‘தன்னிரு கைகளால்
குழந்தையின்
முகத்தை வருடி
தன்
தலையில் சொடுக்கிட்டபடி
எங்களை
கடந்து
செல்லும் திருநங்கைக்கு
அத்த
டாட்டா என்றது குழந்தை’
என்ற
திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் கவிதை ஒரு காட்சியாக விரியும். அது ஒரு ரயிலடியாகவோ,
பேருந்து நிலையமாகவோ, ஆலயமாகவோ, திருவிழாக் கூட்டமாகவோ இருக்கக் கூடும். அல்லது அது
ஒரு மின்சார ரயிலாகக்கூட இருக்கக் கூடும். இதுமாதிரியான ஏதோ ஒரு இடத்தில்தான் திருநங்கைகளின்
நடமாட்டத்தை காண முடியும்.
இருவரோ
அல்லது அதற்கும் அதிகமான எண்ணிக்கையிலோ உரத்துக் கை தட்டியபடி கட்டையுமில்லாத மென்மையுமில்லாத
ஒருவிதமான வித்தியாசமான குரலில் ‘அண்ணா’, ‘அக்கா’ என்று பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
அவர்கள்தான் அண்ணா என்றும் அக்கா என்றும் அன்பொழுக அழைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால்
அநத இடத்தில் இருப்பவர்கள் அந்த நேரத்தில் அந்த இடத்தில் இருக்க நேர்ந்தமைக்காக அனைத்தையும்
மனதிற்குள் சபித்தபடி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்வார்கள், அல்லது கீழே குனிந்து
கொள்வார்கள். இவர்கள் அவர்களுக்கருகில் வருவதையோ தன்னோடு இறைஞ்சுதலின் நிமித்தம் ஓரிரு
வார்த்தைகள் உரையாடுவதையோ அவர்கள் விரும்புவதில்லை. ஒருவிதமான அருவருப்போடும் அசூசையோடுமே
இவர்களை பார்ப்பதை நாம் பார்க்க முடியும்.
‘கண்ணில்லாதவர்கள்
கையேந்துகிறபோது
நாமெல்லாம்
குருடர்கள்’
என்று
தங்கம் மூர்த்தி ஒருமுறை எழுதினார். கண்ணில்லாதவர்கள் நம்மிடத்திலே யாசித்து கையேந்துகிறபோது
அதைக் காணாததுபோல் நாம் நமது கவனத்தை வேறு பக்கம் திருப்புவோம் அல்லவா. எனில், அந்த
நேரத்தில் பார்வையற்றவர்கள் நம்மிடம் உதவி கோருவதை பார்க்காதவாறு அதாவது கண் தெரியாதவர்போல
நடிப்போம். அவர்களாவது குருடர்கள், நாமோ நடிப்புக் குருடர்கள் என்று அழுதுகொண்டே பகடி
செய்கிறார் தங்கம் மூர்த்தி.
அதேபோல்தான்
இங்கும் அவர்கள் அருவருப்பானவர்கள் என்று கூசிக் குறுகி அவர்களை தவிர்க்க முயற்சிக்கும்
எத்தனிப்பில் இவர்கள் அருவருப்பின் உச்சமாய் ஆவார்கள்.
ஜீரணிக்கவே
முடியாத இந்த அக்கிரமத்தைக்கூட ஜீரணித்து விடலாம். இவர்களை பகடி செய்தும் அருவருக்கத்
தக்க வகையில் உடல் மொழியை பயன்படுத்தவும் செய்யும் நபர்களது செயலைத்தான் எத்தனை லிட்டர்
ஜீரக ரசம் குடித்தும் நம்மால் ஜீரணிக்க இயலாது.
இவர்களும்
ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தவர்கள்தான். பிறவியிலேயே
யாரும் திருநங்கையாகவோ அல்லது திருநம்பியாகவோ பிறப்பது இல்லை.
