா நானாவின் மிகச் சிறந்த விவாதப் புள்ளியாக எனக்குப் படுகிறது. தான் பெற்ற அறிவை அவ்வப்போது அந்தந்தச் சூழலோடு தகவமைத்துக் கொள்தல் அவசியம். அதன் மூலம்தான் சமூக மாற்றங்களோடு நம்மை பொருத்திக்கொள்ள முடியும்.

பாடத்திட்டத்தை இன்னும் சரியாகச் சொல்லப் போனால் ப்ளூ பிரிண்ட்டை படிப்பது என்பது ஒருபோதும் படிப்பாகாது. படிப்பு விசாலமானது.

அந்த விவாதத்தில் கலந்து கொண்ட அருண் என்ற பிள்ளை என்னை வெகுவாக ஈர்த்தான். அவன் வைத்த விவாதங்களில் சிலவற்ரோடு எனக்கு உடன்பாடில்லைதான். இன்னும் சிலவற்றில் அவன் தெளிவற்ரும் இருக்கிறான் என்பதும் உண்மையே. ஆனால் தான் எதை உண்மை என்று கருதுகிறானோ, எதில் அவனது மனது லயித்துக் கிடக்கிறதோ அதை மட்டுமே அவன் வைக்கிறான். அதற்கு எத்தகைய எதிர்ப்புகள் வந்த போதிலும் ஒரு மென்மையான புன்னகையோடு தன் நிலையில் உறுதியாக நிற்கிறான். பதட்டமே இல்லாமல் நிதானமாக வைக்கிறான்.

ஏறத்தாழ முப்பது வயதில் காந்தி இப்படித்தான் இருந்திருக்கக் கூடும். அவர்மீது ஆயிரமாயிரமாய் விமர்சனங்கள் இருந்த போதிலும் அவர் தனக்கு சரி எனப் பட்டதில் மட்டுமே உறுதியாய் இருந்தார். அது தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் அவருக்கு எது உண்மை எனப் பட்டதோ அதை மட்டுமே செய்தார். இந்தப் பிள்ளையும் அப்படித்தான் இருக்கிறான்.

அடுத்தநாள் கோபியோடும் அந்தோணியோடும் உரையாடியபோது சாவதற்குள் ஒருமுறை அந்தப் பிள்ளையை பார்த்துவிட வேண்டும் என்றேன். நீச்சயம் ஏற்பாடு செய்வதாக அந்தோணி சொல்லியிருக்கிறார்.

பட்டங்கள் பெறுவதும் படிப்பும் வேறு வேறு என்பதை ஒரு வெகுஜன ஊடகத்தின் வழியாக எந்த அளவிற்கு படம்பிடித்துக் காட்ட முடியுமோ அதைத் தாண்டியும் கோபி முயற்சித்தார் என்ற வகையில் அவருக்கு என் அன்பும் அணைப்பும்.

படிப்பு ஆழமானது. இந்தச் சமூகத்தை புரட்டிப் போடுவதற்கான உன்னதமான கருவி என்பதை இளைய திரளிடம் நானும் நீயுமாய் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்த முயற்சித்த வகையில் நீயா நானா குழுவினருக்கு நன்றி.  



