Friday, September 29, 2023

ஏதாவது செய்யுங்கள் ஸ்டாலின் சார்

 


அன்பின் முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்
இது விஷயமாக மூன்றாவது முறையாக நான் உங்களுக்கு எழுதும் கடிதம்
இதற்கு முன்னர் இதுகுறித்து நான் எழுதிய இரண்டு கடிதங்களும் உங்களை வந்து சேர்ந்திருக்க வாய்ப்பில்லை
சேர்ந்திருந்தால்
இதுகுறித்து நிச்சயமாக நீங்கள் வினையாற்றி இருப்பீர்கள் என்பது உங்கள்மீதான என்னுடைய மலைபோன்ற நம்பிக்கை
நான் எழுதுவது உங்களை வந்து சேர்கிறதா?
நீங்கள் இது விஷயத்தில் வினையாற்றி இருக்கிறீர்களா
எதையும் அறிந்துகொள்கிற பின்புலம் எனக்கு இல்லை
ஆனாலும்
போய் சேர்ந்துவிடாதா?
ஏதேனும் நிகழ்ந்து விடாதா? என்ற எதிர்பார்ப்பில் ஒரு லூசு மாதிரி எழுதிக் கொண்டே இருக்கிறேன்
எழுதிக் கொண்டே இருப்பேன்
இந்த மாதிரி லூசுகளால்தான் பூமி இயங்குகிறது என்று எண்ணியபடி என்னை சமாதானம் செய்து கொள்கிறேன்
இரண்டு விஷயங்கள்
உத்திரப் பிரதேசத்தில் குரா என்றொரு கிராமம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ளது
அந்தக் கிராமத்தில் 17.09.2023 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டுள்ளது
150 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள்
அமர்சிங், மருத்துவர் சுரேஷ், அவதேஷ், மற்றுமசோக் வித்யார்த்தி ஆகியோர் தந்தை பெரியார் குறித்து உரையாற்றி உள்ளார்கள்
குழந்தைகளுக்கு இனிப்பும் பேனா மற்றும் நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டிருக்கிறது
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி உள்ளது
எரிச்சலடைந்த யோகி அரசு
பெரியார் பிறந்த நாளன்று உரையாற்ரிய அந்த நால்வர் மீதும் 295, 153 ஏ, ஆகிய பிரிவுகளின் மேல் வழக்குப் பதிந்துள்ளது என்ற தகவலை 27.09.2023 நாளிட்ட தீக்கதிர் தெரிவிக்கிறது
தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவில் அவர் குறித்து உரையாற்றுவதே தவறென்று
உரையாற்றியவர்கள் மீது வழக்குப் போடுகிறது யோகி அரசு
அதே உத்திரப் பிரதேசத்தில் இருந்து
உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட நமது பள்ளிகளுக்கு
திரு யோகி ஆதித்தியநாத் அவர்களின் புகைப்படங்களை அட்டைப்படங்களாகக் கொண்ட இரண்டு நூல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன



இப்போது அந்தப் புத்தகங்களோடு சேர்த்து அனுப்பப்பட்டுள்ள இந்தியில் எழுதப்பட்டுள்ள கடிதமும் நமக்கு கிடைத்திருக்கிறது