என்
தந்தை ‘தாயுமானவர்’ என்றோ அல்லது என் தாய் ‘தந்தையுமானவர்’ என்றோ யாராவது எங்காவது
பகிர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். அதாவது ஒரு தாய்க்கென்று சில குணங்களும் தந்தைக்கென்று
சில குணங்களும் வரையறுக்கப் பட்டு உள்ளன. தந்தை செய்யவேண்டிய கடமைகளை ஒரு தாய் செய்து
வளர்த்தால் அந்த மகனோ மகளோ தனது தாயைப் பற்றிக் குறிப்பிடும்போது என் தாய் ‘தந்தையுமானவர்’
என்று பெருமைப்பட சொல்வார். அதேபோல ஒரு தந்தை தாய் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்து
வளர்த்தால் அந்த மகனோ அல்லது மகளோ எனது தந்தை ‘தாய்மானவர்’ என்ருஇ பெருமைபடக் கூறுவார்.
அடிப்படையில்
நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் எல்லா தாய்மார்களுக்குள்ளும் தந்தையின்
குணமும் இருக்கும், எல்லா தந்தைகளிடமும் தாயின் குணங்களும் இருக்கும்.
அதேபோல்தான்
எல்லா ஆண்களுக்குள்ளும் பெண்மையும் , எல்லா பெண்களுக்குள்ளும் ஆண்மையும் இருக்கும்.
ஒரு பெண் உடலில் பெண் குணங்கள் அதிகமாகவும் ஆண் குணங்கள் குறைவாகவும் இருந்தால் அவள்
பெண். ஒரு ஆண் உடலில் ஆண் குணம் அதிகமாகவும் பெண் குணம் குறைவாகவும் இருந்தால் அவன்
ஆண். இப்படி அமைவது இயல்பான ஒன்றாக அமையும்.
இதனால் சமூகத்தில் எந்த முடுக்கிலும் இவர்களால் மிக இயல்பாக உறவாட முடிகிறது.
ஒரு
பெண் உடலில் பெண் குணம் குறைவாகவும் ஆண் குணம் அதிகமாகவும் இருந்தால் அவன் திருநம்பி.
ஒரு ஆண் உடலில் ஆண் குணம் குறைவாகவும் பெண் குணம் அதிகமாகவும் இருந்தால் அவள் திருநங்கை.
இது இயல்புக்கு மாறாக இருப்பதால் நிறைய பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
சமூகத்தில் இவர்களுக்கான இடமும் அங்கீகாரமும் இதுவரை கட்டமைக்கப்படவே இல்லை.
‘ஆண்பால்’
, ‘பெண்பால்’ ஆகிய இரண்டு வகையான பாலினங்களே பொதுப் புத்தியில் அங்கீகரிக்கப் பட்டுள்ளதால்
இந்த இரண்டு வகையினங்களைச் சார்ந்த ஜீவராசிகள் மட்டுமே மனிதப் பிறவிகளாக அங்கீகரிக்கப்
படுகிறார்கள். அரசு ஆவணங்களில்கூட மிக சமீபம் வரை இவர்களுக்கான இடம் ஒதுக்கப் படாமலேயே
இருந்தது.
ஒரு
காலம் வரைக்கும் ஆணாகவே வளர்ந்து வரும் இவர்கள் தங்களுக்குள் இருக்கும் அதிகப்படியான
பெண்மையால் ஆண்களோடு பழகுவதில் ஒரு விதமான கூச்சத்தைப் பையப் பைய உணர்கிறார்கள். மெல்ல
மெல்ல பெண்களோடு பெண்களாய் உறவாட தலைப் படுகிறார்கள். வீடுகளில் உள்ள அவர்களது சகோதரிகளும்
தாயுமே இதைக் கண்டு ஒருவித அசூசையோடும் முகச் சுளிப்போடும் இவர்களைத் தவிர்க்கத் தலைப்படுகிறார்கள்.
வீட்டில் இருக்கும் ஆண்களும் ஒருவித அசூசையோடே இதைப் பார்க்கிறார்கள்.
இந்தக்
கால கட்டத்தில் இவர்கள் வீட்டைவிட்டே ஓடிப் போகிறார்கள். ஏதோ ஒரு வகையில் இவர்கள் திருநங்கைகளோடு
ஐக்கியம் ஆகிவிடுகிறார்கள். திருநங்கைகளும் இவர்களை மிகுந்த வாஞ்சையோடு அரவணைத்துக்
கொள்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் அங்கீகரிக்கப் படாத அறுவை சிகிச்சை மூலம்
தங்களது ஆணுறுப்பை அப்புறப்படுத்தி விட்டு பெண்ணுறுப்பை ஏற்கிறார்கள்.
