Friday, October 25, 2013

சோம்பேறிகளையும் இயக்கும் சித்தன்கள்

படைப்பளிகளைத் தேடிச் சென்று கண்டெடுப்பதில், அவர்களைக் கொண்டாடுவதில், ஒரு நல்லப் படைப்பைப் பார்த்துவிட்டால் ஒரு ஐம்பது நபர்களிடமாவது அதைக் கொண்டு சேர்ப்பதில் யுகமாயினி சித்தன் அவர்களுக்கு இணை சித்தன்தான்.

வடை மடித்த தாளில் ஒரு நல்ல படைப்பைப் பார்த்து விட்டாலும் அவ்வளவுதான். ஓரங்கட்டி நின்றுகொண்டு ஆற அமர ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, அந்த நேரத்தில் நினைவுக்கு வரும் ஏதேனும் ஒரு நல்ல வாசக நண்பரை அலை பேசியில் பிடித்து,

“ அதுல பாருங்க எட்வின், இன்னைக்கு ஜோன்ஸ் ரோட்ல அந்த ஓரக் கடைல வடை வாங்கிய தாளில் ஒரு அழகான கவிதை. என்னமா எழுதியிருக்கான். பேரக் காணோம். விடுங்க எட்வின், பிடிச்சுடலாம். அந்த மனுஷனத் தேடிப் பிடித்து படைப்ப வாங்கி “ யுக மாயினி” யில போடனும்.”

அத்தோடு நிற்க மாட்டார். கையில் காசில்லை என்றாலும் கடனையாவது  வாங்கிக் கொண்டு அந்தப் படைப்பாளியைத் தேடிப் போய் விடுவார்.

எந்தப் பிரதி பலனையும் எதிர்பார்க்க மாட்டார். உண்மையை சொல்லப் போனால் ஏதோ காரணங்களால் எழுத மறுத்துக் கிடந்த சில எழுத்தாளர்களை மீட்டெடுப்பதற்காக இவர் இழந்தது ஏராளம்.

எத்தனை பேர் நம்புவீர்கள் என்று தெரியாது. பத்து வருடங்களாக எழுதாமல் இருந்த என்னைத் தேடி பெரம்பலூருக்கு மகிழுந்தில் வந்து, என்னிடம் இருந்த பழைய கவிதைகளுள் நான்கினை எடுத்துப் போய் “ எட்வின் கவிதைகள் நான்கு” என்று அழகுற வடிவமைத்து யுகமாயினியில் போட்டவர்.

ஒருக்கால் அன்று அவர் சிரமமெடுத்து என்னைத் தேடி வந்திருக்காவிட்டால் இந்த எட்வினை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சராசரி பேச்சாளனாகவும், அதைவிட சராசரியான ஆசிரியனுமாகவே செத்துப் போயிருப்பேன்.

இதுவரை மூன்று, அச்சில் ஒன்று, அச்சுக்குப் போவதற்குத் தயாராய் இரண்டு நூல்கள் என என் கணக்கிலும் ஏதோ இருக்கிறது என்றால் அது அவரால்தான்.

இப்பவும் எப்போதாவது பேச ஆரம்பித்தால் விசாரிப்புகள் முடியும் முன்னமே “ இளங்கோ கிருஷ்ணனை வாசிச்சீங்களா எட்வின்”  என்று தாவிப் போய்விடுவார்.

எதையும் எதிர்பார்க்காமல் இலக்கியத்துக்காக இயங்கும் எனக்குத் தெரிந்த சிலரில் இவரே முதன்மையானவர்.

இவரைக்காட்டிலும் விஷேசமான சிலரும் இவரால்தான் எனக்கு அறிமுகமானார்கள்.

ஒருநாள் அழைத்தார்,

“ எட்வின், தலைவாசலில் இருந்து சிலர் பேசினாங்க. போன மாசம் யுகமாயினியில் போட்டிருந்த உங்களோட ஒரு கவிதையை அவர்கள் நோட்டிஸாப் போடனுமாம். நம்பர் கொடுத்திருக்கேன். பேசுவார்கள். சரி சொல்லிடுங்க”

எதுவும் புரியாத குழப்பத்தோடே அவருக்கு “ சரி “ சொன்னேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அவர்களே அழைத்தார்கள். தலை வாசலை சேர்ந்த சில நண்பர்கள் சன்னமான நல்ல கவிதைகளைக் கண்டுவிட்டால் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அந்தப் படைப்பை நோட்டீஸ் போட்டு பேருந்து நிலையங்கள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், சந்தை, வீடுகள் என்று கொண்டு சேர்ப்பார்களாம்.

அப்பொழுது உலக மகளிர் தினம் நெருங்கியதாலும் எனது கவிதை பெண்னுரிமையை மையச் சரடாகக் கொண்டிருந்தமையாலும் 5000 நோட்டீஸ்கள் போட்டு விநியோகிக்க இருப்பதாகவும். அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டார்கள்.