Thursday, July 14, 2016

29. கல்வியில் தலையிடாத பள்ளி

இது நடந்து ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கடந்து போயிருக்கும். சென்னையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். விழுப்புரத்தில் கொஞ்சம் மக்கள் ஏறினார்கள். மத்திய வயதுடைய ஒரு பெண் எனது இருக்கை அருகே வந்து நின்றார். பயணச்சீட்டு விநியோகித்துக் கொண்டிருந்த நடத்துனர் இவர் அருகே வந்தார்.
‘எங்க போகணும்?’
‘உளுந்தூர்பேட்டை’
‘எத்தன?’
‘வெறும் ஆயிரத்தி நூத்திப் பத்துதாம்பா’
‘என்னம்மா, என்ன பேசற நீ. பிரவேட்காரன் திட்டுற அளவுக்கு ஏத்தினாலும் 110 டிக்கட் கூட ஏத்த முடியாது. அவ்ளோ ஏன், உங்க ஊருக்கான காசுக்கு ஏங்கிட்ட 200 டிக்கட்கூட தேறாது. நான் எப்படி ஆயிரத்தி நூத்திப் பத்து டிக்கட் தருவேன்.’
‘அய்யோ, ஒரு டிக்கட்தாம்பா. அத்தனைய வாங்கிட்டு போய் நான் வென்ன வறுத்தா தின்னப் போறேன்,’ என்று நிதானத்துக்கு வந்தார். ‘லட்ச லட்சமா கொட்டி படிக்க வச்சா இந்த எடுபட்ட பயப்புள்ள ஒன்னுத்துக்கும் ஒதவாத ஆயிரத்தி நூத்தி பத்து மார்க்கு எடுத்திருக்கு’ என்றவாறே கிட்டத்தட்ட உளுந்தூர்பேட்டை வரும்வரைக்கும் பிள்ளையை வறுத்துக் கொண்டே வந்தார்.
லட்ச லட்சமாய் செலவு செய்து ஏதோ ஒரு பெரிய பள்ளியில் தனது மகனை சேர்த்து படிக்க வைத்திருக்கிறார். அவன் அப்போது நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆயிரத்தி நூற்றி பத்து மதிப்பெண் பெற்றிருக்கிறான். இந்தத் தாய் ஆயிரத்தி நூற்றி தொண்ணூறு மதிப்பெண்ணாவது தனது பிள்ளை எடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறார். அவரது எதிர்பார்ப்பைவிட குறைந்து போகவே இந்த மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிட்டாது என்பதை கேட்டறிந்திருக்கிறார். அதுதான் பேருந்தில் நடத்துனர் பயணச்சீட்டு எத்தனை என்று கேட்டாலும் பிள்ளை பெற்ற மதிப்பெண்ணை உளறுகிற நிலைக்கு வந்திருக்கிறார்.
இப்போது இயல்பாகவே நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.
1. முதலில் ஆயிரத்தி நூற்றி பத்து என்பது அந்தத் தாய் இந்த அளவிற்கு புலம்புமளவிற்கு குறைந்த மதிப்பெண்தானா?
2. காசக் கொட்டி ஏதோ ஒரு பெரிய பள்ளியில் சேர்த்துவிட்டால் பிள்ளை தான் விரும்பும் மதிப்பெண் எடுத்துவிட வேண்டும் என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பு நியாயம்தானா?
3. ஆயிரத்தி நூற்றி பத்து மதிப்பெண்ணே குறைவு என்பதாக ஏற்பட்டிருக்கக்கூடிய பொதுப்புத்தி எத்தகைய விளைவுகளை கொண்டு வந்து சேர்க்கும்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் ஆயிரத்தி இருநூறு மதிப்பெண். ஆக, அந்தக் குழந்தை ஆயிரத்தி இருநூறு மதிப்பெண்ணிற்கு ஆயிரத்தி நூறு மதிப்பெண் பெற்றிருக்கிறான். ஆயிரத்தி நூற்றி பத்து என்பது 92.5 விழுக்காடு வருகிறது. அதுவும் கட் ஆஃப் பாடங்களில் அந்தக் குழந்தையின் மதிப்பெண் சதவிகிதம் இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும்.
நிச்சயமாக இது அந்தப் பிள்ளையை தோளில் தூக்கிக் கொண்டாட வேண்டிய அளவிற்கு உரிய மதிப்பெண்தான். இன்னும் சொல்லப் போனால் இவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கும் பிள்ளையைக் கொண்டாட மறுப்பதைக்கூட மன்னிக்கலாம். ஆனால் இதை குறை சொல்லுவதை கண்டிப்பாக குற்றமாகக் கொள்ள வேண்டும். தொண்ணூற்றி மூன்று விழுக்காடு மதிப்பெண்ணை அவ்வளவாக படிக்காத ஒரு தாய் குறைவென்று பொதுவெளியில் சொல்லுமளவிற்கு பொதுநிலை வந்திருப்பது கல்வி சிறந்து செழித்து வளர்ந்திருப்பதன் அடையாளம் அல்ல.
பொதுவாகவே தனது குழந்தையை எந்தத் தாயும் இது விஷயத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார். இன்னும் சொல்லப்போனால் தனது மகன் பெற்ற மதிப்பெண்ணோடு கொஞ்சம் சேர்த்து சொல்வார். நான் பன்னிரெண்டாம் வகுப்பில் அறுநூற்றி எழுபத்தி ஐந்து மதிப்பெண்தான் பெற்றேன். ஆனால் என் அம்மா எங்கள் தெருவில் உள்ளவர்களிடம் நான் எழுநூற்றி ஐம்பது பெற்றதாக சொல்லி பெருமை பட்டுக் கொண்டார். அப்படியே சொல்ல வேண்டும் என்று என்னிடமும் அப்பாவிடமும் கூறினார். அப்பாவிற்கு அதில் எல்லாம் உடன்பாடில்லை. அதில் எனக்குத்தான் பெரிய சிக்கல். யாரேனும் என்னப்பா மார்க்கு என்றால் எதை சொல்வது என்று குழம்புவேன். அறுநூற்றி எழுபத்தி ஐந்து என்று உண்மையை சொன்னால் ‘ஏம்பா அம்மா ஏதோ எழுநூற்றி ஐம்பதுன்னு சொல்லுது நீ அறுநூத்தி எழுபத்தஞ்சுங்கற’ என்பார்கள். எழுநூற்றி ஐம்பது என்றால் சிலர் ,’ஏம்பா உங்கப்பா அறுநூத்தி எழுபத்தி அஞ்சுங்கறாரு, நீ என்னடான்னா எழுநூத்தி ஐம்பதுங்கற’ என்பார்கள். ஒருகட்டத்தில் என் மதிப்பெண் எது என்பதில் எனக்கே குழப்பம் வந்துவிட்டது.
ஆனால் அறுநூத்தி எழுபத்தி ஐந்தே மிகக் கௌரவமான மதிப்பெண்ணாகவே கொள்ளப்பட்டது. ஏன் இந்தத் தாய் இப்படிப் புலம்புகிறார். நான் அறுநூற்றி எழுபத்தி ஐந்து மதிப்பெண்ணிற்கு அந்தக் காலத்தில் எளிதாக கல்லூரியில் இடம் கிடைத்தது. ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஆயிரத்து முப்பது மதிப்பெண் பெற்ற எனது மனைவியின் அக்கா பெண்ணிற்கு இளங்கலை ஆங்கில இலக்கியம் கிடைப்பதில் பெருமளவு சிரமம் இருந்தது.
இதை இப்படிப் பார்ப்போம். அந்தக் காலத்தில் 175 மதிப்பெண் கட் ஆஃப் இருந்தால் மருத்துவம் கிடைத்தது. இப்போது 198 ற்கு கிடைக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை இருக்கிறது. ஆக, 175 கட் ஆஃப்பிற்கு கிடைத்த மருத்துவ படிப்பு இப்போது 199 ற்கு கிடைக்கிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்த தங்கம் இப்போது இருபத்தி ஆறாயிரம் ரூபாய்க்கு நகர்ந்திருக்கிறது. தங்கத்தின் விலையும் ஏறியிருக்கிறது கல்லூரிக்கான கட் ஆஃப் கூடியிருக்கிறது. இதை இப்படியாக பொருத்திப் பார்க்கிற அளவிற்கு போயிருப்பதே கூட கல்வி சந்தை பட்டிருப்பதன் அடையாளம்தான்.
’லட்ச லட்சமா காசக் கொட்டி நல்ல பள்ளிக்கூடத்துல சேர்த்துவிட்டோம்’ என்கிற பொதுப் புலம்பல் ’எது இவர்கள் பள்ளியில் நல்ல பள்ளி?’ என்ற ஒரு கேள்வியை நம் முன்னே வைக்கிறது.
‘என் பள்ளி ஒருபோதும் என் கல்வியில் தலையிடாதவாறு நான் பார்த்துக் கொண்டேன்’ என்று ஒரு முறை மார்க் ட்வைன் கூறினார். இதை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு அபத்தமான கூற்றாகத் தெரியும். கல்வியைக் கொடுப்பதே பள்ளிதானே? அது எப்படி ஒரு குழந்தையின் கல்வியில் தலையிடாமல் இருக்க முடியும்? என்று தோன்றும். உண்மையில் ஒரு நல்ல பள்ளி என்பது கல்வியைக் கொடுக்கக் கூடாது. மாறாக குழந்தை தனது கல்வியை எடுத்துக் கொள்வதற்குரிய சூழலை வாய்ப்புகளை அது அந்தக் குழந்தைக்கு கொடுக்கும்.
இந்த மோசமான மாற்றம் எப்படி தொடங்கியது எனில் பாடத் திட்டம்தான் கல்வி. அந்தப் பாடத் திட்டத்தில் தேறுவதான் தேர்ச்சி. இதை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு என்று எந்தப் புள்ளியில் தொடங்கியதோ அந்தப் புள்ளியில் மத்திப்பெண்ணே கல்வியின் அளவுகோளாக மாறியது.
நான் துவக்கப் பள்ளியில் படிக்கிறபோது பாடப் புத்தகங்கள் ஒரே மாதிரி இல்லை. தனியார் தயாரித்த பாடப் புத்தகங்கள் இருந்தன. அப்போது மாவட்டத்திற்கு மாவட்டம் புத்தகம் மாறும். உள்ளூர் குறித்த பாடங்கள் அவற்றில் நிறைந்திருந்தன. என் கிராமம் பற்றிய வரலாறு மற்றும் புவியியல் சார்ந்து என்னால் படிக்க முடிந்தது.
அந்தக் காலத்தில் கல்வியின் விளைவாக ஒழுக்கமும் பண்பாடும் எதிர்பார்க்கப்பட்டது. ’படித்தவன் பாவம் செய்தால் அவன் அய்யோன்னு போவான்’ என்று பாரதி சொன்னான். பாவம் செய்யாமை படித்தவன் அடையாளமாக இருந்த காலம் மாறி காரும், நகையும், ஏசியோடு கூடிய பங்களாவும், மின்ணனு சாதனங்களுமே படித்தவனின் அடையாளமாகிப் போயின.
‘சமச்சீர் கல்வி’ என்பதுகூட ஒரே பாடப்புத்தகத்தை படிப்பது என்று சுருங்கிப் போனது. கல்வி பொதுப் படவேண்டும். அது சமப்பட வேண்டும். ஆனால் அது மண் சார்ந்தும் (NATIVITY) படைப்புத் திறன் (CREATIVITI) சார்ந்தும் இருக்க வேண்டும். ஆனால் இந்த அளவிற்கான சமச்சீருக்கே இந்த அளவிற்கு போராட வேண்டியிருந்தது.
இத்தகைய சூழலில் எந்தப் பள்ளி பொதுத் தேர்வில் அதிக அளவிலான மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்கிறதோ அந்தப் பள்ளி நல்ல பள்ளியாக கொள்ளப்பட்டது. அந்தப் பள்ளியை நோக்கி பெற்ரோர்கள் குவியத் தொடங்கினார்கள். இது ஒருவிதமான போட்டியை பள்ளிகளுக்கிடையே ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் போட்டியானது நல்லதை சொல்லித் தருவதில் ஏற்படவில்லை. எதை சொல்லிக் கொடுத்தால் எல்லோரையும் தேர்ச்சிபெற வைக்க முடியும் என்று பள்ளிகள் யோசிக்க ஆரம்பித்தன. போட்டி அதிகரித்த பொழுது எதைமட்டும் சொல்லிக் கொடுத்தால் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். இங்குதான் கல்வி தனது மேன்மையான சுயத்தை இழக்க ஆரம்பித்தது.
ஒருகட்டத்தில் ஏறத்தாழ எல்லாப் பள்ளிகளும் நூற்றுக்கு நூறு தேர்ச்சி விழுக்காடு கொடுக்க ஆரம்பித்தவுடன், அவர்களது கவனம் மதிப்பெண்ணில் விழுந்தது. இங்கும் அவர்களது சூத்திரம் ஒன்றாகவே இருந்தது. எவற்றை மட்டும் நடத்தினால் நூறு விழுக்காடு தேர்ச்சி சதவிகிதம் என்பது மாறி, எதை மட்டும் நடத்தினால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வைக்கலாம் என்று யோசித்தார்கள்.
இப்போதுதான் ப்ளூப்ரிண்ட் (BLUE PRINT) மாணவர்களிடம் புழக்கத்திற்கு வந்தது. இப்போது அதை வகுப்பறை சுவர்களில் மாட்டி வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்திரவே போடுகிறார்கள். இப்போது மதிப்பெண் இல்லாத பாடத்தை படிக்கிற மாணவர்களை ‘ஏண்டா தேவையில்லாதத்யெல்லாம் படிக்கிற’ என்று கோவைத்துக் கொள்கிறார்கள். சிலர் அதற்காக பிள்ளைகளை கடிந்து கொள்கிறார்கள். சிலர் தண்டனையே தருகிறார்கள்.
ஒரு கட்டத்தில் ‘எங்கள் பள்ளியில் இருந்து இத்தனை மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கும், பொரியியல் படிப்பிற்கும் சேர்ந்திருக்கிறார்கள்’ என்று பள்ளிகள் விளம்பரப்படுத்தினார்கள். இத்தகைய விளம்பரங்கள் கூடுதல் மதிப்பெண் மீதிருந்த கவர்ச்சியை மாணவர்களிடமிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் அப்புறப்படுத்தின. மருத்துவம் படிக்க ஆசைப்படுபவனுக்கு ஏன் கணிதத்தை படிக்க வைத்துக் கொண்டு. தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் எண்பது மதிப்பெண் அளவிற்கு தயார் செய்துவிட்டு இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றில் இருநூறுக்கு இருநூறு எடுக்குமாறு பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
சென்ற ஆண்டோ அதற்கு முந்தைய ஆண்டோ 900 மதிப்பெண்களுக்கும் குறைவாக மதிப்பெண் பெற்ற ஒரு குழந்தை முதல் கட்ட நேர்காணலிலேயே மருத்துவ படிப்பை தேர்ந்தெடுக்க முடிந்தது. இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் அவள் 600 மதிப்பெண் எடுத்திருந்தாள். மற்ற மூன்று பாடங்களிலும் அவள் 300 கும் குறைவாகவே எடுத்திருந்தாள்.
புத்திசாலித்தனமாகப் பார்க்கப்படும் இந்தப் போக்கு கல்வியை வெகுவாக சீரழிக்கும். கல்வியை வெகுவானதொரு சூதாட்டமாக கொண்டு சேர்க்கும். இது எதிர்கால சமூகத்தை பாழ்படுத்தும்.
அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் இதிலிருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தன. இப்போது அவர்களும் இந்த சூத்திரத்தை முடிந்த அளவு கைகொள்ள ஆரம்பித்து விட்டார்கள். சூப்பர்30 என்கிற பள்ளிகளை மாவட்ட ஆட்சியர்களே பல மாவட்டங்களில் ஆரம்பித்து விட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவர்களுக்கு தனியாக வசதிகள் செய்து தந்து அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளிலும் பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களிலிருந்து மதிப்பெண் பெருவதை மட்டுமே சொல்லித் தருகிறார்கள்.
ஒரு தவறுக்கு தீர்வாக அதே தவறு என்பது எப்படி சரியாகும் என்று தெரியவில்லை.
ஆயிரத்தி நூற்றி பத்து மதிப்பெண்ணை குறைவென்று ஏசத் தொடங்கியிருக்கிறார்கள் பெற்றோர். இந்த நிலை தொடர்ந்தால் இந்த மதிப்பெண்ணிற்காக மாணவர்களை தண்டிக்கத் தொடங்குவார்கள்.
இப்போது வியப்பாகக் கூட இருக்கலாம். நடக்காது என்று சொல்வதிற்கில்லை. இதே சூழல் நீடிக்குமானால் ஒரு காலத்தில் ஆயிரத்தி நூற்றி எழுபது மதிப்பெண் எடுத்த தனது குழந்தையை மதிப்பெண் குறைவென்று அவனது தாயே கொலை செய்யக்கூடும்.
அதற்குள் விழிப்போம்..