இப்போதுதான்
ஒரு திருநங்கை காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியேற்றுள்ளார். இன்னொமொரு திருநங்கை
மேயராகியுள்ளார். இப்படி மிக மிக குறைவான எண்ணிக்கையிலேயே இவர்கள் பணியமர்த்தப் படுவதும்
அங்கீகரிக்கப் படுவதுமாக உள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றும் என்ற அளவு தாண்டி இவர்களை
பள்ளிகளில் கல்லூரிகளில் சேர்ப்பது இல்லை. அவ்வளவு எளிதாக இவர்களால் ஓட்டுனர் உரிமம்
பெற இயலாது. இவர்களுக்கு குடும்ப அட்டைகள் கிடையாது. குடும்பம் இல்லாத காரணத்தால் இவர்களுக்கு
பல நாடுகள் விசா வழங்குவதுகூட இல்லை.
இவர்கள்
திருமணம் செய்துகொள்ள இயலாது அல்லது செய்து கொள்வது இல்லை என்கிற வகையில் இவர்களுக்கு
என்று தனியாக குடும்பம் இல்லை என்பதைக்கூட நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால்
ஒரு குடும்பத்திலிருந்துதானே இவர்கள் வந்திருக்க முடியும். சுயம்புவாக இவர்களால் தோன்றியிருக்க
முடியாதே. இவர்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு அப்பாவும் அம்மாவும் இருந்திருக்க வேண்டுமே.
இவர்களுக்கும் ஒரு அப்பா அம்மா இருந்திருக்க வேண்டும் எனும் பட்சத்திலிவர்கள்து பெயரும்
ஒரு குடும்ப அட்டையில் நிச்சயமாய் இருந்திருக்க வேண்டுமே.
மகனாக
இருந்தவன் ஏதோ ஒரு புள்ளியில் திருநங்கையாக மாறியவுடன் தகப்பன் தகப்பன் இல்லை என்று
ஆகிவிடுமா? எது எப்படியோ அந்தத் திருநங்கையை பெற்றவன் நீதானே? உனக்கும் உன் மனைவிக்கும்
பிறந்த குழந்தைதானே அந்தத் திருநங்கை. தான் ஆண் இல்லை என்பதை உணர்ந்த அந்தத் தருணத்தில்
அவளை வீட்டிலிருப்பவர் யாரும் தேடி அலைவது இல்லையே. ஒரு நாய்க்குட்டி காணாமல் போனால்கூட
சாப்பிடாமல் கொள்ளாமல் தேடியலையும் இந்த மனித சமூகம் தான் பெற்ற குழந்தை காணாமல்போனது
தெரிந்தபின்பும் தேடியலைய மறுக்கிறதே. எனில், திருநங்கை என்பவளை அந்தக் குடும்பம் எந்த
அளவில் வைத்துப் பார்க்கிறது.
திருநங்கைகளாவது
பரவாயில்லை. இந்த அளவில் பிளைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. திருநம்பிகளின்
பாடு மிகவும் மோசமானது. ஒரு ஆண்பிள்ளை திருநங்கையாக மாறியதைக்கூட ஒருவித கருணையோடு
பார்க்கத் தலைப்படும் இந்த சமூகம் ஒரு பெண் குழந்தை திருநம்பியாக மாறும்போது ஒருவித
ஏளனத்தோடும் அருவருப்போடும் பார்க்கிறது. தனது மகன் திருநங்கையானாள் என்று தெரிந்ததும்,
அவள் ஓடிப்போன கையோடு உறவைத் துறந்து விட முடிகிறது ஒரு பெற்றோரால். ஆனால் தனது மகள்
திருநம்பியாக மாறும்போது இந்தச் சமூகம் அதை
ஏளனமாய் பார்க்கும், தம்மால் தலை நிமிர்ந்து இந்த சமூகத்தில் நடமாட முடியாது என்று
உணரத் தலைப்படுகிறார்கள். அதனால் ஏதோ ஒரு வகையில் அந்தக் குழந்தையைக் கொன்று விடுகிறார்கள்.
இவற்றிலிருந்து
தப்பிய திருநம்பிகள் மிகக் குறைவு என்கிற வகையில் திருநம்பிகளின் எண்ணிக்கை மிகவும்
குறைவாக இருப்பது.
