யோசித்துப் பார்க்கிறேன்,
திருவாளர் கழிவறை என்று யாருக்கேனும் பெயர் வைத்து அழைக்க இயலுமா?
கேவலமான பட்டப் பெயரால் விளிம்புநிலை மக்களை அழைப்பதில் எந்தக் கூச்சமும் காட்டாத நம் மண்ணில்கூட இது சாத்தியமில்லை என்றே படுகிறது.
“மண்ணாங்கட்டி”, “மண்வெட்டி” என்பது வரைக்கும் கூட இது நகர்ந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் ராமசாமி என்ற தனது பெயரால் அழைக்கப் படும் போது திரும்பிப் பார்க்காத மனிதன் “ மண்ணாங்கட்டி” என்று அழைத்ததும் திரும்பிப் பார்க்கிற நிகழ்வுகள் இங்கு ஏராளம் இருக்கவே செய்கின்றன.
அந்த அளவிற்கு பட்டப் பெயரோடு ஒன்றிப் போகும் விளிம்பு நிலை மனிதன்கூட தன்னை யாரேனும் ”கக்கூசு” என்றழைத்தால் கொன்றே போடுவான்.
அனால் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கக்கூடிய பிரபலமான ஒரு பெரிய மனிதரை “ திருவாளர். கழிவறை” (mr.toilet) என்று அழைப்பதில் ஒரு நாடு பெருமைப் படுகிறது.
அதைவிட முக்கியம் என்னவென்றால் அப்படி தான் அழைக்கப் படுவதில் எதைவிடவும் பெருமை கொள்கிறார் அந்த பெரிய மனிதர்.
இது சாத்தியப் பட்டிருக்கிறது சிங்கப்பூரில்.
ஜாக்சிம் என்ற பெரிய மனிதரைதான் திருவாளர். கழிவறை (MR.TOILET) என்று அழைக்கிறார்கள். அப்படி அழைக்கப் படுவதற்கு அவர் என்ன செய்தார்?
கழிவறைகளின் அவசியத்தை சிங்கப்பூர் மக்களிடம் இயக்கமாகக் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். அதற்காகத்தான் அவரை மக்கள் அப்படி கொண்டாடுகிறார்கள். அவர் தந்த அழுத்தத்தின் விளைவாகத்தான் ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த விவதமொன்றில் சிங்கப்பூரின் பிரதிநிதி திரு மார்க் நியோ அவர்கள் நவம்பர் 19 ஐ உலக கழிவறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று மன்றாடினார்.
இந்தக் கோரிக்கையை முன் வைப்பதற்காக தான் கேலி செய்யப் படலாம் என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். அதை வெளிப்படையாக அந்த மன்றத்தில் பதியவுமே செய்தார். யார் தன்னை எவ்வளவு கேவலமாக பகடி செய்த போதிலும் இந்தக் கோரிக்கையிலிருந்து தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். உலகத்தின் இந்த நொடியின் மிக அவசியமான ஒரு பிரச்சினையைத் தான் பேசிக்கொண்டிருப்பதாகவும், ஆகவே அந்த மாமன்றம் அது குறித்து கவனம் குவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அவர் எதிபார்த்தபடியே அவர் பகடி செய்யப் பட்டாரா இல்லையா என்பதற்கு சான்றெதுவும் இல்லை. என்றாலும் அதற்கு வாய்ப்பிருக்கவே இருக்கிறது. ஒருக்கால் வெளிப்படியாக அதை செய்ய தைரியம் இல்லாதவர்கள் மனதிற்குள்ளேனும் அவரை பகடி செய்திருப்பதற்கு வாய்ப்புகளுண்டு.
