Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Monday, May 11, 2026

கலைஞர் + நீங்கள், ஸ்டாலின் சார்

 


அன்பிற்குரிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சார்,
 
வணக்கம்.
 
கீழ்க்காணும் எஸ். அறிவுமணியின் கவிதையை நீங்கள் வாசித்திருப்பதற்கு கொஞ்சமும் வாய்ப்பில்லை. ஆனால் இந்த கவிதை எதைக் கோரி கையேந்தி நிற்கிறதோ அதை நிறைவேற்றிய இருவரில் நீங்கள் ஒருவர். மற்றொருவர் பெருந்தலைவர் காமராசர்.
 
இருவருக்கும் என்னவொரு பொருத்தமெனில் அவரும் இந்த கவிதையை வாசித்திருக்க வாய்ப்பில்லை. மேற்கொண்டு நான் இந்தக் கடிதத்தைத் தொடர்வதற்கு முன் தயவு செய்து இந்த கவிதையை ஒருமுறை வாசித்து விடுங்கள்.
 
”தாயே
தாலாட்டை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படி தூங்குவது?
 
தந்தையே
அறிவுரையை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படி கேட்பது?
 
ஆசானே
பாடத்தை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படி படிப்பது?
 
எல்லோரும்
எல்லாவற்றையும் நிறுத்துங்கள்
என் பசிக்கு
பதில் சொல்லுங்கள்”
 
பொழிப்புரை தேவைப்படாத எளிய வார்த்தைகள். ஆனால் அளவிட முடியாத ஆழம். பசி பத்தையும் பறக்க வைக்கும் என்பதை அறிவோம்.
 
பசிக்கிற வயிறோடு படிப்பது சாத்தியப்படாது என்கிற எதார்த்தத்தை பெருந்தலைவரும் நீங்களும் மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். அந்த ஈரம்தான் என்னைப்போன்ற மாற்று இயக்கத்தினரையும் உங்களின்பால் இவ்வளவு இறுக்கமாகக் கட்டிப்போட்டிருக்கிறது.
 
அன்றைய பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு ஆய்விற்காக ஒரு பள்ளிக்கு செல்கிறார். அன்றைய கூட்டு வழிபாட்டின்போது நிறைய குழந்தைகள் மயங்கி விழுந்திருக்கிறார்கள். காலை உணவு இல்லாததால்தான் குழந்தைகள் மயங்கி விழுவதாகவும், இது தினமும் நடக்கிற ஒன்றுதானென்றும் அவருக்குத் தெரிய வருகிறது.
 
இந்த செய்தியை நெ.து.சுந்தரவடிவேலு, அன்றைய முதல்வர்  பெருந்தலைவர் காமராசருக்கு கடத்துகிறார். பெருந்தலைவர் பதைபதைத்துப் போகிறார். நிலா காட்டி சோறூட்டும் வழக்கம் இருக்கிற பூமியில் குழந்தைகளை பசி தின்று சாய்ப்பதா? என்று துடிக்கிறார்.
 
அதிகாரிகளோடு இருவரும் உரையாடுகிறார்கள். அப்போதிருந்த நிதிச்சுமையில் எதுவும் அரசால் செய்ய இயலாது என்ற எதார்த்தத்தை எடுத்து வைக்கிறார்கள் அதிகாரிகள்.
 
“தெருவிறங்கி பிச்சையெடுக்கிறேன். நிறைந்த வயிறோடு குழந்தைகள் படிக்கட்டும்.”
 
இப்படித்தான் பெருந்தலைவர் சொன்னாராம் ஸ்டாலின் சார்.
 
இதன் விளைவாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் வருகிறது. காலை உணவு இல்லை என்பதால்தான் பிள்ளைகள் மயங்கி விழுந்தது. ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ மதிய உணவு.
 
