Showing posts with label அதிமுக. Show all posts
Showing posts with label அதிமுக. Show all posts

Friday, July 11, 2025

எவனடா எங்களின் முகவரி கேட்டவன்

 



இருவரின் நேற்றைய (09.07.2025) செயல்கள் என்னைக் கட்டிப்போட்டிருக்கின்றன
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றுதானே முன்னோர்கள் சொன்னார்கள். பள்ளி இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றா சொன்னார்கள்
கோவில கட்டுங்கப்பான்னா
கோவில் வருமானதில் ஸ்டாலின் கல்லூரிகளைக் கட்டுவது நியாயமா என்று முன்னாள் முதல்வர் மாண்பமை எடப்பாடி உளற
அறநிலையத்துறை விதிகளில் அதற்கு இடமிருக்கிறது
அப்படித்தான்
கல்லூரிகளாகத்தான் கட்டுவோம் என்று நிமிர்ந்து சொன்ன ஸ்டாலின் சாரின் செயல் ஒன்று
இன்னொன்று
நெசத்துக்குமே ரயிலை மறித்து
நெருங்க நெருங்க ரயில் ஓட்டுநருக்கு மரண பயத்தைக் கொடுத்த குழந்தை அகல்யாவின் செயல்
இவளது செயலை
SFI அமைப்பின் முன்னாள் உறுப்பினன்
CPM கட்சியின் ஒரு மாவட்டக்குழு உறுப்பினன் என்ற வகையிலும்
அந்தக் குழந்தையின் தகப்பன் என்ற இடத்தில் இருந்தும் கொஞ்சம் அசைபோடுகிறேன்
எப்படிப் பார்த்தாலும்
சிலிர்க்கிறது
இரண்டு நாட்களுக்கு முன்புதான் எடப்பாடி அவர்கள் “கம்யூனிஸ்டுகள் முகவரி இல்லாமல் நிற்கிறார்கள்” என்று கூறினார்

இந்த மறியல் போரின் வெற்றி தந்த திமிரால் நெஞ்சுப் புடைக்கிறது
”எவனடா எவனடா
எவனடா
எங்களின்
முகவரி கேட்டவன்
இவளடா இவளடா
இவளடா
எங்கள் உயிர்ப்பின்
முகவரி”
என்று கர்வத்தால் கண்கள் சிவந்து கொதிநிலை கொள்கின்றன
வேறொன்றுமில்லை
அடையாளமாக இல்லாமல் ரயில் மறியலுக்கு உயிரை ஊட்டியிருக்கிறாள் பிள்ளை
பார்க்கிறேன்
உற்றுப் பார்க்கிறேன்
பெத்தவன்
ஈரக்குலை நடுங்குகிறது
விபரீதம் நடந்திருப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்ட நிகழ்வு அது
கவனம் அவசியம்
இப்படியா முறுக்குவ என்று கொட்டவும் செய்கிறேன்
இயக்கம் எழுவதற்கான ஒரு காரியத்தை செய்திருக்கிறாய் என்று பிள்ளையை ஆரத் தழுவி முத்தமும் இடுகிறேன்
10.07.2025