Friday, July 8, 2016

28. மைதானத்தில் நின்றபடி சூரியனை

‘அப்பா, இந்தப் பள்ளிக்கூடம் நல்லாவே இல்ல. திரும்பவும் நம்ம ஊர் பள்ளிக்கூடத்துலேயே என்ன சேர்த்துfவிடு’
இப்படிக் கூறிய குழந்தை படித்துக் கொண்டிருந்த அந்தப் பள்ளி சென்னையின் மிக உயர்தரமான பள்ளிகளில் ஒன்று. அவன் மீண்டும் படிக்க விரும்பிய, இதற்கு முன் அவன் படித்துக் கொண்டிருந்த பள்ளி இரண்டே இரண்டு மினி பேருந்துகள் மட்டுமே போய்வரக்கூடிய ஒரு கடைக்கோடி கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி.
இன்னொரு தகவலையும் இப்போது கூறிவிட வேண்டும். அந்தக் குழந்தையின் தந்தை பள்ளிக்கல்வித் துறையின் மிக உயரிய பொறுப்பில் இருக்கக்கூடிய மிக நேர்மையான அதிகாரி.
ஒருக்கால் இத்தனை ஆண்டுக்காலம் ஒரு கிராமத்துப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த குழந்தையை திடீரென மெட்ரோபாலிடன் நகரத்து நவீனப் பள்ளியில் சேர்த்ததால் பிரமாண்டத்தைக் கண்டு மிரண்டு போனானோ என்ற ஐயம் அவனது தந்தைக்கும் எனக்கும் எழுந்தது.
அதுகுறித்து அவனிடமே பேசினோம். அந்தக் குழந்தை மிகவும் தெளிவாக இருந்தான். அவனுடனான உரையாடலில் இருந்து நாங்கள் தெரிந்து கொண்டவை,
1.    இப்போது படிக்கும் பள்ளியின் பிரமாண்டம் அவனை மிரட்டவோ ஈர்க்கவோ இல்லை.
2.    அவனது கிராமத்துப் பள்ளியில் இல்லாத எதுவும் இந்த நவீனப் பள்ளியில் இல்லை.
3.    அந்த கிராமத்துப் பள்ளியில் ஏதோ ஒன்றை அவன் இங்கு இழந்த நிலையில் இருந்தான். அதாவது, ஒரு போதாமையை அந்தக் குழந்தை இங்கு உணர்ந்தான்.
23 குழந்தைகள் மட்டுமே ( இப்போது பத்தை ஒட்டிய எண்ணிக்கைதான் ) படித்துக் கொண்டிருந்த அவனது கிராமத்துப் பள்ளியில் ஒன்பது கணினிகளும் எல்லாக் கணினிகளுக்கும் UPS களும் இருந்தன. இருபத்திமூன்று குழந்தைகள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த அந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஏறத்தாழ இரண்டு லட்சம் ரூபாய் செலவில் ஆண்டு விழாவை நடத்தினார்கள். வேலு சரவணனது நாடகத்தைக்கூட நான்தான் ஏற்பாடு செய்திருந்தேன். அது குறித்து ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் நான் கல்கியில் ஒரு கட்டுரைகூட எழுதினேன். ஆகவே இந்தப் பள்ளியின் பிரமாண்டம் அவனை அச்சப்படுத்தாமல் போனதாலோ ஆர்வப் படுத்தாமல் போனதினாலோ ஆச்சர்யம் இல்லை.
சரி, புதிய இடத்தில் நண்பர்கள் கிடைப்பதில் பிரச்னை போல என்று யோசித்தோம். இருபது நண்பர்களின் அப்பாக்களின் அலைபேசி எண்களைக் கொட்டினான்.
என்னதான் பிரச்னை என்று கேட்டால் இங்கு பாடம் நடத்தும் முறை சரியில்லை என்றான். மொழிப் பிரச்சினையைத்தான் இப்படி சொல்கிறான் என்று யோசித்தோம். எல்.கே.ஜி குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதுபோல எங்களுக்கு வகுப்பெடுத்தான்.
‘இங்கே என்னப்பா, சூரியனக்கூட படத்தக் காட்டியும் ஸ்மார்ட் சிஸ்டத்துலயும்தான் நடத்துறாங்க. இதையே நம்ம ஊர்லனா சின்னம்மா எப்படி நடத்தியிருப்பாங்க தெரியுமா?’
அந்தக் கிராமத்து பள்ளி ஒரு ஈராசிரியர் பள்ளி. தலைமை ஆசிரியை அவனது சின்னம்மா. தொடர்ந்து தனது சின்னம்மாவிடமே படித்துக் கொண்டிருந்த குழந்தையை திடுமென இங்கு தள்ளியதால் இந்தப் பள்ளியின் ஆசிரியைகளோடு ஒட்டவில்லைபோல என்று நினைத்தோம்.
’சூரியன நடத்த சார்ட் எதுக்கு, ஸ்மார்ட் சிஸ்டம் எதுக்கு?
மைதானத்துக்கு கூட்டிட்டுபோயி, அண்ணாந்து பாருடா அதுதான் சூரியன்னு சொல்லித் தர வேணாமா?’
அப்படியே பொட்டில் அறைந்தது போலிருந்தது.
வெறுமனே கரும்பலகையை மட்டுமே பயன்படுத்தாமல் துணைக் கருவிகளையும் பயன்படுத்த வேண்டும். கற்றல்உபகரணங்களை போதுமன அளவிற்கு பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். காணொலிக் கருவிகளையும் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்றும் கல்வித்துறையாலும் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. அது மிகவும் அவசியம்தான். கற்றலை அது எளிமைப்படுத்துவதுடன் சுவாரசியமாக்கவும் செய்யும்.
ஆனால் அதன் அபத்தமான உச்சம் என்பது சூரியனை ஒரு படத்தைக் காட்டி சொல்லித் தருவதில் வந்து நிற்கிறது.
‘மைதானத்துக்கு கூட்டிட்டுபோயி, அண்ணாந்து பாருடா அதுதான் சூரியன்னு சொல்லித் தர வேணாமா?’
பெரியப் பெரிய கல்வியாளர்களின் வாயிலிருந்து வந்திருக்கவேண்டிய கூற்று ஒரு குழந்தையின் வாயிலிருந்து வந்திருக்கிறது. தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் இதை தெய்வத்தின் குரலாகவே கொள்ள வேண்டும்.
மைதானத்திற்கு மேலே கொண்டு நிறுத்தி சூரியனை அண்ணாந்து பார்க்க சொல்லிவிட்டு அவர்களிடம் சின்ன சின்னதாய் கேள்விகளை கேட்டுப் பார்த்தால் விஷயம் எவ்வளவு அழகாக விரியும்.
ஒரு சின்னக் குழந்தையிடம் சூரியன் எங்கே இருக்கிறது என்று கேட்டால் ‘அங்கே’ என்று வானத்தைக் காட்டுவான். ‘அங்கே என்றால் எங்கே? என்று கேட்டால் ’மேலே’ என்பான். ‘மேலே என்றால்…?’ என்று நீட்டினால் ‘வானத்துல’ என்பான். ‘எவ்வளவு தூரம்?’ என்றால் LKG குழந்தை அகலக் கைகளை விரித்து ‘இவ்வளவு தூரம்’ என்பான். குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப ‘ரொம்ப தூரம்’ என்று ஆரம்பித்து இத்தனை கிலோமீட்டர் என்பதுவரை சொல்லிக் கொடுக்கலாம்.
’சூரியன் குளிரும்தானே?’ என்று சொல்லிப் பாருங்கள், ‘இல்ல, பொய்யி, சூரியன் சுடும் ‘ என்பான். ஏன் சுடும் என்று கேட்டுவிட்டு ‘காரணம் அது நெருப்பு’ என்று ஆரம்பித்து அது ஒரு நெருப்பு பந்து என்பதை சொல்லித் தரலாம்.
கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதாக சொல்வதெல்லாம் பொய். சூரியன் நிலையாய் நிற்கிறது, அது பயணிப்பதெல்லாம் இல்லை. பூமி தன்னைத் தானே சுழற்றிக் கொள்வதால் அப்படித் தோன்றுகிறது என்பது வரை சொல்லிக் கொடுத்துவிட்டு, அது எப்படி என்பதற்குத்தான் கற்றல் கருவிகளையும் காணொலிக் காட்சியையும் பயன்படுத்தினால் கற்றல் எத்தனை பயனுள்ளதாக அமையும்.
கல்லணை குறித்து பாடம் நடத்தும் போது ஒரு சராசரி ஆசிரியர் கல்லணை கரிகாலன் என்கிற சோழ மன்னனால் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது என்றும் இத்தனை ஆண்டு காலத்திற்கு முன்னால் கட்டப்பட்டிருந்தாலும் இன்னும் எந்தவித கீறலுமின்றி இருப்பதாகவும் சொல்லித் தருவார்.
அதைவிட நல்ல ஆசிரியர் கல்லணையின் படத்தை கரும்பலகையில் மாட்டி நடத்துவார். வெறுமனே கல்லணையைப் பற்றி லெக்சர் அடிக்கும் பொழுதைவிட படத்தைக் காட்டி நடத்துவது கூடுதல் புரிதலைத் தரும். அதைவிட இன்னும் கொஞ்சம் நல்ல ஆசிரியர் காணொலியைப் பயன்படுத்தி நடத்துவார். இப்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் புரியும்.
அக்கறையுள்ள ஒரு ஆசிரியர் குழந்தைகளை கல்லணைக்கு அழைத்துப் போக முயற்சிப்பார்.
இதை எழுதும்பொழுது திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மற்றும் கரூர் போன்ற திருச்சிக்கு அருகில் உள்ள எத்தனை பள்ளிகள் தங்கள் மாணவர்களை கல்லணைக்கு அழைத்துப் போயிருப்பார்கள் என்ற என் ஐயம் வலியினைத் தருகிறது.
உலகின் மிகச் சிறந்த சிலைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவிலில் உள்ளன . இந்தத் தகவல்களையும் அதன் சிறப்புகளையும் நரம்புகள் புடைக்க சொல்லித் தருகிறோம். ஆவுடையார் கோயில் சிற்பங்களையும் உலகின் மிகச் சிறந்த குகை ஓவியங்களுள் ஒன்றாகத் திகழும் சித்தன்னவாசல் ஓவியங்களையும் பார்த்திராத புதுக்கோட்டை மாவட்டக் குழந்தைகள் எத்தனை பேர்?
மிகப் பெரிய பேரழிவை நிகழ்த்திவிட்டு ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தையைப் போல் அரவமே இல்லாமல் கிடக்கும் பாக் ஜலசந்தியை, ராமர் பாலம் என்றழைக்கப்படுகிற மணல் திட்டை தனுஷ்கோடி சென்று பார்க்காத ராமனாதபுரம் குழந்தைகள் எத்தனை பேர்?
தனுஷ்கோடி கடற்கரையில் நின்றுகொண்டு கல்லூரி மாணவர்களுக்கு சேதுசமுத்திரம் திட்டம் பற்றி விளக்கமாக புரிய வைத்தால் மாணவத்திரள் என்றேனும் ஒருநாள் அந்தத் திட்டத்தை தங்களது போராட்டத்தின் வழி சாத்தியமாக்கிவிட மாட்டார்களா?
இந்தியாவின் தொன்மையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்கிறோம். இந்தக் கருத்தோடு நமக்கிருக்கும் முரண்பாட்டை இந்தத் தொடரிலேயே ஒருமுறை எழுதிவிட வேண்டும் என்பதே என் விருப்பம். அதைவிடவும், ஏன், உலகின் ஆகத் தொன்மையான நாகரீகமாக சொல்லப்படும் மெசபடோமியா நாகரீகத்தைவிடவும் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகள் அதிகத் தொன்மையான நாகரீகம் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகே இருந்ததாக தனது ஆழ்கடல் ஆராய்ச்சி மூலம் கிரஹாம் ஆன்ஹூக் அவர்கள் நிறுவியதையும் அவரது ஆய்வு முடிவுகள் வெளிச்சம் பெறாமல் போனதற்கான காரணங்களையும் அதன் பின்னனியில் விரவிக் கிடக்கும் அரசியலையும்கூட எழுதிவிட முடியும் என்றே நம்புகிறேன்.
சிந்துச்சமவெளி நாகரீகத்திற்கான சான்றுகள் மொஹஞ்சதாரோ, மற்றும் ஹரப்பா நகரங்களில் பூமியை அகழ்வாராய்ச்சி செய்தபோது கண்டடையப் பட்டதாக சொல்லித் தரப்படுகிறது. அவ்விடங்களில் பூமிக்கு கீழே புதையுண்டுப் போயிருக்கிற நகரங்கள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் அந்த நகரங்களின் கட்டமைப்பினைக் கொண்டு அந்த மக்களின் நாகரீகம்தான் இந்தியாவின் தொன்மையான நாகரீகம் என்று சொல்லித் தரப் படுவதை எல்லாம் விட்டு விடுவோம்.
இதைப் படிக்கிறபோது பூமிக்கு கீழே புதையுண்டு கிடப்பதாக சொல்லப்படும் நகரங்கள் எப்படி இருக்கும்? என்ற சந்தேகம் குழந்தைகளுக்கு எழுமே, அதை அந்த இடங்களுக்கு கொண்டுபோய் காட்டினால் புதையுண்ட நகரங்கள் எப்படி இருக்கும் என்ற பிம்பங்கள் குழந்தைகளுக்கு கட்டுடையுமல்லவா?
மொஹஞ்சதாரோவும் ஹரப்பாவும் என்ன போய்வரக் கூடிய தூரத்திலா இருக்கிறது என்று கேட்பவர்கள் இருக்கவே கூடும். அது இல்லைதான், ஆனால் உட்கோட்டை நமக்கு கைக்கெட்டிய தூரத்தில்தானே இருக்கிறது. உட்கோட்டையிலும் பூமிக்கு அடியில் புதையுண்டு போயிருக்கிற ஒரு நகரம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதே. போதிய கவனிப்பாரற்று அழிந்துகொண்டிருக்கிறதே.
இதில் வருத்தம் என்னவெனில் கங்கைகொண்ட சோழபுரம் வரைக்கும் சுற்றுப் பயணத்தைத் திட்டமிடும் பள்ளிகள் அதற்குப் பக்கத்தில் நான்கு கிலோமீட்டர் நடை பயணத்தில் இருக்கக் கூடிய உட்கோட்டையை கண்டு கொள்வதில்லை என்பதுதான்.
தமிழ்நாட்டில் உள்ள உட்கோட்டையில் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் புதையுண்ட நகரம் ஒன்றிருப்பது தமிழ்நாட்டில் உள்ள பலருக்கு ஏன் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கே தெரியாது.
இந்தச் சூழலில் சென்ற ஆண்டு மதுரை மாவட்டத்தில் ஒரு புதையுண்ட நகரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். இவற்றைப் பற்றிய போதிய அறிவு என்பது அந்த இடங்களை பார்வையிடுவதன் மூலமே கிடைக்கும். அது நீண்ட ஆய்வுகளுக்கு வித்திடும். நீண்ட ஆய்வுகள் வரலாற்றையே புரட்டிப் போடும்.
மாணவர்களுக்கு எத்தனையோ விலையில்லாத் திட்டங்களைத் தரும் அரசு மாணவர்களை அவர்களுக்கு அருகில் இருக்கக் கூடிய இடங்களுக்கு அழைத்துப் போகிற திட்டத்தை கட்டமைக்க வேண்டும்.