எனவே காலையில் கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டங்களில் பிள்ளைகள் மயங்கி விழுவது தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. அதேநேரம் மதிய உணவுத் திட்டம் பேரதிகமாக பிள்ளைகளை பள்ளிக்கு ஈர்த்தது.
 
வேறொன்றுமில்லை, அன்றைய வறுமை அப்படித்தான் இருந்தது. பள்ளிக்குப் போனால் மதிய உணவேனும் கிடைக்கும் என்பதால் பிள்ளைகளின் வரத்து அதிகரித்தது.
 
இப்படியாக பள்ளிக்கு வந்தவர்களில் பலர் பெரிய மருத்துவர்களாக மாறினார்கள் என்பது வரலாறு.
 
இதற்கு காரணம் பள்ளியில் கிடைத்த கல்வியா? அல்லது பள்ளியில் கிடைத்த உணவா? என்று பட்டிமன்றமே நடத்தலாம். ஆனால் இரண்டில் ஒன்றை ஒருபோதும் தீர்ப்பாகக் கூறமுடியாது. பள்ளியில் கிடைத்த கல்வியும், பசியாற்றிய மதிய உணவும்தான் இதற்கு காரணம்.
 
எண்பதுகளின் மத்தியில் வேலைக்கு வருகிறேன். பணிக்கு வந்த முதல் நாளே கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பசியால் பிள்ளைகள் மயங்கி விழுவதைப் பார்க்க முடிகிறது. அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும், ஒவ்வொரு நாளும் குழந்தைகள் விழுந்துகொண்டே இருப்பது தொடர்கிறது. இத்தனைக்கும் எங்கள் பள்ளி கொஞ்சம் பெரிய குழந்தைகள் படிக்கும் ஒரு மேல்நிலைப் பள்ளி. எனில், சின்ன குழந்தைகள் படிக்கும் தொடக்க பள்ளிகளின் நிலை?
 
சில நண்பர்கள் குழந்தைகளுக்கான “காலை உணவு” குறித்து கத்தத் தொடங்குகிறோம். நாங்கள் பேசி யாருக்குக் கேட்கும் ஸ்டாலின் சார்?
ஆனாலும் விடாது வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இதுகுறித்து பேசுகிறோம்.
 
அன்றைய பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர் கார்மேகம் சார் மாதிரி அதிகாரிகளிடம் இதைக் கொண்டு போகிறோம். அவர்களும் பேச ஆரம்பிக்கிறார்கள். ஆனால் விடியவில்லை.
 
இந்த கோரிக்கை எப்படி, யார்வழியாக உங்களுக்கு வந்தது என்று தெரியவில்லை. அரசு மற்றும் ஆதிதிராவிட தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வருகிறது.
 
போதாது என்கிறோம். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துகிறீர்கள்.
 
பள்ளியின் வருகைப்பதிவு எகிருகிறது. எனக்குத் தெரிந்த ஒரு பள்ளியில் பள்ளிக்கே வராத பத்து குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வர ஆரம்பிக்கிறார்கள்.
 
அதில் ஒரு குழந்தை “கலைத் திருவிழா”வில் மாவட்ட அளவில் ஜொலிக்கிறான். இதன் விளைவுகள் முழுவதும் வெளிவர இன்னும் பதினைந்து ஆண்டுகளாகும்.
 
உங்களது தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு இடத்தில் “என் சகோதரிகள் இன்னும் ஒரு அரைமணி நேரம் கூடுதலாக ஓய்வெடுக்கட்டும் என்பதற்காகவும்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தேன்” எ்ன்று கூறினீர்கள்.
 
இப்படியெல்லாம் சிந்திக்க எப்போதாவதுதான் உங்களைப்போல தலைவர்கள் கிடைப்பார்கள். இப்படி அபூர்வமாய் கிடைக்கும் தலைவர்களை நாங்கள் இதயமே இல்லாமல் தோற்கடிப்போம்.
ன்ன செய்வது, எங்களது நன்றி அப்படிப்பட்டது ஸ்டாலின் சார்.
 