Wednesday, July 9, 2025

நாங்கள் எப்போதும் C/O மக்கள்

  அன்பின் எடப்பாடி சார்,

வணக்கம்
கம்யூனிஸ்டுகள் முகவரியை இழந்துவிட்டார்கள் என்று நக்கல செய்திருக்கிறீர்கள்
அரசியலில் இது சகஜம்தான்
நேரம் கிடைத்தால்
ஏதேனும் ஒரு செய்தித் தாளின் அத்தனை பதிப்புகளையும் வாங்குங்கள்
அவற்றில் மாவட்டச் செய்திகள் என்று ஒரு பகுதி இருக்கும்
நிதானமாகப் படியுங்கள்
எதற்கும் அலைபேசியை அணைத்துவிட்டு படியுங்கள்
அமித்ஷா அழைத்துக் கெடுத்துவிடப் போகிறார்
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதேனும் சில பகுதிகளில்,
கழிவறை வசதி கேட்டு,
ரேஷன் கடைகளில் வெயிலில் நிற்கும் மக்களுக்கு நிழற்குடை கேட்டு,
மருத்துவமனை கேட்டு,
அர்சு மருத்துவமனைகளின் போதாமையை சுட்டிக்காட்டி,
ஏதேனும் ஒரு தாசில்தாரின் ஆணவத்திற்கு எதிராக,
பேருந்து வசதி கேட்டு,
தங்கள் ஊரிலும் ரயில் நின்றுபோக வேண்டும் என்று கேட்டு,
ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற வகையில் ஏழை மக்களின் குடிசைகளைக் காவு கேட்கும் புல்டோசர்களுக்கு எதிராக,
ஆணவக் கொலைகளுக்கு எதிராக,
நெல்லுக்கு, கரும்புக்கு நியாயமான விலை கேட்டு,
ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியைக் கேட்டு,
தீண்டாமைச் சுவர்களுக்கு எதிராக,
காலியான பணியிடங்களை நிரப்பக் கேட்டு,
நீங்களும் கையெழுத்துப்போட்ட CNAவிற்கு எதிராக,
குழந்தைகளை காவு வாங்கும் நீட்டிற்கு எதிராக,
மதவெறிக்கு எதிராக
பட்டியல் நீளும்
இதுபோன்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கில் கம்யூனிஸ்டுகள் நிற்பதை உங்களால் காண முடியும்
மக்களுக்கான போராட்டக் களங்களே கம்யூனிஸ்டுகளின் முகவரி
தோழர் Kanagaraj Karuppaiah சொன்னதுபோல்
நீங்கள் C/O அமித்சா
தெரிந்துகொள்ளுங்கள்,
நாங்கள் எப்போதும் C/O மக்கள்

Saturday, June 28, 2025

எடப்பாடி உணரவேண்டியது

 2026 இல் தமிழ்நாட்டில் பாஜக பங்கேற்கும் NDA கூட்டணி ஆட்சி

2026 இல் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி
2026 இல் அதிமுக தலைமையில் பாஜக பங்கேற்கும் NDA கூட்டணி ஆட்சி
2026 இல் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி
எடப்படி தலைமையில்தான் கூட்டணி ஆட்சி
எடப்பாடி அல்லாத அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி
என்று மாறி மாறி ஷா பேசுவதும்
இது நியாயமா, அடுக்குமா என்றெல்லாம் விவாதங்கள் கிளம்புவதும் வேடிக்கையாக உள்ளன
இதில் எதுவும் நடக்கப் போவதில்லை என்பது பாஜகவிற்குத் தெரியும்
பிறகு ஏன்?
இப்படியாக அதிமுகவை குழப்பி அதை ஆட்டையப் போட வேண்டும்
ஆக, இந்தத் தேர்தல் என்பது பாஜகவை பொறுத்தவரை அதிமுகவை சிதைத்து ஏப்பம் விடுவதற்கானது
இதை அதிமுக ஊழியன் உணர்ந்திருக்கிற அளவிற்கு எடப்பாடி உணரவில்லை என்பதுதான் துயரமானது

Monday, March 31, 2025

அதை சொல்வதற்கான உரிமை நமக்கில்லை

அதிமுக பொதுச் செயலாளர் யார் என்பதை அதிமுகதான் முடிவுசெய்ய வேண்டும்

அதை சொல்வதற்கான உரிமை நமக்கில்லை

ஜெயலலிதா இறந்தது முதலே அதிமுகவை தன் கட்டுக்குள் கொண்டுவந்து கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்வதற்கான முயற்சியில் பாஜக இறங்கியது

கிட்டத்தட்ட தன் கட்டுக்குள் கொண்டும் வந்துவிட்டது

தலைவர்கள் விலைபோய்க்கொண்டு இருக்கிறார்கள்

ஆனாலும் பாஜக உணராததும்

ஒரு போதும் அதனால் உணர்ந்து கொள்ள முடியாததுமான ஒன்று உண்டு

திமுகவோ அதிமுகவோ,

தொண்டர்கள் ஒருபோதும் விலைபோக மாட்டார்கள்

ஒரு கட்டத்தில் அவர்கள் விலை போன தலைவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு 