உலகில் 250 கோடிக்கும் சற்று கூடுதலான மக்களுக்கு சுகாதாரமான கழிவறை இல்லை என்றும் 110 கோடிக்கும் அதிகமான மக்கள் திறந்த வெளியையே கழிவறையாகப் பயன் படுத்துகிறர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
எனில், இவ்வளவு வளர்ந்தநிலை விஞ்ஞானத்தை பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் நேரத்தில் 110 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதியே இல்லை என்பது எவ்வளவு கொடுமை. இவர்கள் திறந்த வெளியை கழிவறைகளகப் பயன்படுத்துவது சூழலை பாதிக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இன்றைய உலக மய சூழலில் அதற்கு அவ்வளவு மறைவான இடம் எங்கே இருக்கிறது.
திறந்த வெளியை பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு புதர் உள்ள இடங்களைத்தான் நாடவேண்டும். கிராமங்களில் இத்தகைய இடங்களை மந்தை என்பார்கள். வெளிச்சத்தில் போக முடியாது. இருட்டினால்தான் போக முடியும். புதர், இருட்டு கழிவறை கட்டவே வசதியற்ற கிராமப் புற ஏழை மக்கள் கை விளக்கிற்கு எங்கு போக முடியும்? இரவு நேரத்தில் புதர் பக்கம் ஒதுங்கியவர்களில் பாம்பு கடித்து செத்தவர்களின் எண்னிக்கை யாருக்குத் தெரியும்.
கழிவறை கட்டவே வக்கற்ற ஏழைமக்கள் எப்படிச் செத்தால் யாருக்கென்ன கவலை?
இதைவிடக் கொடுமை எவ்வளவு அவசரமென்றாலும் இருட்டும் வரை காத்திருக்க வேண்டும்.
”ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது “ என்பார்கள் ஆனால் பள்ளிகளில் எதை கற்றுத் தருகிறோமோ இல்லையோ குழந்தைகளுக்கு மூத்திரத்தை அடக்கக் கற்றுத் தருகிறோம் என்று ஒரு கட்டுரையில் சொல்வார் தி. பரமேசுவரி.
கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். கிராமத்தில் அல்லது, கழிவறை இல்லாத சிறு நகரத்தில் வசிக்கக் கூடிய ஒரு பெண்ணிற்கு மதிய நேரத்தில் இயற்கை உபாதைக்கான அறிகுறி தெரிகிறது எனில் அவர் எங்கு போவார்? பல பர்லாங்குகள் கடந்து போனால்தான் புதர் கிடைக்கும்.அதுவரை அடக்கிக் கொண்டே போகும் அவஸ்தையை, வலியை எப்படி எழுதுவது.
பயணத்தில் இருக்கிறோம். பசிக்கிறது. இன்னும் ஒரு மணி நேரம் பயணித்தால் ஒரு நல்ல உணவகம் கிட்டும் எனில் ஒரு மணி நேரம் பசியை அடக்கலாம். இருட்டும் வரை இதை எப்படி அடக்குவது?
பெரும் பகுதி இயற்கை உபாதைகளுக்காக இவர்கள் ஒதுங்கும் பகுதி சாலை ஓரங்கள்தான். அப்படி இருக்கும் போது சாலையில் வாகனங்களோ, மனிதர்களோ கடக்க நேரிட்டால் இவர்கள் படக் என்று எழுந்து நிற்க வேண்டும்.
கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். இயற்கை அழைப்பினை ஏற்று கழித்துக் கொண்டிருக்கும் வேளை யாராவது ஒரு நிமிடம் எழுந்து நில் என்று சொன்னால் கொன்றே போட மாட்டோமா?
ஆனால் கழித்துக் கொண்டிருக்கும் வேளை ஏதேனும் வாகனத்தின் ஒலியையோ ஒளியையோ கண்டு விட்டால் நிறுத்திவிட்டு அப்படியே எழுந்து நிற்க வேண்டுமே அந்தக் கொடூர வலியின் அவஸ்தையை இத்தனை ஆண்டுக்காலம் ஆண்ட நம் தலைவர்கள் உணர்வார்களா?