அந்தக் கடிதத்தை கூகுலில் போட்டு தமிழ்ப்படுத்தினால் இப்படி வருகிறது



யோகி அவர்களின் சிறப்பான நிர்வாகத்தினால் உத்திரப் பிரதேசம் மிகச் சிறப்பாக முன்னேறி வருவதாகவும்
அனைத்து மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் யோகியின்மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதாகவும்
அனைத்து மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவருக்கு இருப்பதாகவும்
பெண்கள், விவசாயிகள், மற்றும் இளைஞர்களின் நலனுக்காக அவர் பாடுபடுவதாகவும்
கலாச்சார ஒற்றுமைக்காக அவர் பாடுபடுவதாகவும்
பெண்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் அவர் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாகவும்
அவரது சித்தனைத் தெறிப்புகளும் உரைகளுமே அந்த நூல்கள் என்று அந்தக் கடிதத்தின்வழி நம்மால் அறிய முடிகிறது
இவை அனைத்துமே பொய்
பன்முகத் தன்மைக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லை
அதற்கு எதிராகக் களமாடுபவர் இவர்
வீரஞ்செறிந்த போராட்டத்தை விவசாயிகள் நடத்தியபோது எவ்வளவு வன்மமாக அதை இவர் எதிர்கொண்ஆர் என்பதையும் நாம் அறிவோம்
பெண்கள் குறித்தான இவரது பார்வை எவ்வளவு கேவலமானது என்பதையும் நாம் அறிவோம் என்பதெல்லாம் ஒன்று
இவற்றை ஏன் நமக்கு அனுப்புகிறார்கள்?
இவை அத்துமீறல் அல்லவா?
என்பது இரண்டு
ஏதாவது செய்யுங்கள் ஸ்டாலின் சார்
மிக்க நன்றி
அன்புடன்,
இரா,எட்வின்
29.09.2023

Wednesday, September 27, 2023

இதுவும் உங்களுக்கு வரவில்லை எனில்

அன்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்

நேற்று முன்தினம் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன்

அது உங்களை ஏதோ ஒரு வகையில் சேர்ந்திருக்கும் பட்சத்தில் உங்களது எதிர்வினை நிச்சயம் இருந்திருக்கும்

இருந்திருப்பின்,

அது நிச்சயம் எமக்குத் தெரிந்திருக்கும்

உங்களது எதிர்வினை நிகழும்வரை நான் தொடர்ந்து உங்களுக்கு எழுதிக் கொண்டே இருப்பேன்

உங்களது ஆளுகையின் கீழ் உள்ள பள்ளிகளில், கல்வி நிலையங்களில் அத்துமீறலை அல்லது ஊடுருவலை உத்திரப்பிரதேச அரசு தொடங்கி இருப்பதாகவே உணர முடிகிறது 

நமது பள்ளிகளுக்கு

உத்திரப் பிரதேசத்தின் ஒரு முகவரியில் இருந்து 




யோகியின் புகைப்படங்களை அட்டைப்படங்களாகக் கொண்ட இரண்டு நூல்களை அனுப்பி இருக்கிறார்கள்




மிகவும் தரம் வாய்ந்த தாள்கள் என்கிறார்கள்

தரமான தொழில்நுட்பத்தோடு கூடிய புகைப் படங்கள் என்கிறார்கள்

புத்தகங்களின் விலையும் மிகவும் அதிகம் என்கிறார்கள்

பதிவுத் தபாலில் வந்திருப்பதாகவும் தெரிகிறது

இவ்வளவு செலவு செய்து இதை ஏன் நமக்கு அனுப்ப வேண்டும்?

இது அத்துமீறல் இல்லையா?

இந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று நமக்குத் தெரியவில்லை?

இந்தியில் இருப்பதால்

எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்

இதை நமக்கு அனுப்புவது ஊடுறுவல் இல்லையா?

என் பிரியத்திற்கு உரிய முதல்வர் அவர்களே,

யாரேனும் ஒரு மதவாதியின் கையில் இது கிடைத்து

இதை அவர் படித்து

தம்மைத் தொடர்பு கொண்டுவிட மாட்டாரா என்பதுதான் அவர்களது ஆசையாக இருக்க வேண்டும்

அப்படித் தொடர்கொள்ளும் ஒரு பத்துபேர் கிடைத்தால் போதாதா?

போதிய வசதிகளை, சலுகைகளை, வெளிநாட்டுப் பயணங்களை ஏற்பாடு செய்து கொடுத்தால்

அவர்கள் போதாதா?

