Sunday, March 25, 2012

உசிர் வேண்டும் முதலில்ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இது ஒன்றும் முற்றான முடிவல்ல என்பதும், முழுமையான வெளிச்சத்தை, வாழ்தளத்தை, நியாயத்தை, நிவாரணத்தை ஈழத் தமிழர்களுக்கு இது தேவையான அளவு வழங்கிவிடாது என்பதும் மிக நன்றாக தெரிந்த போதும் நல்லவிதமான முடிவிற்கு வந்திருக்கிறது என்றே இதனைக் கொள்ள வேண்டும்.

கடந்த சில வாரங்களாக தமிழ் மக்கள் தங்கள் சொந்த ஊரின் பெயரை உச்சரித்ததை விடவும் “ஜெனிவா” என்ற பெயரைத்தான் அதிகம் உச்சரித்தார்கள்.

ஒரு வழியாக மார்ச் 22 அன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை குழு கூட்டத்தில் 24 நாடுகள் இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை ஆதரித்தும்,15 நாடுகள் எதிர்த்தும் மலேசியா உள்ளிட்ட எட்டு நாடுகள் ஓட்டெடுப்பில் இருந்து விலகி நின்றும் தங்களது முகங்களைக் காட்டின.

ஐ.நா சபை அமைத்த குழு கொடுத்த பரிந்துரைகளை இலங்கை அமல்படுத்த வில்லை என்பதால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இந்த தீர்மானத்தைக் கொண்டு வரவில்லை. இலங்கை அரசு தானே நியமித்த “ கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம்”  பரிந்துரைத்த குறைந்த பட்ச நிவாரணங்களைக் கூட நிறைவேற்ற மனம் கொள்ளவில்லை. அதை நிறைவேற்ற ஐ. நா மனித உரிமைக் குழு இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டும் என்பதே அமெரிக்கா முன் வைத்த தீர்மானத்தின் சாரம்.

பொதுவாகவே எந்த அரசாயினும் ஒரு ஆணையத்தை நியமிக்கும் பொழுது தான் விரும்புகிற ஒரு அறிக்கையைத் தரக்கூடிய நபரைத்தான் தேடித் தேர்ந்தெடுத்து தலைவராக்கும். அதைத்தான் இலங்கையும் செய்தது.

எவ்வளவுதான் கவனமாக அரசு சொன்னது மாதிரியே அறிக்கையை தயாரித்தாலும் அதையும் கடந்து சில நல்லதுகள் தப்பித் தவறி அறிக்கையில் கசிந்துவிடவும் கூடும். ஆனாலும் அத்தகைய கசிவுகள் எந்த சேதாரத்தையும் அரசுக்கு தந்துவிடாத வன்னம் கவனத்தோடுதான் பரிந்துரைக்கப் பட்டிருக்கும். இலங்கை அரசு நியமித்த இந்த குழுவின் அறிக்கையிலும் இப்படித்தான் ஒன்றிரண்டு நல்லதுகள் வந்திருந்தன. அதை செய்வதற்குத்தான் ஐ. நா வரைக்கும் போக வேண்டி வந்தது.

போரின் போது காணாமல் போனவர்கள், சிறை பிடிக்கப் பட்டவர்கள், கடத்தப் பட்டவர்களைப் பற்றி போகிற போக்கில் கொஞ்சம் கவலைப் பட்டது அந்த அறிக்கை. அவரவருக்குரிய நிலங்களை அவரவர்களிடம் ஒப்படைக்க சொன்னது.  ராணுவ மயமாக்கலை கொஞ்சம் கட்டுப் படுத்த வேண்டும் என்றும் சொன்னது. இவ்வளவுதான்.

இதைக் கூட செய்ய மறுக்கும் இலங்கையை இந்தக் குறைந்த பட்ச பரிந்துரைகளையாவது நிறைவேற்றுங்கள் என்று சொல்வதுதான் பெரீஸ் அவர்களுக்கு மனித உரிமை கௌன்சில் எதற்காக உருவானதோ அதற்கு எதிரானதாகத் தெரிகிறது.

நம்மைப் பொருத்தவரை சோளப்பொறி அளவுகூட இதை ஒத்துக் கொள்ள முடியாதுதான். சோளப் பொறியை கையிலெடுக்கும் போது சிதறி விழும் சன்னமான கண்ணுக்குத் தெரியாத சிறு துகளின் அளவை விடவும் ஆயிரம் மடங்கு குறைவான ஒன்றாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது.

வாக்களித்த நாடுகளும் ஒதுங்கி நின்ற நாடுகளும் இனி இது விஷயத்தில் கூர்ந்து உள்சென்று முள் வேலி மக்கள் இழந்த எதையும் மீளப் பெறும் வகையில் ஒரு நிர்ப்பந்தத்தை இலங்கை மீது செலுத்த வேண்டும்.