உங்களது தோல்வி எனது இரண்டு எதிர்பார்ப்புகளில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறது ஸ்டாலின் சார்.
 
திங்கள் காலை ரவை உப்புமா கொடுத்தீர்கள். பிறகு அதை அரிசி பொங்கலாக மாற்றினீர்கள்.
 
செவ்வாயன்று சேமியா கிச்சடி, புதனன்று அரிசி பொங்கல், வியாழனன்று அரிசி உப்புமா, வெள்ளியன்று கோதுமை உப்புமா என்று கொடுத்தீர்கள்.
 
அரிசி உணவுகளை குழந்தைகள் கொட்டுகிறார்கள் என்று சொன்னார்கள்.
 
ஒரு குழு அமைத்து குழந்தைகளின் விருப்பமறிந்து அவர்களுக்குப் பிடித்த உணவைத் தரலாமே என்று 2025 செப்டம்பரில் எழுதினேன். அந்த மாதம் நடந்த எனது மகளது திருமணத்திற்கு வந்திருந்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சார் அந்தப் பதிவு குறித்து என்னோடு பேசினார்.
 
அக்டோபர் மாதம் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இருபது பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து குழுவினரை அனுப்புகிறீர்கள். அவர்கள் தினமும் காலை பள்ளிக்கு வந்து குழந்தைகளின் உணவு விருப்பத்தைக் கேட்டறிந்து போனார்கள்.
 
பிள்ளைகள், பூரி, இட்லியெல்லாம் கேட்டிருக்கிறார்கள். கிடைக்கும் என்று ஆசையாக இருந்தேன்.
 
ஏழை குழந்தைகளின் இட்லி கனவை உங்களது தோல்வி மறுதலித்திருக்கிறது சார்.
 
இந்த ஜூன் முதல் இந்தத் திட்டம் நடுநிலைப் பள்ளிகள் வரைக்கும் விரிவு படுத்தப்படும் என்று கூறினீர்கள். என்ன ஆகுமென்று தெரியவில்லை.
எனக்கு வயது 63 ஆகிறது சார். எனக்கு விவரம் தெரிந்து ஏழு முதல்வர்களைப் பார்த்திருக்கிறேன். பெருந்தலைவர், அண்ணா இவர்கள் ஆண்ட காலத்தில் நான் இருந்தேன் என்றாலும் விவரம் தெரியாது.
 
நான் பார்த்தவரை உங்களை மாதிரி ஒரு முதல்வரை நான் பார்த்ததில்லை ஸ்டாலின் சார். ”கலைஞர் +”  நீங்கள்.
 
இன்னுமொரு முறையேனும் உங்களது ஆட்சியைப் பார்த்துவிட்டுப் போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது சார்.
 
மத சார்பின்மைக்கு ஆதரவான களத்தில், சமூகநீதிக்கான போராட்ட களத்தில் எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம்.
 
மிக்க நன்றிங்க ஸ்டாலின் சார்.
 
அன்புடன்,
இரா.எட்வின்.    


Thursday, July 10, 2025

இடது வழியும் இருக்கிறது ஸ்டாலின் சார்

  அன்பின் ஸ்டாலின் சார்,

வணக்கம்
நீங்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற கொஞ்ச காலத்தில்
“ஸ்டாலின் கலைஞர் ப்ளஸ்” என்று எழுதினேன்
அதைப் படித்ததும்

எங்கள் கட்சித் தோழர்கள் என்னவோ ஒரு புன்னகையோடு என்னைக் கடந்து போய்விட்டார்கள்
ஆனால் திமுகவில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் உள்ளிட்டு பலர் என்னைக் கடிந்துகொள்ளவே செய்தார்கள்
வேறொன்றுமில்லை,
திமுக தோழர்கள் கலைஞருக்கு சமமாக உங்களைக்கூட பார்க்க மாட்டார்கள்
கலைஞர்மீது அவர்களுக்குரிய அன்பு அப்படி
ஆனால் அப்படி எழுதியது சரிதான் என்பதை இன்று (09.07.2025) திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நீங்கள் நிகழ்த்திய உரை உறுதி செயகிறது
கலைஞர் இருந்திருந்தால் உங்களை அழைத்து முத்தமிட்டிருப்பார்
”காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கான வழிகள் உள்ளன. மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக்கூடாது”
என்று அழுத்தி சொல்லியுள்ளீர்கள்