அப்படி அவர்கள் போட்டதுதான் மேலே காணும் பிரதி.

ஒரு நல்ல கவிதைய வாசிக்க நேர்ந்து அதை நான்கு பேருக்கு சொன்னால் அதுவே பெரிய அளவிலான பெருந்தன்மை இப்பொழுது. ஆனால் அதை ஆயிரக் கணக்கில் பிரதியெடுத்து கொண்டுபோய் சேர்க்கும் இவர்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது?

கேட்டால் நல்லதுகளை நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்கிறார்கள்.

சித்தன் மாதிரியும் இவர்களை மாதிரியுமான தோழர்களே என்னை மாதிரி சோம்பேறிகளை சோர்ந்து போகாமல் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


20 comments:

 1. தோழரே நலமா. தங்களை புதுக்கோட்டையில் சந்தித்த நினைவுகள் என்றுமே பசுமையாய் நினைவில் நிலைத்திருக்கும்.
  தங்களது நூலினைப் பற்றிய பதிவு ஒன்றினை எனது வலைப் பூவில் பதிவிட்டிருக்கின்றேன் .
  எனது வலைப் பூவிற்குத் தங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
  வாருங்கள் நண்பரே.
  http://karanthaijayakumar.blogspot.com/2013/10/blog-post_26.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர். பேரன்பின் மிகைப் பெருக்கு உங்களது விமர்சனம். மீண்டும் எனது நன்றிகள்.

   Delete
 2. அவர்களின் சேவைகளை பாராட்டுவோம்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தோழர். மிக்க நன்றி

   Delete
 3. Visit: http://karanthaijayakumar.blogspot.com/2013/10/blog-post_26.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன்

   Delete
 4. கேட்டால் நல்லதுகளை நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்கிறார்கள்.

  உன்னதமான இயக்கம் ..!

  ReplyDelete
 5. //அதை ஆயிரக் கணக்கில் பிரதியெடுத்து கொண்டுபோய் சேர்க்கும் இவர்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது?//
  இந்த பின்னூட்டத்தினை பார்த்தவுடன் என்ன் கிடைக்கிறதோ அதுதான் அவர்களுக்கும் கிடைக்கும்.எதையும் பணத்தால் அளவிட நினைப்பவர்களுக்கு இந்த மொழி புரியாது.

  ReplyDelete
  Replies
  1. பணம் கொண்டு எதையும் அளக்காதவர்களை ஒன்றிணைக்க ஒரு இயக்கமே கட்டலாம். மிக்க நன்றி தோழர்

   Delete
 6. அன்புள்ள தோழர்

  வணக்கம்.

  முதலில் தமிழாசிரியர் புத்தி.. சோம்பேரி அல்ல சோம்பேறி என்றிருக்கவேண்டும். தலைப்பிலும் கட்டுரையின் இறுதியிலும்.

  அடுத்து யுகமாயினி சித்தன் பற்றி..

  யுகமாயினி இதழுக்குக் கவிதையனுப்பியபோதுதான் அவர் பழக்கம். ஒருநாள் கைப்பேசியில் அழைத்து புகைப்படம் கேட்டார். அப்புறம் கணிப்பொறியில் எப்படித் தட்டச்சிட்டால் அவருக்கு அச்சிட வசதி என்றார். தெரியவில்லை என்றேன். உங்களைப்போலவே பொறுமையாகச் சொல்லிக்கொடுத்தார்.

  அடுத்தடுத்து யுகமாயினிகள் தொடர்ந்து வாசித்தேன்.

  இருப்பினும் இலக்கிய வரலாற்றில் இதழியல் வரலாற்றில் யுகமாயினியையும் சித்தனை மறக்கமுடியாது.

  அப்புறம் ஏதாவது நாவல் எழுதுங்கள் என்றார்.

  கைப்பேசியில் பேசும்போதெல்லாம் உடன் தாமதமின்றி காதுகளுக்குள் வந்து இனிமையாகப் பேசுவார். இணையத்தில் ஆரம்பிக்க இருக்கும் இதழுக்கு எழுதுங்கள் என்றார். ஒப்புக்கு சொல்லாமல் தொடர்ந்து பேசினார்.

  ஆனால் இன்றுவரை அவரை முகம் பார்த்ததில்லை.
  சில நிகழ்வுகளின் புகைப்படங்களில்தான்.

  என்றாலும் மனதிற்குள் சித்தன் அந்தப் புத்தனின் புன்னகையைப் போலவே கைப்பேசியில் பேசிய குரலில் அன்பொழுக இருக்கிறார்.

  அவசியம் அவரைச் சந்திக்கவேண்டும் தோழர்.

  நல்ல பதிவு.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் ஹரணி,
   வணக்கம்.
   சித்தனைப் பற்றி எழுதுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.

