Thursday, March 8, 2012

பட்டினிக்கு வயது பத்து


முன் குறிப்பு;
இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் “சுகன்” இதழில் வெளி வந்தது.
மகளிர் தினத்தன்று ஐரோம் பற்றிய பதிவினை வைப்பது சரியாகப் படவே
இதை இங்கு வைக்கிறேன்.
                            
யாருக்காகவோ அவர்கள் நீண்ட நேரமாய் காத்திருக்கிறார்கள். அவர்கள்
கண்களில் கசிந்த விடுதலை வேட்கையும், கொந்தளித்துப் பொங்கிய
உணர்வு நிலையும் களம் நுழையும் முன்னால் தங்களது தலைவனின்
கட்டளைக்காக காத்திருக்கும் போராளிகளின் நிலையை ஒத்திருந்தது.
ஆனால் அவர்கள் காத்திருந்தது அவர்களது கவிஞனுக்காக. தங்களது
விடுதலைப் போருக்கான வெறியை, ஆவேசத்தை, வேட்கையை அவனது
நான்கைந்து வரிகளால் சானை பிடித்து கூர் தீட்டிக்கொள்ளவே அவர்கள்
காத்துக் கிடந்தார்கள்.

அவர்கள் அந்தக் கவிஞனின் ஜனங்கள்: அவனோ அந்த ஜனங்களின்
கவிஞன்.


அவன் மாயோகோவஸ்கி


"தோழர்களே”


அவனது ஒற்றை வார்த்தையில் கொந்தளித்து, ஆர்ப்பரித்து அடங்கியது
கூட்டம்.


தொடர்ந்தான்


"தோழர்களே !
லெனினைத் தலையிலும்
ஆயுதங்களை
கரங்களிலும் ஏந்தி..."


அவனை முடிக்க விடவில்லை கூட்டம். ஒரே குரலெடுத்து உரக்க
முழங்கினார்கள்


" லெனினைத் தலையிலும்
ஆயுதங்களை
கரங்களிலும்
எங்கள் மாயோகோவஸ்கியை
இதயங்களிலும் ஏந்தி
களத்திற்கு போகிறோம்" 


உயிரோடு இருக்கும் போதே மாயோகோவஸ்கிக்கு கிடைத்த இந்த
அங்கீகாரம் நமது பாரதி மற்றும் பாரதி தாசன் இருவருக்கும் கிடைக்காத
அங்கீகாரம். இன்குலாப் உள்ளிட்ட நமது சம கால மக்கள் கவிகளுக்கும்
இதுதான் கதி. என்ன செய்வது உயிரோடு இருக்கும் வரை நல்லவர்களை
கொண்டாடு வதில்லை என்று நாம்தான் யாருக்கோ சத்தியம் செய்து
கொடுத்து விட்டோமே.


அதனால்தான் பெரும்பான்மை ஆசு கவிகள் காசு கவிகளாய் மாறி
சொகுசாகிப் போனார்கள்.

எழுதுவது, பதிப்பிப்பது, பேட்டிகளை அளிப்பது, வாழ்வை சொகுசாக்கிக்
கொள்வது என்று சுருங்கிப் போகாமல் மக்களோடு மக்களாய் பசியில்,
அவலத்தில், போராட்டத்தில்அவர்களோடு நிற்பது என்பதாக தனது
எழுத்துக்கு வாழ்க்கையை பொழிப்புரையாக தந்தவன்
மாயோகோவஸ்கி. அவனது நேர்மைக்கும் தியாகத்திற்கும்
கொஞ்சமும் குறையாத அங்கீகாரத்தை மக்கள் அவனுக்கு
வழங்கினார்கள் என்பதும் சேர்த்தே கொள்ளத் தக்கது. 


" பேனாதான் இருக்கும்
எப்போதும்
என் கைகளில்
என்று சொல்ல
நான் ஒன்றும் நீஅல்ல
நண்பனே
தேவைப் படுமெனில்
என் கைகள் காலம் தரும்
கருவி ஏந்தும்"
என்று வண்ணை வளவன் ஒரு முறை எழுதியாதாய் ஞாபகம்.
இந்த வரிகளில் பெருகி வழியும் மாயோகோவஸ்கியின் தாக்கத்தை
யாரும் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

பரவசமான வாசிப்பு அனுபவங்களைத் தரும் தம்பி சுபாஷ் (கன்னகன்)
அவர்களின் "பறவைக்குள்அடையும் கூடு" நூலை வெளியிட்டு பேசும்
போது மனதைப் பிசையும் ஒரு காட்சியை ஏதோ ஒரு வேற்று
மொழிப் படத்திலிருந்தோ சிறு கதையிலிருந்தோ சொன்னார்
எஸ். ராமகிருஷ்ணன்.