திமுக மாதிரியான ஒரு கட்சியின் தலைவரால் இப்படி பேசிவிட முடியும்
ஆனால் திமுக அரசின் தலைவரால் இப்படி பேசிவிட முடியாது. இழப்புகளை சந்திக்க நேரும் என்பதை அறிந்தவன் நான்.
வெளிப்படியாகவே சொல்லிவிடுகிறேன்
இதுவரை இவ்வளவு வெளிப்படையாக யாரும் பேசியது இல்லை
இழப்பதற்கு பயப்படாத குணம் வேண்டும் இப்படி பேசுவதற்கு
உங்களுக்கு அது இருக்கிறது
முத்தம் சார்
பாருங்களேன் கோட்சே ஒரு கொலைகாரன்
அவன் RSS காரன்
இதை வெளிப்படியகப் பேசுவதற்கு நமக்கு ஒரு தயக்கம் இருக்கிறது பாருங்கள்
அதை உடைத்திருக்கிறீர்கள்
மீண்டுமொருமுறை உங்களை இறுக அணைத்துக் கொள்கிறேன் சார்
ஆனால் இது கோட்சே என்ற ஒரு மனிதனின் செயல் என்ற அளவில் அவனைக் குற்றப்படுத்துவதோடு சுருங்கிப்போய்விடக் கூடாது.
அவனுக்குப் பின்னால் இருந்த
இப்போது அமித்ஷா தொடங்கி
அய்யா H.ராஜா வரை கைவைத்திருக்கும் சித்தாந்தம்தான் நமது பிரச்சினை
ஒன்று சொல்லவா
19.02.1948 அன்று தஞ்சை சன்னாநல்லூரில் ஒரு கூட்டம்
காந்தியாருக்கான இரங்கல் கூட்டம்

பெரியார் பேசுகிறார்
அந்தக் கூட்டத்தில் அப்போது இளைஞராக இருந்த கலைஞர் கலந்துகொண்டு பெரியாரை ஏதோ கேள்வி கேட்கிறார்
பெரியார் கலைஞருக்கு இப்படியாக பதில் சொல்கிறார்
காந்தியை துப்பாக்கி சுட்டது என்பதற்காக துப்பாக்கியை ஒடித்துவிடலாமா?
வேறு துப்பாக்கி வாங்க அவனுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?
சரி கொன்ற கோட்சேயை கொன்று போடலாமா?
ஆயிரம் கோட்சேக்களை அவர்கள் உருவாக்குவார்கள்
சரி RSS அமைப்பை அழித்துவிடலாமா?
வேறு பெயரோடு வந்துவிடுவான்
அவனது சித்தாந்தத்தோடு சண்டை போடவேண்டும் என்று பெரியார் பதில் சொல்லி இருக்கிறார்
கலைஞரின் மகன்
வலுவாக,,
இழப்புகளைக் கண்டு அஞ்சாமல் சண்டை போடுகிறீர்கள்
சாம்சங் பிரச்சினையில் உங்களுக்கு எதிர் நின்றோம்
எங்களுக்குத் தெரியும்
எங்களைத் தவிர சங்கிகள் உள்ளிட்டு அனைவரும் உங்களோடு நின்றார்கள்

அது பாட்டளி மக்களின் உரிமைக்கான பிரச்சினை
அந்த விஷயத்தில் உங்களுக்கு எதிர் தளத்தில் நின்று உங்களோடு சமர் புரிவது எங்கள் வேலை