   பிழையை சரி செய்துவிட்டேன் தோழர்

   Delete
 7. திரு கரந்தை ஜெயக்குமார் வலைப்பூ மூலம் தங்களை பற்றி அறிந்து கொண்டேன்! தங்கள் நண்பரின் இலக்கிய ஆர்வம் வியக்க வைக்கிறது! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர். தொடர்ந்து சந்திப்போம்

   Delete
 8. திறமை எங்கிருந்தாலும் எங்கு மறைந்திருந்தாலுமொரு நாள் மேலெழுந்து பிரகாசமடையும் அதற்க்கு எங்கிருந்தோ ஒருவர் துணை செய்வார். உங்கள் விடயத்திலும் அதுவே நடந்திருக்கின்றது . வலைப்பூ மூலம் உங்கள் அறிமுகம் கிடைத்தது சந்தோசம்

  ReplyDelete
 9. சித்தன் ஓர் அருமையான நண்பர் எட்வின். நீங்கள் எனக்கு அறிமுகமானதும் அவரால் தான். - அவர் என்றால் யுகமாயினி தானே!

  தொலைபேசியில் அழைக்கும் போது தொனிக்கும் ஒரு தோழமை, இதம், அன்பு, உதவி செய்யும் மனப்பாண்மை ....ஏதோ ஒன்று

  இந்தச் சொற்களுக்குள் அகப்படாத மேலும் ஏதோ ஒன்றும் இருக்கிறது அவரிடம். ’அது நம்பக்கூடிய நல்ல மனிதன்’ இவர் என்று சொல்லும்.

  எனக்கு தமிழ் எழுத்துருவை பரிசளித்து மிக இலகுவான இணைப்பினால் என்னை வழி நடத்தி இணைய வழியை எனக்குத் திறந்து வைத்ததும் இந்த மனிதன் தான்.

  மறக்க முடியாத மனிதர்கள் பட்டியலில் அவர் எப்போதும் நிறைவான இடத்தில் இருப்பார். இப்போது மேலதிகமாகவும் உங்களால் சில விடயங்களைஅறிந்து மனம் நெகிழ்கிறேன்.

  நன்றி எட்வின்.

  ReplyDelete
 10. சித்தன் ஓர் அருமையான நண்பர் எட்வின். நீங்கள் எனக்கு அறிமுகமானதும் அவரால் தான். - அவர் என்றால் யுகமாயினி தானே!

  தொலைபேசியில் அழைக்கும் போது தொனிக்கும் ஒரு தோழமை, இதம், அன்பு, உதவி செய்யும் மனப்பாண்மை ....ஏதோ ஒன்று

  இந்தச் சொற்களுக்குள் அகப்படாத மேலும் ஏதோ ஒன்றும் இருக்கிறது அவரிடம். ’அது நம்பக்கூடிய நல்ல மனிதன்’ இவர் என்று சொல்லும்.

  எனக்கு தமிழ் எழுத்துருவை பரிசளித்து மிக இலகுவான இணைப்பினால் என்னை வழி நடத்தி இணைய வழியை எனக்குத் திறந்து வைத்ததும் இந்த மனிதன் தான்.

  மறக்க முடியாத மனிதர்கள் பட்டியலில் அவர் எப்போதும் நிறைவான இடத்தில் இருப்பார். இப்போது மேலதிகமாகவும் உங்களால் சில விடயங்களைஅறிந்து மனம் நெகிழ்கிறேன்.

  நன்றி எட்வின்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தோழர். மிக்க நன்றி

   Delete
 11. சித்தன் ஓர் அருமையான நண்பர் எட்வின். நீங்கள் எனக்கு அறிமுகமானதும் அவரால் தான். - அவர் என்றால் யுகமாயினி தானே!

  தொலைபேசியில் அழைக்கும் போது தொனிக்கும் ஒரு தோழமை, இதம், அன்பு, உதவி செய்யும் மனப்பாண்மை ....ஏதோ ஒன்று

  இந்தச் சொற்களுக்குள் அகப்படாத மேலும் ஏதோ ஒன்றும் இருக்கிறது அவரிடம். ’அது நம்பக்கூடிய நல்ல மனிதன்’ இவர் என்று சொல்லும்.

  எனக்கு தமிழ் எழுத்துருவை பரிசளித்து மிக இலகுவான இணைப்பினால் என்னை வழி நடத்தி இணைய வழியை எனக்குத் திறந்து வைத்ததும் இந்த மனிதன் தான்.

  மறக்க முடியாத மனிதர்கள் பட்டியலில் அவர் எப்போதும் நிறைவான இடத்தில் இருப்பார். இப்போது மேலதிகமாகவும் உங்களால் சில விடயங்களைஅறிந்து மனம் நெகிழ்கிறேன்.

  நன்றி எட்வின்.

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...