இந்த அமைதியான தமிழ் பள்ளிக் கல்வியின் விழுமியங்களை சிதைக்க

யோகியின் அட்டைப்படங்களோடு கூடிய மிக தடித்த இரண்டு புத்தகங்களை

நமது பள்ளிகளுக்கு அவர்கள் அனுப்பலாம் என்றால்

பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு

அரசுப் பள்ளிகளில் படித்த பெண் குழந்தைகளுக்கு அவர்கள் கல்வியை முடிக்கும்வரை மாதாமாதம் ஆயிரம் ரூபாய்

பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம்

குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய்

போன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை 

உங்கள் அட்டைப்படத்தோடு அச்சிட்டு

நாமும் உத்திரப் பிரதேசப் பள்ளிகளுக்கு அனுப்பலாம்தானே?

இதுவும் உங்களுக்கு வரவில்லை எனில்

நாளையோ

நாளை மறுநாளோ மீண்டும் எழுதுவேன் சார்

நன்றி,

அன்புடன்,

இரா.எட்வின்


இணைப்பு:                                                                            

https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid02bWB2SY7BYG1M7vFbsJT9ragcRXo55nEnnTDSPyWbeMXMdD38jeMNsH3QnvGaX7dPl&id=100000945577360

Tuesday, September 26, 2023

உறுதியாக சொல்கிறோம் காங்கிரசும் பாஜகவும் ஒன்றல்ல

 காங்கிரஸ் என்னங்க

பிஜேபி என்னங்க

ரெண்டும் ஒன்றுதானே 

இப்ப அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இருக்குன்னா

அவங்க காலத்தில் எமர்ஜென்சியே அமலில் இருந்ததே

அவங்க விற்க ஆரம்பித்தாங்க

இவங்க விற்றுக் கொண்டு இருக்கிறார்கள் 

அவ்வளவுதானே

ரெண்டுக்கும் இடையில் அப்படி என்ன வித்தியாசத்தைக் கண்டு பிடித்தீர்கள் என்பவர்களுக்கு

எமர்ஜென்சியை இந்திரா காந்தி கொண்டுவந்ததையோ அதன் கொடூரமான விளைவுகளையோ இல்லை என்று மறுக்கவில்லை

அதே இந்திராகாந்தி தான் எமர்ஜென்சியைக் கொண்டு வந்ததற்காக மக்களிடம் மன்னிப்பைக் கேட்டார்

இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது கிட்டத்தட்ட இரண்டாயிரம் சீக்கியர்கள் கொல்லப் பட்டனர்

அப்போது அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி,

”ஒரு ஆலமரம் சாய்ந்தால் மண் அதிரத்தான் செய்யும்” என்று திமிராக பதில் சொன்னார்

ஆனால்

அந்தப் படுகொலைகளுக்காக சோனியா காந்தி காங்கிரச் சார்பாக மக்களிடம் வருத்தம் தெரிவித்தார்

சரியாக தெரியாததால்தான் வருத்தம் தெரிவித்தார் என்று சுறுக்கிக் கொள்கிறேன்

என் நினைவின் ஒரு மடிப்பு அவர் மன்னிப்பு கேட்டதாகவே சொல்கிறது

இப்போது நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்

ஏறத்தாழ 90 செயலர்கள் ஒன்றிய அரசில் இருப்பதாகவும்

அவர்களில் மூன்றே மூன்றுபேர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சார்ந்தவர்கள் என்றும்

இது திட்டங்களை வகுப்பதிலும்

செயல்படுத்துவதிலும் ஓபிசியினரை பாதிக்காதா என்று ராகுல் கேட்கிறார்

உடனே

இதே நிலைதானே காங்கிரஸ் அரசாங்கத்தின்போதும் இருந்தது என்று பிஜேபி சொன்னபோது

ஆமாம், அதற்காக நான் வருந்துகிறேன்

I REGRET என்று கூறிய ராகுல்

ஆட்சி தங்களிடம் வரும்போது அதை சரிசெய்வோம் என்கிறார்

செய்த தவறுகளை உணர்வதும்

தாம் செய்த தவறுகளால் விளைந்த விளைவுகளுக்காக வருந்துவதும்

தம் தவறுகளினால் பாதிக்கப் பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதும் நல்ல தலைவனின் அடையாளம்