தமிழ் மண்ணில் நிகழ்ந்த எழுச்சியும் ,இதை செய்யாமல் போனால் உலக அளவில் அம்பலப் பட்டுப் போவோம் என்கிற அச்சமுமே இந்தியாவை இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு உந்தித் தள்ளியது. 

ஆனால் இந்த அளவுக்கான ஒரு முன்னேற்றத்தைக் கூட நம்மால் கூடங்குளம் விஷயத்தில் எட்ட இயலவில்லை. அண்ணா ஹசாரேயை ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்கள் உதயக்குமாரை எதிர் விதமாய் அணுகுவதில் என்ன அரசியல்? உதயக்குமார் ஹசாரேயைப் போல் அல்லாமல் தமிழனாய் இருப்பது தானா? விடுங்கள், நமக்கின்னும் ஓய்வற்ற வேலை இருக்கிறது என்பதையே இது சொல்கிறது.

இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல் பெரீஸ் அது குறித்து தனது கருத்தினை வைத்திருக்கிறார்.

”கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்று ஒரு வழக்கு உண்டு. அபத்தம் என்னவெனில் மீசையை மழுங்கச் சிறைத்தவன் இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவதுதான்.

15 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்துள்ளன, 8 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. ஆக இந்தத் தீர்மானத்தை ஆதரிக்காத நாடுகளின் எண்ணிக்கை 23. தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகள் வெறும் 24 தான். ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில்தான் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது என்பது போல பேசியிருக்கிறார்.

ஒரு வாக்கா இரண்டு வாக்கா என்பதல்லல்ல பிரச்சினை. தீர்மானம் வெற்றி பெற்றிருக்கிறது.

8 நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை, ஆகவே தீர்மானத்தை ஆதரிக்காத நாடுகள் 23 என்று அவர் சொல்கிறார். ஒன்றை அவர் வழக்கம் போல மரைக்கப் பார்க்கிறார். 8 நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அந்த 8 நாடுகளும் தீர்மானத்தை எதிர்க்கவும் இல்லை என்பது.

அப்படிப் பார்த்தால் தீமானத்தை ஆதரித்த நாடுகள் 24 எதிர்க்காத நாடுகள் 8 , ஆக தீர்மானத்தை எதிர்க்காத நாடுகளின் எண்ணிக்கை 32 என்றும் கொள்ள முடியும்.

இந்தத் தீர்மானத்தை இந்தியாவோ அல்லது க்யூபாவோ கொண்டு வந்திருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்போம்.

இந்தியாவை ஆதரிக்க வைப்பதற்குள் நமக்கு முதுகே ஒடிந்து போனது. க்யூபா இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்ததைத் தான் இன்னமும் ஜீரணிக்க இயலாமல் தவித்துப் போகிறோம். ஒருக்கால் அமெரிக்கா ஆதரிப்பதால் இதை க்யூபா எதிர்த்ததா?

மக்கள் சீனத்திற்கு மக்களை விடவும் சந்தை பெரிதாகிப் போனதா?

 நாளைக்கு ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடுக்குமானால் நிச்சயமாக அதை எதிர்த்து தமிழ்க் கருத்தும் தமிழ்க் கரங்களும் உங்களோடு எந்தத் தயக்கமும் இன்றி இணையவே செய்யும்.

தீர்மானத்தை முன் மொழிகிற ஒரு அரிய வாய்ப்பினை தவற விட்டு அந்த வாய்ப்பினை அமெரிக்காவிற்கு வழங்கியதன் மூலம் அமெரிக்காவின் கரம் பற்ற வேண்டிய ஒரு நிலைக்கு எங்களைத் தள்ளிய குற்றத்தை நீங்கள்தான் செய்திருக்கிறீர்கள்.

இந்தியா தீர்மானத்தை ஆதரிக்கும் முன் ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கீழ்க் காணும் பதிவினை எழுதியிருந்தேன்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு” 

இந்தக் குறளை நாம் வாசிக்காது போயிருந்தாலும், அல்லது வள்ளுவர் ஒருக்கால் இந்தக் குறளை எழுதாமலே போயிருந்தாலும் தீர்மானத்தைக் கொண்டு வருவது அமெரிக்கா என்பதற்காக  அதை நிராகரித்து விடுகிற நிலையில் நாங்கள் இல்லை.

இன்னும் சொல்லப் போனால் நம் ஆயுசு முடிவதற்குள் நாம் ஏற்கும் படியாகவும் பாராட்டும் படியாகவும் மனிதத் தன்மையோடு எதையாவது அமெரிக்கா செய்துவிடாதா என்று ஏங்கித் தவித்து எதிர்பார்ப்பவர்கள் அல்லவா நாம்.