Tuesday, June 21, 2016

27 உண்மையை தேவையான சூட்டில்

ஒரு ஆசிரியை தன் குழந்தைகளிடம் கேட்கிறார்,

‘Name the nation we all hate?’

ஒரு குழந்தை சொல்கிறான்,

‘Exami_Nation’.

கணிதத்தில் தனக்கிருக்கும் சந்தேகத்தை தீர்த்து வைக்குமாறு தனது தாயிடம் ஒரு பிள்ளை கேட்கிறான். அந்த அளவிற்கெல்லாம் தன்னை தனது தாய் தந்தை படிக்கவைக்கவில்லையே என்று புலம்பும் தாயிடம் அந்தப் பிள்ளை கூறுகிறான்,

உனக்கு மட்டும் எப்படிம்மா இவ்வளவு நல்ல அப்பா அம்மா வாச்சாங்க

இந்த இரண்டு துணுக்குகளையும் தங்களது முகநூல் பக்கங்களில் கீருத்திகாவும் கீர்த்தனாவும் பகிர்ந்திருந்தார்கள். கீர்த்தனா பதினோறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பிற்கு நகர்ந்திருக்கும் மாணவி. கிருத்திகா ஒரு மேல்நிலைப் பள்ளியின் முதுகலை இயற்பியல் ஆசிரியை.

இவற்ரை வெறும் நகைச்சுவைத் துணுக்குகளாக மட்டும் பார்ப்பவர்கள் இதற்கு மேல் தொடராமல்கூட நகர்ந்து விடலாம். ஆனால் இவற்றில் இருக்கும் நகைச்சுவையைக் கடந்து விசனப் படுவதற்கும் விவாதிப்பதற்கும் இருப்பதாக உணர்பவர்களோடும் இவற்றைப் படிக்கும் போது புன்னகையோடு தங்கள் கண்கள் ஈரப்படுவதை உணர்பவர்களோடும் உரையாடலை நிகழ்த்த ஆசைப் படுகிறேன்.

இந்த இரண்டு துணுக்குகளையும் தங்கள் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இருவரும் அக்கா தங்கைகள். கீர்த்தனாவிற்கு விடுமுறை நாட்களில் கிருத்திகாதான் இயற்பியல் நடத்துகிறாள். அந்த வகையில் கீர்த்தனா கிருத்திகாவின் மாணவியுமாகிறாள். ஆக, ஒரு ஆசிரியையும்  ஒரு மாணவியும் இந்த இரண்டு துணுக்குகளையும் தங்கள் தங்கள் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். வேறு வகையில் இந்த இரண்டு துணுக்குகளும் ஒரே நேரத்தில் ஒரு மாணவியையும் அவளது ஆசிரியையும் ஈர்த்திருக்கிறது.

முதல் துணுக்கில் ஒரு குழந்தைக்கு தேர்வு முறையின் மேல் இருக்கும் அலுப்பும் வெளிப்படுகிறது. இரண்டாவது துணுக்கில் ‘நல்ல வேளை நீ படிக்காம தப்பிச்ச’ என்கிற பொறாமை கலந்த குழந்தையின் ஆதங்கம் வெளிப்படுகிறது. இந்த இரண்டு மன நிலைகளோடும் குழந்தையின் மனநிலையும் ஆசிரியையின் மனநிலையும் ஒத்துப் போகிறது. இதை ஆரோக்கியமானதாகவே பார்க்கிறேன்.

இப்போதிருக்கிற பாடத்திட்டத்தோடும் தேர்வுமுறையோடும் ஒத்துப் போகாத மனநிலையில் ஆசிரியரும் மாணவரும் இருப்பது இவற்றில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு உதவும்.
சரி, இவர்கள் இருவரும் சலித்துக் கொள்கிற மாதிரி, அல்லது அவர்கள் மனதில் ஒட்டாத மாதிரியாக இந்தக் கல்வித் திட்டமும், தேர்வு முறையும் மாறிப்போனதற்கான காரணங்கள் என்ன?

அதற்கான காரணங்கள் நிறைய. அவற்றுள் ஆக முக்கியமான காரணமாக நான் பார்ப்பது அவை இரண்டும் மனித வாழ்க்கையோடு கொஞ்சமும் ஒட்டாமல் இருப்பது. பஞ்ச பூதங்கள் பற்றிய அறிவை வித விதமாக போதிக்கும் கல்வித்திட்டமும் சரியாக போய் சேர்ந்திருக்கிறதா என்று சோதிக்கிற தேர்வு முறையும் பஞ்ச பூதங்களில் எது ஒன்றையும் உருவாக்க முடியாது என்கிற உண்மையை குழந்தைகளுக்கு சொல்லித் தருவதில்லை. அதிலும் குறிப்பாக நீரை மனிதனால் ஆக்கவோ அழிக்கவோ இயலாது என்பதை போதுமான அளவிற்கு என்றுகூட இல்லை சொல்லியே தருவதில்லை என்பதுதான் உண்மை.

பூமிக்குள் ஏதோ நீர் ஊறிக்கொண்டிருப்பது போலத்தான் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேலான பள்ளிக் குழந்தைகளின் புரிதல் இருக்கிறது. ஒரு சொட்டு நீரும் புதிதாய் உருவாவது இல்லை என்கிற உண்மையை ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் அறிந்துகொள்ள நேர்கிறபோது அவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால் அந்த ஏதோ ஒரு புள்ளி என்பது அவர்களது கல்வித் தளத்தில் இருந்து பெரும்பாலும் கிடைப்பது இல்லை என்பதுதான் உண்மை.

நிலத்தடிநீர் என்பது ஒரு வங்கிச் சேமிப்பு மாதிரி என்பதை நாம் இன்னும் நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருவதில்லை. எடுக்க எடுக்க ஒருபோதும் நீர் சுரக்காது என்கிற உண்மை குறித்து இன்னும் நம் பாடத்திட்டம் அக்கறை கொள்ளவில்லை. எடுக்க எடுக்க நீர் குறையும் என்பதையும் பூமிக்கு அடியில் உள்ள நீரை நம் தேவைக்கு எடுத்து பயன்படுத்தும் நாம் மீண்டும் சேமித்தால் மட்டுமே நிலத்தடி நீராதாரம் ஜீவித்து நிற்கும் என்கிற உண்மையை குழந்தைகள் அறியாமல்தான் இருக்கிறார்கள்.