அந்த இடத்திற்கு சன்னம் சன்னமாக ராகுல் வருகிறார்

உறுதியாக சொல்கிறோம்

காங்கிரசும் பாஜகவும் ஒன்றல்ல 

பாஜகவின் கொள்கையோடு இவர்களுக்கு பிரச்சினை இல்லை

நேற்று மாலை அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றிருக்கிறது

பாஜகவோடு தேர்தல் உடன்பாடு கிடையாது என்றும்

இந்த முடிவு 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கும் பொருந்தும் என்றும்

ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

அதிமுக தொண்டர்கள் இந்த முடிவை எடுத்து காலமாயிற்று

அல்லது,

நான் பாஜகவோடு கூட்டணி என்ற தவறை ஒருமுறை செய்துவிட்டேன்

இனி ஒருபோதும் பாஜகவோடு கூட்டணி இல்லை  என்று அவர் அறிவித்த பிறகு எடப்பாடியோ, பன்னீர்செல்வமோ பாஜகவோடு நெருங்குவதை அவர்கள் ரசிக்கவில்லை

பதவியையும் சேர்த்துவைத்த காசையும் காப்பாற்றிக் கொள்ளவும்

ரெய்டுகளில் இருந்தும் சிறையில் இருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவுமே பாஜகவோடு தலைவர்கள் நெருக்கமாக இருப்பதை உணர்ந்தே இருந்தார்கள்

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் 

MGR

ஜெயலைதா

திமுக எதிர்ப்பு

இவைதான்

இப்போது அண்ணாவை இழிவாகப் பேசிவிட்டார் அண்ணாமலை என்பதற்காக முறிப்பதாகக் கூறுகிறார்கள்

இவர்களுக்கு அண்ணாவைத் தெரியாது

அண்ணா கூட்டாட்சித் தத்துவத்தின் பிதாமகன்

இவர்கள் “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பதற்கு ஆதரவளித்தவர்கள்

இப்படி நிறைய

பாஜகவின் கொள்கையோடு இவர்களுக்கு பிரச்சினை இல்லை

பாஜகவும்

அதாவது அண்ணாமலையும் மோடிதான் பிரதமர் வேட்பாளார் என்றுதான் பிரச்சாரம் செய்வார்

எடப்பாடியும் ஜெயகுமாரும் அதைத்தான் சொல்லி வாக்கு கேட்கப் போகிறார்கள்

அண்ணாமலை மன்னிப்பு கேட்டுவிட்டால் இவர்கள் என்ன செய்வார்களாம்?

பாஜகவோடு சேர்ந்து நின்றால் ஒரு இடமும் கிடைக்காது

தனியாக நின்றால் ஒன்றிரண்டு தேறலாம்

இதன் மூலம் மோடிக்கு தமிழ்நாட்டிலிருந்து இரண்டு இடங்கள் என்பதற்காக இந்த முறிவு நாடகமாகவும் இருக்கலாம்

இந்தத் தேர்தலில்

விஷ்வகர்ம கல்வித் திட்டத்தை எதிர்க்கிற

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற விஷயத்தை எதிர்க்கிற

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை குடைச்சல் கொடுத்து சிரமப்படுத்துகிற ஆளுநர்களைக் கேள்வி கேட்கிற

நீட்டை எதிர்க்கிற

கட்சிகளைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் 

யாரோடு சேர்ந்து நின்றாலும்

முறித்து வந்தாலும் மதிக்க மாட்டார்கள்

ஆனால் அதிசயமாக

அதிமுக நான் மேற்சொன்னவற்றை செய்தால்

அது,

அதிமுகவிற்கும் நல்லது

தமிழ்நாட்டிற்கும் நல்லது 

குட்டையைக் குழப்புகிற வேலையை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்

நேற்று இரவு பதினோறு மணி அளவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர் நண்பர் அருள்முருகன் சார் வாட்ஸப்பில் வந்தார்

சுதா டீச்சர் எந்த மாவட்டம்?

