Thursday, October 24, 2013

பால் தயிராகும் வரைக்கும்...


பால் வாங்கி வர கடைக்குப் போன மகன் தாமதமாய் வந்ததோடு பாலுக்கு பதிலாக தயிரை வாங்கி வரவே கொதிநிலைக்குப் போனாள் தாய்.

"என்ன வாங்கி வர சொன்னேன், என்னடா வாங்கி வந்திருக்க?"

"பால்தாம்மா வாங்கி வந்தேன். வர வழியில பெரியார்தாசன் கூட்டம் நடந்தது. நேரம் போனதே தெரியல. மெய் மறந்து நின்னுட்டேன். பால் தயிராயிடுச்சு."

பெரியார்தாசனின் பேச்சாற்றல் குறித்து சொல்லும்போது வைரமுத்து இப்படி சொன்னதாக சொல்வார்கள்.இதில் கொஞ்சமும் மிகை இருப்பதாகப் படவில்லை.

அவரது பேச்சில் விமர்சனம் இருக்கலாம். ஆனால் அவரது பேச்சு அவரது எதிரிகளையும் கட்டிப் போடும். 

திருமணங்களில் நான்கு மணிநேரம் அவர் பேசிக் கேட்டிருக்கிறேன். சாப்பிட யாரும் எழுந்திரிக்காமல் அவரது பேச்சில் கட்டுண்டு கிடந்ததையும், செய்து வைத்த சாப்பாடு ஆறிப் போனதையும் கண்கூடாகப் பார்த்தவன் நான்.

அவர் இந்து மதத்தை கடுமையாக சாடினார் என்பதாக பொதுவில் படும். கூர்ந்து கவனித்தால் வைணவத்தை அவர் கடுமையாக சாடியதையும் சைவத்தின்பால் சன்னமான அன்பிருந்ததையேக் காண முடிந்தது.

நிறுவனமயப்பட்ட இந்து மதத்தையே அவர் சாடினார்.

அவர் அடிக்கடிக் கேட்பார்,

முருகன் ஒரு கொலையை செய்தால் முருகன் கொலை செய்தான் என்கிறார்கள்.

நெல்சன் ஒரு கொலையை செய்தால் நெல்சன் கொலை செய்தான் என்கிறார்கள்.

ஆனால், முகமது ஒரு கொலையை செய்தான் என்றால் இஸ்லாமியத் தீவிரவாதி கொலை செய்தான் என்கிறார்களே, இது நியாயமா?

இது கிறுக்கனுக்கும் புரியும் பாஷை. ஆனால் உச்சநீதிமன்றமும் , நாட்டின் பெரியப் பெரிய அவைகளும் ஆலோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா இது?

சைவக் குடும்பத்தில் பிறந்து சேஷாசலமாக வளர்ந்து பெரியார் தாசன் ஆனார்.

”புத்தரும் தம்மமும்” படிக்கிறார். பௌத்தம் ஏற்கிறார். சித்தார்த்தன் ஆகிறார். இறுதியாய் அல்லாவின் தாசனாகிறார்.

சேஷாசலமாக இருந்தபோதும் பெரியார் தாசனாய் இருந்த போதும், சித்தார்த்தனாக மாறிய போதும், இறுதியாக அப்துல்லாவாக மாறியபோதும்  கொஞ்சமும் மாறாமல் மனிதனாகவே இருந்தார்.

எந்த இடத்தில் இருந்தபோதும் அவர் அவராகவே இருந்தார் என்பதற்கு அவர் தனது கண்களையும் உடலையும் தானம் செய்திருப்பதே சாட்சி

எதையும் சோதித்து சோதித்தே செய்து பழக்கப் பட்ட தோழன் தன்னையே அறுத்து சோதித்து மருத்துவத்தில் தேற மாணவப் பிள்ளைகளுக்கு உடலைத் தானம் செய்திருக்கிறார்.

ஒருமுறை அவரோடு சேர்ந்து பேச ஒரு வாய்ப்பு கிட்டியது. திருச்சி கலையரங்கத்தில் ஒரு கூட்டம். இனிய நந்தவனம் சந்திரசேகர் ஏற்பாடு டெய்திருந்தார். 45 நிமிடங்கள் பேசினேன். என்னைத் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பேசினார். வெடித்துக் கிளர்ந்தோம்.
வெளியே வந்து கொண்டிருந்தபோது, “தோழர்” என்றழைத்தார். திரும்பிப் பார்த்தேன். நீட்டிய கரங்களோடு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

“ பட்டைய கிழப்புறீங்க. அருமையான பேச்சு. பெரியாரையும் மார்க்ஸையும் சரியாய் கலக்குறீங்க. வாங்க வெளில” என்றார்.

ஒரு கூட்டத்தில் கேட்டதற்கே தேடி வந்துப் பாராட்டுகிற குணம். 

அவரிடமிருந்து எவ்வளவோ எடுத்திருக்கிறேன்.  எவ்வளவோ நன்றி சொல்ல வேண்டும். சொல்ல நானிருக்கிறேன். கேட்கத்தான் அவரில்லை.

போய் வாருங்கள் தோழர்.

9 comments:

 1. என்னவாக மாறினாலும் கொஞ்சமும் மாறாமல் மனிதனாகவே இருந்தார் என்பது மிகப்பெரிய, சிறப்பான விசயம்...

  உங்கள் மனதில் தான் இருக்கிறாரே... கவலை வேண்டாம்...

  வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன்

   Delete
 2. இந்துவா, கிறித்தவரா, முஸ்லிமா என்பது முக்கியமல்ல.
  மனிதராகவே இருந்தாரல்லவா.பாராட்டப்பட வேண்டிய பண்பு.
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர். நலமா?

   Delete
 3. ஒரு ரசிகனாய் நெருங்கி , மகனாய் உணர்ந்து, நண்பராய் பழகிய எனக்கு பேராசிரியர். பெரியார்தாசனின் மறைவு தாங்க முடியாத கவலைகளை தந்து கொண்டிருக்கிறது. கண்ணீரை மொழிபெயர்க்க வார்த்தைகள் கிடையாது என்பதால்......

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் தோழருக்குமான உறவை அறிந்தவன் நான். உங்களது வலியும் வேதனையும் நான் அறிவேன்.

   எதுவும் கடந்து போகும் செல்வகுமார்

   Delete

 4. ஒரு மாபெரும் ஆளுமையை நினைவுகூர்ததற்கு நன்றி...
  உடல் தானம் எல்லோருக்கும் மனசு வராது.. பெரிய விசயம்..

  ReplyDelete
  Replies
  1. நெசத்துக்குமே மிகப் பெரிய ஆளுமை தோழர் அவர்.

   Delete
 5. இந்துவா, கிறித்தவரா, முஸ்லிமா என்பது முக்கியமல்ல.
  மனிதராகவே இருந்தாரல்லவா.பாராட்டப்பட வேண்டிய பண்பு.
  நன்றி ஐயா

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...