தமக்கான தலைவனைத் தேர்ந்தெடுப்பார்கள்

31.03.2025

Sunday, March 30, 2025

இதுக்கு எதுக்குப்பா டில்லி போனீங்க

 அமித்ஷாவை எடப்பாடி அவரது கோஷ்டியோடு சந்தித்தாராம்

இப்போது செங்கோட்டையன் சந்தித்திருக்கிறாராம்
ஸ்டாலின் அவ்வளவுதானாம்
லூசுங்களா,
அமித்ஷா பேரைச் சொன்னாலே தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் 1000 வாக்குகள் குறையும்
அவரைச் சந்திக்க நினைத்தால் இன்னுமொரு 1000 வாக்குகள் குறையும்
சந்தித்தால் இன்னுமொரு 1000 வாக்குகள் குறையும்
அதுகுறித்து பெருமையாக பேசினால் இன்னுமொரு 10,000 வாக்குகள் குறையும்
என்னமோ போனாங்களாம்
அமித்ஷாவப் பாத்தாங்களாம் ....
அட லூசுங்களா
இதுக்கு எதுக்குப்பா டில்லி போனீங்க
உங்க தெருவுலேயே யாராவது வீடு கட்டிட்டு இருந்தா
அங்க போய் கொஞ்சம் மணலெடுத்து
தலையில் போட்டுட்டு வந்திருக்கலாமே
0 others

Thursday, March 27, 2025

எடப்பாடி சார் வேண்டுமானால் பம்மலாம்

 நாகை மாவட்டத்தில் உள்ளது தலைஞாயிறு பேரூராட்சி

15 உறுப்பினர்கள்

ஏழு பேர் திமுக

ஏழு பேர் அதிமுக

ஒருவர் பாஜக

அதிமுகவும் பாஜகவும் இணைந்து அதிகாரத்திற்கு வருகிறார்கள்

அதிமுகவைச் சேர்ந்த திருமிகு செந்தமிழ்செல்வி பேரூராட்சி தலைவர்

பாஜகவின் கதிரவன் இணைத் தலைவர்

சுவாரசியம் என்னவென்றால்

திமுகவும் அதிமுகவும் இணைந்து பாக்க கதிரவனை இம்பீச் செய்திருக்கிறார்கள் என்ற செய்தியை 25.03.2025 இந்து தருகிறது

எடப்பாடி சார் வேண்டுமானால்  பம்மலாம் அமித்ஷா சார்

பாஜக விசயத்தில் திமுக அதிமுக ஊழியர்கள் இணைந்து கூட பாஜகவை வீழ்த்துவார்கள்

கவனம்

27.03-2025

Wednesday, July 17, 2024

விக்கிரவாண்டி தரும் பாடம் இதுதான்

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக பெருவெற்றியைப் பெற்றிருக்கிறது
இந்தத் தேர்தலில் அதிமுக பங்கேற்கவில்லை
அதிமுகவிற்கென்று அந்தத் தொகுதியில் நிச்சயம் 50,000 வாக்குகளாவது இருக்கும்
அவை எங்கு போயின?
அதிமுக ஊழியன் ஒருபோதும் திமுகவிற்கு ஓட்டு போடமாட்டான்
அதிமுக என்பது திமுக எதிர்ப்பில் வளர்வது
திமுக ஒழிக, கலைஞர் ஒழிக, உதயசூரியன் ஒழிக என்பவை அதிமுக கொள்கை என்பதே
இப்போது வேண்டுமானால், ஸ்டாலின் ஒழிக, உதயநிதி ஒழிக ஆகிய இரண்டையும் கொள்கையில் சேர்க்கலாம்
என்றெல்லாம் சொல்லப்படுவது வழக்கம்
இது உண்மையும்கூட
இப்போது பாமக பெற்றிருக்கும் வாக்குகளைப் பார்த்தால்
உதயசூரியன் ஒழிக என்று சொல்லும் அதிமுக ஊழியனே திமுகவிற்கு வாக்களித்திருப்பது புரிகிறது
பாஜககாரர்கள் சொல்கிறார்கள்,
அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்தால் திமுக காலியாகி இருக்கும்
அய்யோ அய்யோ
பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்தால் அதிமுக தோழன் திமுகவிற்கு வாக்களிப்பான்
பாஜக வெறுப்பு என்பது திமுக வெறுப்பைவிட அதிகமாகி இருக்கிறது அதிமுக தோழனுக்கு
விக்கிரவாண்டி தரும் பாடம் இதுதான்