எந்தப் பள்ளியில் பணியாற்றுகிறார்?

நீங்கள் குறிப்பிட்ட புத்தகங்கள் எல்லாப் பள்ளிகளுக்கும் போகின்றனவா?

அல்லது,

உயர்நிலை

மேல்நிலை

நடுநிலை

தொடக்கப் பள்ளி என்று 

ஏதேனும் ஒருவகைப் பள்ளிகளுக்கு மட்டும் செல்கிற்தா என்று கேட்டிருந்தார்

விழித்துதான் இருக்கிறார் என்பது உறுதியானதால்

அழைத்தேன்

வணக்கம்

நலமா?

உள்ளிட்டு எந்தவிதமான நடைமுறையும் இல்லாமல் நேரடியாக வந்துவிட்டார்

எந்த மாவட்டம் எட்வின்?

கள்ளக்குறிச்சி

என்ன எட்வின் இது?

பதறாதீங்க சார், அடுத்து உறுதியான மாவட்டம் புதுக்கோட்டை

தேவதா தமிழ்  இதை உறுதி செய்கிறார்

அதற்குமேலான உரையாடல் இங்கு தேவை இல்லை

இன்று அமைச்சருக்கு இந்தத் தகவலை கொண்டுபோவதாகக் கூறி இருக்கிறார்

பிற மாவட்டங்களுக்கும் வந்திருப்பின் நண்பர்கள் தெரியப்படுத்தவும்

அமைச்சர் என்ன சொல்கிறார் என்று பார்த்திருப்போம்

இதைப் படித்துவிட்டு ஒரு தபால்காரத் தம்பி தொடர்பு கொண்டார்

அதிமுக ஆட்சி காலத்திலும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு இதேபோல புத்தகங்கள் வந்ததாகவும்

கூகுலில் மொழிபெயர்த்தபோது

இஸ்லாமியர்கள் அங்கங்கே ஆலயங்களை சேதப்படுத்துவதாகவும்

வன்முறையில் இறங்குவதாகவும்

இந்துக்கள் ஒன்றிணையாவிட்டால் இந்து சமயம் அழிந்துவிடும் என்றும் இருந்ததாகக் கூறினார்

அவைகளும் இந்தியில் மட்டுமே வந்ததாகவும் கூறுகிறார்

குட்டையைக் குழப்புகிற வேலையை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்

தமிழ் மண்ணில் நஞ்சைத் தூவ ஆரம்பித்திருக்கிறார்கள்

விழித்துக் கொள்வோம்

Monday, September 25, 2023

சூரியனை சோதிக்க கலம் அனுப்பியிருக்கும் சகோதரியும்

 அன்பின் முதலவர் ஸ்டாலின் அவர்களுக்கு,

வணக்கம்

யோகி ஆதித்த்யநாத் படங்களை அட்டைப் படங்களாகக் கொண்ட கீழே உள்ள இரண்டு புத்தகங்கள் இன்று தோழர் சுதா பணியாற்றும் பள்ளிக்கு வந்துள்ளன

  
அந்த நூல்கள் கீழ்க்காணும் முகவரியில் இருந்துதான் பதிவுத் தபாலில் அனுப்பப் பட்டுள்ளன



இரண்டு நூல்களும் இந்தியில் உள்ளதாகவும்,

அந்தப் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்தப் புத்தகக் கட்டு வந்திருப்பதாகவும் தபால்காரர் கூறியதாகவும் அவர் கூறுகிறார்

அதே முகவரிக்கு அந்தப் புத்தகங்களைத் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் சுதா கூறினார்

அவரது நண்பர்களைத் தொடர்புகொண்டு 

விசாரிக்கவும்,

அப்படி அவர்களுக்கும் வந்திருப்பின் அதைத் திருப்பி அனுப்புமாறு சொல்லவும் அவரைக் கேட்டுக் கொண்டேன்

அன்பிற்குரிய சார்

இது தமிழ்நாடு முழுக்க வந்திருக்கிறதா?