மட்டுமல்ல, நிலத்தடி நீரை வறட்டுத்தனமாக உறிஞ்சி எடுப்பதால் பூமிக்குள் ஒரு வெற்றிடம் ஏற்படும் என்பதையும் அந்த வெற்றிடம் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுப்பதில்லை. அல்லது அப்படியே சொல்லிக் கொடுத்தாலும் அதை சமூக அக்கறையோடு சொல்லிக் கொடுக்காமல் மதிப்பெண்ணிற்காக மட்டுமே சொல்லித் தருகிறோம். ஐந்து மதிப்பெண்களுக்கு குழந்தைகளின் நீர்மேலாண்மையை நாம் கொள்முதல் செய்து கொள்கிறோம். அல்லது தங்களது நீர் மேலாண்மை பற்றிய ஞானத்தை பிள்ளைகள் ஐந்து மதிப்பெண்களுக்கு தேர்வறையில் விற்று விடுகிறார்கள்.

’தொட்டணைத்து ஊறும் மணற்கேணி’ என்று சொல்லிக் கொடுக்கிறோம். ஆற்று மணலைத் தோண்டத் தோண்ட நீர் ஊறும் என்றும் அதுபோல கற்க கற்க மனிதனுக்கு அறிவு ஊறும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். மணலூற்று நீரை கல்விக்கு உவமையாக சொல்லிக் கொடுக்கிறோம். வள்ளுவர் இதை எழுதிய காலம் தொட்டு சற்று முந்தைய காலம் வரைக்கும் இது சரியாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழகத்து நதிகளில் தோண்டினால் எல்லாம் நீர் வராது. அதற்கு போர் போட வேண்டும். காரணம் எந்த ஆற்றிலும் இப்போது மணலே இல்லை. இதே நிலை தொடறும் எனில் அப்படி மிச்சம் மீதம் இருக்கிற மணலும் இன்று முதல் வகுப்பு படிக்கிற குழந்தை தனது பள்ளிக் கல்வியை நிறைவு செய்வதற்குள் இல்லாமல் போய்விடும். எனவே உவமையை மாற்றிச் சொல்லித் தரவேண்டிய நிலை வாய்த்திருக்கிறது என்பதை நாமின்னும் உணர்ந்தோம் இல்லை.

மழை பெய்வது, நதிகளில் நீர் வருவது என்பவற்றைப் போலவே நதிகளில் மணல் இருப்பதும் அவசியம் என்பதையும் பிள்ளைகளுக்கு உணர்வுப் பூர்வமாக சொல்லிக் கொடுத்துவிட்டோம் எனில் ஆற்று மணலை அள்ளிப்போகும் தைரியம் எவனுக்கு வரும்? ஆற்று மணலின் அவசியத்தை மதிப்பெண்ணிற்காக விற்காமல் உசிர் கசிய சொல்லி உணர வைத்துவிட்டோமெனில் பிறகு ஆற்று மணலை பாதுகாக்கிற காரியத்தை மாணவ சக்தி பார்த்துக் கொள்ளும்.

இந்தியாவின் பெரும்பான்மை பகுதிகளில்குடிநீர்ப் பஞ்சம் இருக்கிறது என்கிற உண்மையை சொல்லிக் கொடுக்கிறோம். உலகின் பெரும் பகுதியில் இதுதான் நிலைமை என்பதையும் அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அடுத்த உலகப்போர் என்பது குடிநீருக்காகத்தான் வரும் என்பது பிள்ளைகளுக்கு தெரிந்தே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா இந்த யுத்தத்தை இந்தியாவின்மீது தொடுத்துவிட்டது. தெற்கின் ஜீவ நதியான தாமிரபரணி நீரை ராட்ஷச துளைகள் போட்டு கொக்கோ கோலா மூலம் உறிஞ்சிக் கொழுக்கிறது. இதன் ஆபத்தை பள்ளி பிள்ளைகள் இன்னும் உணரவில்லை.

அமெரிக்காவில் நிலத்தடி நீர் இல்லையா என்ன. பிறகு ஏன் அவர்கள் தமிழகத்தில் நீரை உறிஞ்சி எடுக்க வேண்டும்? காரணம் மிக எளிதானது. காசை சம்பாரிக்கலாம் எப்போது வேண்டுமானாலும். நீரை உற்பத்தி செய்ய முடியாது என்கிற உண்மையை உணர்ந்த அமெரிக்கா நமது அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இருக்கும் பணத்தாசையை பயன்படுத்திக் கொண்டு நமது நீராதாரத்தை சுரண்டுவதன் மூலம் தங்களது நீராதாரத்தை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள் என்கிற உண்மையை தேவையான சூட்டில் கொடுத்தால் கொக்கோகோலாவை ஒருமாத காலத்திற்குள் விரட்டிவிடமாட்டார்களா நம் பிள்ளைகள்.

ஓரிடத்தில் இருக்கும் வறட்சியை பிரிதோர் இடத்திலிருந்து நீரை எடுத்து வந்து சமாளிப்பது என்பது மோசமான நீர் மேலாண்மை. இதை மோசமான நீர் மேலாண்மை என்பதுகூட தவறு. இது அயோக்கியத்தனமான வியாபாரம். மாறாக ஒரு இடத்தின் வறட்சியை அந்தப் பகுதியில் எதோ செய்வதன் மூலமே சரி செய்யும் வழிமுறைகளை செய்வதுதான் நீர் மேலாண்மை.

ராஜஸ்தானில் கடும் வறட்சி. வெளிமாநிலங்களில் இருந்து ரயில்மூலம் நீரைக் கொண்டு வந்து மக்களுக்கு விநியோகம் செய்தது அரசு. இதைத் தவறென்றெல்லாம் சொல்ல இயலாது. மக்களின் தாகத்தை தணிக்கும் இந்த செயலை எப்படி தவறென்பது? ஆனால் பிரிதொரு இடத்தில் நிலத்தடிநீரை பேரதிகமாய் எடுப்பதன் மூலம் அந்தப் பகுதியின் நீராதாரம் பாதிக்கும் என்கிற உண்மையை உணர்ந்திருக்கிறோமா?

இதற்கு மாற்று இருக்கிறதா? இருக்கிறது என்பதை ஒரு பெண் நிரூபித்திருக்கிறார். ராஜஸ்தான் வறட்சியை அரசு பிற மாநிலத்து நீரின் உதவியோடு ஈடுகட்டுவதைப் பார்த்து துயறுற்ற அவர் ராஜஸ்தான் செல்கிறார். அங்குள்ள மக்களை சந்தித்து ராஜஸ்தானில் மழைக்காலத்தில் மட்டுமே உயிர்பெறும் சிறுசிறு ஓடைகள் குறுக்கே தடுப்பணைகளை கட்டி நீரை சேமிப்பதன் மூலம் வறட்சியை எதிர்கொள்ள முடியும் என்று சொல்கிறார். நம்பவில்லை என்பதுகூட சையாகாது, யாருமே காதுகொடுத்து கேட்கவே தயாராக இல்லை. அவரைக் கண்டாலே கிராமத்து மக்கள் பிள்ளிப் பிடிக்கிறவனைப் பார்த்து ஓடுவதுபோல் ஓடத் தொடங்கினார்கள்.

‘நீங்கள்
நின்றால்
சில சொல்கின்றேன்
சென்றால்
பின் தொடர்கின்றேன்’

என்று ஒருமுறை மேத்தா எழுதினார். இவரும் அதைப்போலவே ஓடுகிற மக்களைப் பின் தொடர்ந்தார். ஒரு புள்ளியில் நின்று கேட்கத் தொடங்கினார்கள். தடுப்பணைகளைக் கட்டினார்கள். சொந்த உடல் உழைப்பைத் தந்தார்கள். குடிநீர் மட்டும் அல்ல விவசாயத்திற்கே இப்போது நீர் இருக்கிறது. விவசாயமே செய்திராத ஒரு தலைமுறை இப்போது அங்கே விவசாயம் செய்யத் தொடங்கி இருக்கிறது.

இதை அல்லவா பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும். இதை செய்துவிட்டோம் எனில் மாணவச் சமூகம் மற்றதைப் பார்த்துக் கொள்ளாதா?

நீர் மேலாண்மையை மதிப்பெண்களுக்காக அல்லாமல் ஊனுருக உயிர் கசிய சொல்லிக் கொடுப்போம் எனில் அடுத்த உலகப்போரை பிள்ளைகள் தடுப்பார்கள்.     



Friday, May 27, 2016

26 எனக்கொரு மகள், ஒரு திருநங்கை


தன்னிரு கைகளால்
குழந்தையின் முகத்தை வருடி
தன் தலையில் சொடுக்கிட்டபடி
எங்களை
கடந்து செல்லும் திருநங்கைக்கு
அத்த டாட்டா என்றது குழந்தை’

என்ற திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் கவிதை ஒரு காட்சியாக விரியும். அது ஒரு ரயிலடியாகவோ, பேருந்து நிலையமாகவோ, ஆலயமாகவோ, திருவிழாக் கூட்டமாகவோ இருக்கக் கூடும். அல்லது அது ஒரு மின்சார ரயிலாகக்கூட இருக்கக் கூடும். இதுமாதிரியான ஏதோ ஒரு இடத்தில்தான் திருநங்கைகளின் நடமாட்டத்தை காண முடியும்.

இருவரோ அல்லது அதற்கும் அதிகமான எண்ணிக்கையிலோ உரத்துக் கை தட்டியபடி கட்டையுமில்லாத மென்மையுமில்லாத ஒருவிதமான வித்தியாசமான குரலில் ‘அண்ணா’, ‘அக்கா’ என்று பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள்தான் அண்ணா என்றும் அக்கா என்றும் அன்பொழுக அழைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அநத இடத்தில் இருப்பவர்கள் அந்த நேரத்தில் அந்த இடத்தில் இருக்க நேர்ந்தமைக்காக அனைத்தையும் மனதிற்குள் சபித்தபடி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்வார்கள், அல்லது கீழே குனிந்து கொள்வார்கள். இவர்கள் அவர்களுக்கருகில் வருவதையோ தன்னோடு இறைஞ்சுதலின் நிமித்தம் ஓரிரு வார்த்தைகள் உரையாடுவதையோ அவர்கள் விரும்புவதில்லை. ஒருவிதமான அருவருப்போடும் அசூசையோடுமே இவர்களை பார்ப்பதை நாம் பார்க்க முடியும்.

‘கண்ணில்லாதவர்கள்
கையேந்துகிறபோது
நாமெல்லாம் குருடர்கள்’

என்று தங்கம் மூர்த்தி ஒருமுறை எழுதினார். கண்ணில்லாதவர்கள் நம்மிடத்திலே யாசித்து கையேந்துகிறபோது அதைக் காணாததுபோல் நாம் நமது கவனத்தை வேறு பக்கம் திருப்புவோம் அல்லவா. எனில், அந்த நேரத்தில் பார்வையற்றவர்கள் நம்மிடம் உதவி கோருவதை பார்க்காதவாறு அதாவது கண் தெரியாதவர்போல நடிப்போம். அவர்களாவது குருடர்கள், நாமோ நடிப்புக் குருடர்கள் என்று அழுதுகொண்டே பகடி செய்கிறார் தங்கம் மூர்த்தி. 