குழந்தைகளையும் கூடைகளையும் முதுகுகளிலும் ரணங்களையும்
வலியையும் தங்கள் உடல் முழுமையும் சுமந்தபடி தேயிலை கிள்ளிக்
கொண்டிருக்கிறார்கள் பெண்கள். முதுகிலே சுமக்கும் தங்களது
குழந்தைகளுக்கு பசியெடுத்து அலறினாலும் அவர்களுக்கு தாய்ப்பால்
கொடுக்க அனுமதித்ததில்லை ஆண்டைகள். பசியால் அலறி அலறியே
செத்துப் போன குழந்தைகள் ஏராளம்: மாரிலே பால்கட்டி இறந்துபோன
தாய்மார்களும் ஏராளம். 


கீழத்தஞ்சையில் நம் அம்மாயி மற்றும் அப்பாயிகளுக்கு கிடைத்த அதே
அனுபவம். உலகம் முழுவதும் ஆண்டைகள் ஒரே மாதிரிதான்
இருக்கிறார்கள். ஒரே வித்தியாசம் அவர்கள் குழந்தைகளை முதுகிலே
சுமந்தபடிவேலை பார்த்தார்கள். நம் தாய்மார்கள் வரப்போரத்தில்
இருக்கும் மரங்களின் கிளைகளில் தொட்டில் கட்டிப் போட்டிருப்பார்கள்.  
  
இந்த வேதனையிலிருந்து தப்பிக்க நமது தாய்மார்கள் ஒரு மார்க்கம்
கண்டனர். மார்கட்டி வலி எடுக்கும் பெண்ணை மற்ற பெண்கள்
மறைத்தபடி சுற்றி நின்று கொள்வார்கள். அந்தப் பெண் தனது முலைப்
பாலை வயலிலே பீய்ச்சி தன்னைத் தற்காத்துக் கொள்வாள். இதிலுங்கூட
தாய்மார்களை காப்பாற்ற முடிந்ததே தவிர குழந்தைகளின் இழப்பை மட்டுப்
படுத்த முடியவில்லை. 


இப்படி காவேரித் தண்ணீரோடு எங்கள் தாய்மார்களின் தாய்ப் பாலையும்
சேர்த்தே குடித்து வளர்ந்த நெல் சோறு சாப்பிட்டு வளர்ந்த ஒரு
பெரியவர்தான் சொன்னார் "வேலைக்குப் போகும் பெண்களில்
பெரும்பகுதிபேர் அவுசாரிகள்" என்று. 


அவரிடம் போய் வந்த பத்துப் பன்னிரண்டு பேரைத் தவிர மற்றவர்களை
அவருக்கு அப்படித்தான் தெரியும். பெருந்தன்மயோ என்னவோ
" உழைக்கும் பெண்களில் பெரும்பகுதி பேர் அவுசாரிகள் என்று உனக்கு
எப்படி ஐயா? " என்றுகூட கேட்காமல் இன்று வரை நீண்ட மௌனம்
காக்கிறது தமிழ்ச்சமூகம். 


அந்தக் கதைக்கு வருவோம்.    


தேயிலைக் கிள்ளிக்கொண்டிருக்கும் பெண்களை நோக்கி வருகிறான்
அவர்களின் கவிஞன். அவர்களது அவலத்தில், வாழ்வில், வலியில்,
கண்ணீரில், புன்னகையில் அவர்களோடு ஒருவனாய், அவர்களில்
ஒருவனாய் அவர்களிடமிருந்து ஒரு அங்குளம் கூட அந்நியப்
படாதவனாய் வாழ்பவன். அந்த ஜனங்கள் தங்கள் கவிஞனது வாக்கு
பலிக்கும் என்று நம்பினார்கள்.


புன்னகைத்தவாறே அந்தப் பெண்களின் அருகே வந்தான் கவிஞன்.
அவனைக் கண்டதும் அவர்களது கவலைகளும் வலியும் பறந்தே போனது.
மலர்ந்த முகத்தோடு அவனை வரவேற்றார்கள்.