’உங்களுக்கு
எத்தனைப் பிள்ளைகள்?’ என்று கேட்டால் ’எனக்கு இரண்டு மகன் ஒரு திருநங்கை’ என்று எந்த
விதமான கூச்சமும் இன்றி பதில் சொல்ல வேண்டும். உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனைபேர்
என்று கேட்டால் ’மூனு ஆணு, ரெண்டு பொண்ணு, ஒரு திரு நம்பி’ என்று மிக இயல்பாய் ஒரு
மனிதனிடமிருந்து பதில் வரவேண்டும். அனைத்து அரசு ஆவணங்களிலும் ஆண், பெண், திருநங்கை,
திருநம்பி என்று பட்டியல் நீள வேண்டும். பெண்களுக்கு 33 சதவிகிதத்திற்காய் போராடுவது
போலவே திருநங்க மற்றும் திருநம்பிகளுக்காகவும் ஒதுக்கீடு கேட்டு போராட வேண்டும்.
பேருந்தில்,
ரயிலடியில், ரயிலில், ஆலயத்தில், திருவிழாக்களில் மட்டுமல்ல வீடுகளிலும் இவர்கள் இயல்பாய்
வளைய வருமளவிற்கு சமூகம் மாறாது.
இப்போது
திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் அவர்களுடைய கவிதைக்கு வருவோம். அந்தக் கவிதையை கொஞ்சம்
விரித்து காட்சிப் படுத்துவோம். ஏதோ நெரிசல் மிகுந்த இடம். வழக்கம் போலவே ஏதோ ஒரு திருநங்கை
கைகளைத் தட்டியபடி பிச்சை கேட்டு வருகிறார். அவரது பார்வையில் ஒரு குழந்தை தட்டுப்படுகிறது.
அந்தக் குழந்தையை அந்தத் திருநங்கை ஆசையோடு முத்தமிட்டு, இரண்டு கைகளாலும் அந்தக் குழந்தையின்
முகத்தை வருடி நெட்டி முறித்தபடி நகர்கிறார்.
திருநங்கைகள்
என்றால் ஏதோன் குழந்தைகளைத் திருடிக்கொண்டு போய்விடுவார்கள் என்றெல்லாம்கூட ஒரு விதமான
பொதுப் புத்தி இருக்கிறது. ஆனால் திருநங்கைக்கும் குழந்தைகளின்மீது மற்றவர்களைப் போலவே
அன்பு சுரக்கிறது.
அந்தக்
கவிதையின் உச்சமாக நான் பார்ப்பது ‘அத்த டாட்டா’ என்று அந்தக் குழந்தை கூறியதுதான்.
தன்னை அத்தை என்று அழைத்த குழந்தையை தன் வாழ்நாள் முழுக்க அந்த்த் திருநங்கையால் மறக்க
இயலாது. இன்னும் சொல்லப்போனால் அந்தத் திருநங்கை ‘அத்தை’ என ஒரு குழந்தை விளித்ததைக்
கேட்டு அடக்க முடியாமல்கூட அழுதுகொண்டே போயிருக்கக் கூடும்.
1)
திருநங்கை
மற்றும் திருநம்பிகளுக்கு கல்வியில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்
2)
பொது
இடங்களில் சக மனிதராக மதிக்கப்பட வேண்டும்
3)
தான்
ஒரு திருநங்கை என்று உணரும் பொழுதில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய சூழல் இல்லாமல்
போகவேண்டும்
4)
வேலைவாய்ப்பில்
சம வாய்ப்பு வேண்டும்
5)
சொத்தில்
பங்கு வேண்டும்
இவை
எல்லாம் சாத்தியப்பட வேண்டுமெனில் திருநங்கையை ‘அத்த’ என விளித்த குழந்தையாய் எல்லா
மாணவர்களையும் கல்வி மறுபிரசவிக்க வேண்டும். திருநம்பி, திருநங்கைகளை குடும்பத்தில்
ஒருவராய் ஏற்கும் மனப் பக்குவத்தை தரக்கூடிய கல்விமுறை கட்டமைக்கப் பட்டால் மட்டுமே
எதிர்காலத்திலாவது இது சாத்தியப் படும்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்