எந்த வகையான பள்ளிகளுக்கு வந்திருக்கிறது?

உபியின் இந்தச் சேட்டைக்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன?

பள்ளிகளிகளுக்கு என்றால்

பள்ளிகளின் முகவரிகளை எப்படித் திரட்டினார்கள்?

அது ஒன்றும் சிரமம் இல்லை

அதுவும் ஒன்றிய அரசு அவர்கள் கைகளில் இருக்கும்போது இது மிக மிக சுளுவான வேலைதான் அவர்களுக்கு

ஏன் இதை செய்கிறார்கள்

பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதன் மூலம்

இவை ஆசிரியர் மற்றும் குழந்தைகளுக்கு அனுப்பப்பட்டவை

எனில்,

இவற்றை தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் அனுப்ப வேண்டியத் தேவை உபிக்கு ஏன் வந்தது?

எதை இதன் மூலம் நமக்கு உணர்த்த வருகிறார்கள்?

அந்தப் புத்தகங்களில் என்ன இருக்கின்றன?

எது எப்படியோ தமிழ்நாட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு தெரியாமல் இது நடந்திருக்கும் பட்சத்தில் இது 

அத்துமீறல்

மாநிலங்களும் இறையாண்மை உடையனதான்

எனில்

தமிழ்நாட்டின் இறையாண்மையோடு விளையாடுகிற மோசமான சேட்டை இது

நமது பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிந்தே இது நடந்திருக்கிறது என்றால்

உங்கள் மொழியில் சொல்வதெனில்,

திராவிடத்தின் மீதான உபி ஆரியத் தாக்குதலுக்கான நமது துறையின்

கருப்பாட்டுத் தனம் இது

விசாரியுங்கள்

ஆம் எனில் 

நடவடிக்கை எடுங்கள்

இப்படியான செய்கை இயல்பானது எனில்

பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு,

அரசுப் பள்ளிகளில் படித்த பெண்குழந்தைகளுக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை

பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் 

தமிழ் நாட்டில்

அரசுப் பள்ளிகளில் படித்த

அதுவும் தமிழ் வழியில் படித்த

இன்னும் சரியாக சொல்வதெனில்

இந்தி தெரியாத

மயில்சாமி அண்ணாதுரை
வனிதா முத்தையா
வீரமுத்துவேல்

இந்த மூன்று தமிழர்களும்தான் இதுவரையிலான மூன்று சந்திராயன்களுக்கும் பொறுப்பு என்பதையும்

சூரியனை சோதிக்க கலம் அனுப்பியிருக்கும் சகோதரியும்

தமிழ்நாட்டில்

அரசுப்பள்ளியில் படித்தவர்

இஸ்லாமியர்

அதுவும் இஸ்லாமியப் பெண்

போன்ற விவரங்களை இந்தியில் புத்தகங்களாகப் பதிப்பித்து

உபி பள்ளிகளுக்கு அனுப்பினால் என்ன

மதுரை ரயில் விபத்தை

அதை

தமிழ்நாடும் தமிநாடு அரசும் எதிர்கொண்ட விதத்தை

குறிப்பாக

பிடிஆரின் பங்களிப்பை

இந்தியில் அச்சிட்டு அனுப்பினால் என்ன

யோசியுங்கள்

நன்றி

அன்புடன்,
இரா.எட்வின்
25.09.2023

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...