செய்தோம்

இனியும் செய்வோம்

உங்களுக்கும் அது தெரியும்
இதோ மோடிக்கு எங்கள் பலத்தை
இன்றைய பொது வேலைநிறுத்தத்தின் மூலம் காட்டி இருக்கிறோம்
இதுவும் எங்கள் வேலை
அதே வேளை இதுமட்டும் அல்ல எங்கள் வேலை என்பதும் எங்களுக்குத் தெரியும்
சங்கிகளுக்கு எதிராக உங்களை இணைத்துக்கொண்டு களமேகுவதும்
சங்கிளோடு நீங்கள் சண்டை போடும்போது உங்களோடு இணைந்து நிற்க வேண்டியதும் எங்கள் வேலை
செய்வோம்
நன்றி சார்
அன்புடன்,
இரா.எட்வின்
09.07.2025

Wednesday, July 2, 2025

இவை போதாதே ஸ்டாலின் சார்

  அன்பின் ஸ்டாலின் சார்,

வணக்கம்
திருப்புவனம் அஜித்தின் அம்மாவோடும் தம்பியோடும் நீங்கள் உரையாடிய காணொலியை சற்றுமுன்புதான் பார்த்தேன்
உங்களை வைத்து பார்க்கும்போது இது கொஞ்சம் தாமதம்தான் சார்
ஆனால் இது புதிது
எடப்பாடி இன்றுவரை சாத்தான்குளம் நிகழ்விற்காக இப்படி இல்லை என்றாலும் இதில் ஒரு துரும்பளவும் செய்ததில்லை
உங்கள்மீது நாங்கள் வருத்தப்படுவதற்கும் அவ்வப்போது கோபப்படுவதற்கும் உங்களது இந்தத் தன்மைதான் காரணம்
மீண்டும் என் நன்றி சார்
பிள்ளையை இழந்து தவிக்கும் அந்தத் தாய்க்கு எவ்வளவு பெரிய ஆறுதல் என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது
அஜித்தின் தம்பிக்கு நீங்கள் ஒப்புக்கொண்டபடி அரசுப்பணியை விரைவில் வழங்குவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்
அது அந்தக் குடும்பத்தை எவ்வளவு ஆற்றுப்படுத்தும் என்பதும் எனக்குத் தெரியும்
ஆனால், இவை போதாதே சார்
உங்கள் ஆட்சியிலும் இதுவரை 24 பேர் விசாரனையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்
காவலர்களுக்கு அஜித் மீதோ மற்ற 23 பேருக்கோ எந்தப் பஞ்சாயத்தும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்
எனில்,
வேறு யாரோ இருக்கிறார்கள்
அது யாரென்பதை கண்டுபிடியுங்கள்
பின்னால் இருப்பவர்கள் உங்கள் முகாம்காரர்களாகவே இருப்பினும் தண்டியுங்கள்
மக்கள் உங்களோடிருப்பார்கள்
நன்றிங்க சார்
அன்புடன்,
இரா.எட்வின்
இரவு 10.57
01.07.2025

Wednesday, May 14, 2025

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் எப்படி விடுபட்டான்?

 பெறுதல்: திரு.கோபால்

சார்,
நக்கீரன்
வழி: தோழர். Govi Lenin
அன்பின் சார்,
வணக்கம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், CPM , பங்கினை நினைத்து திமிர் கொள்பவன் நான்
அதே நேரம்
நக்கீரன் பங்கினை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்பதையும் உரக்கப் பேசுபவன்
ஆனாலும் இந்த ஒன்பது பேர் கொண்ட பட்டியலில் போதாமை உணரவில்லையா சார் நீங்கள்
பொள்ளாச்சி ஜெயராமன் மகன் எப்படி விடுபட்டான்?
விடாதீர்கள்
அ.இ.ஜ.மாதர் சங்க தேசியத்தலைவர்களில் ஒருவரான தோழர் Suganthi P அவர்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுத இருக்கிறேன்
விடாதீங்க சார்
அன்புடன்,
இரா.எட்வின்
14.05.2025