அதேபோல்தான் இங்கும் அவர்கள் அருவருப்பானவர்கள் என்று கூசிக் குறுகி அவர்களை தவிர்க்க முயற்சிக்கும் எத்தனிப்பில் இவர்கள் அருவருப்பின் உச்சமாய் ஆவார்கள்.

ஜீரணிக்கவே முடியாத இந்த அக்கிரமத்தைக்கூட ஜீரணித்து விடலாம். இவர்களை பகடி செய்தும் அருவருக்கத் தக்க வகையில் உடல் மொழியை பயன்படுத்தவும் செய்யும் நபர்களது செயலைத்தான் எத்தனை லிட்டர் ஜீரக ரசம் குடித்தும் நம்மால் ஜீரணிக்க இயலாது.

இவர்களும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தவர்கள்தான். பிறவியிலேயே யாரும் திருநங்கையாகவோ அல்லது திருநம்பியாகவோ பிறப்பது இல்லை.

என் தந்தை ‘தாயுமானவர்’ என்றோ அல்லது என் தாய் ‘தந்தையுமானவர்’ என்றோ யாராவது எங்காவது பகிர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். அதாவது ஒரு தாய்க்கென்று சில குணங்களும் தந்தைக்கென்று சில குணங்களும் வரையறுக்கப் பட்டு உள்ளன. தந்தை செய்யவேண்டிய கடமைகளை ஒரு தாய் செய்து வளர்த்தால் அந்த மகனோ மகளோ தனது தாயைப் பற்றிக் குறிப்பிடும்போது என் தாய் ‘தந்தையுமானவர்’ என்று பெருமைப்பட சொல்வார். அதேபோல ஒரு தந்தை தாய் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்து வளர்த்தால் அந்த மகனோ அல்லது மகளோ எனது தந்தை ‘தாய்மானவர்’ என்ருஇ பெருமைபடக் கூறுவார்.

அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் எல்லா தாய்மார்களுக்குள்ளும் தந்தையின் குணமும் இருக்கும், எல்லா தந்தைகளிடமும் தாயின் குணங்களும் இருக்கும்.

அதேபோல்தான் எல்லா ஆண்களுக்குள்ளும் பெண்மையும் , எல்லா பெண்களுக்குள்ளும் ஆண்மையும் இருக்கும். ஒரு பெண் உடலில் பெண் குணங்கள் அதிகமாகவும் ஆண் குணங்கள் குறைவாகவும் இருந்தால் அவள் பெண். ஒரு ஆண் உடலில் ஆண் குணம் அதிகமாகவும் பெண் குணம் குறைவாகவும் இருந்தால் அவன் ஆண். இப்படி அமைவது இயல்பான ஒன்றாக அமையும்.  இதனால் சமூகத்தில் எந்த முடுக்கிலும் இவர்களால் மிக இயல்பாக உறவாட முடிகிறது.

ஒரு பெண் உடலில் பெண் குணம் குறைவாகவும் ஆண் குணம் அதிகமாகவும் இருந்தால் அவன் திருநம்பி. ஒரு ஆண் உடலில் ஆண் குணம் குறைவாகவும் பெண் குணம் அதிகமாகவும் இருந்தால் அவள் திருநங்கை. இது இயல்புக்கு மாறாக இருப்பதால் நிறைய பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூகத்தில் இவர்களுக்கான இடமும் அங்கீகாரமும் இதுவரை கட்டமைக்கப்படவே இல்லை.

‘ஆண்பால்’ , ‘பெண்பால்’ ஆகிய இரண்டு வகையான பாலினங்களே பொதுப் புத்தியில் அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் இந்த இரண்டு வகையினங்களைச் சார்ந்த ஜீவராசிகள் மட்டுமே மனிதப் பிறவிகளாக அங்கீகரிக்கப் படுகிறார்கள். அரசு ஆவணங்களில்கூட மிக சமீபம் வரை இவர்களுக்கான இடம் ஒதுக்கப் படாமலேயே இருந்தது.

ஒரு காலம் வரைக்கும் ஆணாகவே வளர்ந்து வரும் இவர்கள் தங்களுக்குள் இருக்கும் அதிகப்படியான பெண்மையால் ஆண்களோடு பழகுவதில் ஒரு விதமான கூச்சத்தைப் பையப் பைய உணர்கிறார்கள். மெல்ல மெல்ல பெண்களோடு பெண்களாய் உறவாட தலைப் படுகிறார்கள். வீடுகளில் உள்ள அவர்களது சகோதரிகளும் தாயுமே இதைக் கண்டு ஒருவித அசூசையோடும் முகச் சுளிப்போடும் இவர்களைத் தவிர்க்கத் தலைப்படுகிறார்கள். வீட்டில் இருக்கும் ஆண்களும் ஒருவித அசூசையோடே இதைப் பார்க்கிறார்கள்.

இந்தக் கால கட்டத்தில் இவர்கள் வீட்டைவிட்டே ஓடிப் போகிறார்கள். ஏதோ ஒரு வகையில் இவர்கள் திருநங்கைகளோடு ஐக்கியம் ஆகிவிடுகிறார்கள். திருநங்கைகளும் இவர்களை மிகுந்த வாஞ்சையோடு அரவணைத்துக் கொள்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் அங்கீகரிக்கப் படாத அறுவை சிகிச்சை மூலம் தங்களது ஆணுறுப்பை அப்புறப்படுத்தி விட்டு பெண்ணுறுப்பை ஏற்கிறார்கள்.

இப்போதுதான் ஒரு திருநங்கை காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியேற்றுள்ளார். இன்னொமொரு திருநங்கை மேயராகியுள்ளார். இப்படி மிக மிக குறைவான எண்ணிக்கையிலேயே இவர்கள் பணியமர்த்தப் படுவதும் அங்கீகரிக்கப் படுவதுமாக உள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றும் என்ற அளவு தாண்டி இவர்களை பள்ளிகளில் கல்லூரிகளில் சேர்ப்பது இல்லை. அவ்வளவு எளிதாக இவர்களால் ஓட்டுனர் உரிமம் பெற இயலாது. இவர்களுக்கு குடும்ப அட்டைகள் கிடையாது. குடும்பம் இல்லாத காரணத்தால் இவர்களுக்கு பல நாடுகள் விசா வழங்குவதுகூட இல்லை.

இவர்கள் திருமணம் செய்துகொள்ள இயலாது அல்லது செய்து கொள்வது இல்லை என்கிற வகையில் இவர்களுக்கு என்று தனியாக குடும்பம் இல்லை என்பதைக்கூட நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு குடும்பத்திலிருந்துதானே இவர்கள் வந்திருக்க முடியும். சுயம்புவாக இவர்களால் தோன்றியிருக்க முடியாதே. இவர்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு அப்பாவும் அம்மாவும் இருந்திருக்க வேண்டுமே. இவர்களுக்கும் ஒரு அப்பா அம்மா இருந்திருக்க வேண்டும் எனும் பட்சத்திலிவர்கள்து பெயரும் ஒரு குடும்ப அட்டையில் நிச்சயமாய் இருந்திருக்க வேண்டுமே.

மகனாக இருந்தவன் ஏதோ ஒரு புள்ளியில் திருநங்கையாக மாறியவுடன் தகப்பன் தகப்பன் இல்லை என்று ஆகிவிடுமா? எது எப்படியோ அந்தத் திருநங்கையை பெற்றவன் நீதானே? உனக்கும் உன் மனைவிக்கும் பிறந்த குழந்தைதானே அந்தத் திருநங்கை. தான் ஆண் இல்லை என்பதை உணர்ந்த அந்தத் தருணத்தில் அவளை வீட்டிலிருப்பவர் யாரும் தேடி அலைவது இல்லையே. ஒரு நாய்க்குட்டி காணாமல் போனால்கூட சாப்பிடாமல் கொள்ளாமல் தேடியலையும் இந்த மனித சமூகம் தான் பெற்ற குழந்தை காணாமல்போனது தெரிந்தபின்பும் தேடியலைய மறுக்கிறதே. எனில், திருநங்கை என்பவளை அந்தக் குடும்பம் எந்த அளவில் வைத்துப் பார்க்கிறது.

திருநங்கைகளாவது பரவாயில்லை. இந்த அளவில் பிளைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. திருநம்பிகளின் பாடு மிகவும் மோசமானது. ஒரு ஆண்பிள்ளை திருநங்கையாக மாறியதைக்கூட ஒருவித கருணையோடு பார்க்கத் தலைப்படும் இந்த சமூகம் ஒரு பெண் குழந்தை திருநம்பியாக மாறும்போது ஒருவித ஏளனத்தோடும் அருவருப்போடும் பார்க்கிறது. தனது மகன் திருநங்கையானாள் என்று தெரிந்ததும், அவள் ஓடிப்போன கையோடு உறவைத் துறந்து விட முடிகிறது ஒரு பெற்றோரால். ஆனால் தனது மகள் திருநம்பியாக மாறும்போது இந்தச்  சமூகம் அதை ஏளனமாய் பார்க்கும், தம்மால் தலை நிமிர்ந்து இந்த சமூகத்தில் நடமாட முடியாது என்று உணரத் தலைப்படுகிறார்கள். அதனால் ஏதோ ஒரு வகையில் அந்தக் குழந்தையைக் கொன்று விடுகிறார்கள்.

இவற்றிலிருந்து தப்பிய திருநம்பிகள் மிகக் குறைவு என்கிற வகையில் திருநம்பிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது.

’உங்களுக்கு எத்தனைப் பிள்ளைகள்?’ என்று கேட்டால் ’எனக்கு இரண்டு மகன் ஒரு திருநங்கை’ என்று எந்த விதமான கூச்சமும் இன்றி பதில் சொல்ல வேண்டும். உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனைபேர் என்று கேட்டால் ’மூனு ஆணு, ரெண்டு பொண்ணு, ஒரு திரு நம்பி’ என்று மிக இயல்பாய் ஒரு மனிதனிடமிருந்து பதில் வரவேண்டும். அனைத்து அரசு ஆவணங்களிலும் ஆண், பெண், திருநங்கை, திருநம்பி என்று பட்டியல் நீள வேண்டும். பெண்களுக்கு 33 சதவிகிதத்திற்காய் போராடுவது போலவே திருநங்க மற்றும் திருநம்பிகளுக்காகவும் ஒதுக்கீடு கேட்டு போராட வேண்டும்.