அமெரிக்கா எதை செய்தாலும் நீங்க எதிர்க்கத்தாண்டா செய்வீங்கஎன்று எப்போதுமே பொதுவாய் நீளும் அந்தக் குற்றச்சாட்டும் இந்த முறை ஒடிந்து போனது.

நல்லது செய்வது அமெரிக்காவே ஆயினும் இவர்கள் வாழ்த்தி ஆதரிக்கவே செய்வார்கள் என்பது இனியேனும் இந்தியப் பொது புத்திக்கு உறைக்கும்.

ஆமாம்,

இப்படி நீங்கள் ஏற்றுக் கொண்டாடுமளவிற்கு அப்படி என்னதான் அமெரிக்க செய்து விட்டது?

தனது சொந்த ராணுவத்தை அனுப்பி, தனது சொந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி, குவியல் குவியலாய் தனது சொந்த மக்களைக் கொன்று குவித்த ஒரு பேரினவாத வன்முறைக்கு எதிரான, அதை தலைமை ஏற்று எந்தவித தர்ம நியாயங்களுக்கும் கட்டுப் படாமல் குவிந்து கிடந்த பிணக் குவியல்களைப் பார்த்து மகிழ்ந்து கொக்கரித்த, உலகில் இருந்த கொடூரம் மொத்தத்தையும் ஒன்று திரட்டி பிசைந்து செய்யப்பட்ட ராஜபக்ஷேவிற்கும் எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை நா அவையில் கொண்டு வருகிறது.

அதுதான்.

கேட்கலாம்,

உலக நாடுகள் ஒவ்வொன்றின் கழுத்துகளையும் கடித்து ரத்தம் குடிக்கும் ரத்தக் காட்டேரியும் ராட்ஷச அட்டையுமான அமெரிக்காவிற்கும் ராஜபக்ஷேவிற்கும் அப்படி என்ன வித்தியாசத்தை கண்டீர்கள்? இன்னும் சொல்லப் போனால் ஒருகோடி ராஜபக்ஷேவை ஒன்றாய் பிசைந்தாலும் அதைவிடக் கொடூரமானதாயிற்றே அமெரிக்க கொடூரம்?

என்ன செய்வது அதுதான் எங்களின் கையறு நிலை? அமெரிக்கா ஒவ்வொரு முறை அட்டூழியங்களை நிகழ்த்தத் தொடங்கும் போதும் அதற்கு எதிராக உசிர் கொடுத்து போராடும் நல்ல உள்ளங்கள் நிறைந்த பூமி இது. மட்டுமல்ல, அந்த நல்ல உள்ளங்களோடு எப்போதும் எங்கள் குரலும், கரமும், கருத்தும், உசிரும் இணைந்தே களத்தில் நின்றதைப் போலவே இனியும் எப்போதும் இணைந்தேகளமேகும்.

இந்த நல்ல உள்ளங்கள் எங்களின் கண்ணீரைத் துடைக்க முன் வந்து எங்களை அள்ளி அணைத்து ஆற்றுப் படுத்தியிருந்தால் எங்களுக்கு ஏனிந்த நிலை ?

உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் அநியாயமாக ஒரு உயிர் கொல்லப் பட்டாலும் உதிரம் கொதித்து வீதிக்கு வந்து போராடுகிற, இன்னும் சொல்லப் போனால், மானுடம் காக்க இவர்களை விட்டால் வேறு யார் உள்ளார் என்று இன்னமும் நாங்கள் நம்பக்கூடிய நல்லவர்கள் சற்றேறக் குறைய ஒன்றரை லட்சம் உயிர்கள் ஒரு வார கால அவகாசத்திற்குள் கொல்லப்பட்டு மூன்று லட்சம் மக்கள் செம்மறி ஆடுகளை விடவும் கேவலமாய் முள்வேலியில் அடைக்கப்பட்டுள்ள கொடுமை கண்டு வெடித்துக் கொதித்து வீதிக்கு வராமல் மௌனித்து நிற்பதே அமெரிக்காவின் ஆதரவுக் கரத்தை இறுகப் பற்றி நாங்கள் எழ முயற்சிக்கும் இந்த அவலத்திற்கான காரணம்.

அடிபட்டு கீழே கிடக்கிறோம். எங்களைக் கடந்து போகும் நல்லவர்கள் எல்லோரும் எந்தச் சலனமும் இல்லாமல் கடந்து போகிறார்கள். சிலரோபோன இடத்துல சும்மா இருந்தாதானேஎன்று இந்த நிலையிலும் எங்களுக்கு உபதேசம் செய்வதற்கும் தயங்குவதில்லை.