Tuesday, April 23, 2024

கொஞ்சம் மன அமைதியை உங்களுக்கு நீங்கள் நம்பும் இறைவன் அருளட்டும்

 அன்பிற்குரிய சார்,

வணக்கம்
மிகவும் பரபரப்பாகவும் பதட்டத்துடனுமாகவே உங்களைப் பார்க்க முடிகிறது
ஒன்று தெரியுமா,
எங்கள் இளைய தோழர்களிடத்தில், உங்களைப்போல இயக்கத்தின்மீது விசுவாசமாக இருக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.
சிரிக்காதீர்கள்
இது சத்தியம்
எத்தனை அசிங்கப்பட்டாலும் தமிழ்நாட்டிற்கு திரும்பத் திரும்ப நீங்கள் வருவதாக பலர் கிண்டல் செய்யலாம்
ஆனால்,
உங்கள் மீது எனக்கு இருக்கும் ஒரே ஒரு மரியாதைக்கான ஒரே ஒரு காரணம் இதுதான்
எவ்வளவு அசிங்கப் பட்டாலும் இயக்கத்தைக் கட்ட வேண்டும் என்ற உங்களது இயக்கத்தின் மீதான உங்களது விசுவாசம் இருக்கிறது பாருங்கள்
சத்தியமாகச் சொல்கிறேன் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன்
கிட்டத்தட்ட 19.04.2024 வரை இஸ்லாமியர்கள் மீது இவ்வளவு வன்மத்தைக் கக்கவில்லை நீங்கள்
முகமது சமியை உங்களது சகோதரராக விளிக்குமளவு கொஞ்சம் பக்குவம் இருந்தது
20 ஆம் தேதி நீங்கள் நாக்பூரிலே தங்கி RSS தலைவர்களை சந்தித்ததாக அய்யா பீட்டர் அல்போன்ஸ் கூறுகிறார்
அதன் பிறகுதான்
இந்துப் பெண்களின் தாலி குறித்தெல்லாம் கதறத் தொடங்குகிறீர்கள்
நீங்கள் தாலிகுறித்து பேசியதால் ஒன்று சொல்கிறேன்
தமிழகத்தில் தாலியறுத்தான் சந்தை என்று ஒரு ஊர் இருப்பதாக உங்களுக்குத் தெரியுமா சார்
ஏன் அந்த ஊருக்கு அந்தப் பெயர் வந்தது என்று கத்தாமல் கூச்சலிடாமல் விவாதிக்கலாமா சார்
இதை எல்லாம்கூட மன்னிக்கலாம் சார்
ஆனால் காங்கிரஸ் ஏதோ இந்தியச் சொத்துக்களை எல்லாம் இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்று கூறுகிறீர்களே
அதைத்தான் மன்னிக்க முடியாது
நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்,
நீங்கள் மசூதியை இடித்தது உங்கள் ஆட்சியிலா
நீங்கள் இடிப்பீர்கள்
அவர்கள் வேடிக்கைப் பார்ப்பார்கள்
அவ்வளவுதான்
இப்போதுகூட சனாதனம் குறித்து பேசியதற்காக உதயநிதிக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும் என்று ரேவந் ரெட்டி கூறுகிறார்
இருவரோடும்தான் எங்களது போராட்டம்
சனாதனம் என்பது மேல், கீழ் பாகுபாடு
கடுமையாக எதிர்ப்போம்
கொஞ்சம் மன அமைதியை உங்களுக்கு நீங்கள் நம்பும் இறைவன் அருளட்டும்
நன்றி
இப்பவும் அன்புடன்,
இரா.எட்வின்
23.04.2024