தண்ணீர் எடுக்க எம் தாய்மார்கள் இரண்டு மூன்று மைல்கள் கால் கடுக்க நடந்து, அங்கு பல நேரம் கால் நோக காத்திருந்து நீரெடுத்து வரவேண்டுமென்றால் மூத்திரம் போக ஒதுங்க இருட்டும் வரை காத்திருக்க வேண்டிய அவலம்.
ஏறத்தாழ இரண்டு லட்சம் குழந்தைகள் போதிய கழிவறைகள் இல்லாமையால் வருடா வருடம் இறக்கிறார்கள் என்கிற செய்தியை மார்க் நியோ வேதனையோடு குறிப்பிடுகிறார்.
ஆக கழிவறைப் போதாமை இரண்டு லட்சம் குழந்தைகளை வருடா வருடம் கொல்கிறது. இதைக் கொஞ்சம் மாற்றிச் சொன்னால் போதிய கழிவறைகளை கட்டுமானித்தால் வருடா வருடம் இரண்டு லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
போதிய சத்துணவு இல்லாமையாலும் பல லட்சம் குழந்தைகள் வருடா வருடம் செத்து மடிகிறார்கள்.போதிய கழிவறையின்மையாலும் பல லட்சம் குழந்தைகள் செத்து மடிகிறார்கள். இதற்கு ஒரு வழி காணாது சந்திரனுக்குப் போயென்ன? சூரியனைக் கொண்டு வந்து பாராளுமன்றத்தின் கோபுரத்தில் வைத்தென்ன?
பாராளு மன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேலையில் நமது பிரதான எதிர்க் கட்சியின் பிரதம வேட்பாளரான திரு மோடி அவர்கள் “ கழிவறை கட்டுவதற்கே முன்னுரிமை. கோயில்கள் இரண்டாம் பட்சமே” என்று பேசத் துவங்கியிருக்கிறார்.
இதைப் பார்த்ததும் வடையை எங்கே அந்த மனுஷன் கொண்டு போய்விடுவாரோ என்ற அச்சத்திலும் பதட்டத்திலும் காங்கிரஸ் எதிர்குரலெடுக்கத் தொடங்கியிருக்கிறது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிரிஜா வியாஸ் இது தங்களது அரசிந்திட்டம் என்றும், கோவிலை விட கழிவறைகளே அவசியம் என்பதை மோடிக்கு முன்பே தங்கள் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பேசியிருப்பதையும் சொல்வதோடு தங்கள் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியுள்ளதையும் குறிப்பிடுகிறார்.
கிரிஜா அவர்கள் சொல்வது உண்மைதான். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஜெயராம்தான் மோடியை முந்தி இதை சொன்னவர். நாம் கேட்பது என்னவெனில் ஜெயராம் பேசியது சரி, நீங்கள் ஒதுக்கியதும் சரி, என்ன விளைவு?
முறையான கழிவறைகளைக் கட்டுவதுதான் எங்கள் செயல்திட்டம் என்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தவர்கள் சொல்வது ஏழைகளை எள்ளி நகையாடுவது அன்றி வேறென்ன? இதை செயல் திட்டமாக சொல்வதற்கே அரை நூற்றாண்டுக்கும் மேலே தேவைப் படுகிறது உங்களுக்கு எனில் நிறைவேற்ற எத்தனை நூற்றாண்டுகள் பிடிக்கும்.
கோவில் கட்டுவதாகச் சொல்லியே இதுவரை அரசியலை நகர்த்தியவர்கள் இப்போதுகழிவறையைப் பற்றி பேசுகிறார்கள் என்றால் அது ஏதோமக்களின்பால் ஏற்பட்டுள்ள அக்கறையால் அல்ல, இன்றைய தேவை கோவில் அரசியல் அல்ல, கழிவறை அரசியலே என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பதுதான்.
சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் ஒரு புரிதலைத் தந்தது. ஒரு திருமணத்திற்காக கரூர் சென்றேன். பேருந்து நிலையம் இறங்கியதும் வேக வேகமாக கழிவறை நோக்கி நகர்ந்தேன். “ஒன்னுக்கு ரெண்டு ரூபா, ரெண்டுக்கு மூனு ரூபா “ என்று டோக்கன் கொடுப்பவர் கத்திக் கொண்டிருந்தார்.
ஒரு வழியாய் உள்ளே நுழைந்தால் ரேஷன் கடைக் கூட்டத்தில் பாதி தேறும் போல இருந்தது. கைகளைப் பின் கட்டி, கால்களை தரையில் அழுத்தி , இடுப்பை நெளித்து என என்னென்னவோ செய்து கொண்டிருந்தேன். ஏறத்தாழ அனைவரும் அப்படித்தான்.
அங்கு நின்று கொண்டிருந்த இருவர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்பது அவர்களது பேச்சிலிருந்து தெரிந்தது. பணி மூப்பை மதிக்காமல் பதவி உயர்வினை பள்ளி நிர்வாகங்கள் வழங்கிக் கொண்டிருப்பது பற்றி விவரங்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.
கோவத்தை எள்ளலோடு வெளிப்படுத்தும் ஆற்றல் இருந்தது இருவருக்கும்.
அந்த அவஸ்தையின் உச்சத்திலும் கொடுமை கண்டு எள்ளலோடு அவர்களால் பொங்க முடிந்தது.
என்னாலும் ரசிக்க முடிந்தது.
அவர்களைப் பார்த்து புன்னகைத்தேன். அவர்களும் புன்னகைத்தார்கள்.
“ தனியார் பள்ளி ஆசிரியர்களா சார்?”
“ ஆமாம் சார். நீங்கள்?”
“ நானும்தான்”
இப்படி எங்களுக்குள் ஒரு உரையாடல் துவங்கியிருந்த நேரத்தில் ஒரு அறை காலியாகவே எங்களுக்குப் பின்னால் நின்றிருந்த இளைஞன் உள்ளே நுழைந்து விட்டான்.
“ இங்க வரிசையில நிக்கறவனெல்லாம் மனுசனா இல்லையா?” என்று சகட்டு மேனிக்கு ஒருவர் திட்ட ஆரம்பித்து விட்டார்.
மற்றொரு ஆசிரியர் அவரை சமாதானப் படுத்தினார்.
சிரித்துக் கொண்டே என்னிடம் சொன்னார்,
“ பாருங்க சார், இவனவிட ஏழு வருஷம் ஜூனியரை தலைமை ஆசிரியரா போட்டாங்க. அப்பக் கூட சிரிச்சான். இன்னமும் அந்த ஹெச்.எம் மோட நல்லாதான் பழகுறான். ஆஃப்டர் ஆல் இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி பாயறான் பாருங்களேன்”
“ எதுடா சின்ன விஷயம்?”
“ இது அவ்வளவு பெரிய விஷயமாடா?”
“ இல்லையா பின்ன. HM ப்ரொமோஷன உட்டுக் கொடுத்ததால என் பேண்ட்டு நாறாது. இங்க அப்படியில்லை”
இதுதான் ஞானத்தின் உசரம்.
மக்கள் தொகையின் அளவுக்கேற்ற கழிவறகளை அரசு கட்டமைக்க வேண்டும். அதை சுகாதாரத்தோடு பராமரிக்க வேண்டும்
இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். மூன்று ரூபாய் கொடுத்து என்னால் போக முடிந்தது . போனேன். காசில்லாத ஏழை என்ன செய்வான். வேறு வழியின்றி பேருந்து நிலையத்திலேயே போவான். கழிவறைகள் வேண்டுமளவும், சுகாதாரத்தோடும், இலவசமாகவும் அமைய வேண்டும்.
நம்பிக்கையிருக்கிறது,
இந்தத் தேர்தலில் அதிகம் பேசப்பட உள்ளவைகளுள் கழிவறையும் உண்டு.
நன்றி: காக்கைச் சிறகினிலே