பேருந்தில், ரயிலடியில், ரயிலில், ஆலயத்தில், திருவிழாக்களில் மட்டுமல்ல வீடுகளிலும் இவர்கள் இயல்பாய் வளைய வருமளவிற்கு சமூகம் மாறாது.

இப்போது திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் அவர்களுடைய கவிதைக்கு வருவோம். அந்தக் கவிதையை கொஞ்சம் விரித்து காட்சிப் படுத்துவோம். ஏதோ நெரிசல் மிகுந்த இடம். வழக்கம் போலவே ஏதோ ஒரு திருநங்கை கைகளைத் தட்டியபடி பிச்சை கேட்டு வருகிறார். அவரது பார்வையில் ஒரு குழந்தை தட்டுப்படுகிறது. அந்தக் குழந்தையை அந்தத் திருநங்கை ஆசையோடு முத்தமிட்டு, இரண்டு கைகளாலும் அந்தக் குழந்தையின் முகத்தை வருடி நெட்டி முறித்தபடி நகர்கிறார்.

திருநங்கைகள் என்றால் ஏதோன் குழந்தைகளைத் திருடிக்கொண்டு போய்விடுவார்கள் என்றெல்லாம்கூட ஒரு விதமான பொதுப் புத்தி இருக்கிறது. ஆனால் திருநங்கைக்கும் குழந்தைகளின்மீது மற்றவர்களைப் போலவே அன்பு சுரக்கிறது.

அந்தக் கவிதையின் உச்சமாக நான் பார்ப்பது ‘அத்த டாட்டா’ என்று அந்தக் குழந்தை கூறியதுதான். தன்னை அத்தை என்று அழைத்த குழந்தையை தன் வாழ்நாள் முழுக்க அந்த்த் திருநங்கையால் மறக்க இயலாது. இன்னும் சொல்லப்போனால் அந்தத் திருநங்கை ‘அத்தை’ என ஒரு குழந்தை விளித்ததைக் கேட்டு அடக்க முடியாமல்கூட அழுதுகொண்டே போயிருக்கக் கூடும்.

1)   திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு கல்வியில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்
2)   பொது இடங்களில் சக மனிதராக மதிக்கப்பட வேண்டும்
3)   தான் ஒரு திருநங்கை என்று உணரும் பொழுதில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய சூழல் இல்லாமல் போகவேண்டும்
4)   வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு வேண்டும்
5)   சொத்தில் பங்கு வேண்டும்

இவை எல்லாம் சாத்தியப்பட வேண்டுமெனில் திருநங்கையை ‘அத்த’ என விளித்த குழந்தையாய் எல்லா மாணவர்களையும் கல்வி மறுபிரசவிக்க வேண்டும். திருநம்பி, திருநங்கைகளை குடும்பத்தில் ஒருவராய் ஏற்கும் மனப் பக்குவத்தை தரக்கூடிய கல்விமுறை கட்டமைக்கப் பட்டால் மட்டுமே எதிர்காலத்திலாவது இது சாத்தியப் படும்.  


  

Saturday, April 30, 2016

25 பள்ளிக்கொரு இன்சினரேட்டர்

சமீபத்திய பெருமழை எத்தனையோ பேரழிவுகளை கொண்டு வந்திருந்தாலும் சில நல்லதுகளையும் சேர்த்தே நமக்கு கொடுத்தது. அவற்றில் மிக முக்கியமான மூன்று விஷயங்களாக நான் கருதுவது

1)   இஸ்லாமிய சமூகத்தின் மீதான பொய்யான பிம்பங்களை அழித்தொழித்த  இஸ்லாமிய பிள்ளைகளின் தியாகம் செறிந்த மக்கள் சேவையும், அது கொடையளித்த மதம் கடந்த மனித நேயமும்.
2)   கூவத்தை சில காலம் சுத்தமாக வைத்திருந்தது
3)   ‘நாப்கின்’ என்கிற வார்த்தையைக் கேட்டாலே தீட்டுப் பட்டுவிட்டதுபோல் இருந்துவந்த அசூசையை பெருமளவு துடைத்துப் போட்டது.

வெள்ளக் காலத்தில் கடலூருக்கு கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் நாப்கின்களாவது என் மூலமாக சென்றிருக்கும். ’தோழர் இங்க எல்லா பெண்களும் பேண்டீஸ் போடறது இல்ல. எனவே பெல்ட் வைத்த நாப்கினாக வாங்கி அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்’ என்று களத்தில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்த தோழர் ஜோதிமணி என்னோடு எந்த விதமான அசூசையும் இல்லாமல் இயல்பாக என்னோடு பேச முடிந்தது. எந்தவிதமான முகச் சுளிப்பும் அசூசையும் என்றி என்னால் கேட்கவும் முடிந்தது. 

‘நாப்கின்’ பற்றிய விளம்பரங்கள் வந்த புதிதில் ‘சேய், இதுக்கெல்லாம் கூடவா விளம்பரம் போடுவாய்ங்க?’ என்று முகம் சுளித்த நண்பர்களை எனக்குத் தெரியும் என்பதுகூட பொய்யானதுதான். காரணம், நானே அந்த விளம்பரங்கள் வந்த புதிதில் ஒருவிதமான அசூசையோடு முகம் சுளித்திருக்கிறேன். இன்னும் சிலர் அந்த விளம்பரங்கள் வந்ததும் சேனலை மாற்றுவதை பார்த்திருக்கிறேன். தொலைக்காட்சிப் பெட்டிகளின் மீது தண்ணீர் விட்டுக் கழுவாத குறையாக ‘தீட்டுத் துணிக்கெல்லாம் விளம்பரம் போட வந்துட்டாய்ங்க’ என்று அங்கலாய்த்தவர்களை எனக்குத் தெரியும். ‘குடும்பத்தோடு பார்க்கக்கூடாத திரைப்படங்கள்’ என்பதுபோல் ‘குடும்பத்தோடு பார்க்கக்கூடாத விளம்பரங்கள்’ என்பதாக நாப்கின் விளம்பரங்கள் பச்சைக் குத்தப் பட்டிருந்தன.

’அந்த மூன்று நாட்கள்’ என்று மாதவிடாய் நாட்களுக்கு பொதுப்புத்தியில் பெயர். ‘அம்மா தீட்டாயிட்டா, அவளத் தொடக்கூடாது’ என்று தங்கள் குழந்தைகளிடம் சொன்ன தகப்பன்மார்களை, பாட்டிகளை, அத்தைகளை எனக்குத் தெரியும். வீட்டில் ஒரு இருட்டு மூலையில் அவர்களுக்கான இடம் ஒதுக்கப் பட்டிருக்கும். இன்னும் கொஞ்சம் காலம் கடந்து முன் சென்று பார்ப்போமெனில் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு அத்தகைய இருட்டு மூலையும் இல்லாமல்தான் இருந்தது. ‘இதுமாதிரி காலத்தில் பொண்டுக ஒதுங்கறதுக்குன்னு ஊருக்குள்ள சத்திரம் மாதிரி பொது இடம் இருக்கும். அங்கன போயி ஒண்டிக்குவாக. இப்ப என்னடான்னா ஊருக்குள்ள எவ தீட்டு? எவ சுத்தம்னே? தெரிய மாட்டேங்குது’ என்று ஆசிரியர் அறியில் புலம்பிய ஆசிரியர்களை பார்த்திருக்கிறோம்.

‘எவ தீட்டு?, எவ சுத்தம்னே? தெரிய மாட்டேங்குது’ என்ற புலம்பல் தீட்டு என்பது அசுத்தம் என்ற பொருளாகப் பார்க்கப் பட்டிருப்பதை உணர்த்துகிறது.

1)   இவள் அசுத்தம், இவள் சுத்தம் என்பதை தீர்மானிக்கிற அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது?
2)   எவள் சுத்தமாயிருந்தாள் இவளுக்கென்ன? எவள் அசுத்தமாயிருந்தால் இவர்களுக்கென்ன?

முன்பெல்லாம் கடைக்கு டிபன் வாங்கப் போனால் ‘என்ன சார் அம்மா வீட்டுக்கு வெளியவா?’ என்று கடைக்காரரே கேட்கிற நிலை இருந்தது.
எனில் மாதத்தில் மூன்று நாட்கள் பெண்கள் வீடற்றவர்களாகவே ஒரு காலம் வரைக்கும் இருந்திருக்கிறார்கள். மட்டும் அல்ல, இந்த மூன்று நாட்களில் அவர்களை மூலைக்குள் முடக்கிப் போட்டு மாதத்தில் மூன்று நாட்களுக்கான அவர்களது செயல்பாட்டை முடக்கி வைத்திருக்கிறார்கள்.

பெண்களுக்கே இந்த நிலை என்றால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் நிலை எவ்வளவு கொடுமையானதாக இருந்திருக்கும். ஒன்று அந்த மூன்று நாட்களும் பள்ளிக்கு செல்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும். அப்படி மாதாமாதம் மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்வதை தவிர்ப்பதன் மூலம் மாதாமாதம் மூன்று நாட்களுக்கான படிப்பை அவர்கள் இழந்திருக்க வேண்டும். ஒரு வருட்த்திற்கு என்று பார்ப்போம் எனில் குறைந்த பட்சம் முப்பதிலிருந்து முப்பத்தி ஐந்து நாட்கள் இவர்களது கல்வி நாட்கள் சேதப் பட்டிருக்கும். இதுவே ஆண்களைவிட பெண்கள் படிப்பில் தாழ்ந்து கிடப்பதற்கான காரணமாகிப் போயிருக்கவும் கூடும்.

அல்லது அந்த நாட்களிலும் அவர்கள் பள்ளிக்குப் போகும் பட்சத்தில் அவமானப் பட்டு இடைநின்றிருக்க வேண்டும்.

‘நாப்கின்கள்’ வந்திருக்காத காலத்தில் பெண்கள் துணியைத்தான் பயன் படுத்தி வந்தார்கள். அந்தத் துணிக்கு ‘தீட்டுத் துணி’ என்று பெயர். அந்தத் துணியை மிக மிக கேவலமான ஒன்றாகத்தான் பார்த்தனர். இன்னும் சொல்லப்போனால் கேவலமான ஒரு மனிதனைப் பற்றிப் பேசும்போதோ அல்லது அவனை திட்டும் போதோ ‘எந் தீட்டுத் துணிக்குப் பொறாத பய’ என்று திட்டுவது வழக்கமாக இருந்தது. அந்த அளவிற்கு கேவலமானதாக ஒருகாலம் வரைக்கும் தீட்டுத் துணி பார்க்கப் பட்டது.