Wednesday, March 6, 2024

ஏதுமற்றவர்களுக்கானதாக மருத்துவத்தை

அன்பின் மருத்துவர் கீர்த்தனா,

பிறந்தநாள் வாழ்த்துகள்
கடந்த பிறந்தநாட்கள் எதையும்விட இந்த பிறந்தநாள் உனக்கு மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன்
ஆமாம்,
நான்கு நாட்களுக்கு முன்னர் BHMS தேர்வு முடிவு வந்தபோது உன் அருகில்தான் இருந்தேன்.
தேர்வு முடிவினைக் கண்ணுற்றதும் நீ கொண்டாடி மகிழ்ந்த விதம் எனக்குப் புதிதாக இருந்தது
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியானபோது நீ அப்பாயி வீட்டில் இருந்தாய். அப்போது 491/500 எடுத்திருந்தாய்,
மிகுந்த மகிழ்ச்சியோடும் ஒருவித படபடப்போடும் அதை உனக்கு அலைபேசிவழி தெரிவித்தபோது
எந்தவிதமான சலனமும் இன்றி,
இன்று வியாழன், எனவே நாளைக்கு வெள்ளி என்று யாரேனும் சொன்னால்
அந்த செய்தியை எப்படி எடுத்திருப்பாயோ அப்படி எடுத்த விதம் இன்னும் பசுமையாய் இருக்கிறது
ஒரு வகையில் unbecoming of keerthna வாக இருந்தாலும்
இந்தக் கொண்டாட்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது
ஹோமியோ மருத்துவர் என்பது உன் கனவு என்பது எனக்குத் தெரியும்
உன் கனவுகளில் ஒன்று நிறைவேறுவதற்கு ஏதோ ஒரு இடத்தில் உன் அம்மாவோடு நானும் இருந்திருக்கிறேன் என்பதில் பெரிய மகிழ்ச்சி எனக்கு
என் மகள் ஒரு மருத்துவர்
காட்டம்மா என்று அழைக்கப்படும் காளியம்மாளின் கொள்ளுப் பேத்தி
முனியம்மாள் ராஜரத்தினத்தின் பேத்தி
ஒரு மருத்துவர்
நம்முடைய குடும்பத்தைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய செய்திதான்
பெரிய பாரம்பரியம் மிக்க குடும்பமெல்லாம் இல்லை நமது குடும்பம்
உன் தாத்தா ஒரு இடைநிலை ஆசிரியர்
ஆனாலும் அப்பாவைவிட தாத்தாவிற்கு ஏகத்திற்கும் கடன்
என் அம்மாயி காட்டம்மா மாடு மேய்க்கும்
இன்று உன் அப்பா ஒரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். இதற்கும் உன் கொள்ளுப் பாட்டி மாடு மேய்த்ததற்கும் நேர்விகித உறவு இருக்கிறது கீர்த்தி
அது மாடுமேய்த்து சேர்த்த பால் காசில்லாது போயிருந்தால் உன் அப்பா இன்று இந்த அளவிற்கேனுமான நிலையில் இல்லை
இதை இதுவரைக்கும் உன் சித்தப்பாவிடமோ அத்தையிடமோகூட பகிர்ந்ததில்லை
இப்போது இவற்றை சொல்வதற்கு காரணம் இருக்கிறது
உன் வேர் உனக்குத் தெரிய வேண்டும்
என் இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில்
என் பணியிடத்தில், எனக்கான சமூக வெளியில்
என்னை ஒரு ஆசிரியரின் மகன் என்று மட்டும் வெளிப்படுத்திக் கொண்டதில்லைஒரு மாடு மேய்த்த கிழவியின் பேரனாக என்னை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கிறேன்
அன்பிற்குரிய கீர்த்தனா,
நீ,
ஒரு மாடு மேய்த்தக் கிழவியின் கொள்ளுப் பேத்தி
இவற்றை இவ்வளவு விளக்கமாக சொல்வதற்கு காரணமிருக்கிறது