Tuesday, September 26, 2023

பாஜகவின் கொள்கையோடு இவர்களுக்கு பிரச்சினை இல்லை

நேற்று மாலை அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றிருக்கிறது

பாஜகவோடு தேர்தல் உடன்பாடு கிடையாது என்றும்

இந்த முடிவு 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கும் பொருந்தும் என்றும்

ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

அதிமுக தொண்டர்கள் இந்த முடிவை எடுத்து காலமாயிற்று

அல்லது,

நான் பாஜகவோடு கூட்டணி என்ற தவறை ஒருமுறை செய்துவிட்டேன்

இனி ஒருபோதும் பாஜகவோடு கூட்டணி இல்லை  என்று அவர் அறிவித்த பிறகு எடப்பாடியோ, பன்னீர்செல்வமோ பாஜகவோடு நெருங்குவதை அவர்கள் ரசிக்கவில்லை

பதவியையும் சேர்த்துவைத்த காசையும் காப்பாற்றிக் கொள்ளவும்

ரெய்டுகளில் இருந்தும் சிறையில் இருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவுமே பாஜகவோடு தலைவர்கள் நெருக்கமாக இருப்பதை உணர்ந்தே இருந்தார்கள்

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் 

MGR

ஜெயலைதா

திமுக எதிர்ப்பு

இவைதான்

இப்போது அண்ணாவை இழிவாகப் பேசிவிட்டார் அண்ணாமலை என்பதற்காக முறிப்பதாகக் கூறுகிறார்கள்

இவர்களுக்கு அண்ணாவைத் தெரியாது

அண்ணா கூட்டாட்சித் தத்துவத்தின் பிதாமகன்

இவர்கள் “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பதற்கு ஆதரவளித்தவர்கள்

இப்படி நிறைய

பாஜகவின் கொள்கையோடு இவர்களுக்கு பிரச்சினை இல்லை

பாஜகவும்

அதாவது அண்ணாமலையும் மோடிதான் பிரதமர் வேட்பாளார் என்றுதான் பிரச்சாரம் செய்வார்

எடப்பாடியும் ஜெயகுமாரும் அதைத்தான் சொல்லி வாக்கு கேட்கப் போகிறார்கள்

அண்ணாமலை மன்னிப்பு கேட்டுவிட்டால் இவர்கள் என்ன செய்வார்களாம்?

பாஜகவோடு சேர்ந்து நின்றால் ஒரு இடமும் கிடைக்காது

தனியாக நின்றால் ஒன்றிரண்டு தேறலாம்

இதன் மூலம் மோடிக்கு தமிழ்நாட்டிலிருந்து இரண்டு இடங்கள் என்பதற்காக இந்த முறிவு நாடகமாகவும் இருக்கலாம்

இந்தத் தேர்தலில்

விஷ்வகர்ம கல்வித் திட்டத்தை எதிர்க்கிற

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற விஷயத்தை எதிர்க்கிற

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை குடைச்சல் கொடுத்து சிரமப்படுத்துகிற ஆளுநர்களைக் கேள்வி கேட்கிற

நீட்டை எதிர்க்கிற

கட்சிகளைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் 

யாரோடு சேர்ந்து நின்றாலும்

முறித்து வந்தாலும் மதிக்க மாட்டார்கள்

ஆனால் அதிசயமாக

அதிமுக நான் மேற்சொன்னவற்றை செய்தால்

அது,

அதிமுகவிற்கும் நல்லது

தமிழ்நாட்டிற்கும் நல்லது 

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...