இவ்வளவு கேவலமாக பார்க்கப் பட்ட ‘தீட்டுத்துணி’ பெரும்பாலும் பயன்படுத்துவதற்கு லாயக்கற்ற பழந்துணியாகவே இருக்கும். தீட்டுத் துணியை பயன்படுத்துவது மிகவும் சிரமமான காரியம். அதை துவைத்துப் பராமரிப்பது என்பது அதைவிடவும் சிரமமான காரியம். ஈரப்படுத்தி நன்கு பிழிந்த துணியைத்தான் இதற்குப் பயன் படுத்த வேண்டும். அவ்வப்போது துணியை மாற்ற வேண்டும். துணியை நனைப்பதற்கும், பயன்படுத்திய துணியை அலசித் துவைப்பதற்கும் தண்ணீர் வசதி வேண்டும். துணியை மாற்றியபிறகு துவைத்த துணியை காய வைப்பதற்கு இடம் வேண்டும். யார் பார்வையிலும், குறிப்பாக ஆண்கள் பார்வையில் படாமல் அவற்றை காய வைக்க வேண்டும். தப்பித்தவறி ஆண்கள் பார்வையில் பட்டுவிட்டால் அவர்களது வாழ்க்கையே நாசமாகப் போனதுபோல் ஆண்வர்க்கம் சபிக்கும்.

பெண்கள் முடங்கிப் போன வீடுகளே இருளடைந்து கிடக்கும். இரண்டு மூன்று பெண்கள் இருக்கும் வீடுகளில் மாதவிடாய் கண்டுள்ள பெண்ணின் வேலையையும் மற்றவர்கள் சேர்த்து செய்து வந்தனர். அப்படி இல்லாமல் ஒரே ஒரு பெண் இருக்கும் வீடுகளிலோ அல்லது இருக்கும் இருவருக்கும் ஒரே காலத்தில் மாதவிடாய் வந்து விட்டாலோ அந்த வீடு இருண்டே போகும். வீடு பெருக்குவதிலிருந்து, பாத்திரம் கழுவுவதிலிருந்து, சிமிளி மற்ரும் அரிக்கேன் விளக்குகளின்  கண்ணாடிகளைத் துடைத்து விளக்கேற்றுவதிலிருந்து அனைத்து வேலைகளையும் ஆண்களே செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். ஆண்களுக்கு உலகம் மட்டும்தானே வீடு. வீடென்பது அவர்களுக்கு ஓய்வெடுக்கும் ஒரு சத்திரம். வீட்டு வேலைகளை செய்வது அவர்களது ஆண்மைக்கே இழுக்காயிற்றே.

இந்தப் புள்ளியில்தான், தங்களது வேலைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டு ஆண்கள் பெண்களை அந்தக் காலத்திலும் வீட்டிற்குள் இயங்குவதற்கு அனுமதித்திருக்கக் கூடும்.

இந்தப் புள்ளி பெண்களின் வரலாறில் மிக முக்கியமானது. ஆனால் மிகவும் அசுகரியமான தீட்டுத் துணியோடு வீட்டிற்குள் வளைய வந்து தங்களது அன்றாட பணிகளை செய்வது அவர்களுக்கு மிக மிக சிரம்மாக இருந்தது. அடிக்கடி துணி மாற்ற வேண்டும். வேலைகளை செய்யும்போது இன்னும் பேரதிகமாய் துணியை மாற்ற வேண்டும். பயன் பட்டவற்றை சுத்தம் செய்து யாருக்கும் தெரியாத மறைவிடத்தில் உலர்த்த வேண்டும். வேலை செய்ய செய்ய அதிகமாய் உதிரம் கசியும். சக்தியனைத்தும் வற்றிப் போகும். பெருத்த உதிரப்போக்கு சக்தியை அழித்துவிடும் இந்தக் கால கட்ட்த்தில் பெண்கள் பேரதிகமான சத்துள்ள உணவினை உட்கொள்வதன் மூலம் இழந்த சக்தியை மீட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் வழக்கமாக உட்கொள்ளும் உணவினைக்கூட அவர்கள் அந்தக் காலத்தில் ‘இயலவில்லை’ என்று எடுத்துக் கொள்வதில்லை. உணவு உண்ணும் அளவிற்கே தெம்பில்லாத அவர்களிடம்தான் அனைத்து வேலைகளையும் இந்தச் சமூகம் வாங்கித் தொலைத்தது.

வீட்டிலிருக்கும் பெண்களுக்கே இப்படி என்றால், பணிக்கு செல்லும் பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும்? அதையே நினைத்துப் பார்க்க முடியாதபோது பள்ளிக்கு செல்லும் பெண்களின் நிலையை எப்படி கொள்வது?

துணியை ஈரப் படுத்த, அலச, எத்ட்ஷனைப் பள்ளிகளில் அந்தக் காலத்தில் போதுமான வசதி இருந்தது. அந்தக் காலத்தில் துணியின் அசௌகரியம் அவர்களது நடையை வித்தியாசப் படுத்திக் காட்டும். இருபாலர் படிக்கும் பள்ளியெனில் அந்தப் பெண் குழந்தைகள் எவ்வளவு சிரமத்திற்கு ஆட்பட்டிருப்பார்கள். இத்தகைய அவமானங்களும் அசௌகரியங்களும் எத்தனை குழந்தைகளின் படிப்பில் மண்ணள்ளிப் போட்டிருக்கும்?

இதற்கு மாற்றாக, வரமாக வந்ததுதான் ‘நாப்கின்’. ஒழுங்கான ஒரு கணக்கெடுப்பை நடத்தினோம் என்றால் ‘நாப்கின்’ வரவிற்குப் பிறகு பெண்களின் பள்ளி வருகை அதிகமானது. ஒரு உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்.  இப்போதெல்லாம் வருடா வருடம் பள்ளியிருதித் தேர்வுகளில் முதல் பத்து இடங்களில் கணிசமான எண்ணிக்கையில் பெண் குழந்தைகளே வருகிறார்கள். இதற்கு ஆசிரியர்களின் உழைப்பு, பெற்ரோரின் பங்களிப்பு, குழந்தைகளின் ஓயாத உழைப்பு என்பவற்றோடு ‘நாப்கின்’ களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  

நாப்கின்கள் வந்த பிறகும் அனைத்துக் குழந்தைகளாலும் அவற்றை வாங்கிப் பயன்படுத்த முடியாத சூழல் இருந்தது. இப்போது வரத்தை ஏழைக் குழந்தைகளால் அனுபவிக்க இயலாமல் போனது. இன்னும் சொல்லப் போனால் ’அந்தக் காலத்தில்’ பணக்காரப் பெண்குழந்தைகளை ஒருவிதமான பொறாமையோடு ஏழைக் குழந்தைகள் பார்த்த்தை நானறிவேன். இதை உணர்ந்து கொண்ட தமிழக அரசு பருவம் எய்திய அனைத்து குழந்தைகளுக்கும் நாப்கின்களை வழங்குகிறது. இது பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கல்வியையும் மிகப் பெரிய அளவில் ஊக்குவிக்கும். இதற்காக பள்ளி செல்லும் ஒரு பெண் குழந்தையின் தகப்பன் என்கிற வகையில் தமிழக அரசிற்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவனாகவே இருக்கிறேன்.

இப்போது அடுத்த சிக்கல் ஒன்று வருகிறது. பயன் படுத்திய நாப்கின்களை எப்படி அழிப்பது?

நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி குப்பை வண்டிகளில் நாப்கின்களை சேகரிப்பதற்கென்று ஒரு தனித் தொட்டியை அமைத்து அவற்றில் நாப்கின்களை சேகரித்து தனியாக அவற்றை அழிப்பதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதன் தேவையை கலைநிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட அனைத்து வடிவங்களையும் கையிலெடுத்து இருக்கிற எல்லா ஊடகங்களின் வழியாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

பள்ளிகளில் பெண் குழந்தைகள் பயன்படுத்தும் நாப்கின்களை சேகரித்து அழிப்பதற்கான வசதிகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கே உள்ளன. செய்வதறியாது குழந்தைகள் எங்காவது வீசிவிடுகிறார்கள். சில குழந்தைகள் டாய்லெட்டில் விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். இது அடைத்துக் கொண்டு இருக்கிற கழிவறை வசதியையும் முடமாக்குகிறது. பல பள்ளிகளில் பயன்படுத்தப் பட்ட நாப்கின்கள் இங்கும் அங்குமாக கிடப்பதை பார்க்கிறோம். பள்ளிகளுக்கு இருக்கிற கட்டமைப்பு வசதிகளுள் இவற்றை அப்புறப் படுத்த அவர்கள் படாத பாடு படுவதைப் பார்க்க முடிகிறது.

இது உறுத்திக் கொண்டே இருந்த சூழலில் ஒருநாள் அருப்புக் கோட்டையிலிருந்து நண்பர் ஒருவர் தானும் தனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து அருப்புக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு இன்சினரேட்டர் வாங்கித் தர முடிவெடுத்திருப்பதாகவும். அது குறித்த விவரங்களை சேகரித்து தருமாறும் கேட்கவே அது குறித்த விசாரனையில் இறங்கினேன்.

மேனுவலாக எரிக்க்க்குமளவு உள்ள இன்சினரேட்டர்களும் மின்சாரத்தால் இயங்க்க் கூடிய இன்சினரேட்டர்களும் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்தது. இவற்றில் மிசாரத்தால் இயங்குவது பாதுகாப்பானதாகவும் சுகாதாரத்திற்கு ஏற்றதாகவும் இருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

ஒரு நாளைக்கு 250 நாப்கின்களை எரிக்கும் வசதி கொண்ட இன்சினரேட்டர் 29,000 ரூபாய் விலையில் கிடைப்பதாகத் தெரிகிறது. இது போக குழாய்கள் மற்றும் சில உதிரி பாகங்கள், எடுத்து வந்து நிறுவுவதற்கான செலவு என்கிற வகையில் ஒரு 20,000 ரூபாய் ஆகிறது. ஆக ஒரு 50,000 ரூபாய் செலவழித்தால் இது சாத்தியம். இதில் பேரத்திற்கு இடம் இருப்பதாகவும் தெரிகிறது.

ஆக, ஒரு 50,000 ரூபாய் செலவு செய்தால் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு இன்சினரேட்டர் சாத்தியம் என்பதை அரசிற்கும் நல்ல உள்ளங்களுக்கும் கோரிக்கையாக வைக்கிறேன்.






இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...