அதை சொல்வதற்குமுன் இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும்
அப்பாவிற்கு காது கேட்காது என்பது நீ அறிந்ததுதான்
காது கொஞ்சம் மந்தமாக இருக்கிறது என்பதை நானும் உன் தாத்தாவும் உணரத் தொடங்கியபோது நான் அநேகமாக பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்
விடுதியில் தங்கிப் படிக்கும் அளவிற்கு வசதி இல்லாததால் என் மாமா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன்
காது மருத்துவரைப் பார்ப்பதற்கே எங்களுக்கு காலம் ஆயிற்று
ஒரு அறுவை, அல்லது காது கேட்கும் கருவியை அவர் பரிந்துரைத்தபோது அதற்கான வசதி நம் குடும்பத்தில் இல்லை
பிறகு அப்படியேப் பழகிப் போனது
இப்போது காதுகேட்கும் கருவியைப் பொறுத்தியதும் அப்பாவிற்கு காது பெருமளவு தெளிவாகக் கேட்பதும் நீ அறிந்ததே
அதுவரையில் நான் பட்ட அவமானங்களும் நீ அறிந்ததுதான்
காது கேட்கும் கருவியை முன்னரே பொறுத்தி இருப்பின் பொதுத் தளத்தில் நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கக் கூடும்
இப்போது உன்னிடம் வைப்பதற்கு ஒன்றிரண்டு கோரிக்கைகள் என்னிடம் உண்டு மகளே
நாம் என்பது இன்றைய நாம் மட்டும் அல்ல
உன்னை ஹோமியோ படிக்கவைத்ததற்கு என்னிடம் இரண்டு காரணங்கள் இருந்தன
1) ஹோமியோ என்பது மாற்று மருத்துவம்
2) அது ஏழைகளுக்கான மருத்துவம்
ஹோமியோவை மாற்று மருத்துவம் என்று கூறுவதற்கு அது அலோபதிக்கான மாற்று என்றோ, சித்தாவிற்கு மாற்று என்றோ பொருள் அல்ல
ஒன்றால் ஒன்றை இட்டு நிரப்பிவிட முடியாது என்பதும் எனக்குத் தெரியும்
அதனதற்கென்று தனிப்பட்ட லட்சணங்கள் உண்டு
எந்த மருத்துவமாயினும் அது மக்கள் மருத்துவமாக இருக்க வேண்டும் என்றும்
அனைத்துவகை மருத்துவமும் ஒன்றிணைந்து மக்களுக்கான ஆய்வுகளை செய்வதும்
ஏழைகளுக்கானதாக என்பதே தவறு
ஏதுமற்றவர்களுக்கானதாக மருத்துவத்தை மாற்றி அமைக்க வேண்டும்
ஹோமியோவை ஏதுமற்றவர்களுக்கான மருத்துவமாக நான் பார்க்கிறேன்
அல்லது அப்படியாக அது மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
40 வருடங்களுக்கு முந்தைய உன் அப்பா, அப்பாயி, பாட்டி ஆகியோர் இன்று ஓரளவு வசதியோடிருக்கலாம்
எந்தவிதமான மருத்துவத்திற்கும் கடன் பெற்றாவது சடுதியில் தயாராகிவிடக்கூடிய நிலையில் இருக்கலாம்
ஆனால்,
40 வருடங்களுக்கு முன்னர் உன் அப்பா இருந்த நிலையில் எத்தனையோ பேருடைய அப்பாக்கள், அப்பாயிகள், பாட்டிகள் ஏராளம் இன்றும் உண்டு
ஏதுமற்றவர்களும் உண்டு
அவர்களுக்கும் மருத்துவம் போக வேண்டும்
அதற்கு உன் பங்களிப்பும் இருக்க வேண்டும்
அது நடந்தால் அப்பாவின் கட்டை வேகும்
வாழ்த்துகள் கீர்த்தி
அன்புடன்,
இரா.எட்வின்
- அவளது ஒரு பிறந்தநாளின்போது எழுதியது

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...