"நலமா?"


நலமென்று எப்படி சொல்ல முடியும் அவர்களால். 


"நலமென்று கூட சொல்ல முடியாமல் என் ஜனங்களை மௌனக்
கடலுக்குள் தள்ளியது எது?" 


"உம்மால் எமக்கொன்று ஆக வேண்டும் கவியே!" 


" என்னிடம் கேட்க என்ன தயக்கம். எது வேண்டும், கேள் தாயே!"  


"முன் பக்கம் தொங்கும் எங்கள் முலைகளை முதுகுப் பக்கமாய் நகர்த்திவிடு
கவியே! .மார் கட்டாது நாங்களும், பசியாறி குழந்தைகளும் பிழைத்துக்
கொள்வோம்."


அவர்களது சோகத்தில் கறைந்து நெகிழ்ந்து போன கவிஞன் சொன்னான்
"அப்படியே ஆகட்டும்"


முதுகுக்கு நகர்ந்தன முலைகள்.


நடக்குமா? மூடத்தனமல்லவா? அதுபற்றியெல்லாம் நாம் கவலைப் படப்
போவதில்லை. தங்களுக்காகவும் தங்களோடும் வாழ்ந்த கவிஞன் மீது
மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் காட்டவே
மேற்சொன்ன காட்சியை ஞாபகம் கொண்டோம். 


சமீபத்தில் "பெண்ணியம்" இணையதளம்வழியே ஒரு மாபெரும் மக்கள்
கவியைக் கண்டேன். வாசித்து முடிந்ததும் கண்ணீரைக் கட்டுப் படுத்த
படாத கஷ்டம் பட்டேன்.


"ஐரோம் ஷர்மிளா" மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த கவிஞர். 1958ஆம்
ஆண்டு "ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம்" கொண்டு வரப் பட்டது.
இதன்படி சந்தேகப் படும் யாரையும் விசாரனையின்றி கைது செய்யலாம்,
சுட்டும் கொல்லலாம். இந்த சட்டம் காவுகொண்ட எண்ணிக்கை மிக
அதிகம். "பாலியல் இம்சைகள்" பற்றி எழுதினால் நீளும், நீளும்
நீண்டுகொண்டேபோகும்.  


இதைக் கண்டித்து 02.11.2000 முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக
உண்ணாவிரதமிருந்து வருகிறார் ஐரோம் ஷர்மிளா. பல் துலக்கினால்
வாய் வழியே நீர் போய்விடும் என்பதால் பல் துலக்குவதை தவிர்க்கிறார்.
ஒரு பருத்தித் துணியால் பற்களைத் துடைத்துக் கொள்கிறார். 


அவரைக் கைது செய்த அரசாங்கம் கட்டாயப் படுத்தி மூக்கு வழியே
அவருக்கு திரவ உணவை செலுத்திக் கொண்டிருக்கிறது. 


எனக்கு இருக்கிற கேள்வி ஒன்றுதான். தங்களோடும் தங்களுக்காகவும்
வாழ்ந்த கவிகளை அந்தந்த சமூகங்கள் அங்கீகரித்து
கொண்டாடியிருக்கின்றன.


"கல்வி பாஷை" யில் சொன்னால் இரண்டு பிரிவேளைகளுக்கும் சற்று
குறைவான நேரமே நடைபெற்ற , மிகச் சரியாய் சொல்வதெனில்
"காலை சாப்பாட்டிற்கும்மதிய சாப்பாட்டிற்கும் இடைப் பட்ட நேரத்தில்"
நடந்த ஒரு கூத்தினை "உண்ணா விரதம்" என்றும் "தியாகத்தின் உச்சம்"
என்றும் கூத்தாடிக் கொண்டாடிய நாம், தனது உடலை, இளமையை,
வாழ்க்கையை தியாகித்துப் போராடும் இந்தப் போராளிக்கு என்ன
செய்யப் போகிறோம்?


பின் குறிப்பு
இந்தக் கட்டுரையை முடிக்கிற தருவாயில் ஐரினா ஷர்மிளா விடுதலை
செய்யப்பட்ட செய்தி வந்தது. இந்த தகவலை பத்துப் பேரிடம் பகிர்ந்து
கொள்வதற்கு முன்னமே சுகன் சொன்னார்
"திரும்பவும் அந்த அம்மாவகைது பண்ணீட்டாங்களாம் எட்வின்"

5 comments:

  1. முலைகள் முதுகிற்கு
    நகரும் வரை,
    இந்த போராட்டங்கள்
    நீடித்துக்கொண்டுதான்
    இருக்கும் போல..!!