தோழர்களே,

அறிவுறைகளை கேட்பதற்கோ, மல்லுக்கு நின்று சரிக்கு சரி தர்க்கம் செய்வதற்கோ எங்களுக்கு இப்போது தெம்பில்லை என்பதையும், ரணங்கள் எரிந்து இம்சிக்க, ரத்தச் சேதாரம் எங்கள் உயிர் குடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பற்றக் கரம் நீட்டுவது உலகில் அயோகியத் தனத்தை மட்டுமே செய்து பழக்கப் பட்ட அமெரிக்காவாக இருந்தபோதும் அதைப் பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.  “எனது ஆயுதத்தை எனது எதிரி தீமானிக்கிறான்”  என்று மார்க்ஸ் சொல்வார். எங்களது பற்றுக்கரம் ஒரு மக்கள் விரோதியுனடையது என்றே கொண்டாலும் அதை எங்கள் மீது திணித்தது நாங்கள் இன்னமும் பெருமளவு நம்பிக்கை வைத்திருக்கும் எங்களது நண்பர்களே.

இதில் அமெரிக்காவிற்கு உள் நோக்கம் இருக்கலாம். இருந்து விட்டுப் போகட்டும்.

மனித மீட்சிக்கான யுத்தக் களத்தில் உங்களோடு நின்று போராட, அது அமெரிக்காவுடன் ஆன போராட்டமாயிருப்பினும், எங்களுக்கு உசிர் வேண்டும் முதலில்.

ராஜ பக்ஷேவை உலகின் அசிங்கமென்று கொள்ள இயலாது. அசிங்கமெனில் கழுவித் துடைத்துவிட்டு பயணத்தைத் தொடரலாம். ராஜபக்ஷே உலகின் ஆகக் கொடூரமான கொலைகாரன். அவரை மென்மையாய் ஒதுக்கிவிட்டு கடந்து விடுவது அயோகியத் தனத்தின் உச்சம். அவர் தண்டிக்கப் படுவதே மனிதகுலம் தனது மாண்பை இன்னமும் இழந்துவிடவில்லை என்பதன் அடையாளம்.

அதற்காக முன்கை எடுக்கும் அமெரிக்காவை இப்போது வாழ்த்தி விடலாம். இல்லை எனில் மீண்டும் நாம் வாழ்த்துமளவிற்கு ஒரு நல்ல காரியத்தை செய்யும் என்ற நம்பிக்கை நமக்கில்லை.

அமெரிக்கா முன்கை எடுக்கிறது. ஐரோப்பிய நாடுகள் பின்தொடர்கின்றன.

இரு இந்தியக் குழந்தைகளுக்காக நார்வே பறக்கும் இந்திய அதிகாரிகளை, அவர்களை முடுக்கிவிடும் இந்திய அரசை, அந்தக் குழந்தைகளின் உறவினர்கள் பட்டினி கிடந்து போராடிய போது அவர்களை தாயுள்ளத்தோடு போய் பார்த்த சுஷ்மா, அப்பழுக்கற்ற பிருந்தா காரத் இன்னும் பிற அரசியல்வாதிகள் அனைவரையும் இந்த நேரத்தில் வணங்குகிறோம்.

அந்த இரு பிள்ளைகளையும் எங்கள் பிள்ளைகளாகவே பார்க்கிறோம்.

முள் வேலியில் எங்கள் மக்கள்மீது தொடுக்கப் படும் அவலத்தை ஒருக்கால்  நாய்கள் மீதோ மாடுகளின் மீதோ தொடுக்கப் பட்டிருந்தால்கூட விலங்குகளின் பாதுகாவலர்கள் கொதித்திருப்பார்கள்.

பல ஆயிரம் எங்கள் குழந்தைகளை, எங்கள் தாத்தன்களை, அம்மாயி அப்பாயிகளை, எங்கள் தாய் மார்களை, இளைஞர்களை யுவதிகளை சித்திரவதைத்து, சின்னா பின்னமாக்கி, வண்புணர்ந்து கொலை செய்த ராஜபக்ஷே கூட்டத்திற்கு எதிராக அமெரிக்கா காய் நகர்த்துகிறது.

எங்களையும் இந்தியர்கள் என்றே விளிக்கிறீர்கள். அதுதான் உண்மையும் கூட.
எனில், மேல் காணும் பத்தியில் இருக்கும் அனைவரையும் நீங்கள் உங்கள் தாத்தன்களாக, பாட்டிகளாக, தந்தை தாய்களாக, சகோதர சகோதரிகளாகத்தானே பார்க்க வேண்டும்.

எனில்,

நா வில் இந்தத் தீர்மானத்தை நீங்கள் ஆதரிக்கத்தான் வேண்டும். வேறு வழியே இல்லை பிரதமர் அவர்களே.

போதும், புரியும் உங்களுக்கு  என்று முடித்திருந்தேன்.
புரிந்திருக்கிறது.
புரிய வைப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...