    ReplyDelete
  2. \\\ திவ்யா @ தேன்மொழி said...
    முலைகள் முதுகிற்கு
    நகரும் வரை,
    இந்த போராட்டங்கள்
    நீடித்துக்கொண்டுதான்
    இருக்கும் போல..!!
    March 8, 2012 3:26 PM ///

    விடியும் வரை போராட்டங்களை நகர்த்திக் கொண்டுதான் இருக்க வேண்டும் திவ்யா

    ReplyDelete
  3. மகளிர் தினத்தில் கல்பனா சாவ்லாவை பாராட்டி ஒரு பெண்மணி எழுதி இருந்த பதிவை படித்து விட்டு இங்கு வந்தவனுக்கு ஆறுதலாய் இருந்தது... இரோம் ஷர்மிளாவை நினைவு கூற ஆட்கள் இருக்கிறார்களா தமிழகத்தில் என்று... இன்குலாப் ஜிந்தாபாத்

    ReplyDelete
  4. வணக்கம் உயரத்தில் இருக்கும் தோழமையே. நெஞ்சடைக்க, கன்னத்தில் நீர்த்திவலைகள் உருள இதனை எழுதுகிறேன்.எப்படியப்பா இப்படி உள்ளத்தில் என்றென்றும் நிற்கும்படி , இதயத்தைக் கதற கதற வைத்து கட்டுரை வடிக்கிறீர்கள் தோழர்.உள்ளம தவிக்கிறது. இது மகளிர் தினத்திற்கு மட்டுமல்ல. என்றென்றும் பெண்மைக்கு அர்ப்பணம் செய்யப்பட வேண்டிய தகவலும், கட்டுரையும்.
    "உழைக்கும் பெண்களில் பெரும்பகுதி பேர் அவுசாரிகள் என்று உனக்கு
    எப்படி ஐயா? என்றுகூட கேட்காமல் இன்று வரை நீண்ட மௌனம்
    காக்கிறது தமிழ்ச்சமூகம்" பேச வக்கர்ரவர்களாக இருக்கிறோம் என்றுதானே பொருள்.
    ""முன் பக்கம் தொங்கும் எங்கள் முலைகளை முதுகுப் பக்கமாய் நகர்த்திவிடு
    கவியே! .மார் கட்டாது நாங்களும், பசியாறி குழந்தைகளும் பிழைத்துக்
    கொள்வோம்."" என்ன ஒரு கொடுமை.. பசிக்கொடுமை.வறுமை எப்படி எல்லாம் அவர்களைப் புரட்டிப் போட்டு கொடுமை படுத்துகிறது.பத்துமாதம் கருவிலும், இப்போது முதுகிலும் சுமந்த தன உயிருக்கு, பால் கூட கொடுக்க முடியாத அவலம் தேயிலைத் தோட்டத்தில். கங்காணி விரட்டுவான். இதற்கு எப்போது தோழர் விடிவு காலம் வரும்.இவர்களின் படியை நம்மால் நிரந்தரமாய் விரட்டவே முடியாதா? அவர்களின் வயிற்றில் என்றும் நிறைவாக சோறு போடும் நாள்தான் உலகத்தின் பொன்னான நாள். மனம் வலிக்கிறது தோழர். இப்ப உணவு நேரம். உணவு செல்ல மறுக்கிறது. தன மக்களுக்காய் வாழும், நீர் கூட அருந்த மறுக்கும் உன்னத ஜெரோம் ஷர்மிளா புத்தகம் என்னிடம் உள்ளது தோழர். நெஞ்சைக் கலங்க வைத்து, கனலைப் பற்ற வைத்த கட்டுரை தந்த சமூக அக்கறையை சுவாசிக்கும் அன்புத் தோழர் எட்வினுக்கு என்றென்றும் அன்பின் வாழ்த்துகளும், பாராட்டும், பெண்கள் சார்பிலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் சார்பிலும் சிரம் தாழ்த்திய நன்றிகள். இன்னும் அதிக ஒலியுடன், தங்களின் சமூக சிந்தனை ஒலிக்கட்டும்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...